Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006

பெண்களும் தலித்துகளும்

அ.அருள்மொழி

சென்ற இதழில் பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சமூக ரீதியான அடிமை நிலை பற்றியுள்ள தொடர்பினைப் பொதுவான ஓர் ஒப்பீட்டுடன் தொடங்கியிருந்தேன். ஆனால் அந்த ஒப்பீட்டுக்கு முன்பாக மற்றொரு ஆய்வு அவசியமாகிறது. பெண்களும் - தலித்துகளும் என்று பேசி எழுதி வரும் யாவரும் பெண்களை ஒரு ஒடுக்கப்பட்ட இனமாகவும் நிறுத்தி தலித்துகளை இன்னொரு ஒடுக்கப்பட்ட இனமாகவும் ஒப்பீடும் போக்கு மேலோங்கி வருகிறது. தலித்துகளில் உள்ள பெண்களின் நிலையோ பெண்ணியத்தையும் - தலித்தியலையும் தாண்டிய ஒரு சிக்கலாக இருக்கிறது.

அதனைப் புரிந்து கொள்ள ஒவ்வொரு ஜாதிப்படி நிலையிலும் பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதையும், ஒடுக்கப்பட்ட இனமாகப் பார்க்கப்படும் பெண்களுக்குள் “பாழும் ஜென்மம்” என்று தன்னையும் தன் பிறப்பையும் நொந்து கொள்ளுவதையும் சமூகச் சூழல் பெண்களுக்கும் தலித்துகளுக்கும் தான் அளித்துள்ளது. நமது இந்திய ஜாதி சமூக அமைப்பில் சுயஜாதி இறுக்கத்திற்கும் - பெண்ணடிமைத்தனத்திற்குமான தொடர்பைத் துல்லியமாக அம்பலப்படுத்தியவர் அண்ணல் அம்பேத்கர். அகமண முறையையும், சதுர் வர்ணத்தின் தூய்மையையும் காப்பதற்கு உடன்கட்டை ஏற்றிப் பெண்கள் கொல்லப்பட்டதும், அந்தப் படுகொலைக்குச் ‘சதி என்று பெயரிட்டுப் பெருமைப் படுத்தியதும் இந்துமதம் பெண்களுக்கு இழைத்த கொடுமைகளுள் முதன்மையானது என்று அவர் விளக்கினார்.

அப்படி உடன் கட்டை ஏறத்தவறிய பெண் வேற்றுக் குலத்தில் கலந்து விடாதிருக்கவே, அவளது அழகு சிதைக்கப்பட்டு மொட்டையும் மூளியுமாக உப்பில்லாத உணவை உண்டு தலையணை இன்றித் தரையில் கிடந்து உறங்கி பிறர் கண்ணில் படுவதே பாவம் என்று அஞ்சி ஒடுங்கி ஒடுங்கி வாழ்ந்து உயிர்விட வேண்டும் என்ற நியமங்கள் உருவாக்கப்பட்டன. “கற்புடை மகளிர் பிறர் நெஞ்சு புகார்” என்ற கருத்துருவாக்கங்களும் பெண்ணை உடல் ரீதியாக ஒடுக்கி, ஆண் சமூகத்தின் சந்ததி விருத்திசாதனமாக மாற்றின.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் தோன்றிய நிறுவனமாக்கப் பட்ட மதங்கள் பெண்களுக்குக் கூறும் சட்டதிட்டங்களை விடக் கொடுமையான ஆதிக்க விதி எதுவும் இல்லை என்று கூறலாம். கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையான “ஆதாம் ஏவாள்” கதை சொல்லும் முக்கியக் கருத்து, பாவத்தின் மூலம் ஏவாள்தான். அவளால்தான், ஆதாமும் கடவுளின் ஆணையை மீறிக் கீழ்ப்படிதலில்லாத மகன் ஆனான். ஏவாள் செய்த பாவத்தின் விளைவாகவே பூமியில் பிறக்கும் ஒவ்வொரு பெண்ணும் பிரசவ வலியால் துடித்து வேதனையை அனுபவிக்கிறாள்.

