Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006

கைலாசபதியின் தளமும் வளமும்

ஹெச்.ஜி. ரசூல்

மார்க்சிய அறிஞர் கைலாசபதியை முன்வைத்து ஒரு தேடல் நிகழ்ந்துள்ளது. கைலாசபதி: தளமும் வளமும் ஆய்வு நூல் பதினாறு ஆய்வாளர்களின் கட்டுரைகளாக தோற்றம் கொண்டுள்ளது. திறனாய்வு முறையியல், செயல்முறை விமர்சனம், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், இன தேசியவாதம், சாதியம், மொழிக் கட்டமைப்பு, சமுதாயவியல், மார்க்சியம் எனப் பன்முகப்பட்ட விவாதங்களை இத்தொகுப்பு மறுவாசிப்பு செய்ய முயல்கிறது.

கைலாசபதியின் முக்கியத்துவமும், அவர் மீது சுமத்தப்பட்ட மாற்று விமர்சனங்களும் அவர் மறைந்து இருபது ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனினும் இரண்டு விதமான பங்களிப்புகளில் கைலாசபதியின் பெயர் துலக்கமுற்றிருக்கிறது. ஒன்று கைலாசபதியால் படிப்படியாக செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மனித ஆளுமைகள். ஈழத்துத் தினகரன் பத்திரிகை வழியாகவும் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியப் பணியில் கற்பித்தலின் ஊடாகவும் வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் முற்போக்கு இலக்கிய அமைப்பு செயல்பாட்டின் விளைவாகவும் அவர் உருவாக்கிய ஆள் ஓவியங்கள் பலப்பல. நுஃமான், மௌனகுரு, சித்திரலேகா மௌனகுரு, நீர்வை பொன்னையன், யேசுராசா என இதனை நீட்டித்துப் பார்க்கலாம். இந்த ஆள் ஓவியங்களின் சொந்த அனுபவங்கள், சமூக நிகழ்வுகளின் வழியாகக் கைலாசபதி மதிப்பீடு செய்யப்படுகிறார். கூடவே கைலாசபதியின் மார்க்சிய தத்துவநோக்கு உருவாக்கிய விமர்சன எதிர்தரப்பினராக ஆன்மீகவாத மனஉலகில் சஞ்சரித்த எஸ். பொன்னுத்துரை (எஸ்.பொ.) பிரபஞ்ச யதார்த்தவாதம் பேசிய மு. தளையசிங்கம், தமிழ் நாவல் இலக்கியத்தை மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் என பகடி செய்த வெங்கட்சாமிநாதன் உள்ளிட்டோர் உருவானார்கள். ஈழத்தின் விடுதலைக்காக எண்ணற்ற உயிர்களைப் பலிகொடுத்து நிகழ்வுற்றுள்ள அரசியல் சமூகப் போராட்ட வரலாற்றினூடே இதை மீள வாசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இரண்டாவதாக, கைலாசபதியின் படைப்புலகம் மிகக் குறிப்பிடத்தக்கதாய் ஈழத்து மற்றும் தமிழ் விமர்சன உலகில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலக்கியத்தை ரசனைக் கோட்பாடாக அணுகி, அதன் லயங்களில், சொல்லழகில் மயங்கிக் கிடந்த தமிழ் இலக்கிய விமர்சனத்தைக் கைலாசபதி மீட்டுருவாக்கம் செய்தார். வாழ்வின் இருப்பிற்கும், மொழிக்கும், கலாசாரத்திற்கும் இடையிலான உட்தொடர்புகளை மூலம் உருவாக்கிக் காட்டினார். மார்க்சிய சமுதாயவியல் அணுகுமுறையும், மார்க்சிய அழகியலின் பிரதிபலிப்பு கோட்பாடும் இதற்குத் துணை புரிந்தன. இந்தத் திசை வழியில் கைலாசபதி படைத்தளித்த பல நூல்களைக் குறிப்பிட வேண்டும். இது எண்ணிக்கையில் இருபத்து மூன்றாகும்.

தமிழின் சங்க இலக்கியத்தையும், பண்டைய கிரேக்க காவியங்களையும் ஒப்புநோக்கி எழுதப்பட்டதே தமிழ் வீரயுகக் கவிதை நூல். அறுபதுகளில் வெளிவந்த ‘இரு மகாகவிகள்’ தமிழ் இலக்கியப் பரப்பில் சமகால ஒப்பீட்டு இலக்கிய ஆய்வு முறையைத் துவக்கி வைத்தது.


