Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

கட்டுரை

சிறுபான்மை மொழியினர்
சோம. சிவகுமார்

“சிறுபான்மை மொழியினர்” என்போர், இந்தி யாவின் ஏதாவது ஒரு மாநிலத்தில், அல்லது இந்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட ஒரு பகுதியில் பேசப்படும் முதன்மை மொழி தவிர்த்து வேறொரு குறிப்பிட்ட மொழியினைப் பேசும் அல்லது எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தும் குழுவினர் ஆவர். இம்மக்கள் தங்களுக்கே உரித்தான பேச்சு மொழியும், அதற்கான எழுத்து வடிவமும் கொண்டவர்கள். அது, இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள பதினெட்டு மொழிகளுக்குள் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை. அதாவது, 1956ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பின் அதன்படி, ஒரு மாநிலத்தில் பெருவாரியாகப் பேசப்படும் ‘முதன்மை மொழியை’த் தவிர பிற மொழிகளைத் ‘தாய்மொழி யாக’க் கொண்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சிறுபான்மை மொழியினர்” என்று அழைக்கப்படுகின்றனர். மாநிலம், மாவட்டம், வட்டம் என்னும் அளவிலும் இந்நிலை உண்டு.

தமிழகத்தில் தமிழ் மொழியைத் தவிர பிற இந்திய மொழி பேசுவோர் சிறுபான்மை மொழியினராகக் கருதப்படுவர். மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்டபின் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள், வட்டாரப் பகுதிகளில் மலையாள, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பேசும் மக்கள் கணிச மான அளவில் வாழும் நிலையேற்பட்டது. அத்தகைய மக்கள் வாழும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அவை சிறுபான்மை மொழியினர் வசிக்கும் பகுதிகளாக அரசால் அறிவிக்கப் பட்டுள்ளன. மேலும், இதே அளவீட்டின்படி ஒரு மாநிலத்தின் உட்பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளுக்கும் அத்தகுதி வழங்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப் பின்னும் இத்தகைய பகுதிகள் மாநில அரசுகளால் கண்டறியப் பட்டு ‘சிறுபான்மை மொழியினர்’ வசிக்கும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இனம், மத ரீதியிலான, சிறுபான்மையினருக்காகப் பாதுகாப்பும் சில உரிமைகளும் தொடக்கம் முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், பின்னர் மொழி ரீதியிலான சிறுபான்மை யினருக்கும், அரசியலமைப்பு (ஏழாவது திருத்த) சட்டம், 1956-ன் படி சில பாதுகாப்புகள் மற்றும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறுபான்மையினருக்கான அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்புகள்:

பிரிவு 29: சிறுபான்மையினர் நலன்களைக் காத்தல்.

1. இந்திய எல்லைக்குள் அல்லது அதன் ஏதாவது ஒரு பகுதிக்குள் வாழும் மக்கள், தமக்கெனக் கொண்டுள்ள தனி மொழி, எழுத்து மற்றும் பண்பாட்டைப் பேணிக் காக்க உரிமையுள்ளது. 2. சாதி, சமயம், இனம், மொழி அல்லது இன்ன பிற வேறுபாடுகளால் எந்த ஒரு குடிமகனுக்கும், அரசால் அல்லது அரசு உதவியால் நடத்தப்படும் ஒரு கல்வி நிலையத்தில் அனுமதி மறுக்கக்கூடாது.

பிரிவு 30: மதம் அல்லது மொழி அடிப்படையிலான சிறுபான்மையினர் தங்களுக்கென கல்வி நிலையங்களை உருவாக்கி நடத்தும் உரிமை. 1. மதம் மற்றும் மொழி அடிப்படை மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு சிறுபான்மையினரும், தமக்கென கல்வி நிலையங்களை உருவாக்கி அவற்றை நிருவகிக்கும் உரிமையுள்ளது. 2. மதம் அல்லது மொழி அடிப்படையில் சிறுபான்மையினரால் ஒரு கல்வி நிலையம் நடத்தப்படுகிறது என்று, அரசு, உதவியளிப்பதில் எத்தகைய பாகுபாட்டையும் காட்டக்கூடாது.

பிரிவு 347: ஒரு மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட மக்கள் பேசும் மொழிக்கான சிறப்புப் பிரிவு. ஒரு மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் ஒரு கணிசமான பிரிவினர் பேசும் மொழியினை அந்த மாநிலத்தில் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுமானால், அத்தகைய கோரிக்கை, குடியரசுத் தலைவரின் ஆணைப்படி அம்மாநிலத்தின் அதிகாரப் பூர்வ மொழியாக அந்த மாநிலம் முழுவதும் அல்லது அவரால் குறிப்பிடப்படும் பகுதி, பணிகளுக்கு பயன்படுத்தப்படலாம்.

