Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

அஞ்சலி

வல்லிக்கண்ணன் - ஆன்றவிந்து அடங்கிய பெருமகன்
வீ.அரசு

“நான் மேதை. நான் குயில் மாதிரி. குயில் இஷ்டப் பட்டால் பாடும். மேகம் இஷ்டப்பட்டால் வாஷிக்கும். நானும்
அப்படித்தான். எனக்கு மனமிருந்தால் எழுதுவேன். இல்லை யெனில் சும்மா இருப்பேன்.” என்று சிலர் சொல்வது உண்டு. அத்தகைய மேதா விலாசத்தோடு நான் எழுதவில்லை.

“கவிதையே கவிதையை எழுதிக்கொள்கிறது. கவிதையின் கைக்குருவி நான். இலக்கியமே இலக்கியத்தை சிருஷ்டித்துக் கொள்கிறது. அதற்கான சாதனம் நான்” என்று சிலர் சொல்வது உண்டு. இந்த வித மனோபாவத்தோடும் நான் எழுதவில்லை. பின்னே, நான் ஏன்தான் எழுதுகிறேன்?
“உயிர் வாழ்கிற ஒவ்வொருவனும், தான் உயிரோடு இருப்பதை உணர்த்துவதற்கு எதையாவது செய்தாகவேண்டும். தான் வாழ்வதை பிறருக்கு உணர்த்தத் துடிக்கிறான் ஒவ்வொரு வனும். எனது பிரசன்னத்தை பிறருக்கும், ஊருக்கும் உலகத்துக்கும் உணர்த்த எழுத்து பயன்படும் என நான் துணிந்தேன். எழுதலானேன்..........

அனைத்திலும் முக்கியமான காரணம் இதுதான். மற்றவர்களைவிட நான் உயர்ந்தவன். கற்றவர்களைவிட நான் அற்புதங்கள் செய்துகொண்டிருக்கிறேன். இன்று இந்த நாடு நம்மை மதிக்கவில்லையா? தொலையட்டும்! ஒரு காலம்வரும், நாம் செத்துப் போவோம். இந்த நாடு புத்தி பெற்று நம்மை போற்றிப் புகழ்பாடும். அதற்கு முன்னாலேயே, உலகத்தின் சிண்டைப் பிடித்து உலுக்கும்படியான ஒரு மகத்தான காரியத்தைச் செய்துவிட்டோமென்றால், நாம் சாவதற்கு முன்பே இந்த நாடு நம்மை விழுந்து கும்பிடும்.

இப்படி நம்பும் சுதந்திரம் எழுத்தாளனுக்கும் இருக்கிறது. இந்தச் சுதந்திர இன்பத்தை அனுபவித்துக் களிப்பதற்காக நான் எழுதுகிறேன். இந்த நம்பிக்கையும் தன்னகங்காரமும் என்னை வாழ்விக்கின்றன. ஆகவே நான் வாழ்க! என் எழுத்து வெல்க!”

க.நா.சு. ‘இலக்கிய வட்டம்’ எனும் பெயரில் 1960-களில் நடத்திய கூட்டங்களில் ‘எதற்காக எழுதுகிறேன்?’ என்று படைப்பாளர்கள் கட்டுரை வாசித்துள்ளனர். அதில் 11 பேரின் கட்டுரைகளைத் தொகுத்து சி.சு. செல்லப்பா ‘எதற்காக எழுதுகிறேன்?’ என்ற சிறுநூலை 1962இல் எழுத்து பிரசுரம் மூலம் வெளியிட்டார். அத்தொகுப்பில் வல்லிக்கண்ணன் எழுதியுள்ள கட்டுரையின் பகுதியே மேலே நாம் வாசித்தது. ஏறக்குறைய படைப்புலகில் சுமார் 25 ஆண்டுகள் கழித்த அனுபவத்துடன் மேல்கண்ட வரிகளை வல்லிக்கண்ணன் எழுதியுள்ளார். சுயஎள்ளல் தொனியுடன் அவர் பதிவு செய்துள்ள கருத்துகள் அவரைப் புரிந்துகொள்ள உதவும். வல்லிக்கண்ணன் அவர்களின் முழுநேர எழுத்து வாழ்க்கையை விரிவாகப் பதிவு செய்வதன் மூலம், நாம் புரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருப்பதாகவே கருதுகிறேன். எனது புரிதல் சார்ந்து வல்லிக்கண்ணன் அவர்களின் எழுத்து வாழ்க்கையை பின்வருமாறு தொகுத்துக் கொள்கிறேன்.

-பதின் பருவத்தில், புதுமைப்பித்தன் போன்ற படைப் பாளர்களின் எழுத்துக்களால் உந்துதல் பெற்று, வேளாண் துறையில் கிடைத்த அரசுப் பணியை உதறிவிட்டு முழுநேர எழுத்தாளராக வாழ்வை தீர்மானித்த மனநிலை. இக்காலங்களில் தமிழகத்தின் உருவான அரசியல் இயக்கங்கள் சார்ந்து தமது கருத்துநிலையை உருவாக்கிக்கொண்ட தன்மை.

-படைப்புலக ஈடுபாடு சார்ந்து, இதழ்களில் பணிபுரிவதன் மூலமாகப் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்ட சூழல்.

-1940-60 காலங்களில் தொடர்ச்சியாக படைப்புகளை உருவாக்கிய மனநிலை. சுமார் நூற்றுக்கும் மேற்பட்டசிறுகதைகள், ஐந்து நாவல்கள் மற்றும் கவிதைகள் ஆகியவற்றை படைத்த தன்மை.

