Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006

கடிதங்கள்

சோஷலிச யதார்த்த வாதத்தைக் கைவிட வேண்டுமா? - எஸ். தோதாத்ரி, திருநெல்வேலி.

“உங்கள் நூலகம்” (மார்ச் - ஏப்ரல் இதழ்) இதழில் கா. சிவத்தம்பியின் நேர்காணல் வெளியாகியிருந்தது. அதில் அவர் சோஷலிச யதார்த்த வாதம் பற்றிச் சில கருத்துகளைக் கூறி யிருந்தார். அவை பரிசீலனைக்குரியவை என்று தோன்றுகின்றன. அவரிடம் “சோஷலிச யதார்த்த வாதத்தைக் கைவிட வேண்டும்” என்ற கேள்வி கேட்கப்பட்ட பொழுது அவர் கூறுகிறார்.

“நான் மட்டும் இதைச் சொல்லவில்லை. ரகுநாதனும் இதைச் சொல்லி இருக்கிறார். சோஷலிச யதார்த்தவாதத்தை நாங்கள் பயன்படுத்தியிருக்கக் கூடாது. அது புரட்சி வந்தபின் உள்ள விடயம். இங்குப் புரட்சி ஏற்படவில்லை. இங்கு விமர்சன யதார்த்த வாதம் பேசியிருக்க வேண்டும் என்று நான் கூறினேன். நான் இதை இந்தியாவில் பேச ரகுநாதன் இலங்கையில் பேசினார்”.

இங்குப் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய சூழல் இருக்க வேண்டும். இங்குள்ள அரசியல் வர்க்க அரசியல் இல்லை. எங்குமே வர்க்க அரசியலே இல்லை. பிறகு எப்படிப் புரட்சியைப் பற்றிப் பேசமுடியும்?” (பக். 21-22).

ஒரு பேட்டியில் கூறப்பட்டு அச்சான கருத்துக்களை வைத்துக் கொண்டு முழுமையான கருத்தாக அவற்றை ஏற்றுக் கொள்வது கடினம்தான். இருந்தாலும் சோஷலிச யதார்த்த வாதம் கைவிடப்பட வேண்டும்; புரட்சி வந்தபிறகு தான் அதைப் பேச வேண்டும் என்ற சூத்திரம் போன்ற ஒரு நிலைப் பாட்டிற்கு அவர் எப்படி வந்தார் என்பது பற்றிய ஒரு தன்னிலை விளக்கம் இங்கு இல்லை.

இருப்பினும் இக்கருத்துகள் சரியா என்று சிந்திக்க வேண்டும். முதலில் ரகுநாதன் பற்றிக் காண்போம். ரகுநாதன் இலங்கையில் பேசிய பின்னர் 1990 செப்டம்பர் 29, 30 தேதிகளில் நடந்த நியூ செஞ்சுரி வாசகர் பேரவைக் கருத்தரங்கில் (திருநெல்வேலி) ரகுநாதன் ஒரு நீண்ட உரை நிகழ்த்தினார். பின்னர் இது அச்சு வடிவம் பெற்று “முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்” என்ற பெயரில் ஒரு சிறு நூலாக (NCBH) வெளி வந்தது. இந்த உரையில் சோஷலிச யதார்த்தவாதம் பற்றிய விமர்சனம் இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு அவர் இது பற்றி அதிகம் பேசவில்லை. இந்தக் கட்டுரையில் அவர் என்ன கூறுகிறார்?

இந்தக் கட்டுரையில் சோஷலிச யதார்த்தவாதம் என்ற சொற்றொடர் ஸ்டாலின் காலத்தில் உருவான விதத்தை ரகுநாதன் கூறுகிறார். ஸ்டாலின் காலத்தில் உள்ள அரசியல் நிலைப்பாடு காரணமாக இது உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார். ஸ்டாலினியத் தவறுகள் என்ற பின்னணியில் சோஷலிச யதார்த்த வாதம் உருவானது என்பதையும் கூறுகிறார்.

ரகுநாதன் சோவியத் யூனியனின் அரசியல் நிகழ்வுகளுடன் தான் இந்த இலக்கிய குறையைக் காண்கிறார். அந்த அரசியலையும், அதன் மேலாதிக்கத்தையும் ரகுநாதன் கண்டிக்கிறார். ஆனால் கட்டுரையின் பின்பகுதி சோஷலிச யதார்த்த வாதம் என்பதற்கு ஆதரவாக முடிவதை அதனைப் படிப்பவர்கள் கண்டு கொள்வர் ரகுநாதனது கண்டனம் அதன் அரசியல் பின்னணி மீது தானே ஒழிய சோஷலிச யதார்த்த வாதம் என்ற கோட்பாட்டின் மீது அல்ல. ரகுநாதனின் அரசியல் விமர்சனத்தை மட்டும் பிரித்து எடுத்து அவர் சோஷலிச யதார்த்த வாதத்தைக் கைவிட்டு விட்டார் என்று கூறுவது ஒன்று ரகுநாதனைச் சரியாகக் காணவில்லை என்பதும், இரண்டு, சோஷலிசம் என்பதை மறுப்பது மார்க்சியத்தினை மறுப்பதற்குச் சமம் என்பதையும் இவர்கள் கண்டு கொள்ள வில்லை. சிவத்தம்பியும் அவ்வாறே. ரகுநாதனது மற்றொரு பக்கத்தைக் காண்போம்.