இஸ்லாமியக் கோட்பாட்டின் படி ஒரு பெண் தன் உடலை முழுவதுமாக மறைப்பதன் மூலம் ஆண்களைத் தவறு செய்யத் தூண்டாதவர் ஆகிறாள். தன் தோற்றத்தை அப்படி முக்காடிட்டு மறைக்காத பெண்ணுக்குச் சொர்க்கத்தின் நிழலிலும் இடமில்லை. எனவே ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தவறான பார்வையில் கண்டால் அதற்குக் காரணம் அவளது நடத்தையே என்று கடுமையான எச்சரிக்கை பெண்ணுக்கு விடப்படுகிறது.
மத சாஸ்திரக் கட்டுமானங்கள் ஏற்படுவதற்கு முன்னாலேயே பொருளாதார ஆதிக்கமும், ஆண்வழிச் சமூகமும் பெண்ணைத் தற்சார்பு இல்லாதவளாக ஆக்கிவிட்ட நிலையில், அவளது ஒவ்வொரு அசைவையும் மத, சாஸ்திர ஆணைகளுக்குக் கட்டுப்பட்டதாக மாற்றுவது எளிதாகியது.

குர்ரான் சொல்லியபடி மணிக்கட்டு வரை கைகளையும், குதிக்கால்வரை கால்களையும், காதுகளோடு முகத்தையும் மூடித் திரையிட்டு வந்தால்தான் ஒரு பெண் ஒழுக்கமானவளாக இருக்க முடியும். ஏனெனில் அவளது ஒழுக்கம் அவள் கையில் இல்லை. அவளைப் பார்க்கிற ஆடவன் கண்ணில் இருக்கிறது. எனவே தான் அந்த ஆணைத் தவறு செய்யத் தூண்டியதற்காக அந்தப் பெண் சவுக்கடி படுகிறாள்.

மீண்டும் இந்தியச் சமுதாய அமைப்பிற்கு வருவோம். இங்கு மேலாண்மை செய்கிற இந்து சாஸ்திர விதிகள் பெண்ணை ‘ருது’ வாவதற்கு முன்பே திருமணம் செய்து கொடுத்துவிடச் சொல்கிறது. அதற்காக ‘பால்ய விவாஹம்’ சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்துத்வா ஆட்சி நடத்திய ராஜஸ்தானில், குழந்தைகளுக்குத் திருமணம் செய்யாதீர்கள் என்று பிரச்சாரம் செய்த ஒரு சமூக சேவகி, மேல் ஜாதி சட்டத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தில் மற்றொரு சமூக சேவகியின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டன.
இந்துத்துவமோ இஸ்லாமிய வாதமோ பிரச்சனை என்னவென்றால் எரியூட்டப்படுவதா அல்லது சவுக்கடியும், கல்லடியும் படுவதா? எது சிறந்தது? என்று பட்டிமன்றந்தான் வைக்கவேண்டும்.

இத்தகைய பெண் ஒடுக்கு முறைச் சிந்தனைகளைக் கொண்ட மதங்கள் எத்தகைய சமூக அமைப்பில் வினையாற்றத் தொடங்கின என்பதைப் பார்க்க வேண்டும்.

பெண்ணைக் கடுமையாக உழைக்காதவளாக இந்து ஜாதி அமைப்பு காப்பாற்றியது. பெண்ணை வீட்டிற்குள் வைத்துவிட்டு அவளுக்காக ஒரு ஆடவன் வெளியில் சென்று கஷ்டப்பட்டு உழைத்து பொருளீட்டிக் கொண்டுவந்து கொடுக்கிறான் என்று மேலோட்டமாகப் பேசி அதையே உண்மை போன்று நம்ப வைக்க இந்து மத வாதிகள் முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் உண்மையில் பெண் உழைக்கிறாள். வெளி வேலைக்குச் செல்லாத பெண் கூட அந்தக் குடும்பத்தின் ஒட்டு மொத்தத் தேவைகளுக்காக ஒரு பெண் தேய்ந்து போகிறாள். அதே குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக வெளியில் வேலை செய்து பொருளீட்டிய ஆணின் உழைப்புக்குக் காட்டப்படும் மரியாதை அந்த ஆணுக்கும் சேர்ந்த அதே குடும்பத்தின் அனைத்துத் தேவைகளுக்காகவும் உழைக்கும் அந்தப் பெண்ணை அந்த ஆண் உழைப்பில் வாழ்பவளாகப் பார்க்கிறது. ஆனால் ஆணை அந்தப் பெண்ணின் உழைப்பை அனுபவிப்பவனாக, அதனாலேயே தான் உணவு முதல் ஓய்வு வரை அனைத்தையும் அனுபவிப்பவனாகச் சித்திரிப்பதில்லை.

