Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006

கட்டுரை

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

ஆர். பார்த்தசாரதி

தமிழகம் பல இயக்கங்களில் முன்னோடியாக இருந்துள்ளது. பிரம்மஞான சபை தலைவரான அன்னிபெசண்ட் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கம் வட இந்தியத் தலைவர்களை ஈர்த்தது. டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் கண்ட மாதர் இயக்கம் நாட்டு மக்களை விழிப்படையச் செய்தது.

சங்க இலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் தமிழ்ச் சமுதாயத்தில் நில உடைமையாளர் செல்வர் காமக் களியாட்டங்களுக்குப் “பரத்தையர்” என்ற மகளிர் பிரிவினர் இருந்தனர் என்று பறைசாற்றுகின்றன. பரத்தையர் இற்பரத்தையர், சேரிப்பரத்தையர் என இரு பிரிவினர் இருந்ததாகச் சங்க இலக்கியங்கள் சான்று தருகின்றன. தளிப்பெண்டிர், இருமனப் பெண்டிர், தேவதாசிகள், வேசிகள், தேவடியாள் என்ற சொற்கள் பிற்காலத்தில் வந்தன. வேசியர், விலைமாதர் எனவும் இவர்களுக்குப் பெயர்கள் உண்டு.

நில உடைமையாதிக்க எழுச்சி கோயில்களின் வளர்ச்சியோடு தொடங்குகிறது. இவ்வளர்ச்சியில் பெண்களுக்குப் பங்கு உண்டு, நிலமானிய முறை காலத்தில் வடிகாலாக இறைவன் பெயரால் இறைவனுக்குக் காணிக்கையாக, நேர்த்திக் கடனாக, உயர்குலப் பெண்களும், கைவினைஞர் சாதிகளைச் சேர்ந்த பெண்களும் கோயில்களில் “பொட்டுக் கட்டி” விடப்பெற்றனர். இவர்கள் தளிப்பெண்டிர், தேவதாசிகள் ஆனார்கள். கோயில்களில் இசையுடன் கூடிய கூத்தும், நடனம் ஆடுவது, இறைவன் எழுந்தருளும்போது ஊர்வலத்தில் முன்பு பாடி, ஆடிச் செல்வதற்கு மட்டுமல்லாமல் செல்வர், அரசர், மன்னர் ஆகியோரின் காம வேட்கையைத் தணிப்பதற்கும் அவர்களை மகிழச் செய்வதற்கும் இவர்கள் பயன்படுத்தப் பெற்றனர். ஒரு புறம் இசையும், இசைக் கருவிகளும், நடனமும் வளர்ந்தோங்கிச் சிறந்தன. தரநிலை அடைந்தன. ஆனால் மறுபுறம் அக்கலைகளை வளர்த்த மகளிர் சீரழிந்தனர். இம்முறை இந்திய நாடு முழுவதும் பரவியிருந்தது. ஆனால், குறிப்பாகத் தமிழகத்தில் கோயில்கள் எண்ணிக்கை மிகுதியாக இருந்த காரணத்தால் தேவதாசிகளின் எண்ணிக்கையும் தமிழகத்தில் தான் மிகுதியாக இருந்தது. பரதநாட்டியம், கூத்து, இசை வளர்ந்தன.

தமிழகத்தைத் தமிழ் மன்னர்களும், விஜய நகர மன்னர்களும் இஸ்லாமியர்களும் மராத்தியர்களும் ஆங்கிலேயர்களும் ஆண்ட காலத்திலும் இந்த முறை மேன் மேலும் வளர்க்கப் பட்டு வந்தது. ஆங்கிலேயர் நடத்திய கேளிக்கை விழாக்களில் தேவதாசியினர் நடனமாடினர். டாக்டர் முத்துலட்சுமியின் காலம் வரை இவ் அவலம் தமிழ்நாட்டில் தொடர்ந்தது.

