Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006

படைப்பாளியைப் போலவே வென்றிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்

ஆண்டாள் பிரியதர்ஷினி

பிரயாணப்பட விரும்பும் இன்னொரு தேசத்துக்குப் பயணிக்கிறோம். பல தரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறோம், சிந்திக்கிறோம், அளவளாவுகிறோம், உலாவுகிறோம், ஆர்ப்பரிக்கிறோம், அதிசயிக்கிறோம், நெட்டுயிர்க்கிறோம், நீளமாகப் பெருமூச்சு விடுகிறோம், ஆச்சர்யமாகப் பார்க்கிறோம்.

நம்மைப் போன்றே பேசும், சிந்திக்கும், சந்தோஷிக்கும், சோகப்படும், அச்சப்படும், காதலிக்கும், மனம் பேதலிக்கும் பலமான, பலவீனமான மனிதர்கள் தோலின் நிறமும், வாழ்வின் சூழலும்தான் வேறு. பெய்யும் பனியும், வாழ்வியல் முறைகளும் தான் வேறு. தவிர எல்லாமே ஒன்றுதான். மனோரீதியான முறைகளும் தான் வேறு. தவிர எல்லாமே ஒன்றுதான். மனோரீதியான வாழ்க்கை, பூமியின் கடைசி விளிம்பு வரை ஒன்றேதான் என்பதை வெளிச்சமிடுகிறது. “மனங்கவர்ந்த நாடோடி” மொழிபெயர்ப்புத் தொகுப்பு. ஜெ. ராதாகிருஷ்ணன் அவர்களின் மொழிபெயர்ப்பு மூன்று முக்கிய விஷயங்களை நமக்குச் சொல்கிறது.

தேசம் வேறு பாசம் ஒன்றுதான்
மண் வேறு மனசு ஒன்றுதான்
உணவு வேறு உணர்வு ஒன்றுதான்.

இதுதான் இவருக்கு முதல் முயற்சியா என்னும் ஆச்சர்யக் கேள்வி சுமக்க வைக்கிறது. இவர் ஏன் இதுவரைக்கும் எழுதவில்லை எனவும் உரிமைக்கோபம் கொள்ள வைக்கிறது. இதில் உலவும் அத்தனை மாந்தர்களும் நம்முடைய வீட்டருகில், நம்முடைய ஊரில் நாம் பார்ப்பவர்கள்தான். தனிமையுடன் ஒவ்வொரு வினாடியையும் நகர்த்தப் பிரயத்தனப்படும் கட்ரீனாபோல் பெண் நமக்குப் பரிச்சயமானவள்தான்.

“மனங்கவர்ந்த நாடோடி”யில் நிரம்பியிருக்கும் குதிரை சூட்சுமங்கள் ரஷ்யக் குதிரைக்கு மட்டுமா பொருந்தும்? இந்தியக் குதிரைக்கும் பொருத்தமானவைதானே?

“இடது கைமாஸ்டர்” ரஷ்யமன்னன் ஜார் அலெக்சாண்டர் பாவ்லோ, மைக்ராஸ் கோப்பில் பரிசோதிக்கப்படும் பூச்சியில் கூட இந்திய வாசனை உணர்கிறோம். அரச வாழ்க்கை உலகம் முழுமையிலும் ஒரே குடையின் கீழ் வருவதுதானே?

ஒப்பனைக் கலைஞன் ஆர்க்கடி சோக முடிவும், ஒப்பனைக் கலை பற்றிய தொழில் ரகசியம், திரை, நாடக உலகின் ரகசியங்களைப் பகிரங்கப்படுத்துகிறது.

“மிடறு மிடறாகக் குடிப்பதையே நினைவஞ்சலியாகச் செய்யும் லியுபோவ் ஒனிசி மோவ்னாவும் பெயரளவில்தான் வேறு. அவள் மனசும் நம் மனசுக்குள்தான் இருக்கிறது. “அந்தக் கடையின் ஜன்னலைத் தட்டுவேன். பெண்களாகிய நாங்களே போய் அதை வாங்கக் கூடாது என்று ஒரு வழக்கம்”.