சோஷலிச யதார்த்த வாதம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவது பற்றி முன்னாள் சோவியத் யூனியனில் இடம் பெற்ற நீண்ட விவாதங்களையும், ஸ்டாலினது பங்கினையும் விமர்சனம் செய்து விட்டு, ரகுநாதன் பின் வரும் முடிவிற்கு வருகிறார். அது பற்றி கார்க்கி கொடுத்த விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறார். “சோஷலிச யதார்த்தவாதம் மனிதனைச் செயல் படுபவனாகக் காண்கிறது; வாழ்க்கையை ஒரு படைப்பாக நடவடிக்கையாகக் கருதுகிறது. (“முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்”, என்.சி.பி.எச். பக். 47).
இது பற்றி ரகுநாதன் கூறுகிறார் “இந்த விளக்கம் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நல்ல விளக்கம்தான். சொல்லப் போனால் உண்மையான மனிதாபிமானம் மிக்க எந்தவோர் எழுத்தாளனுக்கும் ஏற்றுக் கொள்ளவேண்டிய குறிக்கோள் தான்” இவ்வாறு ஏற்றுக் கொண்டு அதனைத் தொடர்ந்த பகுதியில் ஸ்டாலினியச் செயல்பாட்டைத்தான் கண்டிக்கி றோமே ஒழிய சோஷலிச யதார்த்த வாதத்தை அல்ல என்பதை இந்த நூலைப் படிப்பவர்கள் புரிந்துகொள்வர் (பக். 47).

இதன் பின்னர் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோற்ற காலத்தில் எடுத்த முடிவினைக் கூறுகிறார் முற்போக்கு எழுத்தாளன் என்பவன் ஜனநாயகப் பூர்வமான மனிதாபி மானத்தைக் கொண்டவனாக, அதனைப் பிரதிபலிப்பவனாக இருக்க வேண்டும். அதன் வளர்ச்சியாக சோஷலிச யதார்த்த வாதம் அவனது இறுதி லட்சியமாக இருக்கவேண்டும் என்பதே கலை இலக்கியப் பெருமன்றத்தைத் தோற்றுவித்த காலத்தில் நாம் மேற்கொண்ட பொதுவான நிலையாகும்” (பக். 55). இவ்வாறு அதனை விளக்கிவிட்டு இறுதியாக ரகுநாதன் தன் முடிவுரையைக் கூறுகிறார்.

“எனவே சோஷலிச யதார்த்தவாதம் நமது இலக்கியத்தின் இறுதியான குறிக்கோள் என்று நாம் கூறிக் கொண்டாலும்.... சோஷலிசம் என்ற வார்த்தை இடம் பெற்றுவிட்டதால் கலை இலக்கியமானது அடி முதல் முடிவரை சோஷலிசக் கருத்தையே தன்னுள் கருக் கொண்டிருக்க வேண்டும் என்று கருதிவிடாமல், அதன் பொருளை மேலும் அகலப்படுத்த வேண்டும், அதுவும் கால தேசச் சூழ்நிலைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதனை நெளிவு சுழிவோடு பிரயோகிக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன்” (பக். 66).

ரகுநாதன் இந்தக் கோட்பாடு உருவான காலகட்டத்தில் நிலவிய அரசியல் மேலாதிக்கத்தைத்தான் கண்டிக்கிறாரே ஒழிய, அந்த இலக்கிய முறையை அல்ல. அதற்கு ஒரு விரிவாக்கம் வேண்டும் என்று கூறுகிறார். சிவத்தம்பி அவர்கள் ரகுநாதன் என்றோ கூறியதை இப்பொழுது நிலை ஒட்டி, சோஷலிச யதார்த்த வாதத்தைக் கைவிடவேண்டும் என்று கூறுகிறார்.

சோஷலிச யதார்த்த வாதம் பற்றி நா. வானமாமலை என்ன கூறுகிறார் என்று காண்போம். அவரது கருத்துப்படி சுபாவ யதார்த்தவாதம், விமர்சன யதார்த்த வாதம், சோஷலிச யதார்த்த வாதம் என்ற படி நிலை வளர்ச்சிகள் உள்ளதை அவர் நடத்திய ஆய்வுக்குழுக் கூட்டங்களில் அவர் அடிக்கடிச் சுட்டிக் காட்டுவார். சுபாவ யதார்த்தவாதம் என்பது ஒரு படைப்பாளி தன்னிச்சையாக ஆற்றியுள்ள சமூகத்தின் மாறுதல்களைச் சுட்டிக் காட்டுவது ஆகும். இதற்கு கமலாம்பாள் சரித்திரம் நல்ல உதாரணம் விமர்சன யதார்த்தவாதம் என்பது சமூகக் குறைகளை, முரண்பாடுகளை விமர்சனம் செய்வது ஆகும். புதுமைப்பித்தன் இதற்கு நல்லதொரு உதாரணம். சோஷலிச யதார்த்தவாதம் என்பது சமூகமாறுதல், அதில் உள்ள முரண் பாடுகள், அது எந்த திசை நோக்கிச் செல்லும், உழைக்கும் வர்க்கத்திற்கான சார்பு நிலை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். இவ்வாறு யதார்த்த வாதத்தின் வளர்ச்சி நிலையை அவர் எடுத்துக் காட்டுகிறார். இதனை உள்ளடக்கி அவர் கூறுகிறார்.