குடும்பத்திற்கான உழைப்பு என்பது கூட வசதி படைத்த மேல் ஜாதிப் பெண்களுக்கு மட்டுமே உரியதாகும். அவர்களிலேயே பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க ட்யூஷன் எடுப்பது முதல் வத்தல், வடாம், அப்பளம், ஊறுகாய் போட்டு விற்பது வரை வீட்டின் பொருளாதாரத் தேவைக்காக உழைப்பவர்களும் இருந்தார்கள். இன்று மாறிவிட்ட பொருளாதார அமைப்பில் வீட்டில் இருந்தே அமெரிக்க டாலரில் சம்பாதிப்பது வரை வாய்ப்புகள் பெருகிவிட்டன.

அடுத்து, ஜாதிப்படி நிலையில் ஒவ்வொரு படியாக இறங்கப் பெண்களின் உழைப்போ கூடிக்கொண்டே வருகிறது. வணிக ஜாதிகளைச் சேர்ந்த பெண்கள் வீட்டின் கடமைகளை எல்லாம் முடித்து விட்டுக் கடைகளுக்குச் சென்று வியாபாரம் செய்வது முதல் வீட்டிலேயே மளிகைப் பொருட்களைச் சுத்தம் செய்வது வரை பல்வேறு வகைகளில் அந்தந்தக் குடும்பத்தின் வியாபார வகையைப் பொறுத்து அப்பெண்களின் பொருளாதார உழைப்பு நீட்டிக்கப்படுகிறது.

நெசவாளர் குடும்பங்களில் சமையல் முடிந்த கையோடு தறியில் இறங்கி முதுகு வலி, இடுப்பு வலியோடு எழுந்து மீண்டும் வீட்டுவேலையைத் தொடரும் பெண்களையும் விவசாயக் குடும்பங்களில் அதிகாலை எழுந்து தயிர் கடைந்து, பால் கறந்து, கடையில் தனித்தனியே குடங்களை வைத்துத் தலையில் சுமந்து இரண்டு மைல், மூன்று மைல் நடந்து சென்று சந்தையில் விற்று முடித்துவிட்டு வீடு சென்று சமைத்து மீண்டும் வயல் வேலைக்குச் செல்லும் பெண்களையும் நாம் அறிவோம். இவையாவும் பிராமண சத்திரிய, வைசிய, சூத்திர ஜாதிகளைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடும் வேலைகளாகும். இவர்களில் சூத்திர ஜாதிப் பெண்களின் நிலையில் இரண்டு விதம் உண்டு. நிலச் சொந்தக்காரர்களாக, ஆண்டச்சியாகவும் பண்ணாடிச்சியாகவும் கூலித் தொழிலாளர்களால் வணக்கத்துடன் அழைக்கப்படும் பெண்கள். அவர்களுக்குத் தாங்கள் செய்யும் வியாபாரத்தின் மூலம் வரும் பணத்தினைக் கையாளும் உரிமை ஓரளவுக்கு உள்ளது. இவர்கள் ஒரு வகை. நிலமற்ற கூலி விவசாயிகளாகவும் பல்வேறு தொழில்களிலும் ஈடுபடும் குடும்பங்களில் வாழும் பெண்கள் வீட்டு வேலைகளோடு, கூலி வேலைக்கும் சென்று சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்நிலை மதிக்கப்படுவதாக இருப்பதில்லை. மேலும் தாங்கள் வாங்கும் சிறு கூலியும் கூட குடும்பத்திற்குக் கஞ்சி ஊற்றுவதற்காகவே என்ற கருத்தின் பேரில்தான் அவர்கள் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். தங்கள் உழைப்பில் பெறும் ஊதியத்தில் தனக்கென்று தன் உடல் நலத்திற்காக ஒரு இளநீர் வாங்கிக் குடிப்பதற்குக் கூட அவர்கட்கு உரிமையில்லை.

