Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

உலகப் பெண்கள் தினம் 33 சதவீதம் ஓர் விவாதம்

பஞ்சாயத்து தேர்தலில் பெண்கள் போட்டியிட்டபோதும், வெற்றிபெற்ற போதும், ஆண்களுக்கு பெண்கள் பினாமியாக செயல்படுவார்கள். சுயமாக செயல்பட மாட்டார்கள் என்றே பொதுவாக பேசப்பட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிஜமாக இருந்தாலும் கூடுமான வரை பெண்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் முப்பத்திமூன்று சதவிகித இட ஒதுக்கீடு விஷயத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் பேசுவதே இல்லை. இது அந்த கட்சிகளின் தலைவர் தன்மையை காட்டுவதாகவே இருக்கிறது. இதைப் பற்றி பேசுவதற்குக்கூட தயங்குவது வருந்தத்தக்க விஷயமாகவே இருக்கிறது.

- அ. மங்கை
நாடகம், பெண்ணிய ஆய்வாளர்


இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் பெண்கள் இட ஒதுக்கீடு விஷயத்தில் இரண்டு கொள்கைகளை வைத்துக்கொண்டு செயல்படுகின்றன. அதனால்தான் பெண்களுக்கு 33% என்றால், பத்திரிகைகளுக்கு ஆகா ஓகோ என பேட்டிக் கொடுப்பவர்கள் மசோதா கொண்டுவரும்போது ஒருமித்த கருத்து என்று சொல்லி ஒதுங்கிவிடுவார்கள். இந்தியா பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் நாடு. இஸ்லாமிய நாடுகளில்தான் பெண்கள் பர்தா போட்டு வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுகிறார்கள் என்று வாய்கிழிய இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் வல்லரசு கனவு காணும் இந்தியர்களுக்கு அண்டை நாடான பாகிஸ்தான், பங்காளதேஷ் ஆகிய நாடாளுமன்றத்தில் இந்தியாவை விட அதிகளவில் பெண்கள் பிரதிநிதித்துவம் இருப்பது உறைக்கவே உறைக்காது.

சாதி ஒழிந்து, ஆணாதிக்கம் ஒழிந்து, சமத்துவமான ஒரு சமுதாய மாற்றம் ஏற்பட்டால் ஒழிய இந்த தவறுகளை திருத்த இயலாது. பெண்கள் இடஒதுக்கீட்டை பொறுத்தவரை, பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காக பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்கு செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறு அல்ல. எங்காவது நரியால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை கிடைக்குமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு சமத்துவம் கிடைக்குமா? என்ற பெரியாரின் வார்த்தைகளே நமக்கு கேள்விக்குறியாய் நிற்கிறது?

- அமுதா
பத்திரிகையாளர்


பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதைப் பற்றிய தொலைநோக்கான விவாதங்களை நாம் செய்யவில்லை என்றே சொல்லலாம். இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு பற்றிய விவாதங்களை பொதுவாக பெண்களிடம் எடுத்து சென்று விவாத பொருளாக்கி இருக்கலாம். 33% ஒதுக்கீடு மிகவும் மகிழ்ச்சி தருகிற விஷயமாக இருந்தது. அதனால்தான் பஞ்சாயத்து தேர்தல்களில் உற்சாகமாக பங்களிக்க முடிந்தது. பெண்களும் உற்சாகமாக பங்கு பெற்றனர். ஆனால் அரசியல் சூழ்நிலையும், தேர்தல் சூழ்நிலையும் அந்த நம்பிக்கையை நமக்கு தரவில்லை. சமீபத்தில் நடந்த தேர்தல் வன்முறை சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலிலும் நடக்க வாய்ப்புள்ளது. 33% ஒதுக்கீடு, கோரிக்கை பற்றி பரந்துபட்ட விவாதமும்
வேண்டும் என்றே தோன்றுகிறது.

- வ. கீதா
ஆய்வாளர்


பொதுவாகவே அரசியல் கட்சிகள் கடந்த இருபது வருஷமாகவே பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு தாமதப்படுத்துகின்றன. ஆண்களால் உருவாக்கப்பட்ட, ஆக்கிரமிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவே விரும்புகிறார்கள். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு மிகவும் அவசியமான ஒன்று. உள் ஒதுக்கீடு மூலம் விளிம்பு நிலை மக்களை புறக்கணிக்கிற அபாயத்தைத் தவிர்க்கலாம். இந்த உள் ஒதுக்கீட்டை இடதுசாரிகள் பேசாமல் இருப்பது துரதிருஷ்டமானது. கல்வி, வேலைவாய்ப்பு களில் உள் ஒதுக்கீடு இல்லாதது உயர் கல்வியில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவாகியிருக்கிறது.

