Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006

செர்ஜி ஐன்ஸ்டீனின் ‘பேட்டில்ஷிப் பொட்டம்கினை’ முன்வைத்து...
பிரச்சாரம் கலையாவதின் ரகசியம்

அப்பணசாமி

செர்ஜி ஐன்ஸ்டீனின் “பேட்டில்ஷிப் பொட்டம்கின்” திரைக்கதை
தமிழாக்கம் அ.ஜ. கான்

பொட்டம்கின் பற்றி ஐன்ஸ்டீன்
தமிழாக்கம் : கலைச்செல்வன்

ஒடெசா படிக்கட்டுகள் காட்சிக்கோர்வை - ஒரு படி நிலை
ஆய்வு: ரோகாந்த்

வெளியீடு: நிழல்,
31/48, ராணி அண்ணா நகர்,
கே.கே. நகர், சென்னை - 78,
விலை : ரூ. 110.00.


“இன்றைய நிலையில் சினிமா பற்றி புகழ் பெற்ற ஒரு சொல்லாடல் இருக்கிறது. எல்லோரும் இரண்டு தொழில் செய்கிறார்கள். ஒன்று அவர்கள் செய்யும் தொழில். மற்றொன்று சினிமா விமர்சனம்.”

திரைக் கல்வி வரிசையாக நிழல் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வந்துள்ள ‘செர்ஜி ஐன்ஸ்டீனின் பேட்டில்ஷிப் பொட்டம்கின்’ புத்தகம் மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வரிகளுடன் நிறைவு பெறுகிறது. இது உலகம் முழுவதும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல்லாடலா அல்லது தமிழ் சினிமாவுக்கு மட்டுமான சொல்லாடலா என்பது தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை தமிழ் வாழ்க்கையில் சினிமா விமர்சனத்தைப் பிரிக்கவே முடியாது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் ‘காலைக் காஃபி (அல்லது) டீ’யில் இருந்து ஒவ்வொரு அரட்டையும் சினிமா விமர்சனத்தோடுதான் தொடங்குகிறது. பெயர் பெற்ற சினிமா விமர்சகர்கள் இதனை ஏற்க மறுக்கலாம்.

நான் இப்படித் தொடங்குவதற்குக் காரணம் தமிழ்ச் சூழலில் சினிமா என்ற கலை வடிவத்தின் பாதிப்பைச் சுட்டிக்காட்டி விட்டுத் தொடங்க வேண்டும் என்பதுதான். இவ்வாறு மக்கள் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் முக்கியப் பங்காற்றி வரும் சினிமாக் கலை ஒரு கல்விப் புலமாக நம்மிடம் வளர்ச்சி பெறவில்லை. ஆனால் தற்போது பல கல்லூரிகளில் “விஷீவல் கம்யூனிகேஷன்” கல்வி ஒரு பாடமாகத் தொடங்கப்பட்டு வருவது ஒரு மாற்றமாகும். இவற்றில் பயிலும் மாணவர்கள் சினிமாவைத் தம் தாய் மொழியில் அறிந்து கொள்ளப் போதுமான புத்தகங்கள் தமிழில் இல்லை. அந்த வகையில் திரைக்கல்வி வரிசையை நிழல் பதிப்பகம் தொடங்கியுள்ளது. இது முன்மாதிரி முயற்சியாகும். இதன் முதல் புத்தகமாக ‘செர்ஜி ஐன்ஸ்டீனின் பேட்டில்ஷிப் பொட்டம்கின்’ வெளிவந்துள்ளது.

உலகில் வெளிவந்துள்ள திரைப்படங்களில் மிகச் சிறந்த மூன்று திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் கவுரவிக்கப்படும் படம் ‘பேட்டில்ஷிப் பொட்டம்கின்’. உலகிலேயே சிறந்த சினிமாவை ரசிப்பதும். பயில்வதும் உலகிலேயே சிறந்த கலை அனுபவமாகவும், கலை பாடமாகவும் இருக்கும். ஆனால் அதற்குத் தேவையான அடிப்படைப் பாடங்கள் அமைய வேண்டும். அந்த வகையில் இப்புத்தகத்தில் ‘பேட்டில்ஷிப் பொட்டம்கின்’ படத்தின் திரைக்கதை முழுமையாக இடம் பெற்றுள்ளது. மேலும் இப்படம் குறித்து இதன் இயக்குநர் ஐன்ஸ்டீன் எழுதியுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டுரை ஒன்றும் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறந்த திரைப்படக் கல்வி ஆசிரியர்களில் ஒருவரான ஹரிஹரன் இப்படம் குறித்து ஒரு முன்னுரை எழுதியுள்ளார். இதற்கெல்லாம் மேலாக இப்படத்தில் இடம் பெறும் முக்கியக் காட்சியான ‘ஒடேசா படிக்கட்டுகள்’ பற்றிய ஒரு படிநிலை ஆய்வு இடம் பெற்றுள்ளது. ரோகாந்த் மேற்கொண்டுள்ள இந்த நுட்பமான ஆய்வு இப் புத்தகத்தின் சிறப்புப் பகுதியாகும்.

