Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2006

நூல் மதிப்புரை

பாரதி இயல் ஆய்வுக்கு விலை மதிப்பில்லா ஆவணம்

ஏ.வெங்கட்ராமன்

காலம் சில கவிஞர்களை உருவாக்கும்; ஆனால் காலத்தையே ஒரு கவிஞன் உருவாக்குகிறான் என்று சொன்னால், அந்தக் கவிஞன் உண்மையிலேயே ‘காலத்தை வென்றவன்’ ஆவான். மகாகவியாக வலம் வந்து கொண்டிருக்கும் பாரதி காலத்தால் உருவான கவிஞனாக மட்டுமல்லாது, காலத்தை உருவாக்கிய தேசியக் கவிஞனாகவும் திகழ்ந்துள்ளான். இன்று 124ம் பிறந்த தினத்தை நாம் கொண்டாடும் வகையில் அவன் மக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் அழியாப் புகழ் பெற்ற மகாகவி. “மறந்து கொண்டே இருப்பது மனித இயல்பு; நினைவு படுத்துவது எனது கடமை” என்கிறார் எரிக் ஹோப்ஸ்வாம். கடந்த கால வரலாற்றை உயிர்ப்பித்துத் தருவதன் மூலம் மறந்து விட்ட தேசத்தின் விடுதலையை நினைவுபடுத்தி நாட்டு மக்களை யுகப் புரட்சிக்கு இட்டுச் சென்றவர் பாரதி.

Bharathi 1905ம் ஆண்டு வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து துவக்கப்பட்ட சுதேசி இயக்கத்தால் தேசிய எழுச்சி உலகிற்கு அடையாளம் காட்டப்பட்டவர் பாரதி. சுதேசிமித்திரன் (1904-1906) பத்திரிகையினில் மொழிபெயர்ப்பாளராகப் பணியினைத் துவக்கிய பாரதி, உதவி ஆசிரியராகவும், 1906ம் ஆண்டு முதல் இந்தியாவின் ஆசிரியராகவும், பின்னர், பாண்டியிலிருந்து மறுபிறவி எடுத்த இந்தியா, விஜயா, கர்மயோகி, பாலபாரத் போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராகவும்; சூரியோதயம், தர்மம் போன்ற சுதேசி பத்திரிகைகளுக்கு உற்ற தோழனாகவும் சுதேசி இயக்கப் போராட்டத்திற்கு இந்திய மக்களை ஓரணியில் திரட்டும் தேசியப் பணியினை திறம்பட செய்து வெற்றி கண்டவர் பாரதி.

பாரதி இலக்கியவாதி, பத்திரிகையாளர், சுதேசி எண்ணங் கொண்ட அரசியல்வாதி என பல அவதாரங்களையும் தான் வாழ்ந்து முடித்த 39 ஆண்டு காலத்திற்குள் செய்து காட்டியவர். சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சூழலில், பாரதிக்கு பல கட்டுப்பாடுகள் மித்திரன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயரால் விதிக்கப்பட்டிருந்தது. ஆகையால்தான் தனது படைப்புகளை புனைப் பெயர்கள் கொண்டு வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மாண்டயம் சகோதரர்களின் அறிமுகம் பாரதியின் மனதில் தேங்கிக் கிடந்த தேசியப் பற்று ஒட்டுமொத்தமாக வெளிவரக் காரணமாய் அமைந்தது. 1906ம் ஆண்டு மே மாதம் இந்தியா பத்திரிகை துவக்கப்பட்டிருந்தாலும், பாரதி நவம்பர் முதல் தன்னை முழுமையான ஆசிரியராக இந்தியாவினுள் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

