Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

நேர்காணல்

மாஸ்கோவில் தமிழ் அன்றும் இன்றும்

மாஸ்கோ தமிழ்த்துறைப் பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்ஸ்கி தனது மாணவர்களோடு அண்மையில் சென்னைக்கு வருகைத்தந்தார். சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறையில் சொற்பொழிவு ஆற்ற வந்தபோது உங்கள் நூலகத்திற்காக ஒரு உரையாடலை நிகழ்த்தினோம். அந்த உரையாடலின் சிலப் பகுதிகள்....

வீ. அரசு
முத்தையா வெள்ளையன்.

தமிழ், தமிழ்நாட்டோடு உங்கள் தொடர்புப் பற்றி கூறுங்கள்....

என்னுடைய தொடர்பு என்பது மிக நீண்ட நெடியது. முதன் முதலாக 1978-இல் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் வந்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் படித்தேன். மாணவர்கள் விடுதியில் தங்கி, அவர்களோடு பழகினேன். அப்போது தமிழ்த்துறைத் தலைவராக டாக்டர் சஞ்சீவி இருந்தார். அவரோடு நிறையப் பேசினோம், நிறையப் படித்தோம், நிறைய விவாதித்தோம். அப்போது விரிவுரை யாளராக இருந்த பொற்கோவிடம் தொல்காப்பியம் படித்தேன். சி. பாலசுப்பிரமணியத்திடம் குறுந்தொகை படித்தேன். நான் தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒவ்வொரு முறையும் தமிழ்த் துறைக்கு வருவேன். இது சென்னையில் என் வீடு போல இருக்கும். இப்பொழுது டாக்டர் வீ. அரசு போன்ற நல்ல நண்பர்கள் சென்னையில் இருக்கிறார்கள்.

தமிழ் என்ற மொழியை அறிமுகப்படுத்தியது யார், ஆர்வமும் எப்படி ஏற்பட்டது?

உண்மையைச் சொல்லப்போனால் தற்செயலாக நடந்தது. ஏன் என்றால் என் வாழ்க்கையின் மிக சிக்கலான காலகட்டம் அது. நான் இராணுவத்தில் வேலை பார்த்தேன். அப்போது படிக்க விரும்பினேன். அதுவும் ஏதாவது ஒரு மொழியைப் படிக்க வேண்டும் என நினைத்தேன். கீழைத்தேய மொழியியல் ஆய்வுத் துறை ஒன்று மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் இருந்தது. இந்திய மொழியியல் துறை புதிதாக உருவாக்கப்படுகிறது என்றும் தமிழ் மொழி மிகத் தொன்மையானது, கலாசார தொடர்புடையது, அந்த மொழி வகுப்பில் நீங்கள் சேர வேண்டும் என்று அங்குள்ள நண்பர் ஒருவர் கூறினார். இப்படித்தான் தமிழ் மொழியைக் கேள்விப்பட்டுப் படிக்க ஆரம்பித்தேன். என் ஆசிரியரின் பெயர் யூரி கிளாஸப். கிளாஸ்ப் என்ற ரஷ்ய மொழிக்கு தமிழில் கண் என்று அர்த்தம். தமிழ்நாட்டிலே அவரை கண்ணன் என்றே அழைப்பார்கள். அவர் ஒரு மொழியியலாளர். தமிழ் மொழியைத் தாமாகவே கற்றுக் கொண்டவர். அவர் திருக்குறளையும், சிலப்பதிகாரத்தையும் ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்தவர்.

பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்கும்போது முல்லைத்திணை பற்றி ஆய்வு செய்தேன். அப்போதே விரிவுரையாளராகவும் வேலை செய்துவந்தேன். எனக்கும் தமிழ் மொழிக்கும் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் தொடர்பு உண்டு.

நீங்கள் தமிழில் என்ன படித்தீர்கள்.....

