Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006

பிராகிருத மரபில் இலக்கிய படைப்பும் வாசிப்பும்

ஆ.கார்த்திகேயன்

மொழி வழியே செய்கின்ற வேலைகளுள் இலக்கியப் படைப்பு முக்கியமான ஒன்றாகும். ஆனால் மொழிவழிச் செய்கின்ற மற்ற வேலைகளினின்று அது வேறுபட்டும் தனித்துவம் பெற்றும் விளங்குகின்றது. ஒரு நிகழ்வைக் குறித்து அறிக்கை தயாரிக்கின் றோம். அது மொழிவழியே நடைபெறுகின்ற வேலையே. ஆனால் நடந்த நிகழ்வுகளை நிரல்படுத்தித் தயாரிக்கும் அறிக்கையை ஓர் இலக்கியப் படைப்பு என்று கூற முடியாது. அன்றாடம் நாம் பிறருக்குக் கடிதங்கள் எழுதுகின்றோம். செய்திகளைத் தெரிவிக்கவும், அறிந்து கொள்ளவும் கடிதங்கள் எழுதப்படுகின்றன. கடிதம் எழுதுவதும் மொழிவழி நடை பெறுகின்ற வேலையே. ஆனால் அவற்றை இலக்கியங்களாக நாம் கருதுவதில்லை. ஒரு கடிதத்திற்கோ அல்லது அறிக்கைக்கோ இல்லாத பண்புகளை ஓர் இலக்கியப் படைப்பு பெற்றுள்ளது. அப்பண்புகளை அடையாளம் கண்டுகொண்டால் இலக்கியத்தின் தன்மையை எளிதாக விளங்கிக் கொள்ளமுடியும். உயர்ந்த அறக்கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதால் ஒன்றை இலக்கியம் என்று கூறிவிடலாமா? செறிவான சொற்களும், தொடர்களும் நிரம்பியிருந்தால் சிறந்த படைப்பாகிவிடுமா? இலக்கியம் தரும் உணர்வு நிலைப்பட்ட வெளிப்பாட்டினை அதன் சிறப்பாகக் கொள்ளலாமா?

ஒரு கடிதமோ அல்லது அறிக்கையோ ஒரு குறிப்பிட்ட மனிதர்களுக்காக எழுதப்படுவது; ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற் காக எழுதப்படுவது. அந்த நோக்கம் நிறைவேறிய பின்னர் அதன் பயனும் முடிந்துவிடுகிறது. இலக்கியம் அவ்வாறில்லை. மனித சமுகத்திற்காக எழுதப்படுவது. ஓர் இலக்கியத்துக்கு அந்தமில்லாத பயன்பாடு கிடைத்து விடுகிறது. கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு முன்னால் எந்தப் புலவனோ எழுதிய பிராகிருதப் பாடலை நான் படிக்கிறேன். அது தரும் பொருட் சுவை, சொற்சுவையை இரசிக்கிறேன். அது மனதிற்கு மகிழ்ச்சி யையும் நிறைவையும் அளிக்கின்றது. இலக்கியத்துக்குள்ள இந்தப் பண்பு முக்கியமானது. கால தேச வர்த்தமானங்களைக் கடந்து நிலவி நிற்கும் இலக்கியங்களைப் படைப்பதும் எளிதான காரியமில்லை.

இறைவனுடைய திருவருளாலேயே நல்ல கவிதை வாய்க்கப்பெறும் என்று புலவர்கள் நம்பினார்கள். அதற்காக இறைவனிடம் வேண்டித் தாம் படைக்கத் துணிந்த பனுவலை எழுதத் தொடங்கினார்கள். “செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே பஞ்சக்கரவானைப் பதம்பணிவாம்” என்று வேண்டுவார் அருணகிரியார். இறைவன் அருளாலே ‘வாக்குண்டாம்’ என்று நம்பினார் ஒளவையார். காவியத்தைப் படைக்கத் தொடங்கும் காளிதாசர், “சொல்லும் பொருளும் போல இணைந்திருக்கிற பார்வதி பரமேஸ்வரனைச் சொல்லும் பொருளையும் பெற வேண்டி வணங்குகிறேன்” என்பார். திருநாவுக்கரசர் ‘சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே’ என்றும் ‘பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே’ என்றும் குறிப்பிட்டுள்ளதைக் கருதிப் பார்க்கலாம். சிறந்த படைப்பு கடவுளுக்குச் சமமானது. கடவுளைப் போல உயர்ந்தது. போற்றுதற்குரியது என்றெல்லாம் பொருள் கொள்ள இடமிருக்கிறது.