பிரிவு 350: குறை தீர்க்கும் முறையீடுகளில் பயன்படுத்தப் பட வேண்டிய மொழி. மத்திய அல்லது மாநில அரசின் அலுவலர்கள் அல்லது அவற்றின் நிருவாக அதிகாரம் பெற்றவர் களிடம் தம் குறை தீர்ப்பதற்கான முறையீடுகளில், மத்திய அல்லது மாநில அரசு பயன்படுத்தி வரும் எந்தவொரு மொழியினையும் பயன்படுத்தலாம்.

350A: தாய்மொழியில் கல்வி கற்பதற்கான வசதிகள். ஒவ்வொரு மாநில அரசும் மற்றும் அவற்றின் உள்ளாட்சி அமைப்புக்களும், அம் மாநிலத்தில் சிறுபான்மை மொழி யினராகக் கருதப்படும் பிரிவினரின் குழந்தைகள் அவரவர் தாய்மொழியில் ஆரம்பக் கல்வி பெற வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். தேவையெனில், குடியரசுத் தலைவரும் இத்தகைய வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று எந்தவொரு மாநிலத்திற்கும் அறிவுறுத்தலாம்.

350B: சிறுபான்மை மொழியினருக்கான சிறப்பு அலுவலர். 1. குடியரசுத் தலைவர் சிறுபான்மை மொழியினருக் கென்று தனிப்பட்ட சிறப்பு அலுவலரை நியமிக்கலாம். 2. அவ்வாறு நியமிக்கப்படும் சிறப்பு அலுவலர் சிறுபான்மை மொழியினருக்கு அளிக்கப்படும் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து, அவ்வறிக்கையைக் குடியரசுத் தலைவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு, பெறப்படும் ஆய்வறிக்கை பாராளு மன்றத்தின் முன்வைக்கப்படும்; மேலும், அனைத்து மாநிலங் களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

இவ்வாறு அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துக் கூறியுள்ள பாதுகாப்புகள் மட்டுமல்லாது மற்றப் பொதுப் பிரிவுகளான 14 (அடிப்படை உரிமைகள்), 15 (வேறுபாடு காட்டாமை) மற்றும் 16 (சம வாய்ப்பு) ஆகியவையும் சிறுபான்மை யினரின் நலன்களைப் பாதுகாப்பதில் துணைபுரிகின்றன.

தேசிய அளவிலான ஒப்புக்கொள்ளப்பட்ட பாதுகாப்புகள்:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் தவிர, சிறுபான்மை மொழியினரின் தாய்மொழிக் கல்வியை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 1961ஆம் ஆண்டு நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாடு குறிப்பிடத் தக்கது. அந்த மாநாட்டில் அனைத்து மாநில முதலமைச்சர் களும் கலந்து ஆலோசித்து, சிறுபான்மை மொழியினரின் நலன்களைப் பாதுகாக்கச் சில திட்டங்களை உருவாக்கினர். அவை தேசிய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட சிறுபான்மை மொழியினருக்கான பாதுகாப்புகள் (Safeguards for Linguistic Minorities) என்றழைக்கப்படுகின்றன.

அவற்றுள் குறிப்பாக, ஒரு வகுப்பில் பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விரும்பினால், அவர்களின் விருப்பத்திற்கேற்ப அச்சிறுபான்மை மொழியில் பயிற்சி அளிக்கப்பட வேண்டுமென்று முதலமைச்சர்கள் ஒருமனதாக முடிவு செய்தனர். இவ்விருப்பத்தினைத் தெரிந்துகொள்வதற்காக எல்லாப் பள்ளிகளிலும் முன்கூட்டியே பதிவேடுகள் வைப்ப தென்றும் தீர்மானிக்கப்பட்டது. இவற்றில் மாணவரின் தாய் தந்தையர் தம்முடைய மொழியைக் குறிப்பிடலாம். அதன்படி, தேவைக்கேற்ப அரசு / பள்ளி நிருவாகம் ஆசிரியர் நியமனம் மற்றும் பாடப் புத்தகங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், அத்தகைய சிறுபான்மையினரின் கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்குரிய உதவிகள் அனைத்தும் நல்க வேண்டும் என்றும் மாணவர்களை ஊக்குவிக்கப் பள்ளிகளுக் கிடையேயான பல நிகழ்ச்சிகளுக்கும் ஆவன செய்யலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

சிறுபான்மை மொழியினருக்கான பாதுகாப்புகள்:

