Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2006

நூல் விமர்சனம்

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் ( நாவல் வடிவம்)

எஸ்.தோதாத்ரி

ஆங்கிலேயரது வருகையானது பண்பாட்டு ரீதியாக நமக்கு அளித்த நன் கொடை ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி ஆகியோரது படைப்புகள். ஆங்கில இலக்கியத்தின் தாக்கத்தால் தான் தமிழில் தற்கால இலக்கியமே தோன்றியது. கவிதை, நாடகம், நாவல், சிறுகதை, இலக்கிய ஆய்வு எனப் பல துறைகளில் மேலை நாட்டு இலக்கியத்தின் குறிப்பாக ஆங்கில இலக்கியத்தின் தாக்கம் பற்றிய விரிவாக இனி ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். இந்த நிலையில் முக்கியமாக ஷேக்ஸ்பியர் பற்றிக் காணவேண்டும்.

ஷேக்ஸ்பியர் பற்றிய அறிமுகம் நமக்கு ஆங்கிலேயர் கல்வி முறையால் ஏற்பட்டது. அதன் காரணமாக ஷேக்ஸ்பியர் பற்றிப் பரவலாக எல்லோருக்கும் தெரியும் வாய்ப்பு ஏற்பட்டது. ஷேக்ஸ்பியரது நாடகங்களைத் தழுவிய திரைப்படங்கள், நாடகங்கள் ஆகியன அதிகம் வெளிவந்தன. ஷேக்ஸ்பியர் பற்றிய விவரங்களும் ஓரளவிற்குப் பழக்கத்திற்கு வந்தன. ஷேக்ஸ்பியர் கதைகள் என்று பள்ளிப் பிள்ளைகளுக்காக கதைச் சுருக்கங்கள் வெளியாயின. ஆனால் ஷேக்ஸ்பியரது நாடகங்களின் மூல பாடம் ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே கிட்டுவதாக இருந்தது. தமிழ் மக்களுக்குக் கதைச் சுருக்கம் மட்டுமே அறிமுகமாயிருந்தது. ஒரு சிலர் ஷேக்ஸ்பியரது நாடகங்களைத் தமிழ் உரை நடையில் அப்படியே மொழி மாற்றம் செய்திருந்தனர். அவ்வாறு செய்தது அந்த நாடகங்களின் கவிதை அழகினை முற்றிலுமாகச் சிதைத்து விட்டது எனலாம். இருப்பினும் அத்தகைய முயற்சிகள் வரவேற்கத் தக்கவையாக இருந்தன. இவற்றின் தொடர்ச்சியாக இப்பொழுது “ஷேக்ஸ்பியரின் மெக்பெத்” என்ற நூல் வந்துள்ளது. இது போன்ற ஒரு முயற்சியை சார்லஸ்லாம், மேரிலாம் என்பவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கொண்டனர். அது ‘The Tales From Shakespear’ என்ற தலைப்பில் வெளி வந்தது. ஆனால் சற்று சுருக்கமாகவே இருந்தது. ஆனால் இந்த நூல் விரிவாகவே அமைந்துள்ளது.

தமிழ் வாசகர்களை மனதில் கொண்டு இந்த நூலில் பல தகவல்களை ஆசிரியர் தந்துள்ளார். ‘மெக்பெத்’ சில குறிப்புகள் என்றப் பகுதியில் இந்த நாடகத்தை எழுத ஷேக்ஸ்பியர் பயன்படுத்திய மூல நூல்களைப் பற்றிய விவரங்களைத் தந்துள்ளார். ஷேக்ஸ்பியர் எவ்வாறு இந்த நாடகத்தில் சமூக நீதியைப் பேசுகிறார் என்று ஆசிரியர் கூறுகிறார். “இலக்கிய நீதி”... என்று கூறப்படும் “தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்” என்ற தத்துவத்தை ஷேக்ஸ்பியர் தமது வழக்கத்திற்கு மாறான வகையில் தமது மெக்பெத் நாடகத்தில் மட்டுமே ஏற்றுக் கொண்டிருக்கிறார்” (XIV). இதன் காவிய நாயகன் ஒரு கயவன் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். ஒரு கயவனைக் காவிய நாயகனாக்க ஷேக்ஸ்பியர் ஒருவரால் தான் முடியும் என்று கூறுகிறார். இங்குள்ள வாசகர்கள் புரிந்து கொள்வதற்காக ஸ்காட்லாந்து தேசத்து நிலஉடைமை அமைப்பினை விளக்குகிறார். இந்த நூலின் சிறப்பு அம்சம் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கைக் குறிப்புகளை தந்துள்ளார்.

மெக்பெத் நாடகத்தின் காட்சி அமைப்பு வரிசையிலேயே மொழி மாற்றத்தைச் செய்துள்ளார். இந்த நாடகத்தில் மிக முக்கியமான பாத்திரம் மெக்பெத்தின் மனைவியாவாள். அவள் தான் மெக்பெத்திற்கு தைரியம் ஊட்டுபவள். டன்கனைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டுபவள். கொலையை வெற்றிகரமாகச் செய்து முடித்தவளும் அவளே.

அவளது கொலை வெறிநிரம்பிய எண்ணங்களை மூலபாடத்திலுள்ள தன்மை வெளிவரும் வண்ணம் மொழியாக்கம் செய்துள்ளார். “என்னிடமிருந்து எனது பெண்மையை அகற்றிவிடுங்கள். பிறகு என் தலைமுதல் பாதம் வரை என்னைக் காட்டு மிராண்டித் தனமான வெறித்தனத்தால் நிரப்புங்கள்... எனது மார்பகங்களில் உள்ள பால் முழுவதையும் அகற்றிவிட்டு அதற்குப் பதிலாகக் கசப்பான பித்த நீரை நிரப்புங்கள்” (பக். 40)

டன்கனைக் கொலை செய்த பின்னர் மெக்பெத் அச்சத்தில் கூறுவதை ஆசிரியர் அழகாகவே தமிழாக்கம் செய்துள்ளார். தன் ரத்தக்கறை பிடித்த கரங்களைக் கொண்டு மெக்பெத் கூறுகிறான்.

“இங்கிருப்பது என்ன கரங்கள் ஆ... இவை என் கண்களையே பிடுங்கி எடுக்கின்றதே...! நெப்டியூன் கிரகத்தின் சமுத்திரங்கள் அனைத்திலும் உள்ள நீரைக் கொண்டு வந்தாலும் அவை என் கரங்களில் உள்ள இரத்தக் கறைகளைப் போக்கிச் சுத்தம் செய்ய முடியுமா? இல்லை... இந்த கை மாபெரும் சமுத்திரத்தையும் நிறம் மாற்றி நீலக்கடலையும் கருஞ்சிவப்பாக்கி விடும்!” (பக் 71)

இந்த நூல் நாவல் வடிவம் என்ற அறிமுகத்துடன் வெளிவந்துள்ளது. ஆசிரியர் அதற்கு ஏற்ப மொழி நடையையும் உருவாக்கியுள்ளார். இது பாராட்டுக்குரியது. பெரும்பாலான வாசகர்களுக்கு இது உடனடியாக பயன்படாமல் இருந்தாலும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாட நூலாக வைக்கப்படும் தகுதி இதற்கு உண்டு என்று கூறலாம்.

ஷேக்ஸ்பியரின் மெக்பெத்
ஆசிரியர் : ஜே.கே. இராஜசேகரன், வெளியீடு : என்சிபிஎச், சென்னை, விலை : ரூ. 80.00.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com