பாக்களைச் சொற்பிரித்தும் உணர்த்தும் பொருளை உணர்ந்து அறிவது வாசிப்புக் கலையாகும். வாக்கியங்களில் பயின்றுவரும் சொற்கள் பொருளை உணர்த்துகின்றன. சொற்கள் உணர்த்தும் பொருளைச் சொற்பொருள் (Lexical Meaning) என்று சொல்லுவார்க்ள் . வாக்கியத்தின் அமைப்பு வாக்கியப் பொருளைத் (sentence meaning) தருகிறது. ஒன்றை நம் அறிவு, அனுபவம் என்ற பின்புலத்தில் பார்ப்பதனால் புதிய பொருள் (Pragmetic meaning) தோன்றுகிறது. இப்பொருள் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது. இதனால்தான் படைப்பின் பொருள் வாசகருக்கு வாசகர் அவருடைய அறிவு அனுபவத்திற்கு ஏற்பப் பல்வேறு நிலைகளில் புரிந்து கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக குறளுக்கு எழுதப்பட்ட உரைகள் யாவும் ஒரே மாதிரியான பொருள் கொண்டு விளங்கவில்லை. “ஒரு குறளுக்குப் பல உரை எழுதுவானேன்?” அறத்திற்கு இலக்கணம் கூறும்போது “அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம்” எனப் பரிமேலழகர் கூறுவது பொருந்தாது என்று கூறுவாரும் உளர்.

ஒரு முறை வாசித்ததையே மறுமுறை வாசிக்கும்போது புதிய பொருள் தோன்றுவது வாசிப்பில் மற்றொரு வகை. ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால்’ என்ற தொடர் இக்கருத்தை வலியுறுத்துகிறது. வாசிப்பு நம் அறிவைக் கூட்டுவதோடு அல்லது விருத்தி செய்வதோடு இலக்கியத்தையும் வாழ்விக்கச் செய்கின்றது. இலங்கைத் தமிழ்ப் பாட நூலில் வாசிப்பைப் பற்றிய துணுக்கு ஒன்று இடம்பெற்றுள்ளது. இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு குருவிடம் அவரது சீடன் உபதேசத்தைச் செய்தருளுமாறு வேண்டுகிறான். அவ்வேளையில் குருவின் வாய் ஏதோ முணுமுணுக்கிறது. சீடன் உற்று கவனிக்கிறான். குருவின் வாயிலிருந்து ‘வாசி’ என்ற சொல் வந்தது. சீடன் ஒன்றும் புரியாமல் மீண்டும் குருவிடம் கேட்கிறான். குரு, “மீண்டும் மீண்டும் வாசி” என்று கூறிவிட்டு இறந்து விடுகிறார். பின்னர்தான் சீடனுக்கு “வாசிப்பு மனிதனை முழுமையாக்கும்” என்ற உண்மை புரிந்தது. வாசிக்கவேண்டும் என்ற உணர்வு பெறுதலே ஒருவகையான ஞானம்தான். வாசிக்கத் தெரியாதவனை வசைபாடவும் துணிந்துள்ளார்கள் நம் புலவர்கள். கற்றவற்றை எடுத்தோதத் தெரியாதவனைக் கடிந்துள்ளார்கள். அறிஞர்கள் நிறைந்த அவைதனில் நீட்டோலை வாசியாமல் நின்றவன் மரத்திற்குச் சமமானவன். கற்றவற்றை எடுத்துச் சொல்ல இயலாதவன் மணமில்லாத கொத்துமலர் போன்றவன். கல்லாவிடினும் கற்றார் சொல்லைக் கேட்க வேண்டும் என்பது குறள்.

இனி, பிராகிருத இலக்கியங்களில் படைப்பிலக்கியம் குறித்தும் அவற்றை ஓதுகின்ற முறை குறித்தும், கேட்போர் குறித்த செய்திகளையும் தொகுத்துக் காணலாம். கேட்போர் என்ற தலைப்பில் கீழ்க்கண்ட காதாக்கள் (Gathas) உள்ளன.

