Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007
தலையங்கம்

புதிய நூற்றாண்டில் பெண்கள்

மனித சமுதாயம் தோன்றிய காலத்தில் இருந்த மக்கள் கூட்டத்துக்குப் பெண்ணே தலைமை தாங்கினாள். அவளைச் சுற்றியே அக, புற வாழ்க்கையும் உறவுகளும் அமைந்தன. ஆனால், காலம் செல்லச் செல்ல உற்பத்திச் சக்திகளும், உற்பத்தி உறவுகளும். மாறிச் சமுதாயம் வளர்ச்சி பெற்ற காலக் கட்டங்களில் பெண் தலைமைப் பதவியை இழந்தாள்.

இது எந்தக் காலக் கட்டத்தில் நிகழ்ந்தது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. தாய் தலைமை இழந்து தந்தை தலைமைக்குச் சமுதாயம் மாறிற்று. பெண் எல்லாத் தலைமை பதவிகளில் இருந்தும் தூக்கி எறியப்பட்டாள்.

உங்கள் நூலகம்


இரு திங்கள் இதழ்

கௌரவ ஆசிரியர்
முனைவர். அ.அ. மணவாளன்

ஆசிரியர்
ஆர். பார்த்தசாரதி

நிர்வாக ஆசிரியர்
ஆர். சாரதா

ஆலோசகர் குழு
ஏ.எஸ். மணி
ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி
கல்பனாதாசன்

ஆசிரியர் குழு
கே.ஜி.சத்தியநாராயணன்
எஸ். சண்முகநாதன்
பா. பாஸ்கர்
சண்முகம் சரவணன்
சி.பி. ராணி

இதழ் வடிவமைப்பு
மாரிமுத்து

உங்கள் நூலகம்
நியூ செஞ்சுரி வாசகர் சங்கம்
41-B, சிட்கோ இண்ட்ஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600 098.
தொலைபேசி: 044-26251968
Email: [email protected]

தனி இதழ்: ரூ.10
ஓராண்டு சந்தா: ரூ.100
வெளிநாட்டு சந்தா: 12 டாலர்

தொடக்கக் காலத்தில் பெண் கடவுளாகவும், போர் வீரமங்கையாகவும் இருந்தாள். அவள் மரித்த பின் அவள் சேகரித்த சொத்துக்கள் அவளுடைய வாரிசுகளைச் சென்றடைந்தன. பெண் தன் கணவனையும் பிள்ளைகளின் தந்தையையும் அடையாளம் காட்டினாள். ஆனால் இந்நிலையிலிருந்து பெண் சரிந்து விழுந்தாள். இதனால் சமுதாயத்துக்கு ஏற்பட்ட இழப்புகள் பலப்பல.

மனித சமுதாயத்தை வயிற்றில் சுமந்து படைக்கும் பெண்களும் உலகில் காணப்படும் செல்வங்களை அச்சமுதாயத் திற்குப் படைத்தளிக்கும் உழைக்கும் மக்களும் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் ஒதுக்கப்பட்டு விளிம்பு நிலையினராயினர். இம்மக்கள் பகுதியினரை மையப்படுத்தி அவர்கள் மேல்நிலை அடைய வேண்டும் என்னும் நோக்கில் சமுதாய மாற்றக் கருத்தியலை, இலக்கியங்களைப் படைத்தவர்கள் கார்ல் மார்க்சும், ஏங்கல்சும் ஆவர். குறிப்பாக பிரெடரிக் ஏங்கல்ஸ் “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்னும் நூலில் பெண்ணினம் அடைந்த மாற்றங்களையும் சொல்லொணாத் துன்ப துயரங்களையும் பட்ட கொடுமை களையும் எடுத்துக்காட்டியுள்ளார். பெண்ணியம் பற்றிய முதல் நூல், மூல நூல் இதுவே.

சுரண்டும் நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தில் வயல்களில் வேலை செய்யும் பெண்கள் அனுபவிக்கும் வேலைக் கொடுமை களையும் முதலாளித்துவ சமுதாயத்தில் ஆண் பெண் தொழி லாளர்களிடையே நிலவும் வேற்றுமைகளையும் மிக விளக்கமாக ஏங்கெல்ஸ் எடுத்துச் சொல்லியுள்ளார். கிரேக்க சமுதாயத்திலும் பெண்ணினம் எப்படித் தாழ்ந்தது, அடிமையாயிற்று ஆணினம் கற்பு நெறியை எவ்வாறு பெண்ணினத்தின் மேல் திணித்தது என்பனவற்றையெல்லாம் இவர் தம் நூல்களில் எடுத்துக் காட்டியுள்ளார்.

இந்தப் பின்புலத்தில்தான் உலக சோசலிஸ்ட் தொழிலாளி வர்க்கத்தின் இரண்டாவது அகிலம் ஒவ்வோராண்டும் மார்ச் 8 ஆம் நாள் மாதர் தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என முடிவு செய்தது. இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் பிரெடரிக் ஏங்கெல்சின் துணிச்சல் மிக்க அறிவார்ந்த சீடராகவும் உலக சோசலிச மகளிர் இயக்கத்தின் தலைவியாகவும் இலங்கிய கிளாரா ஜெட்கின் அம்மையாராவார்.

நியூயார்க்கில் முதன் முதலில் 1857 ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று இல்லங் களிலும் பஞ்சாலைகளிலும் உழைக்கும் பெண்கள் உரிமை எழுச்சி ஊர்வலம் நடைபெற்றது. அன்றுதான் கிளாரா ஜெட்கின் அம்மையாரும் பிறந்தார்.

