Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006

கட்டுரை

மே நாளில் ம.சிங்காரவேலர்

முத்து குணசேகரன்

“கரும்புடைந்து சிதைந்துவிட்டால் கசப்பதில்லை
கற்கண்டு பொடியானால் புளிப்பதில்லை
அரும்புடைந்து சிதைந்தாலும் தேனேயன்றி
அதிலிருந்து வேறொன்றும் வருவதில்லை!
பெருங் கொள்கைதனை ஏற்றுப் போகும்போது
பெருந்தோல்வி கண்டாலும் புகழேயாகும்”

என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் மேதை ம.சிங்காரவேலர். அவர்தான் ஆசியாவிலேயே சென்னையிலே இரு இடங்களில் 1923இல் மேநாளைக் காங்கிரஸ் கொடியுடன் கதிர் அரிவாள் சின்னம் பொறித்த கம்யூனிஸ்டுக் கொடியும் ஏற்றிக் கொண்டாடிய மேதை! புதிய வரலாறு படைத்தவர்!

அமெரிக்காவில் தோற்றம் பெற்ற அந்த உன்னத மே நாளின் மேன்மையைப் புரிந்துகொண்டவர் அவர். பொதுவுடைமை இயக்கம் சோவியத்து இரஷ்யாவில் தோற்றிருக்கலாம், ஆனால் உலகின் ஆணிவேர் தொழிலாளிகள் தான் என்பதை உலகமே உணர்ந்துதான் உலக நாளாக உலகம் இன்றைக்கு மே நாளைக் கொண்டாடுகிறது. இந்நாளைக் கொண்டாடிய மேதையை ஏதோ ஒருவகையில் உலகம் - நினைவு வைத்துக்கொள்ளவே செய்கிறது. சென்னையில் சிங்காரவேலர் திடல் என்பதும், முகவை மாவட்ட ஆட்சித் தலைவர் மாளிகை சிங்காரவேலர் பெயரைப் பெற்றிருப்பதுவும், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம் சிங்காரவேலர் சிலையுடன் அவர் பெயரைப் பெற்றிருப்பதும், சென்னைத் துறைமுகத்தில் ‘சிங்காரவேலர் முட்டுக்கப்பல்’ அசைந்தாடி நிற்பதும், நாகைப் பொதுமக்களால் சிங்காரவேலர் அறக்கட்டளைத் தோற்றம் பெற்றிருப்பதும், சென்னைப் பொதுமக்களால் சிங்காரவேலர் கல்வி அறக்கட்டளை உருவாகியிருப்பதும், புதுவை அரசு சிங்காரவேலருக்குச் சிலை எடுத்திருப்பதும், இளைஞர்கள் கூடிப் பழையாற்றுத் துறைமுகத்தில் சிங்காரவேலருக்குச் சிலை அமைத்திருப்பதும், தஞ்சை மாவட்ட ஜெயராம் என்பவர் பெருந் தோட்டத்தில் சிங்காரவேலருக்குச் சிலை எடுத்திருப்பதும், வெகு ஜனங்களால் இயல்பாக உருவாகிய நினைவுச் சின்னங்கள்! மக்களின் எழுச்சியது!

“உண்மையான பெருந்தலைவனை 700 ஆண்டுகள் கடந்த பின்னரே உலகம் இனங்காணும்” என்கிறார் சிங்காரவேலர். அது அவரைப் பொறுத்தவரை சரியாகவே இருக்கிறது. மத்திய அரசு இன்றைக்குப் பாராளுமன்றத்திலே அவர் படத்தை வைக்கிறது. மத்திய அரசு அவருக்கு அஞ்சல் தலையும் வெளியிட்டுள்ளது. பேரறிஞர் கிரேன் முகர்ஜி சொன்னதைப் போல இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களுக்குச் சுயமரியாதை உணர்வூட்டிய தந்தை பெரியாரும் தொழிலாளர் களுக்குப் பாடுபட்ட ம. சிங்காரவேலரும் மட்டுமே நினைக்கப் படுவார்கள் என்பது இன்றைக்கு உண்மையாகி வருகிறது!