“சோஷலிஸ்ட் ரியலிசம் வாழ்க்கையை அதன் புரட்சிகரமான மாறுதல் கதியில் சித்திரிக்கிறது. பழமை மீது, புதுமை பெறும் வெற்றிகளைச் சுட்டிக் காட்டுகிறது. இவ்வெற்றிகள் கம்யூனிச சமுதாயமாக மலரும் என்ற வருங்கால நிலைமையை விஞ்ஞான முறையில் யூகம் செய்கிறது. இலட்சியத்தில் நம்பிக்கை கொண்டு போராடும் ஊக்கத்தை அளிக்கிறது” (மார்க்சிய அழகியல் நா.வா. பக் : 35/36). “தனிமனித உணர்வு மாற்றங்களைச் சித்திரிப்பது மட்டுமல்லாமல், சமுதாயத்தை மாற்றவல்ல, சமுதாய உணர்வு மாற்றங்களைச் சித்திரிப்பதே சோஷலிச ரியலிசத்தின் தொடக்கம்”. (மே.நூ.38).

இந்தக் கூறுகளை நாம் கவனித்தால் சிவத்தம்பியின் கூற்று ஆரம்ப கால ரகுநாதனின் கூற்றினைத்தான் பிரதிபலிக்கிறதேயன்றி சோஷலிச யதார்த்தவாதம் பற்றி மற்ற மார்க்சிய வாதிகள் கூறியதை அல்ல.

சிவத்தம்பியிடம் உள்ள இந்தக் குழப்பத்திற்குக் காரணம் அவர் இதனை ஸ்டாலின், சோவியத் யூனியன் ஆகியவற்றுடன் மட்டுமே இணைத்து, அதனை ஓர் அரசியலாகக் காண்பதே ஆகும். அவர் அதே பேட்டியில் கூறுகிறார் “இங்குப் புரட்சி ஏற்படவில்லை. இங்கு விமர்சன யதார்த்தவாதம் பேசியிருக்க வேண்டும்”.... இங்குள்ள அரசியல் வர்க்க அரசியல் இல்லை எங்கும் வர்க்க அரசியல் இல்லை. பிறகு எப்படிப் புரட்சியைப் பற்றிப் பேச முடியும்!” (உங்கள் நூலகம் : 22).

இந்தக் கூற்றில் மார்க்சியம் பற்றி ஒரு குழப்பம் இருக்கிறது. வர்க்க அரசியல் என்பது வர்க்கப் போராட்டத்தின் ஒரு கூர்மையான வெளிப்பாடு ஆகும். மார்க்சியம் வர்க்கப் போராட்டம், வர்க்க உறவுகள் ஆகியனவற்றைக் கொண்டுதான் மேல்கட்டுமானம் தொடர்பான நிகழ்ச்சிகளைக் காண்கிறது. இன்னும் தெளிவாகக் கூறினால் உற்பத்தி உறவுகள் என்பது மார்க்சியம்; எனவே வர்க்க அரசியல் என்ற அதன் குறுகிய வடிவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு சோஷலிச யதார்த்த வாதத்தினை மறுப்பது அவ்வளவு சரியான முடிவு ஆகாது. அவர் கூற்றுப்படி வர்க்க அரசியல் இருந்தால்தான் சோஷலிச யதார்த்த வாதம் பற்றிப் பேச இயலும். அது இல்லை என்றால் அது சாத்தியமில்லை. ஆனால் சோஷலிச யதார்த்த வாதம் உருவான சமூகப் பின்னணியைக் கவனித்தால் (அரசியல் அல்ல. அரசியல் அதில் ஒரு பங்கு வகிக்கலாம். ஆனால் அதுவே முழுமையானது அல்ல). சோஷலிச யதார்த்தவாதம் என்பது ஐரோப்பிய அரங்கில் பாரீஸ் கம்யூன் இலக்கியங்களிலே இடம் பெற்று விட்டது எனலாம். பிரஞ்சு இலக்கியம் (எமிலி சோலாவின் ஜெர்மினால்) அமெரிக்க இலக்கியம், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் உழைக்கும் மக்களது குரலைப் பதிவு செய்த அருமையான நாவல்கள் உண்டு. டிக்கன்ஸ் போன்ற விமர்சன யதார்த்தவாதிகள் உழைப்பாளர்கள்பால் அனுதாபத்தோடு எழுதியதும் உண்டு. சோவியத் இலக்கியத்திலேயே, புரட்சிக்கு முந்திய படைப்பாளிகளிடம் இந்தப் போக்குகளைக் காண முடியும். கார்க்கி புரட்சிக்கு முந்தியே ‘தாய்’ நாவல் எழுதியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.

