Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006


எழுத்து உலகின் நட்சத்திரம் ‘தீபம்’ நா. பார்த்தசாரதி

மு. சீமானம்பலம்

திரு. வல்லிக்கண்ணன் அவர்களால் தொகுக்கப்பட்டு, ஞானியாரடிகள் தமிழ்மன்றம் வெளியீடாக வந்துள்ள “எழுத்து உலகின் நட்சத்திரம் ‘தீபம்’ நா. பார்த்தசாரதி” எனும் நூலில் நா.பா.வின் இரண்டு கட்டுரைகள் உட்பட, நண்பர்களும் உடன் பணியாற்றியவர்களும் எழுதிய பதினைந்து கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

படைப்புகள் பார்த்தவை கேட்டவை ஆகியவற்றைக் கொண்டு, எழுதப்பட்டு வெளிவந்துள்ள கட்டுரைத் தொகுப்புகளுக்கு இடையில், நெருங்கிய நண்பர்கள் நீண்ட காலம் உடன் பணியாற்றியவர்களால் எழுதப்பட்டுள்ளதாலேயே தொகுப்பு மிகுந்த நம்பகத்தன்மை கொண்டுள்ளது.

ஜெயகாந்தன், தி.க.சி., வல்லிக்கண்ணன், சின்னக்குத்தூசி முதலான பிரபலங்களின் கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூல். நா.பா.வின் பிறப்பு தொடங்கி இறுதிக்காலம் வரையிலான அவரது வாழ்க்கைச் சூழல், தமிழாசிரியர்பணி, கல்கியில் உதவியாசிரியர் பணி, அங்கிருந்து வெளியேறி / வெளியேற்றப்பட்டு தீபம் இதழைத் தொடங்குதல், இவ்விதழ் வெளிவந்து கொண்டிருக்கும் போதே பொருளாதார நெருக்கடி காரணமாகத் தினமணியில் வேலை செய்தல். குறிஞ்சி மலர், மணிபல்லவம், பொன்விலங்கு போன்ற சிறந்த புதினங்களின் படைப்பு என்பவற்றிற்கிடையில், நா.பா.வின் உடல் பேணும் முறை, காபி குடிக்கும் ஒவ்வொரு முறையும் வாய் கொப்பளித்தல் - வாசகர் கடிதங்களுக்குத் தனி “பைல்” பராமரித்தல், வாசகர் கடிதங்களுக்குப் பதில் எழுதுதல், எழுத்தாளர், வாசகர் முகவரி நோட்டு என்பதான அவரது முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறை குறித்த பல தகவல்களைப் பதிவு செய்திருக்கிறது. நா.பா. என்கிற ஒருவர் குறித்துப் பலர் ஒரே நேரத்தில் (இந்நூலுக்காக) எழுதிய கட்டுரைகளைக் கொண்டது என்பதாலேயே சில தகவல்களும் கருத்துகளும் திரும்ப வருகிறது என்பதைத் தவிர, இத்தொகுப்பு ஒரு வாழ்க்கை வரலாற்று (Biography) நூலின் தன்மையையும் கொண்டிருப்பதை இதன் கூடுதல் தகுதியாகக் கொள்ளலாம்.

எல்லாத்துறையிலும் இதுவரை எட்டியவற்றைவிட, இன்னும் எட்டப்படாதவை இருப்பதைப்போல், பத்திரிகைத் துறையிலும் அத்தகைய புதிய இலக்கியக் காரியங்களைத் தொடங்கி மேற்கொள்ள இடமிருக்கிறது என்று உறுதியாக நம்பி, தனது தீபம் இதழைத் தொடங்கிய நா.பா. பல இன்னல்களுக்கிடையிலும் 23 ஆண்டுகள் தீபத்தை அணையாமல் காத்ததன் மூலம், தமிழிலக்கிய - இதழியல் வரலாற்றில் தடம் பதித்திருப்பதை இந்நூல் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

1965 ஏப்ரல் 14ல் தமது தீபம் இதழைத் தொடங்கிய நா.பா. தமிழாசிரியர், இதழாசிரியர், நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு முதலிய பல துறைகளில் ஏறத்தாழ 80 நூல்களை வெளியிட்டுள்ளதோடு, இலக்கியப் பேச்சாளர், “பவர்” என்கிற இலக்கிய அமைப்பு, தேசியச் சிந்தனையாளர் மன்றம் ஆகியவற்றை நிறுவி நடத்துதல், சாகித்திய அகாதமியின் தமிழ் மண்டல அமைப்புச் செயலாளர் என்று பல்வேறு தளங்களில் திறம்பட இயங்கியவர்.