தொழிற் சங்கத் தலைவர்கள் மத்தியிலேயே சிங்காரவேலர் மட்டுமே தனித் தன்மையுடன் வித்தியாசமாகக் காணப்பட்டார். 1920-களிலே தொழிற்சங்கத் தலைவர்கள் பலரும் கூடிச் “சிங்காரவேலரைத் தொழிற் சங்கக் கூட்டத்திற்கு அழைக் காதீர்கள். ஏனென்றால் தொழிலாளிகளுக்கு அவர் தொழிலில் பங்கு கேட்கிறார்” என்று தீர்மானமே போட்டனர். ஆகவே தான் அந்நாளையை தொழிற்சங்க மேதைகளான ‘கர்னல் வெட்ஜ்வுட்டும்’, ‘ஹெச்.என். பிரைல் போர்ட்டும்’, மற்றும் ‘ஹால் போர்ட் நைட்டும்’ மற்ற தொழிற்சங்கத் தலைவர் களிடையே சிங்காரவேலர் வித்தியாசமாக இருக்கிறார். ‘முதலாளிகளிடம் மற்ற தொழிற்சங்கத் தலைவர்கள் கூலி உயர்வு கேட்கும்போது இவர் மட்டுமே தொழிலாளிகளுக்குத் தொழிலில் முதலாளிகளிடமிருந்து பங்கு கேட்கிறார்” என்று குறிப்பிட்டார்கள்.

கூலி உயர்வுக்கும், தொழிலில் பங்கு கேட்பதற்கும் உள்ள உண்மையான வேறுபாட்டை மேற்கு ஜெர்மனி தோழர்கள் புரிந்துகொண்டிருந்ததனால்தான் சிங்காரவேலரைப் பற்றிய கைகளை நாங்கள் பற்ற வேண்டுமெனப் பாரட்லா கே.டி.கே. தங்கமணியிடம் கூறினர். வாழைக்குக் கீழ்க் கண்ணாக வாய்த்த நாகை கே. முருகேசனின் முயற்சியால் இன்றைக்குச் சிங்காரவேலரை அனைவரும் அறியும் நிலை உருவாகிவிட்டது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் 2000 பக்கங்கள் கொண்ட “சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம்” உண்மையான சிங்காரவேலரை நிச்சயம் மக்களுக்கு இனம் காட்டும். கடலில் புதைந்து கிடக்கின்ற பனிப்பாறையின் முகடு மூன்றடியென்றால் ஆழத்தில் மறைந்திருப்பது முப்பதடி என்பார்கள். சிங்காரவேலரின் உண்மை வரலாறும் அப்படித்தான்!

வியட்னாமின் பெருந்தலைவர் ஒசிமின் பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மாஸ்கோ சென்று கட்சிப் பணியாற்றியவர். அவருக்கு ஒரு பெரிய ஏக்கம் இருந்தது. லெனினை நேரில் சந்திக்க வேண்டுமென்றார். அது முடியாமலேயே போய்விட்டது. 1924இல் லெனின் காலமாகி விட்டார். ஆனால் 1920களில் இந்தியாவிலிருந்து சென்ற எம்.பி.டி.ஆச்சார்யாவிடமும், இந்தியாவின் இன்னெபெருந்தீரர் இராஜமகேந்திரப் பிரதாப்பிடமும் “இந்தியாவின் கிழச்சிங்கம் சிங்காவேலர் எப்படி இருக்கிறார்? என்று லெனின் கேட்ட வரலாறு உண்டு.

1924இல் பெல்ஹாம் காங்கிரஸ் மாநாட்டில் தொழிலாளர்களுக்குழைத்த லெனின் மறைவு உலகின் பேரிழப்பாகுமென இரங்கல் தீர்மானம் தந்து சிங்காரவேலர் காந்தியிடமே முரண்பட்டதுண்டு. இன்னும் எவ்வளவோ செய்திகள் சிங்காரவேலரைப் பொறுத்தவரை மறைந்தே கிடக்கின்றன. 1930-களிலே திடீரெனப் பெரியார் தமிழகத்தில் காணாமல் போய்விடுகிறார். மிக முயன்று இரகசியக் காவலர்கள் பெரியார் இரஷ்யா சென்றுவிட்டதை அறிகிறார்கள். “இராமசாமி நாயக்கன் கெட்டுவிட்டான், சிங்காரவேல் செட்டி அவனைக் கெடுத்துவிட்டான்” என்று இரகசியக் காவலர்கள் குறிப்பெழுதியுள்ளனர். இவைகளெல்லாம் ஆய்வாளர்களுடைய சிந்தனைக்குரியவை.

புரட்சி என்பது தலைகீழ் மாற்றம். உலகில் ஒசிமின் ஒரு புரட்சியாளர். மாவோ ஒரு புரட்சியாளர், லெனின் ஒரு புரட்சியாளர். இந்தியாவில்சிங்காரவேலர் ஒரு புரட்சியாளர். சிங்காரவேலருக்குப் பின் இந்தியாவில் புரட்சி செத்தது என்றார் பாவேந்தர் பாரதிதாசன். பொங்கிய சீர்திருத்தம் பொலிந்தது அவனால், பொய்மை புரட்டு, அறியாமை பொசிந்தது அவனால், சங்கம் தொழிலாளர்க்கு அமைந்தது அவனால் என்னும் பாவேந்தர் போர்க்குண் மிகுந்த செயல் முன்னோடி என்பது பொருள் பொதிந்த வார்த்தையல்லவா?