1966-ல் பழந்தமிழ் இலக்கியங்களின் வழியாக சமய பண்பாட்டு மானுடவியல் ஆய்வுகள் எட்டுத் தலைப்புகளில் பண்டையத் தமிழர் வாழ்வும் வழிபாடும் நூலாக வெளிவந்தது. இதில் இடம்பெற்ற தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி படைப்பு இனக்குழுத் தெய்வமான சிந்துவெளி யோகி சிவன் காலப்போக்கில் வேதங்களாலும், வைதிகத்தாலும், உள்வாங் கப்பட்டுப் பசுபதியாக, அர்த்த நாரீஸ்வரனாக, மேல்நிலையாக்கச் சாதிக்கடவுளாக உருமாற்றம் அடைந்துள்ளதைக் காட்டுகிறது. ‘நாடும் நாயன்மாரும் ஆய்வு’ பல்லவர்காலச் சமூக சமய வரலாற்றை உற்றுநோக்கச் செய்கிறது. சமணர்களை அழித்தொழித்த சைவத்தின் அதிகார உருவாக்கம் பண்பாட்டுத் தளத்தில் மேற்கோப்புக் காட்சியாகத் தெரிகிறது. ஆனால் ஆழ்தளத்தில் சமணம்-சைவம் எல்லையைத் தாண்டி வணிக வர்க்கத்திற்கும் வேளாள நிலவுடமைச் சமூகத்திற்குமான - வர்க்கப் போராக கைலாசபதியால் சுட்டிக்காட்டப்படுகிறது. இப்பார்வையினூடே பேரரசும் பெருந்தத்துவமும் வணிக சமணவாதிகளை வென்ற சைவம் எவ்வாறு ஒரு பெருந்தத்துவமாகச் சோழப் பேரரசு காலத்தில் நிலைபெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

பாரதி ஆய்வுகளில் முழு ஈடுபாடு கொண்டு இயங்கிய கைலாசபதியின் எழுபதுகளில் வெளிவந்த ஐந்து கட்டுரைகள் அடங்கிய அடியும் முடியும் ஆய்வுத் தொகுதி தமிழ் இலக்கிய விமர்சனப் பரப்பின் பேசப்படாத பகுதிகளைப் பேச எத்தனித்தது. இத்தகைய உள்ளாற்றலைக் கொண்ட படைப்புகளாக அகலிகை கற்பு நெறியும் - புலைப்பாடியும் கோபுரவாசலும் என்பனவற்றைக் கருதலாம். இன்றைய நிலையில் இதனைப் பெண்ணிய மற்றும் தலித்திய நோக்கின் முன்னோடி வாசிப்பு வடிவம் எனலாம்.

பெண் கற்பின் பிம்பத்தைக் கட்டமைத்த தமிழ் இலக்கியவாதிகளின் மனோபாவங்கள், அவற்றில் கலந்திருந்த ஆணாதிக்க அரசியல் அனைத்தையும் அகலிகை தொன்மக் கதைகள் வழி எடுத்துச் செல்கிறார். வால்மீகியாலும், கம்பனாலும், இராஜாஜியாலும், சுப்பிரமணிய முதலியாராலும், ச.து.சு. யோகியராலும், புதுமைப்பித்தனாலும் அகலிகை வெவ்வேறு விதமாகச் சார்பு நிலையோடு கட்டமைக்கப்படுவது இது கூறும் செய்தி. இதில் வெளிப்படும் ஆணாதிக்க மனோநிலைகள், இரண்டாம் பாலினமாகப் பெண்ணை அணுகும் பார்வை அனைத்துமே மறுவிவாதத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன.

புலைப்பாடியும் கோபுரவாசலும் கட்டுரையின் நந்தன் குறியீட்டுப்படிமம் அடித்தள சாதிகளின் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறைக்கு அடையாளமாக எப்படி உருவாகியுள்ளது என்பதை உணரச் செய்திருக்கின்றது. சுந்தரரது திருத்தொண்டத் தொகையிலும், நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டத் தொகையிலும், சேக்கிழார் பெரிய புராணத்திலும், கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலும், முருகையனின் கோபுரவாசல் நாடகத்தினூடாகவும் நந்தன் ஒரு படைப்பிலக்கியத்தினுள் உருவமைக்கப்பட்ட விதத்தையும், அது வெளிப்படுத்திய சாதிய ஒடுக்குமுறையை இடையிலான மாற்றுக்கருத்து நிலைகளையும் விவாதிக்க முயல்கிறது. இந்த வகையில் கலாநிதி. வ. மகேஸ்வரன், தெ. மதுசூதனன், முகம்மது சமீம், செ. கணேசலிங்கன், கந்தையா சண்முகலிங்கம் மலையக எழுத்தை அடையாள அரசியலாக வெளிப்படுத்திய லெனின் மதிவானம் உள்ளிட்டோரின் ஆய்வுகள் மிகுந்த நம்பிக்கையூட்டுபவையாக இருக்கின்றன.

