Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

நாடகக் கலை வளர்த்த நாடகத் தமிழ்!
ப.தியாகராசன்

பண்டைத் தமிழர்கள் பல்துறைகளையும் போற்றிப் பாதுகாத்து வளர்த்ததுபோன்றே பல்வகைக் கலைகளையும் வளர்த்தெடுத்துச் சிறப்பித்து அவற்றில் வெற்றியும் கண்டு, அதன் வாயிலாக மொழியையும் பாதுகாத்து வளர்த்துச் செழிப்படையச் செய்துள்ளனர் என்பதைத் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் நமக்குத் தெள்ளெனக் காட்டுகின்றன. அவ்வாறு வளர்த்தெடுக்கப் பட்டுள்ள கலைகள் அறுபத்து நான்கெனவும் காட்டுகின்றன. அவற்றில் ஒன்றான நாடகக்கலை அவை குறித்துத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சில கூறுகளை எடுத்துரைத்துச் சில வரலாற்றுச் செய்திகளைத் தொட்டுக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மாந்தனின் தேவைகளை நிறைவு செய்வதற்கான அறிவையும், ஆற்றலையும் தரவல்லது கலை. அது செயல், திறமை, பயன், அழகு, சுவை எனும் பல்வேறு கூறுகளைக் கொண்டது. நாடகம் எனும் கலைவடிவமே மக்களுக்கு அறிவூட்டும் கல்விச்சாலையாக விளங்கியுள்ளது. முற்காலத்தில் இன்று போல் செய்தித்தாள்களோ, ஊடகங்களோ, நூல் நிலையங்களோ இருக்கவில்லை. மக்களுக்கு அறிவூட்டும் சாலையாகவும், கருவியாகவும் விளங்கியவை நாடக மேடைகளே. நாடகத்திற்கு இத்தகையதோர் உயர்ந்த குமுகாயப் பணி யிருந்ததால் அதற்கு வேண்டிய அனைத்து உறுப்புகளும் நன்கு ஆராயப்பட்டு அவற்றிற்கு இலக்கணமும் வகுத்துள்ளனர் நம் முன்னோர்.

தமிழை, இயல், இசை, நாடகமென முத்திறப்படுத்திச் சொல்லும் வழக்கம் தொன்று தொட்டேஇருந்து வருகின்றது. உலகில் உள்ள மொழிகளில், இவ்வாறு சொல்லும் சிறப்பு தமிழைத் தவிர வேறு எம்மொழிக்குமில்லை. முத்தமிழ்முறை ஒன்றிற்கொன்று சிறந்தனவாக விளங்கிவரும் தன்மையது. பொருள் உணர்த்துவதிலும், சுவை தருவதிலும் சிறந்ததாக முத்தமிழ் காணப்படுகின்றது. மனத்தில் நினைத்த பொருளை இயல்பான சொற்களால் உணர்த்துவது இயற்றமிழ் என்றும், இசைமூலம் உணர்த்துவது இசைத்தமிழ் என்றும், மெய்ப் பாட்டின் (அபிநயம்) மூலம் உணர்த்துவது நாடகத்தமிழ் என்றும் கூறப்படுகின்றன. இம்மூன்றினுள்ளும் நாடகத் தமிழ் மிகச் சிறப்பானது. ஏனெனில், நாடகக் கலையில் முத்திறமும் அடங்கியுள்ளது.

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் / பாடல் சான்ற புலனெறி வழக்கம்” என்ற தொல்காப்பிய வரிகள் நமக்கு இதனை உறுதி செய்கின்றன. நாடகம் இசையோசையும் ஆடலுடனும் கூடிய கூத்தெனப் பெயர் பெற்றதென்றும் கூறுவர். நாடகத்தில் மிகப் பழைய காலந்தொட்டே ஆடல் வகையையும், பின்னர்க் கதை தழுவி வருவதையும் “கூவி யாடல் கூத்தெனப் பெறுமே / நாடுறுஞ் சுவையின் நாடக மாமே” என அரனரங்கத்தொகை காட்டுகின்றது.

