Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

கட்டுரை

சாதி: சாராம்சமா? உருவாக்கமா? விவாதத்திற்கான ஒரு சிறு குறிப்பு
ஆ. செல்லபெருமாள்

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியாவில் சாதி என்பது அறிஞர்களின் ஆய்வுப் பொருளாக பொதுத் தளத்திலும் தனிப்பட்ட விவாதங்களிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியச் சமூக அமைப்பின் அடிப்படையே சாதிதான் என்ற புரிதல் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாகவே அப்பே துபாய்ஸ் முதலாக வரலாற்றாளர்களும் லூயி துமோன் உள்ளிட்ட மானிடவியல் அறிஞர்களும் தங்களது ஆய்வுகளை வெளியிட்டனர்.

இந்தியச் சமூகத்தின் சாரமாக சாதி இருப்பதால்தான் பௌத்தம், இஸ்லாம், நவீனத்துவம், தொழில்நுட்பம், சமத்துவம் என எந்தக் கருத்தியலாலும், சக்தியாலும் சாதியத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த இயலவில்லை என்ற ஒரு நிலைப்பாடு சில அறிஞர்களிடையே நிலவுகின்றது. அதனால்தான் ஹெர்பர்ட் ரைஸ்லி, ஹெகஸ், மார்க்ஸ், ஜி.எஸ்.குரே, எம்.என். சீனிவாஸ், லூயி துமோன், மிக்கிம் மாரியாட், ஈ.வெ.ரா. பெரியார், பி.ஆர். அம்பேத்கர், காந்திஜி, நேருஜி என எண்ணிலடங்கா அறிஞர்கள். சீர்திருத்தவாதிகள் என அனைவரும் சாதிய ஏற்றத்தாழ்வை இகழ்ந்தாலும் சரி அல்லது மதித்திருந்தாலும் சரி இந்திய நாகரிகம், பண்பாடு, மரபு ஆகியவற்றுக்குச் சாதியே அடிப்படை என்ற கருத்தில் ஒத்துப் போகின்றனர்.

இந்தியச் சமூகத்தின் சாராம்சம் சாதியே என்னும் இந்தக் கொள்கை மிக்க செல்வாக்கு பெற்றது லூயி துமோவின் 1966இல் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்ட ஹோமோஹைரார்க்கிகஸ் (Homohieararchicus) என்ற நூலினால்தான். இந்நூலின் திருத்தப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு 1980-ல் வெளிவந்தது. அந்த நூல் இந்திய மானிடவியலின் உயர்தனிச் செந்நூல் என்ற நிலையைப் பெற்றது. அந்நூலில் துமோ கீழ்க்காணுமாறு வாதிடுகின்றார். இந்தியச் சமூக அமைப்பை தூய்மை / தீட்டு என்ற எதிர்மறைக் கொள்கையின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுதான் நிர்வகித்துக்கொண்டிருக்கிறது என்றும் சாதிய அமைப்பு என்பது இந்த அரூபக் கருத்தியலினால் வெளிப்படுத்தப்படுவது என்றும் அவர் கூறுகின்றார். இந்த ஏற்றத்தாழ்வுக் கொள்கையை சமயத்தின் பாற்பட்டது என்றும் அவர் வரையறுக்கின்றார். அதனால்தான் நாட்டின் அரசனாகவே இருந்தாலும் அவன் பிராமணர் என்ற பூசாரியின் சமய அந்தஸ்தை ஒப்பிடும்போது கீழானவனே என்றும் அவர் கூறுகிறார். மேலும் சாதிய ஏற்றத்தாழ்வு ‘மாறாதது’ என்பதால் இந்திய வரலாற்றாளர்கள் வரலாற்று மாற்றத்தை அறிய முற்படுவதை விட்டுவிட்டு இந்திய நாகரிகத்தில் மாறா அடிப்படைகள் எவை என்பதை அறிய முயலலாம் என்றும் துமோ கூறுகின்றார்.

இஃதன்னியில் உண்மையிலேயே இந்தியச் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கு சாதி என்பது அதன் சாரம்சமா? அல்லது வரலாற்றுப் போக்கில் ஒரு சட்டகமாக பலரால் உருவாக்கப்பட்டு தொடரப்படுகின்றதா என்பதும் அண்மையில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சாதி என்பது இந்தியச் சமூக அமைப்பின் சாராம்சம் என்பதைவிட அது ஒரு நெறியியல் சட்டகமாக தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவதே மேலதிகமான உண்மை என்ற நிலைப்பாட்டை சில அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எட்வர்ட் செயித்தின் கீழைத் தேயவியல் (Orientalism) என்ற நூலின் வருகைக்குப் பிறகு அந்த நிலைப்பாட்டினரின் குரல் ஓங்கி ஒலிக்கும் சில முக்கியமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. சூசன் பெய்லி, கிறிஸ்டோபர், ரொனால்ட் இண்டென், நிக்கோலஸ் டர்க்ஸ் போன்ற இந்த மானிடவியலர் மற்றும் வரலாற்றியலர்கள் இரண்டாம் நிலைப்பாட்டை வலியுறுத்தும் அறிஞர்களாவர்.

