Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006

உலக புத்தக தினம்

வெ. இறையன்பு

நாம் எதை வாங்குவது என்பதை எந்தத் தனி நபரோ நிறுவனமோ தயாரிப்பாளரோ முடிவு செய்வதில்லை. சந்தைதான் (Market) முடிவு செய்கிறது. உதாரணமாக ஒரு தொலைக்காட்சித் தொடர், எவ்வளவு நாள் ஒலி பரப்ப வேண்டும், சந்தைதான் முடிவு செய்கிறது.

ஒரு பத்திரிகையில் என்ன என்ன வரவேண்டும் என்பதைச் சந்தைதான் முடிவு செய்கிறது. புத்தகங்களை விற்பது என்பது வர்த்தகம் அல்ல. அது ஒரு சேவை. பல மனிதர்களின் வாழ்க்கையைப் புத்தகங்கள் மாற்றி இருக்கின்றன. அபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி ஆகியோர்களின் வாழ்க்கையைப் புத்தகங்கள்தான் மாற்றி இருக்கின்றன. இவர்களுக்குப் புத்தகங்களுக்கு முன் உள்ள வாழ்க்கை, புத்தகத்தைப் படித்த பின் உள்ள வாழ்க்கை என்று இருந்திருக்கிறது. எழுத்தாளர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களுக்கும் இது பொருந்தும்.

தேடல் நிறைந்த வாழ்க்கையில் மனிதர்கள் எதையோ நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கே எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலே சென்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தேடலை இலக்கு நோக்கிச் செல்லப் புத்தகங்கள் உதவுகின்றன.

புத்தகங்கள் ஏற்படுத்தின தாக்கம், பல்வேறு சுதந்திரப் போராட்டத்திலிருந்து நாம் நம் நாட்டின் சுதந்திரப் போராட்டங்களையும், வீரர்களையும் படிக்கிறோம். நம் நாடு இன்னொரு நாட்டை அடிமைப்படுத்துவது என்றால் நாம் சந்தோஷமாக இருந்து இருப்போம். ஒரு நாடு இன்னொரு நாட்டை அடிமைப்படுத்துவது என்பது உலகளாவிய அளவில் இருந்தது. அமெரிக்கா இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்த போது தாமஸ் பெயின் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அவர் அமெரிக்காவுக்குச் சென்று common sense என்ற புத்தகத்தை எழுதி வெளியிடுகிறார். அந்தப் புத்தகத்தில் இந்த அடிமைதனத்தை எதிர்த்துத், தன்னுடைய நாட்டை எதிர்த்து எழுதுகிறார். அதைப் படித்தவுடன் அமெரிக்க இராணுவத்தினர் இங்கிலாந்தை எதிர்த்துப் போராடினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது இந்தச் சின்ன புத்தகம்தான்.

தாமஸ் பெயின் ஜெபர்சன், ப்ராங்களின், இவர்களுக்கு நிகராகப் பேசப்பட்டார். ஆனால் தாமஸ் பெயின் தான் பேசப்பட வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. எங்கேயும் மானுடம் அடிமைப்படக் கூடாது. மனிதன் இன்னொரு மனிதனை அடிமையாக வைத்து இருப்பது மிகவும் மோசமான விஷயம். அதற்காகத்தான் எழுதுகிறேன் என்றார். பிரான்சில் லூயிஸ் எதிர்த்துப் போராடினார்கள். தாமஸ் கார்வைல் என்பவர் பிரஞ்சுப் புரட்சியைப் பற்றி எழுதிய புத்தகம் மிக முக்கியமானது. பிரஞ்சுப் புரட்சி என்பது சரியானது. ஆனால் கில்லட்டினில் கொல்வது சரியானது இல்லை. இது மனிதாபிமானத்துக்கு எதிரானது என்றார் தாமஸ் பெயின். He writes agaist Bible என்ற புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகம் பைபிளைப் பற்றியது.

என்னுடைய வாழ்க்கையை எதுவும் மாற்றுமா? என்று அறிய வாசகன் புத்தகத்தைத் தேடுகிறான். அதன் நீட்சியாக நிறைய புத்தகங்களை வாங்குகிறான். புத்தகங்களை எழுதுவது எவ்வளவு புனிதமோ அதைப்போல் விற்பதும் புனிதமாகும். ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் போல், புத்தகத்தை எழுதுவதும், அந்தப் புத்தகத்தை விற்பதும் ஆகும். இந்தச் சூழலில் புத்தகத்தை விற்பது என்பது சேவை என்றே கருத வேண்டும். இந்த மாதிரி உருவாகி வருகிற புத்தகங்களைச் சந்தை (Market) எப்படி நிர்ணயம் செய்ய முடியும்?

