Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006

பி.சி. கணேசன் - ஓர் அரசியல் முனிவர்?

கோ. அரங்கநாதன்

வரலாற்றைப் பற்றி ஒரு வழக்கு உண்டு. “தனி மனிதன் சரித்திரம் படைக்கின்றான். சில சமயங்களில் சரித்திரம் தனிமனிதனைப் படைக்கின்றது”.

பி.சி. கணேசன் சரித்திரம் படைத்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர். ஆங்கிலப் புலவர், சிறு கதை மன்னர் வரலாற்றுப் பேராசிரியர் சிறந்த நாவலாசிரியர், நகைச்சுவை நாடகாசிரியர், திரைப்பட இயக்குநர், நல்ல மொழிப் பெயர்ப்பாளர், பேச்சாளர், இப்படிப் பல்துறை அறிஞராக விளங்கிய ஒரு மனிதநேயர். அந்த அளவுக்கு எங்கள் நட்பின் நெருக்கம் ஆழ்ந்து வேரூன்றி இருந்தது. கடந்த 55 ஆண்டு நட்பு வாழ்க்கையில் பல கருத்து வேறுபாடுகளுக்கிடையே எங்கள் உறவு அண்ணன் தம்பி உறவாகவே பரிணமித்தது. எனினும் அவர் அவராகவே வாழ்ந்தார்.

கொண்ட கொள்கையில் விடாப்பற்று, உறுதி, கொள்கைப் பிடிப்புக்காக உயிர்போன்று வளர்த்த நட்பையும் துறப்பதற்குத் தயார்நிலை! அவர்தான் பி.சி.ஜி.

தன் எழுத்துப் பணியைப் புனிதமாகக் கருதியவர் அவர். வேறு எவர் எழுத்திலிருந்தும் அவர் காப்பியடித்ததில்லை. வேறு எவரும் அவர் எழுதிய எழுத்துக்குத் தன் பெயரைப் போட்டுக் கொள்வதற்கும் அனுமதித்ததில்லை. அவர் யாருக்கும் “கோஸ்ட்” எழுத்தாளராக இருந்ததில்லை.

தமிழ்நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவராக விளங்கி மறைந்து போன ஒருவரின் மனைவியார் தன் கணவர் வாழ்க்கை வரலாற்றை “பி.சி. கணேசன் எழுதவேண்டும் என்றும், ஆனால் எழுதியவர் என்று தன் பெயரைப் போட்டுக் கொள்வதாகவும் அதற்குரிய வெகுமதியைக் கைநிறையக் கொடுப்பதாகவும் உறுதி அளித்தார். தன் எழுத்துப் பணியைப் புனிதமாக நினைக்கும் பி.சி. கணேசன் வறுமையில் வாடியபோதும் அந்தக் கோரிக்கையை ஏற்க உறுதியாக மறுத்துவிட்டார்.

கா.சா. சுப்பராவ் நடத்திய “சுதந்திரா” என்னும் வார ஏட்டில் எழுதி (1952) நாட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி அகில இந்தியக் கவனத்தை ஈர்த்தபோது பி.சி. கணேசனுக்கு வயது 25.

பி.சி. கணேசன் பணி புரிந்த பள்ளியின் ஆண்டு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்களிடம் அவரே வியக்கும் வண்ணம் தமிழ் பற்றி விவாதம் செய்தார்.

கலைஞர் மு. கருணாநிதியின் “முரசொலி” வார இதழில் “மனிதனின் கதை” என்ற தலைப்பில் தொடர் கட்டுரையை அது முரசொலியின் கடைசி பக்கக் கட்டுரையாக எழுதி வந்தார். ஒரு வாசகர் கூட்டம் அதற்காகக் காத்திருக்கும்.

கம்யூனிச இயக்கத்தின் முதிர்ந்த தலைவர்களில் ஒருவரான மணலி கந்தசாமியிடம் நட்பு முறையில் தர்க்க வாதத்தில் “கம்யூனிச இயக்கம் மக்களிடம் ஒன்றித் தன்னை இணைத்துக் கொள்ளாத வரை அது நம் நாட்டில் வளர முடியாது” என்று பி.சி. கணேசன் 1960-இல் விமர்சனம் செய்ததுண்டு.