-‘தீபம்’ இதழ் தொடர்களின் மூலம், இருபதாம் நூற்றாண்டு சார்ந்த இதழியல், உரைநடை மற்றும் கவிதை வரலாறுகள் தொடர்பான ஆவணப்படுத்தல்.

-தொடர்ச்சியான வாசிப்பு மனநிலை. எவ்வித அலுப்பும் சலிப்பும் இல்லாமல் தனக்குக் கிடைத்த எழுத்துக்களை யெல்லாம் உடனுக்குடன் வாசித்து, உரியவர்களிடம் அதனைப் பகிர்ந்துகொள்ளும் முறைமை.

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு படைப்பாளியின் மறைவின்போது, அவரைப் பற்றி எவ்வகையில் புரிந்துகொள்ள லாம் என்ற எனது தனிப்பட்ட ஆர்வம் சார்ந்த புரிதலை மேலேயே தொகுத்துள்ளேன். இத்தன்மைகள் குறித்த விரிவான உரையாடலை நிகழ்த்தவேண்டிய தேவை நமக்குண்டு. வல்லிக்கண்ணனைப் போல் வாழ்ந்தவர்கள் சமூகத்தில் மிக மிகக் குறைவு. கடந்த முப்பது ஆண்டுகளாக அவரோடு தொடர்பு கொள்ளும் வாய்ப்பு சார்ந்தும் இப்பதிவை முன்வைக்க முயலுகிறேன்.

‘சென்னைக்கு வந்தடைந்தேன்’ என்ற தொடரில் பல எழுத்தாளர்கள், ‘சரஸ்வதி’ இதழில் ஐம்பதுகளின் இறுதியில் எழுதினார். நவீன எழுத்து உருவாக்கம் என்பதற்கும் நகர உருவாக்கம் என்பதற்கும் அந்தக் காலத்தில் தொடர்பு இருந்தது. நகரிலிருந்துதான் இதழ்கள் வெளிவருவதால், இதழ் வழிதான் எழுத்தாளர்கள் உருப்பெறுவதால், நகரம் வந்தடையும் எழுத்தாளர்களின் அனுபவங்கள் சுவையானவை. வல்லிக்கண்ணனும் காரைக்குடி, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களிலிருந்து வெளிவந்த இதழ்களில் பணிபுரிந்தார். இதில் ‘கிராம ஊழியன்’ அனுபவம் அவருக்குச் சிறப்பாக அமைந்தது. கு.ப. ராவோடும், திருலோக சீதாராம் போன்றவர்களோடும் அவரது தொடக்ககால எழுத்து வாழ்க்கை தொடர்புடையது. வேறு பல இதழ்களிலும் அவர் வேலை பார்த்திருக்கிறார்.

1943-50 என்ற இக்காலப் பகுதியில், வல்லிக்கண்ணன் என்ற இளைஞரின் செயல்பாடுகள், தமிழ்ச் சமூகத்தில் விரிவாக அறியப்படவில்லையோ என்று கருதுகிறேன்.

நாற்பதுகளில், இரண்டாம் உலகப்போரின் விளைவாகக் கடுமையான தாள் பஞ்சம் ஏற்பட்டது. இதழ்களை நடத்துவதற்கு அரசாங்கத்திடமிருந்து தாள் கிடைப்பது அரிதாக இருந்தது. இதழ்கள் நடத்துவதற்குப் பதிலாக புத்தக வடிவிலான வெளியீடுகளைக் கொண்டு வந்தனர். சக்தி கோவிந்தன் இப்பணியில், இக்காலங்களில் தீவிரமாகச் செயல்பட்டார். வல்லிக்கண்ணன் அவர்களும் இவ்வகையான சிறுநூல்களை எழுதி வெளியிடுவதில் நாற்பதுகளின் இடைக்காலங்களில் பெரிதும் ஈடுபாட்டோடு செயல்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. ‘கோயில்களை மூடுங்கள்’, ‘படவுலகில் கடவுள்கள்’, ‘எதிர்காலத் தமிழகம்’, ‘மதம் அவசியமா?’ ஆகிய சிறுநூல்களை பல பெயர்களில் எழுதியிருக்கிறார். அவற்றில் ஓரிரண்டு மட்டும் படிக்கக் கிடைக்கின்றன. திரைப்படம் குறித்து ‘படவுலகில் கடவுள்கள்’ என்ற சிறு வெளியீட்டில் வல்லிக்கண்ணன் பின்வருமாறு எழுதுகிறார்.

“சினிமா என்பது மகா சக்தி வாய்ந்த உயரிய கலை. பல கலைகளின் உன்னத இணைப்பு - எண்ணற்ற நுண்ணிய தொழில்களின் கூட்டு. நுணுக்கம் நிறைந்த நிபுணத்துவத்தின் உயிர்ப்பு. சினிமாக் கலையை நேரிய முறையில் கையாண்டால் நாட்டுநிலையை உயர்த்த முடியும். சமுதாய வளர்ச்சிக்குத் துணைபுரிய இயலும். அறிவுக்குப் பேரொளி காட்டமுடியும். ஆயிரமாயிரம் தொழிலாளத் தோழர்களின் உழைப்பை அமர்த்துவமாக்க முடியும். கலையின், காவியத்தின், இலக்கியத்தின் உயர்வை எங்கும் எடுத்துக்காட்ட முடியும்.

