Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

கட்டுரை

நாட்டுப்புறத் தெய்வங்கள் - ஒரு பார்வை
கவிஞர் பாப்ரியா

தமிழகப் பண்பாட்டு வரலாற்று ஆய்வுக்கு முக்கியமாக நாட்டுப்புற ஆய்வு துணையாக அமைகிறது என்பது பெரும்பான்மையான வரலாற்று ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்ட உண்மை. இதன் அடிப்படையிலேதான் நாட்டுப்புற இயல் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நாட்டுப்புற இயல் ஆய்வுகள் மிகத் துல்லியமாகவும் உண்மை நிலைகளை எடுத்துக்காட்டுவதற்கும் நாட்டுப்புற தெய்வங்களின் வரலாறு இன்றியமையாத இடத்தை பிடிக்கின்றது.

தனிமனிதனோ அல்லது குழுக்கூட்டங்களின் அமைப்போ மேற்கொள்ளும் அக உணர்ச்சிகளின் அல்லது புற எழுச்சிகளின் வெளிப்பாடுகளே பண்பாட்டு முகவரிகளாக வெளியாகின்றன. இன்னொரு வகையில் சொல்வதானால் இதுவே நாட்டுப்புற மாகும். பொதுவாக நாட்டுப்புறமென்றால், இது நகர ஊர்ப்புற மக்களின் வாழ்வியலில் வேறுபாடில்லாமல் நிறைந்து தளும்பும் பண்பாடாகும். நாட்டுப்புறப் பண்பாட்டின் ஓர் அங்கமாக நாட்டுப்புறச் சமயத்தைக் குறிப்பிடலாம்.

நாட்டுப்புறத் தெய்வங்கள், தமிழகத்தில் வாழ்ந்து மடிந்த முன்னோர்களேயாவர். இங்குக் குறிப்பிடப்படும் வாழ்ந்து மடிந்த தெய்வங்களைத் திராவிடத் தெய்வங்கள் என்று குறிப்பிடுவது நாட்டுப்புற ஆய்வாளர்களின் வழக்கம். மேலும், இப்படிக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொண்டே தொடர்ந்து ஆய்வுக்களங்கள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

காலங்காலமாக, இறந்துப்போன முன்னோர்களைத் தெய்வங்களாக வழிப்பட்டு வரும் திராவிடர்கள் - தமிழர்கள் வரலாற்றில் பிற திராவிட மொழிகள் பேசும் சமூக மக்களும் அடங்குகிறார்கள். திராவிடத் தெய்வங்கள் பெரும்பாலும் பெண் தெய்வங்கள். இப்பெண் தெய்வங்களைக் கொண்டாடும் கிராமத்து வாழ்க்கையைப் பொதுவாக நாட்டுப்புற வாழ்க்கை என்பது ஆய்வாளர்களின் முடிவு. அந்த நாட்டுப்புற வாழ்க்கைத் தேரோடு சேர்ந்து நகரும் வடக்கயிறு தான் நாட்டுப்புறச் சமயம்.

ஒரு கிராமத்து மக்களின் வாழ்க்கை நிலைகளை ஆயுள் ரேகையாகக் கிளைரேகைகளாக அறியவேண்டுமென்றால், அந்தக் கிராமத்துத் தெய்வங்களைப் பற்றி அடையாள ஊற்றுக்கண்ணைத் திறந்து பார்த்தல் அவசியம். கிராமம் என்றாலே அது நாட்டுப்புறத்தின் மொத்த உருவம் என்றால் மிகையாகாது. கால வெள்ளத்திலோ அல்லது நாகரிகத்தின் அத்துமீறலிலோ கிராமத்தின் அசல்நிலையினை அசைத்தாலும்கூட, அசல் மண்ணில் ஆழவேரோடிப் போயிருக்கும் ஆணிவேர் என்னவோ கிராமத்துத் தெய்வங்கள் தான்.

அந்தந்தக் கிராம மக்களின் உள்ளுணர்வுச் சிந்தனைகளின் வெளிப்பாடுகளாக அமையும் தெய்வங்கள் அவர்களின் வாழ்க்கை நலன்களுக்காகவும், வாரிசுகளின் எதிர்கால நல்வாழ்க்கையின் அடிப்படை வேண்டுதல்களுக்காகவும் வேண்டப்படுகின்றன. இந்தக் கிராமத்துச் சிறுதெய்வங்கள், பிரமாண்டமாகப் பேசப்படும் அல்லது கற்பித ரீதியில் அமையும் பெருந்தெய்வங்க ளோடு ஒட்டுறவு இல்லாதவை.

