Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

நூல் அறிமுகம்

புத்துயிர்ப்பு
ஒரு மனிதனின் ஆத்ம பரிசோதனைப் பயணம்

பா. ஜீவசுந்தரி

‘அன்னா கரீன்னா’, ‘போரும் அமைதியும்’, ‘நீதிபதியின் மரணம்’ போன்ற உலகப் புகழ்பெற்ற நாவல்களை எழுதிய, புகழ் பெற்ற ருஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் மிகப் பிரபலமான மற்றொரு நாவல் ‘புத்துயிர்ப்பு’.

இது டால்ஸ்டாயின் பத்தாண்டு காலக் கடின உழைப்பு மூலம் 1899-ல் ருஷ்ய மொழியில் வெளிவந்த நாவல். பின்னர் படிப்படியாக உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. முதல்முறையாக 1979-ல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு மாஸ்கோ பதிப்பாக வெளிவந்தது. மொழிபெயர்த்தவர் எழுத்தாளரும் மார்க்சிய அறிஞருமான ரா. கிருஷ்ணய்யா. 28 ஆண்டுகளுக்குப் பின் மறு பிரசுரமாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.

டால்ஸ்டாயின் மற்ற நாவல்களுக்கும் புத்துயிர்ப்பு நாவலுக்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. இது ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், பல ஆண்டுகள் (1889-1899) உழைப்பைச் செலுத்தி, பாடுபட்டு பல்வேறு தேடல் களுக்கும் தயக்கங்களுக்கும் பரிசீலனைக்கும் பின் எழுதப்பட்ட நாவல். அலெக்ஸாண்டர் கோனி என்ற ஒரு வழக்கறிஞர், தான் சந்தித்த வழக்கு ஒன்றைப் பற்றி டால்ஸ்டாயிடம் கூறியதன் தொடர்ச்சியே புத்துயிர்ப்பு நாவல் உருவாகக் காரணம்.

திருட்டுக் குற்றம் மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மாஸ்லவா என்ற இளம்பெண்ணின் வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது. பிரபு குலத்து இளைஞரும் நீதிபதிகள் குழுவில் ஒருவருமான நெஹ்லூதவ் தற்செயலாக மாஸ்லவாவைச் சந்திக்க நேர்கிறது. அவர், அவளை அடையாளம் கண்டு கொள்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் அவர் விரும்பிய அழகிய இளம்பெண் அவள்; மாஸ்லவாவின் இளமையும் அழகும் அவள் மீது நெஹ்லூதவைக் காதல் வசப்படச் செய்கிறது. ஆனால், சந்தர்ப்பவசத்தால் அவள் ஏமாற்றப்பட்டு இருவரும் பிரிய நேர்கிறது. பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் மாஸ்லவாவைச் சந்திக்கின்றார் நெஹ்லூதவ் அவளைக் குற்றவாளியாக!

தான் செய்யாத குற்றத்துக்காகத் தண்டனைக்கு ஆளா கிறான் மாஸ்லவா. அவளது தற்போதைய இந்த நிலைமைக்குக் காரணம் தான்தான் என்ற குற்ற உணர்வு நெஹ்லூதவை ஆட்டிப் படைக்கிறது. மாஸ்லவாவின் விடுதலைக்காகவும் அவளது தண்டனையைக் குறைக்கவும் அவர் போராடுகிறார். ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை. கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் அதுவும் நடத்தை கெட்டவள் என்று சமூகத்தால் பழிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு உதவ முன்வருவது என்பதை அவ்வளவு சுலபமாக சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், சைபீரியாவுக்கு அனுப்பப்படும் மாஸ்லவாவுடன்தானும் சைபீரியாவுக்குச் செல்லத் தயாராகிறார். நெஹ்லூதவ் தன்னைத் திருமணம் செய்துகொள்ள முன்வரும் யோசனையைத் திட்டவட்டமாக நிராகரித்த மாஸ்லவாவால், அவர் தன்னைப் பின் தொடர்ந்து சைபீரியா வருவதைத் தடுக்க முடியவில்லை.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் நெஹ்லூதவிடம் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக அவர் பல்வேறு முடிவுகளை மேற்கொள்கிறார். பிரபுகுலத்தைச் சேர்ந்தவரான அவர் பிரபுக்குலத்தின் அஸ்திவாரத்தையே அசைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார். தமக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை அதில் வேலை செய்த பண்ணை அடிமைகளுக்கே பிரித்துத் தருகிறார். பிரபுக்களின் பொறுப்பற்ற, அநாகரிகமான ஆடம்பரங்களைச் சாடிவந்தவர், மத குருமார்கள், மடங்களின் ஊழல்களைப் பகிரங்கமாக அம்பலப்படுத்துகிறார். இதற்காக அரசாங்கம் மற்றும் மன்னரிடம் தமக்குள்ள செல்வாக்கை முற்றிலும் பயன்படுத்தி வெற்றியே காண்கிறார். இவ்வாறு காரியங்களை அவசர அவசரமாக முடித்துவிட்டுச் சைபீரியா செல்லும் அவர் மனம் லேசாக இருப்பதாக உணர்கிறார்.

