Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2006

நூல் மதிப்புரை

கிரேக்க நாடக வரலாறு ஒரு கண்ணோட்டம்

க. கவிதா

இன்றைய உலகின் கலை, இலக்கியம், கணிதம், தத்துவம், வரலாறு, அறிவியல் துறைகள் எல்லாம் முறைப்படியாக முகிழ்ந்ததே கிரேக்கத்திலும், கிரேக்க மொழியிலும்தான்! அதே போல் இலக்கியக் கலையில் ஒன்றான நாடகக்கலையும் முதலில் பிறந்தது கிரேக்கத்தில்தான்!

கிரேக்க மொழியும் அதன் இலக்கியங்களும் மிகவும் தொன்மையானவை. இதில் நாடக இலக்கியமும் அடங்கும். இந்திய நாகரீகத்தைப் போல வெளிநாட்டில் தொன்றுதொட்டு விளங்குவது கிரேக்க நாகரிகம். கிரேக்க நாடுகளின் ஒட்டு மொத்தத் தனித்தன்மையுடன் ஒளிவீசிய ‘ஏதென்ஸ்’ அப்டிகா என்னும் மலைகள் சூழ்ந்தப் பகுதியில் இருக்கிறது. வீரம், கலாசாரம், இவற்றைத் தவிர அறிவுச்சுடர் வீசும் சிந்தனைக் களஞ்சியமாக ஏதென்ஸ் திகழ்ந்தது. கிரேக்கர்கள் ஒவ்வொரு கலையையும் மிக நுணுக்கமாகக் கற்றுக் கொண்டார்கள். அனைத்து துறைகளிலும் மாமேதைகள் பவனிவந்தார்கள். நாகரிகம், தத்துவம், பௌதிகம், ரசாயனம், வானசாஸ்திரம் போன்ற கலைகளில் சிறந்து விளங்கினார்கள். சிறப்பாக நடைபெறும் பலவிதமான விளையாட்டுகளை நடத்தி கிமு 776ல் ஒலிம்பிக் போட்டியைத் தொடங்கி வைத்தார்கள். 1876ல் முதன் முதலில் 7 நாடுகள் பங்கு பெற்ற ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது.

இது போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய கிரேக்கர்கள் நாடக அரங்கியலிலும் தங்கள் தனித்த முத்திரைகளைப் பதித்துக் கொண்டிருந்தனர்.

‘நாடகம்’ என்ற சொல் முதன் முதலில் கிரேக்க மொழியிலிருந்து எடுக்கப்பட்டது. கிரேக்க மொழியில் Drama (நாடகம்) என்பதற்கு மெய் நிகழ்ச்சி, செயல் மேடைக் களியாட்டம், செய்கிறேன் என்ற பொருள்கள் காணக்கிடக்கின்றன.

பழமைக்கு என்றும் முதலிடம் வகிக்கும் கிரேக்கத்தில் எலுசீனியன் (Eleusinian) மதவிழாவில் ஆடிய நடனங்களே முதன் முதலில் நாடகக் கலையைத் தோற்றுவித்துள்ளன. பண்டைக் கால கிரேக்க நாடகம் சமய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு காட்சியாகவோ சடங்காகவோ கருதப்பட்டது. ஜூபிடர், பாலஸ், அதினீ, அப்பல்லோ, வீனஸ் முதலிய தேவர்களைப் பாடிப் பரவி ஆடிப் போற்றும் வகையில் நாடகங்கள் உருவாயின.
ஹேமரின் படைப்பிலக்கியமான ‘இலியத்’, ‘ஒடிசி’ என்னும் காப்பியங்கள் நாடகங்கள் தோன்ற வழிவகுத்தன. நாடகத்திற்காகப் பல அரங்குகள் அமைத்து நாடகத்தைக் கண்டு களித்தனர். நாடக இலக்கியச் செல்வங்களை ஆட்டுத்தோல், பாபிரஸ் மரப்பட்டைகள் போன்றவற்றில் எழுதிப் பாதுகாத்து வைத்திருந்தனர்.