ஆனால் இன்று கலைஞர்கள் கருதுவது என்ன? கலையன்பர்களின் தவிப்பு என்ன? ரசிகர்கள், அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் நினைப்பதுடன் நில்லாது பிரச்சாரம் செய்து வருவதும் என்ன? சினிமா சமூகத்தின் புல்லுருவி, நாகரிக நச்சுப்பாம்பு. மனிதப் பண்புக்கு உலை வைக்கும் உணர்வுக் கொள்ளி. இப்படி எண்ணி எண்ணி, இந்தச் சினிமா கலை நாசமாகாதா என்று சபிக்கத் துடிக்கிறார்கள்.” (படவுலகில் கடவுள்கள்: 1947:8).
சினிமாவின் சீர்கேடு குறித்து வல்லிக்கண்ணன் எழுதியுள்ள அச்சிறுநூலில் காணப்படும் வரிகள் மூலம் 1947இல் இருந்த தமிழ் சினிமா இன்றும் தொடர்வதை நாம் காண்கிறோம். தமிழ் சினிமா குறித்துப் பாரதிதாசன் பாடல்களை இந்நூலில் விரிவாக எடுத்துத் தந்துள்ளார். புராணக் கதைகளின் ஆதிக்கம், பயன்படுத்தும் மொழி, படம் எடுக்கும் முதலாளிகள் எனப் பல்வேறு கோணல்களிலும், தமிழ் சினிமா பற்றி கடுமையான மொழியில் வல்லிக்கண்ணன் பதிவு செய்துள்ளார். இதைப்போலவே மக்களின் மூடநம்பிக்கைகளை விமரிசனம் செய்து எழுதிய சிறுநூலே ‘கோயில்களை மூடுங்கள்’ (1946) என்பது. அதில் வல்லிக்கண்ணன் எழுதுகிறார்.

“ஒரு அன்பர் சரியாக எழுதினார். நாஸ்திகர்கள் கோயிலில் கடவுகளைக் காணவில்லை. ஆனால் மனிதர்களிடையே காண்கிறார்கள். ஒவ்வொரு மனிதனையுமே கடவுளாகக் கருதுகிறார்கள். அதனால் மனிதருக்கும் தீங்கு செய்ய அஞ்சுகிறார்கள். எல்லோரிடமும் அன்பு காட்டுகிறார்கள்.

ஆனால் கல்களை வழிபடும் பக்த சிகாமணிகள் இதயமும் கல்லாகவே மாறிவிடுகிறது!. பேரறிஞனான - பெரிய நாஸ்தி கனைப் பிறரால் அழைக்கப்பட்ட இங்கர்சால் சொன்னான்; மனிதவர்க்கமே கடவுள் என்று. மனித சேவையே எனது மதம்!

சிறந்த சிந்தனையாளரான இங்கர்சாலின் கூற்றையே எனது லட்சிய சுலோகமாகக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். ஒவ்வொருவரும் அதையே வேதவாக்காகக் கொண்டால் மனித சமுதாயம் உயர்நிலை அடையும் என்பதில் ஐயம் கிடையாது.” (கோயில்களை மூடுங்கள்!: 1946).
வல்லிக்கண்ணன் என்ற இளைஞர் எழுத்துலகில் செயல்பட்ட பதிவுகளே நாம் மேலே கொடுத்திருப்பவை. இவரது இக்காலச் செயல்பாட்டினை விரிவாகப் பதிவு செய்யும் தேவை நமக்குண்டு.

இங்கர்சால் கூற்றை தனது இலட்சியமாகக் கொள்வதாகக் கூறுகிறார். குறுநூல்கள் மற்றும் ‘பாரதிதாசன் உவமை நயம்’ (1945) ஆகிய தொடக்ககால நூல்களைக்கொண்டு வல்லிக்கண்ணன் குறித்த புரிதலைக் கீழ்காணும் வகையில் தொகுக்கலாம்.

-பாரதிதாசன் மீது வல்லிக்கண்ணன் கொண்டிருந்த ஈடுபாடு.
-1940களில் பெரியார் தலைமையில் இயங்கிய சுயமரியாதை இயக்கம் குறித்த இவரது பார்வை.

1930-கள் தொடக்கம் பாரதிதாசன் பகுத்தறிவு இயக்கத்தில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார். அவரது கவிதைகளின் பாடுபொருட்கள் மாறின. இக்காலங்களில் எழுதப்பட்ட அவரது பாடல்கள், குத்தூசி குருசாமி மற்றும் குஞ்சிதம் ஆகியோர் முயற்சியால் தொகுக்கப்பட்டு, 1939இல் முதல் தொகுப்பு வெளிவந்தது. பாரதிதாசன் கவிதை ஆளுமையின் முழுப்பரிமாணத்தையும் காட்டும் தொகுப்பு அது. 1930-50 காலங்களில் தமிழில் வெளிவந்த இதழ்கள், ஏறக்குறைய அனைத்தும் பாரதிதாசன் கவிதைகளை வெளியிட்டன. 1933-35 காலங்களில் வ.ரா.வை முதன்மையாகக் கொண்டு வெளிவந்த மணிக்கொடியில், எண்ணிக்கை அளவில் அதிகமான பாரதிதாசன் கவிதைகளே வெளியிடப்பட்டன.

