Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

கட்டுரை

நாவா ஒரு பல்கலைக்கழகம்
மே.து.ரா.

பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் மறைந்து கால் நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது. இருந்தாலும், அவர் ஏற்படுத்திய
தாக்கம் இன்றும் நீடித்துக்கொண்டிருக்கிறது. அவர் ஏற்றிவைத்த விளக்கு தொடர்ந்து அறிவொளி பரப்பிக் கொண்டிருக்கிறது. அவர் கற்றுக்கொடுத்த வழியில் அவர்தம் மாணவர் படை கடமைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. மேன்மை மிக்க அவரது படைக்கலனாக விளங்கிய காலாண்டு ஆய்விதழ் ஆராய்ச்சி, தற்போது நாவாவின் ஆராய்ச்சி என்ற பெயரில் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மாணவப் பருவத்திலேயே மார்க்சிய ஈடுபாடு கொண் டிருந்த நாவா, உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியில் இருந்தார். பின்னர் பணியை விட்டு விலகி, நெல்லை மாவட்டத்தில் பொதுவுடைமை இயக்கக் கடமைகளை மேற்கொள்ளத் தொடங்கினார். பள்ளியிறுதி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வாய்ப்பினை இழந்த மாணவர்களைப் பயிற்றுவிக்க அன்றைய நாளில் தனிப் பயிற்சிக் கல்லூரிகள் பல செயல்பட்டுக்கொண்டிருந்தன. இதனையொட்டி, தனிப் பயிற்சிக் கல்லூரி ஒன்றினைப் பாளையங்கோட்டையில் 1947இல் தொடங்கினார். பின்னர் இது, வானமாமலை தனிப் பயிற்சிக் கல்லூரி என்ற பெயரினைப் பெற்றது. நல்லாசிரியராகத் தரமிக்க கல்வியினைத் தரும் பணிகளுக்கிடையில், இயக்கப் பணிகளும் தொடர்ந்தன.

1947இல் நாங்குநேரியில் தோழர் கே. பாலதண்டாயுதம் தலைமையில் நடைபெற்ற விவசாயப் போராட்டத்தில் நாவா பங்குகொண்டார்.
விடுதலைக்குப் பின்னர் 1950களில், ஆளும் கட்சிக்கு அடுத்த நிலையில் இருந்த பொதுவுடைமை இயக்கத்தின் மேல் அடக்குமுறைகள் ஏவப்பட்டன. தமிழ்நாட்டில் சென்னை சதி வழக்கு, கோவை சதி வழக்கு, திருச்சி சதி வழக்கு, நெல்லை சதி வழக்கு என்று பல வழக்குகள் போடப்பட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் காவலில் வைக்கப்பட்டனர். நெல்லை சதி வழக்கில் தோழர்கள் கே. பாலதண்டாயுதம், ப. மாணிக்கம்,
ஆர். நல்லகண்ணு, மீனாட்சிநாதன், ஏ. நல்லசிவன் போன்ற முன்னணித் தோழர்கள் மேல் வழக்குகள் போடப்பட்டன. இதில், நாவா அவர்களும் காவலில் வைக்கப்பட்டு, போதுமான சாட்சியம் இல்லாததால் ஒரு திங்களுக்குப் பின்னர் விடுவிக்கப் பட்டார். கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டிருந்த போது, தலைமறைவுத் தோழர்களுடன் தொடர்புகொண்டு இயக்கப் பணிகளை நிறைவேற்றுவதில் முனைப்புடன் விளங்கினார். தொழிற் சங்கத் தலைவராக இருந்து வழிகாட்டினார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மேலான தடை நீக்கப்பட்ட பின்னர், தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டதுடன், கட்சியின் மார்க்சியக் கல்விக்கான வகுப்புகளை எடுப்பதில் தனி ஈடுபாடு செலுத்தினார். அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் ப. மாணிக்கம் அவர்களின் முழுமையான ஒத்துழைப்பும் ஊக்கமும் பேரா. நாவாவுக்குக் கிடைத்தன. இவர்கள் இருவரது அறிவுசார் உறவுகள் - தொடர்புகள் பெரும் பயனைக் கொடுத்தன என்றே கூறலாம்.