ஆனால், நாவலின் கடைசி இரவு அவருக்கு ஒரு மூன்றாவது பரிமாணத்தைத் தருகிறது. ஒரு மனிதன் மற்றொரு மனிதனை மன்னிப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற எளிய உண்மையை அறிகிறார். தொடக்கத்தில் குற்ற உணர்வின் காரணமாக மாஸ்லவாவுக்கு உதவ முன்வரும் அவர், படிப்படியாக அவள் மீது செல்வாக்குச் செலுத்தும் உயர் சிந்தனையாளராக மாறிவிட்ட அவரது சுய பிம்பம் அப்போது உடைந்து நொறுங்குகிறது.
முதலாவதாக மாஸ்லவாவுக்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள்; இரண்டாவதாக, நிலப்பிரபுத்துவ சட்ட திட்டங்களுக்கு எதிராக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்; மூன்றாவதாக தமக்குத்தாமே ஏற்படுத்திக்கொள்ளும் சுய பரிசோதனைகள் என்று மூன்று தளங்களில் நாவல் விரிவடைந்து செல்கிறது. இந்த விரிவான கதைத் தளத்தில் ருஷ்ய வாழ்க்கை முழுவதுமே பிரதிபலிக்கிறது.

ஒரு கொடுங்கோல் ஆட்சியின் கீழ் எவ்வாறு குற்றங்கள் ஒவ்வொரு சமூக அடுக்கிலும் மலிந்து கிடக்கின்றன என்பதையும், ஆட்சி அமைப்பின் ஒவ்வொரு அடுக்கும் அவற்றை எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதையும் இதனால் அடித்தட்டு மக்கள் எந்த அளவுக்கு மூச்சுவிட முடியாமல் திணறுகிறார்கள் என்பதையும் டால்ஸ்டாயைத் தவிர வேறு எவரும் இவ்வளவு நுட்பமாக வெளிக்கொணர முடியாது. பண்ணை அடிமைகளுக்கு நிலத்தைப் பிரித்துக் கொடுப்பது போன்ற திட்டங்கள் நாவலில் இடம் பெறுவது ஒரு கற்பனைபோல் தோன்றினாலும் டால்ஸ்டாயே தமக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைத் தமது பண்ணை அடிமைகளுக்குப் பிரித்துக் கொடுத்தவர். தமது வாழ்க்கையில் தமக்குத்தாமே மேற்கொண்ட ஆத்ம பரிசோதனைகளையே புத்துயிர்ப்பு நாவலில் மீண்டும் ஆத்ம பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார் என்று கூறுவது மிகையல்ல. குற்ற உணர்வும் மனசாட்சியும் தற்காலத்தில் நெருங்க முடியாத இடைவெளியில் இருக்கின்றன. குற்றம் புரியும் ஒரு நபர் குற்ற உணர்வுக்கு உள்ளாவதும் மனசாட்சிக்குப் பதில் சொல்லவேண்டிய கடமையில் இருப்பதும் இன்று உணரப்படுவதேயில்லை. ஆனால், குற்ற உணர்வின் உந்துதலால் தனது மனசாட்சிக்குப் பதில் கூற முயன்ற ஒரு மனிதனின் ஆத்ம பரிசோதனைப் பயணமே புத்துயிர்ப்பு.

புத்துயிர்ப்பு - லியோ டால்ஸ்டாய்
தமிழில்: ரா. கிருஷ்ணய்யா,
வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 98, விலை : ரூ. 275/-



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com