ஏறக்குறைய 35 கவிதைகளில், பாரதிதாசன் கவிதைகள் 19 ஆகும். மற்றவர்கள் ந. பிச்சமூர்த்தி பிறர். 1939இல் வெளிவந்த சக்தி கோவிந்தன் அவர்களின் ‘சக்தி’ இதழ்களில் பாரதிதாசன் பாடல்கள் கணிசமான அளவில் வெளியிடப்பட்டன. பாரதிதாசன் படத்தை முதன்முதல் வெளியிட்டது சக்தி இதழே. (பார்க்க: ய. மணிகண்டன் - சக்தி - பாரதிதாசன் பாடல்கள் தொகுப்பு) ‘முல்லை’ இதழ் (1946), பாரதிதாசன் எழுத்துக்களை வெளியிடுவதில் பெருமை கொள்வதாகக் கூறி, அவரது எழுத்துக்களை மிகுதியாக வெளியிட்டது. இவ்வகையில் கடவுள் மறுப்பாளராக, பகுத்தறிவு இயக்கத்தின் கவிஞராக செயல்பட்ட பாரதிதாசன் பாடல்களை ஆத்திகர்கள், இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், பெரியாரை விமரிசனம் செய்தவர்கள் என்று பலதரப்பினரும் தங்கள் இதழ்களில் வெளியிட்டனர். இக்காலத்தில் வாழ்ந்த காங்கிரஸ் இயக்கம் சார்ந்த நாமக்கல் கவிஞர் மற்றும் ஆன்மிகக் கவிஞர் சுத்தானந்த பாரதி ஆகியோர் கவிதைகளுக்கு கொடுக்காத முக்கியத்து வத்தைக் காங்கிரஸ்காரர்கள் மற்றும் தேசியவாதிகள் பாரதிதாசன் பாடல்களுக்குக் கொடுத்தார்கள். இதற்கு முதன்மையான காரணம், பாரதிதாசன் தம்மை பாரதிக்கு தாசன் என்று அறிவித்துக் கொண்டமை, பாரதியின் கவிதையோடு எவ்விதத்திலும் குறைவில்லாத கவிதை வளம் ஆகியவை. இந்தப் பின்புலத்தில் பாரதிதாசன் கவிதைகள் மீது வல்லிக்கண்ணன் அளவற்ற ஈடுபாடு கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. தனது குறுநூல்களில் மிக விரிவாக பாரதிதாசன் பாடல்களை மேற்கோளாக எடுத்துக் கையாண்டுள்ளார். இவரது முதல் கட்டுரை நூல் பாரதிதாசன் உவமை பற்றியதாகவும் அமைகிறது. அந்நூலில் சொல்கிறார். “நயங்களை ‘இதோ அதோ’ என்று தான் காட்டமுடியும். வானத்து வெள்ளிகளைச் சிறு சாளரம் மூலம் சுட்டுவதுபோல” (முன்னுரை: 1946).

‘பாரதிதாசன் ‘தமிழின் செல்வம்’, ‘தமிழ் நாட்டின் பேறு’, ‘தமிழரின் துணைவர்’ என்றெல்லாம் எழுதுகிறார். பாரதிதாசன் கவிதைகளை இளம் வயதில் மிக அழகாக சுவைத்திருக்கும் பாங்கைக் காண்கிறோம். பாரதிதாசன் ஈடுபாட்டின் தொடர்ச்சியாகவே பகுத்தறிவு இயக்கம் தொடர்பான ஈடுபாட்டையையும் கருதலாம்.

1940களில் பகுத்தறிவு இயக்கம் வேகமாக வளர்ந்த சூழலில், சாந்தி நிலையம் - திருச்சி; எரிமலைப் பதிப்பகம் - திருச்சி மற்றும் சிறு வெளியீடுகளைக் கொண்டு வரும் பல பதிப்பகங்கள், தில்லைவில்லாளன், மு. கருணாநிதி, து.ரா. வீரண்ணன் ஆகிய பலர் எழுதிய பகுத்தறிவுப் பாமாலை, ‘பலிபீடம் நோக்கி’ ஆகிய பல சிறுவெளியீடுகளைக் கொண்டு வந்தனர். இக்குழுவோடு வல்லிக்கண்ணன் அவர்களும் செயல் பட்டிருப்பதைக் காண்கிறோம். வேகமான சிந்தனைகளோடு எழுத்து உலகில் நுழையும் வல்லிக்கண்ணன், அன்றைய தீவிரமான இயக்கமான பகுத்தறிவு இயக்கத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டதை, பின்னோக்கிப் பார்க்கும் போது, அவர்மீது நமது மரியாதையை மேலும் உயர்த்துகிறது. இந்தப் பின்புலத்தில், ‘கோரநாதன்’ என்ற புனைபெயரில் எழுதி வெளியிட்டுள்ள ‘கோயில்களை மூடுங்கள்’ எனும் சிறு பிரசுரத்தில் அவர் எழுதியுள்ள சமர்ப்பணம் பின்வருமாறு:

“சிந்திக்கும் திறனிருந்தும் சிந்தியாமல் உண்பதும், உறங்குவதும், உத்தியோகம் பார்ப்பதுவுமல்லாமல் ‘வேறொன்றறியாப் பராபரங்கள்’ ஆகி வாழ்கின்ற சமுதாயத்திலே அறிவின் பிரகாசத்தைப் புகுத்தி, எல்லோரும் மனிதர்களாய் வாழ விரும்பி, வழிகாட்டத் துடிக்கின்ற புதுயுலகச் சிற்பிகளுக்கு...” (சமர்ப்பணம்: கோயில்களை மூடுங்கள்: 1946)

இச்சிறுவெளியீட்டில், தன்னை ஒரு பகுத்தறிவு இயக்கத் தொண்டனாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார்: ‘கோயில் கண்டேன்/உயர் கோபுரம் கண்டேன்/கலையினைக் கண்டேன் - அங்கு / கடவுளைக் கண்டிலனே’ எனும் வரிகள், இச்சிறுவெளியீட்டில் வரையப்பட்டுள்ள பெரும் கோபுரத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் திராவிட இயக்கத்தின் எழுச்சிக் காலத்தில் அதன் தாக்கம் மிக்கவராகவே இருந்திருக்கிறார்.