1968-இல் யூரி கிளாஸ்னோவ் வெளிநாட்டுக்கு போய்விட்டார். பிறகு இன்னொருவர் வந்தார். அவருக்கு தமிழ் தெரிந்தது. தொடக்கத்தில் நாங்கள் தற்கால இலக்கியம் படித்தோம். ஆனால் எனக்குப் பழைய தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு இருந்தது. நான் தானாகவே சங்க இலக்கியத்தைப் படித்தேன். ரூடின் என்ற சிறந்த அறிஞர் எனக்கு உதவி செய்தார். அவர் லெனின் கிராடு பல்கலைக்கழகத்தில் துறைத் தலைவராக இருந்தார். அவர் 73-இல் காலமாகிவிட்டார். அவரும் நானும் சென்னையில் ஒரு அறையில் வசித்திருக்கிறோம். அவருடைய பேராசிரியர் மு. வரதராசனார். எங்களுக்கும் தமிழுக்குமான ஒரு மரபுத் தொடர்ச்சி இருந்தது. அவரிட மிருந்து தமிழ் இலக்கியங்களான குறுந்தொகை, நற்றிணையைக் கற்றேன். அவர் லெனின் கிராடில் ஒரு நாள் படகில் செல்லும் போது மூழ்கி இறந்துவிட்டார். அது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது.

பொதுவாகத் தமிழ் மொழி ஒலிகளை வைத்துதான் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. அயல் மொழிக்காரர்களுக்கு இந்த ஒலி அமைப்புகள் மிகவும் சிரமப் படுத்துவதாகக் கூறுகிறார்களே....

ஆமாம். மிகவும் கஷ்டம்தான். என்னுடைய மாணவிகள் ருஷ்ய மொழியும் தமிழ் மொழியும் பேசுவார்கள். ஆனால் அவர்கள் இன்னும் தமிழ் உச்சரிப்பைப் பயில வேண்டும். கஷ்டமாக இருந்தாலும் மொழியின் பேச்சுவேகம் சிரமம் தரக்கூடியதாகத்தான் இருக்கிறது. காது, நாக்கு போன்றவை களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. இருந்தாலும் மொழியின் முக்கியமான நோக்கம் என்னவாக இருக்கிறது? மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள, அறிந்து கொள்ள உதவுகிறது.

தமிழ் கற்பித்தல் மாஸ்கோவில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எப்படி இருக்கிறது....

லெனின் கிராடைச் சேர்ந்த அலெக்சாண்டர் மேரவாத், இன்னொருவரும் முதலாம் உலகப் போருக்குப் பின் இந்தியாவுக்கும், ஸ்ரீலங்காவுக்கும் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இந்தியாவில் வங்காளம், ஹிந்தி, தமிழ் போன்ற மொழிகளைக் கற்றார்கள். அலெக்சாண்டர் மேரவாத் ரஷ்யாவுக்கு வந்த பிறகு அவர் கிழக்கிந்திய மொழிகளின் பல்கலைக் கழகத்தில் தமிழ் சொல்லிக் கொடுத்தார். எனக்கு தெரிந்த வகையில் மணிமேகலையை ரஷ்ய மொழியில் அவர் மொழி பெயர்த்தார். அது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அவருடைய முயற்சிகள் வீணாகிப் போயின. இருந்தாலும் அவர் பெயர் சொல்கிற வகையில் தமிழ் மொழி இலக்கணம் என்ற நூலை ரஷிய மொழியில் 1929-இல் எழுதியுள்ளார். அவருடைய இந்த மரபில் ஒரு இடைவெளி வந்தது. 1950-ஆம் ஆண்டுகளின் கடைசியில் கீழைத்தேய மொழிகளை மக்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆண்ட்ரனோவ் என்ற மொழியியலாளர் மாஸ்கோ பல்கலைக்கழகத்திலே கற்றுக் கொடுத்தார். 1960-இல் முதல் தமிழ் வகுப்பு லெனின்கிராடில் ருடினால் தொடங்கப்பட்டது. இன்னொரு வகுப்பு 1965-இல் லெனின்கிராடிலும், மாஸ்கோவில் நான் படித்த வகுப்பும் இருந்தது. ருடின் இறந்தபிறகு தெலுங்கு ஆசிரியர் ஒருவர் சில சமயம் தமிழ் சொல்லிக் கொடுத்தார். ஆனால் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இந்த மரபு இன்னமும் இருக்கிறது. என்னிடம் ஏழு தலைமுறை மாணவர்கள் படித்து முடித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு முறைக்கும் ஆறு அல்லது ஏழு பேர் இருப்பார்கள். இந்த மரபு என்னோடு முடிவடையாமல், யாராவது இந்த மரபை ஏற்றுக்கொள்ள வேண்டும், நீடிக்க வேண்டும், ஆதரவு தரவேண்டும்.

