Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

நூல் திறனாய்வு

சூரியகாந்தனின் படைப்புலகம்
சுமதி இராமசுப்ரமணியம்

கோவை மண்ணிலிருந்து முப்பதாண்டுக் காலமாக எழுதி வருபவர் சூர்யகாந்தன். தமக்கிருக்கும் படைப்பாற்றலை மண்
சார்ந்த மக்களுக்காக இவர் முழுவீச்சோடு பயன்படுத்தி வருகிறார். இவரது படைப்புலகம் நாவல் என்பது மட்டு மின்றிச் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல துறைகளில் பரிணமித்து நிற்கிறது.

உடுமலை தமிழ் இலக்கிய ஆராய்ச்சிப் பேரவை சூர்யகாந்தனின் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் நடத்தி யுள்ளது. இதனை சூரியகாந்தன் அவர்களை மேலும் உற்சாகத் தோடு தொடர்ந்து இயங்க வைக்கும் ஒரு சிறு முயற்சியாகக் கொள்ள வேண்டும். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சூரியகாந்தனின் படைப்பிலக்கியம் குறித்தத் திறனாய்வுக் கட்டுரைகளை இரு தொகுதிகளாக 2005 அக்டோபரில் முதல் பதிப்பாக வெளியிட்டது.

நல்ல படைப்பாளியாக இருந்தாலும், இக்காலத் தமிழ் இலக்கியச் சூழலில் இயக்கம் சார்ந்தோ, தனித்தனிக் குழுக்களாக இயங்கும் சிறு பத்திரிகைகள் சார்ந்தோ இயங்கும். அப்பொழுது தான் படைப்பாளிகளும் அவர்களுடைய படைப்புகளும் பரவலாகப் பேசப்படுகின்றனர். தனித்தியங்கும் படைப்பாளி களை, இனம் கண்டு கொள்ள முடியாத போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் பரவலாக, ‘சூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுத் தொகுதிகள்’ இரண்டும் பலரையும் சென்றடைய வேண்டும்.

இரு தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ள ஆய்வுக் கட்டுரைகளில் தொண்ணூறு சதவீதம் நாவலைப் பற்றியும் ஏழு சதவீதம் சிறுகதைகளைப் பற்றியதாகவும் அமைந்துள்ளன. தொல்காப்பியத்தில் இடம்பெறும் முதல் கரு, உரிப் பொருள்கள் இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் மூன்று கட்டுரைகள் அமைகின்றன. “தடம் பதித்த மானாவாரி மனிதர்கள்” / “சூர்ய காந்தன் நாவல்களில் கதைக் களங்களும் வாழ்வியல் சிக்கல்களும் / “சூர்ய காந்தன் நாவல்களில் இடப்பின்னணி”.

தொல்காப்பியத்தில் நிலமும் பொழுதும் முதற்பொருள்கள். கருப்பொருள் உரிப்பொருள் இரண்டும் அதனை ஒட்டியே அமைகின்றன.
இந்த அடிப்படையில் இத்தொகுப்புகளின் முதல் கட்டுரையே அமைந்திருப்பது சிறப்புக்குரியது. “நிலவியற் பின்னணி”, “காலப்பின்னணி”, “சமுதாயப் பின்னணி” ஆகியவைகளைக் கொண்டு முதற்கட்டுரை அமைகிறது.

மற்றுமொரு கட்டுரையில் “உலகத் தோற்றத்தின் முதன்மையான நிலத்தையும் காலத்தையும் சூர்யகாந்தன் தமது நாவல்களில் வெளிப்படுத்தி அதன் மூலம் கருப்பொருட் களையும், அதன் மாற்றங்களினால் ஏற்படும் மனித உணர்வு களை உரிப்பொருளாகவும் வாசகர் மனத்தில் எழுப்பிக் காட்டியுள்ளார்” (ப-247, தொ-1) என்பதோடு நிலமும் நிலம் சார்ந்த உணர்வுகளைப் பெரிதும் வெளிப்படுத்தும் நாவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை, “மானாவாரி மனிதர்கள்”, “பூர்வீக பூமி”, “கிழக்கு வானம்”, “கல்வாழை” போன்றவையாகும்.