கலாநிதி எஸ். பாலசுகுமார் முன்வைக்கும் இன்றைய பின்நவீனத்துவ கோட்பாடுகளும், பின் நவீனத்துவ எழுத்துக்களும், அவருடைய எழுத்துக்கு முன் வெறுமனே ஒன்றுமில்லாததாகிவிடும் என்று கூறுகிறார். எனினும் தற்காலப் பின் நவீனத்துவத் திறனாய்வு முறையியலுக்குக் கைலாசபதி முன்வைத்த பல்துறை சார் ஆய்வு நெறி முன்னோடியாக அமையும்.

ஒரு படைப்பு வெளிப்படுத்தும் பிரதிசார்ந்த அர்த்தம் காலம், வெளி, கலாசாரப் பின்னணியில் அது வெளிப்படுத்தும் சூழல் சார்ந்த அர்த்தம் என்பதான வாசிப்பின் அரசியலை நோக்கிப் பயணிப்பதற்குக் கைலாசபதி வழிகாட்டுகிறார். வார்த்தை, சடங்கு, நடத்தை விதிகள் என வாழ்வின் அடுக்குகள் எல்லாவற்றிற்குள்ளும் உறைந்து கிடக்கும் மேலாதிக்கங்களைத் தகர்ப்பதன் வழியாக நுண் அரசியல் செயல்பாடு கூர்மை பெறுகிறது. பழமரபுக் கதைகள், தொன்மங்கள், சமயவியல், மானுடவியல், வரலாற்றியல், நாட்டாரியல், பண்பாட்டியல் உள்ளடக்கி ஒரு படைப்பு ஊடிழைப் பிரதியாக இயங்குவதை எந்த முறையில் அணுகுவது என்பதான தேடல்களுக்கு இங்கு இடமிருக்கிறது.

தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் அயோத்திதாச பண்டிதரும், பெரியாரும், ஜீவாவும் நிகழ்த்திய குறுக்கீடும் எதிர்வினையும் இந்த வகையில் கவனிப்பிற்குரியவை. இப்பயணத்தில் மற்றுமொரு நீட்சியாகக் கைலாசபதியை பதிவு செய்யலாம்.

நவீன இலக்கிய விமர்சன முறையில் ஒவ்வொரு படைப்பின் சுயாதீனமிக்க தன்னிறைவு குறித்தும், அதன் கட்டமைப்பு, மொழிச் சொல்லாக்கம், அமைப்பாக்கம், உத்திகளின் பங்களிப்பு தொடர்புடைய அகக்கூறுகளில் அதிக கவனத்தைக் கோரியது. இந்நிலையில் கைலாசபதியின் திறனாய்வு முறை தொன்மை இனக்குழு, அடிமைச் சமூகம், நிலவுடமை மற்றும் முதலாளியச் சமூகம் என்பதான வரலாற்றுக்கால பொருள் முதல்வாத அடிப்படையை மார்க்சிய கோட்பாட்டிலிருந்து தருவித்துக்கொண்டு ஆய்வினை முன்வைத்தது.

இந்திய மார்க்சிய மூலவர்களான தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி. கோசாம்பி, சர்தேசாய், ராகுல் சாங்கிருத்தியாயன் ஆகியோர் சிந்தனை முறைகளிலிருந்தும், தனக்கானதொரு தனித்த இயங்கியல் பார்வையை உள்வாங்கிகொண்டதால் கைலாசபதியால் கோட்பாட்டு சார்ந்த விரிவானதொரு ஆய்வியல் தாக்கத்தை திறனாய்வுத் துறையில் செலுத்த முடிந்தது. இதே காலத்தில் தமிழகத்தின் பேராசிரியர் நா. வானமாமலை, ஆர்.கே. கண்ணன், தொ.மு.சி. ரகுநாதன் மார்க்சிய ஆய்வு முறையியலை பயன்படுத்திய குறிப்பிடத்தக்க அறிஞர்களாக இருந்தனர். இன்றைய மறு விவாதத்தில் மார்க்சியத்தைப் பொருளாதார வாதமாக ஒற்றைப்படுத்திப் பார்ப்பதைத் தாண்டி குடும்பம், மொழி, சாதி, சடங்கு, சமயம், கலாசாரம், சமூக மனோபாவங்கள், ஊடக அரசியல், நகல் உண்மைகள் சார்ந்த வெளிகளைப் பன்மைத்தன்மையோடு அணுகுவதற்கான பார்வை உருவாகி யுள்ளது. மேற்கத்திய மார்க்சியத்திற்குப் புதுப் பரிமாணங் களையளித்த அந்தோனியா கிராம்சி வால்டர் பெஞ்சமின், ஜீன்பால் சார்த்தர் எனச் சிந்தனையாளர்களின் வரிசை தொடர்கிறது. அமெரிக்க மார்க்சியரான பிரடிரிக் ஜேம்சனின் இலக்கிய விமர்சனமான மார்க்சியமும் உருவமும் (1961) பின் நவீனத்துவம் - பின்னை முதலாளித்துவத்தின் கலாச்சார தர்க்கம், எதிர்காலத்தின் கல்வெட்டுகள் உள்ளிட்ட பல நூல்கள் மார்க்சிய தளத்தில் தீவிரமான ஈர்ப்பைக் கோருவன. இத்தகையதான மாறிவரும் சூழல்களை உள்வாங்கி இயங்கும் கார்த்திகேசு சிவத்தம்பி உள்ளிட்ட மார்க்சியர்கள் கைலாசபதிக்குப் பிறகான கால சிந்தனை இடைவெளிகளை நிரப்புகிறார்கள்.