பெரியார் மீது மிகுந்த மரியாதை கொண்டு செயல்பட்டிருக்கிறார். இக்காலங்களில் நிறைய சிறுகதைகளை எழுதிக்கொண்டும் இருந்தார். எழுத்தாளராக வேண்டும் என்னும் உந்துதல் ஒருபக்கம்; அதற்கான செயல்பாடாக, பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் முயற்சி; இன்னொரு பக்கம் எழுத்து என்ற அளவில் மட்டும், வல்லிக்கண்ணனின் வாலிபப் பருவத்தைப் பதிவு செய்யும் நோக்குடன், மேற்குறித்த செய்திகளை நினைவு கூரலாகத் தொகுக்க நேரிட்டது. இதன்மூலம், இயல்பான இளைஞர் களுக்குக்குரிய பண்புகளோடு வல்லிக்கண்ணன் தனது வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கிறார். இருபத்திரண்டாவது வயதில் இராஜவல்லிபுரத்திலிருந்து மதுரைக்கு நடந்து வந்த மனநிலை ஒருபக்கம்; உண்மையில் சென்னைக்கே நடந்துவர திட்டமிட்டவர்.

எழுத்தாளர் ஆவதில் அசைக்க முடியாத நம்பிக்கை இன்னொரு பக்கம்; இந்தச் சூழலில் பகுத்தறிவு இயக்க ஈடுபாடு. இப்படியான இளம் வாலிபர் வல்லிக்கண்ணன், தமிழ்ச் சமூகத்தின் இயல்பான வரலாற்றுப் போக்கு உருவாக்கும் இளைஞராகவே இருந்துள்ளார். இவரது இளமைக்கால வாழ்வும் அதன்மூலம் அவர் பெற்ற அனுபவங் களும் அவரது பிற்கால வாழ்வோடு இணைத்துப் பார்க்கும் போது, அந்த ஆன்மாவின் மீது நமக்குப் பிரியம் கலந்த மரியாதை இயல்பாக ஏற்படுவதை உணர்கிறேன்.

வல்லிக்கண்ணன் அவர்களின் ‘எழுத்தாளர் வாழ்க்கை’யில் அவரது படைப்புலகம் பற்றிய விரிவான உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதா? என்ற கேள்வி அடிக்கடி எழுதுவ துண்டு. அது குறித்த விவாதத்தைப் பின்னர் செய்வோம். ஆனால், நாம் மேலே விவரித்தவாறு தான் நினைத்ததை செய்யவேண்டும் என்னும் மனவலிமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவரது கோட்பாடு சார்ந்த புரிதல் ஒருபுறம் இருக்க, பத்திரிகைத் துறை சார்ந்த செயல்படுபவர்களின் மிக முக்கியமான இன்னொரு பக்கம்; அவரது மொழிபெயர்ப்புப் பணி. குறிப்பாக எதை மொழிபெயர்க்க எடுத்துக்கொள் கிறார்கள் என்பது முக்கியம். வல்லிக்கண்ணன் கார்க்கியின் எழுத்துக்களையே மிக அதிகமாக மொழியாக்கம் செய்துள்ளார்.

‘கடலில் நடந்தது’ (கார்க்கி சிறுகதைகள்: 1951), கார்க்கி கட்டுரைகள் (1957), சின்னஞ்சிறுபெண் (கார்க்கி கதைகள்: 1957) என அவர் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கிய காலங்களில் கார்க்கியின் ஆக்கங்களையே மிகுதியாக மொழி பெயர்த்துள்ளார்.
1940-60 களில் தமிழில் டால்ஸ்டாய், தாகூர் மற்றும் கார்க்கி எழுத்துக்கள் மிக அதிகமாக மொழியாக்கம் செய்யப்பட்டன. ரகுநாதன், வல்லிக்கண்ணன் மற்றும் விந்தன் ஆகியோர் கார்க்கி மீது தங்களுக்கிருந்த ஈடுபாட்டை விரிவாகப் பதிவு செய்துள்ளனர். 1950-களின் தொடக்கத்தில், தமிழகச் சூழலில் இடதுசாரி இயக்கங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தன. இந்திய அரசுக்கும் சோவியத்துக்குமான உறவுகள் பலமாகக் கட்டப்பட்டிருந்தது. நேரு சோவியத்தை பெரிதும் மதித்தார். சோவியத் நாட்டிற்கு, அரசு மூலமாகவே மொழிபெயர்ப்பாளர்கள் அனுப்பப்பட்டனர். இன்னொரு பக்கம், யுனெஸ்கோ மூலம், அமெரிக்க மற்றும் இங்கிலாந்து சார்ந்த மொழிபெயர்ப்புகளும் செய்யப்பட்டன. இதில் க.நா.சு. போன்றவர்கள் முன்னின்று செயல்பட்டார்கள்.