முத்துலட்சுமி 1886 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று நாராயணசாமி, சுந்தரம்மாள் இருவருக்கும் தலைமகளாகப் புதுக்கோட்டையில் பிறந்தார். பெண் கல்விக்கு எதிராக அன்றிருந்த சமூகத் தடை, சட்டத்தடை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தந்தை நாராயணசாமி மகளை முதலில் திண்ணைப் பள்ளியிலும், பின்னர் உயர்நிலைப் பள்ளியிலும் படிக்கச் செய்தார். படிப்பில் காட்டிய ஆர்வமும் ஈடுபாடும் மகளின் மேற்படிப்புக்காக நாராயணசாமி அவர்களைப் புதுக்கோட்டை மன்னர் ஆதரவு பெறத் தூண்டின. மன்னர் ஆதரவில் 1907 ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் பயிலச் சென்னை வந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து 1912 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். படித்த காலத்தில் பெற்ற பரிசுகளும், பதக்கங்களும் பலப் பல. இவரே நம் நாட்டு வரலாற்றில் முதன் முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண்மணியாவார்.

இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சமுதாயத்திற்காக உழைக்க வேண்டும் எனத்திட சித்தத்துடன் இருந்தார். ஆனால் பெற்றோர் இசையவில்லை. டாக்டர் சுந்தர ரெட்டி என்பவர் மருத்துவம் பயின்று இங்கிலாந்தில் அமைப்பில் சேர்க்கப்பட்ட முதல் இந்தியராவார். முத்துலட்சுமி திறமையைக் கேள்விப்பட்ட அவர் முத்துலட்சுமியைத் திருமணம் செய்து கொள்ள அணுகினார். தன்னுடைய சுதந்திரம், உரிமை, கடமை உணர்ச்சி ஆகியவற்றைச் சுந்தர ரெட்டி மதிப்பவராகயிருந்தால், பணியில் குறுக்கிடாமலிருந்தால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று நிபந்தனை விதித்தார். அதை ஏற்றவுடன் திருமணம் நடைபெற்றது. அவ்விருவரும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றினர். சில ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் சுந்தரரெட்டிக்குச் சென்னை மருத்துவக் கல்லூரியில் பணி கிட்டியபின் முத்துலட்சுமியும் சென்னை வந்தார். இந்தக் காலத்தில்தான் அம்மையாரின் சகோதரி புற்றுநோய் வாய்ப்பட்டு மரணமடைந்தார்.

1926 ஆம் ஆண்டு சென்னை சட்ட அவைக்கு உறுப்பினராக நியமனம் செய்யப்பெற்றார். பின் அதன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலக நாடுகளில் பெண்ணொருவர் சட்ட சபைகளில் இத்தகைய உயர் பதவியில் அமர்த்தப் பெற்றவர் இவரே ஆவார். இவர் முயற்சியால் 1929 ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்புச் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. தேவதாசிகளைத் திரு வி. கல்யாண சுந்தரம் முதலியார் அவர்கள் வழுக்கி விழுந்தவர்கள் என்று குறிப்பிடுகிறார். இம் முன் வரைவு சட்டத்திற்கு வைதிகர்களிடமிருந்தும், தேசியவாதிகளிடமிருந்தும், தேவதாசிப் பெண்களிடமிருந்தும் கடும் எதிர்ப்புத் தோன்றிற்று. ஆனால் சீர்திருத்த இயக்கம் பலமாக ஆதரித்தது. ஆதரித்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் சுயமரியாதை இயக்கம் சார்ந்த மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார். தமிழக வரலாற்றில் இவருக்குச் சிறப்பான இடமுண்டு.

