Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

நூல் விமர்சனம்

படைப்பும் படைபாளியும்
சி.மகேந்திரன்

படைப்பாளியின் உள்ளாற்றலை அறிந்து கொள்ளல் அத்தகைய சுலபமானதாக இல்லை. வானத்தின் விரிவைப் போன்று, கடலின் ஆழத்தைப் போன்று வியப்புலகாகவே இது தோற்றம் தருகிறது. ஆனாலும் படைப்பின் ஆழம் குறித்தவற்றைத் தெளிவாகவே சொல்லிவிட முடியும். இது படைப்பாளியின் அனுபவம் சார்ந்தது. அதே நேரத்தில், ஒருவன் அனுபவக் கருவை பல காலம் சுமந்து, அதனை பெற்றெடுப்பதில் தாங்கிக்கொள்ளும் வலியைத்தான் சார்ந்து தான், இதன் வெற்றியும் அமைந்துவிடுகிறது.

இன்றைய பரபரப்பு மிகுந்த உலகம் படைப்பின் ஆற்றலை உணர்ந்து கொள்வதில் பொறுமையற்றுப் போய்விட்டது. படைப்பின் மெருகேற்றுதலுக்காக தீட்டப்பட்ட வண்ணங்கள் பற்றிய கவர்ச்சியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. படைப்பின் தலைவாசல் எது என்பதை அறிந்து கொள்வதில் ரொம்பவும் தடுமாறிவிடுகிறார்கள். கொல்லை வாசலை தலைவாசல் என்று புரிந்துகொண்டு எங்கெங்கோ சென்று விடுகிறார்கள். புதிய ஜீவாவின் பற்றுக்கோடுகள் என்னும் சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் போது இவ்வாறான சிந்தனைகள் நிழல் போல் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன.

வாழ்க்கை அனுபவத்தை ஜீவா, உள்வாங்கிய விதத்தில் தான் அவருடைய கதைகளின் வெற்றி அடங்கியிருக்கிறது. இவரது கதைகளில் பல இவருடைய வாழ்க்கையைச் சார்ந்தே செல்கிறது. அவருக்கு அமைந்த பின்புலம் பெருமை கொள்ளத் தக்கது. மதுரை, சென்னை இரு நகரங்களின் வாழ்க்கை. இன்று இயற்கை சுற்றுச்சூழல் பாதிப்படைந்திருப்பதைப்போல, சமுதாய சுற்றுச்சூழலும் எவ்வாறெல்லாமோ பாதிக்கப் பட்டிருக்கிறது. நகர வாழ்க்கையின் இந்த அக, புற பாதிப்பு களால் ஒவ்வொரு மனிதனும் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறான்.

நம் மண்ணுக்கும் மக்களுக்குமான உறவு பல நூற்றாண்டு கால அளவைக் கொண்டது. மண்ணுக்கும் மக்களுக்குமான இந்த உறவு, எத்தனையோ சோதனைகளை செய்து தங்கள் பண்பாட்டு மதிப்பை வளர்த்து வைத்துள்ளது. இந்த பண்பாட்டு மதிப்புகள், நவீனமடைந்து வரும் நகரவாழ்க்கை யோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார் ஜீவா. இந்த ரசவாத பரிசோதனையில் விளைந்தவை தான் இவருடைய சிறுகதைகள். இன்றைய நவீன வளர்ச்சியில் ஒடுக்கப்பட்ட மக்கள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்ற கருத்து நிலை வலுவுடன் கதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் ஜீவாவின் தனித்த சிறப்பு என்பதைக் குறிப்பிட்டு சொல்லவேண்டும்.

ஒருபுறம் செல்வமும் மறுபுறம் வறுமையும் குவிந்து கொண்டே செல்லும் வாழ்க்கை கொண்டது நமது சமூக அமைப்பு. இந்தச் சமூக அமைப்புக்குள், தொழில் சார்ந்த வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள், நவீன வாழ்க்கையில் ஆண் பெண் உறவில் உருவாகும் புதிய சிக்கல்கள். சக மனிதர்களின் பாசாங்கு நிறைந்த போலிவாழ்க்கை என்று சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும், ஏதோ ஒரு பிரச்சினை நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஜீவா என்னும் கதை சொல்லியின் பயணம் இந்தக் குழப்பம் நிறைந்தப் பாதையில் தெளிவுடன் தன் பாதையை அமைத்துக்கொண்டுள்ளது.