நாவல் தோன்றிய காலத்திலிருந்து அதில் இடம்பெறும் பாத்திரப் படைப்பு கதைப்பின்னல், வருணனைத் திறன் பற்றிய கட்டுரைகளை சராசரியானவை. அதே சமயம் கதைக் கருவிற்கு அழுத்தம் தருபவர்கள் கதை மாந்தர்களே என்ற நோக்கில் ஆய்வு செய்திருக்கும் கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது.

“மானாவாரி மனிதர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்” என்ற கட்டுரை ஆசிரியர் தள்ளி நின்று பார்த்து பாத்திர உருவாக்கத்தை அமைக்காமல், அனுபவ அறிவு கொண்டு படைத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் கதைக்கு நம்பகத் தன்மையைத் தருவதோடு மனித குலத்திற்கு முன்மாதிரியாக விளங்குகிறார்கள் என்கிறார்.

தம் அனுபவத்தில் பார்த்த நிஜ மனிதர்களையே பாத்திரங்களாக்கிப் பார்த்திருப்பது படிப்பவரிடம் உண்டாகும் நம்பகத் தன்மையையும் யதார்த்தமும்தான் சூரியகாந்தனின் இலக்கிய பலமென்று சொல்லலாம்.

“சூர்யகாந்தன் நாவல்களில் யதார்த்தங்கள்” என்னும் கட்டுரையில் ‘யதார்த்தம்’ என்னும் சொல்லின் அத்தனை விதமான விளக்கங்களையும் தருவதோடு, அவற்றை இயல்பாகக் கொண்டு சூர்யகாந்தன் தம்முடைய நாவல்களைப் படைத்துள்ள விதம் குறித்தும் ஆராய்கிறார். ‘யதார்த்தம்’ என்பதை இங்கு இயல்பான, உண்மையான, வலிந்து புகட்டாத, நம்பகமான, சூதற்ற அதே போன்று உறுதியான என்ற பொருள் கொண்டே பயன்படுத்துகிறேன். ஆம்! இப்படித்தான் சூர்யகாந்தன் தன் நாவல்களைப் படைத்திருக்கிறார்.” (ப. 49 - தொ - 1)

அதே கட்டுரை, “உள்ளதை உள்ளபடி யதார்த்தமாக எடுத்துரைப்பது சங்க காலத்தை நமக்கு நினைவு கூர்வதாக இருக்கிறது”. “இந்த யதார்த்தப் போக்குதான் படைப்புலகில் சூர்யகாந்தனை உயர்த்தியிருக்கிறது” எனும் முடிவுகளைத் தருகிறது.

‘கல்வாழை’ நாவல் குறியீட்டு நாவலாய் நின்று தமிழ் நாவல் வரலாற்றில் ஒளிவீசுகிறது. “தன் குடும்பத்தாரின் நலனுக்காகச் சுயநலத்தைத் தியாகம் செய்யும் நடேசனின் பண்பைக் கல்வாழைக்கு ஒப்பிட்டு, ‘கல்வாழை’ என நாவலுக்குத் தலைப்பிட்டமை ஆசிரியரின் ஆழ்ந்த எழுத்தாற்றல் திறனைப் பறைசாற்றுவதாய் அமைகிறது”. (ப-65, தொ-1)

“இலக்கிய மாந்தர் பெயரும் தலைப்புப் பெயரும்” என்ற கட்டுரையை வித்தியாசமான முயற்சி என்று சொல்லலாம். “புதின மாந்தர் பெயர்கள், இடத்துக்கும் இனத்துக்கும், காலத்துக்கும் பொருந்திய பெயராக அமைவது தலையாய பண்பு! இதற்கும் மேலாகக் கதை மாந்தரின் பெயர் அவர் பண்பைக் காட்டுவதாக அமைதல் இன்றியமையாதது” (ப-199, தொ-1) எனப் பெயர் வைப்பதற்கான காரணங்களைச் சரியாகச் சொல்லி கட்டுரை தொடங்குகிறது.