நாடகம், என்பது நள் என்னும் பகுதியடியாகப் பிறந்த தொழிற்பெயர் என நுண்மாண் நுழைபுல எழிலர் பாவாணர், நாடகம் எனும் சொல்லிற்கு விளக்கம் தந்து, நடி + அகம் = நாடகம் என அச்சொல்லைப் பிரித்துப் பொருளுணர்த்தி நிலைப்படுத்துகிறார். நாடகம் கதை தழுவி வரும் கூத்து எனவும், நடம், நட்டம் என்பனத் தனிக்கூத்தும், பாட்டிற்கேற்ற மெய்ப்பாடுமாகும் (அபிநயம்) எனவும் அவர் எடுத்தியம்புகிறார். மேலும், நட்டம் பயிற்றுபவன் நட்டுவன் என்றும், நாடகம் பயில்பவள் கணிகை என்றும், நாடகமாடுபவள் நாடகக் கணிகை என்றும் கூறி, அவள் தாளத்தைக் கணித்து ஆடுவதால் கணிகை என்ற சிறப்புப் பெயரினையும் பெறுகிறாள் என்பதையும் அவர் விளக்குகிறார். நடி என்பது நட என்னும் சொல்லின் திரிபு எனக் கூறி முதன் முதலாக நடித்தது ஒருவனைப் போல் நடந்து காட்டியதே என்பதையும் எடுத்துச்சொல்லி, நாடகம் என்ற அச்சொல் ஒரு நிகழ்வு மூலம் தோன்றியுள்ள வரலாற்றுச் செய்தியையும் தருகின்றார்.

நாடகத்திற்கான இலக்கணம் கூறித் தோற்றம், வளர்ச்சி, பயன்பாடுகள் போன்ற செய்திகளை வரையறுத்துக் கூறுவன நாடகத் தமிழ் நூல்களாகும். அவற்றில் ஒன்றான கடைச் சங்க காலத்துப் பஞ்சமரபு எனும் நூல் நாடகத்திற்கு நிருத்தம் என்ற பெயர் உள்ளதாகவும் கூறுகின்றது. இஃது இசைவழி நிகழும் நடனத்திற்குரிய சிறப்புப் பெயர் என்றும் இதற்குச் சான்றாக “இசையுடன் நடனம் நிருத்தமாமே” என்ற பரத நூற்பா வினையும் காட்டுகின்றது. நிருத்தம் என்பது தாண்டவம் முதலான எல்லாக் கூத்தினுக்குரிய பொதுப் பெயராகவும் வழங்கிவருகின்றது. இந்நிருத்தத்தில் தாண்டவம், நிருத்தம், நாட்டியம், குரவை, வரி, கோலம், வகை எனும் எழுவகைக் கூத்துகள் அடங்கியுள்ளன என்றும், அவை முறையே அமைதி, வேடிக்கை, வகை என்ற மூவகைக் கூத்தினுள் அடங்கும் எனவும் அந்நூல் நமக்குக் காட்டுகின்றது.

அனைத்திற்கும் மூலமாக விளங்கக்கூடிய சிவபெருமான், தென்னாட்டில் ஆடிய திருக்கூத்தினுக்கே தாண்டவம் என்று பெயர். இதனை “தாண்டவம் புரிய வல்ல தம்பிரான்” என்ற பெரிய புராணப் பாடல் வரி உறுதி செய்கின்றது. அவ்வாறு அவன் ஆடிய தாண்டவங்கள் ஆதித்தாண்டவம், அனுத் தாண்டவம், ஒளித்தாண்டவம், பீடதாண்டவம், புட்பாஞ்சலித் தாண்டவம், புயங்கத் தாண்டவம், தேசித்தாண்டவம், தேசி யொத்துத் தாண்டவம், கவுத்துத் தாண்டவம், துணுக்குத் தாண்டவம், தண்டபாதம் என்ற பதினாறு வகைத் தாண்டவங்களாகும். தாண்டு + அவன் = தாண்டவன் என்றும், திரிபு இலக்கணத்தின்படி ‘ன்’, ‘ம்’ ஆகத் திரிந்து தாண்டவம் என ஆயிற்று, அச்சொல். தாண்டல் என்பது கூத்தாடலுக்கும் பொருந்தும் எனவும் “அகவல் தாண்டல் ஆடுதல் நடித்தல் அசைதல் பெயர்தல் அடுதல் கூத்தாடல்” என்ற இலக்கியச் சான்றினையும் பஞ்சமரபு நமக்குக் காட்டுகின்றது.