மனிதப் பிறவிகள் செத்து மடிந்துபோன பின்னால், காலப்போக்கில் அல்லது காலநிர்பந்தத்தின் நெருக்கடியில் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களே நாட்டுப்புறத் தெய்வங்கள் என்று சொல்லப்படுகின்ற கிராமத்து சிறு தெய்வங்கள்.

மனிதனின் சுவடுகள் எங்கெங்கு இந்த மண்ணில் பதிந் திருக்கின்றனவோ அங்கெல்லாம் நாட்டுப்புற வழக்காறுகளைச் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன; தொடரப்பட்டும் வருகின்றன. இவை கண்கூடு.

நாட்டுப்புற மக்கள் என்று குறிப்பிடப்படுபவர் யார் எவர்? அவரின் தனித்துவ அடையாளங்கள் எவை எவை என்ற கேள்விகளுடன் நாட்டுப்புற வழக்காறுகளைப் படைப்போர் யார்? எந்தவொறு வழக்காறு படைப்பும் எப்படியெல்லாம் வானத்து மேகங்களாய் சிதறிப் பரவியிருக்கக்கூடும்? அப்படிப் பரவும்போது படைப்பின் உள்ளடக்கமும் உருவமும் மாறுதலின் இயக்கத்தின் தாக்குதலுக்கு ஏற்பத் தானும் தன்மயமாகிவிடுமா? அங்ஙனம் தன்மயமாகிப் புதுத்தோற்றமும் பொலிவும் அல்லது நலிவும்கொண்டு மாறும் நிகழ்வுகளை எப்படியெல்லாம் அம்மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆய்ந்து முடிவுக்கு வர நாட்டுப்புற ஆய்வு முறைகளும் கோட்பாடுகளும் உதவுகின்றன. எழுத்துச் சான்றுகளும் தரவுகளும் என்று எதுவொன்றுமே கிடைக்காத நிலைகளும் அல்லது நூல்பிடித்துப் பார்க்குமளவிற்கு ஏதாவது கிடைக்கும் நிலைகளும் ஆய்வாளர்களுக்கு நாட்டுப்புற வழக்காறுகள் பெரிதும் உதவுகின்றன.

ஏறத்தாழப் பதினைந்து முதல் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையிலான தமிழக வரலாற்றை அறிந்துக் கொள்ளவும் நாட்டுப்புறக் கதைப் பாடல்களும் வாய்மொழி வரலாற்றுச் செய்திகளும் உதவுகின்றன. இதன் ஓர் அங்கமாகத்தான் நாட்டுப்புறத் தெய்வங்களைப் பற்றியும் அறிந்துக்கொள்ள முடிகிறது. இலக்கியத்தின் கால ஆராய்ச்சியில் ஏற்பட்ட அய்யத்தைப் போக்கிக்கொள்ள நாட்டுப்புறக் கதைகளைப் பற்றிய ஆய்வுகள் பெரிதும் உதவுகின்றன. இந்நிலையில் நாட்டுப்புறத் தெய்வங்களின் தோற்ற வளர்ச்சி நிலைகளை அறிந்துக்கொள்ள முடிகிறது.
ஒரு நாட்டின் சமூக வரலாற்றையும் பண்பாட்டு வரலாற்றையும் அறிந்துகொள்ள மக்கள் அல்லது குழுக்களின் இடப்பெயர்ச்சி மற்றும் குடியமர்தல் பற்றிய காலத்தின் கல்வெட்டுக்களாய்க் கிடைக்கும் செய்திகள் மிகவும் முக்கிய மான இடத்தைப் பெறுகின்றன. இத்தகைய வரலாறுகளில் தான் நாட்டுப்புறத் தெய்வங்களின் அடையாளங்கள் என்றும் அம்பாரங்களாய் விரிந்து கிடக்கின்றன.