இந்த அறிஞர்கள் காலங்காலமான ‘மரபுகளின்’ தோற்றத்தையும் அதன் நியாயத்தையும் வரலாற்று வரைவியல் அடிப்படையில் கேள்விக்குட்படுத்துகின்றனர். இவர்களது கூற்றுப்படி மரபான இந்தியாவின் பல கூறுகள் உண்மையில் மேற்கத்திய பார்வையாலும், காலனிய ஆட்சியினாலும் உருவாக்கப்பட்டவையாகும். இத்தகையக் கட்டமைப்பு நிலைப் பாட்டளர்களின் கருத்து பின்வருமாறு: இந்தியாவை கருத்தாக்க ரீதியில் பிரிட்டிஷார் புரிந்துகொண்டு செயல்பட முற்பட்டபோது சிக்கலான பல சமிக்ஞைகளையும் அதன் அர்த்தங்களையும் சில ஆகுபெயர் தளத்திற்குள்ளேயே அவற்றைச் சுருக்கிவிட்டனர். பிரிட்டிஷார் இந்தியாவை பல விதிகளும் ஒழுங்குகளும் மிக்க இடமாக மறுவரையறை செய்துவிட்டு தங்களுக்கு நிறைவளிக்கின்ற விதத்திலான இந்திய விதிகள் மற்றும் வழக்கங்களையும் கட்டமைத்து பின்பு அவற்றையே இந்தியர்கள் தொடர்ந்து பின்பற்றுமாறும் செய்தனர். (Cohn 1996.P.162) இதன் மூலம் நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் சாதி என்பது இந்தியச் சமூகத்தின் பழங்கால சாராம்சம் என்பதைவிட காலனிய கண்டுபிடிப்பு என்பதே. ரோனால்ட் இண்டென் என்ற அறிஞரும் இதே கருத்தையே வேறுவிதமாக வலியுறுத்துகின்றார். அதாவது மேற்கத்தியர்கள் இந்தியாவைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவே ஜாதியை அதற்குரிய வரலாற்றோடு பார்க்க எத்தனிக்கவில்லை என்கிறார்.

நிக்கோலஸ் பி. டர்க்ஸ் வெளியிட்ட Castes of Mind: Colonialism and the making of Modern India என்ற நூலும் சாதி என்பதை ஒரு கட்டமைப்பாக புரிந்துகொள்ளப்பட்டது என்பதை வலியுறுத்துகின்றது. லூயி துமோவின் கருத்துக்களை டர்க்ஸ் முற்றாய் மறுக்கின்றார். டர்க்ஸின் கருத்துப்படி சாதி பண்டைய இந்தியாவில் இருந்து இன்று வரை மாற்றம் பெறாமல் அப்படியே தொடரவில்லை. நாகரிகத்தின் ஒற்றை முறைமையாக சாதியை ஏற்றுக்கொள்வதிற்கில்லை என்பதுடன் அது இந்திய மரபின் அடிப்படை வெளிப்பாடும் அல்ல. காலனிய ஆட்சிக்கு முன்பேயும் இந்தியாவில் சாதி இருந்தது உண்மைதான் என்றாலும் அது பிரிட்டிஷாரின் ஆட்சியின் போதுதான் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. மேலும் பிரிட்டிஷாரின் காலனிய கொள்கையின்படி தங்களது ஆளுகைக்கு உதவுவதற்காகத் திட்டமிட்டு வடிவமைக் கப்பட்டதே சாதி திட்டமிடப்பட்ட காலனிய அறிவுருவாக்கமே சாதி என்றும் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பது டர்க்ஸின் வாதம். அவரது கருத்துப்படி ‘சாதி’ என்பதை பிரிட்டிஷார் ‘கண்டுபிடிக்கவில்லை’ என்பது உண்மைதான் என்றாலும் அதன் மறுகட்டமைப்புக்கும் தொடர்ச்சிக்கும் வழிகோலி யவர்கள் அவர்களேயாம். அதேபோல பத்தொன்பதாம் நூற்றாண்டு மிஷினரிகளின் எழுத்துக்களிலும் இந்தியாவில் சாதி எப்படிப்பட்ட முகாந்திரமானப் பங்கை வகித்து வந்திருக்கின்றது என்பதைப் பதிவு செய்துள்ளனர்.