1. காவியத்தைப் படைப்பது மிகவும் கடினமான செயல். அவ்வாறே படைக்கப்பட்டாலும் அவற்றை ஓதுதற்கு ஆளில்லை. யாரேனும் ஓதினாலும் அதைச் செவிமடுப்போர் யாருமில்லை.

2. காவியம் சமஸ்கிருத மொழியில் படைக்கப்பட்டால் என்ன? பிராகிருத மொழியில் படைக்கப்பட்டால் என்ன? கேட்போரின் தன்மைக்கேற்பச் சொல்லப்பட்ட பாடுபொருள் அபூர்வமான ரசத்தைத் தருகிறது. இது மிகவும் வியப்பிற்குரியது.

3. காவியம் முத்துமாலை போன்றது. பொன்னிழையில் கோக்கப்பட்ட வெண்மையான மாலை காதுக்கு அணிகலனாக அமைந்து மகிழ்ச்சியைத் தருவதைப் போல, பொருள் குற்றமற்ற, இனிய ஓசையுடைய ஒலிகளால் யாக்கப்பட்ட காவியம் கேட்போரின் காதுகளில் பேரின்பத்தை அளிக்கிறது.

காவியத்தை எல்லோராலும் எழுத முடியாது. புலவர் களாலேயே எழுத முடியும். எல்லோராலும் ஓதமுடியாது; கற்றவர்களாலேயே ஓதமுடியும். ஆனால் எல்லோராலும் கேட்க முடியும். கேட்பதற்கு என்று திறமை ஏதும் தேவையில்லை. இந்நிலையில் கேட்பவர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்களே என்னும் ஆதங்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பொதுவாக பிராகிருதக் கவிஞர்கள் சமஸ்கிருத பாடல்களைப் புகழ்ந்துரைக்கமாட்டார்கள். இதைப் பிரதிபலிப்பதாக இரண்டாவது பாடல் அமைந்துள்ளது. சமஸ்கிருதமாக இருந்தால் என்ன பிராகிருதமாக இருந்தால் என்ன (சக்கயம் அசக்கயம் வி) என்று அதனால்தான் சொல்கிறார். கேட்போரின் தன்மைக்கேற்ப பொருள் மாறுபடும் என்ற கூற்றும் சிந்திக்கத்தக்கது.

காதாக்களைப் பற்றிய பாடல்கள்

காதா என்பது ஒருவகை பாவகை. verse என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுகின்றது. காதா என்பது ஒரு பாடலில் இரண்டு வரிகளைக் குறிக்கும். பிராகிருத காவியங்கள் காதாக்களால் எழுதப்பட்டிருக்கும்.

அழகுடைய பெண்களின் வெளிப்படையாக உச்சரிக்கப்படாத இனிய சொற்கள்; பாதி மூடியும், பாதி திறந்தும் பார்க்கும் கடைக்கண் பார்வை தருகிற இன்பம், வசீகரப் புன்னகை இவற்றைக் காதாக்களை ரசித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளவியலும்.

அணிகளால் அலங்கரிக்கப்பட்ட, பல்வேறு உணர்ச்சிகளை நல்குகிற காதாக்கள் இல்லாதபோதும், அணிகலன்கள் அணிந்த, நல்ல உடல் நலம் வாய்க்கப்பட்ட காதலி இல்லாதபோதும் மனம் சோர்ந்து விடுகிறது.

சென்ற பிறவியில் நல்வினை செய்யாதவர்கள் பணக்காரர்களாக ஆக முடியாததைப் போலக் காதாக்களின் உட்பொருளையும், பெண்களின் உள் மனத்தையும் இலக்கிய நுகர்வில்லாத மனிதர்களால் அனுபவிக்க முடியாது.

அழகான, கட்டமைப்பான உடல்வாகு, அணிகலன்கள் அணிந்த, இனிய சொற்களைப் பேசுகின்ற பெண் இன்பம் அளிப்பதைப் போல யாப்பு, கவர்ச்சியான வடிவம், அணிகலன், இனிய சொற்களால் யாக்கப்பட்ட காதாவும் இன்பம் அளிக்கும்.

