Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006

கட்டுரை

கிளாரா ஜெட்கின்

ஆர். பார்த்தசாரதி

உலக மகளிர் தினம் மார்ச் 8ஆம் நாளாகும். உலகத் தொழிலாளர் தினமான மே தினம் அமெரிக்கா சிக்காகோவில் பிறந்தது போல உலக மகளிர் தினமும் அமெரிக்காவில் தான் பிறந்தது. படுமோசமான பணி நிபந்தனைகளுக்கு ஆட்பட்டு வந்த பெண்கள், குழந்தைகளுக்கு நல்ல பராமரிப்பு தேவை ஆண்களுக்குச் சமமான வேலை உரிமையும், வாக்களிக்க உரிமையும் வேண்டும் என முழங்கிப் பல்லாயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் நியூயார்க் நகரத் தெருக்களில் 1857ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று வலம் வந்தனர். இதுவே சுரண்டலை எதிர்த்து உழைக்கும் பெண்களின் முதல் போராட்டம். ஆனால் 1910 ஆம் ஆண்டு உலக சோஷலிச பெண்கள் மாநாடு நடைபெற்ற போது உலகப் பெண்களை ஒன்று திரட்டவும், உரிமைகளுக்காகப் போராடவும், ஒரு நாள் குறிக்கப்பட வேண்டும். அது மார்ச் 8 ஆக இருத்தல் வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு உழைக்கும் மகளிர் சோஷலிச மாநாட்டு முடிவு, காலம் செல்லச் செல்ல, உலக மகளிர் தினமாக ஏற்கப்பட்டது.

அக்காலத்தில் பணியிடங்களில் உழைத்த பெண்கள் நாயினும் கேடாகச் சேற்றிலும் சகதியிலும் உழைத்தனர். குடிசைகளிலும், சதுப்பு நிலங்களிலும் சாலைகளின் ஓரங்களில் உழன்று பணி செய்தும் உறங்கியும் குடும்பம் நடத்தியும் வாழ்ந்தனர்.

இதே 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் ஜெர்மனியில் சாக்சனியில் கிளாரா ஜெட்கின் பிறந்தார். தாராள உள்ளம் கொண்ட தந்தையார் அவருக்குக் கல்வி கற்பித்தார். தொழிலாளி வர்க்க மக்களிடைக் கல்விப் பணி செய்த முதல் ஜெர்மனியப் பெண்மணி இவரே. மார்க்சியத்தால் ஈர்க்கப் பெற்ற அம்மையார், பிரடெரிக் ஏங்கெல்சின் நெருங்கிய, நம்பிக்கைக்குரிய நண்பரானார். ஆர்வம், துணிச்சல், அர்ப்பணிப்பு மனப்பான்மை மிக்கவர் என்று அனைவராலும் பாராட்டப் பெற்றவர். இவருடைய முயற்சி, பணி இவரைச் சர்வதேச சோஷலிஸ்ட் மகளிர் இயக்கத்தில் பணி செய்யத் தூண்டின. அவர் அவ்வியக்க மாநாட்டில் நியூயார்க் மகளிர் எழுச்சி நினைவாக மார்ச் 8 உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். முழுமனதாக எதிர்ப்பின்றிப் பரிந்துரை ஏற்கப்பட்டது. அவர் கண்ட பெண்கள் இயக்கத்தில் 5 இலட்சம் உறுப்பினர்கள் இருந்ததாகக் கணிக்கப்பட்டது.

1848 ஆம் ஆண்டு பெர்லினில் வெடித்தெழுந்த தொழிலாளர் புரட்சியில் பலர் மடிந்தனர். மார்ச் 18 அவர்களுடைய நினைவு தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என முன் மொழிந்தவர் புரட்சிப் பெண்ணான கிளாரா ஜெட்கின். இவரே 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தொழிலாளி வர்க்க சோஷலிச இயக்கத்தின் ஈடிணையற்ற மாதர் தலைவியாக விளங்கியவர்.

முதன் முதலில் 1893 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பிறகுதான் பெண்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க உரிமையும் வழங்கப்பட்டது. பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். இவை கிளாரா ஜெட்கின் கண்ட இயக்கத்தின் பலன்கள்.

பெண், மனைவியாகவோ, தாயாகவோ பிறரைச் சார்ந்து வாழ்க்கை நடத்துபவள் என்னும் இழி நிலைமை மாறவேண்டும் என்றார் கிளாரா. ஆண்களுக்குச் சரிநிகராக வேலை செய்து கூலிபெறும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தனித்து நின்று எல்லா வழிகளிலும் சிறப்பாக வாழ வேண்டும் என்பது அவருடைய பல நோக்கங்களில் ஒன்று. இது, இன்று மாதர் பொருளாதார சுதந்திரம் பெற்று எவரையும் சாராது நம்பாது தனித்து நின்று வாழ முடியும் அதற்குப் பொருளாதார நிலை உறுதியாக அமைய வேண்டும் என்னும் முழக்கத்தில் பிரதிபலிப்பது காணலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் மேல் தட்டு வர்க்கப் பெண்டிருடனோ அவர் இயக்கத்துடனோ தொடர்பு கொள்ளக் கூடாது என்பது கிளாராவின் உறுதியான கருத்து. குழந்தை வளர்ப்பும், குடும்பப் பராமரிப்பும் சமுதாயக் கடமைகளாக ஆக்கப்படவேண்டும். தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு ஆள்பட்டவையாக அவை இருத்தலாகாது என்று கருதினார். அவர் காலத்திலேயே அவரோடு சேர்ந்து பணியாற்றியவர்கள் பெண்கள் உழைப்பில் ஈடுபட்டால் ஆண் தொழிலாளர்கள் உரிமைகளும், ஊதியமும் பறிக்கப்படும் அல்லது பாதிக்கப்படும் என்று இவரோடு வாதாடினார்கள். இவர்களைத் தம் வாதத்திறமையால் வென்றார் ஜெட்கின்.

“லெனின் நினைவுக்குறிப்புகள்” என்னும் தம் நூலில் அம்மையார் லெனினைச் சந்தித்த போது அவர், “கலை மக்களுக்குச் சொந்தமானது. உழைக்கும் மக்களிடை ஆழ வேர் விட்டிருப்பது; அவர்களை ஈர்ப்பது; அவர்களால் நன்கு உணரப் பெற்று உவந்து வரவேற்கப்படுவது. இலக்கியம் என்பது உழைப்பாளர் உள்ளங்களிலிருந்து கிளர்ந்து பீறிட்டெழும் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பது அவர்களுடைய வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருப்பதோடு அதனை உயர்த்துவதும் ஆகும்” என்று சொல்லியதாகக் கூறுகிறார்.

ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஜெர்மனியில் பாசிசம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. உழைப்பாளி வர்க்கம் கொடிய அடக்குமுறைக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என்று எச்சரித்த கிளாரா ஜெட்கின், எச்சரித்த சில நாட்களிலேயே 1933 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20 ஆம் நாளன்று மாஸ்கோவில் காலமானார்.

கிளாரா ஜெட்கின் நினைவாக உலக மகளிர் தினம் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மே தினம் தொழிலாளர்களுக்கு எவ்வாறு புனிதமானதோ அவ்வாறு மார்ச் 8 மாதர்களுக்குப் புனித நாள். வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com