சோவியத் யூனியன் நாட்டில் 1917இல் சோஷலிசப் புரட்சி நடைபெற்றது. இது இரண்டு கட்டமானது; முதல் புரட்சி 1905 இல் நடைபெற்றது. இதில் பொட்டம்கின் என்ற கடற்படைக் கப்பலில் வெடித்த புரட்சி முக்கியமாகும். இக்கப்பல்படைப் புரட்சி அலைகள் நாடு முழுவதும் சிதறின. புரட்சிக்குப் பின் அமைந்த சோஷலிச அரசில் 1905 புரட்சியின் 20 ஆம் ஆண்டு நினைவு அனுசரிக்கப்பட்டதையொட்டி ஒரு திரைப்படம் தயாரிக்க ஐன்ஸ்டீனுக்குப் பணிக்கப்பட்டது. அவர் பொட்டம்கின் போர்க்கப்பல் எழுச்சியை எடுத்துக் கொண்டு படத்தை உருவாக்கினார்.

ரஷ்யாவின் ஜார் அரசனுக்குச் சொந்தமான போர்க்கப்பல் பொட்டம்கினில் மாலுமிகளுக்காகத் தயாரிக்கப்படும் சூப்பிற்கான இறைச்சியில் புழுக்கள் நெளிகின்றன. தங்கள் எதிர்ப்பையும் மீறித் தயாரிக்கப்படும் சூப்பை அருந்த மாலுமிகள் மறுக்கிறார்கள். அதிகாரிகளின் எச்சரிக்கைக் கொக்கரிப்புகள், மிரட்டல்கள் பலனற்றுப் போக, சில மாலுமிகள் தார்ப்பாயால் மூடப்பட்டு அவர்களைச் சுட்டுக்கொல்ல உத்தரவிடப்படுகிறது. துப்பாக்கிக் குதிரைகளைத் தட்டிவிடும் நொடியில் ‘சகோதரர்களே’ என்ற குரல் கேட்கிறது. சகமாலுமிகளுக்கு ஆதரவாக வீரர்கள் அவர்களைச் சுட மறுக்கிறார்கள். கப்பலில் கலகம் வெடிக்கிறது. போராடும் மாலுமிகள் வெற்றி பெறுகிறார்கள். ஆனால், இந்தப் போராட்டத்துக்கு வித்திட்ட வக்குலின் சுக் என்ற மாலுமி போர்க் கப்பல் தளபதியால் கொல்லப்பட்டு விடுகிறார்.

மாலுமி வக்குலின் சுக் உடல் ஒடேசா துறைமுகத்துக்கு எடுத்து வரப்படுகிறது. ஒரு கூடாரத்தில் வக்குலின் சுக் உடல் வைக்கப்பட்டு மக்களுக்காக உயிர்த்தியாகம் செய்த அந்த வீரனின் கையில் மெழுகுவத்தி உருகி எரியும் ஒளியில் ஒடேசா நகரம் மங்கலாகத் தெரிகிறது. ஒடேசா நகரப் போராளிகளும், தொழிலாளிகளும், மக்களும், ஆண்களும், பெண்களுமாக உயிர்த் தியாகம் செய்த மாலுமிக்கு அஞ்சலி செலுத்தத் துறைமுகம் நோக்கி விரைகிறார்கள். துறைமுகம் முழுவதும் மக்கள் ஆதரவுக் கரங்கள் உயர்கின்றன. பொட்டம்கின் கப்பலில் செங்கொடி ஏறுகிறது.