காதாக்கள் தரும் உணர்ச்சி, பெண்களின் வசீகரப் பார்வை, கவிஞர்களின் சொல்லின்பம், குழந்தைகளின் மழலை இவற்றில் மனதைப் பறிகொடுக்காதவர்கள் யார்?

எல்லோரும் காதாக்களைச் சபைகளில் ஓதுகின்றனர். இருப்பினும் அவற்றின் உண்மைப் பொருள் அறிவாளி களாலேயே புரிந்து கொள்ளப்படுகின்றது.

காதாக்கள் தருகின்ற சுவை, குழலோசையின் இனிமை, பருவம் வாய்ந்த பெண்கள் இவற்றை அனுபவிக்கத் தெரியாதவர்களுக்கு அது தண்டனையாகும்.

நல்ல குணங்கள் பொருந்தாத கோடி காதாக்களை ஒரு நொடிக்குள் படைப்பதைக் காட்டிலும் நூறு ஆண்டுகளுக்கு ஒரு நல்ல காதா படைக்கப்பட்டால் போதும்.

மேற்கண்ட காதாக்கள் உணர்த்தும் பொருள்களைக் கவனித்தால் அவை பெண்களின் குணங்களோடு ஒப்பிட்டுக் காட்டப்பட்டிருப்பதை அறியலாம். பெண்களின் அழகு, அணிகலன், கடைக்கண்பார்வை, உடல் அமைப்பு, இனிய குரல் வளம் ஆகியவை தரும் அழகுணர்ச்சியைக் காதாக்கள் தருவதாகப் புலவர் கருதுகின்றனர். காதாக்களை மழலையோடு ஒப்பிட்டிருப்பதைக் கவனிக்கலாம். பெற்றோர்க்கு மழலை தரும் இன்பம் ஈடு இணையில்லாதது. காதாவும் அத்தகைய இன்பத்தைத் தரும் என்பது புலவரது திண்ணமான எண்ணம். தரமான காதா படைக்கப்படவேண்டும் என்று புலவர்கள் நினைத்தார்கள். நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு காதா எழுதினால் கூட பரவாயில்லை. ஆனால் அது தரமானதாக இருக்கவேண்டும் என்பது நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. இனி முறைப்படி காதாக்களை ஓதாவிட்டால் ஏற்படும் தீங்குகளைப் பற்றிக் கூறியுள்ள கருத்துக்களைக் கவனிப்போம்.

கல்வியறிவில்லாத நாட்டுப்புற மக்களால் காதா பயிலப்படும்போது ஓவென்று அழுகிறது. பால் கறக்கும்போது பயிற்சியில்லாதவன் காம்புகளைத் துன்புறுத்துவதைப் போல கிராமத்ததார் காதாவைத் துன்புறுத்துவர்.
கரும்பைத் தின்னுகிறவன் கடித்துச் சக்கையைத் துப்புவதைப் போல கிராமத்தார் உன்னை ஓதும்போது ஓ, காதாவே நீ சுக்குநாறாக உடைந்து போகிறாய் அல்லது சிறுமைப்படுத்தப்படுகிறாய்.

ஒரு முட்டாள், காதாவை முறையற்ற வகையில் ஓதும்போது அது தலையில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு அழுகிறது.
(போரின் முடிவில்) அரசை இழந்த நகரம் சிதைவுறு வதைப் போல காதாவும் வாசிக்கத் தெரியாதவன் வாசிக்கும் போது சிதைவுறுகிறது.

மேற்கண்ட நான்கு காதாக்களில் அவற்றை ஓதும் முறை வலியுறுத்தப்படுகின்றது. தவறாக ஓதும்போது கவிஞனின் மனவேதனையைக் காதாக்களின் மீது ஏற்றிப் பாடியிருப்பது மிகவும் சுவையாக இருக்கின்றது. பாக்களை ஓதுகின்ற மரபு தமிழுக்கும் உரியதுதான். “உன்னையறிந்தோ தமிழை ஓதினேன்” என்ற வரி இதனை வலியுறுத்துகிறது.

அடுத்தபடியாக காவியம் (கவ்வம்) என்ற அதிகாரத்தின் கீழ் அமைந்த சில பாடல்கள் காவியத்தின் (Poetry) சிறப்பை விவரிக்கின்றது.

நவமணிகளாகிய பாடல்கள் கவிஞனின் பெரிய கடலாகிய மூளையில் மந்தரா என்னும் (சிந்தனை) மத்தைக் கடைவதால் பிறக்கின்றன.