அப்போதும், அறிவுத் துறையோடு மட்டுமே நாவா தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பணிகள் யாவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பாளையங்கோட்டை நகராட்சி மன்ற உறுப்பின ராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயலாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர், நெல்லை மாவட்டச் செயற்குழு உறுப்பினர், கட்சிக் கல்விக் குழு உறுப்பினர், தேசியக் கட்சிக் கல்வி ஆசிரியர், நியூ செஞ்சுரி நூல் நிறுவனப் பதிப்புக் குழு உறுப்பினர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் என்றெல்லாம் பல பொறுப்புகளை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். 1970இல் நில மீட்சிப் போராட்டத்தின்போதும் ஒரு திங்கள் அளவுக்குக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

நாவா அவர்களது பங்களிப்பினைப் பொதுவுடைமை இயக்கப் பணிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. இளம் பருவத்தினருக்கான நூல்கள், எளியோரும் புரிந்துகொள்ளத்தக்க அறிவியல் கட்டுரைகள், அறிவியல் நூல்களின் மொழிபெயர்ப்பு எனப் பல பணிகளைத் தொடக் கத்தில் மேற்கொண்டிருந்த நாவா அவர்கள், சக்தி, சாந்தி, சரஸ்வதி, தாமரை, ஜனசக்தி போன்ற இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை அவ்வப்போது எழுதிவந்தார்.

1959களின் இறுதியில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் சிறப்பாக மனத்தைச் செலுத்தத் தொடங்கினார். கூட்டு முயற்சிகளிலும் உழைப்பிலும் நம்பிக்கை கொண்டிருந்த நாவா அவர்கள், நாட்டார் பாடல்களைத் திரட்ட ஆர்வம் கொண்டிருந்த சிவகிரி கார்க்கி, வாழப்பாடி சந்திரன், கவிஞர் சடையப்பன், எஸ்.எஸ். போத்தையா, வாய்மைநாதன், பாரதிப்பித்தன், கு. சின்னப்ப பாரதி, ஆர். நல்லகண்ணு, டி. மங்கை போன்ற பலருடைய துணையையும் பயன்படுத்திக் கொண்டார். அவர்கள் அனைவருடைய உழைப்பையும் பங்களிப்பையும் மறவாது பாடல் தொகுப்புகளில் குறிப்பிட்டார்.

இந்தப் பண்புதான், நாவா அவர்களின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு வழியமைத்துக் கொடுத்தது என்று கூறமுடியும். நாட்டார் பாடல்களையும் கதைகளையும் அவை தோன்றிய இடம், வாழ்வுப் பின்புலம் ஆகியவற்றைக் கொண்டு சமூக - பொருளிய - பண்பாட்டு நோக்கில் நாவா அவர்கள் மதிப்பிட்டார்.

இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, நாட்டார் வழக் காற்றியல் போன்ற வெவ்வேறுபட்ட துறைகளில் மார்க்சியப் பார்வையுடன் நாவா அவர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள், அன்றைய அறிவுலகம் அதுவரை புரிந்துகொண்டிராத பல போக்குகளை வெளிக்கொண்டுவந்தன.நாவா அவர்களது ஐம்பதாவது பிறந்த நாளையொட்டி 07-12-1967 அன்று உருவான நெல்லை ஆய்வுக் குழு, தொடர்ந்து கருத்தரங்கக் கூட்டங்களை நடத்தியது. இந்தக் கருத்தரங்கு களில் நாவா அவர்கள், தமது ஆய்வுக் கட்டுரைகளை வழங்கிய தோடு நின்றுவிடவில்லை. படிப்பதிலும் படித்ததை விவாதிப் பதிலும் ஈடுபாடு கொண்ட அனைவரையும் கட்டுரைகள் எழுதத் தூண்டினார். நெல்லை ஆய்வுக் குழுவோடு தொடர்பு கொண்டிருந்தவர்களில் ஆய்வுக் கட்டுரை எழுதுகின்ற நிலையில் இருந்தவர்கள் அப்போது ஓரிருவரே ஆவர். எனினும், பின்னர் பலர் எழுதத் தொடங்கினர்.
கருத்தரங்கில் கட்டுரை படித்தவர்களுக்கு அவர்களது ஆர்வத்துக்கும் திறனுக்கும் ஏற்பத் தலைப்பினைத் தேர்ந் தெடுத்துத் தருதல், ஆய்வுக்காகப் படிக்கவேண்டிய நூல்களைப் பரிந்துரைத்தல், எந்த வகையில் தரவுகளைத் திரட்டவேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தல், திரட்டும் தரவுகளை வகைப் படுத்துதல், வகைப்படுத்திய பின்னர் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை என்று நுட்பத்துடன் ஆய்வு நெறிகளைப் பயிற்றுவிக்கும் பொறுப்பினை ஒரு கடமையாகவே நாவா அவர்கள் மேற்கொண்டார். அதே போன்று, எழுதப்பட்ட கட்டுரைகளையும் திருத்தம் செய்து கொடுத்தார்.