ஜீவாவின் தெளிந்த பார்வைக்குப், ‘பற்றுக்கோடு’ சிறுகதை தொகுப்பு சிறந்த முன்னுதாரணம். கதையில் வந்து போகும் கதை மாந்தர்கள், நம்மை சுற்றி வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள். கதையைப் படித்துக்கொண்டே செல்லும் போது நமக்குத் தெரிந்திருப்பவர்கள் எப்படி ஜீவாவிற்கும் தெரிந்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துவிடுகிறது, சமூகப் பார்வையுடன் கண்களைத் திறந்து, சுற்றியிருப்பவர்களை உற்றுப் பார்க்கிற யாருக்கும் ஜீவாவுக்கு கிடைத்த அனுபவம் கிடைத்துவிடுகிறது. இதன் மூலம் நாம் உணரும் அனுபவம் சார்ந்த கதை சொல்லியாக ஜீவா வெளிப்படுகிறார்.

மறுக்கப்பட்ட வாழ்க்கைக்குள் எளிய மக்கள் உருவாக்கி வைத்துள்ள மனித நேயம் நம்மைப் பெரிதும் பிரமிக்க வைக்கிறது. தொகுப்பில் வெளிவந்துள்ள ஒரு சிறுகதையின் பெயர் ‘ஆற்று மணல் ஊற்று’, பல்பொடி கம்பெனிக்காகச் சுவர் விளம்பரம் செய்யும் சோமு. அவனுக்கு உதவியாளனாக பத்தாம் வகுப்பு பாஸ் செய்த பாண்டி. கதை இருவரையும் மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ளது. இந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அவமானங்கள் நம்மை பெரிதும் திகைக்க வைக்கிறது. ஒரு பெரிய சுவர், சோமு மகிழ்ச்சியடைகிறான். வீட்டுக்காரர்கள் விழித்துக் கொள்வதற்குள் எழுதி முடிப்பது என்ற முடிவுக்கு வந்து ஓசைபடாமல் பணியைத் தொடங்கு கிறான். ஆனால் அது போலீஸ் அதிகாரியின் வீடு. திமிர் பிடித்த அதிகாரியால் மிகக் கேவலமாகத் தாக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுகிறான் சோமு. இந்த அவமானங்களை இவன் சகித்துக் கொள்வதற்குக் காரணம் அவனது மகனை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கப் பணம் வேண்டும் என்ற ஆசைதான். கடைசியில் பணம் கிடைக்கிறது. இந்தப் பணத்தைத் தனது குழந்தைக்குச் செலவிட முடியவில்லை என்பதுதான் கதையின் கரு. அதைவிட முக்கியமானது என்று கருதி தனக்கு உதவி யாளனாகப் பணிபுரிந்த பாண்டியின் பிளஸ் 2 கல்வி செலவுக்காக கொடுத்துவிடுகிறான். கதை ஒரு நிமிட நேரம் நம்மை உலுக்கி எடுத்துவிடுகிறது.

ஜீவாவின் கதைகள், ஆண் பெண் உறவுகளைப் பற்றி ஆழமாக யோசிக்க வைக்கிறது. இன்றைய ஆண் ஆதிக்க சமூகத்தில் இந்த உறவுகள் வெறும் பாலுணர்வு இச்சைகள் சார்ந்ததாக மட்டும் புரிந்து கொள்ளப்படுகிறது.

பெண் மீதான பல கற்பிதங்களை நாம் அகற்றிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். இது இன்றையக் காலத்தின் முதல் தேவை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆணாதிக்கக் கோட்டைக் கதவுகளை உடைத்தெறியும் முயற்சியில் சில கதைகள் வெற்றி பெற்றுள்ளன. பெண்ணை மையப் பொருளாகக் கொண்ட ஜீவாவின் கதைகள் வெவ்வேறு தளங்களில் இயங்கினாலும், ஆண்களின் ஆதிக்கத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள வாழ்வின் துயரத்தைச் சொல்லி, விடுதலை உரிமையைக் கோருபவையாகவே இந்தக் கதைகள் அமைந்துள்ளன. ‘பற்றுக்கோடு’, ‘மனசு’, ‘கெட்ட பின்பு....’ போன்ற கதைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதில் ‘ஞானமூர்த்தி’ என்னும் கதை ஆண்களின் மனித மேன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது பெண்ணிய நோக்குள்ள அனைவருக்கும் இத்தகைய பார்வை மிகவும் அவசியமானதாகும்.
குழந்தைகளின் உலகம் அளவிட இயலாத பல துன்பங்களைக் கொண்டது. இந்த நுட்பங்களை அறிந்து கொள்ளும் முயற்சி சில கதைகளில் புலப்படுகிறது. குழந்தை தொழிலாளியின் வாழ்க்கை, முதலாளி அடித்த அடியின் ரத்தத் துளிகளாக ஆசிரியர் காட்டுகிறார்.

