Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2006

கட்டுரை

ஒடுக்கப்பட்டோரில் தலைவர்கள் ஏன் உருவாகவில்லை?

கோ. தங்கவேல்

இந்திய துணைக்கண்டத்தின் மக்களின் ஐந்தில் ஒரு பங்காகவுள்ள இந்திய மக்கள் இம்மண்ணிலே பிறந்தவர்கள். தொல்பழங்காலத்திலிருந்தே இன்று வரை தாழ்த்தப்பட்டு தீண்டப்படாதவர்களாகவேயுள்ளனர். இதற்கான கரணியங்களை ஆய்வது நமது நோக்கமல்ல. ஆனால், அவர்களிலேயே இத்தனை ஆயிரம் ஆண்டுகளாய் தோன்றிய மாந்தர்களில் ஒருவர் கூடவா இவர்களின் இழிவைப் போக்கி முன்னேற்ற முயலவில்லையென்பது தான் இங்கு எழும் ஐயப்பாடாகும். அவர்கள் இன்று வரை பட்ட அவலங்களை, என்றும் படுகின்ற அவலங்களைச் சொல்லியும், எழுதியும் மாளாக் கதையாகும். அவர்கள் இம்மண்ணின் மைந்தர்கள். இத்திரு நாட்டின் குடிமக்கள் இக்குமுகாயத்தின் மக்களைப் போலவே இந்துச் சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஆனால், இக்குமுகாயத்திலிருந்தும், இக்குமுகாயமக்களாக இல்லாதவர்கள். இந்நாட்டிலேயுள்ள விலங்குகளினும் கீழாக மதிக்கப்பட்டவர்கள். மதிக்கப்படுபவர்கள். இந்நிலையைப் போக்க அவர்களும், அவர்களைக் கரணியமில்லாமல் கசக்கிப் பிழியும் ஒரு சிலரும் சிலபோது துள்ளியெழுந்துள்ளனர். ஆனால், அவர்களைக் கணக்கிலெடுக்காமல் வரலாற்றாளர்களும், இலக்கியவாதிகளும் விட்டுச் சென்றுள்ளனர். இன்றைய சிந்தனையாளர்கள் வலுக்கட்டாயமாக அவர்களை நினைவு கூர்ந்தாக வேண்டுமென்ற நிலைக்குத் தள்ளப் பெற்றுள்ளனர். மூன்று ஆண்டுகளுக்குமுன்பு “பண்டிதமணி அயோத்திதாசரின் தமிழ்ப்பணி” என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையொன்றை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கொடுத்து ஆய்வுப் பட்டம் பெற சென்ற ஒரு மாணவரை நேர்க்காணலில் கேட்ட முதல் கேள்வியே இதுதான். “இத்தனைப் பெரிய தமிழறிஞரைப் பற்றி ஏன் இதுவரை வெளிவந்த தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிஞர் மு. வரதராசனார் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்றில் கூட குறிப்பிடவில்லை?” என்பதுதான்.