கருத்தரங்கில் கட்டுரையினைப் படைக்கும்போது, விவாதத்தில் பல கருத்துக்கள் எழும். பெரும்பாலும் கட்டுரை யாளரே மறுமொழி தருதற்கு ஊக்கமளிப்பார். கட்டுரையாள ரால் உரிய விடையளிக்க முடியாதபோது, நாவா அவர்கள் தலையிட்டு விளக்கங்கள் தருவார். அப்போதும்கூட கட்டுரை யாளரின் முயற்சிகளை வரவேற்று, குறிப்பிட்ட பொருளில் எவ்வாறு மேலும் ஆய்வுகளை நிகழ்த்த முடியும் என்பதை விரிவாக எடுத்துரைப்பார். கட்டுரையாளரின் தன்னம்பிக்கை தளராதவாறு இது அமையும். அத்துடன், பார்வையாளரும் அறிவு விருந்து பெறுவர். பின்னர், பாளையங்கோட்டை மட்டுமல்லாது தூத்துக்குடி, அம்பாசமுத்திரம், குற்றாலம், களக்காடு, நாகர்கோவில் போன்ற இடங்களிலும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அடுத்து, 1969ஆம் ஆண்டு ஆராய்ச்சி காலாண்டிதழ் தொடங்கப் பெற்றது. அன்று பெயர் பெற்றிருந்த பல அறிஞர்கள் ஆராய்ச்சியில் எழுதினார்கள். இருந்தாலும், தன்னால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் - மார்க்சியக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தப் பயிற்சி பெற்றவர்கள் எழுதிய கட்டுரைகளை ஆராய்ச்சியில் வெளியிட முனைப்புக் காட்டினார் நாவா. கருத்தரங்கக் கூட்டங்களுக்கான கட்டுரைகளை உருவாக்க உதவியதைப் போன்றே ஆராய்ச்சிக்கான கட்டுரைகளை எழுதவும் வழிகாட்டினார்.

ஆர்வம், ஈடுபாடு, திறன், புலமை ஆகியவை மட்டுமே ஆய்வுக் கட்டுரைகள் எழுதப் போதுமானவை அல்ல. திரட்டிய தரவுகளைப் பயன்படுத்திக்கொள்ளத்தக்க பயிற்சி இன்றியமை யாததாகும். கிடைத்த தரவுகளைக் கொண்டு பட்டியல் போடுவதும், அட்டவணைப்படுத்துவதும், தொகுத்துத் தருவதும், விளக்கவுரை - பொழிப்புரை எழுதுவதும் மட்டுமே பெரும்பாலும் ஆய்வு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த சூழலில், மார்க்சியப் பார்வையுடன் அமைந்த சமூக - பொருளிய - பண்பாட்டு ஆய்வுகள் வெளிப்படவேண்டும் என்று நாவா விழைந்தார்.
ஆர்வம் இருப்போருக்கு வழிகாட்டுவது என்பது தொடர்ந்தாலும், கூட்டுப் பயிற்சி வேண்டுமென்ற நிலை இருந்தது. இதனை நிறைவு செய்யக் குமரிமாவட்டத் தோழர்களின் துணையுடன் தத்துவப் பயிற்சி முகாம்கள் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டன. இவற்றில், ஆய்வாளர்களுடன் எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வலர்களும் பயிற்சி பெற்றனர். தத்துவப் பயிற்சி முகாம்களில் வகுப்புகள் எடுக்கத்தான் உருவாக்கிய மாணாக்கர்களையே நாவா அவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார்.