ஒடேசா படிக்கட்டுகள். மக்கள் சாரி சாரியாகக் குழுமுகிறார்கள். பலர் கைகளில் பலவிதமான பொருட்கள் உள்ளன. மக்கள் முடிவில்லாமல் வந்து கொண்டே உள்ளனர். துறைமுகத் தளத்திலிருந்து படகுகள் கப்பலை நோக்கி நகர்கின்றன. மக்கள் அப்படகுகளில் தாவி ஏறுகிறார்கள். தாங்கள் கொண்டுவந்த பொருள்களைப் படகுகளில் ஏற்றுகிறார்கள். பன்றிகள், வாத்துகள், முட்டைகள் என பலவிதமான பொருள்களுடன் மக்கள் படகுகளில் உற்சாகமாகப் போர்க்கப்பல் பொட்டம்கினை நோக்கிச் செல்கிறார்கள். கடல் உற்சாகமாக அவர்களை வரவேற்கிறது. படகுகளில் வந்தவர்கள் கப்பல்களில் ஏறுகிறார்கள். போர்க்கப்பல் பொட்டம்கினில் உள்ள மாலுமிகளும், வீரர்களும் அவர்களை வரவேற்கிறார்கள். அவர்களது பரிசுப் பொருட்களை மகிழ்ச்சியுடன் ஏற்கிறார்கள். கடற்கரையில் குழுமியுள்ள மக்களும் கையசைத்துத் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எங்கும் மகிழ்ச்சி. திடீரென... ஜார் அரசின் துப்பாக்கிப் படை ஒடேசா படிக்கட்டுகளில் மக்களை நோக்கி விரைகிறார்கள்.

அஞ்சலி செலுத்துவதற்காக ஒடேசா படிகளில் முதல் ஆளாகப் பாய்ந்து தாவிவந்த, இரண்டு கால்களுமற்ற ஊனமுற்ற இளைஞன் விசையுற்ற பந்தைப்போல் தாவித் தாவி ஓடுகிறான். மக்களும் சிதறியடித்து ஒடேசா படிக்கட்டுகளில் சிதறி இறங்கி ஓடுகின்றனர். அவர்களோடு தனது மகனைத் தூக்கிக் கொண்டு ஒரு நவீனப் பெண் ஓடுகிறாள். இவள் கப்பலில் செங்கொடி ஏற்றப்பட்டபோது அதை நோக்கித் தானும் கையசைத்துத் தன் குழந்தையையும் கை அசைக்கச் செய்தவள். துப்பாக்கிப்படை இப்போது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்குகிறது. நவீனப் பெண் கையிலிருந்த குழந்தை கீழே விழுகிறது. தாய் அதிர்ச்சி அடைகிறாள். மக்கள் கீழே இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த நவீனப் பெண் குழந்தையைக் கைகளில் ஏந்திப் படிகளின் மேலேறுகிறாள். மக்கள் கீழே இறங்கி கொண்டே இருக்கிறார்கள். துப்பாக்கிக் குண்டு பட்டவர்கள் படிகளில் சாய்கிறார்கள். அவள் குழந்தையுடன் ஏறிக்கொண்டே இருக்கிறாள். படிகளில் மக்கள் விழுந்து கிடக்கின்றனர். மக்கள் தொடர்ந்து படிகளில் இறங்கி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

அவள் மீதும் துப்பாக்கிக் குண்டு பாய்கிறது. குழந்தை கீழே விழுகிறது. அவள் இறக்கிறாள். இப்போது குதிரைப்படையும் சேர்கிறது. மக்கள் இன்னும் வேகமாகச் சிதறி ஓடுகிறார்கள். ஒரு தள்ளுவண்டியில் தனது கைக்குழந்தையை வைத்துத் தள்ளிக் கொண்டு போகும் பெண் மீது குண்டு பாய்கிறது. தன் குழந்தையைக் காப்பாற்ற இயலாத அவள் வண்டி மீதே சாய்கிறாள். வண்டி... படிகளில் இறங்கித் தறிகெட்டு ஓடி அதிலிருந்து குழந்தை தூக்கி வீசப்படுகிறது. முடிவே இல்லாமல் வன்முறை தொடர்கிறது. அப்போது போர்க்கப்பல் பொட்டம்கினின் பீரங்கி முழங்குகிறது. ஜார் அரசனின் ஒடேசா அரங்கு தகர்க்கப்படுகிறது. ராணுவ வளாக முகப்பில் உள்ள சிங்கம் கர்ஜிக்கிறது.