இதற்கு என்ன மாதிரியான வாய்ப்புகளை நீங்கள் உருவாக்கி இருக்கிறீர்கள்.....

நான் எந்த வாய்ப்பையும் உருவாக்கவில்லை. ஏன் என்றால் சம்பளம் மிகக் குறைவாக இருப்பதால் யாருக்கும் அக்கறை இல்லை. 60, 70 ஆம் ஆண்டுகளில் எல்லோருக்கும் எல்லாவற்றின் மீதும் அக்கறை இருந்தது. ஆனால் இப்போது எனக்கு ஈடுபாடு மட்டுமே இருக்கிறது. என்னுடைய பொறுப்பு என்பது ஆய்வேடுகள் எழுதுவதற்கு உதவி செய்வது, தமிழ்மொழி, பண்பாடுகளைச் சொல்லிக் கொடுப்பது, பழைய இலக்கியத்தைப் படிக்க, அறிந்து கொள்ள உதவி செய்வதுதான். இப்போது என்னுடைய வகுப்பில் 5 பெண்களும் அலெக்சி என்ற பையனும் படிக்கிறார்கள்.
எதிர்காலத்தில் மாஸ்கோவில் தமிழ் படிப்பு எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்.....

Orient School of African – Asian Studies - என்பது மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவு. இது மாஸ்கோ அரசாங் கத்தால் நடத்தப்படுகிறது. என்னால் இப்போது எதுவும் உறுதியாக சொல்லமுடியாது. தமிழ் மொழி மட்டுமில்லை, கிழக்கு மொழிகள் பொதுவாக நமக்கு எதற்கு வேண்டும்? ஆங்கில மொழி அறிவு போதும் என்று கருதுகிறார்கள்.

ஏழு தலைமுறைகளாகத் தமிழ் படித்த மாணவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்......

முன்பு தமிழ் மொழி அறிவை நன்றாகப் பயன்படுத் தினார்கள். ஏனெனில் முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா, வானவில், மீர் பதிப்பகங்களெல்லாம் இருந்தன. அன்றைக்கு தமிழ் வானொலி நிலையங்களில் ருடின் மாணவர்கள் வேலை பார்த்தனர். அதெல்லாம் இப்போது இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் மாணவர்களுக்கு தமிழ் மொழியினால் வேலை வாய்ப்பு இல்லை. இந்த நிலை துரதிர்ஷ்டமானது. ஆனால் மாணவர்கள் ஒருசிலர் ஆர்வத்துடன் படிக்கிறார்கள். ஆனால் இந்தி மொழி படித்தால் இந்திய தூதரகங்களில் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அரபி, சீனா, ஜப்பானிய மொழி படிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

1956-இல் சோவியத் யூனியனும், இந்தியாவும் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டன. அதைப் பற்றிச் சொல்லுங்களேன்....