தமிழ் இலக்கியத்திலேயே பாரதிதாசன், புதுமைப்பித்தன் ஆகியோரிடம் இதன் கூறுகளைக் காண இயலும். இவற்றை எல்லாம் தன் வயப்படுத்திய ரகுநாதன் ‘பஞ்சும் பசியும்’என்ற நாவல் எழுகிறது. அது முழுக்கவும் சார்பு நிலைப் படைப்பாக தமிழில் வெளிப்பட்டது. அதன் பின்னர் டி. செல்வராஜ்,

கு. சின்னப்பபாரதி, பொன்னீலன் என்ற ஒரு பெரும் இலக்கியப் படையே இன்று உருவாகியுள்ளது. இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். சிவத்தம்பி கூறும் வர்க்க அரசியல் இங்கு இல்லாமல் இருக்கும் பொழுது இந்தவகைப் படைப்புகள் எவ்வாறு தோன்றுகின்றன?

சோஷலிச யதார்த்த வாதம் என்பதை வர்க்கப்போராட்டம் என்ற பரந்த தளத்தின் பின்னணியில் காணும் பொழுது இதற்குரிய விடை தெரியவரும். வர்க்கப் போராட்டம் என்பது இடையறாது நடந்து கொண்டிருக்கும் ஒரு செயல். சில நேரங்களில் அது கூர்மையடைந்து வர்க்க அரசியலாக வெளிப்படையாகத் தெரியவரும். சில நேரங்களில் அது நமக்குத் தெரியாமலேயே இடம் பெறவும் செய்யும். இன்றைய காலகட்டத்தில் வர்க்கப் போராட்டத்தில் குணாம்ச மாறுதல் ஏற்பட்டிருக்கிறதேயன்றி, அது இல்லை என்று கூற முடியாது. இன்றைய உலகின் முரண்பாடு என்பது ஏகாதிபத்தியத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் உள்ள முரண்பாடுதான். இன்று உற்பத்தி சாதனங்கள் மிகப் பெரிய பன்னாட்டு மூலதனத்தினைப் பெற்றிருப்பவரிடம் உள்ளன. இது இல்லாதவர்கள் அனைவரும் இதன் சுரண்டலுக்கு உள்ளானவர்களே.

இந்தப் பிரதான முரண்பாட்டில் இருந்துதான் மற்ற முரண்பாடுகள் தோன்றுகின்றன. இது இலக்கிய உலகில் உழைப்பவன், உடைமையாளன் போராட்டமாகப் பல வடிவங்களில் வெளிப்படுகிறது. இதில் உழைப்பவனது சார்பில் நின்று படைக்கப்படும் இலக்கியங்களைத் தான் நாம் சோஷலிச யதார்த்தவாதம் என்கிறோம். இது நாட்டிற்கு, நாடு, இடத்திற்கு இடம் வேறுபட்ட வடிவங்களில் இடம் பெறுவதைக் காண முடியும். “பஞ்சும் பசியும்” துவங்கி சமீபத்தில் வெளியான பல தலித் நாவல்கள் வரை இந்த அம்சத்தைக் காணலாம். உதாரணமாக அழகிய பெரியவனின் தகப்பன் கொடி என்ற தீராவல் பஞ்சமி நிலமீட்சியைப் பற்றியது. பெருமாள் முருகனின் “கூள மாதாரி” என்பது நாயக்கர் சக்கிலியர் முரண்பாட்டினைப் பற்றியது. இவ்வாறு முதல்வொன்றிலும் பிரதான முரண்பாடு பல. வடிவங்களில் இடம்பெறுவதைக் காண இயலும்.

கருத்துருவங்கள் ஒரு சமூக அமைப்பில் இடம் பெறும் பொழுது அவற்றில் பிற்போக்கானவையும் இருக்கும். முற்போக்கானவையும் இருக்கும். இது எல்லாக் கால கட்டத்திற்கும் பொருந்தும். இன்றைய முதலாளித்துவ அமைப்பில் வலுவாக இடம் பெற்றிருப்பது முதலாளித்துவச் சிந்தனைதான். இது எல்லாருக்கும் நன்கு தெரிந்த ஒன்று. ஆனால், அதே சமயத்தில் பெருவாரியான உழைக்கும் மக்கள் குரல் இந்தக் கட்டத்தில் ஒலிக்காமல் இல்லை. இது வளர்முகமானது. இதனைப் பதிவு செய்யும் இலக்கியம் கலை ஆகியனவற்றைத்தான் சோஷலிச யதார்த்த வாதம் என்கிறோம். அதனால்தான் ஜீவா அவர்கள் சங்க இலக்கியத்திலும் இந்தக் கூறுகளைக் காண்கிறோம். நா. வானமாமலை அவர்கள் இந்தக் குரலைப் பதிவு செய்யும் போக்கே சோஷலிச யதார்த்த வாதத்தின் துவக்கம் என்கிறார்.