பெரியவர்களை அடித்தும் கண்டித்தும் வேலை பெற முடிவதில்லை. குழந்தைகள்தான் குறைந்த ஊதியத்தில் மிரட்டி வேலை வாங்குவதற்குப் பொருத்தமுடையவர்கள் என்ற கருத்து எத்தகைய இழிவானது. இந்த இழிவை மிகவும் ஏளனம் செய்து, உணர்த்த முயல்கிறார்.

இதைப் போலவே குழந்தைகளின் மென்மையான உலகின் மீது எல்லாக் காலங்களிலும் ஒரு வன்முறை நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இந்தக் குற்றத்தை யார் செய்தார்கள் என்பதைத் தேடிக் கொண்டிருப்பது அர்த்தமற்றது. பெற்றோர், ஆசிரியர், சுற்றத்தார் என்று அனைவரும் இந்தக் குற்றத்தைச் செய்து கொண்டிருக்கிறோம். ஜீவாவின் கதைகள், இந்த நுட்பமான பிரச்சினையில் வெற்றி பெற்றுள்ளது என்றுதான் கூற வேண்டும். இந்தத் தொகுப்பில் ‘இளந்தளிர்’, ‘ஆம்பிளை சிங்கம்’, ‘வேறு வேறு உலகம்’, ‘போலித்தனம்’ போன்ற கதைகள் குழந்தைகள் பற்றி எழுதப்பட்டவை.
மனிதர்களிடம் படித்துள்ள சுயநலம் குறித்து சில கதைகள் எள்ளல் தொனியில் சொல்லிச் செல்கின்றன. உறுத்தல் என்னும் சிறுகதை இதற்குச் சிறந்த உதாரணம். கதையைப் படித்தவுடன் சுயநல அருவருப்பு ஒரு துர்நாற்றத்தைப் போல நம்மைச் சூழ்ந்து கொள்ளுகிறது.

நரி என்னும் கதையில் நடமாடும் வெங்கடேசன் நகைச்சுவை உணர்வை நம்மிடம் எழுப்பி, நம்மையறியாமல் கூட மற்றவர்களுக்கு நாம் சுவையாக மாறிவிடக் கூடாது என்ற உணர்வைத் தருகிறது. இதைப்போலவே கிண்டல் செய்து நகைச்சுவை உணர்வை உருவாக்கும் மனசு அமைந்துள்ளது.
தொழிலாளர் வாழ்க்கையைப் பற்றிய சிறப்பான பதிவுகள் சில கதைகளில் அமைந்திருக்கின்றன. அண்மைக் காலங்களில் தொழிலாளருக்கான அர்ப்பணிப்பு உணர்வை இழந்து நிற்கும் தொழிற் சங்கங்களைப் பற்றி ஆக்கப்பூர்வமான விமர்சனங் களும் கதைகளில் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தொழிலாளர்களின் ஒற்றுமை என்னும் ஆயுதத்தால் அனைத்தையும் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கதைகளில் ஆழ்ந்து நிற்கிறது. இந்தத் தொகுப்பில் மொத்தம் 25 சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. இவை அனைத்தும் கடந்த 25 ஆண்டுகளில் வெவ்வேறு சூழல்களில் எழுதப்பட்டவை. இந்த கதைகள் கால் நூற்றாண்டுக் காலத்தை ஏதோ ஒரு வகையில் நம்மைத் திரும்பிப் பார்க்கவைக்கின்றன. கதையாசிரியரின் செய்நேர்த்தி, கருவைத் தேர்வு செய்வதிலும், அதைச் செம்மையுற அமைத்துக்காட்டுவதிலும் வெற்றி பெற்றுள்ளது என்பதற்கு இந்த தொகுப்பின் கதைகளையே ஆதாரமாகக் கொள்ளலாம்.

பற்றுக்கோடு
ஆசிரியர் : புதிய ஜீவா, வெளியீடு : வளநாடு பதிப்பகம், பு.எண் : 40, ப. எண் : 19, அப்பாத்துரை, 2-வது தெரு, அயன்புரம், சென்னை - 600 023, விலை : ரூ.80/-


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com