நாவா அவர்களின் மாணாக்கர் அனைவரும் மார்க்சியம் என்ற அறிவுக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே வளர்க்கப்பட்டவர்கள்; வழிகாட்டப்பட்டவர்கள்; பயிற்றுவிக்கப் பட்டவர்கள்; பண்படுத்தப்பட்டவர்கள். எனவே, இத்தகையோரது அறிவும் பயிற்சியும் புலமையும் தத்துவப் பயிற்சி முகாம்களோடு நின்றுவிடவில்லை; மார்க்சியக் கல்விக்கும் பயன்கொள்ளப் பட்டன.

கருத்தரங்கமாக இருந்தாலும் ஆராய்ச்சிக் கட்டுரையாக இருந்தாலும், தான் விரும்பிய துறையை நாவா அவர்கள் யார் மீதும் திணிக்க முயற்சி செய்ததில்லை. அவரவர்களுடைய ஆர்வம், ஈடுபாடு, திறன், புலமை, பயிற்சி ஆகிய அனைத்தையும் கணக்கில் கொண்டுதான் அவர்களைப் பயிற்றுவித்தார். நாவா அவர்களின் முயற்சிகள் வெற்றி பெற்றதுடன், அவை நீடித்து இன்று வரை பயன் தருவதற்கும் இதுவே காரணியாகும்.
தற்கால இலக்கியத் திறனாய்வுக்குப் பேராசிரியர் எஸ். தோதாத்ரி, நாட்டார் வழக்காற்றியல் துறைக்குப் பேராசிரியர்
ஆ. சிவசுப்பிரமணியன், பண்டைய இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்ததால் அவை குறித்துப் பேராசிரியர்
கா. சுப்பிரமணியன் என அவரவர் விருப்பங்களுக்கேற்பவே ஆய்வுகளை மேற்கொண்டனர். நாவா அவர்களுடன் இருந்த தாக்கத்தினால் பேராசிரியர் ந. முத்துமோகன் தத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்தார். நாட்டார் வழக்காற்றியல் துறையைப் பேராசிரியர் நா. ராமச்சந்திரன் தேர்ந்தெடுத்ததற்கும் அவரிடமிருந்த ஈடுபாடே காரணியாகும்.

தோழர் பொன்னீலன் பெற்றிருந்த படைப்பாக்கத் திறனை நாவா அவர்கள் இனம் கண்டதாலேயே ஒரு சாகித்திய அகாதமி எழுத்தாளர் நமக்குக் கிடைத்தார். இவருக்குச் சமூகவியல் ஆய்வுகளிலும் இருந்த ஆர்வம் ஆராய்ச்சியில் எழுத வைத்தது. ஆசிரியப் பணியில் இல்லாமல், மின் வாரியத்தில் இருந்த வெ. கிருஷ்ணமூர்த்திக்குத் தத்துவ நாட்டம் இருந்ததை அறிந்து ஆராய்ச்சியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுத வழிகாட்டினார். கள ஆய்வுகளில் கருத்துச் செலுத்திய தோழர் செந்தீ. நடராசன் அதிலேயே ஆற்றுப்படுத்தப்பட்டார். இவர்களைப் போன்றே, தோழர்கள் எஸ்.எஸ். தியாகராசன், சி. சொக்கலிங்கம், கங்கா, எட்வின் சாமுவேல், புலவர் டி. மங்கை போன்றோரும் அவரவர்களது துறைகளிலேயே மேம்பாடு பெற்றனர்.