இதில் கட்சி சார்ந்த படைப்பாளிகளும் உண்டு; கட்சி சாராத படைப்பாளிகளும் உண்டு. தற்காலத்தமிழ் நாவலில், சிறுகதையில், கவிதையில் இதற்கு நிறையவே உதாரணம் உண்டு. உழைக்கும் வர்க்கச் சார்பு நிலையில் உள்ள படைப்பாளிகள் இதில் வலுவாக உள்ளனர். இதே கண்ணோட்டம் இல்லாதவர்கள் ஒரு மனித நேயப்பார்வையில் இதனைக் காண்கின்றனர். அதனால்தான் ரகுநாதன் ஒரு பரந்த ஜனநாயக மனித நேயப் பார்வை இதற்கு அளவு கோல் என்கிறார். அவ்வாறு இருக்கும் பொழுது சோஷலிச யதார்த்த வாதத்தை ஒரு கெட்ட அரசியல் நிகழ்வோடு மட்டும் கண்டு ஒரு முடிவுக்கு வருவது சோஷலிசம் என்பதற்கும் யதார்த்தவாதம் என்பதற்கும் மிகப்பெரிய பின்னடைவையே ஏற்படுத்தும். அதுவும் மார்க்சிய ஆய்வு முறையைக் கையாளும் சிவத்தம்பி இந்த முடிவுக்கு வந்தது வியப்பாக உள்ளது.

யதார்த்த வாதத்தின் வளர்ச்சியில் விமர்சன யதார்த்த வாதத்திற்கு ஓர் எல்லை உண்டு என்பதைத் சிவத்தம்பி ஏன் மறந்து விட்டார்! அதற்கும் சோஷலிச யதார்த்த வாதத்திற்கும் வேறுபாடுகள் இல்லை என்கிறாரா! இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் சோஷலிச யதார்த்த வாதத்தைக் கைவிடவேண்டும் என்று கூறுவது சரியல்ல. ஏனென்றால் சிந்தனை வடிவங்களைத் தீர்மானிப்பது கொள்கையாளர்கள் அல்லர், மக்களே ஆவர்.


“சோஷலிச யதார்த்தமும்”சோஷலிசத்துக்கான யதார்த்தமும்: கார்த்திகேசு சிவத்தம்பி, இலங்கை


உங்கள் நூலகம் சஞ்சிகைக்கு நான் அளித்த பேட்டியில் “சோஷலிச யதார்த்தவாதம்” பற்றிக் கேட்கப்பட்ட வினாவுக்கு நானளித்த விடையினைத் தளமாகக் கொண்டு எனது தோழமைக்கும், மதிப்பிற்கும் உரிய நண்பர் தோதாத்ரி அவர்கள் எழுதியுள்ள பதிற்குறியினைப் (Response) பார்த்தேன்.

வெளிவந்த விடை வாய்மொழி நிலைப் பதிவே ஆனால், ஒரு சிறு மாற்றம் சோஷலிச யதார்த்தவாதம் பற்றி ரகுநாதனும் நானும் சொன்னக் குறிப்புரைகள் ரகுநாதனால் தமிழகத்திலும், என்னால் இலங்கையிலும் கூறப்பட்டவையாகும். இந்த திருத்தம் மிக அவசியமானதென்று கருதுகின்றேன். ஏனெனில் சோஷலிச யதார்த்தவாதம் பற்றிய எனது முதற்குறிப்புரை. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1950 / 60 / 70களிலே கடைப்பிடித்த, வற்புறுத்திய நிலைப்பாட்டின் பின்புலத்திலேயே சொல்லப்பட்டவையாகும். இதனை நான் முதலிற் கூறியதற்கான சூழல் ஈழத்துத் தமிழிலக்கியத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடைபிடித்த நிலைபாடே. எனினும், இந்த விவாதம் நிச்சயமாக அக்காலகட்டத்து தமிழக ஈழத்திலக்கியங்களுக்கு பொறுத்தமான ஒன்றே. அந்தளவில் இக்கருத்துப் பறிமாற்றத்தினை வரவேற்கின்றேன்.

சோஷலிஸ்ட் ரியலிசம் - சோஷலிச யதார்த்த வாதம் மென்பது குறிப்பாக, முற்போக்கு இலக்கியவாதத்தை, மார்க்சிய இலக்கியச் சார்பை ஏற்றுக் கொள்பவரிடையே முக்கிய இடம் பெறும் அரசியல் சார்ந்த இலக்கிய எண்ணக் கருவாகும். இலக்கிய முக்கியத்துவமுடைய இதனுள்ளே இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவது அது மார்க்சிய இலக்கிய விமர்சன வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கைக்கொள்ளப்பட வேண்டுமென எடுத்துக் கூறப்பட்ட ஒரு ரியலிச முறைமை யாகும். இரண்டாவது இவ்வெண்ணக்கரு கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கியக் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த மையாகும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டு அது ஏறத்தாழ கட்சி நிலைப்பட்ட எழுதுமுறை வழிகாட்டியாக கொள்ளப்பட்ட மையாகும். இவை காரணமாக அந்தச் சொற்றொடர் முக்கியப் படுத்தப்பட்ட ஒன்றாயிற்று.