அழகான பெண்கள் உணர்ச்சியை அளித்துக் கலவியில் ஆடவனை மகிழ்ச்சியூட்டுவதைப் போலச் சிறந்த சொற்களால் அழகுபடுத்தப்பட்ட கவிதை உணர்வை அளிக்கக் கூடியதாய் படிப்பவரின் இதயத்தை மகிழ்ச்சிபடுத்தும்.

அறிஞர்களின் வாக்கும், குளிர்ந்த நீர் தரும் நிறைவும், பிராகிருதக் கவிதைகளில் இருந்து வரும் மகிழ்ச்சியும் ஒப்பிட முடியாதவை.

திருடன் மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கிறான். இருபுறமும் பார்க்கிறான். சுவரில் ஏறி நினைத்த பொருளைக் கைப்பற்றிக் காரியத்தை முடிக்கிறான். அதுபோலக் கவிஞன் மெல்ல மெல்ல சொற்களைத் தேடி அமைக்கிறான். பல்வேறு இலக்கிய நடைகளைத் தேர்ந்தெடுக்கிறான். சொல்ல நினைத்த கருத்தை நிறுவுகிறான்.

பெரிய சிறிய ஓசைகளுக்குப் பயந்து, ஒவ்வொரு அடிக்கும் பலவாறு சிந்தித்து, மிகவும் கஷ்டப்பட்டு பொருளைத் திருடும் திருடனைப் போலக் கவிஞன் நல்ல சொற்களுக்குப் பயந்து, ஒவ்வொரு வார்த்தைகளையும் நன்றாகச் சிந்தித்துக் காவியத்தைப் படைக்கிறான்.

நாட்டுப்புறச் சொற்களைக் கொண்டு படைக்கப்பட்ட இனிய ஓசைகள் கொண்ட, சத்தம் பொருந்திய, தெளிவான, வெளிப்படையான பொருளை உணர்த்துகிற பிராகிருத கவிதை வாசிப்பதற்குத் தகுதியுடையது. சிருங்கார சுவை நிரம்பிய, இளைய பெண்களால் விரும்பப்படுகின்ற, இனிய சொற்களாலான, லலிதமான பிராகிருத காவியம் இருக்கும்போது யார் சமஸ்கிருத காவியத்தை விரும்புவார்கள்?

இலக்கண அறிவும் செய்யுள் அறிவும் இல்லாத மக்கள், கற்றவர்கள் நடுவில் காவியத்தை ஓதும்போது தங்களின் தலை துண்டிக்கப்பட்டு கீழே வீழ்வதை அறியமாட்டார்கள்.

பிராகிருத கவிதைக்கு நமது வணக்கம். பிராகிருதப் புலவர்ககளுக்கும் வணக்கம். அவற்றை முறையாக ஓதத் தெரிந்தவர்களுக்கும் நமது வணக்கம்.

‘கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல்’ (பரிமேலழகர் உரை) தமிழ் மரபாகும். அவ்வாறு கடவுளை வாழ்த்தும்போது அவரிடத்தில் கவிதைக்குரிய சிறப்பான மொழியை வேண்டுவதும் கடவுளையே மொழியோடு ஒப்பிட்டுக் காண்பதையும் தமிழ் மரபில் காண முடிகின்றது. மொழியின் ஒரு கூறாக விளங்குகிற எழுத்திற்கு இறைவனை உவமைகாட்டித் திருக்குறள் தொடங்குவதை நாமயாவரும் அறிவோம் ‘எழுத்துகள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன’ என்று மொழிச் சிந்தையோடு நூல் படைக்கப் பட்டுள்ளது மிகவும் வியப்பிற்குரியது. ‘நவில்தொறும் நூனயம்’ என்ற குறள்வரி நமக்கு வாசிப்பின் பண்பை உணர்த்துகிறது. நூற்பொருள் கற்கும்தோறும் கற்றார்க்கு இன்பம் செய்யும் என்ற கருத்து மீண்டும் மீண்டும் நூலை வாசிக்கவேண்டும் என்ற வேட்கையைத் தூண்டுகின்றதன்றோ? இம்மரபு பிராகிருத இலக்கியங்களிலும் போற்றப்பட்டது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com