நாடகத்தை நம்முன்னோர் பல்வகைக் கூத்துகளாகவும் வகுத்துள்ளனர். அவை முறையே வசைக்கூத்து; புகழ்க்கூத்து, வேத்தியற்கூத்து; தமிழ்க்கூத்து, இயல்புக்கூத்து; தேசிகக்கூத்து, அகக்கூத்து; புறக்கூத்து என்பன. இவற்றை இரண்டிரண்டாகப் பகுத்தும் வகுத்துமுள்ளனர். மேலும், இவற்றை உலகியற் கூத்து, தேவியற் கூத்து எனவும் வகுக்கலாம். சிலப்பதிகார அரங்கேற்று காதையில் வருகின்ற பதினொரு ஆடல் வகைகளும் தேவியற் கூத்தாகும்.

நடனம் என்பது அழகுற ஆடுவது. அது நூற்றெட்டு உடற் கரணங்களோடும், கை, கால், கண், வாய் முதலிய உறுப்புகளின் தொழில்களோடும் கூடியது. தமிழ் நடனம் இன்று பரத நாட்டியம் என்ற பெயரால் வழங்கப்பெறுகின்றது. பரத சாத்திரம் எனும் வடமொழி நூல் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாக நாடகக்கலை குறித்த நூல்கள் கூறுகின்றன. “நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்திய முதலாவுள்ள தொன்னூல்களுமிறந்தன” என்ற சிலப்பதிகார பாயிரத்தின் மூலம் அடியார்க்கு நல்லார் வடமொழியின் பரத சாத்திரத்திற்கு முந்தியது தமிழ்ப் பரதமே என்று நிலை நிறுத்துகிறார்.

நாடகம் என்பது கதை தழுவிவரும் கூத்து எனவும், அது பொருள், கதை, தலைமை, நிலை, சுவை, வகுப்பு, குறிப்பு, விறல், நளிநயம், சொல், சொல்வகை, வண்ணம், வரி, சேதம் என்னும் பதினான்கு உறுப்புகளை உடையது எனவும் கூறப்பெறுகின்றது. நாடக அரங்கம் நல்ல கெட்டியான நிலத்தில், ஈரடி நீளமுள்ள கோலால், எண்கோல் நீளமும், எழுகோல் அகலமும், ஒருகோல் உயரமும் உள்ளதாக அமைக்கப் பெற்று, மேலே முகடும், ஒருமுகவெழினி, பொருமுக வெழினி, கரந்து வரலெழினி எனும் மூவகைத் திரைகளும், புகுவாயில், புறப்படவாயில் என்னும் இருவாயில்களையும் உடையதாக இருக்கவேண்டுமென நாடகத் தமிழ் நூல்கள் காட்டுகின்றன.

இதனைச் சிலப்பதிகார அரங்கேற்று காதையில் இளங்கோவடிகள் “எண்ணிய நூலோர் இயல்பினன் வழாஅது....” என எடுத்துக்காட்டுகின்றார். மேலும், பழந்தமிழர் அளவுகளை நுணுகிப் பார்க்கும் ஆழமான அறிவுடையவர்கள் என்பதை அறிய முடிகிறது. சிற்ப நூல் வல்லோராகிய செயிற்றியனார், பரத சேனாபதியார், மதிவாணனார் போன்ற அறிஞர்கள் எழுதியுள்ள நூல்களின் அடிப்படையில் அந்நூல் விதிகளின்றும் வழுவாமல், அரங்கம் அமைப்பதற்குரிய இடத்தைத் தேர்வு செய்யவேண்டும் எனக் கூறுவதையும் அறிகிறோம்.