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தொன்மையான தமிழ் மரபின் சிறந்த அம்சங்களை உள்வாங்கிக் கொண்டு புதுமை இலக்கியங்களைத் தமது படைப்பாளிகள் உருவாக்குதல், இந்திய - உலக இலக்கியத்திற்கு நிகராகத் தமிழ் இலக்கியத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இலட்சியமாகக் கொண்டு, அதற்காகத் தமது தீபத்தின் பக்கங்களைத் திறந்து வைத்திருந்த நா.பா.வின் ஆளுமை மிக முக்கியமான ஒன்றாகும்.

நா.பா. தனது தீபத்தைக் கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற உள்ளடக்கங்களைக் கொண்டு வெளியிட்டதோடு, இன்றைய சிற்றிதழ்களுக்கு முன்மாதிரியாக, இலக்கிய விமர்சனம், நேர்காணல், மொழி பெயர்ப்புக்கதைகள், ஐரோப்பியப் படைப்புகள், படைப்பாளர்கள் பற்றிய குறிப்புகள் முதலியவற்றையும் வெளியிட்டதன் மூலம், தனக்கான தனித்த இடத்தைப் பெற்றார் என்பது பெரும்பாலான கட்டுரையாசிரியர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிரண்டு கவிதைகளோ, கதைகளோ வெளிவந்த உடனேயே தங்களைக் கவிஞர்களாகவோ, எழுத்தாளர்களாகவோ கருதிக்கொள்ளும் / தம்பட்டமடித்துக் கொள்ளும் மனிதர்களக்கிடையில், “என்னுடைய கடைசி எழுத்தின் கடைசிப் புள்ளியை நான் வைக்கின்றவரை எனக்கிருக்கிற பயமே எனது முதல் வாசகனும் ஆசானுமாகும்” என்கிற நா.பா.வின் கருத்து, அவரது டாம்பீகமற்ற தன்னடக்கத்திற்குச் சான்று கோருகிறது.

தமிழக ஜனரஞ்சகப் பத்திரிகைச் சூழலில் அறிவுக்கான இடம் பற்றியும் தமிழ் பத்திரிகை உலகில் ஒரு தன்மானமுள்ள எழுத்தாளன் பட நேரும் துன்பங்களைப் பற்றியும் பேசும் நா.பா.வின் கட்டுரை, நாற்பதாண்டுகளுக்குப் பிறகான இன்றைய நிலையிலும் அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது.
மங்களாகக் காணப்பட்ட தமிழ் இதழியல் சூழலில், தனது தீபத்தை ஏற்றியதன் மூலம் எழுத்தாளர்கள், விமர்சகர்கள், வாசகர்கள் என்று பலரைத் தன்பால் ஈர்த்த நா.பா.வின் நினைவும் அவரது படைப்புகளும் தீபத்தின் ஒளியில் மிளிர்ந்த இலக்கியங்களும் அணையாத் தீபமாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கின்றன / கொண்டிருக்கும் என்பது மிகையன்று.

“ஒருவரின் பிரிவினால் நம் மனத்தில் சூழ்கிற சோகம், அவரைப் பற்றிய நினைவுகளினால் மகிழ்ச்சி தரும் என்றால், அந்த மனிதர் மிக மிக நல்ல மனிதர்” என்று நா.பா. குறித்து ஜெயகாந்தன் கூறியதையே இப்பொழுதும் நினைத்துக் கொள்ளத் தோன்றுகிறது. “எழுத்து உலகின் நட்சத்திரம் ‘தீபம்’ நா. பார்த்தசாரதி”. நல்ல மனிதர் குறித்த நல்ல புத்தகம்.

தொகுப்பாசிரியர் : வல்லிக்கண்ணன்,
வெளியீடு : ஞானியாரடிகள் தமிழ்மன்றம்,
17, நாகமணித்தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை - 2,
விலை : ரூ. 40.00.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com