தர்ம சாஸ்திரங்களிலும் புராண இதிகாசங்களிலும் தேவதாசி முறை வலியுறுத்தப்பட்டு வருவதனாலும் இம்முறை கோயில் அமைப்பு முறைக்குக் குறிப்பாக இறைவனுக்கான பணிகளை நிறைவேற்ற இன்றியமையாத புனிதமான பணிமுறை, இது அழிக்கப்பட்டால் அது சாஸ்திர சம்பிரதாய முறைக்கு எதிர் என்று சொல்லி வைதிகர்கள் கடுமையாக எதிர்த்தனர். தொன்று தொட்டு வரும் இந்தப் புனித முறையைப் பழக்கத்தை அந்நிய ஆட்சியில் தொடக் கூடாது எனத் தேசிய வாதிகள் ஆர்ப்பரித்தனர். அவையில் கடுமையான விவாதம் நடைபெற்றது. முத்துலட்சுமி அம்மையாரின் கொள்கை உறுதிப்பாடும், வாதத்திறமையும், முற்போக்குக்குச் சிந்தனையும் வெற்றிதேடித் தந்தன. வியப்பு யாதெனில் தம் எதிர்கால பிழைப்பு என்னவாகுமோ என்று அஞ்சி 7000 தேவதாசிகள் சென்னையில் ஊர்வலம் நடத்தி எதிர்த்தாக வரலாறு காட்டுகிறது.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் தான் அதுவரை அவல வாழ்வு வாழ்ந்திருந்த மகளிரைச் சமூகத்தில் கண்ணியமான வாழ்வு வாழும் சாத்தியப் பாட்டை உருவாக்கித் தந்தது. புது வாழ்க்கை மலர்ந்தது. இதற்கு அடிக்கல் நாட்டியவர் முத்துலட்சுமி அம்மையார் ஆவார்.

இச்சட்டத்துடன் அமைதி பெறாது முத்துலட்சுமி இந்திய மாதர் சங்கம் கண்டு அதன் தலைவரானார். அதேபோது சென்னை நகராண்மைக் கழகத்தின் ஆக நியமனம் பெற்றார். இவை முத்துலட்சுமி அம்மையாரைச் சமூகச் சேவை செய்யத் தூண்டின. பல அனாதை இல்லங்களும் பல மாதர் அமைப்புகளும் தோற்றுவித்தார். சேரிவாழ் மக்களுக்கு மருத்துவம் செய்தார்.

உடன் பிறந்த சகோதரி புற்று நோய் கண்டு தகுந்த சிகிச்சையின்றி மடிய நேரிட்டது என்று முன்னர்க் குறிப்பிட்டோம். இந்நிகழ்ச்சி முத்துலட்சுமி அம்மையாருக்குப் புதிய உணர்வை, சிந்தனையைத் தோற்றுவித்தது. இங்கிலாந்து சென்று மகப்பேறு மருத்துவமும் புற்றுநோய் சிகிச்சையும் பயின்று சென்னை திரும்பினார். “அவ்வை” இல்லம் நிறுவி இந்திய நாட்டுக்கே முன்மாதிரியாகப் புற்றுநோய் சிகிச்சை மருத்துவ மனையை அமைத்தார். இதனை நிறுவுவதற்கு முன் 1935 ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற அக்கல்லூரிப் பொன்விழாவில் புற்றுநோய் மருத்துவ நிலையம் அமைக்க வேண்டும் என்ற உட்கிடையை, வெளிப்படுத்தினார். இதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டனார். 1952 ஆம் ஆண்டு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைப் பண்டித ஜவாஹர்லால் நேரு திறந்து வைத்தார். 1954 ஜூன் 18 ஆம் நாள் முதல் இம்மருத்துவமனை செவ்வனே நடந்து வருகிறது. ஆண்டு தோறும் 80,000 நோயாளிகள் புற்று நோய் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவருடைய அரிய சேவையைப் பாராட்டி இந்திய அரசு இவருக்குப் பத்மபூஷன் விருது அளித்துப் பெருமை பெற்றது.

தன்னலமற்ற தொண்டும் சேவையும் மாதர் குல மாணிக்கமான அன்னை முத்துலட்சுமியால் சிறப்பு எய்தின. இத்தகைய அருந்திறல் அம்மையார் 1968 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் நாள் இயற்கை எய்தினார். தமிழகத்தின் விடிவெள்ளி மறைந்தது. இன்று டாக்டர் முத்துலட்சுமி அவர்களால் அமையப் பெற்ற இந்த மருத்துவமனை உலகிலேயே சிறந்த மருத்துவமனையாக விளங்கிப் பொலிவு பெற்றுள்ளது.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com