ஒரு சிறந்த புத்தகத்தையோ, ஒரு பொழுது போக்கு புத்தகத்தையோ அல்லாமல் தகுதியில்லா ஒரு எழுத்தாளனையோ, தகுதியில்லா ஒரு புத்தகத்தையோ பெரிய அளவில் ஊடகங்கள் கொண்டு சேர்க்க முடியும். இன்னொன்று மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைத் தர வேண்டியது எங்கள் கடமை என்று சொல்பவர்களும் உண்டு. மக்களுக்கு தேவை யானவைகளே என்று சொல்கிறவர்களும் உண்டு. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்ட எம்.ஏ. சாலன் எழுதிய தலித் பண்பாடுகள், கொங்கு நாட்டுப் புறம், சுப்ரபாரதி மணியனின் காற்றில் அலையும் சிறகுப் அந்தப் புத்தகங்களை பற்றி யாரும் கேட்டது கிடையாது. ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டியது மிக முக்கியமானது.

இங்கு இரண்டு விதமான போக்குகள் காணப்படுகின்றன. (1). மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டியவை என்னும் இலட்சியத்தோடு செயல்படுவது. இன்னொன்று மலிவான விஷயங்களைக் கொடுத்து, மிகவும் பலவீனமாக கையகப் படுத்துவது இந்த இரு போக்குகளும் காணப்படுகின்றன. இராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்லியிருக்கிறார். ஒரு வீட்டில் நிறைய உயர்ந்த ரக இனிப்புப் பண்டங்கள் செய்து இருந்தார்கள். இந்த இனிப்புப் பண்டங்களில் எறும்பு மொய்க்காமல் பார்த்துக் கொள்வது எப்படி என்று ஒரு துறவியிடம் கேட்டபோது, இனிப்பு உள்ள பாத்திரங்களை நடுவில் வைத்து, அந்தப் பாத்திரத்தைச் சுற்றி சர்க்கரையால் ஒரு கோலம் போட்டார். இரண்டு நாள் கழித்து பார்க்கும்போது சுற்றி இருந்த சர்க்கரை கோலத்தில்தான் எறும்புகள் மொய்த்து இருந்தன. நடுவில் வைக்கப்பட்டிருந்த இனிப்புப் பண்டங்களில் எறும்புகள் இல்லை. இதன் மூலம் நாம் உணர்வது மனிதர்கள் அற்ப சந்தோஷங்களில் மூழ்கிப் போகிறார்கள். உயர்ந்த சந்தோஷங்களைப் புறக்கணித்து விடுகிறார்கள் என்று இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுவார்.

மக்களின் இலக்குகளை, ரசனைகளை மலினப்படுத்துவது என்பதற்கு மிகப் பெரிய, பிரம்மப் பிரயத்தனம் தேவை இல்லை. அதை எளிதாகச் செய்து விட முடியும். அதே நேரத்தில் மக்களின் ரசனைகளை, சிந்தனைகளை மேம்படுத்துவது மிகவும் சிரமமான காரியமாகும்.

படிப்பதை விட பார்ப்பது ஏன் அதிகமாக மக்களைச் சென்றடைகிறது என்றால் பார்ப்பதற்கு எதற்கும் சிரமம் இல்லை. படிப்பது என்பது எழுத்துக்களைக் கூட்டி, வார்த்தைகளை உள் வாங்க வேண்டும். படிக்கும் போது கடினமான வார்த்தைகள் இருந்தால், என்ன பொருள் என்று சிந்திக்க வேண்டும். படித்துக் கொண்டிருக்கும் வார்த்தையை படித்து முடித்து விட்டு, முதல் வாக்கியத்திற்கும், அடுத்த வாக்கியத்திற்கும் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும். முதல் பத்தியைப் படித்து முடித்தவுடன், முழுக் கதையையோ அல்லது கட்டுரையையோ பொருத்திப் பார்க்க வேண்டும்.

டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்” என்ற நாவலில் அதில் வரும் கதாபாத்திரங்களை ஞாபகம் வைத்துக் கொள்வதே மிகவும் பிரம்மப் பிரயத்தனமாகும். இதற்காக நாம் மிகப் பெரிய அளவில் உழைத்தாக வேண்டும். பார்ப்பது மூலம் புரிந்து கொள்வது என்பதற்கு அதிகமாக உழைக்க வேண்டியதில்லை. தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பாகி வரும் தொடர்கள் வாழ்க்கையை விட நீளமாக இருக்கிறது. சிந்திக்காமல் எதைச் செய்ய முடியும் என்பது மனிதர்களுக்குச் சந்தோஷமளிப்பதாகவே இருக்கிறது.