அப்போது முன்னேற்றப் பதிப்பகத்தின் நோக்கம் அரசியல் புத்தகங்களையும் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் பிரஷ்னேவ் போன்றவர்களின் நூல்களை வெளியிடுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இருந்தாலும் ருஷ்ய இலக்கியங்களையும் கவிதைகளையும், விஞ்ஞான நூல்களையும் குழந்தைகளுக்கான நூல்களையும் வெளியிட்டார்கள். இது மிகச் சிறந்த பணி.

அப்போது புத்தகங்களுக்காக செலவழித்த பணங்களை வேறு ஏதாவது காரியத்திற்காக செலவிடுகிறார்களா? இல்லை உண்மையிலே பொருளாதார சிக்கல் நாட்டில் உள்ளதா....

பணத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்திய சோவியத் உறவுகள் வேலைகளுக்கு அப்போது நல்ல பணம் கொடுத்தார்கள். அந்த மாதிரி ஏதாவது நடக்கும், பார்ப்போம், நம்புவோம்.

தமிழ்நாட்டிலிருந்து மாஸ்கோவில் குடியேறியவர்கள் இருக்கிறார்களா.....

ம்.... இருக்கிறார்கள். பொதுவாக அங்கு வாணிகம் செய்கிறார்கள்.

தமிழ் தொடர்பான என்ன ஆய்வுகள் நடந்திருக்கின்றன. இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள்....

என்னுடைய வாழ்க்கைத் திட்டம் என்று எதுவும் கூற முடியாது. புறநானூற்றை ருஷ்ய மொழியில் பாதி அளவு மொழிபெயர்த்து இருக்கிறேன். குறுந்தொகை மொழி பெயர்த்து வருகிறேன். அடிக்கடி சில கட்டுரைகளை எழுதி வருகிறேன். நிறைய கருத்தரங்குகளில் கலந்துகொள்கிறேன். சென்ற ஆண்டு மே மாதத்தில் பிராக் நகரில் ஒரு கருத்தரங் கிலும், பாரிசில் சங்க இலக்கியத்தைப் பற்றிப் பேசினேன்.

இதுவரை உங்களுடைய நூல்கள் என்னென்ன வந்திருக்கின்றன...

ருஷ்ய மொழியில் மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. முதல் நூலாக தமிழ்ப் பாட நூல் ஒன்றை மொழி பெயர்த்து வெளியிட்டேன். அவற்றில் நற்றிணை, குறுந்தொகை, பத்துப்பாட்டு, மதுரைக் காஞ்சி, திருமுருகாற்றுப்படை இவைகளிலிருந்து சில பாடல்களை ருஷ்ய மொழியில் மொழி பெயர்த்தேன். பிறகு நானும் டாக்டர் லூம்பாவும் புதுமைப் பித்தன் பற்றி நூல் ஒன்றை எழுதினோம். தமிழ் இலக்கியம் பற்றிய நூலும் ருஷ்ய மொழியில் வந்திருக்கின்றது. Myths in ancient of Tamil literature என்ற ஆராய்ச்சி நூல் ருஷ்ய மொழியில் வெளியானது. இப்போது ஆங்கிலத்தில் ஹாலந்தில் பிரசுர மாயிற்று.

ருஷ்ய மொழியில் பண்டைய தமிழ் இலக்கியத்தைக் கொண்டு சென்ற பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்ஸி என்று நாங்கள் சொல்லலாம். ஏனெனில் வேறுயாரும் செய்யவில்லை....

இப்பொழுது யாரும் செய்யவில்லை.

சங்க இலக்கியத்தை உங்கள் காலத்தில் முழுவதும் மொழிபெயர்த்து சென்றால் நிறைவான பணியாக இருக்குமே....

முழுவதும் முடியாது. ஏன் என்றால் நேரமே இல்லை. நிறைய வகுப்புகள் இருக்கின்றன. இந்த மாணவர்களுக்கு என்னுடைய வாழ்க்கையை நான் அர்ப்பணித்துவிட்டேன். ஆராய்ச்சிகளுக்கும், மொழிபெயர்ப்புகளுக்கும் நிறைய கவனமும், நேரமும் வேண்டும்.