தமிழ் நாவல் இலக்கியத்தில் கைலாசபதி முன்னிறுத்திப் பேசிய கற்பனாவாதம், இயற்பண்பு வாதம், யதார்த்தவாதம் குறித்த கருத்தாக்கங்கள் தம் பழைய இருப்பைப் பறி கொடுத்துள்ளன. நிலப்பிரபுத்துவ பிரதிபலிப்பின் அடையாளமாக கற்பனாவாதமும், முதலாளித்துவ சமூக அமைப்பை சில சீர்திருத்தங்களோடு ஏற்றுக்கொள்வதான இயற் பண்புவாதமும், சோசலிச புரட்சி நோக்கிய தூண்டுகோலாக யதார்த்தவாதமும் என பொருளாதார அளவுகோலினால் மதிப்பிடும் முறையியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒரு படைப்பு பிரதி நிலப்பிரபு ஒ விவசாயி / முதலாளி ஒ தொழிலாளி / அரசு எந்திரம் ஒ நடுத்தர வர்க்கம் என்பதான இருமை எதிர்வுகளால் மட்டுமே கட்டமைக்கப்படுகிறது என்பதான வர்க்கயதார்த்தம் தனது பார்வையைக் கலாசார யதார்த்த வெளிகளிலும் விரிவுபடுத்தியுள்ளது. அடித்தள மக்களின் பண்பாடு, நம்பிக்கைகள், தொன்மங்கள், வாழ்வின் ரகசியங்கள், புனைவு எழுத்தாக உருக்கொள்கின்றன. மையம் தாண்டி விளிம்பு நிலை வாழ்வின் யதார்த்தம் முதன்மைப்படுத்தவும் படுகிறது. துவக்கம்-நடு-முடிவு என்பதான சுழற்சியைத் தாண்டி நேரற்ற கதை சொல்லலில் காலத்தின் ஒழுங்கும் குலைத்துப் போடப்படுகிறது.

பின்னைக்காலனிய நாடுகளின் எழுத்து முறையாக மாந்திரீக யதார்த்தம் தனது தீவிர செல்வாக்கைச் செலுத்துகிறது. ஒரு யதார்த்தத்தை விநோதமிக்க புனைவாகப் படைத்துக் காட்டும் முறையியலாக உள்ளது.

லத்தீன் அமெரிக்கப் புனை கதையாளர் போர்ஹேயின் வார்த்தையில் “அச்சாக அப்படியே சித்திரிக்கப்பட்டாலும் கதையில் வரும் கழுதை நிஜக் கழுதை இல்லை. கதைக் கழுதை. அப்படியானால் ஏன் அதற்கு ஐந்து கால்கள் இருக்கக்கூடாது” என்பதாகவும் இதனைச் சொல்லிப் பார்க்கலாம்.

சமகால யதார்த்தத்தை அதீதப் புனைவுகளின் மூலம் வேறுவிதமாகச் சொல்லிப் பார்க்கும் சமகாலப் படைப்புலகம் ஜால வினோதம், கதை மீறும் கதை, விஞ்ஞானப் புனைவு எனப் பல வடிவம் பெற்றுப் புதிய கதை சொல்லல் முறைகளாக மறு உருவாக்கம் பெற்றுள்ளன. கைலாசபதியை முன்வைத்து இவ்விவாதங்களை இன்னும் தொடர நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன.

கைலாசபதி : தளமும் வளமும்,
கைலாசபதி ஆய்வு வட்டம்,
கொழும்பு - 6.
விலை: ரூ. 250.00



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP