Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006

நூல் அறிமுக உரை

மாத்தாத்தா

மா. கோவிந்தராசு

“மண்ணிலிருந்து இலக்கியம்” என்பது மார்க்சிய இலக்கியக் கோட்பாடு. மார்க்சியத்தின் அடிப்படைத் தத்துவம் உழைப்பவர்களை உயர்த்துவது; அனைவரையும் சமமாக்குவது; இருப்பதை எல்லோருக்கும் பொதுவுடைமையாக்குவது, இப்பொதுவுடைமைத் தத்துவம் மனித குலம் அனைத்துக்கும் பொருந்தும். அறிவியலின் வளர்ச்சியில் நேரும் தீங்குகளை இடது சாரியினர் எதிர்ப்பர். இயற்கையையும் மரபினையும் பண்பாட்டையும் காக்க வேண்டும் என்று இடதுசாரியினர் வலியுறுத்துவர். பேராசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் இவர்களில் ஒருவர். இவருடைய நான்காவது சிறுகதைத் தொகுப்பு “மாத்தாத்தா”. இந்நூலில் “மண்ணு எல்லாருக்கும் சொந்தம்” (பக்கம் : 88) என்ற பொதுவுடைமைத் தத்துவத்தைக் கதைமாந்தர் வாயிலாக வெளிப்படுத்துகின்றார்.

இந்நூலில் எட்டுச் சிறுகதைகள் உள்ளன. தஞ்சைத் தரணியில் முக்கியத் தொழில் விவசாயம். விவசாய மக்களின் வாழ்க்கை நிலையே எட்டுச் சிறுகதைகளிலும் இழையோடு கின்றது. சிறுகதைகளில் முதியவர்கட்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அன்றைய மக்களின் விவசாய வாழ்க்கை நிலையும், இன்றைய மக்களின் விவசாய வாழ்க்கை நிலையும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

Mathatha தஞ்சை மக்கள் விவசாயத்தை நம்பி - விவசாயம் காவிரியை நம்பி - காவிரி கல்லணையை நம்பி - கல்லணை மேட்டூர் அணையை நம்பி - மேட்டூர் அணை கபினி அணையை நம்பி - கபினி அணை கர்நாடக அரசாங்கத்தை நம்பி - அரசு மழையை நம்பி - இப்படி எத்தனை நம்பிகளை எதிர்ப்பார்க்க வேண்டிய ஓர் அவலநிலை. இன்று மழை பொய்த்தது; பருவத்தே பெய்வதில்லை. நடவு நேரத்தில் மழை இல்லை; கதிர் அறுவடை நேரத்தில் புயல் மழை. இப்படி இரண்டு நிலைகளிலும் மழை மனிதனை ஏமாற்றி விடுகிறது. “ஒவ்வொரு வருஷமும் விவசாயம் விவசாயிகளின் வாயில் மண்ணை அள்ளிப் போட்டுக் குத்தி விடுகின்றது” (ப. 72) ஏமாந்த விவசாயி சிலர் வயல் பக்கமே போவதில்லை; சிலர் விவசாயத்தை விடுவதில்லை; சிலர் மேலும் மேலும் நிலத்தை வாங்குகின்றனர். “ஊரு நெலமெல்லாம் நமக்கே இருக்கணும்ன்னு நெனக்கிறிய. நீங்க மட்டுமில்ல, தஞ்சாவூருல பாதி ஆம்புளய இப்படித்தான் இருக்குறிய. புள்ள படிச்சா நெலம் வாங்க முடியாது; பொண்ணைக் கட்டிக் கொடுத்தா நெலம் வாங்க முடியாது. நெலம் நெலம்ன்னு எதுக்குத்தான் இப்படி அச்சிக்கிறியளோ?” (ப. 56).

விவசாயத்தை நம்பிய மக்கள் கடன்பட்டு அல்லல் படுகின்றனர். “இயற்கை செய்யும் தொந்தரவு அரசாங்கம் கொடுக்கும் தொந்தரவு என எல்லா நிலைகளிலும் பாதிப்பு அடைபவர்கள் விவசாயிகளே” (ப.44). வறுமையும் கடன் தொல்லையும் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். “நெறய வெவசாயிக்கு இந்த எண்ணம் வருது; எல்லாத்தயும் எழந்துட்டான்; கொடல உருவாததுதான் பாக்கி. சாவாம என்ன செய்வான். ஒருத்தன் பட்டினி கெடந்தோ கடனாலோ செத்தா அரசியல் வாதிங்க எரிஞ்ச கச்சி எரியாத கச்சி பேசுறாங்க,......” (ப. 60) விளைச்சல் இல்லாததால் எலி, நண்டு, நத்தைகளைப் பிடித்து உணவாக்கிச் சாப்பிடுகின்றனர். மழை இல்லாததால், ஏரி குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டதால் நண்டு நத்தைகளும் குறைந்து விட்டன.

“வெவசாயம் பண்ணுறேன்னு வாசப்படி வச்சு இருக்கான் பாரு; அந்த வீட்டுல எல்லாம் வயித்து எரிச்சல்தான் இருக்கு. முடிய எண்ணிப்புடலாம்; அவனவனுக்கு இருக்கிற கடன எண்ண முடியாது (ப. 39).

இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்களே! இவர்கள் நிலைமையோ பல வகையிலும் மோசம். “வளம் கொழித்த சோழ மண்ணில் பண்ணைத் தொழிலாளர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் தலித்து மக்களே. பண்ணைகளில் இவர்களுக்கு இழைக்கப் பெற்ற கொடுமைகள் பயங்கரமானவை. சாட்டையால் அடிப்பட்டார்கள்; சாணிப்பால் குடித்தார்கள்; உடம்பில் சூடுபட்டார்கள்; பெண்டாட்டியின் சிறுநீரைக் குடிக்க வைத்தார்கள்; அடைக் கோழியைப் போலத் தொங்க விடப்பட்டார்கள். சுடுமணலில் கட்டி போடப்பட்டார்கள். நெஞ்சை உருக்கும் கொடுமைகளை அனுபவித்த இவர்கள், சூரியன் உதிப்பதற்கு முன்னால் வேலைக்குச் செல்ல வேண்டும்; மறைந்த பிறகே குடிசைக்கு வரவேண்டும். உதிக்கும் சூரியனைக் கண்டு பயந்த மக்கள் உலகில் வேறு எங்கும் இருக்க முடியாது” (ப. எii) வறுமையின் காரணமாக சிலர் திருட்டுத் தொழிலில் (மிளகாய், நகை, வழிப்பறி கொள்ளை, மோட்டார் சாமான்கள்) ஈடுபட்டனர் (சிறுகதை - 6).

நடுத்தர விவசாயி, காவிரியில் நீர் இல்லாததால், கிணறு வெட்டி - அதுவும் நீர் வற்ற; 100 அடியில் ஆழ்குழாய் ‘போர்வெல்’ மோட்டார் வைத்து - அதுவும் வற்றிவிட; 350-400 அடி ஆழத்தில் நீர் மூழ்கி மோட்டார் போட்டு பயிர் சாகுபடி செய்கின்றனர். இதற்குச் செலவுத் தொகை ரூ. 2 லட்சம் ஆகிறது. அவ்வப்போது மின்வெட்டும் நடைபெறும். “ஆழ் குழாய்க் கிணறுகளில் நீர்மட்டம் நூற்று ஐம்பது அடிக்குக் கீழே போய் விட்டதால் பல மோட்டார்கள் இறைப்பது இல்லை...... கொல்லையைப் பார்க்கப் பலர் போவதே இல்லை” (ப. 75)

இன்றைய இளைஞர்கள் நிலத்தை விற்றுவிட்டு வெளிநாடு செல்கின்றனர். அவர்களில் சிலர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் முகவர்களால் ஏமாற்றப்படுகின்றனர். “ஒரு ஏக்கர் நிலத்தை அடகு வைத்துப் பணம் கட்டினார். ஒரு வாரத்தில் அனுப்பி விடுவதாகச் சொன்னான்.... ஒரு வாரம் கழிந்தது. பணம் வசூலித்தவர்கள் தலைமறைவு ஆகி விட்டார்கள்....” (ப. 49). தஞ்சை மண்ணுக்கே உரிய கம்முனாட்டி முதலான சொற்கள் நூலில் பரவிக் கிடக்கின்றன.

காவிரி பொய்த்ததால் ஆடு மாடுகள் குறைந்தன. அதனால் இயற்கை உரம் குறைந்தது. செயற்கை உரம் மிகுந்தது. செயற்கை உரம் இடுவதால் மண் - களர் நிலமாக மாறி வருகிறது. “சீம ஒரத்த அள்ளிப் போட ஆரம்பிச்சுட்டோம்” (ப. 33). “மூட்டை மூட்டையாகச் சீமை உரங்களைக் கொண்டு போய் வயலில் கொட்டினார்கள்....’ (ப. 79).

இயற்கை மாறி, செயற்கை அதிகரித்து வருகின்றது. ‘பசுமைப் புரட்சி’ என்ற பெயரில் நடைபெறும் விவசாய முறைகளால் உண்டாகும் கேட்டினை ஆசிரியர் கடுமையாகச் சாடுகின்றார். “உற்பத்தி ஆகும் பொருட்களில் செயற்கை உரங்களாலும் பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் நச்சுத்தன்மை இருப்பதாகக் கூறுகின்றார்கள். தாய்ப்பாலில் கூட இந்த நச்சுப் பொருள் கலந்துள்ளது என்றால் வேறு சான்றே வேண்டிய தில்லை” (ப.எiii). “பசுமைப் புரட்சி வந்த காலமாக விவசாய அதிகாரிகள் விவசாயிகளைப் படுத்தி இருக்கும் பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை..... பூச்சி தாக்குவதற்கு முன் மருந்தை அடி என்றார்கள். கண்டதைப் போட்டு நிலமே களர் நிலமாகி விட்டது”. (ப. 44) “அதுவும் பசுமைப் புரட்சி வந்த பிறகு பொருளாதாரப் பிரச்சினை விவசாயிகளை வாட்டி எடுத்து விட்டது. தாலியைத் தவிர எல்லா நகைகளுமே அடகு வைத்து முழுகிப்போய்விட்டன. பல பேர் கழுத்தில் தாலியும் இல்லை....” (ப. 72).

அறிவியல் வளர்ச்சியால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது. அதனால் மழை பொய்க்கிறது. மழை பெற மரம் வளர்க்க வேண்டும். பெய்த மழைநீரை சேகரித்தல் வேண்டும் என்பதை ஆசிரியர் வலியுறுத்துகின்றார். “எனக்கு தெரிஞ்சு எத்தனை கொளம் இருந்தச்சு தெரியுமா. எல்லாத்தையும் தூத்து வயலு ஆக்கிட்டானுவ; காட்ட அழிச்சு வீடு கட்டுறானுவ; ஆத்துக் கரயில நிக்கிர மரத்த எல்லாம் பொம்பளய வெட்டி அழிக்கிறாளுவ. ஆம்பள அடியோட வெட்டிக்கிட்டு வாரான்...’ (பக். 93-94).

நாட்டுப்புற நம்பிக்கைகளை நூலில் வெளிப் படுத்துகின்றார். (ப. 59, 64) அன்றைய பெண்களையும் இன்றைய பெண்களையும் ஒப்பிட்டு பேசுகின்றார். “ஆயா சாணியைத் தெய்வமாகக் கருதி அள்ளுவாள். இப்போது மருமகள்கள் சோற்றைத் தொடும் கையால் சாணியைத் தொடத் தயங்குகின்றார்கள். ....... இப்ப உள்ளவதான் சாணியக் கரச்சுப் போடக் கூட பயப்படுறா. தண்ணியத் தெளிச்சுக் கோலம் போடுறாளுவ. அந்தக் காலத்துல அரிசி மாவுல கோலம் மார்கழி மாத்தயில மட்டும் போடுவாளுவ. எறும்பு, காக்கா குருவிய திங்கும்; இப்பக் கல்லு மாவுல கோலம்; நெத்தியில பொட்ட ஒட்டுற மாரி” (பக். 9, 10).

“எந்தக் காலத்திலும் பெண்களை உணர்ச்சி வசப்படுத்தி விடலாம் என்பதைத் தொலைக்காட்சிப் படம் தயாரிப்பவர்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்” (ப. 93).

அந்தக் கால இயற்கை வாழ்க்கை முறை - வறுமையிலும் செம்மை - விளையாட்டுமுறை முதலானவற்றை ஆசிரியர் ஆங்காங்கே நிகழ்ச்சியாக்கியுள்ளார். சிறுகதைக்குள் ஒரு குறுங்கதை கூறும் உத்தியைக் கையாண்டுள்ளார். (ப. 12, 69). நாட்டுப் புற நகைச்சுவைகளையே தனி நூலாக வெளியிடும் ஆசிரியர் இந்நூலில் நகைச்சுவையையும் சிறந்த உத்தியாகக் கையாண்டுள்ளார். எட்டுக் கதைகளுமே பின்னோக்கு உத்தியில் அமைக்கப்பட்டுள்ளது.

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் வாக்கினையும், ‘மென்மையான உணர்வுகள் உள்ள வாசகனுக்கு உலகில் எதுவுமே அற்பமானதல்ல’ என்னும் டாக்டர் ஜான்சன் கூற்றினையும் மெய்ப்பிக்கும் வண்ணம் ஆசிரியர் கதை நிகழ்ச்சிகளை அமைத்துள்ளார். “நேத்து சாயங்காலம் கொளத்துக்கர வயல பாக்கப்போனவரு, உயிரு வாயிக்கும் தொண்டக்கும் இழுக்கிற மாரி சுருண்டு கெடக்குற பயிரப் பாத்து அப்படியே மயங்கிக் கெடந்து இருக்காரு..... வாயில ஊத்தவும் ஒரு சொட்டு தண்ணி இல்லே....” (ப. 34).

பேராசிரியர் மொழியியல் கற்றவர் என்பது இந்நூலின் மொழிநடையால் வெளிப்படுகின்றது. நூலில் வாசகர்களுக்கு அறிவுறுத்தும் கருத்துக்கள் பல உள. விவசாயத்தோடு தொடர்புடைய 122 பழமொழிகளும், 140 உவமைகளும் நூலில் வந்து, வாசிப்பதற்குச் சுவையூட்டித் தூண்டுகின்றன. மண்ணின் மாண்பினைப் பதிய வைத்திருக்கும் இச்சிறு கதை நூல் ஒரு நன்னூல். இந்நூல் மூன்று தலைமுறைக்குச் சொந்தமானது. “மாத்தாத்தா” - ஒரு நூற்றாண்டைக் கடந்து வாழ்ந்த ஒரு ‘மா தாத்தா’வைப் போன்ற நூலாகும். ‘அழிந்து கொண்டிருக்கும் பண்பாட்டினைக் கண்டு ஆதங்கப் படுபவர்கள் கம்யூனிஸ்டுகள்’.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com