இப்போது உங்கள் மாணவர்களோடு வந்த பயணத்தில் பதிவுகள் என்ன...

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆழ்ந்த மன பதிவு களோடு இருக்கிறேன். நான் முன்பே தமிழகத்தைச் சுற்றி விட்டேன். அவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூட்டிக் கொண்டுவந்தேன். மாணவர்கள் களைப்பாக இருந்தாலும் மக்களின் பல்வேறு சடங்குகள் பற்றிப் பயணம் செய்தபோது சொல்லிக்கொடுத்தேன். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ள தமிழ்ச் சங்கத்தைப் பற்றியும், புலவர்களைப் பற்றியும் விவரமாகவும் நக்கீரர் கதையும் எனது மாணவர்களுக்குச் சொன்னேன். இந்தப் பயணங்களைப் பற்றி ஆய்வேடுகளில் மாணவர்கள் எழுத வேண்டும். நான் இப்போது இங்கு வருவதற்கு மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் உதவி செய்தது. ஆனால் மாணவர்கள் சொந்தச் செலவில் வந்தார்கள். ஆனால் அவர்கள் பணக்காரர்கள் இல்லை. இருந்தாலும் அவர்களால் முடிந்தது.

தமிழின் திணைக்கோட்பாடு பற்றி....

திணைக்கோட்பாடுகளை தமிழின் முக்கியமான ஒன்றாக நினைக்கிறேன். மற்ற இலக்கியங்களிலும், வடமொழி இலக்கியங்களிலும் இந்த மாதிரியான சில அடிப்படைகள் இருந்தாலும் தமிழில் உள்ள திணைக்கோட்பாடு நேரடியான, நுணுக்கமான, விசேஷமான சிறப்பு. ஹாலண்டைச் சேர்ந்த டிக்கன் என்பவர் தமிழ் இலக்கியம் என்பது ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பிறக்கிறது என்றார். மேலும் வட மொழியின் மொழிபெயர்ப்புதான் தமிழ் என்றும் கூறுகிறார். மொழி என்பது கோட்பாட்டு அடிப்படையில் எப்படி வளர்ந்தது? நடைமுறையில் எப்படி இருந்தது? என்பது குறித்து அவர் கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

டிக்கன் எழுதிய புத்தகத்திற்கு என்ன பதில் இருக்கிறது உங்களிடம்....

சிலர் நல்ல பதிலை டிக்கன்னிற்கு சொன்னார்கள். தமிழ் இலக்கியத்தில் நிறைய சான்றுகளும், பட்டினப்பாலையிலும் சிலப்பதிகாரத்தில் உள்ள வணிகத் தொடர்பு பற்றிய சான்று களும் உள்ளன. சமஸ்கிருத மொழி பெயர்ப்பாக தமிழ் மொழி இருக்க முடியாது. தமிழ் மொழி மொழிபெயர்ப்பு என்றால் அதன் மூலத்தை சமஸ்கிருதத்தில் காட்ட முடியுமா? என்று டிக்கனைக் கேட்டேன்.

அதெல்லாம் காணாமல் போய்விட்டது என்று அவரிடமிருந்து பதில் மிகவும் சுலபமாக வந்தது. வடமொழிக்கும், தமிழ்மொழிக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. இதை ஆராய வேண்டும். டிக்கன் சொல்வது போன்று சொல்ல முடியாது. இன்னொரு சுவாரசியமான தகவல் ஒன்று இருக்கிறது. என்னுடைய நூலும், அவருடைய நூலும் ஹாலண்டில் உள்ள ஒரே பதிப்பகத்தில் வெளியிடப் பட்டுள்ளது. டிக்கன் அணுகு முறையும், என் அணுகுமுறையும் வேறு வேறானவை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com