“கோவை மாவட்டத்தின் சாயல் தெற்றெனத் தெரியவரும் பெயர்கள் நஞ்சப்பன், ராமண்ண கவுண்டர், சுப்பண்ணன் என்பனவாகும். நஞ்சப்பன் என்ற பெயர் நஞ்சுண்டான் என்ற சிவனைக் குறிக்கும் பெயர்; ஆயினும் நெஞ்சில் கரவை ஒளித்துப் பழநியப்பன் அறியாமல் பொருளும் சொத்தும் சேர்த்த நஞ்சப்பனுக்குப் பெயராகிறது.” (ப-200-தொ-1) நாவல் படைக்கும்போது கரு, பாத்திரப்படைப்பு, உரையாடல், பின்னணி எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படு கிறதோ அதே அளவு தலைப்பும், கதாபாத்திரங்களின் பெயரும் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை நிறுவியுள்ளது இக்கட்டுரை.

கதை இலக்கியத்திற்கு உயிர்ப்பாகத் திகழும் மொழித்திறன் குறித்த கட்டுரையும் இடம் பெறுகிறது. “..... மொழி நடை கதையாசிரியனைப் புறக்கணித்து விட்டுக் கதை மாந்தர்களைத் தழுவிக் கொள்வதன் வாயிலாக நிகழ்ச்சிக்கும் மாந்தருக்கும் உயிர்ப்பாற்றலை வழங்குகிறது. இந்த ஆற்றல் ஓர் வட்டாரத்தின் அல்லது இனத்தின் வாழ்வியலை விவரிக்கிற கதைகளுக்கும் மிக இன்றியமையாத தகுதியாகும். இத்தகைய மொழியாற்றல் பேரளவில் எழுத்தாளர் சூர்யகாந்தனிடம் அடைக்கலமா கியுள்ளது”. (ப-268, தொ-1)

சூர்யகாந்தனின் பேச்சில் மட்டுமல்ல எழுத்திலும் அதிகமாகக் கொங்குமணம் வீசுகிறது. மண்ணை நேசித்தவனின் எழுத்துக்களே அவனை மாபெரும் படைப்பாளியாக ஆக்குகிறது. அந்த வகையில் தான் பிறந்து வளர்ந்த கோவையைச் சுற்றியுள்ள மானாவாரி நிலத்தை, மானாவாரி மனிதர்களை நேசித்த, நேசித்துக் கொண்டிருக்கும் சூர்யகாந்தன் அவர்களின் மொழியோடு அவர்களைப் படைத்து மாபெரும் படைப் பாளிகளுள் ஒருவராகிறார்.

கடந்த பத்தாண்டுக் காலமாகப் புதிய ஆய்வு அணுகுமுறைகளாகத் திகழும் பெண்ணியம், தலித்தியம் நோக்கிலும் சூர்யகாந்தனின் நாவல்கள் சிறுகதைகள் ஆராயப்பட்டுள்ளன.

1. தலித்திய நோக்கில் சூர்யகாந்தனின் ‘விதைச் சோளம்’ / 2. விதைச் சோளத்தில் தாழ்த்தப்பட்டோர் நிலை / 3. ‘விதைச் சோளம்’ - தலித் இலக்கியம் / 4. வேட்கை வெளிப்படுத்தும் பெண்கள் நிலைப்பாடு / 5. மானாவாரி மனிதர்களில் மகளிர் நிலை / 6. விதைச் சோளத்தில் பெண்ணடிமைப் பிரச்சினை /
7. எதிரெதிர் கோணங்களில் பெண்ணியம் / 8. சூர்யகாந்தனின் படைப்புகளில் பெண்பாத்திரங்கள்.
நாவலின் வழி, நாவலில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் வழி பெண்ணின் பெருமை, தியாகத்தன்மை, நேர்மை போன்றவற்றை ஆசிரியர் போற்றுகிறார்.