போர்க்கப்பல் பொட்டம்கினைப் பலி வாங்க ஜார் அரசு மற்றொரு போர்க்கப்பலை அனுப்புகிறது. யுத்தம் தவிர்க்க முடியாதது. பீரங்கிகள் எதிரிக் கப்பலைக் குறிவைக்கின்றன. கடைசி நொடியில் ‘சகோதரர்களே’ என்ற குரல் எழுகிறது. சகோதரப் போராளிகள் மீது சுட மறுக்கிறார்கள்.

வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறித்து ஒரு அரசு தயாரிப்பாக உருவான இப்படம் கடந்த 80 ஆண்டுகளாகப் பாராட்டப் பெற்று வருகிறது. ஐன்ஸ்டீன் உருவாக்கியதாகக் கூறப்படும் மாண்டேஜ் படத்தொகுப்பு முறை, அதற்கு அடித்தளமாகக் கூறப்படும் பாவ்லோவ் உளவியல் கொள்கை, தங்கக் கூறுகள் அம்சம் ஆகியவை முக்கிய சினிமாக் கோட்பாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஹாலிவுட் உலகமே ஐன்ஸ்டீனைத் தழுவி எடுத்துக் கொண்டது. ஒரு அரசு தயாரிப்பாக உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சாரப்படம் இன்று உலகு தழுவிய கலைப் படைப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டது எதனால்?

இதற்கு ஐன்ஸ்டீன் வார்த்தைகளில் கூறினால், “இன்னும் ஒரு கேள்வி எஞ்சியுள்ளது. ஒரு கலைஞன் இவ்வளவு வடிவமைப்புக் கோட்பாடுகளை எவ்வாறு வந்தடைவது? முற்றிலும் அவலம் நிறைந்த எந்த ஒரு படைப்பிலும் இவ்வடிவமைப்புக் கோட்பாடுகளைக் காணலாம். ஆனால் இவை எதுவும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வடிவமைப்புகளால் வந்தடைந்தவை அல்ல. தொழில்நுட்பத் திறன் மட்டுமோ, கோட்பாடு மட்டுமோ, முழுமையான திறமை மட்டுமோ கூட அதற்குப் போதுமானதல்ல.”

இந்த வார்த்தைகள் சினிமாக்கலை மாணவர்களுக்கு ஒரு அபூர்வமான வேத வாக்கு. தொழில்நுட்பமோ, கோட்பாடுகளோ கலை அல்ல. “படைப்பின் ஒரு, உள்ளடக்கம், சிந்தனை ஆகிய அனைத்தும் கதாசிரியரின் சிந்தனைகளுடன், உணர்வுகளுடன் அவரின் மூச்சோடு மூச்சாக உயிரோட்டமாகவும், தொடர்ச்சியாகவும், முழுமையுடன் தொடர்ந்தும் ஒன்றிணையும் போதுதான் படைப்பு உயிரோட்டம் பெறுகிறது. உண்மையான அவல உணர்வின் உச்சத்தை எட்டுகிறது” என்கிறார்கள். இந்த உண்மையை மாணவர்கள் உணர வேண்டுமானால் இப்புத்தகத்தில் ரோகாந்த் மேற்கொண்டுள்ள ‘ஒடேசா படிக்கட்டுகள் காட்சிக்கோவை - ஒரு படிநிலை ஆய்வு’ என்ற கட்டுரையை நுட்பமாகப் படிக்க வேண்டும். மொத்தம் ஐந்து அங்கங்கள் உள்ள இப்படத்தில் இடம்பெறும் நான்காவது அங்கமான ‘ஒடேசா படிக்கட்டுகள்’ காட்சியை இவர் ஆய்வுக்கு எடுத்துள்ளார். படத்தில் இக்காட்சி 11 நிமிடங்கள், 50 நொடிகள் இடம் பெறுகின்றது. இதற்காக ஐன்ஸ்டீன் 240 ஷாட்டுகள் பயன்படுத்தியுள்ளார். இதைப் படிமங்களாகப் பிரித்தபோது 17,753 படங்கள் வந்து விழுந்தன என்கிறார் ரோகாந்த். இவற்றை ஆய்வு செய்து ஷாட் வாரியாகப் பிரிப்பது என்பது கடும் வேலை. இதனை மேற்கொண்டு இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.