Ayothidasar அடுத்த கேள்வி தமிழில் பேசினாலே வெட்கப்படுவதும், தமிழன் என்று சொல்லவும் கூனிக்குறுகி நிற்கவும் தமிழர்கள் வெட்கப்பட்ட காலத்தில் ‘தமிழன்’யென்ற தாளிகையைத் தொடங்கி தான் மண்ணில் மறையும் வரையில் நடத்திய தமிழ் தேசிய உணர்வின் முன்னோடி அயோத்திதாசரைப் பற்றி இதுவரை வெளிவந்த கோடிக்கணக்கான நூல்களில் ஒன்றில் கூட இந்த முதல் அறிஞனைப் பற்றி ஏன் எழுதவில்லை? தமிழன், தமிழ் இலக்கியத்திற்குப் பெருந்தொண்டாற்றியவரென்றோ தாளிகை உலகின் “தமிழன்” யென்ற தாளிகையை முதன்முதலில் நடத்தியவர் என்றோ ஏன் எழுதவில்லை? குமுக அறிவியலார் குமுகாய கேட்டினைச் சுட்டிக்காட்டிச் சீர்திருத்த முற்பட்ட குமுக ஓர்மையாளனைப் பற்றி ஏன் எழுதவில்லை? தமிழக குமுகப் பண்பாட்டு வரலாற்றை எழுதும் வரலாற்று ஆசிரியர்கள் கண்ணில் ‘அயோத்திதாசன்’ யென்ற புரட்சியாளன் ஏன் படவில்லை? என்றெல்லாம் அடுக்கடுக்கான வினாக்களை எழுப்பினர். “தமிழ் இலக்கிய வரலாறு” என்னும் தலைப்பில் தொண்டுதொட்டு இன்று வரை பல நூல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இன்றைய தமிழர்களால் ஓகோவெனப் புகழ்ந்து போற்றப் பெறும் தமிழறிஞர் மு. வரதராசனரால் எழுதப்பெற்ற தமிழ் இலக்கிய வரலாற்றில் கூட அவர் பெயரோ, இலக்கியப் படைப்புகளோ இடம் பெறவில்லையே ஏன்? “மு.வ.” என்றால் விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்ட தமிழறிஞர். அவருமா இவரை வெறுத்து ஒதுக்கிவிட்டார்? இத்தகைய சரளமான வினாக்களுக்கு அந்த ஆராய்ச்சி மாணவர் அளித்த ஒரே விடை என்ன தெரியுமா? “அயோத்திதாசர் ஓர் ஆதித்தமிழர். அதாவது தீண்டத்தகாதவர். எனவேதான் அவருடைய பைந்தமிழ் தமிழ்நூல்களும், தாளிகையும் மு.வ. போன்ற காய்தல், உவத்தல் அகற்றி ஆயும் அறிஞராலும் தீண்டப்படவில்லை” என்பதாகும்.

எடுத்துக்காட்டாகக் கூறவேண்டுமானால் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழ்க் களஞ்சியத் தொகுதியிலேயே (TAMIL LEXICAN) மடலம் மூன்றும் பக்கம் 1757 இல் “தமிழன்” என்ற சொல்லுக்குப் பொருள் கூறும்போது “தமிழன் ஆரியன் அல்லாத தென்னாட்டான்;” “தமிழைத் தாய்மொழியாக உடையவனென்றும்” “பறையன் ஒழிந்த தமிழ்ச்சாதியான்” என்றும் கூறப்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழர்களின் அன்றாட வாழ் முறையிலுள்ளபடிதான் இங்குப் பொருள் கூறப்பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாக, பேச்சு வழக்கில், “இதோ இது தமிழர் குடியிருப்பு” என்று ஒரு குடியிருப்புப் பகுதியைச் சுட்டிக் காட்டினால் அதன் பொருள் இந்தப் பகுதியில் சாதி இந்துக்களான தமிழ்ச்சாதியினர் மட்டுமே வாழ்கின்றனர், பறையர்கள் எவருமில்லை என்பதாகும். ஆகவேதான், “பறையர்கள் தமிழ்க்குமுகாயத்தில் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் அக்குமுகாயத்தின் உறுப்பினர் அல்லர்”. என்று குமுகாய அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

தமிழ் மண்ணிலே பிறந்த பைந்தமிழரை ஆரிய சாதிகளால் சூழப்பெற்ற சாதி-இந்துக்கள் காலந்தோறும் பல்வேறு இழிவான சொற்களால் அழைத்தனர். தேசப்பிதா மகாத்மா காந்தியவர்கள் தனது இந்துமத உணர்வால் இவர்களை “அரிசனங்கள்” என்றார். அரசும் இவர்களின் வாழ்விடங்களை “அரிசனக் காலனிகள்” என்றழைத்தது. இதில் மதமும், சாதியுமே கோலோச்சுகிறது. இதை அயோத்திதாசர் அடியோடு வெறுத்தார். கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்தக் குடியான ஆதித்தமிழரை அரியின் மக்களென்று குடியுரிமையற்ற நாடோடிகளாக்கிவிட்டார் காந்தி என்றார் அயோத்திதாசர். காலனி (Colony) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அயலகத்திலிருந்து வந்து தற்காலிகமாக குடியமர்ந்தவர் வாழுமிடம் என்பதுதானே பொருள்? சாதி இந்துக்கள் வாழுமிடம் குடியமர்ந்த ஊரென்றும், பழந்தமிழர் சேர்ந்து வாழ்ந்த வாழ்விடத்தை வந்தேறிகள் வாழுமிடம் அல்லது காலனி என்றும் பெயரிட்டனர். அன்றைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளரிடமே இவர்களை ‘ஆதித்தமிழர்’ என்று கணக்கெடுப்பில் குறிப்பிட வேண்டுமென்றார் அயோத்திதாசர்.