பாரதி தன்னை முழு நேர இதழாசிரியராக மாற்றிக் கொண்டபோது அவருக்கு வயது 24. 1906 ஆண்டு முதல் 1921ம் ஆண்டு வரை அதாவது பாரதி மறையும் வரை ஏறக்குறைய 15 ஆண்டு காலம் இதழாசிரியராக தேசத் தொண்டாற்றியுள்ளார். பாரதியின் படைப்புகள் என இன்று வரை ஏறக்குறைய பன்னிரெண்டாயிரம் பக்கங்கள் வரை தொடர்ச்சியாக அச்சேறியுள்ளன. இன்னும் இரண்டாயிரம் பக்கங்கள் வரை வெளிக் கொணர வாய்ப்புள்ளது என பாரதி ஆய்வாளர்களின் கூற்றினை வைத்துப் பார்க்கும்போது, ஆண்டொன்றிற்கு ஆயிரம் பக்கங்கள் வரை பாரதியால் புனையப்பட்டிருக்கின்றது என்ற செய்தி நமக்கு வியப்பினை அளிக்கிறது.

“எமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்” என்ற உயரிய லட்சியத்தினைக் கொண்டிருந்த பாரதியின் அரசியல் சிந்தனைகள், பிரிட்டிஷ் இந்திய அரசுக்கெதிரான சுதேசியக் கட்டுரைகள், வ.உ.சியின் சுதேசி நேவிகேஷன் கப்பல் கம்பெனிக்கு நிதி திரட்டும் முயற்சிக்காக எழுதிய கட்டுரைகள், உலக அரசியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகள், காங்கிரஸின் நிதானக் கட்சியினரின் போக்கினையும், தீவிரவாத கட்சியின் அரசியல் நடவடிக்கைகளையும், இந்தியாவில் 1906ம் ஆண்டு முதல் 1910 ஆண்டு வரை தொடர்ந்து எழுதி, இந்திய மக்களிடையே தேசியத்தை வளர்க்கும் அரும்பணியில் தனது வாழ்நாள் முழுமையும் அர்ப்பணித்திருக்கிறார். பாரதியின் பொறுப்பிலிருந்து வெளிவந்த இந்தியா இதழ் 1906ம் ஆண்டு மே திங்கள் 9 நாள் முதல் சென்னையில் துவங்கி 1908ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை வெளிவந்தது. பிரிட்டிஷ் இந்திய அரசின் பார்வையில், “ராஜத் துவேஷக் கருத்துக்களை வெளியிட்டு வருகிறது” என்று கருதி இந்தியாவின் நிர்வாகிகள் ஐவரை சிறைபிடிக்க கைது வாரண்ட் 1907ம் ஆண்டு ஆகஸ்டு, 21ம் நாள் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1908ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் நாள் முதல் பாண்டிச்சேரியிலிருந்து மீண்டெழுந்தது. 1910ம் ஆண்டு பிப்ரவரியில் பிரிட்டிஷ் இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910ன் படி தென்னிந்தியாவில் தடைசெய்யப்பட்ட முதல் தமிழ் இதழாக இந்தியாவும், அதனுடன் விஜயாவும் தண்டிக்கப் பட்டன. தடைக்குப் பின்னர் ஏறக்குறைய நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர் தடையை மீறி இந்தியா, பாண்டிச்சேரியிலிருந்து 1910 ஜூலை முதல் வாரத்திலிருந்து மறுபிறவியினைக் கண்டு 1910 செப்டம்பர் 12ம் நாள் இதழுடன் மீண்டும் அச்சட்டத்தினால் தடை செய்யப்பட்டு மறைந்து போனது. பாரதியின் சுதேசி எழுச்சிப் பணிக்கு ஆணிவேராக இந்தியா தொண்டாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதியின் இந்தியா இதழ்கள் இன்றளவில் எவருக்கும் ஒரு சேரக் கிடைக்கப்பெறவில்லை. தமிழறிஞர் கி.வா. ஜெகந்நாதன் அவர்களது அரிய முயற்சியின் காரணமாக இந்தியாவின் 1906ம் ஆண்டு ஜூலை முதல் 1907ம் ஆண்டு பிற்பகுதிவரை பல அறிஞர்களிடமிருந்து பெற்று கல்கத்தா தேசிய நூலகத்திற்கு அன்னாரால் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தியா பத்திரிகையின் 1908 முதல் 1910 ஆண்டு வரையிலான ஒரு சில இதழ்கள் கண்டெடுக்கப்பட்டு பாண்டிச்சேரி பாரதி அருங்காட்சியக நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