இந்த வரலாற்றுப் பின்புலம் பற்றியும் அதனடியாக கிளம்பிய பிரச்சினைகள் பற்றியும் 1998இல் நான் எழுதிய சிறு கட்டுரையொன்றிலே சுருக்கமாக விவரித்துள்ளேன். அண்மையில் அக்கட்டுரை மக்கள் வெளியீட்டு நிறுவனம் மூலம் வெளிவந்துள்ள எனது “விமர்சன சிந்தனைகள்” என்ற கட்டுரைத் தொகுதியில் (2001) இடம் பெறுகின்றது. இவ்விடயம் பற்றி எனது கருத்துக்களின் சுருக்கநிலை வெளிப்பாடாக அக்கட்டுரை அமைகின்றது. அதனை எனது பதிலுக்கான பின்னினைப்பாக சேர்த்துள்ளேன்.

நண்பர் தோதாத்ரி அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் சில பற்றிய புலமை பிரக்ஞை ஓரளவுக்காவது என்னிடத்திருந்தது. இப்பொழுதுள்ளது என்பதைத் தெரியப்படுத்துவதற்காக இப்பின்னிணைப்பு அவசியமாகின்றது. இனி நண்பர் தோதாத்ரியின் கட்டுரையிலே குறிப்பிட்டுள்ளவை பற்றியது எனது நிலையினை தெளிவுப்படுத்திக் கொள்ளவிரும்புகிறேன்.

“சோஷலிச யதார்த்தவாதம் எனும் சொற்றொடரை எழுத்தாளர் சங்க நிலையில் ஒரு கொள்கையாக வற்புறுத்தியமை யினால் ஏற்பட்ட தெளிவின்மைகள் காரணமாகவே நான் இக்கருத்தினைக் கூறவேண்டியிருந்தது என்பதை மீட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இது தொடர்பாக இரண்டு விடயங்களை எத்தகைய ஐயப்பாடுகளுக்கும் இடமில்லாத வகையில் அழுத்திக் கூற விரும்புகிறேன்.

ரியலிசம் என்பது மாக்சியத்தின் அடிப்படை மெய்யியல் எடுகோள்களிலொன்றாகும். ரியலிச நோக்கில்லாமல் சமூகத்தையும், சமூக இயங்கு முறைமைகளையும் விடய நோக்காகப் (Objectively) பார்த்து ஆராய முடியாது. வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தின் அடிப்படையே இதுதான், மேலும் கலையாக்க நிலையிலே கலைஞரின் பிரதான கடமை மனித வாழ்க்கைப் பற்றிய அடிநிலை நிஜத்தை வெளிக் கொணர்வது தான். இருப்பது / காணப்படுவது (Fact) என்பது உண்மையான நிஜமாக (Real) ஆக இருப்பதில்லை அந்த நிஜமான (Real) ஐ தேடுவதே ரியலிசம் எனும் சிந்தனைப் போக்கின் கடமையாகும். ரியலிசம் என்ற சொல்லைத்தான் நாம் தமிழில் யதார்த்த வாதம் எனக்கொள்கின்றோம். இருப்பதன் உட்கருத்து என்பது அதன் கருத்து.

இந்தப் படைப்பாக்க நோக்கத்திலிருந்து உண்மையான கலைஞர் எவரும் விடுபட முடியாது. அவர்கள் தாம் தாம் வாழுகின்ற சமூகச் சூழல்களின் இருப்பு நிலைகளுக்கு ஊடேயுள்ள யதார்த்தத்தினைக் காட்டல் வேண்டும்.

மார்க்சியக் கலைஞர்கள் எவரும் இந்தக் கருத்து நிலைக் கடப்பாட்டிலிருந்து விலகுவதில்லை, விலகவும் முடியாது. ஆனால், சமூக இருப்பு என்பது ஒரே தன்மையானதல்ல அது இடத்துக்கிடம், காலத்துக்குக் காலம் வேறுபடும். கலைஞர்கள் ஒரே நேரத்தில் சமூக முழுமையையும், அதனுள்ளே தொழிற் படும் அம்சங்களையும், கண்டறிந்துக் கொள்ளல் வேண்டும்.