டர்க்ஸின் கருத்துப்படி காலனி ஆதிக்கத்துக்கு முற்பட்ட இந்தியாவில் பல்வேறுவிதமான சமூக அடையாளக் குழுக்கள் அவ்வப்போதைய சூழலுக்கு ஏற்பச் செயல்பட்டு வந்தனவாம். எடுத்துக்காட்டாக கோயில், அரசு, அரசன் இன்னும் இதைப் போன்ற பலவித அடிப்படைகளினால் அரசியல் சூழலுக்கு ஏற்ப, மாறும் திறத்துடன் அமைந்த சமூக அடையாளக் குழுக்கள் இருந்துவந்தன. காலனிய வெற்றி என்பதை வெறுமனே ராணுவ பலத்தால் மட்டும் சாத்தியப்பட்டு விடவில்லை; மாறாக பண்பாட்டை ஆளுகைப்படுத்துவதிலும் அது அமைந்திருந்தது. ஆவணக உருவாக்கம், கீழைத்தேய வியலரின் தொல்லியல் நோக்கு, சடங்குப் பனுவல்கள், உழவுச் சமூக அமைப்பு, நிலம் ஒழுங்குமுறைப்படுத்தம், வகைமைப்பாடுகள், மதிப்பீடுகள், மானிடவியல் அளவையியல், சாதியக் கணக்கெடுப்பு போன்ற பலவிதமான செயல்பாடுகளினால் பிரிட்டிஷார் தங்களுக்குத் தேவையான விதத்திலான மாற்றத்திற்கு வழிவகுத்துக் கொண்டனர். காலனியியம் இந்திய மரபு உருவாக்கத்திற்கும் அவை அடையாளப்படுத்தப்ப டுவதற்கும் உதவியதுடன் காலனிய நவீனத்துவம் அவற்றை தரக்குறைவானதாகவும் நோக்கியது கீழைத்தேயவியலரின் (டீசநைவேயடளைவள) இந்தியாவுக்கு வரலாறு இல்லை; அப்படி வரலாறு இல்லாமற் போனதற்குக் காரணம் சாதிதான் என்ற கருத்துதான் காலனிய ஆட்சியரிடையேயும் இந்த நாட்டைப் பற்றியும் அதன் மக்களைப் பற்றியும் இருந்தது.

மனுவின் தர்மசாஸ்திரம் அதன் அடிப்படையிலான வருண பேதங்கள்தான் இந்தியச் சமூக அடையாளத்தையும் உறவுகளையும் காலனியர்கள் புரிந்துகொள்வதற்கு அடிப்படையாய் அமைந்தது என்கிறார் டர்க்ஸ். இந்தக் கருத்தை நாம் அப்படியே ஏற்றுக்கொள்வதில் எந்தச் சிரமமும் இல்லை என்றாலும் காலனிய காலத்திற்கும் முற்பட்ட கடந்த காலத்தையும் நாம் நோக்கவேண்டும் என்கிறார் சம்பகலட்சுமி என்ற வரலாற்று அறிஞர். முக்கியமாக வரலாற்றின் இடைக்காலகட்டத்தில் தென்னிந்தியாவின் விஜயநகர பேரரசும் வருணக் கோட்பாட்டை வலியுறுத்தும் விதமாகத்தான் சமூக அடையாளத்தையும் உறவுகளையும் கட்டமைத்தன. எனவே பிரிட்டிஷ் வருகைக்கும் முன்னாலும் அரசுகள் சாதியை மீள்கட்டமைப்பு செய்வதிலேயே குறியாக இருந்தன என்பது புலனாகும்.

சூகன் பெய்லி தனது ‘Caste, Society and Politics in India from the eighteenth century to the modern age’ என்ற நூலில் சாதி பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வந்துள்ளது என்றும் அது வெறுமனே கட்டமைப்பு மட்டும் கிடையாது என்றும் காலனி ஆட்சியின்போதுதான் திடப்படுத்தப்பட்டு அதன் முக்கியத்துவம் அதிகரிக்கச் செய்யப்பட்டது என்கிறார். மேலும் இத்தகைய சாதிய உருவாக்கத்திற்கு பொருளாதார, சமூகத்தளங்களில் பிரிட்டிஷார் காரணமாக அமைந்தாலும் அதற்கு இந்தியர்களின் பங்களிப்பையும் குறைத்து மதிப்பிட இயலாது. காலனியக் கற்பனையில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட சாதி நவீன இந்தியாவிலும் பலவிதங்களில் தொடரப்படுகின்றது என்பது டர்க்ஸின் முடிவு. மேற்குறிப்பிட்டுள்ள குறிப்புகளை வைத்து நோக்கும்போது இந்தியாவின் சாதி என்பது சாரமா அல்லது விசாரமா என்பதை நாம் இன்றும் விரிந்த தளத்தில் விவாதிக்க வேண்டியுள்ளது என்பது புலனாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com