கல்வெட்டு மற்றும் சமூக வரலாற்று ஆய்வுகளில் ஆர்வம் கொண்டிருந்ததால், அவற்றிலேயே என்னை ஊக்குவித்தார். தரவுகளை மார்க்சியக் கண்ணோட்டத்தில் எவ்வாறெல்லாம் பொருள் கொள்ளவேண்டும் என்பதை அவ்வப்போது பயிற்றுவித்தார். நாவாவின் மாணவர்கள், மார்க்சியப் புரிதலை அடிப் படையாகக் கொண்டு, இன்று தங்களது புலமைத் தளங்களை மேலும் விரிவுபடுத்தி, பல்வேறு துறைகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். எடுத்துக்காட்டாக, பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் நாட்டார் வழக்காற்றியலுடன் சமயவியல், சமூகவியல், அடித்தள மக்கள் குறித்த ஆய்வுகள், விடுதலை இயக்க வரலாறு என்று தனது தளங்களை மேலும் விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறார். இது நாவாவின் மாணவர் அனைவருக்கும் பொருந்தும்.

நாவா அவர்களுடன் இணைந்து, எழுத்தாளர் ரகுநாதன் (தொமுசி), திறனாய்வாளர் திகசி, சிந்துபூந்துறை சண்முகம்பிள்ளை ஆகியோர் நெல்லை இலக்கியச் சங்கம் (1947) என்ற அமைப்பினைத் தொடங்கினர். அக்காலத்திலேயே நாவாவின் வழிகாட்டுதலைத் தாம் பெற்றதாக திகசி பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.

தொன்மை மிக்க இலக்கியங்களையும் மேன்மை மிக்க வரலாற்றினையும் கொண்டுள்ள தமிழியலின் பல்வேறு போக்குகள் குறித்தும் மார்க்சியக் கண்ணோட்டத்தில் மதிப்பிடுவது அப்போது காலத்தின் வேண்டுதலாக இருந்தது. தமிழியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த மார்க்சிய முன்னவர் களான பேரா. நாவா, கலாநிதி க. கைலாசபதி, கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி ஆகியோரே இந்தக் கடமைகளை நிறைவேற்றவேண்டியிருந்தது.

எழுத்தாளர் ரகுநாதன் சில முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும், அவர்களது காலத்தில் முன்னவர் மூவருக்கும் பெரும் பணிகள் காத்திருந்தன. தனியாக ஒருவரோ அல்லது சிலரோ மட்டும் யாவற்றையும் கற்று, தரவுகளை முழுமையாகத் திரட்டி மார்க்சிய மதிப்பீடு களை முன்வைப்பது என்பது இயலாது. இருப்பினும் பொது அணுகுமுறையினை உருவாக்கி, போக்குகளை இவர்கள் வரையறை செய்ய முயன்றார்கள்.
இத்தகைய பொது வரையறைகளைச் சிறப்புறச் செம்மைப்படுத்தவும் மேலும் மேம்படுத்தவும் உரியவாறு முறைமைப்படுத்தவும் வேண்டுமான திருத்தங்களை மேற் கொள்ளவும் வெவ்வேறு துறைகளில் படிப்பும் புலமையும் பயிற்சியும் பெற்ற பலர் தேவைப்பட்டனர். அவர்கள் தாம் சார்ந்த துறைகளில் பெற்றிருந்த அறிவுடன், மார்க்சியப் புரிதலும் தெளிவும் கொண்டவர்களாக அமைந்திருக்க வேண்டியிருந்தது. இத்தகையோரை உருவாக்குவதும் பயிற்று விப்பதும் அப்போதைய வேண்டலாக இருந்ததை மிக நன்றாக நாவா அவர்கள் உணர்ந்திருந்தார். இந்தப் பணியினை - கடமையினை மிகப் பொறுப்புடனும் ஈடுபாட்டுடனும் நாவா அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்.

இதனால்தான், நாவா அவர்களின் வழிகாட்டுதலில், தமிழியலின் வெவ்வேறு துறைகளில் புலமையும் பயிற்சியும் பெற்ற பல்வேறு ஆய்வாளர்கள் வெளிப்பட்டார்கள்.