உண்மையில் இத்தகைய ஒரு பார்வையும், சித்திரிப்பும் சமூகச் சுரண்டல் நீக்கத்துக்கும், சமூக சமத்துவத்துக்கும் வழிவகுக்கும். இந்த அகண்ட நிலையில் ஸ்டானிலியப் போக்குக் காரணமாக சோஷலிச யதார்த்தவாதமென்ற பெயருடன் எடுத்துக் கூறப்பட்ட நடைமுறையையே ரகுநாதன் கண்டித்தார் என்பதனையும், அதேவேளை அக்கட்டத்துக்கு மேற்சென்று உண்மையான மனித நேயப்பட்ட (Humanist) இலக்கிய வளர்ச்சிக்காக அவர் வாதிட்டாரென்றும் கூறியுள்ளார். இந்நிலைப்பாடு நான் கூறியனவற்றுக்கும் பொருந்தும். நான் கண்டித்திருப்பது சோஷலிச யதார்த்தவாதமென பொதுவுடமை கட்சிநிலையில் அக்காலத்தில் எடுத்துப் பேசப்பெற்ற இலக்கிய “ஸ்லோக”த்தையே யாகும். சோஷலிசம் வளர்ச்சிக்கு யதார்த்தப் படைப்புகளின் முக்கியத்துவத்தை நான் மறுத்தலிக்கவுமில்லை; மறுதலிக்கவும் முடியாது. நண்பர் தோதாத்ரியின் கட்டுரையில் குறிப்பாக, பிற்பகுதியில் சோஷலிச யதார்த்தவாதமெனும் சொற்றொடருக்கு அவர் மேலே கூறிய கட்சி நிலைப்பட்ட ஸ்லோக நிலைப் பாட்டைக் குறிக்காமல் விரிந்த நிலையில் உழைக்கும் மக்களது விமோசனத்துக்கான எழுத்து முறைமையே சோஷலிஸ்ட் யதார்த்தவாதம் என்று கூறுகின்றார், உண்மையில் இந்த நிலைப்பாட்டில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லையென்பது பின்னிணைக்கப்பட்ட கட்டுரையின் மூலம் தெரியவரும்.

நண்பர் தோதாத்ரியின் கட்டுரையினை சற்று உன்னிப்பாக நோக்கும் பொழுது வர்க்க அரசியல் வர்க்க முரண்பாடு அவற்றின் சமகால நிலைமை பற்றி நான் கூறியுள்ளவை அவரிடத்து ஒரு பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது போலத் தெரிகின்றது. எனது நேர்காணலை குறிப்பாக இந்த விடயம் பற்றி கருத்துரைப்பின் பொழுது வர்க்க அரசியல் பற்றி நான் கூறியுள்ளவற்றில் ஒரு வீச்சுவிரைவு, வேகம் (Sweeping) காணப்படுவதை ஒத்துக் கொள்கிறேன்.

கடந்த இரண்டு சகாப்த்தங்களாக தேசியம் பற்றிய கருத்துநிலைத் தொடர்பாக மார்க்சியமும், மார்க்சிய நோக்கு முறைமையும் பாதிக்கப் பெற்றுள்ளமையை மனங்கொண்டே (இலங்கை நிலைமை உட்பட) அவ்வாறு கூறியுள்ளேன். ஆனால் நான் கூறியனவற்றுக்குள்ளே வர்க்க அரசியல் தளத்தை நிராகரிக்கவில்லையென்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன் எனது பதிலில்.

“தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள அரசியல் எவ்வாறு வர்க்க உணர்வு இல்லாமல் ஆனது? அதற்கான காரணம் என்ன? அந்தச் சூழலில் இலக்கியங்களில் என்ன நடந்து இருக்கிறது? வர்க்க நிலைப்பாட்டுக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்? என்ற குறிப்பு எனது அடிப்படை மனநிலையை எடுத்துக் காட்டுகின்றது. இந்த பின்புலத்தில் பார்க்கின்ற பொழுது நண்பர் தோதாத்ரி தனது கட்டுரையிலே கூறும் பின்வரும் விடயம் எனக்கு ஏற்புடையதே.

“இன்று உற்பத்திச் சாதனங்கள் மிகப் பெரிய பன்னாட்டு மூலதனத்தினைப் பெற்றிருப்பவரிடம் உள்ளன. இது இல்லாதவர்கள் அனைவரும் இதன் சுரண்டலுக்கு உள்ளானவர்களே. இந்தப் பிரதான முரண்பாட்டில் இருந்துதான் மற்ற முரண்பாடுகள் தோன்றுகின்றன. இது இலக்கிய உலகில் உழைப்பவன், உடைமையாளன் போராட்டமாக பல வடிவங்களில் வெளிப்படுகிறது. இதில் உழைப்பவனது சார்பில் நின்று படைக்கப்படும் இலக்கியங்களைத்தான் நாம் சோஷலிச யதார்த்த வாதம் என்கிறோம். இது நாட்டிற்கு நாடு, இடத்திற்கிடம் வேறுபட்ட வடிவங்களில் இடம் பெறுவதைக் காணமுடியும்.