கிரேக்க நாடக ரூபகங்களில் ‘கோரஸ்’ (Chorus) எனப்படும் குழும இசை சிறப்பாக இடம் பெறும். இந்தக் குழும இசையில் பங்கு கொள்பவர்கள் நல்லுரையாற்றும் பெரியோர்களாகவும், நாடகத்திற்குச் சான்றுகளைக் காண்போராகவும் நாடகத்தில் சிறப்புற்ற வேடம் பூணுபவர்களாகவும் மாறுவார்கள்.

வளர்ச்சியடைந்த கிரேக்க நாடகத்தில் இன்பியல் (comedy) துன்பியல் (tragedy) என இருவகையான நாடகங்கள் காணப்படுகின்றன. இன்ப முடிவை மட்டும் கொண்ட நாடகங்கள் தவிர அவலநிலையை எடுத்துக்காட்டும் துன்பியல் நாடகங்களும் சிறந்து விளங்கின. துன்பியலின் பிறப்பிடமாகவும் கிரேக்கம் விளங்கியது.

கிரேக்கத்தில் முதலில் தோன்றிய துன்பியல் நாடகம் சிறந்ததாக காணப்பட்டது. ‘ஏதென்ஸ்’ நகரத்தில் அறிவில் சிறந்து ஆட்சி புரிந்த ‘பீயனிஸ்திரேடஸ்’ என்பவர் ‘டையோசனிஸ்’ திருவிழா நிகழ்ச்சிகளில் புதுக் கலையாம் துன்பியல் நாடகத்தை கி.மு. 535-ல் புகுத்தினார். துன்பியல் நாடகம் பிறப்பு, வளர்ச்சி, திருமணம், சாவு, மீண்டும் உயிர் பெறுதல், இவற்றின் கருத்தை மையமாகக் கொண்டு விளங்கின. துன்பியல் நாடகங்களில் தனிமனிதர் துன்புறுவது மட்டு மல்லாமல், ஒரே ஒரு குடும்பங்களில் தலைமுறை, தலைமுறையாகத் துன்புறுதல் கூறப்படுகிறது. ‘பலிவாங்கும் துன்பியல்’ என்ற வகை நாடகமும் உண்டு. ‘இறந்த வீரனின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி துன்பியல் நாடகமாக கூறப்படுகிறது.

இன்பியல் நாடகம் கிரேக்க மொழிக் கருத்தின்படி ‘டையோசனியஸிஸ்’ வழிபாட்டிற்குரிய களியாட்டங்களில் தோன்றியதாகும். மகிழ்ச்சிக் கூத்துக்கள், களியாட்டங்கள் இவைகளோடு இன்பியல் நாடகம் தொடர்புடையது.
கிரேக்கத்தில் தொன்மைக் காலத்திலிருந்து புகழ்மிக்க நாடகாசிரியர்கள் தோன்றி நாடகக் கலைக்குப் புத்துயிர் ஊட்டினார்கள். ‘ஏரியான்’ (Arion) என்பவர் காலத்தில் கவிகள் பாட்டுக்களைப் பாடுவதற்குத் தலைவன் ஏற்பான். பிறகு அனைவரும் இவரைப் பின்பற்றி வந்தனர். ‘கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் ‘தீஸ்பியன்’ என்ற நாடகாசிரியர் நாடகங்கள் எழுதி ஒருவரையே நடிக்க வைத்தார். இவர் எழுதிய நாடகங்கள் தீஸ்பியன் நாடகம் எனப் பெயர் பெற்றன.