மிக குறைவான சிரமங்களுடன் வாழுகிற வாழ்க்கைதான் இனிமையான வாழ்க்கை என்று மனிதர்களின் மனோபாவம் மிக முன் காலத்திலே ஏற்பட்டு இருக்கிறது. மனித நாகரிகம் என்பதே, மனிதனின் சிரமத்தைக் குறைப்பதற்கான முயற்சியே ஆகும். இதற்கு உதாரணமாக கம்ப்யூட்டர் அறிமுகமான காலத்திற்கும், இப்போது உள்ள கம்ப்யூட்டரைச் சொல்லலாம்.

Our effort is to make the life effortless. The effort is make our life effectless endeavourடி என்பது போல இதை நோக்கிப் பயணம் செய்வது என்பது இயற்கை முழுவதும் நடக்க கூடிய விஷயம்.

பொதுவாக மனிதர்கள் சந்தோஷமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதையே பெரிதும் விரும்புகிறார்கள். பாதுகாப்பு என்பது இந்தப் பூமியில் இரண்டு இடங்கள்தான் என்று உறுதியாக கூறமுடியும். அதில் ஒன்று தாயின் கருவறை, இன்னொன்று கல்லறை ஆகும். ஆனால் இன்றைய சூழலில் இந்த இரண்டு இடங்களும் பாதுகாப்பானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மனிதனுடைய எதிர்பார்ப்பு என்பது மிகவும் சவுகரியமான, மிகவும் சந்தோஷமான, மிகவும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழவேண்டும் என நினைக்கிறான். என்னுடைய வாழ்க்கைக்கு உத்தியோகத்திற்கு உடனடியாக ஏதாவது உதவி செய்யுமா என்றே புத்தகங்களை பொதுவாக மனிதர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுதான் புதிய தலைமுறையினரை வேறு திசை பக்கம் பயணம் செய்யாமல் பார்த்துக் கொள்கின்றன. அதிலும் குறிப்பாக ஊடகங்கள், ஊடகங்கள் பெரும்பாலும் திரைப்படங்களை மனித வாழ்க்கையில் பிரதானப்படுத்துகின்றன. ஊடகங்கள் முன் குறியீடாகக் கொள்பவர்களை, அவர்கள் தன்னுடைய மதிப்பு, செல்வாக்கு ஆகியவைகளை காசுக்கு விற்பவர்களாக அல்லது தன்னுடைய செயல்களை காசாக்குகிறவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு பத்திரிகையை எடுத்துக் கொண்டால் மூன்றாம் தரமான நபர்களுடைய வாழ்க்கையை எழுதுவதும், வெகுஜனப் புகழ் பெற்ற நடிகர்களை பற்றி எழுதுவதும் முழுக்க முழுக்க வியாபாரத்தனமே தவிர சமூக மேம்பாட்டுக்காக என்று நிச்சயமாக சொல்ல முடியாது. இந்த செயல்பாடு அடுத்த தலைமுறையினருக்கான சிந்தனையோ, தத்துவமோ இல்லாமல் அவர்கள் சிந்தனையை தடையாக்குவதுதான் நடந்து வருகிறது. கொஞ்சம் கூட விழிப்புணர்ச்சி ஏற்படாமல் தடுக்கும் கூட்டு முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த ஊடகங்களைப் படிப்பது என்பது போன தலைமுறையில் படித்தவர்களின் நடுத்தர வர்க்கக் குழந்தைதான் படிக்கின்றன. இவர்கள் இதைப் படிப்பதால் போட்டியில் கலந்து கொள்ளாமல் எளிய முறையில் தடை பண்ணி விடலாம். இது ஒரு தந்திரமான முயற்சி. இவர்களின் மனதை சிதறடிக்கும் முயற்சியினால் வளர விடாமல் செய்து விட முடியும்.

இன்னொரு புறம் வெகு ஜனப்பத்திரிகையைப் படிக்காமல் எம்ப்லாய்மெண்ட் நியூஸ், இண்டர்நெட் போன்றவைகளை பார்த்து வேலைத் தேடிக் கொண்டு இருப்பார்கள். அதே நேரம் இது போன்ற தரமான பத்திரிகைகளை படித்து தன்னை வளர்த்துக் கொண்டிருப்பர்.