இரண்டாவது அகிலத்துக்குப் பின்னர், 1893 ஆம் ஆண்டு தொடங்கி அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களுக்குக் கல்வியும் வாக்குரிமையும் அளிக்கப்பட்டன. நாளடைவில் பாராளுமன்றங்களில் உறுப்பினர் பதவியும், அமைச்சர் பதவியும் பெற்றனர். முதலமைச்சராக இலங்கும் வாய்ப்பும் கிட்டிற்று.

சுரண்டல் சமுதாயத்தில், முதலாளித்துவ நாடுகளிலும் வளர்ச்சியடையாத நாடுகளிலும் மகளிர் உரிமைக் குரலெழுப்பிப் போராட்டத்தைத் தூண்டும் நாளாகவும், மார்ச் 8 அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக, தனியார் மயமாதல், தாராளமயமாதல், உலக மயமாதல் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கையில் எல்லா மக்களும் குறிப்பாகப் பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர்; கேவலமாக நடத்தப்படுகின்றனர். வாழும் உரிமை, அரசியல் உரிமை, சமக்கூலி உரிமை, மருத்துவ வசதிகள் போன்றவை எல்லாம் வற்புறுத்தப்படும் நாள் இது. சுரண்டல் சமுதாயத்தில் பெண்ணினம் குறிவைத்துத் தாக்கப்படுகிறது. சதி, கிராமப் புறங்களில் பெண் சிசுக் கொலை, பணியிடங்களில் பால் வேறுபாடு, பாலியல் கொடுமைகள், உரிமை மறுப்பு, கூலியில் ஏற்றத்தாழ்வு என்பனவெல்லாம் பெண்ணினத்துக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள்.

இந்திய அரசின் அண்மைக்கால நடவடிக்கைகள் ஆண், பெண் இருவருக்கிடையே உள்ள வேற்றுமைகளை உறுதிப்படுத்துவதாக உள்ளன. வேலை நேரம் அதிகரிப்பு, அலுவலக உணவுச் சாலைகளில் பாரபட்சம், மகப்பேறு மருத்துவ வசதிகளைக் குறைத்தல் போன்ற தீங்குகள் அதிகரித்து வருகின்றன. புதிதாகத் தோன்றும் தொழில்களில் தொழிற்சங்க உரிமைகள் எவையும் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக மகளிர்க்கு இவை வழங்கப் படுவதே இல்லை. அண்மையில் நிகழ்ந்த விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாகப் பயங்கரமாக பீறிட்டு எழுந்துள்ள புதிய மென் பொருள் துறைகளில் பெண்ணுரிமைகள் எவையும் இல்லை. இவற்றுக்காகப் பெண் தொழிலாளர் மிகக் கடுமையாகப் போராடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எண்ணிக்கையில் பெண்கள், மக்கள் சமுதாயத்தில் சரிபாதிக்கு மேலானவர்கள். அவர்களுக்கு எல்லா நிலைகளிலும் நலன்கள் சரிபாதி வழங்கப்படவேண்டும். குறிப்பாக மாறிவரும் புதிய சமுதாயத்தில் மக்கள் எல்லாத் துறைகளிலும் எழுச்சி பெறும் பின்புலத்தில் இது மிகத் தேவை. நாடாளுமன்றத்திலும் சட்ட அவைகளிலும் அதாவது ஜனநாயக அமைப்புக்களைப் பேணிக்காக்கும் எல்லா உறுப்புக்களிலும் மூன்றில் ஒரு பங்காவது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது.

இந்திய நாடு ஒரு கூட்டாட்சி அமைப்பு: சட்ட அவை, நிர்வாகம், நீதி மன்றம் என்னும் மூன்று அமைப்புகளும் இந்திய மக்களாட்சியின் தூண்கள். இவற்றில் சரிபாதி இல்லாவிட்டாலும் மூன்றில் ஒரு பகுதியினராவது பெண்களாக இருத்தல் வேண்டும் என்னும் கோரிக்கை நியாயமானதே.
மேற்கு வங்கத்தைச் சார்ந்த இந்திய மாதர் இயக்கத்தின் முன்னோடியாகவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இலங்கிய கீதா முகர்ஜி அவர்கள் நாடாளுமன்றத்தில் பெண்கள் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்ற முன்வரைவு திட்டத்தைப் பரிந்துரைத்தார். நாடாளுமன்றத்தில் அன்று முதல் இன்று வரை அது விவாதிக்கப்பட்டு வருகின்றதே தவிர நிறைவேற்றப்படவில்லை, விவாதிப்பதற்கும் எழுப்பப்படும் தடைகள் ஏராளம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், ஆண்கள் பலர் பிரதிநிதிகளாக இருந்து தொகுதிகளை மேம்படுத்தி வளப்படுத்தியுள்ளனர். எனவே அத்தொகுதிகளைப் பெண்களுக்கு விட்டுக்கொடுக்க அவர்கள் தயங்குகிறார்கள். பின்தங்கிய சாதிப் பிரதிநிதித்துவம் என்பதும் மற்றொரு பிரச்சினை.

இருபத்து ஓராம் நூற்றாண்டு பெண்கள் சீர்பெற்றுச் செம்மையுறும் நூற்றாண்டாக விளங்குவதாக. இத்தடைகள் இருப்பினும் சனநாயகம் தழைக்க வேண்டுமானால், இந்திய மாதர் முழுமையான சமத்துவம் பெற வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் இம்முன்வரைவுத் திட்டம் உடனடியாகச் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும். நிறைவேற்றப்படும் எனப் பிரதமர் கூறிய உறுதிமொழி வரவேற்கத்தக்கது. தடைகளையும் இடையூறுகளையும் முறைப்படி நாளடைவில் தீர்த்துக் கொள்ளலாம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com