சோஷலிச யதார்த்த வாதமென்பதற்கு நண்பர் தோதாத்ரி கொடுக்கும் இன்றைய நிலை விளக்கமும், மிகத் தெளிவாக தெரிகிறது. சோஷலிசத்தை ஈட்டுவதற்கான யதார்த்தவாதம் என்ற கருத்து வழுவாக வருகின்றது. ஆனால் நான் முன்னர் கூறியபடி அக்காலகட்டத்தில் சோஷலிஸ்ட் ரியாலிசம் என்பதற்கு ஒரு வரையறுக்கப்பட்ட கருத்தே இருந்தது என்பது மார்க்சிய இலக்கிய வரலாற்று உண்மையாகும். விவாதப் பொருள் பற்றி இதற்கு மேல் நான் எதனையும் கூறவிரும்பவில்லை. ஆயினும் என் மனதிலுள்ள ஆதங்கமொன்றினை இங்கு வெளிப்படுத்துவது அவசியமாகின்றது. 1950 / 60 களில் தமிழகத்திலும் சரி, இலங்கையிலும் சரி முற்போக்கு இலக்கிய கருத்து நிலையாளர்கள் (விமர்சகர்களும், எழுத்தாளர்களும்) தம்மைச் சூழவிருந்த தம்மை எதிர் நோக்கிய அரசியற் சமூக சவால்கள் பற்றி மிகத் தெளிவான வாதவிவாதங்களை முன்வைத்தனர்.

அந்த விளக்கங்கள் எழுத்தாளர்களுக்கும், இலக்கிய மாணவர்களுக்கும் பெரிதும் உதவின. இலங்கையைப் பொறுத்தமட்டில் 1977 / 78 முதல் குறிப்பாக, 1983 முதல் இலங்கையினதும் இலங்கைத் தமிழர்களினதும் அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டு மாற்றங்களை நோக்கி அவற்றை விளக்கி, மாறிய சூழலில் இலக்கியத்துக்கான இடம் யாது என்பது பற்றிய ஒரு முற்போக்கு நிலைபட்ட இலக்கிய விளக்கம் எதுவும் கிடையாது. இதற்கான பிரதானக் காரணம், இலங்கையில் இடது சாரி கட்சிகளுக்கு ஏற்பட்ட சரிவும், அதனால் முற்போக்கு இலக்கிய எழுத்தாளர் சங்கம் இயங்க முடியாமல் போனமையுமாகும். இதனால் 84 முதல் இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் போர்ச் சூழலை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பது பற்றிய மார்க்சிய நிலைபட்ட விவாதம் எதுவுமில்லை. புதிதாக ஏற்பட்டுள்ள அரசியற் சமூக மாற்றங்களை குறிப்பிட்ட உடனேயே அது முற்போக்குக்கெதிரான ஒரு நிலையேயென்ற ஒரு மனோபாவம் சிலரிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால், மாற்றச் சூழ்நிலையின் இரத்தமும், சதையுமான வெளிப்பாடுகள், குறிப்பாக கவிதையிலும், சிறுகதையிலும் வெளிவந்துள்ளன. இவற்றை இலக்கிய வரலாற்றுப் பின்புலத்தில் எவ்வாறு நோக்குவதென்பது இன்னும் சரியாக செய்யப்படவில்லை.

தமிழகத்தில் (இந்தியா) இலங்கையில் ஏற்பட்டது போன்ற ஒரு நிலைப் பிறப்பு (நிலை குழுக்கம்) ஏற்படவில்லை யெனினும், அங்கு சமூக பண்பாட்டு நிலையில் அவற்றினூடாக பண்பாட்டு நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களை உள்வாங்கிய ஒரு முற்போக்கு இலக்கிய விளக்கம் கொள்கையாக்கம் (Theorisition) அவசியமாகிறது. மீண்டும் கட்சி நிலைப்படுத்தப்பட்ட இலக்கியம் என்பதற்கு போகாமல் அரசியல் பற்றிய அனைத்திந்திய, தமிழக நிலைபாடுகளை உள்வாங்கிய ஒரு கருத்தாடல் மீண்டும் அவசியமாகின்றது. ஏறத்தாழ 90களில் இலக்கியச் சிறு சஞ்சிகைகள் அப்பணியில் ஈடுபட்டிருந்தன. ஆனால் அவற்றினை ஆதாரமாகக் கொண்ட பொதுவான ஒரு இலக்கிய விமர்சிப்பு (Critigue) ஓர் அறிவுத் தொகுதியாக இன்னும் வரவில்லையென்றே, கூற வேண்டியுள்ளது.

இந்த வரையரையைக் கடந்து இலக்கியக் கருத்து நிலைச் செல்நெறி பற்றிய ஓர் ஒட்டுமொத்தமான விவாத அரங்கு நடத்தப் பெறுவது அவசியம். அன்பர் தோதாத்ரி தனது கட்டுரையினூடே வலியுறுத்த விரும்பியுள்ள விடயம் இந்த கருத்தாடலுக்கான ஒரு தொடக்கப் புள்ளியாக அமைவதற்கான வாய்ப்புண்டு.

இந்தக் கடிதத்தின் பின்னிணைப்பாக உள்ள ரியலிசம், சோசலிஸ்ட் ரியலிசம், மார்க்சியம் என்ற கா. சிவத்தம்பி எழுதியுள்ள கட்டுரை அடுத்த இதழில் வெளியாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com