“ஒடேசா படிக்கட்டைப் பற்றி இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று படம் சம்பந்தப்பட்டது. இரண்டு வரலாறு சம்பந்தப்பட்டது. ஒட்டுமொத்த படத்தில் இருந்து ஒடேசா அங்கத்தை வெட்டி எடுத்துவிட்டுப் பொட்டம்கின் கதையைப் பார்த்தால், அது எந்த விதத்திலும் குறைபட்ட ஒன்றாக இருக்காது. ஒரு கதையாக ஒரு திரைக்கதையாக ஒரு காட்சி அனுபவமாகப் பார்வையாளர்களின் உணர்வு ஒன்றலில் ஒரு முழுமையை நான்கு அங்கங்களுமே கொடுத்துவிடும்.

அதே போல மற்ற அங்கங்களின் முதலும் முடிவும் இல்லாமல் ஒரு ஒற்றை அங்கமாகவே ஒடேசா படிக்கட்டுகள் ஒட்டு மொத்தப் படத்தின் முழுமைச் சுருக்கத்தை ஒரு கதையாக, ஒரு திரைக்கதையாக, ஒரு காட்சி அனுபவமாகப் பார்வையாளர்களுக்குக் கொடுத்து விடும். ஏற்கனவே படம் பார்த்தவர்கள் ‘ஒடேசா படிக்கட்டு அங்கம்’ இல்லாத பொட்டம்கின் படத்தைக் கற்பனை செய்து பார்ப்பதே இயலாத காரியமாக இருக்கும்....” (பக். 104)

இரண்டாவது “உண்மையில் 1905 இல் நடந்த பொட்டம்கின் கப்பல் போராட்டத்தில் ஒடேசா படிக்கட்டுகளில் எந்தப் படுகொலைகளும் நடக்கவில்லை. முழுக்க முழுக்கக் கற்பனையான சித்திரிப்பு. ஆனால் ஒடேசா படிக்கட்டுகளின் ஊடாக நிகழ்த்திய அவலத்தின் ஊடாகத்தான் ஜார் அரசினது அடக்குமுறையின் தீவிரம் காட்சிப்படுத்தப்படுகிறது.” (பக். 181) என்று ரோகாந்த் கூறுகிறார். பொட்டம்கின் படத்தைப் பொறுத்தவரை ஐன்ஸ்டீன் கூறுவதுபோல அதன் வடிவமைப்பின் ‘உயிரோட்டமான ஒற்றுமையும் அதன் அவலச் சுவையும்’ (பக் 12) முதலாவது முக்கிய அம்சமாகும். அதாவது இதனை ‘முரண்பாடுகளின் ஒற்றுமை’ என்று இதனை விளக்கலாம். இதுவே ஐன்ஸ்டீனின் திரைமொழி. இது ஒடேசா படிக்கட்டுகளில் ஐன்ஸ்டீன் என்ற கலைஞனின் கற்பனை ஊற்றின் வழி பீறிடுகிறது. பொட்டம்கின் என்ற போர்க்கப்பலில் என்ன நடந்தது என்பதைவிட ஒடேசா படிக்கட்டுகள் ஐன்ஸ்டீன் என்ற கலைஞனின் ‘உணர்வுகளுடன், அவரின் மூச்சோடு மூச்சாக உயிரோட்டமாகவும், தொடர்ச்சியாகவும், முழுமையுடன் தொடர்ந்தும் ஒன்றிணைகிறது.

இந்த நான்காவது அங்கமான ஒடேசா படிக்கட்டுகள் குறித்த படிநிலை ஆய்வை ரோகாந்த் மேலே கூறிய பக்கங்கள் 104-181 இடையே விளக்கியுள்ளார். திரைக்கலையின் ஆதாரமான திரைமொழி குறித்து மாணவர்கள் பயில இது ஒரு காட்சி வழிப் பாடமாக இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை இப்படத்தை இக்கட்டுரைக்காக மீண்டும் ஒரு அனுபவமாகப் பார்த்தபோது, இக்காட்சியில் காட்டப்படும் மக்கள் கூட்டம், பொருட்கள், படகுகள், கடல் அலைகள் இவைகளின் அசைவுகளில் வெளிப்படும் மகிழ்ச்சிக் கூத்தும், தொடரும் அவலமுமே கலையாக மிளிர்கின்றன. இதனால் இப்படம் சிறந்த திரை மொழிக்கான பிரச்சாரமாகவும், சிறந்த பிரச்சாரத்துக்கான கலையாகவும் உள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com