மேலும், பொதியமலை போன்ற மலைகளில் வளர்ந்துள்ள மூங்கிலில் ஒரு கணுவுக்கும், மற்றொரு கணுவுக்கும் ஒரு சாண் இடைவெளியிருக்கும் மூங்கிலை இருபத்து நான்கு பெருவிரல் களை அளவு கோலாகக் கொண்டு நறுக்கி அளக்க வேண்டும் என்பதை அளவு கோலின் இலக்கணமாக வரையறைப்படுத்து கின்றார். யார் கைப் பெருவிரல் என்ற வினா எழும்பியபோது உத்தமன் கைப்பெருவிரல் என விளக்கம் தருகிறார் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார். பெருவிரலை எவ்வாறு அளவிட வேண்டும் என்பதையும் கூறும் அவர், அணு எட்டுக் கொண்டது தேர்த்துகள்; தேர்த்துகள் எட்டுக்கொண்டது இம்மி; இம்மி எட்டுக் கொண்டது எள்ளு; எள்ளு எட்டுக் கொண்டது நெல்லு; நெல்லு எட்டுக் கொண்டது பெருவிரல் என்கிறார்.

மறைந்து போன நம் நாடகத் தமிழ் நூல்களை ஆய்கின்ற போது சயந்தம், செயிற்றியம், முறுவல், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, செயன்முறை, குணநூல், கூத்த நூல், என்னும் பெயர்களை மட்டுமே அறிய முடிகின்றது. அவை அனைத்துமே நாட்டியம் பற்றியும், நாடகம் பற்றியும் இலக்கண முறையில் விளக்கம் கூறும் நூல்கள் ஆகும். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், அவர் தரும் உரை விளக்கங்களில் செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல்களை மேற்கோள் காட்டுவதால் அத்தகைய நூல்கள் இருந்துள்ளன என்பதை உறுதி செய்ய முடிகின்றது.

கூத்த நூல் என்னும் பெயருடைய நாடகத் தமிழ் இலக்கண நூல் பழைய ஏட்டுச் சுவடியிலிருந்து எடுக்கப்பட்டு அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளதாக டாக்டர் மு.வ. தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில் குறிப்பிடுகிறார். அவ்வாறே கடைச் சங்க காலத்து சேறை அறிவனார் இயற்றியுள்ள பஞ்சமரபு என்னும் நூல் நாடகத் தமிழ் குறித்துக் கூறுகின்றது. அந்நூலும், பழைய ஏட்டுச் சுவடியிலிருந்து எடுக்கப் பட்டுள்ளது. மேற்கண்ட இருநூல்களுமே பழந்தமிழ் நாடக மரபுகளைப் புலப்படுத்துகின்றன. மேலும், அந்நூல்கள் பழங்காலத்தில் சிறந்த நடிகர்கள், கூத்தர், விறலியர், பொருநர் என்ற சிறப்புப் பெயர்களோடு விளங்கிப் புகழ் பெற்றார்கள் என்பதையும் காட்டுகின்றன. இன்றும் தமிழுக்கு உயிர் நாடியாக விளங்கக் கூடிய சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் பழந்தமிழ் நாடகக் கலையினை உலகிற்குப் பறைசாற்றுகின்றன.

