Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006

“நவீன இலக்கியத்தில் பெண்ணியம்” கருத்தரங்கு குறித்த கட்டுரை

இரா. பிரேமா

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் தஞ்சைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து அக்டோபர் 2005ம் ஆண்டு நடத்திய கருத்தரங்கிற்குப் பின், தலைநகர் சென்னையில் புகழ் பெற்று விளங்கும் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையுடன் இணைந்து மார்ச் 8 ஆம் தேதி அன்று, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ‘நவீன இலக்கியத்தில் பெண்ணியம்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் ஒன்றை நிகழ்த்தியது. படைப்பாளர்கள், ஆய்வாளர்கள், மாணவிகள், வெளியீட்டார்கள், பத்திரிக்கையாளர்கள், பார்வையாளர்கள் என்று பல்வேறு தரப்பினரையும் ஒன்றினைக்கும் களமாக அக்கருத்தரங்கு அமைந்திருந்தது.

எத்திராஜ் கல்லூரியின் கலை அரங்கில் நடைபெற்ற, கருத்தரங்கத் தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் பேரா. முனைவர் மு. தவமணி முன்னிலை வகிக்கக் கல்லூரியின் நிர்வாக குழுத் தலைவர் நீதியரசர் திரு. எஸ். ஜெகதீசன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். பல்வேறு பத்திரிகைச் செய்திகளை முன்வைத்துப் பெண்கள் முன்னேற்றம் குறித்து, விரிவான உரை நிகழ்த்திய அவர், பெண்கள் முன்னேற்றம் சரியான பாதையில் அமைதல் வேண்டும் என்று குறிப்பிட்டார். நாகரிகம் என்ற பெயரில் தடம்புரளும் பண்பாட்டு மீறலை அவர் தம் உரையில் சுட்டிக் காட்டினார்.

கருத்தரங்கில் தொடக்க உரை நிகழ்த்திய சாகித்திய அகெதமி விருதாளரும் எழுத்தாளருமான திருமிகு திலகவதி ஐ.பி.எஸ் (கூடுதல் காவல்துறை இயக்குநர், கடலோரப் பாதுகாப்புக் குழுமம், சென்னை) மகளிர் தினம் கொண்டாடுவதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், மார்ச் 8 ஆம் தேதி மட்டும் மகளிருக்கான தினம் அன்று, ஆண்டின் எல்லா நாட்களும் அவர்களுக்கானது என்ற கருத்தை முன் வைத்து உரையைத் தொடங்கினார். நவீன தமிழ் இலக்கிய பரப்பில், பெண் விடுதலைச் சிந்தனைக்குக் கால்கோலிட்ட மாயூரம் வேதநாயகம் பிள்ளை தொடங்கி மாதவைய்யா, பாரதி, பாரதிதாசன், வ.ரா, புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் என்று வளர்ந்து ராஜம் கிருஷ்ணன், அம்பை, வாசந்தி என்ற பெண் எழுத்தாளர்கள் எழுத்தில் ஆழமாகத் தடம் பதித்துள்ள விதத்தில் விரிவாக அலசி ஆராய்ந்தார்.

இன்றைய பெண் கவிஞர்கள் பாடு பொருளைத் தொட்டு நின்ற அவருடைய நெடிய உரை, கருத்தரங்கப் போக்கு எப்படி அமையவேண்டும் என்பதற்கு ஒரு கலங்கரை விளக்காக அமைந்திருந்தது எனலாம். நவீன இலக்கியத்தில் ஒரு நூற்றாண்டு பெண் விடுதலை வரலாற்றை ஒரு மணி நேரத்தில் தன் உரை மூலம் ஆழமாகப் பதிவு செய்தார்.

என்.சி.பி.எச். நிறுவன இயக்குநர் திரு. ஆர். நல்லகண்ணு அவர்கள் வாழ்த்துரையுடன் கருத்தரங்கு தொடங்கியது.