“மானாவாரி மனிதர்களில் / பெண்களின் நிலை” என்ற கட்டுரை ‘தண்ணீர்ப் பிரச்சினையில் முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களே’ என்கிற உண்மையைச் சமூகத்திற்குக் கண்டுபிடித்துத் தருகிறது. வேட்கை - சிறுகதைத் தொகுதி பற்றிய கட்டுரை பெண் களுக்கான பிரச்சினைகளை மட்டுமல்லாமல், பெண்களின் ஆளுமைகள், முன்னேற்றம் குறித்தும் சிறுகதைகள் பேசுகின்றன என்பதைத் தெளிவாக்குகிறது.

புலம்பெயர்ந்தோர் என்பதற்கு ஆய்வாளரான முனைவர் இந்திரசித்து தரும் பொதுவான விளக்கமும், புதுவிளக்கமும் தமிழ்த் திறனாய்வு உலகிற்குப் புதியன.! புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தில் வைத்து பூர்வீக பூமி நாவலைப் பார்க்கிறார்.

“புலம் பெயர்ந்தோர் என்ற சொல்லை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் சென்று வாழ்வோரைக் குறிக்கவே பயன்படுத்தியுள்ளனர்.... ஆனால் ஒரு நாட்டுக்குள்ளே ஓர் இனத்தைச் சேர்ந்த மக்கள் இன்னொரு இனத்தைச் சேர்ந்த மக்கள் குழுவின் மத்தியில் வாழ நேர்ந்தாலும் அவர்களையும் புலம் பெயர்ந்தோர் என்றே அழைக்கலாம். தமிழ் நாட்டினர் கன்னட நாட்டினரோடு சேர்ந்து வாழும்போது ஏற்படும் சிக்கலை சூர்யகாந்தனின் ‘பூர்வீக பூமி’ நாவல் மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது.” (ப-39, தொகு-1)

ஒரு சூழலிலிருந்து மற்றொரு சூழலுக்கு இடம் பெயர்கிற போது மண்ணிய உறவுகள் அன்னியப்பட்டுப் போவதோடு இடம் பெயர்ந்த மக்கள்
எதிர்கொள்ளும் சிக்கல்களையும் வகைப்படுத்தியுள்ளார் நாட்டுப்புறவியல் ஆய்வாளர் ஜெயலட்சுமி. முதன்மையானது மொழிச்சிக்கல், இதன் காரணமாக வசிப்பிடச் சிக்கலும் இடமும் உணவு, தட்ப வெப்பம் போன்றவைகளும் வாழ்நிலையைப் பாதிப்புக்கு உள்ளாக்கு கின்றன என்கிறார்.
“சூர்யகாந்தன் நாவல்களில் இடப்பெயர்வுகள்” கட்டுரை மக்கள் இடம் பெயர்வதற்குக் காரணம் வறுமைதான் என்ற கருத்தை முன் வைக்கிறது.
நாவலின் காட்சி அமைப்பு நாடகத்தின் காட்சி அமைப்போடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளது.

நாடகம் மற்றும் திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் காட்சி அமைப்பின் அடிப்படையில் மானாவாரி மனிதர்களும், எதிர் எதிர் கோணங்களும் அணுகப்பட்டுள்ளன.

சூர்யகாந்தனின் நாவல்களும் இரண்டு களங்களும்

“சூர்யகாந்தன் புதினங்கள் அனைத்திலும் முதற்களம் கிராமங்களாக இருக்கிறது. பின் நகர்மயம் ஆகி வறுமையை வெல்ல வாழ வழிதேடி வந்த நகர்ப்புறம் இரண்டாம் களமாகச் சித்திரிக்கப்படுகின்றது”. (ப-208, தொ-2)

உலகத்தின் பெரும் நகரங்கள், ஊடகத்தின் வழியோ போக்குவரத்துச் சாதனங்களின் வழியோ ஒன்றிணைந்து ஒரே கிராமமாக மாறிவரும் சூழலில், உண்மையான கிராமங்கள் சிதைந்து தம் இயல்பில் திரிகின்றன.