நாட்டுப்புற மக்களின் வழிபாடுகள் பற்றிய ஆய்வுகள் இதுவரை நிகழ்ந்து வந்த தமிழரின் சமய ஆய்வுகளை மறுசிந்தனைக்கு உட்படுத்தியுள்ளன. அங்காள பரமேஸ்வரி (எவலின் மேயர்) பாம்பு வழிபாடு (க.ப. அறவாணன் 1979) மர வழிபாடு (க.ப. அறவாணன் 1984) துரோபதை வழிபாடு முதலான நூல்கள் சரியான உதாரணங்கள் மட்டுமின்றி மிகவும் இன்றியமையாத தரவுகள் ஆகும். இவை மட்டுமின்றி ஆறு. இராமநாதன்ஆராய்ந்தெழுதிய, குலதெய்வம் எவ்வாறு பெருந்தெய்வமாக மாறியது என்ற படைப்பும் இன்றியமையாத ஒரு சான்றுத் தரவு ஆகும்.
தெய்வங்களுள் பல சக்தியின் அம்சம் அல்லது அவதாரம் அல்லது வடிவம் என்னும் கருத்தாக்கங்கள் இந்து மதமாக்கம் என்னும் நிகழ்வோடு மிகவும் நெருங்கிய தொடர்புகொண்டவைகளாக இருப்பது கண்கூடு.

இந்து மதமாக்கம் என்பது மலைவாழ் மக்களின் மதம் உயர்ந்த இந்துமதம் ஆகிய இரண்டு துருவங்களுக்கும் பாலமாக இருந்து வந்திருக்கிறது என்பது வரலாற்று உண்மை. எப்படி சங்க இலக்கியங்கள் முதலில் வாய்மொழியாகவே பேசப்பட்டு பின்னர்தான் காலப்போக்கில் ஏட்டில் எழுதி வைக்கப்பட்டனவோ அதைப்போலவே மலைவாழ் மக்களின் வாழ்வியலில் முக்கியமாகப் பொறுப்பேற்கும் நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைகளும். ஆனால், சில மலைவாழ் மக்களின் சமூகங்களில் மட்டும் அவர்களது குலத்தெய்வம் அல்லது பெண் தெய்வங்கள் ஏட்டில் பதிவு செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ளாத நிலைகளும் இருந்து வருகின்றன இன்னமும்.

தமிழகத்தில் நாட்டுப்புறவியல் என்னும் துறை தனித்துறையாக அங்கீகரிக்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகின்றன. இருந்தாலும், நாட்டுப்புற வழக்காறுகளைப் பற்றிய ஆய்வு களுக்கான தகவல்கள் திரட்டும் முயற்சிகள் இந்த மண்ணில், செருமானியப் பாதிரியாரான பார்த்தலோமியஸ் சீகன்பல்க் என்பவரால் கி.பி. 1713இல் தொடங்கப்பட்டதாக டாக்டர் ஆறு. இராமநாதன் நாட்டுப்புற இயல் ஆய்வுகள் நூலில் (பக். 29) குறிப்பிடுகிறார்.

சமூகச்சூழல் போன்ற காரணங்களால், கதை கூறுவோர்க்குக் கதையில் ஏற்படும் சந்தேகங்கள், அந்தச் சந்தேகங்களுக்கு அவர்கள் கூறும் விளக்கங்கள், கதை கேட்போருக்கு அய்யமேற் படுமிடங்களை உணர்ந்து அதனைப் போக்க மேற்கொள்ளும் முயற்சிகள் வட்டார வழக்கு, நினைவுக் குறைவு, பிழையாகக் கூறல் பின்னர் சார்ந்திருக்கும் மதம் போன்ற பல்வேறு காரணங்களாலும், கதை வழங்கப்படும் நிலத்தின் கருப் பொருள்கள், சமுதாயத்தில் நிலவும் நம்பிக்கைகள் முதலியன கதை இடம் பிடிப்பதாலும், கதையில் வளர்ச்சியும் மாற்றங்களும் ஏற்படுகின்றன (இராமநாதன் 1988) என்பதை குறிப்பிடுகின்ற அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் இங்குக் குறிப்பிட வேண்டியுள்ளது.