1. ஒரு மாவட்ட, வட்ட அளவிலான மக்கட்தொகையில் 15 விழுக்காடு மக்களால் பேசப்படும் எல்லா மொழிகளிலும் முக்கியமான சட்டங்கள், ஆணைகள் மற்றும் நெறிமுறைகளின் மொழி பெயர்ப்பினை வெளியிடுதல்; 2. ஒரு மாவட்டத்தில் 60 விழுக்காடு அல்லது அதற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் சிறுபான்மை மொழியை அம் மாவட்டத்தின் ஆட்சி மொழியாக அறிவித்தல்; 3. சிறுபான்மை மொழிகளில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, அதே மொழியில் பதில் அளித்தல்; 4. ஆரம்பக் கல்வியைத் தாய்மொழி / சிறுபான்மை மொழிகளில் அளித்தல்; 5. இடைநிலைக் கல்வியை சிறுபான்மை மொழியில் அளித்தல்; 6. சிறுபான்மையின மாணவ, மாணவிகளின் மொழிவாரி முன்னுரிமையைப் பதிவு செய்தல்; 7. சிறுபான்மை மொழிகளில் ஆசிரியர் மற்றும் பாடப் புத்தகங்களை ஏற்பாடு செய்தல். 8. அரசு பணிகளில் சேர்க்கும்பொழுது ஆட்சி மொழி யறிவு அடிப்படையில் சேர்க்கை மறுத்தல் கூடாது. மேலும், பயிற்சிக் காலம் நிறைபெறுவதற்கு முன்பே ஆட்சி மொழியில் தேர்ச்சி கட்டாயமாக்கல் கூடாது. 9. மொழிவாரி சிறுபான்மையினருக்கு தரப்பட்டுள்ள உத்திரவாதங்களை விளக்கும் கையேடுகளைச் சிறுபான்மை மொழிகளில் வெளியிடுதல்.

10. மாநில மற்றும் மாவட்ட அளவில் மொழிவாரி சிறுபான்மையினரின் உரிமைகளை நடைமுறைப்படுத்தத் தேவையான அமைப்பை ஏற்படுத்துதல்.
இந்தப் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்றும் பொறுப்பு ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் கடமையாகும். நாடு முழுதும் இவ்வாறு மேற்கொள்ளப்படும் பணிகளைக் கண்காணிக்க, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 350B-ன் படி ஒரு சிறப்பு அலுவலரை, இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அவர், “சிறுபான்மை மொழியினருக் கான ஆணையர்” என்று அழைக்கப்படுகிறார்.

சிறுபான்மை மொழியினருக்கான ஆணையர்:

சிறுபான்மை மொழியினருக்கான முதல் ஆணையர், 1957ஆம் ஆண்டு, ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். சிறுபான்மை மொழியினருக்கான ஆணையர், அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மை மொழியினருக்கு தரப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தேசிய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் நடைமுறைப்படுத்தலைக் கண்காணித்து ஆய்வு செய்து, அவ்வாய்வறிக்கையைக் குடியரசுத் தலைவருக்கு ஆண்டுதோறும் சமர்ப்பிக்கிறார். அவ்வறிக்கை பாராளு மன்றத்திலும் தாக்கல் செய்யப்படுகிறது. பின்னர், ஒவ்வொரு மாநில அரசுக்கும், உரிய நடவடிக்கைகள் எடுக்க அனுப்பப்படுகிறது.

சிறுபான்மை மொழியினர் ஆணையரின் தலைமையகம் அலகாபாத்தில் அமைந்துள்ளது. மேலும், மத்திய மற்றும் வட மண்டல அலுவலகமும் அதனுடன் இணைந்துள்ளன. கொல் கட்டாவில் கிழக்கு மற்றும் வடகிழக்கு மன்ற அலுவலகமும்; பெல்காமில் மேற்கு மண்டல அலுவலகமும்; சென்னையில் தென்மண்டல அலுவலகமும் ஒரு உதவி ஆணையரின் கீழ் இயங்கி வருகின்றன.

மத்திய அரசு புதிதாக உருவாக்கியுள்ள சிறுபான்மை யினர் விவகார அமைச்சகத்தின் நிருவாகக் கட்டமைப்புக்குள் இந்த அமைப்பு தற்சமயம் செயல்பட்டு வருகிறது. 1956ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைப்பு அடுத்த ஆண்டு ‘பொன்விழா’ காணவிருப்பது குறிப்பிடத்தக்கது. தாய்மொழி வழிக் கல்வியை அனைவரும் அளிப்பதை உறுதி செய்வதில் இவ்வமைப்பு ஆற்றிவரும் பங்கு சிறப்பானதாகும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com