இந்த சூழலில் மக்களுக்குத் தரமான புத்தகங்களைக் கொண்டுவந்து அவர்கள் வாழ்க்கையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி என்பது என்ன? சமூகப் பார்வை என்பது என்ன? சமத்துவம் என்றால் என்ன? இளைஞனின் கடமை என்ன? தன்னுடைய குடும்பத்திற்கும், தான் வாழுகிற சமூகத்திற்கும், தான் வாழுகிற நாட்டிற்கும் எப்படிப்பட்ட மைய புள்ளியிலிருந்து பணி ஆற்றுகிறான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிற புத்தகங்களை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்கிற போது, நாம் நம்முடைய பார்வையை எப்படி விசலாப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சந்தையை நாம் விட்டு விலகி வரமுடியாது. சமூகத்தில் இருந்து கொண்டுதான் சமூகத்தைத் திருத்த முடியுமே தவிர, சமூகத்திலிருந்து விலகி சமூகத்தைத் திருத்த முடியாது. சந்தைகள் சிலவற்றை நிர்ணயித்த மாதிரி, சிலவற்றை நாம் நிர்ணயிக்கலாம்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் நோக்கம் என்பது மக்கள் மனதில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதுதான். விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? ஆயலே Many people have sight only few people vision தொலை நோக்குப் பார்வை என்ன? தொலைநோக்கு பார்வையை நாம் உருவாக்க வேண்டும்.

சந்தைக்கான சில விஷயங்களைச் செய்து, நாம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். புத்தகச் சந்தையைப் பொறுத்தவரை ஒரே மாதிரியான பொருட்களோடு போட்டியிடவில்லை. வெவ்வேறு விதமான பொருட்களோடு போட்டியிடுகிறோம். நம்முடைய புத்தகம் தரமான புத்தகம் என்பதை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கப் போகிறோம்? இந்தப் புத்தகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கச் சந்தைத் தந்திரங்களிலிருந்து நாம் விலகிக் கொள்ள முடியுமா? இதை நிர்வாகவியல் முறைப்படி பார்ப்போம். பீட்டர் டிரக்கர் என்ற மிகப் பெரிய நிர்வாகவியல் நிபுணர், ஒவ்வொரு நிறுவனமும் செய்ய வேண்டிய முதல் வேலை வாடிக்கையாளர்களை உருவாக்குவதுதான் என்றார். இதை உருவாக்கினால் அந்த நிறுவனம் வெற்றி பெறும்.

அமெரிக்காவில் வெற்றி பெற்ற நூறு நிறுவனங்களை எடுத்துக் கொண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. வாடிக்கையாளர்களை எந்த நிறுவனம் பிரதானப் படுத்துகிறதோ அந்த நிறுவனம்தான் உயர்நிலையில் உள்ளது என்று தெரியவந்தது. Practor & cable நிறுவனம் Customer is most VIP in our organization என்கிறது. வாடிக்கையாளர்களால்தான் நாம் இருக்கிறமே தவிர, நம்மால் வாடிக்கையாளர்கள் இல்லை என்று மகாத்மாகாந்தி கூறுவார். அதே நேரத்தில் வாடிக்கை யாளர்களை மட்டும் உருவாக்கினால் போதுமா? வாடிக்கையாளர்கள் ஒரு நிறுவனத்தை மட்டும் சார்ந்து இருப்பார்களா? இன்னொரு நிறுவனம் அதே பொருளைத் தயாரித்தது என்றால் வாடிக்கையாளர்களுக்கு மாறுகிற மனோபாவம் ஏற்படுகிறது. மற்ற மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள் பொதுவாகத் தமக்கு வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதில்லை.

சில காலம் முன்பு நுகர்பொருட்கள் விற்பனையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. நுகர்பொருட்கள் சேதம் அடைந்தால் தான் அடுத்த பொருட்கள் வாங்கும் மனோபவம் தான் பெரும்பாலும் இந்தியர்களிடம் இருக்கிறது. இன்றைக்கு நுகர் பொருட்கள் விற்பனைக்குத் தொலைக்காட்சியும், தொலைக் காட்சித் தொடர்களும் முக்கியக் காரணம் ஆகும். வாடிக்கை யாளர்களைத் தக்கவைத்துக் கொள்வது என்பது மிக பிரயத்தனமானது.