மேற்கண்ட அபிப்பிராயங்களில் முரண்படும் நிலைகளும் இல்லாமல் இல்லை. கதை சொல்லுபவர்களின் வழக்கில் கதையின் கரு அல்லது கதையின் போக்கில் அல்லது முடிவில் அபிப் பிராயங்கள் அப்படி இருப்பினும் வெளியிடங்களிலிருந்து வரும் ஆய்வாளர்களிலும் சில உண்மைகளைச் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் உறுதியாகவும் இருப்பதையும் தமிழகத்தில் பல இடங்களில் இன்னும் பல குழுக்களிடம் இருப்பதைக் காணமுடிகிறது. இத்தகைய விஷயங்கள் தரைவழி இடங்களில் மட்டுமின்றி மலைவாழ் பழங்குடி மக்களிடமும் காணப்படுகிறது.

ஆய்வாளர்கள் களப்பணிகளில் ஈடுபாடு கொள்ளும் ஆர்வமான நிலைகளில் அல்லது தவிர்க்க முடியாத நிலைகளில், உண்மையான நிலைபாடுகள் சில சமயங்களில் அக்குழுக்களின் தெய்வ ரகசியங்கள், புனிதத்தைக் கருத்தில் கொண்டு மறைக்கப் பட்டு வருகின்றன. இதனால் குறிப்பிட்ட குழு அல்லது சமூகத்தின் வாழ்வியல் கட்டுமானங்களின் ஆணிவேர் வெற்று பூச்சு வார்த்தைகள் என்ற சல்லிவேர்களால் மறைக்கப்படு கின்றன என்பது நிதர்சனம் என்பது கூட சில சமுதாயங்களில் மாறிவருகின்றன. இந்த மாறுதலான குலதெய்வவழிபாடு என்பது மலைவாழ் மக்களிடம் மட்டுமின்றி தரைவாழ் பிரதேச மக்களிடமும் காணப்படுவதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. மதம் மாறும் சூழ்நிலை தமிழகத்தில் எவ்வப்போது ஏற்பட்டதோ அப்போதெல்லாம் குல தெய்வவழிபாடு என்பது நாட்டுப்புற மக்களிடையே பிரச்சினைக்குரிய ஒன்றாகவே இருந்தது; இன்றும் இருந்து வருவது கண்கூடு.

எது எங்ஙனம் இருப்பினும் மக்கள் குழுக்களின் தனித்தன்மைகளையும் அக்குழுக்களிடையே காணப்படும் ஒன்றுமை உணர்வுகளையும் துல்லியமாக அறிந்துக்கொள்ள, குலதெய்வழிபாடு நல்லதொரு குறியீடாகவே அமைந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. இந்த உண்மையைக்கூட வெளி உலகிற்கு வெளிச்சம் போடுவதற்கு வெளிநாட்டு ஐரோப்பியர்கள் தான் முன்னோடிகள் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. தமிழில் முதல் நாட்டுப்புறப் பாடல் தொகுதியாக வெளிவந்த சார்லஸ் இ. கோவாரின் (Folk songs of southern india 1871) இதற்கு முன்னு தாரணம். இதன் தொடர்ச்சி 19ஆம் நூற்றாண்டில் பீட்டர் ஃபெர்சிவல், ஜான்லாசரஸ் ஃபெர்சி மக்வின் வரை தொடர்ந்தது. இந்தத் தொடர்ச்சி தேடல் குவியல்களில் தென்னிந்திய நாட்டுப்புறப் பாடல்கள் மூலமாகக் குல தெய்வவழிபாடுகள் பற்றிய பல்வேறு செய்திகள் வெளி உலகிற்கு வெளிச்சமிட்டன.

தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிப்பாளர்கள் ஆய்வாளர்கள் வரிசையில் நா.வா. கி.வா.ஜ முதல் மு. அருணாசலம், பெ. தூரன் வரையில் சேகரிக்கப்பட்டு காணப்படும் பாடல்களில் தெய்வவழிபாடுகள் நிலைகள் தெளிவாகத் தெரியவருகின்றன. தனக்கும் தன்னைச் சார்ந்த குடும்பத்தினருக்கும் நன்மைகள் தரவேண்டும்போதும், நன்மைகள் பெறும்போது நன்றிக் கடன் செலுத்துவதற்காக விழாக்கள் எடுக்கும்போதும் கிராமத்து மக்கள் சிறு தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம் என்பதை நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் கதைகள் துலம்பரப்படுத்திக்கொண்டு வருகின்றன.