நாட்டு மக்களில் பெரும்பாலோர் செய்து வந்த தொழில் உழவுத் தொழில். அவர்கள் அத்தொழிலில் ஈடுபடும்போது ஏற்படுகின்ற களைப்பினைப்போக்கப் பல பாடல்கள் பாடிவந்துள்ளனர். உழவுத் தொழில் தாழ்ந்த நன்செய் நிலங் களில் செய்யப்படும் தொழிலாகும். ஆகையால், பள்ளமான இடத்தில் பாடப்படுகின்ற அப்பாடலுக்குப் பள்ளு என்று பெயரிட்டுள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு மோகனப்பள்ளு என்ற நூல் இயற்றப்பட்டுள்ளது. அப்பாடல் களில் சில கதை மாந்தர்களை உருவாக்கி, அதனை நாடக வடிவமாக்கி, நாடகமாகவும் அரங்கேற்றி உழவர்களின் வாழ்க்கையைப் படமாக்கிக் காட்டுவதே பள்ளு நாடகத்தின் குறிக்கோளாகும். என்னயினார் என்ற புலவர் ஒருவர் மேடையில் நடிப்பதற்கு ஏற்றவகையில் முக்கூடற்பள்ளு என்ற 320 செய்யுள்கள் கொண்ட ஒரு நாடக நூலையும் இயற்றி யுள்ளார். அருணாசலக் கவிராயரும் சீகாழி தலத்தைப் பற்றி அறிய “சீகாழிப்பள்ளு” என்ற நூல் இயற்றியுள்ளார்.

தமிழ் இலக்கியத்தில் குறவஞ்சி போன்ற நாடக நூல்களும் உள்ளன. சரபேந்திர பூபாலக்குறவஞ்சி, கும்பேசர் குறவஞ்சி, அர்த்தநாரீசுவரக் குறவஞ்சி, திருவாரூர்க் குறவஞ்சி என்ற நாடக நூல்கள் இருந்தாலும், என்றும் பெயர் பெற்றுள்ள நாட்டிய நாடகமாகத் திகழ்வது, மேடைகளில் நடிக்கப் பெறுவது திரிகூடராசப்பக் கவிராயர் 18 ஆம் நூற்றாண்டில் இயற்றிய திருக்குற்றாலக் குறவஞ்சி நாடகமேயாகும். இந்நாடக நூல் சுவைமிக்க இலக்கியமாக இன்றும் படித்துப் போற்றப் பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பினைப் புகழ்ந்து அங்குள்ள சிவபெருமானைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அடிப்படையாக அமைத்துப் பாடப்பட்டுள்ளது, அந்நூல்.

அதன் பாடல்கள் இசையோடு பாடி மகிழ்வதற்கு ஏற்றவை; நாடகச் சுவை நிரம்பித் ததும்புகின்ற அந்நூலில், “வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் / மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்... எனத் தொடங்கி / .... குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே” எனத் தான்பிறந்த இடத்தின் வளமையையும் பெருமையையும் உரிமையோடு குறத்தியொருத்தி சொல்வதாக அமைந்துள்ள அந்நாடகத் தமிழிலக்கியம் என்றும் படித்து இன்புறத்தக்கது. யாழ்ப் பாணத்தைச் சார்ந்த விசுவநாத சாஸ்திரியார் இதனையொட்டி வண்ணக்குறவஞ்சி, நகுலமலைக் குறவஞ்சி என்ற நாடக நூல்களைச் சென்ற நூற்றாண்டில் இயற்றியுள்ளார் என்ற செய்தி நம் நாடகத் தமிழுக்குப் பெருமை சேர்க்கின்றது.

தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்றுள்ள ஒரு நாடகத் தமிழ் நூல் 19-ஆம் நூற்றாண்டில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்த சுந்தரம் பிள்ளை இயற்றிய மனோன்மணியம் என்னும் நூலாகும். அந்நூல் இலக்கியத் தரமுடைய நாடக நூல் என இலக்கிய ஆய்வாளர்கள் பலராலும் ஆய்ந்து சொல்லப்பட்டுள்ளது. அந்நூலின் தொடக்கத்தில் அவர் அமைந்துள்ள “நீராரும் கடலுடுத்த....” எனத் தொடங்கும் பாடல் அவரின் மொழிப் பற்றையும், நாட்டுப்பற்றையும் நன்றாகப் புலப்படுத்துகின்றது. “அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயைவிட, நாட்டுப்பற்றை நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே தேவர் விரும்புவது, போரால் ஏற்படும் புண்ணின் காயமே புகழின் காயம், அது புண் அன்று, புகழின் கண்” என்று பல உணர்ச்சியூட்டும் சொற்களை அம்புகளாக வீசுகிறார், அதன் ஆசிரியர்.

தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியாம் நிறைமலை யான மறைமலையடிகள் சாகுந்தலம் எனும் வடமொழி நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து இலக்கியமாக்கியுள்ளார். அவர் இயற்றியுள்ள அம்பிகாபதி, அமராவதி நாடகம் என்றும் படித்து இன்புறத் தக்கது. இதனைப் புரட்சிப்பாவலர் பாவேந்தர் கதைமாந்தர்களிடையே உட்புகுந்து புரட்சிக் கருத்துக்களைப் புகுத்தி, புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கி, புரட்சிக் கவி எனப் படைத்துள்ளார். அந்நாடகத்தில் “நீலவான் ஆடைக்குள் ....” என்ற பாடலின் மூலம் இயற்கையின் இயல்பான எழிலை உலக மக்களுக்குப் படம் பிடித்துக் காட்டி “ஒரு மனிதன் தேவைக்கே இந்தச் தேசம் உண்டென்றால்...” என்ற பாடலின் வழியாக மன்னனின் நயவஞ்சத்தால் சிறைப்படுத்தப் பட்டு உயிரின் கடைசி எல்லையில் இருக்கின்ற போதும் நீதியை நிலை நாட்ட நாட்டு மக்களிடையே உண்மையான செய்திகளை எடுத்துச் சொன்னால் மன்னனை எதிர்க்க மக்கள் தயங்க மாட்டார்கள், நீதிக்காகப் போராடுவார்கள் மக்கள் என்பதையும் நிலை நாட்டுகின்றார்.

நாடகக் கலையின் மூலம் நாட்டு விடுதலைக்காகப் போராடியவர்கள் எண்ணற்றவர்கள் என்றாலும் அவர்களுள் மிளிர்ந்து காணப்படுபவர் பாவலர் தெ.பொ. கிருட்டிணசாமி எனும் அறிஞரே. நாட்டு விடுதலைக்காக மக்களிடையே விடுதலை உணர்வை ஏற்படுத்த ‘கதரின் வெற்றி’, ‘பம்பாய் மெயில்’ என்ற நாடகங்களை இயற்றி, அரங்கேற்றி மக்களிடம் விடுதலை உணர்வை ஊட்டியுள்ளார். இவரின் ‘தேசியக் கொடி’ எனும் நாடகம் புகழ்பெற்ற நாகபுரிக் கொடிப் போராட்டத்தை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது என்றும் இவர் தமிழ்நாட்டு நாடகக் குழுவை அக்காலத்தில் இங்கிலாந்து நாடு வரையில் அழைத்துச் சென்று, நாடகங்கள் பல நடத்தி, வெற்றி கண்டுள்ளார் என்ற செய்தியையும் நாடகத் தமிழ் நூல்கள் நமக்குக் காட்டுகின்றன. அது போன்றே ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாறும் நாடகமாக்கப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

கலை என்பது ஒரு நாட்டின் பண்பாட்டோடு தொடர் புடையது. அதனை நன்கு அறிந்த அறிஞர் பெருமக்கள் பலரும் அதற்கு இலக்கணம் வகுத்து இலக்கியமாக்கியுள்ளனர். அதன் அடிப்படையை மறந்த இன்றைய தலைமுறையினர் சிதைத்து வடிவிழக்கச் செய்துள்ளனர். இதன் காரணமாகவே தமிழ்ப் பண்பாடுகளும் சிதைந்து வருகின்றன என்பது தெள்ளிதின் விளங்கும். சிதைந்து வருகின்ற அப்பண்பாடுகளை மீட்டெடுப் போமெனில் கலை வளர்த்த நம் நாடகத் தமிழ் வளர்ச்சி பெற்று வளம் பெறும்!நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com