இவ்வாறு இவர்களைக் கண்டால், தொட்டால், கேட்டால் தண்டு முட்டு, தொட்டு முட்டு, கேட்டு முட்டு எனும் சொற்களால் தீண்டப்படாதவர்களை ஆரிய அடிமைசாதிகள் செய்துவிட்டனர். மாந்தத் தன்மையின் அடிப்படையில் சேர்ந்து வாழ்ந்த சேரியையும் காலனி ஆக்கிவிட்டனர். அவர்களை பள்ளர், பறையரென்றனர். சாதிகளால் ஆன இந்தியாவில் இவர்களும் அந்த சாதி பிரிவினையால் அழியட்டுமேயென பிரித்து அந்தப் பிரிவினருக்குள்ளேயே பிறவிப் பகையை மூட்டிவிட்டனர். இன்றும் இந்த பகைமைத் தீ கொழுந்து விட்டு எரிந்த வண்ணமேயுள்ளது! இதைத் தூண்டி வளரச் செய்தவர்கள் யார்? ஏற்கனவே சாதித்தீயில் வெந்து செத்து மடிந்து கொண்டிருக்கும் கீழ்ச்சாதி சூத்திரர்கள்தான்! பிராமணர் அல்லர்.

பள்ளர்கள் தங்களைத் தீண்டப்படாதவர்களென்றே கூறிக்கொள்ள மறுக்கிறார்கள். பட்டியல் சாதிகளில் தங்கள் பெயரே இருக்கக்கூடாது என்கின்றனர். தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அதாவது தீண்டப்படும் சாதியாகவே கருதிட வேண்டுமென்கின்றனர். விரைவில் குடியாட்சித் தலைவரிடம் மனு கொடுத்து பட்டியல் சாதியிலிருந்து விலகிவிடுவார்கள்!

பட்டியல் சாதிகள் (Scheduled Castes) சாதி சம்பிரதாயப் படியே நடக்கவேண்டும். மேல் சாதியாரின் அடிமைகளாகவே இருக்கவேண்டும். தங்களின் உணவு, உடை, அணிகலன்களில் மாற்றம் செய்துகொள்ளக்கூடாது. படிக்கவே கூடாது, தங்களின் குழந்தைகளுக்குக் கூட நல்ல பெயர்களிட்டு அழைக்ககூடாது முதலிய எண்ணிறந்த மரபுவழி நடைமுறைச் சட்டங்களைக் கடைப்பிடிக்கச் செய்தனர்.

இதில் மாறி நடந்தால் சாதிய சட்டப்படி தொழுவத்தில் மாட்டித் தண்டிக்கப்படுவார்கள். அத்தகையோர் மீது ஆங்கில ஆட்சியாரின் குற்றவியல் பொருளியல் சட்டங்களின்படி குற்றம் சுமத்தி சிறைதண்டனையும் அளிக்கலாம். சிறையிலும் அவர்களுக்குத் தனிமை இடமே உண்டு. பிற கைதிகளின் அன்றாட மலம், சிறுநீர்களை இவர்கள்தான் எடுக்கவேண்டும். மருத்துவமனைகளிலும் இவர்கள் மற்ற நோயாளிகளுடன் சேர்ந்து இருக்கக்கூடாது. அங்கு இறக்கும் பிணங்களை அகற்றவும், துப்புரவுத் தொழில்களைச் செய்யவும் இவர்களை மட்டுமே சட்டப்படிக் கட்டளையிடுவார்கள். அலுவலகங்களில் ஒரே ஒரு சாதி இந்து அலுவலர் இருந்தாலும் எந்த ஒரு ஆதிதிராவிடனும் உள்ளே செல்லக்கூடாது. இதைப்போலவே அஞ்சலகங்களிலும், நீதிமன்றங்களிலும் இவர்கள் உள்ளே நுழையக்கூடாது. வெள்ளையர்களே உள்ள அலுவலகங்களுக்குள் இவர்கள் செல்லலாம். ஏனென்றால் வெள்ளையனுக்குச் சாதி இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களின் வீடுகளில் பட்லர்களாகவும், ஆயாக்களாகவும் பணியாற்று பவர்களே இந்த தீண்டப்படாத சாதியினர்தான்.