முதல் அமர்வு பெண்ணியல், அழகியல் என்ற பொருளில் அமைந்தது. தலைமையுரை நிகழ்த்திய எத்திராஜ் கல்லூரி ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர் காதம்பரி பெண்ணிய அழகியல் பற்றி விளக்க உரை நிகழ்த்தினார். எத்தனையோ பெண்ணிய அலைகள் அடித்தாலும் பெண் மொழி என்பதை இன்றும் செதுக்கி உருவமைக்க இயலவில்லை. பெண் மொழி மூலமாகத்தான் அழகியலை வெளிப்படுத்த முடியும். மொழி என்பது ஒருவருடைய உணர்வையும், அனுபவத்தையும் வெளிப்படுத்துவதாகும். அது பத்துக் கிலோமீட்டர் நடந்து நாளும் வாழ்வினை நடத்துகின்ற ஒரு பெண் உடல் மொழி வெளிப்பாடாக அமையலாம். குதறி எறியப்பட்ட, காயம்பட்ட பெண் உடல்களின் மொழியாக இருக்கலாம். தலையினைத் தடவி அன்பினை வெளிப்படுத்தும் அன்னையின் மொழியாக இருக்கலாம்.

உழைத்து வெளிறிய, சுருக்கம் நிறைந்த உழைக்கும் பெண்ணின் அனுபவ வெளிப்பாடாக இருக்கலாம். இதில் மேற் சுட்டிய எல்லாத் தாக்கங்களும் உவமை, உருவம், அணிகள் இவற்றின் வாயிலாகப் ‘பெண்ணிய அழகியல்’ வெளிப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் திறனாய்வாளர்கள் ‘அழகு’ என்பது ‘அழகு இல்லாததையும்’ உள்ளடக்கியது என்ற விளக்கத்தை தருகிறார்கள். ‘பிறிது’ என்பதை புதியதாகப் பார்க்கத் தொடங்கி உள்ளனர். முதல் உலக நாட்டினர் (First world country) பிறிதின் ஒரு அம்சம்தான் பெண். அவள் மூலமாக இவ் உலகைப் பார்க்கும் பார்வையே பெண்மொழி ஆகும். இது காறும் ஒத்துக் கொள்ளப்படாத, புறக்கணிக்கப்பட்ட பெண்களின் மூலமாக இலக்கியத்தையும், உலகின் போக்கையும் மாற்றக் கூடிய, புரட்டிப் போடக்கூடிய சாத்தியக் கூறு உள்ளது என்று பெண்ணிய அழகியலைப் பேரா. காதம்பரி சுட்டிக் காட்டி உரை நிகழ்த்தினார்.

அந்த அமர்வில் பேரா. முனைவர் அரங்க மல்லிகா தலித் அழகியலைப் பற்றிப் பேசினார். தலித் பெண்களுக்கான உணர்வுகளும் வேதனைகளும், வலிகளும் நிறைந்த உடல் மொழிகளும்தான் தலித் அழகியல் என்ற கருத்தைப் பதிவு செய்தார்.

பேரா. தமிழச்சி பெண்ணிய அழகியல் ஆணிய அழகியல் பார்வையிலிருந்து வேறுபடுவது என்று சுட்டிச் சென்றார். இரண்டாவது அமர்வு ஆண் பார்வையில் பெண்ணும் பெண்ணியம் என்ற பொருளில் அமைந்திருந்தது. இவ் அமர்வுக்கு தலைமைத் தாங்கிய பேரா. முனைவர் ப. ரெஜினா பாப்பா அவர்கள், பெண்கள் முன்னேற்றம் / சுதந்திரம் குறித்து தவறான புரிதல்கள் சமூகத்தில் நிலவி வருவதை சுட்டிக் காட்டினார். இன்றைய பெண்கள் ஆக்கப்பூர்வமான செயல் பாட்டில் ஈடுபட்டு வருவதைப் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினார்.

எழுத்தாளர் அழகிய பெரியவனும், பேரா. முனைவர் மணிவண்ணனும், ‘ஆண்கள் பார்வையில் பெண்கள்’ என்ற தலைப்பில் பேசியதை விடப் பெண்கள் பார்வையில் பெண்கள் என்ற கருத்தை முன் வைத்தே அதிகம் பேசினர். இன்றைய பெண் படைப்பாளர்கள் குறிப்பாகப் பெண் கவிஞர்கள் தங்கள் உடலை முன் வைத்துப் பேசுவது இன்றைய சூழலில் அதிகரித்துள்ளது.