புத்தகக் காட்சிகள் அதிகமாக நடைபெற்றாலும் பொதுவான மனிதர்கள் அதைத் தீண்டுவதே இல்லை. எழுத்தாளர்கள் என்றால் தீண்டத்தகாத மனிதனைப் பார்ப்பது போல் இந்தச் சமூகம் நினைக்கிறது. இந்தச் சமூகத்தை நிறைய வாசிக்கச் செய்ததில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பங்கு முக்கியமானது. முன்னேற்றப் பதிப்பகம் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டவுடன் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. வெளி நாட்டுப் புத்தகங்கள் முதலில் விற்பனைக்கு வந்தாலும், இப்போது வருகிற வெளிநாட்டுப் புத்தகங்கள் வேறு விதமானவை. வெளிநாடுகளில் 2006 ஆண்டில் வெளிவந்த, புத்தகங்கள் அந்த ஆண்டில் எவ்வளவு புத்தகங்கள் விற்பனை ஆகின்றனவோ, அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, மற்றவைகளைப் பழைய புத்தகங்கள் என்று கணக்கிடுவர். அந்தப் பழைய புத்தகங்கள்தான் இங்கு விற்கப்படுகின்றன.

இந்தப் புத்தகங்கள் இங்கு மொழி மாற்றம் செய்தும் விற்கப்படுகின்றன. இங்குள்ள பதிப்பாளர்கள் பெரிய அளவில் விற்பனைக்கு முயற்சி செய்வதாகத் தெரியவில்லை. பெரும்பாலும் பதிப்பகத் தொழில் குடும்பம் சார்ந்தே இருக்கிறது. இங்குள்ள பதிப்பகங்களுக்கு Resource மிகவும் குறைவானவை.

நிறுவனம் சார்ந்து பதிப்பகங்கள் இயங்குவது, தனி மனிதன் சார்ந்து பதிப்பகங்கள் இயங்குவது என்பது அடிப் படையில் வேறு வேறானவை. வாடிக்கையாளர்களை உருவாக்குவது, வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வது, வாடிக்கையாளர்களை அதிகமாக்குவதற்கு என்ன செய்யலாம்? ஒரு வாடிக்கையாளரை (வாசகனை) நினைவில் வைத்துக் கொண்டு, அவர்களின் தேவையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. வாடிக்கையாளர்களின் தனிமனித தொடர்பும் அதிகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வியாபாரம் வெற்றி அடையத் தரம், பொருளாதாரக் கட்டுப்பாடு, தொடர்ந்து சேவை ஆகியவை ஆகும். ஒரு நிறுவனத்தில் திட்டம் வரையறுக்கும்போது விற்பனையைத்தான் அதிக முன்னுரிமை கொடுக்கிறார்கள். தயாரிப்பிற்கு திட்டம் தீட்டுவதில்லை. புத்தக தயாரிப்பு என்பது எந்தந்த தலைப்புகளில் கொண்டு வரப்போகிறோம்? எந்தந்த எழுத்தாளர்களின் எழுத்துகளைக் கொண்டு வரப் போகிறோம்? எந்த எந்த வியாபார வாய்ப்புகளைப் பயன்படுத்த போகிறோம்? இவைகள் முக்கியமானவையாகும். அதே நேரத்தில் தந்திரத்தோடு சந்தை செயல்பாடுகளும் தேவை.

On Mind Management என்ற புத்தகத்தில் காலையில் ஒவ்வொரு ஊழியரும் வேலைக்கு வந்தவுடன், இன்றைக்கு என்ன வேலை என்று எழுதி கொடுக்க வேண்டும் என்ற யோசனை சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு நிறுவனத்தின் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் மேல்மட்ட ஊழியர்களிலிருந்து, கீழ் மட்ட ஊழியர்கள் வரை அந்த நிறுவனத்தின் மையப்புள்ளியில் இணைந்து செயல்பட்டால்தான் அந்த நிறுவனம் வெற்றி பெறும்.

செயல்பாடுகளைப் பற்றிய கலந்து உரையாடலில் நடந்த விஷயங்களை விட நடக்காத விஷயங்களைப் பற்றியே அதிகம் பேச வேண்டும். ஒரு நிறுவனத்தின் (என்.சி.பி.எச்) பலம், பலவீனம் என்ன? வாய்ப்புகள் என்ன? போட்டியாளர்கள் யார்? என்று பட்டியலிட வேண்டும். இதே போல் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பலம், பலவீனம் என்று அறிய வேண்டும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு நாம் பயணிக்க வேண்டும்.

(உலக புத்தகத் தினத்தன்று (மார்ச் 23) என்.சி.பி.எச்.ஆண்டு ஊழியர் கூட்டத்தில் மூன்று புத்தகங்களை வெளியிட்டு இறையன்பு IAS அவர்கள் ஆற்றிய உரை).


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com