இதைப்போலவே பெருந்தெய்வ வழிபாடுகளும் கிராமப்புறங்களிலும் இருப்பது அறிந்ததொரு விஷயமே. சிறு தெய்வழிபாடுகள், பெருந் தெய்வவழிபாடுகள் என்பனவற்றுள் பேதங்கள் அதிகமின்றி ஒருமித்தல் வழிப்பாட்டுப்பாடல்கள் அடங்குகின்றன. தொழிற்பாடல்கள் போன்றவை மட்டும் இதற்கு விதிவிலக்கு.

நாட்டுப்புறப் பாடல்களில் சிறு தெய்வங்கள் பெரும் பாலும் பெண் தெய்வங்களாகவே இருக்கின்றன. அதிகம் அவை திராவிடத் தெய்வங்கள், கன்னிப்பெண்கள் தெய்வங்களாகசித்திரிக்கப்படுவது என்பது நாட்டுப்புறப் பாடல்களிலும், கதைகளிலும் மிக அதிகம். உருவ வழிபாடுகள் என்றில்லாமல், குத்துக்கல், ஆவாரம்பூ போன்ற செடிவகைகள், சூலக்கல், சூலம் போன்றவையே தெய்வ வழிபாட்டு பரம்பரை பரம்பரையாக இப்படிக் காப்பாற்றப்பட்டு வரும் தெய்வ வழிபாடு ரகசியங்கள், சில சமயங்களில் இளைய தலைமுறையினரின் முரண்பட்ட சிந்தனைகளால் வெளி உலகிற்கு அம்பலப்பட்டுப்போவதும் உண்டு.

இந்நிலையில் ஆய்வாளருக்கு மூலக்கனலாய் கிடைக்கும் உண்மைகளைக் குழுத் தலைமையிடம் விவாதிக்கும்போது, ஒன்று வேண்டுதலாய் ஆய்வில் தவிர்த்துவிடும் படியும் அல்லது தெய்வக் குற்றம் என்ற பேரில் மிரட்டல்களும் ஆய்வாளருக்குக் கிடைக்கும் ஆய்வுப் பரிசாக கிடைப்பதும் இல்லாமல் இல்லை.

ஒரு பொது மூதாதையின் வழிவந்த குழுவே குலம் என்றழைக்கப்படுகிறது. ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சகோதரத்துவம் வாய்ந்தவர்கள் அல்லது பங்காளிகளாக அழைக்கப்படுவதும் மரபாகவே இருந்து வருகிறது. சகோதர உறவு முறையில் இருப்பவர்கள் தங்களுக்குள் திருமண உறவினை வைத்துக்கொள்ளாத நிலை உள்ளது போலவே, சில ஊர்களில் தங்கள் ஊரில் உள்ளவர்களனைவரும் சகோதர சகோதரி உறவு முறையில் வைத்து எண்ணப்படுவதால், திருமண உறவுகளை வைத்துக்கொள்வதில்லை என்பதும், ஒருவேளை அப்படித் திருமணம் நடைபெற்றுவிட்டால், ஊரைவிட்டுத் தள்ளி வைப்பதும் தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ள, கிராம அல்லது ஊர் பஞ்சாயத்து தண்டனை அளிப்பதும் இன்றும் தமிழகத்தில் பல ஊர்களிலும் மலைவாழ் பழங்குடி மக்களிடமும் உள்ள வழக்கமாக இருந்துவருகிறது. உதாரணம்: நீலகிரி படுகர்கள் சமுதாயம் இருந்தபோதிலும் குலதெய்வ வழிபாடு என்று வரும்போது பொதுத் தெய்வ வழிபாட்டிற் கெனத் தாய்த் தெய்வ வழிபாட்டினைக் கொண்டுள்ள நாட்டுப்புற சமூகங்கள் இருக்கவும் செய்கின்றன.

