Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

கட்டுரை

கேரளத்தில் நடைபெற்ற தலித் மலைவாழ் மக்களின் கலை இலக்கிய விழா
ஏ.எம். சாலன்

கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையில் கேரள மாநிலத்தில், எர்ணாகுளத்தில் கிர்டாட்சும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும், கேரள அரசும் இணைந்து இந்த தலித் - மலைவாழ் மக்களின் (நாட்டுப்புறக் கலை விழா) கலை இலக்கிய விழாவினை பிரம்மாண்டமான முறையில் நடத் தினார்கள். விழா மாலை 6 மணிக்குத் தொடங்கி (6 மணி முதல் 7.30 வரையில் இலக்கியக் கருத்தரங்கமும், 8 மணி முதல் 11 மணி வரையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன) நிகழ்ச்சி 11 மணி வரையில் நடைபெற்றது.

கருத்தரங்கத்தைப் பொறுத்தமட்டில் தலித்-மலை வாழ் மக்களின் பண்பாடு, அவர்களுக்கு இடையே நிலவிக் கொண்டிருக்கும் கலை வடிவங்கள், காட்டு மிருகங்களுக்கு இடையில் அவர்கள் வாழும் விதம், அவைகளால் அவர்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தொல்லைகள், காடுகளை வெட்டி அழிப்பதால் அம்மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள், அவர்களுடைய கலைகளுக்கும் உழைப்பிற்கும் இடையே இருந்துவரும் உறவு, கலைகளை அம்மக்கள் பாதுகாத்து வரும் விதம், அவைகளை நிகழ்த்தும் சந்தர்ப்பம், போன்றவைகளை மையமாகக் கொண்டு அமைந்திருந்தன. மொத்தத்தில் நம் நாட்டுப்புறக் கலைகளின் பிரம்மாக்களே இந்த தலித்-மலைவாழ் மக்கள்தான் என்றும் அந்தக் கருத்தரங்கம் முடிவு செய்தது.
இந்த விழாவுக்குக் கேரளத்தின் பல பாகங்களிலிருந்தும் தலித்-மலைவாழ் மக்கள் பிரிவைச் சேர்ந்த அறிவு ஜீவிகளும், கலைஞர்களும் வந்திருந்தனர். இவர்கள் போக, அம்மக்களின் வாழ்க்கை, கலை இலக்கியம், பண்பாடு சம்பந்தப்பட்ட ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அறிஞர்களும் இதில் பங்கெடுத்தனர். இவ் விழாவில் அம்மக்களின் கலை இலக்கியங்களின் பெருமையைப் பற்றி மட்டுமின்றி அவர்களின் குலப்பெருமையினைப் பற்றியும் அறிய முடிந்தது.

இவ்விழாவில் ஏராளமான தலித் பாடல்கள் அரங்கேற்றம் பெற்றன. பெரும்பாலான பாடல்களில் வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு வேலை செய்யும் போது அவர்கள் அனுபவிக்கும் வேதனையை அறிய முடிந்தது. சிலவற்றிலிருந்து காதல் உணர்வைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய புதிய தலை முறையினர் பழைய பாடல்களைக் கற்றுச் சுவை குறையாமல் சந்தத்துடன் மேடையில் பாடியது அரங்கில் உட்கார்ந்து கொண்டிருந்த அனைத்துக் கலா ரசிகர்களையும் நாட்டிய மாடவைத்து விட்டது.

கலை நிகழ்ச்சிகளைப் பொறுத்தமட்டில் பாரம்பரியக் கலை உடைகளுடனேயே அரங்கேறின. கேரளத்தின் வயல் களிலும் காடுகளிலும், மலை முகடுகளிலும் வாழ்ந்து வரும் தலித் மற்றும் மலைவாழ் மக்களிடத்தில் ஒளிந்து கிடந்த கலைத் திறன்களை இந்த விழா வெளிக்கொணர்ந்தது எனலாம்.

