பேராசிரியர் நா. வானமாமலை
ஆர். பார்த்தசாரதி.
பேராசிரியர் நா. வானமாமலை மறைந்து இருபத்து ஏழு ஆண்டுகள் கழிந்து போயின. வைதிகக் குடும்பத்தில் பிறந்து வாழ்க்கை அனுபவத்தில் மார்க்சிய சித்தாந்தத்தை ஏற்று பொதுவுடைமை இயக்கத்தில் வாழ்நாள் முழுவதும் அதனை வளர்த்துப் பல நிலைகளில் பரவச் செய்ய அரும்பணி ஆற்றியவர் நா.வா. பின்னோக்குக் கருத்தோட்டங்களில் மயங்கிக் கிடந்த தமிழ்ச் சிந்தனையாளர்களைப் புதியதொரு ஆய்வுக்களத்தை உருவாக்கி அதில் அவர்களை நடத்திச்சென்றவர் நா.வா.
மக்களின் பெருமித வாழ்வுக்கும் பேரிலக்கியங்கள் எழுவதற்கும் அடிப்படையாக அமைவன நாட்டுப்புறப் பாடல்கள் - கதைகள் என்னும் உண்மையை ஓர்ந்து பட்டிதொட்டிகளிலெல்லாம் சென்று பாமரர்களால் பாடப்பெற்று வந்த நாட்டுப்புறப் பாடல்களை அரிதின் முயன்று தேடித் தொடுத்துத் தந்தவர் நா.வா.
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நாட்டுப்புறவியல் சிறந்த, உயர்ந்த நிலைபெறுவதற்கு அடிக்கல் நாட்டியவர் நா.வா.
தமிழ் ஆராய்ச்சி காய்தல், உவத்தல் இன்றி நம்பத்தகுந்த சான்றாதாரங்களின் அடிப்படையில் வரையப்பட வேண்டும் என்பதனைக் கோடிட்டுக் காட்டியவர் நா.வா.
மார்க்சிய ஆய்வு நெறிமுறையியலை, ஆய்வாளர்களும் அறிஞர்களும் பல்கலைக்கழக மட்டங்களில் ஏற்றது இவரது அரும்பணியினாலேயே.
தனியாக நின்று அவர் தொடங்கி நடத்திவந்த “ஆராய்ச்சி” இதழ் புதிய ஆய்வறிஞர் படையைத் தமிழகத்தில் தோற்றுவித்தது.
இவருடைய பணியைப் பாராட்டி யாழ் பல்கலைக்கழகம் இவருக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தது.
தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இவர் ஒரு “வான-மா-மலை”. இவர் பற்றிய கட்டுரைகள் சில இவ்விதழை அணி செய்கின்றன.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|