நாட்டுப்புறப் பாடல்களும் சரி கதைகளும் சரி தனிப்பட்ட மனிதனால் முதன்முதலாகப் படைக்கப்பட்டபோதிலும், கால ஓட்டத்தில் அவை ஒரு சமுதாயத்திற்கு ஏற்புடையவையாக மாறிவிடுகின்றன. அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு மக்களின் எண்ணங்கள் முழுமை சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு மக்களின் எண்ணங்கள் முழுமையாக ஒரு மையத்தை ஆகிரமித்துக்கொள்ளும்போது ஒரு தெய்வவழிபாடு என்பது அங்கீகரிக்கப்படுகிறது. இதற்கான சான்றுகள் போதுமான அளவிற்கு நாட்டுப்புறப் பாடல்களிலும், கதைகளிலும் அம்பாரங்களாய், ஒளிச்சுடர் மணிகளாய்க் குவிந்து போய் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட நாட்டுப்புறச் சமுதாயத்தின் கிளைப் பிரிவுகள் பலவாக இருந்தபோதிலும், அந்தப் பிரிவுகள் நாகரிக காலத்தின் ஆளுமையில் தாங்கள் தெரிந்துக்கொண்ட பிற தெய்வவழிபாடுகளை மேற்கொள்வது தவிர்க்க முடியாமல் இருப்பினும், உள்ளூரில் ஏகமனதாக தங்களது குலதெய்வத்தின் வழிபாட்டினை ஏற்றுக்கொள்வது மரபாகவே இருந்துவருகிறது. ஆனால், வாழ்க்கைக்காக மாறிவரும் மனிதனின் மனப்போக்கில், இறைவழிபாடு என்பது கூட மதம் விட்டு மதம் மாறுவதால் குலதெய்வவழிபாடு சின்னங்களாக இருந்து வந்திருக்கின்றன. அதைப்போலவே, நாட்டுப்புற தெய்வங்களின் இடங்கள் மிக எளிமையான கூரைக் கொட்டகைகளில், வாய்க்கால் வரப்பு ஓரங்களில், திறந்தவெளி தோட்டங்களில், காடுகளில் இருந்திருப்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

மேலும் சங்க காலத்தில், “பெருங்காட்டுக் கொற்றி” (கலித்தொகை) சொல்லுவதிலிருந்தும், “கானமர் செல்வி” அகம் 348 குறிப்பிடுவதிலிருந்தும் தெரிகிறது. தாய்த் தெய்வத்தைக் குறிக்கச் சங்க இலக்கியங்களில் இப்படிப் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காணும்போது, வேறு சில செய்திகளும் சான்றாக அமைகின்றன.

தாய்த் தெய்வத்தைக் கன்னி - கானமர் செல்லி, காடு கெழு செல்வி (அகம் 70) எனக் குறிப்பதையும் இங்குக் குறிப்பிடலாம். அம்மன் வழிபாட்டினைப் பரவலாகப் பல உருவங்களில், அவதாரங்களில் கொண்டாடும் தமிழகத்தில் கன்னித் தெய்வங்கள் கூட அம்மன் தாயாகக் குறியீட்டில் குறிப்படுவதும் பெயரில் பிரபலமாக வழங்கி வருவதும் நாட்டுப்புறத் தெய்வவழிபாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

தமிழ் இலக்கியத்தில் தாய்த் தெய்வவழிபாடு பல்வேறு பெயர்களில் இடம் பெற்று வந்திருப்பதற்கு மேற்கூறியவைகளே சான்று. ஆனால், ஒருசில வேறுபாடுகளையும் தாய்த் தெய்வவழிபாடு உணர்த்துகின்றன. கன்னிமை, எல்லாவற்றிற்கும் மூலமானவள், பெரிய மார்புகளை உடையவள் போன்ற சில அடிப்படைப் பண்புகள் தாய்த் தெய்வத்துக்குரிய பொதுத் தன்மைகள்.

கொற்றவை, மிகப் பழைய தாய்த் தெய்வத்தின் எச்சமாக வழங்கி வருவதும் இதன் அடைமொழிகள் இத்தெய்வம் உறையும் வனத்துறை இயல்பையும் முடிவற்ற பழமையையும் ஆய்வில் கிடைக்கின்றன. அதைப்போலவே திராவிடத் தெய்வங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, தெய்வநிலை எந்நிலையின் அடிப்படைக்கொண்டு அமைந்தது என ஆயும் பொருட்டு விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய காரணகாரியங் களிலேயே அவை அமைகின்றன என்றால் அது மிகையாகாது.