உதாரணத்திற்கு ‘கம்புகளி’ இது கம்பை வைத்துக் கொண்டு குதித்து விளையாடும் ஒரு வகை விளையாட்டு. கோட்டையம், இடுக்கி போன்ற மாவட்டங்களில் மலை முகடுகளில் வாழும் மலைவாழ் மக்களான மலை அரையர் களிடத்தில் இந்தக் கலை வடிவம் காணப்படுகிறது. குளிகன் தைய்யம், ஊரானிக்கூத்து, மூக்கன் சாத்தன், வைசூரி மாலை, பளியர் நடனம், நாயாடிக்களி என இப்படி அவர்களின் கலை வடிவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் இந்தக் கலை வடிவங்களை எடுத்துப் பரிசோதிக்கும் போது, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள், மலைவாழ் மக்கள் - இவர்களின் நம்பிக்கை, இயற்கைக்கும் அவர்களுக்கும் இடை யேயுள்ள உறவு, பேயோட்டும் விதம், நோயை அகற்ற அவர்கள் பின்பற்றும் மருத்துவ சிகிச்சை முறை போன்றவைகளைக் காண முடிந்தது. இவை போக, அவர்களுடைய வாழ்க்கைக்குள் ஊடாடி நிற்கும் புராணங்களிலுள்ள தெய்வங்களையும் தேவதைகளையும் கூட தரிசிக்க முடிந்தது. இப்படி எண்ணற்ற விஷயங்களை அவர்களது கலை நிகழ்ச்சிகள் நமக்கு எடுத்துக் காட்டின.

குறிப்பாக ‘வை சூரிமால தையம்’ என்றொரு கலை நிகழ்ச்சி மேடையில் அரங்கேற்றப்பட்டது. இது, கேரளத்தில் பாலக்காட்டு மாவட்டத்திலுள்ள வள்ளுவ நாடன் பகுதிகளில் வாழ்ந்து வரும் பறையர் குலத்தைச் சேர்ந்த மக்களால் நடத்தப் பட்டது.

ஆயிரத்து எட்டு சாத்தன்களில் கடைக்குட்டியும், பயமூட்டும் உருவத்தைக் கொண்டவனுமான மூக்கன், சாத்தன், பத்திரகாளியம்மனுக்கு மிகவும் பிரியமானவனாம்! பறையர் குல மக்கள் வளர்த்துவரும் ஆடு, மாடுகள் நோய் நொடியினால் பாதிக்கப்படும்போது, அந்த நோயைத் தீர்ப்பதற்காக வேண்டி, அவர்கள் மூக்கன் சாத்தனைத் தங்கள் மனதிற்குள் நினைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்வார்களாம். இப்படிச் செய்தால், மூக்கன் சாத்தன், பறையர் குலத்தைச் சேர்ந்த ஒருவர் உடலுக்குள் நுழைந்து, அருள் தோன்றி நோயை அகற்றி விட்டுப் போவார் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

இனி, பளியர் நாட்டியம் என்றொரு நாட்டியம் நடை பெற்றது. இடுக்கி மாவட்டத்தில் (குமிளியில்) வாழ்ந்து வரும் பளியர் குல மக்களால் ஆடப்படும் ஒருவகை ஆட்டம் இது. வானம் கருணை காட்டமறுக்கும் காலங்களில் பாடல்களைப் பாடிக்கொண்டு மேற்கண்ட நாட்டியத்தை ஆடினால் மழை பெய்யும் என்பது இவர்களது நம்பிக்கை.

இப்படி வயல்களை உழும்போதும் (கம்பளக்களி, வட்டக்களி), அறுவடையின் போதும், பெண்கள் கர்ப்ப முற்றிருக்கும் வேளைகளிலும், அவர்கள் குழந்தை பெறும் வேளைகளில் குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் ஏற்படும் நோய்களை அகற்றுவதற்குரிய பாடல்களும், திருமணத்தின் போதும், (மங்கலம் களி) இது, கேரளத்தின் வடகோடியிலுள்ள காசர்கோடு மாவட்டத்தில் மாவிலன் என்ற மலைவாழ் மக்களால் ஆடிப்பாடு விளையாடப்படும் விளையாட்டு), அறுவடைக் கழிந்ததும் தேவதைகளைத் திருப்திபடுத்து வதற்காக வேண்டியும் (திருச்சூர் மாவட்டத்திலுள்ள புலையர் குல மக்கள் பாடும் பாடல்கள்) பாடல்கள் பாடப்படுகின்றன. இந்தப் பாடலும் விளையாட்டும் பத்திரகாளியை மனதில் கொண்டு நடத்தப்படும் கலை நிகழ்ச்சியாகும். இது போக இன்னும் ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