இப்போக்கு பத்திரிகைகளில் சந்தை பார்வையில் சரியாக இனம் கண்டு கொள்ளப்படவில்லை. மாறாகக் கவிதைகளை ஆபாசப் படைப்புகளாகவே அவைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. எனவே, பெண் கவிஞர்கள் உடல் அரசியல் பேசுவதிலிருந்து வெளிவர வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தனர். ஆண் பார்வையில் நவீன இலக்கியப் படைப்புகளை அலசி ஆராய்ந்த பேரா. முனைவர் இரா. பிரேமா உரை நிகழ்த்தினார். தொடக்கக்கால படைப்பாளர்களை, மாயூரம் வேத நாயகம் பிள்ளை, மாதவைய்யா, வ.ரா. புதுமைப்பித்தன் போன்றோர் பெண் விடுதலை கோரும் சீர்திருத்தவாதிகளாக நின்று தம் படைப்புகளை எழுதினார்.

அடுத்து வந்த காலக் கட்டத்தில் அகிலன், ந.பா. மு.வ. ஜெயகாந்தன் போன்றோர் பெண் முன்னேற்றம் குறித்த சிந்தனைகளைத் தம் படைப்புகளில் பேசியுள்ளனர். இதே காலக்கட்டத்தில் தி. ஜானகிராமன், வ.ரா. போன்றோர்களின் படைப்புகள் பெண்கள் ஆண்களின் காம உணர்வுக்கான செக்ஸ் பொருட்களாக மட்டுமே இருந்தனர் என்று சுட்டிக்காட்டிய அவர், இன்றைய படைப்பாளர்களான பாலகுமரன், பிரபஞ்சன், தேவிபாலா போன்றோர் ‘பெண்ணியம்’ பேசுகின்றோம் என்ற பெயரில், அது பற்றிய தவறான பார்வையைத் தம் படைப்புகளில் தந்து வருவதைத் தக்க எடுத்துக்காட்டுகளுடன் முன்வைத்தார்.

அதிக விவாதத்திற்கு இடம் தரவேண்டிய அவ்அமர்வு நேரமின்மை காரணமாக விவாதமின்றி முற்றுப் பெற்றது. மதிய உணவுக்கு பின் ‘இலக்கியப் புனைவுகளில் பெண்ணியம்’ என்ற பொருளிலும், ‘பெண்கள் மீதான சட்ட வரைவுகளும் தீர்மானங்கள்’ என்ற பொருளிலும் அமர்வுகள் நடத்தப்பட்டன. மூன்றாம் அமர்வுக்குத் திண்டுகல் பேராசிரியர் முனைவர் சரோஜினி புதியவன் தலைமை தாங்கினார். கவிஞர் திலகபாமா தம் உரையில் மண் சார்ந்த பெண்ணியப் பார்வையே இன்றைய படைப்பாளர்களுக்குத் தேவை என்பதை வலியுறுத்திப் பேசினார். பேரா. பார்த்திபராஜா ‘தமிழ் நேயம்’ வெளியிட்டுள்ள பெண் எழுத்தாளர்களின் ஏழு சிறுகதைத் தொகுப்புகளை (1998-2005) முன்வைத்து உரை நிகழ்த்தினார். முதன் முறையாக எழுத்துலகிற்கு அறிமுகமாகும் பலவகைப்பட்ட சமூகப் பின்புலத்திலிருந்து எழுதும் பெண் எழுத்தாளர்களின் கதைகள் இவை.

எனவே, கோட்பாட்டு பெண்ணியத்திற்கும் நடைமுறைப் பெண்ணியத்திற்கும் உள்ள பல்வேறு வேறுபாடுகளை இக்கதைகளில் இனம் காண முடிகிறது என்றார். பெரும்பாலான கதைகள் குடும்ப அமைப்பில் இருக்கும் அடக்குமுறைகளைப் பேசுகின்றன. வரலாற்றில் பெண் அடிமைத்தனத்திற்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இரத்த சம்பந்தமான உறவுகளை உள்வாங்கிக்கொண்டு கதைகள் எழுதப்பட்டுள்ளன.