தீக்குழியில் பாய்தல் அல்லது பூக்குழியில் இறங்கித் தெய்வமானவர்கள், சமாதி ஆனவர்கள் என்ற இரண்டு நிலைகள் மேலும் அகால மரணத்தைத் தழுவியவர்கள் தெய்வ மாக்கப்படும் நிலை அதாவது அகால மரணமடைந்தவர்களின் ஆவி உலாவுமிடத்தைப் புனிதமெனக் கருதி வழிபாடு செய்வது. தீக்குழியில் இறங்கியவர்கள் அல்லது பாய்ந்தவர்கள் சுமங்கலிகளாகவோ கன்னிப் பெண்களாகவோ இருப்பார்கள் என்பது நாட்டுப்புற ஆய்வு மரபில் கிடைக்கும் உண்மையான செய்தி ஆகும்.

நாட்டுப்புறத் தெய்வத்தைச் சிறு மரபுத் தெய்வம் என்றும் சிறு தெய்வம் என்று சொல்லாமல் பொதுவாகவே திராவிடத் தெய்வம் என்று சொல்லும் வெளிப்படையான தரவுக்குப் போதுமான சான்றுகள் ஆய்வுகள் மூலம் கிடைக்கின்றன. இருந்தபோதிலும், ஆரியர்களின் வருகையும் அவர்களது அறிமுகக் கடவுளர்களின் பிரமாண்ட நிலைகளும் அவர்கள் அறிமுகப்படுத்திய சாதி இந்துக்களின் உயர்நிலைமட்ட அளவுகோல்களும் அவர்கள் அறிமுகப்படுத்திய பெருமரபுத் தெய்வங்களுக்கு தரப்பட்ட முக்கியத்துவங்கள், திராவிடத் தெய்வங்களாம் நாட்டுப்புறத் தெய்வங்களை, கிராமத்துத் தெய்வங்களை சிறு மரபுத் தெய்வங்களாக்கி ஒதுக்கி வைத்துவிட்டன.

ஆனால், நாட்டுப்புற மரபுப்படி இறந்து போனவர்களின் ஆவியைத் தெய்வநிலையாகக்கொண்டு வணங்கிச் சம்பிரதாய விழாக்கள் எடுப்பதே அம்மக்களின் கடவுள் கொள்கையாகி மரபுநிலைக் கொள்கிறது. இறந்து போனவர்கள் அப்போதே தெய்வம் என்று பேசப்படுவதும் பின்பு தெய்வநிலைக்கு உயர்வுபடுத்தப்பட்டு வணங்கப்படுவதும், வழிபாட்டு நிலையில் தெய்வமாக ஏற்கப்படுவதும்தாம் திராவிடர்களின் கடவுள் பற்றிய முதல் காரணகாரியமாக அமைந்த கொள்கையாகும். மேலும் திராவிடர்களின் உண்மைநிலைப் பண்பாடும் இதுதான்.

இதைப்போலவே, திராவிடத் தெய்வங்கள் ஊரைக்காக்கும் ஊர்த் தெய்வங்களாகவும் ஏற்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆய்வுகள் சொல்லும் தரவுகள்படி இனத்தைப் பாதுகாப்பதற்காக இனத் தெய்வங்களை வழிபாடுசெய்து வந்திருக்கிறார்கள். இன்னொரு வழியில், குலத்தைக் காக்கவேண்டி குலத்தெய்வங் களை அதாவது தங்களது முன்னோர்களை வழிபட்டு வந்திருக்கிறார்கள். தென் தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட தெய்வங்கள், அய்யனார், கருப்புசாமி, முனியாண்டி என்ற பெயரில் பரவலாகக் காணப்படுகின்றன. வெளி உலகிற்கு வெளிச்சமிடாத சில பழங்கால குடிகளின் ஆண் தெய்வங்களும் இருக்கவே செய்கின்றன. ஆய்வாளர்களின் ஆய்வுகளில் பெயரடங்கியும் பரவலாக வெளி உலகிற்கு அறிமுகமில்லாத தெய்வங்கள் பலவும் இருக்கின்றன.