மதுக்கடைக்குச் சென்று தாமே வாங்கிக்கொள்வது பெண்களுக்கு அனுமதிக்கப்படாதது என்று அறியும்போது இந்திய மண்ணும் ரஷ்ய மண்ணும் ஒன்றென உணர்கிறோம். நான்கு குறுநாவல்களும் ஒற்றை விஷயத்தைத் தெளிவாக்குகின்றன. சிறிய தவறுகளே பெரிய சரிவுகளுக்குக் காரணமாகின்றன. உணர்ச்சிக் கொந்தளிப்பில் மனசுத் தடுமாற்றமும் அதனால், தடம் மாற்றமும் ஏமாற்றமுமாக வாழ்க்கை நடக்கிறது.
நெடிய இலக்கிய அனுபவமுள்ள எழுத்துத்திறம் ஜெ. ராதாகிருஷ்ணனுடையது. அரசாங்கக் குறிப்புகள் எழுதும் எழுதுகோல் இத்தனை அடர்த்தியான இலக்கியமும் படைத்திருப்பது பெருமை.

எங்குமே நெருடல் இல்லாத, அவஸ்தைகள் இல்லாத சரளமான நடை - வாசிப்பு அனுபவத்துக்குத் துணை புரிகிறது. மொழி பெயர்ப்புகள் வலிந்து அணிந்து கொள்ளும் நாடகபாணி விலகல் நடை இல்லாமல் மனசுக்கு நெருக்கமான இயல்பான இதமான மொழிபெயர்ப்பு. ஜெ. ராதாகிருஷ்ணன் அவர்களின் மொழி ஆளுமைக்குச் சான்று.

உணர்வுகளையும், மனோதர்மங்களையும் அப்பட்டமாகத் தமிழில் கொண்டு வந்திருக்கிறார். உணர்வோட்டங்களை இத்தனை நுணுக்கமாகத் தருவதில் - படைப்பாளியைப் போலவே வென்றிருக்கிறார், நின்றிருக்கிறார் மொழி பெயர்ப்பாளர். குழந்தைக்காக ஏங்கும் கட்ரீனாலின் தாய்மைத் தாபமும், தன்மைத் தலிப்பும் “எனக்கு என்ன ஆச்சு? இந்தக் கொட்டாவி, கொட்டாவி, கொட்டாவி, சனியன் கொட்டாவி” என்பதான வாழ்க்கைத் தவிப்பும் ஜெ. ராதாகிருஷ்ணன் என்னும் படைப்பாளியை இனம் காட்டுகின்றன.

“துயரம் தூங்குவதே இல்லை” என்பது மிகச் சரியான உணர்வுப் பெயர்ப்பு. ஒவ்வொரு மனிதப்பிறவியும் நகரும் துயர மூட்டைதான் என்பதைக் கவித்துவமாகச் சொல்கிறார் அவர். கண்ணீர்தான் உலகச் சொத்து என்பதை இதை விட எளிமையாக வலிமையாக எந்த இலக்கியமும் இதுவரை சொன்னதில்லை. "மனங்கவர்ந்த நாடோடி” - மூலம் ரஷ்யாவுக்குள் நம்மை அழைத்துச் செல்லும் ஜெ. ராதாகிருஷ்ணன் நம் மனங்கவர்ந்த எழுத்தாளராக அறிமுகமாகியிருக்கிறார். அறிமுகம் தொடர வேண்டும். நிலைக்க வேண்டும். இன்னும் பல பொக்கிஷங்களை நமக்கு மடிகிடத்த வேண்டும். மனம் நெகிழ்த்த வேண்டும்.

ஜெ. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இது இமாலயப்பணி அன்று இயல்பான பணிதான். நிச்சயம் குறித்து வைத்துக் கொள்வோம். மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கான உயரிய விருதுகளுக்கான தகுதிகள் உரியது இந்நூல். வாழ்த்துக்கள்.

மனங்கவர்ந்த நாடோடி
மூலத்தொகுப்பு : நிக்கோலாய் லெஸ்காவ்,
தமிழில் : ஜெ. ராதாகிருஷ்ணன், விலை : ரூ. 150/-,
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 98.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com