உலகப்பெண்கள் தினம் மூலம் பெண்களுக்கான விழிப்புணர்வை இன்றைக்கு எல்லா மட்டங்களிலும் சென்றடைந்து இருக்கிறது. பெண்களுடைய உரிமைகளை போராடிப் பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தங்களும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதை இன்னும் வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. சட்ட சபையிலும், நாடாளுமன்றத்திலும் இடஒதுக்கீட்டுக்கு ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் சட்டமாக நிறைவேற்றவேண்டும். இட ஒதுக்கீடு கிடைத்தால் வாக்களிப்போம், இல்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்று ஒட்டுமொத்த பெண்களும் முடிவு எடுக்க வேண்டும்.

- மாலதி மைத்ரி
கவிஞர்


1920, 1930, 1931 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து நடந்த ஈரோடு சுயமரியாதை மாநாடுகளில் பெண்களுக்கு இராணுவம், காவல்துறை உட்பட அனைத்துப் பொறுப்புகளிலும் 50ரூ இடஒதுக்கீடு தரப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருவேளை அந்த முறுக்கோடு தொடர்ந்திருந்தால் குறைந்தபட்சம் 25 சதவிகிதமாவது கிடைத்திருக்கும். ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு மேலாக பெரிய எதிர்ப்புகள் இல்லாமல் தோற்கடிக்கப்பட்டு வருகிறது. வேதகாலத்தில் பெண்கள் எவ்வாறு மோசமாக நடத்தப்பட்டு வந்தார்களோ அதுமாதிரி இப்போது பெண்சிசுகள் கருவில் கலைக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் நிகழ்ந்து வருகிறது. இந்த நிகழ்வால் 1000 ஆண்களுக்கு 910 பெண்கள் என்ற நிலைக்கே வந்திருக்கிறது. இந்த நிலையோடு 33% இடஒதுக்கீட்டையும் பார்க்க வேண்டியுள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற போராடுவதற்கு முன் அரசியல் கட்சியைச் சேர்ந்த மகளிர் அமைப்புகள், தங்கள் அமைப்புகளிடம் 50ரூ பெண்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும் என்று போராட முயற்சிக்கலாம். முதலில் தங்கள் கட்சிக்குள் நடைமுறைப்படுத்திவிட்டால், சட்டமாக்க இலகுவாக இருக்கும் என்று அரசியல் கட்சி சார்ந்த மகளிர் அமைப்புகளுக்கு இந்த யோசனையை முன் வைக்கிறேன்.

அ. அருள்மொழி
வழக்கறிஞர்


பெண்களுடைய இயக்கத்தின் வரலாற்றில் அவர்களுடைய உரிமைகளை ஒவ்வொன்றாக போராட்டத்தின் ஊடாக வெல்வதும், அது சட்ட வடிவம் பெற்று பாலின பாகுபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைவதை 21 ஆம் நூற்றாண்டில் அதிகமாக காண்கிறோம். வாழ்வுரிமையை பறிக்கும் சதி முதல், வாழ்க்கை என்பதை விலங்கு போன்று சமூகத்தின் பயன்பாட்டுக்குரிய பொருள் போன்றதன்று என்பதை உணர்த்திய தேவதாசி முறை ஒழிப்பு, மதம் சார்ந்த பெண்ணடிமைத் தனங்களை ஒழித்து பெண் கல்வி, குழந்தை திருமண ஒழிப்பு, விதவை திருமணங்கள், வேலைக்கு போய் பணம் ஈட்டும் சுதந்திரம் ஆகியவை 50 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தது என்பதையும் இன்றைக்கு இவையனைத்தும் சட்டப்படி குற்றமாக கருதப்படும் விஷயங்களை பார்க்கும் அதே பின் புலத்தோடு பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பதற்கான போராட்டங்களை பார்க்க வேண்டும். பாலின சமத்துவம் ஏற்பட வேண்டுமென்றால், இச்சமுதாயத்தின் அரசதிகாரத்தில் பெண்கள் பங்கு பெற வேண்டியது அத்தியாவசியமானது. அதிலும் “உள் ஒதுக்கீடு” என்று கூறுவதன் மூலம் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை சட்டமாக்குவதை தவிர்ப்பது, ஒட்டு மொத்த பெண்கள் சமூகத்திற்கும் எதிரான விஷயமாகும்.