நீலகிரி மாவட்டத்தின் பழங்குடிகளில் முதன்மை இடம் பெறும், 2.45 லட்சம் ஜனத்தொகையுள்ள படக சமுதாயத்தினரில் ஒரு பிரிவினர் வணங்கும் ‘கரிய பெட்டராயர்’ இதற்கு ஓருதாரணம். நாட்டார் ஆய்வடங்கன்களில் இதுவரை குறிப்பிடப்படாத ஆண் தெய்வம் ‘கரிய பெட்டராயர்’ என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திராவிட மொழிகளில் தமிழ், மலையாளம், துளு, தேவாங்க கன்னடம், படுகு, தோடா (நீலகிரி மலையில் தோடர் எனப்படும் பழங்குடிகள் பேசும் தோடா மொழி) வரிசையில் 0.35 லட்சம் ஜனத்தொகையுள்ள தேவாங்கர் சமூகத்தில் உள்ள சகோதர உறவுகொண்ட ஒரு பிரிவினர் (லக்தேகார்) ஆண்டிற்கு ஒருமுறை, எங்கு வசித்தாலும் பிறந்த ஊருக்கு வந்து ‘செட்டிமை’ என்று சொல்லப்படும் சாதிப் பெரியவர் அறிவுரைப்படி, ஊருக்குள் அல்லது ஊருக்கு வெளியே உள்ள காட்டுப்பகுதி அல்லது தோட்டப்பகுதியில் வளர்ந்திருக்கும் ‘ஆவாரம்பூ’வை குலதெய்வமாக நினைத்து மஞ்சள் துணி உடுத்தி, பொங்கலிட்டு, பூசை செய்து வணங்குவதையும், நாட்டுப்புறத் தெய்வவழிபாடு தரவுகளில் இன்றுவரை இல்லாத ஒன்றாக உள்ளது.

நீலகிரி படுகர் சமூகத்தினரின் இஷ்ட தெய்வமான ‘பேரஹணி ஹெத்தை’ அம்மனின் கதையும் நாட்டுப்புறக் கதைகளின் அணிவகுப்பில் முழுவடிவமாகச் சேராமலேயும் சேர்க்கப்படாமலேயும் இருந்து வந்திருக்கிறது.

இதுவரை நீலகிரி படுகர்களின் வரலாற்றையும் வாழ்வியலையும் முதுகலைப் பட்டத்திற்காகவும், முனைவர் பட்டத்திற்காகவும் ஆய்வுகளை மேற்கொண்ட ஆய்வாளர்கள் இந்த ‘ஹெத்தை அம்மன்’ கதையின் முழுவடிவத்தை இதுவரை பதிவு செய்யாதது, நாட்டுப்புறத் தொலைநோக்கு ஆய்விற்கு இழப்பே ஆகும்.
பொதுவாக, தங்கள் சமூகத்தின் கலை-பண்பாடு-கலாசார வரலாற்றினை எழுத முன்வரும், படைப்பாளிகள் மற்றும் பட்டம் பெற முனைவோர் உள்ளது உள்ளபடி பதிவு செய்ய முன்வராததே இதற்குக் காரணமாக அமைகிறது என்றால் மிகையில்லை. இந்நிலை நீடிப்பதற்குக் காரணம், தங்கள் சமூகத்தின் பலத்தைச் சொல்லுவதைக் காட்டிலும் சொல்லப்படவேண்டிய பலவீனங்களின் வீரியம் அதிகமாக இருப்பதும் ஒரு காரணம். ஆனால் இதுபோன்ற பழுதுபட்ட சிந்தனைகள் அவசியமில்லாதது. ஏனென்றால், பலமும் பலவீனமும் இல்லாத சமூகங்கள் இந்த மண்ணில் மிகக் குறைவு. இந்த இரண்டின் சதவீதங்கள் கூடவோ அல்லது குறைவாக இருக்கலாமே தவிர, முற்றிலும் மறைக்கப்படவேண்டியவை அல்ல. மேல்தட்டு - கீழ்த்தட்டு சமூக வேறுபாடுகளைக் காட்டிலும், மனித இயல்புகளை அப்படியே பதிவுகள் செய்வதில் முனைப்புகள் வேண்டும்.

இம்முனைப்புகளின் தாக்கம் அந்தந்தச் சமூகப் படைப் பாளிகளையும் சமூக ஆர்வலர்களையும் ஆக்கிரமிக்கும்போது, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட உன்னத நாட்டுப்புறத் தெய்வங்களின் தோற்றங்களும் மகிமைகளும் இம்மண்ணிற்குப் பரிசாக கிடைக்கும் என்பதில் சந்தேகமென்பது இல்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com