அமெரிக்க மற்றும் இங்கிலாந்து சார்ந்து வரும் இலக்கிய ஆக்கங்கள், இலக்கிய கோட்பாடுகள் மற்றும் விமரிசன முறைகள் மீது க.நா.சு. மற்றும் சி.சு. செல்லப்பா போன்றோர் ஈடுபாடு காட்டியதை நாம் அறிவோம். இந்தச் சூழலில், வல்லிக்கண்ணன் கார்க்கி மீது ஈடுபாடு கொண்டு செயல் பட்டது. அவர் குறித்த மதிப்பீட்டை மேலும் உயர்த்துகிறது. பகுத்தறிவு மனநிலையிலிருந்து இடதுசாரி கருத்து நிலைகளுக்கு உருப்பெறும் இயல்பான மனநிலை உடையவராக அவர் இருந்திருக்கிறார். தமிழில் ரகுநாதனும் வல்லிக்கண்ணனும் தான் கார்க்கியை மிக அதிகமாக மொழிபெயர்த்தவர்கள். கார்க்கி முதன்மைப் படுத்திய மனிதனைப் போற்றும் இலக்கிய கோட்பாடு, வல்லிக்கண்ணனுக்கு உவப்பாக அமைந்திருக்க வேண்டும். மிக ஆழ்ந்த மனிதாபிமான மனநிலை என்பது இப்படித்தான் செயல்பட முடியும். பிற்காலத்தில் அவரது ஆன்றவிந்து அடங்கிய சான்றாண்மைக்கான மூலங்களை, இங்கிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

மனிதநேயமே எல்லாவற்றிலும் தலையாயது என்பதை அவர் தம் வாழ்க்கைச் செய்தியாகக் கொண்டிருப்பதையும் இதன்மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது. என்னைப் போன்றவர்கள் கார்க்கியை ரகுநாதன், வல்லிக்கண்ணன் மொழிபெயர்ப்புக் கான மூலமாகத்தான் தெரிந்துகொண்டோம். இதற்காக அவர்களுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

கிறித்தவ மிஷினரிகள், தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை மிக அதிகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தொடக்க காலத்தில் ஏற்படுத்தினர். தமிழகத்தில் மிக அதிகமான கல்வி அறிவு பெற்றவர்கள், தொடக்க காலங்களில் இருந்த பகுதி திருநெல்வேலிப் பகுதி. இங்கிருந்துதான் தமிழின் நவீன எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உருவாயினர். இந்தப் பின்புலத்தில் வல்லிக்கண்ணனின் மொழிபெயர்ப்பு உலகத்தையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். வல்லிக்கண்ணனின் மொழிபெயர்ப்புகள் குறித்து மட்டும் விரிவாக எழுதவேண்டிய அவசியம் உண்டு.

பல்வேறு புனைபெயர்களில் படைப்புலகில் செயல்பட்ட வல்லிக்கண்ணன் குறித்த மதிப்பீடு, நாம் முன்னர் குறிப் பிட்டவாறு விரிவாக உரையாடலுக்கு உட்படுத்தப்படவில்லை என்றே கூறவேண்டும். இவ்வகையில் உரையாடலுக்கு உட்படுத்தப்படாத நிலையில் அதற்கான காரணங்களை குறித்தும் நாம் விவாதிப்பது அவசியம். அவரது படைப்புகள், அவரது சமகாலத்தில் உருவான எழுத்துகளோடு ஒப்பிடும் போது, அவ்வகையான வீரியம் மிக்கவையாக அமைந்திருந்ததா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அவரது தொடக்க காலபடைப்புகள் பெரும்பகுதி சிறுகதைகளாக இருந்தன. பின்னர் நாவல்களை எழுதியுள்ளார். 1940-60 காலங்களில்தான் அவர் தொடர்ந்து படைப்புலகில் ஈடுபட்ட காலமாகும். ‘கல்யாணி’ (1945), நாட்டியக்காரி (1946), வல்லிக்கண்ணன் கதைகள் (1954) ஆண்சிங்கம் (1964) ஆகிய தொகுப்புகள் தொடக்க காலத்தில் (1964)ல் வெளிவந்தன. ஒருசில குறுநாவல்களையும் ஆறேழு நாவல் களையும் எழுதியுள்ளார்.

இவரது சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய ந. பிச்சமூர்த்தி எழுதியுள்ள வரிகள், இவரது படைப்புகளைப் புரிந்துகொள்ள உதவலாம்.
“நம்முடைய உள்ளத்திலும், சமூகத்திலும் மறைந்து திரியும் உணர்ச்சிகளையும் ஊழல்களையும் கண்டு, ‘பின்னால் நிற்காதே, முன்னே வந்து தொலை’ என்று புழுங்கி வெடிக்கும் எண்ண அடிப்படையில் மீதுதான் ஏறக்குறைய எல்லாக் கதைகளையும் எழுப்பியிருக்கிறார்.” (நாட்டியக்காரி முன்னுரை: 1946)

ந. பிச்சமூர்த்தி அவர்களின் மதிப்பீடும், நாம் வல்லிக்கண்ணன் வாழ்க்கைப் போக்குகளைப் புரிந்துகொள்ள முயலும் தன்மையும் ஒரு புள்ளியில் சந்திப்பதைக் காண முடியும். மேற்குறித்த சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் வல்லிக்கண்ணன் எழுதுகிறார். “எழுத்து என்பிழைப்பு அல்ல. அதுவே என் வாழ்வு” என்ற வரிகள் மேற்குறித்த நமது புரிதலை மேலும் உறுதிப்படுத்துகிறது.