1906ம் ஆண்டு இந்தியா இதழ்களின் தன்மை குறைவடைந்து வருவதைக் கண்ட கல்கத்தா தேசிய நூலக நிர்வாகம் அவற்றை மைக்ரோ பிலிம் மூலம் படிஎடுத்து பாதுகாத்து வந்தது. பாரதி பிறந்த நாள் விழாவினை அவர் பிறந்த எட்டையபுரத்தில் நடத்திக் கொண்டு வந்த பலருக்கு பாரதியின் இந்தியா பத்திரிகையின் மீது தணியாத தாகம் இருந்து வருவதையறிந்த இளசை மணியன், இந்தியா இதழ்களைத் தேடும் பணியில் ஈடுபட்டார். எட்டையாபுரத்தில் இளம் கம்யூனிசத் தொண்டராக வலம் வந்த அவர், கல்கத்தாவில் பாரதியின் இந்தியா இதழ்கள் இருப்பதையறிந்து, பல நல்ல மனிதர்களின் ஒத்துழைப்பின் பேரில் பல மாதங்கள் அங்கு தங்கி இந்தியா இதழ்களின் மைக்ரோ பிலிம் படிகளைப் பெற்று, அவற்றை வாசித்து, பிரதியெடுத்து தனது நெடுநாள் கனவிற்கு விடை பெற்றார்.

இந்தியா பத்திரிகைகளில் வெளியான அனைத்து அரசியல் கட்டுரைகளையும் தொகுத்து, பொருள்வாரியாகவும், காலம் சிதறாமல் பாரதியின் உள்ளத்தினின்று வெளிவந்த அனைத்து எண்ணங்களையும் படு நேர்த்தியாக, நாட்டு வரலாற்றினை எழுதத் துடிக்கும் பல ஆயிரக்கணக்கான ஆய்வறிஞர்களுக்கு தனது இப்படைப்பின் மூலம் வழிகாட்டி பாரதி ஆய்வறிஞர்களுக்கு ஆதர்ஷமாக திகழ்கிறார். இளசை மணியன் அவர்கள் தான் தொகுத்த பாரதியின் இவ்வரிய படைப்புகளை தமிழ் மண்ணில் கம்யூனிச சிந்தனையைத் துளிர்விடச் செய்து செதுக்கிய நிறுவனர்களில் ஒருவரான திரு. C.S. சுப்பிரமணியம் அவர்களிடம் இட்டுச் சென்று பதம் பார்த்து பெற்றுத் தந்திருக்கிறார் மணியன். பாரதி இயல் ஆய்வுக்கு ஒரு மிகப்பெரிய மணி மகுடத்தை இவ்விருவரும் இணைந்து “பாரதி தரிசனம்: பாரதியின் ‘இந்தியா’ கட்டுரைகள்” என என்.சி.பி.எச். நிறுவனத்தின் அரவணைப்போடு பெற்றுத் தந்திருக்கிறார்கள்.

1977ம் ஆண்டு “பாரதி தரிசனம்” இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டன. 1970களில் மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்திய இந்நூல்களில் இரண்டாம் பதிப்பு 2005ல் வெளிவந்திருக்கின்றன. இந்தியா இதழ்களில் குறிப்பாக 1906ம் ஆண்டு ஜூன் முதல் 1907 ஜூலை வரையிலான சுதேசியக் கட்டுரைகள் இவ்விரு தொகுதிகளிலும் அணி சேர்க்கப்பட்டுள்ளன. வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து எழுந்த சுதேசிப் போராட்டத்தின் ஜீவனைப் பற்றி மிகத் துல்லியமாக பாரதி தனது எழுத்துக்களின் மூலம் இந்தியாவில் கட்டுரைகளாக வடித்துள்ளார். “சுதேசி இயக்கப் போராட்டத்தின் போது தமிழ்நாடு எவ்வித பங்களிப்பினையும் காட்டவில்லை” என்று கருத்து கூறி வரும் வட இந்திய காங்கிரஸ் தலைவர்களின் கருத்துக்களுக்கும் வரலாற்று அறிஞர்களின் சிந்தனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தாற்போல் பாரதியின் இந்தியா கட்டுரைகள் விடை தருகின்றன.