கேரள தலித் மக்களின் ஆடல் பாடல்களில் சில நம் தமிழ்நாட்டுக் காவியங்களோடும் தொடர்பு கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு, நந்துணிப் பாட்டை எடுத்துக்கொள்ளலாம். இப்பாட்டில் சிலம்பு விற்பதற்காக வேண்டி போன கோவலனையும் கண்ணகியையும் பற்றிய கதைப்பாடல்தான் இந்த நந்துணிப்பாடல். இது பாலக்காட்டு மாவட்டத்திலுள்ள வள்ளுவ நாடன் பிராந்தியத்தில் வழக்கத்திலிருந்து வருவதாகும்.

இந்தக் கலைவிழாவையொட்டி தலித்மலைவாழ் மக்களின் பண்பாட்டினைப் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டும் விதத்தில் பொருட்காட்சியும், ஓவியக்கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் கழைகளாலும் புற்களாலும் இலைகளாலும் வேயப்பட்ட அவர்களுடைய குடிசைகளும், புழக்கத்திலிருக்கும் அவர்களுடைய பாத்திரங்கள், கலம் போன்றவைகளையும் ஓவியங்களாகத் தீட்டியிருந்தார்கள். மட்டுமின்றி, மரத்தடிகளினாலும், ஈர்க்கலாலும், மூங்கில் களாலும் உருவாக்கப்பட்ட சில வீட்டு உபயோகச் சாதனங் களும், கண் கவர் பொருட்களும் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்தன.

இவை போக, இந்த மக்கள் கேரளாவின் சந்து பொந்து களுக்குள்ளும் மலை முகடுகளிலும் எப்படி வாழ்ந்து கொண் டிருக்கிறார்கள்? என்ன மாதிரி உடைகளை அணிகிறார்கள்? என்னென்ன உணவை உண்கிறார்கள்? பாதுகாப்பிற்காக என்னென்ன ஆயுதங்களை உபயோகித்து வருகிறார்கள்? - போன்றவைகளையெல்லாம் நிஜமாகவும், ஓவியமாகவும் அங்கே காணமுடிந்தது. பொதுமக்கள் அந்த ஓவியங்களையும், பொருட்களையும், அவர்கள் கொண்டு வந்திருந்த நாட்டு மருந்துகளையும் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கிக் கொண்டு போனார்கள். எர்ணாகுளம் பாராளுமன்ற உறுப்பினர் திரு. செலபாஸ்டின் பால், திரு. சந்திரன்பிள்ளை, சட்டசபை உறுப்பினர் கே.வி. தாமஸ், மாவட்ட ஆட்சித்தலைவர், மேயர், பிரபல இலக்கியவாதிகளான திரு. எம்.கே. சானுமாஷ், பாயிப்புரா ராதாகிருஷ்ணன், கடமனிட்ட வாசுதேவன், நாராயன் போன்றவர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

முதல் நாள் நிகழ்ச்சி சட்டசபை உறுப்பினர் திரு.கே.வி. தாமஸ் தலைமை தாங்கி நடத்த, இரண்டாவது நாள் நிகழ்ச்சி என் (ஏ.எம். சாலன்) தலைமையில் நடந்தது. கேரள இடது சாரி ஜனநாயகக் கூட்டணி அரசின் இந்த முயற்சியை நம் தமிழக அரசும், பிற மாநிலங்களிலுள்ள அரசுகளும் முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு செயல்படு மானால் நலிந்து கொண்டிருக்கும் தலித்-மலை வாழ்மக்களின் கலைகளும், அவர்களது திறமையும் மேலும் ஓங்கி வளர வாய்ப்பு இருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com