மானாவாரி மனிதர்களும் உலகமயமாதலும்

உலகமயமாதல் என்ற புதிய சித்தாந்தம், உலகில் மூன்றாம் தர நாடுகள் குறிப்பாக கிழக்காசிய நாடுகளை வெகுவாகப் பாதித்துள்ளன. அதிலும் இந்நாடுகளில் உள்ள கிராமங்கள்தான் பெரும் சவாலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

தாராள மயமாக்கம் / நகர் மயமாக்கம் / தனியார் மயமாக்கம் என்ற நிலைப்பாடுகளில் உலகமயமாதல் தன்னை வெளிக்கொணர்கிறது. இந்த உலக மயமாதலின் காரணமாக இந்திய கிராமங்கள் இழந்தவை அதிகம் நன்கு தெரிந்த விவசாயத் தொழிலை விட்டு வேறு வேறு தொழில் செய்யும் நிர்ப்பந்தம், கூட்டுக் குடும்பம் சிதைவு, நகர் சென்று தொழில் செய்தல், நகரோடு ஒத்துப் போக இயலாமை, ஆடம்பரத்திற்கு அடிமையாகல் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றையெல்லாம் தன் படைப்புகளின் வழி மக்களுக்கு அறிவுறுத்துகிறார் சூர்யகாந்தன்.

தனி மனித முக்கியத்துவம்

- ‘விடுதலைக்கிளிகள்’ சிறுகதைத் தொகுப்பு தனிமனித நிலையை அவலத்தை எடுத்துரைக்கிறது.

உத்தி முறை ஆய்வு

‘வேட்கை’ தொகுதியில் இருக்கும் சிறுகதைகள் உளவியல் பாங்கில் அமைந்த பின்னோக்கு உத்தி முறையில் ஆராயப்பட்டுள்ளன.
‘சூர்யகாந்தன் நாவல்களில் சமுதாய பின்புலம்’ என்ற கட்டுரை சூர்யகாந்தன் நாவல்கள் அனைத்தும் ‘மனித நேய உணர்வு மிக்கவை’ என்ற கருத்தை முன்வைக்கிறது.

சில கட்டுரைகள், நாட்டுப்புறவியல் கூறுகளுடன் வைத்து சூர்யகாந்தன் நாவல்கள் சிலவற்றை ஆய்வு செய்துள்ளன. “நாட்டுப்புற வாழ்வில் காணப்படும் நம்பிக்கைகள், சடங்குகள், காதல் பாடல்கள் போன்றவைகளை ஆசிரியர் சூர்யகாந்தன் தனக்கே உரிய தனிச் சிறப்பான எழுத்தாற்றல் மூலம் ‘கிழக்கு வானம்’ புதினத்தில் எடுத்துக்கூறி இருப்பது நாட்டுப்புறவியல் துறைக்குப் புதிய கொடையாக அமைகிறது.” (ப-126-தொ-1)

சமுதாயத்தில் நடைபெறும் மனிதத் தன்மையற்ற செயல்பாடுகள், அல்லது மனிதக் குலத்திற்கு எதிரான செயல்பாடுகள் அதாவது சமுதாயச் சீர்கேடுகளை மட்டுமே தொகுத்துரைக்கும் கட்டுரை ஒன்று இடம் பெறுகிறது. “சமுதாயச் சீர்கேடுகளைத் தமது கதைகளில் நுணுக்கமாகக் கூறியிருப்பதன் காரணம் அச்சீர்கேடுகள் களையப்பட வேண்டும் என்ற அவரது ஆழமான எண்ணமும் ஆகும்” என்கிறார் திறனாய்வாளர்.
இரண்டாயிரம் வருடத்துக்கும் மேம்பட்ட நீண்டதொரு வரலாற்றைக் கொண்டது தமிழ்க் கவிதை. கவிதைகளில் பயின்று வரும் உவமைகள் குறித்து இதுவரை எண்ணற்ற ஆய்வுகள் வெளிவந்துள்ளன.