இத்தகைய கொடுமைகளை, மாந்தத் தன்மைக்குப் புறம்பான செயல்களைக் கண்டித்தவர் அயோத்திதாசர்தான். மேல்கண்ட சூழலில் ஒடுக்கப்பட்டோரிடையே ஒன்றுபட்ட எழுச்சியோ, புரட்சியோ அல்லது புரட்சித் தலைவரோ எப்படித் தோன்றமுடியும்? தனி மாந்தனாய் நின்று போராடி வெற்றிக் காணமுடியாததால்தான் அவர் “திராவிடக்கழகம்” என்ற அமைப்பை 1890-இல் ஏற்படுத்தி, அடுத்த ஆண்டு அதன் ஆண்டுவிழாவை நடத்தி தனது சீர்திருத்தக் கருத்துக்களைத் தீர்மானங்களாக வகுத்து அரசுக்குப் “பத்து அம்ச கோரிக்கைகள்” என்று அனுப்பினார். அவர் விழுமிய பத்து கூறுபாடுகளும் காலப்போக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

“மண்குடிசை ஏழையென்றால் தென்றல் வர மறுத்திடுமா?” என்பது புரட்சித்தலைவர் ஒரு படத்தில் பாடிய பாட்டின் வரிகளில் ஒன்று. எனவே தென்றல், மழை, வெள்ளம், ஒலி, நளியாகவுமே இயற்கையன்னை உலகமக்கள் யாவருக்கும் வேறுபாடின்றி நல்கும் அருட் கொடைகளாகும். ஆனால், நீரோடையில் குளிக்கவும், நீர் மொண்டுக் குடிக்கவும், எல்லோரும் நடக்கும் நடைபாதையில் நடக்கவும், யாவரும் வணங்கும் கோயிலுக்குள் சென்று வணங்கவும் தீண்டப்படாதார் எனத் தள்ளி வைக்கப்பட்ட ஆதித் தமிழருக்கு உரிமை மறுக்கப்பட்டது. இதைத் தனது ‘தமிழன்’ தாளிகையில் உலகறிய எதிர்த்தவர் அயோத்திதாசர்தான். எனவேதான் இவருடைய இலக்கியப்பணிகளை, மாந்தநேயச் செயல்களை எவருமே தீண்டாமல் விட்டுவிட்டனர்.

அயோத்திதாசரின் மைத்துனரான இரட்டை மலை சீனிவாசன் (கி.பி. 1860-1945) அவர்கள்தான் மேலவை உறுப்பினரானபோது இவைகளை நீக்கிப் பொதுப்பாதையில் நடக்கவும், பொது நீர்நிலைகளைப் பயன்படுத்தவுமான உரிமைகளைச் சட்டப்படிப் பெற்றுத் தந்தார்.

எனவே, இந்திய அரசியல் சட்டத்தந்தை அம்பேத்கருக்கு முன்னமே தோன்றி சிவில் உரிமைகளைத் தீண்டப்படாதவருக்குத் தேடித்தந்தவர்கள் தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரின் தலைவர்கள் தோன்றினர். ஆயினும், அவர்களுக்குள்ளேயே குறிப்பிடத்தக்கத் தலைவரோ, அரசியல் கட்சியோ இன்றளவும் தோன்றவில்லை. அதற்கு ஒரே கரணியம் வெல்லெஸ்லியின் துணைப் படைமுறை போன்ற ஒரு படுதுரோக சாதி இந்துக்களின் அரசியல் சூழ்ச்சியே ஆகும்.

சான்றாதார நூல்கள் :-

Tamil Lexicon, Vol. III, P. 1757, Year of publication 1982, University of Madras.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com