“பாரதி தரிசனம்”, இரு தொகுதிகளில் தமிழகத்தின் சுதேசிப் போராட்டப் பங்களிப்பினையும், வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல் கம்பெனி மீதான பிரிட்டிஷ் அரசின் நெருக்கடி, பிரிட்டிஷ் அரசின் மீதான தீவிரவாத கட்சியினரின் கோபங்களையும், விமர்சனங்களையும் தனது கட்டுரைகளின் வாயிலாக பதிலளித்து தனது கோபக்கனலை மிக ஆழமாகப் பதிவு செய்துள்ளார் பாரதி. பிரிட்டிஷ் இந்திய அரசின் இந்திய எதிர்ப்பு கொள்கைகளையும், திட்டங்களையும், இங்கிலாந்து பாராளுமன்றத்தின் இந்தியாவிற்கான கொள்கைகளையும் மிகக் கடுமையாக இக்கட்டுரைகளில் விமர்சித்துள்ளார் பாரதி. தமிழ் நாட்டின் சுதேசிப் பங்களிப்பினை ஆய்வு செய்யும் வரலாற்றாய்வாளருக்கு பாரதி தரிசனம் நூலின் இரு தொகுதிகளிலும் அரிய ஆவணப் பெட்டகங்களாகும். திலகரின் சுதேசி முயற்சிகள், ஹிந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கான பாரதியின் ஏக்கங்கள், தேசிய கல்வியின் அவசியத்தை உணர்த்தும் செய்திகள், காங்கிரஸ் எழுத்துக்கள், உலக நடப்புகள், இந்தியத் தொழிலாளர்கள் மீதான பாரதியின் பரிவு, இந்தியப் பொருளாதாரத்தின் அப்போதைய அவல நிலை என அனைத்து தேசிய, மாகாண, பிராந்தியச் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய இவ்விரு தொகுதிகளும் ஒவ்வொரு இந்தியன் வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொக்கிஷங்கள்.

வாசகர்களின் மனநிலைக்கேற்றவாறு பாரதியின் கட்டுரைகள் அனைத்தும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 1975ம் ஆண்டு முதற்பதிப்பாக வெளியிடும் வேலையில் தொகுக்கப்பட்ட இந்தியா இதழ்கள் 1906 முதல் 1907 வரை தான் கிட்டியது. தற்போது 1907ம் ஆண்டின் பிற்பகுதி, 1908, 1909 மற்றும் 1910ம் ஆண்டு இந்தியா இதழ்கள் கிடைக்கப் பெற்றுள்ளதால், கிடைத்தளவிற்கு மூன்றாம் தொகுதியாக வெளியிட வேண்டும் அல்லது அதற்கான பணியில் தொகுப்பாளர் இளசை மணியன் முயற்சிக்கவேண்டும். இந்த இரு தொகுதிகளிலும் பாரதியின் கைவண்ணத்தால் உயிர் பெற்ற அரசியல் கருத்துப் படங்கள் காலச் சூழல்களுக்கேற்றவாறு பதிப்பிக்கப்பட்டுள்ளன. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அறியத் துடிக்கும் ஆய்வாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் இவ்விரு தொகுதிகள் துணை நிற்கும். இந்த அரிய முயற்சியினை எடுத்து பாரதியின் உள்ளத்து உணர்வுகளையும், அரசியல் சிந்தனைகளையும் வெளிக்கொணர்ந்த பதிப்பகத்தாரின் முயற்சியினையும், இளசை மணியனின் அயராது உழைப்பினையும் தமிழ் உலகம் என்றும் மறக்காது.

பாரதி தரிசனம் : I, II தொகுதிகள்.
தொகுப்பாசிரியர் : ஸி.எஸ். சுப்பிரமணியம், இளசை மணியன்,
வெளியீடு: என்.சி.பி.எச்., சென்னை,
விலை: ரூ. 225 + 175.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com