நாவல்களில் பயின்று வரும் உவமைகள் பற்றற்ற குறிப்பாக ‘மானாவாரி மனிதர்கள்’ நாவலில் இடம் பெறும் உவமைகள் குறித்து ஆய்வு செய்திருக்கும் முயற்சி வித்தியாசம் தென்படுகிறது. நாவல் எழுதினாலும் ஆசிரியரின் கற்பனை யாற்றலை ஒளிந்திருக்கும் கவிதைத் தனத்தை எடுத்துரைக்கும் வகையில் உவமைகள் பற்றிய ஆய்வுகள் அமைகின்றன.

படைப்பை மட்டுமல்லாமல் படைப்பாளியை உருவாக்கிய சூழல், படைப்பு உருவான சூழல் குறித்தும் படைப்பின் உள்ளடக்கம் குறித்தும் ஆய்வுக் கட்டுரைகள் அமைந்துள்ளன. இவ்விரு தொகுதிகளிலும் ஒற்றுப்பிழைகள், தொடர் பிழைகள், எழுத்துப்பிழைகள் இல்லாமல் அச்சிடப் பட்டு நன்கு சரிபார்த்திருப்பது மகிழ்வைத் தருகிறது.

கொங்கு நாட்டுக் கிராம மக்களின் பழக்க வழக்கங்கள் சூர்யகாந்தனின் படைப்புகள் வழியாகக் கலைவடிவம் பெறுகின்றன.
நாவலில் இருக்கும் படிமங்கள் குறித்து ஆராய முனைந்திருப்பது புதுமையானது. படிமக் கோட்பாடு பற்றிய கட்டுரை நடுத்தரக் குடும்பத்தின் நிலைகளை எடுத்துரைக்கும் போக்கையே பேசுகிறது. படிமம் பற்றிய விளக்கமோ, படிமக் கோட்பாடு நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள விதமோ குறிப்பிடப்படவில்லை. கட்டுரையின் இறுதியில் மட்டும்.

“பேரூர் என்பது வெறும் ஊர் அல்ல! வெறும் கதைக்களம் மட்டும் அல்ல. அது ஒரு படிமம்!” என்கிறார் திறனாய்வாளர். படைப்பை, படைப்பாளியை அந்தந்த படைப்புகளோடு வாசித்துத் தெரிந்து கொள்வதும் புரிந்துகொள்வதும் ஒரு அனுபவம் என்றால், அப்படைப்புகளைப் பற்றி வெளிவந்துள்ள திறனாய்வுகள் வழியாக படைப்பையும், அதை உருவாக்கிய படைப்பாளியையும் தெரிந்து கொள்வது மற்றொரு அனுபவம்.

ஒரு படைப்பாளியின் பல்வேறு படைப்புகளைப் பற்றிப் பல்வேறு திறனாய்வாளர்கள், அறிஞர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் ஆகியோரால் ஆராய்ந்து எழுதப்பட்ட இவ்விரு கட்டுரைத் தொகுதிகள், படிக்கின்ற வாசகர்களின் வாசிப்பு பரப்பை விரிவாக்குகிறது. ஒரு படைப்பை எவ்வாறெல்லாம் பார்க்கலாம் என்பதைத் தெரிவிக்கின்றது. வாசகர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பல்வேறு விதமான வாசிப்பு அணுகுமுறைகளை இத்தகைய திறனாய்வுத் தொகுதிகள் உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கை பெருக்கிச் செல்கிறது.

“சூர்யகாந்தனின் படைப்பிலக்கியத் திறனாய்வுகள்” (இரு தொகுதிகள்)
விலை ஒவ்வொன்றும் தலா ரூ. 105,
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 98.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com