இந்த மூன்று ஜாதி அமைப்பிற்கும் கீழே தாழ்த்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த பெண்கள் வருகிறார்கள். அவர்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருந்து குடும்ப வேலைகளை மட்டும் கவனித்து வாழும் நிம்மதியான வாழ்க்கை இல்லை வீட்டுக்குள்ளே வாழும் உயர் ஜாதிப் பெண்களின் நிம்மதி குறித்து விவாதங்கள் எழலாம். ஆனால் அவர்களின் பிரச்சினைகள் சாஸ்திர மனோபாவம் சார்ந்தவை. ஆணாதிக்க மனப்பான்மையால் தூண்டப்பட்டவை. கணவன் அடிப்பதே ஒரு சுகம்தான் என்பது போன்ற தந்திரமான கருத்துருவாக்கங்களால் உருவாக்கப்பட்டவை. அவர்களது அறிவையும் திறமையையும் அவர்கள் விரும்பும் அளவிற்கு வெளிப்படுத்த முடியாத, அந்த ஜாதியில் பிறந்த ஆணின் அதிகபட்ச படிப்பை வைத்துப் பெண்களின் படிப்பை வரையறுப்பவை. இத்தகைய பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்வதற்கும் வெற்றி கொள்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. அதனைத் தனியே ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அடிப்படையில் வீட்டிற்குள் வாழ்வது என்ற அடிப்படைப் பாதுகாப்பு உணர்வு உயர் ஜாதிப் பெண்களுக்கு உண்டு. அந்த அடிப்படைப் பாதுகாப்பும் இல்லாதவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள். வீட்டுக்குள் இருந்து ஊறுகாய்க்கு எண்ணெய் வீட்டுப் பிரட்டி, நாலுகாசு பார்க்கும் சவுகரியம் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு இல்லை. மேலும் அந்த உயர் ஜாதிப் பெண்களை வீட்டுக்குள்ளே கணவன் அடித்தாலும் மாமியார் கொடுமை செய்தாலும் வெளியில் வரும்போது அய்யரம்மாவாக, பிள்ளை வீட்டம்மாவாக செட்டிவீட்டு ஆச்சியாக முதலியராம்மாவாக மதிக்கப் படுவார்கள். அவர்கள் வீட்டுச் சமையலறைக்குப்பின் இன்னொரு தொழில் உலகம் திறந்திருக்கும். அந்த உலகிற்கு அந்தப் பெண்தான் எஜமானி, முதலாளி. அங்கே வேலைக்காரியாவது, வண்ணாத்தியாக, தோட்டிச்சியாக சில இடங்களில் பறைச் சியாகவே கீழ்ஜாதி அடுக்குகளைச் சேர்ந்த பெண்கள் பின் வழியாகவே வந்து வேலை செய்து மீந்ததை வாங்கிச் சட்டியில் எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். முன்வாசல் வழியாகச் சில நேரங்களில் கூடம் வரை வருபவர்கள் தயிர்க்காரி, தையல்காரி, காய்கறிக்காரி இந்தப் படிநிலைப் பெண்கள் மட்டுமே.

இரண்டாவது இடத்தில் இருக்கும் வியாபார, விவசாய நில உடைமை ஜாதிகளைச் சேர்ந்த பெண்களுக்கும் வீட்டுக்கு வெளியில் கிடைக்கும் சமூக மரியாதைக்குக் குறைவில்லை. இவர்களுக்கு குடும்ப வேலை என்பது குடும்ப நிர்வாகம் என்ற மாற்றம் பெறுகிறது. தங்கள் குடும்பத்திற்குச் சமையல் தேவைகளைச் செய்வது போலவே தங்களது நிலத்திலும் சிறு நிறுவன அமைப்புகளிலும் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் ஆண் பெண் இருவரின் மீதும் இப்பெண்களுக்கும் ஆதிக்கம் செலுத்தும் உரிமை ஓரளவுக்கு உண்டு.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com