மே திருநாளைச் சிங்காரவேலர் உலகத் தொழிலாளர் திருநாளாகவே மதித்தார். 1986இல் தி.மு.க. அரசு மேநாளைக் கொண்டாடத் தொடங்கியது. நேப்பியர் பூங்காவை மேதினம் பூங்காவென அரசு பெயர் மாற்றம் செய்தது. அண்ணா ஆட்சிக்காலத்தில்தான் மே நாளைக்கு விடுமுறை தந்தார். பிரதமர் வி.பி. சிங் இந்திய அளவிலே மே நாளை விடுமுறை நாளாக அறிவித்தார். ஆனால் 1923-லேயே மே நாளை இந்திய அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமெனச் சிங்காரவேலர் கோரிக்கை வைத்திருப்பது நமக்கு உண்மையில் வியப்பளிக்கிறது! அவரைச் சிந்தனைச் சிற்பி என்பது மிகவும் பொருத்தம்தானே?

உலகம் உண்மையில் இயங்குவதற்கு எத்தனையோ காரணிகள் இருந்தாலும் தொழிலாளிகள்தான் அடிப்படைக் காரணமென்றார் சிங்காரவேலர். தொழிலாளிகள் உண்மையில் அறிவு ஜீவிகளாக இருக்க வேண்டுமென்று சிங்காரவேலர் பேசினார், எழுதினார். தொழிலாளர்களே, முதலில் உங்கள் சங்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். பின்னர் சென்னை நகரத்தின் அனைத்துச் சங்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் தமிழகம், இந்திய அளவில் ஏன், உலகத்திலுள்ள அனைத்துத் தொழிற்சங்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். உலகத்திலுள்ள தொழிலாளிகள் அனைவரும் உங்கள் கூட்டாளிகள்; உங்களுக்குள்ள சிக்கல் களைப் போலவே உலகத் தொழிலாளிகளின் சிக்கல்களும் உள்ளன என்பதைச் சிங்காரவேலர் மேநாள் செய்தியாக வெளிப்படுத்தினார்.

தொழிலாளிகளின் மேன்மையை உணர்ந்திருந்ததால்தான் சிங்காரவேலர் தான் தொடங்கிய கட்சிக்கு “ஹிந்துஸ்தான் லேபர் கிஸ்ஸான் கட்சி”யெனப் பெயரிட்டார். அவர் கட்சியின் கொள்கையைப் பரப்புகின்ற பத்திரிகைக்கு “ஹிந்துஸ்தான் லேபர் கிஸ்ஸான் கெஜட்” என்றும், தொழிலாளர் என்றும் பெயர் சூட்டினார். இந்தியத் தொழிலாளிகளுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காகவும் குரல் கொடுத்தவர் சிங்காரவேலர். அமெரிக்க அரசால் கொடுமையாகக் கொல்லப் பட்ட சாக்கோ, வான்சிட்டிக்காக 1928-லேயே கண்டனக் கூட்டம் நடத்தியவர் சிங்காரவேலர் என்பது நமக்கு வியப்பளிக்கிறது.

புதைப்பதற்கும் விதைப்பதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்பார்கள். சிங்காரவேலர் புகழும் இன்றைக்கு விதைப்பதாகவே அமைந்துள்ளது. சிங்காரவேலரை இன்றைக்கு நாம் கொண்டாடுவதைவிட உலகம் உண்மையைப் புரிந்து கொண்டு உன்னதமாகக் கொண்டாடத் தொடங்கிவிட்டது. நாகை கே. முருகேசனின் துணையோடு இரஷ்யாவின் மித்ரோக்கின் என்னும் ஆய்வாளர் உலகில் பெரிய நூலகமான மாஸ்கோ லெனின் நூலகத்தில் சிங்காரவேலர் நூலகத்திலிருந்து திரட்டிய நூல்களைக் கொண்டு “சிங்காரவேலர் நூலகம்” என்ற பெயரில் நூலகம் அமைக்கப்பட்டிருப்பது நமக்கு வியப்பளிக்கலாம்; ஆனால் அது உண்மை. அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி, பெண் விடுதலை, குழந்தைகள் உரிமை என்று இறுதிவரை முழங்கிக்கொண்டிருந்த சிங்காரவேலரின் இறுதி மூச்சு உலகில் அமைதி தழைக்கட்டும், யுத்தமற்று போகட்டு மென்றே அடங்கியதாம். அந்த மேதையை இந்த மேநாளில் நினைப்பது உழைப்பவர் கடமையல்லவா?



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com