தமிழ்ப் பெரும்புலவர் தேவநேயப் பாவணரிடமிருந்து பி.சி. கணேசனுக்கு சிதம்பரத்திலிருந்து ஓர் கடிதம் வந்தது. அப்பொழுது பாவணர் வறுமையில் வாடிக்கொண்டிருந்த காலம். என்ன காரணமோ, கணேசன் மீது நம்பிக்கை வைத்து தன் கஷ்டங்களையெல்லாம் விளக்கி எழுதியிருந்தார். இப்படிப் பல பெரிய மனிதர்கள் பி.சி. கணேசனின் இளமைக் காலத்திலேயே அவரிடம் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தவர்களில் ஒருவர் கும்பகோணம் சிலப்பதிகாரப் பண் ஆராய்ச்சி அறிஞர் சுந்தரேசனார் ஆவார்.

அவர் கலைஞரின் “ரைசிங்சன்” என்னும் ஆங்கில வார இதழில் பொறுப்பாசிரியராக இருந்த போது அவர் எழுதிய தலையங்கங்கள், ஆங்கில கட்டுரைகள் வட நாட்டினரையும், வெளி நாட்டினரையும் ஈர்த்திருக்கின்றன.

அவர் ரத்தத் திலகம் திரைப்படத்திற்குக் கதை வசனம் எழுதியபோது, துறவு பூண்ட முனிவரோ என்று எண்ணி வியக்கும் நினைத்துக் கூறும் அளவுக்கு திரைத்துறையின் எந்தக் களங்கமும் படியாத ஒழுக்க சீலராக நீடித்தார்.

புதுமை என்னவென்றால், அதிகாரம் எதுவும் தன்கையில் இல்லாமல் தன் அறிவுக் கூர்மையை மட்டுமே வைத்து அனைவரின் அன்பையும் நன் மதிப்பையும் பெற்றவர் இவர்மட்டுமே.

அவர் கடைசி வரை வாடகை வீட்டில் இறக்கும் வரை குடியிருந்தார். இரண்டு மாத வாடகை பாக்கியைக் கூட ஒரு பதிப்பக நண்பரின் அன்பளிப்பை வைத்துத் தான் அடைக்க முடிந்தது? முழுவதும் இத்தகைய வறுமை? வாழத்தெரியாதவர் என்ற பெயருடன் மறைந்தார்.

காரணம் அவரது நேர்மையான வாழ்க்கை! கறைபடாத கரம்! உண்மையான உழைப்பு! அநியாயத்தைப் பொறுத்துக் கொள்ளாத குணம்; வளைந்து கொடுக்காத சுபாபம்! பிறருக்காக விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை; அதீதமான தன்மான உணர்ச்சி! சில சமயங்களில் அரசியல் கணிப்பில் குறைபாடு! அவருக்கே தெரியாமல் அவரிடம் குடிகொண்டிருந்த அறிவு கர்வம்!

பிறருக்காக விட்டுக் கொடுக்கும் பெருந்தகையாளர் அவர், எம்.ஜி.ஆர். ராஜ்யசபை உறுப்பினர் பதவியை இவருக்குக் கொடுக்க முன் வந்தபோதும், ஏ.பி. ஜனார்த்தனம் கேட்டுக் கொண்டார் என்பதற்காக பதவியை விட்டுக் கொடுத்தார் என்கிறார்கள். மகனுக்கோ மகளுக்கோ ஒரு வேலை கூட வாங்கிக் கொள்ளவில்லை.

தூய்மையான பழக்க வழக்கங்களைக் கொண்ட பி.சி. கணேசன் வாழ்க்கை ஒரு தியாக வாழ்க்கை! அவர் சம்பாதித்தது பணம் அல்ல! புகழ் மட்டுமே.

அவர் ஓர் அரசியல் முனிவர்! நல்ல பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், எல்லாவற்றிற்கும் மேலான நல்ல முற்போக்குச் சிந்தனையாளர். அவர் மறைவு பற்றி உங்கள் நூலகம் வருந்துகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com