தமிழில் பெண்ணிய நிலையிலே படைப்புகள் கோட்பாட்டு உருவாக்கத்திற்கு முன் நிலையிலே நின்றுவிட்ட அவலத்தைப் பார்த்திபராஜா சுட்டிக்காட்டினார்.

பேரா. எழிலரசி அவர்கள் பெண் உடல் குறித்த உயிரியல் கோட்பாட்டை முன்வைத்து உரை நிகழ்த்தினார். வழக்கறிஞர் திருமதி கே. சாந்தகுமாரி பெண்களுக்கான சட்ட வரைவுகள் குறித்து உரை நிகழ்த்தியதோடு, சட்டங்களில் உள்ள இடைவெளிகள், ஆணுக்குச் சாதகமாக அமைந்துள்ளதை எடுத்துக்காட்டி, பாதிக்கப்பட்ட பெண்கள் சட்டத்தின் தேவையையும் விழிப்புணர்வு ஊட்டவேண்டியதின் தேவை என்று சுட்டிக்காட்டினார். ஐந்தாம் அமர்வு குழு விவாதமாக அமைந்தது. கவிஞர் க்ருஷ்ணாங்கினி, வெண்ணிலா, கனிமொழி ஆகியோர் இவ்அமர்வை முன் எடுத்துச் சென்றனர். எத்திராஜ் கல்லூரி மாணவி ஒருவர் பண்பாட்டைப் புரட்டிப் போடுவதுதான் பெண்ணியமா? என்ற வினாவை முன்வைத்தார். அதற்கு கவிஞர் க்ருஷ்ணாங்கினி புரையோடிப் போன பண்பாட்டிற்கு சிகிச்சை அளிப்பதே பெண்ணியம் என்றார். ‘கற்பு’ பற்றியும் கண்ணகி பற்றியும் விவாதம் திசை திரும்பியது.

இன்றைய சூழலில் கற்பை முன் வைத்துப் பெண்களை அடக்கி ஆள நினைப்பது இயலாத ஒன்று என்ற கருத்து விவாதத்தில் முன் வைக்கப்பட்டது. பெண் கவிஞர்கள் உடல் அரசியலை முன் வைத்துத் தங்கள் படைப்புகளைத் தருவது காலத்தின் கட்டாயம் ஆகும். அது ஆரோக்கியமாக உணரப்பட வேண்டுமே தவிர கொச்சைப்படுத்தப்படக் கூடாது என்ற கருத்தை முன் மொழிந்த கவிஞர் கிருஷ்ணாங்கினி, இனி வரும் காலங்களில் பெண்களின் படைப்புகள் அடுத்தக்கட்ட பொருண்மை நோக்கி நகரும் என்று கூறினார். நிறைவு விழாவில் எழுத்தாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ். (ஆணையார், ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயம் சென்னை) அவர்கள் உலகமயமாக்கப்பட்ட சூழலில் பெண் நிலை குறித்துத் தம் உரையை நிகழ்த்தினார்.

21-ம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றில் இக்கருத்தரங்கம் ஒரு மைல்கல் எனலாம். பெண் படைப்புகள் உடல் அரசியலிலிருந்து அழகியல் பொருண்மைக்குச் செல்ல வேண்டும் என்ற கருத்து விவாதங்களில் நிறைவாக எதிரொலித்தது. தமிழ் விவாதச் சூழலில் பெண் படைப்புகள் தமிழ் மண்ணுக்கே உரிய கோட்பாடுகளை முன் நிறுத்த வழி வகைச் செய்ய வேண்டும் என்ற கருத்து பார்வையாளர்கள், திறனாய்வாளர்கள் மத்தியில் நிலவியது.

இக்கருத்தரங்கிற்குத் தமிழகப் பல்கலைக் கழகங்களிலிருந்தும் தமிழகத்திற்கு வெளியே உள்ள பல்கலைக் கழகத்திலிருந்தும் பேராசிரியர்கள் வருகை தந்திருந்தனர். இது கருத்தரங்க நோக்கிற்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

(அறுபதுக்கும் மேற்பட்ட பெண்ணியக் கட்டுரைகள் இக்கருத்தரங்கில் இடம் பெற்றன. அவைகளை நூலாக்கும் முயற்சியை என்.சி.பி.எச். நிறுவனம் மேற்கொண்டுள்ளது).


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com