குறிப்பிட்ட துறைகளில் புலமை பெற்றவர்களைக்கூட, எந்தப் பொருளில் ஆய்வுகள் வெளிவராமல் இருண்ட பகுதிகளாக இருக்கின்றனவோ, அவை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார். இத்தகைய ஆய்வுகளின் இன்றியமையாமையை எடுத்துச் சொல்லி ஊக்கப்படுத்தினார். இத்தகைய திட்டமிடப்பட்ட செயல்பாடுகளைப் பல்கலைக் கழகங்களேகூட இன்னும் முறைமைப்படுத்திக்கொள்ளவில்லை.

பெரும் வாய்ப்புகளும் கட்டமைப்புகளும் கொண்ட பல்கலைக்கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் நிறைவேற்ற வேண்டிய பணிகளை நாவா அவர்கள் செய்து முடித்திருக்கிறார் என்று துணிந்து கூறமுடியும்.

நாவா அவர்களின் பயிற்று முறை ஆசிரியர் - மாணாக்கர் உறவுமுறைகளுக்கும் அப்பாற்பட்டது. புதிதாக அறிமுகமான வர்களாக இருந்தாலும், நீண்ட நாள் பழகிய உணர்வுகளைப் பெறச் செய்துவிடுவார். உரையாடிக்கொண்டிருக்கும் போதே, ஒருவரது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் அவருக்கு அறிவுத் தீனி போடுவார். ஆய்வுப் பணிக்கான வழிகாட்டுதல் பெற வந்திருந்தால், அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் எதிர்பார்த்ததை விட மிகுதியாகவே செய்து கொடுப்பார். அவரது ஆய்வு முயற்சிகளின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேற்றத்தினைக் கேட்டு அறிந்து, வழிகாட்டுவார். வெளியூரைச் சேர்ந்தவராக இருந்தால், தொடர்ந்து மடல்கள் எழுதிச் செப்பமிட்டுக் கொண்டேயிருப்பார். அத்துடன், பாளையங்கோட்டையில் அவருடைய இல்லத்தின் விருந்தோம்பலையும் நுகரலாம்.

ஒரு தந்தையின் பாசப் பிணைப்பையும் தாயின் அன்பு நெகிழ்ச்சியையும் தோழமையின் கடமை உணர்ச்சியையும் நாவா அவர்களிடம் காணமுடியும்.
நாவா அவர்களின் தலை மாணாக்கர் - ஆய்வுக் குழுவினர் - ஆராய்ச்சி ஆசிரியர் குழுவினர் பெரும்பாலும் நெல்லை அல்லது அண்டைப் பகுதிகளிலேயே இருந்தனர். நான் மட்டுமே மிகத் தொலைவில் சென்னையில் இருந்தேன். எனது பிஎச்டி பட்ட ஆய்வினை முடிப்பதில் மிகுந்த காலத்தை எடுத்துக்கொண்டிருந்தேன். எனது ஆய்வினை விரைந்து முடிக்க வலியுறுத்தி, நாவா அவர்களிடமிருந்து தொடர்ந்து மடல்கள் வந்துகொண்டேயிருந்தன. எனக்கு எழுதுகின்ற மடல்களை ‘எனதருமை மகன் ராசுகுமார்’ என்றுதான் தொடங்கியிருப்பார்.

தான் உருவாக்கிய மாணாக்கரிடம் அளவு கடந்த நம்பிக்கை நாவா அவர்களுக்கு இருந்தது. இதனால், மகிழ்ச்சியும் மனநிறைவும் கொண்டிருந்ததுடன், பெருமையுடன் அவர்களைப் பற்றித் தலைவர்களிடமும் தோழர்களிடமும் பிற அறிஞர் களிடமும் பகிர்ந்துகொள்ளும் பண்பும் கொண்டிருந்தார்.