வல்லிக்கண்ணன் படைப்புலகில், குறிப்பாக நாவல்களில், பெண்கள் பற்றிக் கொண்டிருக்கும் கண்ணோட்டம் வெளிப் படுகிறது. சமூகக் கொடுமைகள் மீது ஆத்மார்த்தக் கோபம் கொள்ளும் இவர், ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்து, சாதாரண மனிதர்கள் கொண்டிருந்த பார்வையுடையவராகவே அவரது படைப்புகள் வழி அறியமுடிகிறது. ‘நினைவுச்சரம்’ நாவலின் ஒருபகுதி பின்வருமாறு அமைகிறது.
“மனுசங்க பயத்தின் காரணமாகத்தான் கல்யாணம் பண்ணிக்கிடுறாங்க. குடும்பம் அமைக்கிறாங்க. பிள்ளை குட்டிகளை பெறுதாங்கன்னு ஒரு அறிவொளி சொன்னான். அது சரியின்னுதான் சொல்ல வேண்டியிருக்கு. தனியா இருக் கிறதுக்குப் பயந்துபோய் தான் ஒரு வாழ்க்கைத் துணையை தேடிக்கிடுதான்.

பேசுதறதுக்கு, வேலைகள் செய்றதுக்கு, கூடப்படுத்துக்குறதுக்கு, யோசனைகள் சொல்றதுக்கு, புலப்பங்களையும் பெருமை போல்களையும் கேட்டுக் கொண்டிருப் பதுக்கு எப்படியும் வசதியான ஆள் கிடைக்காமல் போயிருக்கிற உள்பயத்தினாலே தான் துணைக்கு துணையாகவும், வேலைக்காரருக்கு வேலைக்காரியாகவும், தேவடியாளுக்குத் தேவடியாளாகவும், ஆலோசகர்களுக்கு ஆலோசகராகவும், எல்லாவுமாகவும், ரொம்ப மலிவாகவும் இருக்கும் என்பதனாலேதான் ஒரு பொம்பிளையைத் தேடிப்பிடிச்சி கல்யாணம் பண்ணிக்கிடுறாங்க. அவளுக என்ன செய்றாளுக? ஆளை எடைபோட்டப்புறம் தனக்கு மேலே ஏறி உட்கார்ந்து சர்வாதிகாரம் பண்ணத் துணிகிறாளாக. ‘சிறுவாடு கேக்கிறேன்’னு திருட்டுத்தனமாப் பணம் சேக்கிறது, அந்தச் செலவு இந்தச் செலவுன்னு கேட்டு, வாங்கி அந்த ரூவாயிலே ‘சுங்கம்’ வைக்கிறது.” ஏ, இந்தப் பொம்பிளை எமப்பய புள்ளைக. ஒவ்வொரு குடும்பத்திலும் எல்லாக் காலத்திலேயும், இப்படித்தான் - இன்னும் எமகாதக வேலைகள் எத்தனையோ - பொம்பிளைக பண்ணிக்கிட்டிருக்காளுக. (நினைவுச்சரம்: மு. பரமசிவம் எழுத்துச் செல்வர் வல்லிக்கண்ணன் நூலிலிருந்து மேற்கோள்: ப. 256-57)
இப்பகுதி, வல்லிக்கண்ணனின், ஒரு பாத்திரத்தின் நினைவோட்டமாக எழுதுகிறார்.

இவ்விதம் அவரது கதைகளில் பெண்கள் குறித்த மதிப்பீடுகள் நமது விமரிசனத்திற் குரியவையாகவே அமைகின்றன. அவரது கதைகளில் எடுத்துக் கொள்ளப்படும் பாடுபொருள்கள், ஒரு சோதனை மனநிலை சார்ந்து அமைவதில்லை. ‘வணிக இதழ்களில் கதை’ எழுது வோர் தெரிவு செய்யும் பாத்திரங்களையே தெரிவு செய்திருக் கிறாரோ’ என்று எண்ணத் தோன்றுகிறது.

இவ்வகையில் நாம் முன்னர் குறிப்பிட்ட போல், இவரது படைப்புலகத்தின் பாடுபொருளே, இவரது படைப்புலகம் பற்றிய உரையாடலை விரிவாக எடுத்துச்செல்லும் வாய்ப்பை வழங்கவில்லை என்று கூறமுடியும். மேலும் படைப்பாளர் களின் நீண்ட எழுத்து வாழ்க்கைப் பயணத்தில், அவரது மறைவுக் காலத்தில், அவரது இறுதிக்கால செயல்பாடுகளே பெரிதும் நினைவு கூறப்படுவதும் நாம் அறிந்த ஒன்றே. இருப்பினும் வல்லிக்கண்ணன் படைப்புலகம் குறித்த விரிவான உரையாடலை இனிமேல்தான் நாம் மேற்கொள்ளவேண்டும். அவ்வுலகம் பற்றிய விரிவான தகவல்கள் போதிய அளவிற்குக் கிடைக்கவில்லை என்பதும் உண்மை.

வல்லிக்கண்ணன் மறைவின்போது, நாம் எல்லோருடைய நினைவுகளிலும், அவர் இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வடிவங்கள் குறித்து, தீபத்தில் தொடராக எழுதி, நூல் வடிவம் பெற்றவைகளே ஆகும். ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ (1971), சரஸ்வதி காலம் (1980), பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை (1981), தமிழில் சிறுபத்திரிகைகள் (1991) ஆகிய பதிவுகள் அவை. இவற்றின் மூலமாகவே வல்லிக்கண்ணன் விரிவாகப் பேசப்படுகிறார். இவற்றின் முக்கியத்துவத்தைப் பின்கண்டவாறு நாம் தொகுத்துக்கொள்ள முடியும்.

-இத்தொகுப்புகள், நேரடியாக களத்தில் இருந்த, ஒருவரின் அனுபவம் சார்ந்த பதிவுகளாக அமைந்திருப்பவை.
-இத்தொகுப்புகளில், தனது சார்பை முதன்மைப்படுத் தாமல், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நம்பகத்தன்மையை உருவாக்கியிருப்பது.
-வல்லிக்கண்ணன் அவர்களுக்கே உரிய நினைவு ஆற்றல் சார்ந்து, பல நுண்ணிய தகவல்களையும் பதிவு செய்திருப்பது.