ஒவ்வொரு தனிக்கட்சியும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை ஏற்கும்போது, சட்டமாகாமல் இருப்பது இந்த கட்சிகள் அல்லது அதில் இருக்கும் ஆணாதிக்கக் கருத்தாக்கம் இந்த பெரும் மாற்றத்திற்கு தயாராக இல்லை என்ற நிதர்சனம்தான் வெளிப்படுகிறது. “அரசியல் ரீதியான தீர்மானம்” (ஞடிடவைiஉயட றடைட) இந்த அரசியலிலும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. எல்லா தரப்பிலிருந்தும் இந்த 33% இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் வலுவடைந்து இந்திய அரசியலில் நெருக்கடியை ஏற்படுத்தினால் இந்த பாகுபாடும் மாறி சட்டவடிவம் பெற சில நாட்களே முன்னுள்ளன.

அஜிதா
வழக்கறிஞர்.


தொன்னூற்றி இரண்டு சதவிகிதம் ஆண்கள் நிறைந்த நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை கொடுக்க முடியவில்லை. சில கட்சிகள் இதைப்பற்றி பேசினாலும் பெரிதாக பலன் கிடைத்தாக சொல்லமுடியாது. பதினைந்து வருஷத்துக்கு மேலாக போராடினாலும் ஏன் சட்டமாகவில்லை என்பது புதிரான விஷயமாகவே இருக்கிறது. சட்டங்களும், திட்டங்களும் தீட்டுகிற இடத்தில் பெண்கள் இல்லை. பெண்களுடைய பிரச்சினைகள், அவற்றுக்கான முடிவுகள் சொல்லுகிற இடத்தில் பெண்கள் இல்லை. மேலும் இட ஒதுக்கீட்டைப் பற்றி பரவலாக பேசப்படவோ கொண்டு போகப்படவோ இல்லை. இது ஒரு மேல்தட்டு மனோபாவம் என்கிற பிம்பமும் இருக்கிறது. அடித்தட்டு மக்களிடம் இந்தக் கோரிக்கையை கொண்டு சேர்த்து விவாதித்துப் போராடவேண்டியிருக்கிறது

கனிமொழி
கவிஞர்.


இன்றைய நாடாளுமன்றத்தில் 71/2 சதவீதம் பெண்களும் 921/2 சதவீத ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால் பெண் வாக்காளர்களின் பிரதிபலிப்பாக இவர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். பெண்களுடைய பிரச்சினைகளை இந்த ஆண்கள் மூலமாகதான் சொல்லவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு நடக்கும் சமூகக் கொடுமைகளைப் பற்றி சமூகப் புரிதல்கள் இல்லை. அடிப்படை கல்வியே இங்கு சரியாக இல்லாததால் அதை வைத்துக்கொண்டுதான் எல்லா விஷயங்களுக்கும் போராட வேண்டியிருக்கிறது. அரசியல் கட்சிகளால் நிர்ணயிக்கப்படும் சட்டமன்றமும், பாராளுமன்றமும் பெண்களை தேர்வு செய்யவேண்டும். எந்த அரசியல் கட்சிகளாக இருந்தாலும் அதில் உள்ள பெண் உறுப்பினர்கள் இந்த 33 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரிக்கவே செய்கிறார்கள். மாற்று அரசியல் முகாமைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்கள் எதிர்க்கவே செய்கிறார்கள். தேர்தல் என்பது மக்களுக்காக இல்லாமல் பணத்துக்காக மட்டுமே நடைபெறுவதால் இந்த அபாயமும் ஏற்பட்டு உள்ளது. கீதா முகர்ஜி 9 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற விருதை பெற்றவர். இவர் சிறந்த பெண் நாடாளுமன்ற வாதியாக செயல்பட்டவர். இவர்தான் 33 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவருவதற்கு இரத்தத்தால் கையொப்பமிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தவர்.

குறைந்த பட்ச செயல்திட்டத்தில் 33 சதவீத இடஒதுக்கீட்டு கோரிக்கையை இடது சாரிகள் கொடுத்தபொழுது சேர்த்துக்கொண்டனர். பஞ்சாயத்து தேர்தலில் பெண்கள் சுயமாக செயல்பட முடியாது என்ற சில செய்தி இருந்தாலும் நாடாளுமன்ற சட்டப் பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படும்பொழுது இணை உறுப்பினர்களாக ஆண்கள் செயல்பட முடியாது. அவர்களே தான் செயல்பட வேண்டும். இடது சாரிகள் இந்த கோரிக்கையை ஆணித்தரமாக ஆதரிக்கவே செய்கிறார்கள். இந்த இடஒதுக்கீடு சட்ட ரீதியாக கிடைத்தால் பெண்கள் சட்ட ரீதியாக அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். இதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டும், ஒப்புக்கொள்ளவேண்டும்.


பி. பத்மாவதி
சட்டமன்ற உறுப்பினர், இந்திய தேசிய மாதர் சம்மேளனம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com