தோழர் வெகி ஆராய்ச்சியில் எழுதிய ஒரு தத்துவக் கட்டுரை தொடர்பான மாற்றுக் கருத்து வந்தவுடன் அதைப் பெருந்தன்மையுடன் வெளியிட்டார். எத்தகைய மாற்றுக் கருத்துகளுக்கும் விடை தர ஆராய்ச்சி ஆசிரியர் குழுவைச் சார்ந்தோர் தகுதி பெற்றிருக்கிறார்கள் என்று தனது மாணாக்கர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நாவா அவர்கள் துணிவுடன் எழுதினார். மார்க்சிய அறவியலின் மேலிருந்த நம்பிக்கையும், அதில் தனது மாணாக்கர் பெற்றிருந்த பயிற்சியில் கொண்டிருந்த உறுதியும் அவர்கள் தத்தம் துறைகளில் அடைந்திருந்த புலமையும் நாவா அவர்களை இவ்வாறு எழுதவைத்தன.

நாவாவின் ஆராய்ச்சி காலாண்டிதழின் சனவரி 2007 இதழ் தலையங்கத்தில் பொருத்தமாகக் கூறப்பட்டிருப்பது இங்கு நோக்கத்தக்கது: “பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள் - அமைப்புகள், பயிலரங்குகள் என்று தமிழ்நாட்டின் எந்தப் பக்கத்தில் என்ன ஆய்வு நிகழ்ச்சி நடந்தாலும், நாவா அவர்களின் மாணவர்களில் ஒருவராவது அதில் பங்கெடுத்துக்கொண்டிருப்பார். இந்த நிலை மார்க்சிய ஆய்வு நெறிமுறைகளுக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.” இதுவே நாவா அவர்களின் வெற்றியாகும்.

நாவா அவர்களால் பல ஆய்வாளர்கள் உருவானார்கள்; பல எழுத்தாளர்கள் ஊக்கம் பெற்றார்கள்; நல்ல நூல்களைத் தேடிப் படிக்கும் மிகப் பெரிய பகுதியினரே தோன்றினார்கள். ஆய்வாளர்களில் வேறு எவரும் தமது வழிமுறையினர் என்ற அளவில் அடுத்த தலைமுறையினரை உருவாக்கவில்லை. பணி காரணியாகச் சிலர், மாணவர் பலருக்குப் பாடம் கற்றுக் கொடுத்திருக்கலாம். ஆனால், நாவா அவர்களைப் போல, இளைய தலைமுறையினரைத் தமக்கு அடுத்த தலைமுறையினர் என்று அடையாளம் காட்டத் தக்கவாறு பயிற்றுவிக்கவில்லை.

நாவா அவர்களின் பல துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் தமிழியலுக்கு மாபெரும் பங்களிப்பினைச் செலுத்தியிருக்கின்றன. இதைப் போன்றே, ஆய்விதழ்களில் தனிச் சிறப்பிடம் பெற்றிருந்த ஆராய்ச்சியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பங்களிப்புகளுக்கு இணையாகப் போற்றத் தக்கவர் பேரா. நாவா அவர்களால் உருவாக்கப் பெற்ற ஆய்வு மாணாக்கர் எனும் அறிவுப் பாசறையினர்.

இந்த ஆய்வு மாணாக்கர்கள் நாவா அவர்களின் பணிகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். நாவா அவர்களைப் போன்றே, இந்த மாணாக்கர்களும் அவர்களுக்கு அடுத்து இப்பணிகளைத் தொடரக்கூடிய பலரை உருவாக்கி வருகிறார்கள். இந்தத் தொடர் உருவாக்கம், மார்க்சிய ஆய்வு முறைகளின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தொடர்ந்துகொண்டிருக்கும். பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் மட்டுமல்ல; அவை பயிற்றுவிக்கும் பாசறை களாகவும் அமையவேண்டும். அடுத்த தலைமுறையினரைப் பண்படுத்தும் பெரும் கடன் அவற்றுக்கு உண்டு.

இந்த அளவுகோல் கொண்டு நோக்கும்போது, பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் ஒரு பல்கலைக்கழக மாகவே விளங்கினார் என்பது புலனாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com