தமிழ்ச் சமூக வரலாறு எழுதுபவர்களுக்கு 18, 19ஆம் நூற்றாண்டு தொடர்பான நம்பகமான தரவுகள் சேகரிப்பது என்பது மிகவும் சிரமமான வேலையாக இருக்கிறது. இருக்கும் தரவுகளையும் கொண்டு ஊகிப்பது என்ற அளவில்தான் செயல்பட முடிகிறது. இருபதாம் நூற்றாண்டிலும் அந்நிலை தொடராமல் இருப்பதற்கு, வல்லிக்கண்ணன் அவர்களின் பணி உதவியிருக்கிறது. இத்துறை தொடர்பாக ஆய்வு செய்பவர்கள் இதனை உணரமுடியும். வல்லிக்கண்ணன் அவர்களின் ‘புதுக்கவிதை’ பற்றிய நூல் இதற்கு நல்ல சான்று. இந்நூல் பற்றி அதன் முதல் பதிப்பை வெளியிட்ட சி.சு. செல்லப்பா எழுதியுள்ள முன்னுரை, வல்லிக்கண்ணன் பற்றிய புரிதலுக்கு பெரிதும் உதவுகிறது.

“நான் இந்த வரலாற்று நூலை எழுதியிருந்தால் என்னை அறிந்தும் அறியாமலும் ஒரு பக்கமாக அழுத்தம் கொடுத்திருக்கக் கூடும். ஆனால் வல்லிக்கண்ணனோ தான் புதுக்கவிதை ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராக இருந்தும் படைப்பில் தன் போக்கு என்று கொண்டிருந்தும் அந்த ‘தான்’னை ஒதுக்கிவிட்டு புதுக்கவிதை முதல் இன்றுவரை உள்ள போக்குகளுக்கும் கொள்கைகளுக்கும் கிளை இயக்கங்களுக்கும் படைப்பாளிகளுக்கும் சரித்திர நியாயம் கிடைக்கச் செய்திருக்கிறார். (முன்னுரை: 1977)

இதன்மூலம், வல்லிக்கண்ணனின் பதிவேடுகள் குறித்த நம்பகத்தன்மையை நாம் பெறமுடிகிறது. தமிழ்ச் சிறு பத்திரிகைகள் குறித்த அதிகார பூர்வமான தகவல்களைத் தரும் பதிவுகளைச் செய்தவரும் இவரே. இவ்வகையில் இருபதாம் நூற்றாண்டின் ஆவணக் களஞ்சியங்களாக அமைந்துள்ள தொகுப்பு நூல்களை 1970 கள் தொடங்கி வல்லிக்கண்ணன் செய்து வந்துள்ளார்.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்த தமிழ் எழுத்துலகில் செயல்பட்ட வல்லிக்கண்ணன், தொடர்ந்து படிப்பதையே தமது பழக்கமாகக் கொண்டிருந்தார். தொடர்ந்து வாசிப்பது என்பது அவருக்கு அலுப்பைத் தராமல் இருந்திருக்கிறது. தான் வாசித்தவை குறித்து, உரியவர்களுக்குத் தெரியப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவை அரிய பண்புகள். வேறு எவரது ஆக்கங்களையும் வாசிக்கும் மனநிலையற்ற தமிழ்ப் படைப்புச்சூழலில், இவர் தனித்தே இருந்தார். அவரது இறுதிக்கூட்டம், எழுத்தாளர் விந்தன் பிறந்தநாள் கூட்டம். விந்தன் பற்றிய விரிவான கட்டுரையை வாசித்தார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் புதுமைப்பித்தன் நூற்றாண்டையொட்டி, புதுமைப்பித்தன் அறக்கட்டளை நிறுவப்பட்டது.

தோழர் ச. செந்தில்நாதன் முன்னெடுத்துச் செயல்பட்ட இந்நிகழ்வில் வல்லிக்கண்ணன் பெரிதும் உழைத்தார். இவ்வறக்கட்டளை நிறுவுவதற்குப் பல புரவலர்களையும் சந்தித்தார். தமிழ் இலக்கியத் துறையில், நிறுவப்பட்டுள்ள புதுமைப்பித்தன் அறக்கட்டளைக்கு உழைத்த வல்லிக்கண்ணன் அவர்களுக்கு தமிழ் இலக்கியத்துறை நன்றிக் கடன்பட்டுள்ளது.

வல்லிக்கண்ணனின் முழுத்தொகுப்பாக சிறுகதைகளையும், நாவல் தொகுப்பு ஒன்றையும் குறுநாவல் தொகுப்பு ஒன்றையும் பல தொகுதிகள் கட்டுரைகளையும், வாழ்க்கை வரலாற்றுத் தொகுதி ஒன்றையும், அவர் தொடராக எழுதிய நூல்களையும் சுமார் 15 தொகுதிகளைப் பெரும் பதிப்பகங்கள் கொண்டு வரவேண்டும். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கவேண்டும். இதுவே அவருக்கு நாம் செலுத்தும் சரியான அஞ்சலியாக இருக்கமுடியும்.

சங்க இலக்கியப் புலவர்களைப் பற்றி ஒரு தொடரைப் பயன்படுத்துகிறார்கள். அதாவது, ‘ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்’ என்று இத்தன்மை பெற்ற மனிதரே வல்லிக்கண்ணன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com