கிரேக்க ‘அவல நாடகத் தந்தை’ எனப் போற்றப்பட்ட ஈஸ்கைலைஸ் கி.மு. 524-ல் பிறந்த இவர் இரண்டாவது நடிகனை நாடகத்தில் புகுத்தினார். இன்பியல் நாடகங்களுக்கென்று முறையான இலக்கணத்தையும், தோற்றத்தையும் ஏற்படுத்தினார். பலி தீர்க்கும் துன்பியல் நாடகத்தையும் எழுதிப் புகழ் பெற்றார். இவர் எழுதிய ‘ஒரிஸ்டியா’ என்ற மூன்று தொடர் நாடகம் (கி.மு. 445)ல் சிறப்புப் பெற்றது.

இவரைத் தொடர்ந்து கிரேக்கத் துன்பியல் மேதையாக மதிக்கப் பெற்ற யூரிபிடிஸ் 486-ல் சாலமிஸில் பிறந்தார். இவரும் பெரும்பாலும் துன்பியல் நாடகங்களையே இயற்றினார். இவர் 92 நாடகங்கள் இயற்றியதில் தற்போது 19 நாடகங்களே உயிர் வாழ்கின்றன.

இவரது படைப்பில் வந்த (கி.மு. 425-ல்) ‘ஹெக்கூபா’ என்ற நாடகத்தில் பாதிக்கப்பட்ட பூக்களைப்போல் கடற்கரையில் அடிமைகளாக குவிந்து கிடக்கும் ‘ட்ராய்நகர’ பெண்களின் கதை பற்றி எழுதினார். சமுதாயத்திற்குரிய கருப் பொருள்களுடன் நாடகங்களைத் தோற்றுவித்தார்.

இவர்களை விட மிக ஆச்சரியமான, அதிசயமான மனிதர் அரிஸ்டோபெனிஸ். கி.மு. 450-ல் பிறந்த இவருக்கு மற்ற நாடகாசிரியர்களைவிட தனிச்சிறப்பு உண்டு. இவர் நகைச்சுவை கலந்த இன்பியல் நாடகங்களை அதிகமாக எழுதிப் புகழ் பெற்றார். இவரது நாடகம் (Old Comedy) மற்றும் இடைக்கால நாடகங்கள் (Middle Comedy) எனப் பெயர் பெற்றன. இவரது நாடகம் இலக்கிய விமர்சனமும், நையாண்டியும் கலந்து காணப்பட்டது. நாடகங்கள் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தன. இவர் இயற்றிய 40 நாடகங்களில் 11 நாடகங்களே பிழைத்தது. அரசியல் நையாண்டி நாடகமான தவளைகள் என்ற நாடகத்தை கி.மு. 408-ல் எழுதினார்.

கிரேக்க நாடக இலக்கியங்களில் துன்பியல் நாடகங்களையே முன் மாதிரியாகக் கொண்டவர் சோயகளிஸ். இவர் கி.மு. 497-ல் பிறந்தார். நாடகத்தில் மூவர் நடிக்கும் பழக்கத்தை கொணர்ந்தார். அரிஸ்டாட்டிலால் பெரிதும் கவரப்பட்ட இவர் 132 நாடகங்களை இயற்றினார். அதில் தற்போது 7 துன்பியல் நாடகங்களே கிடைக்கப்பெற்றுள்ளன. மேற்கண்ட நாடகாசிரியர்கள் மட்டுமல்லாமல் மினாண்டர் (கி.மு. 342) குழுநிலை பாடல்கள் எழுதிப்புகழ் பெற்றார். இவரது நாடகங்கள் பிற்கால தெரன்சு, பிளாட்டசு, ஆர்கிலோன்சு, கொரிலியசு பிரின்சு போன்ற ரோமானிய நாடகாசிரியர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தன.

கிரேக்க நாடகாசிரியர்களான ஈஸ்கைலைஸ், யூரிபிடிஸ் அரிஸ்டோபெனிஸ், சோபகளீஸ் ஆகியோர்களின் மிகச் சிறந்த நாடகங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் பட்டிருக்கின்றன. இவற்றைப் பின்பற்றி தமிழ் மொழி பெயர்ப்புகளும் வந்துள்ளன. கிரேக்க நாடக வானில் சிறகடித்து வந்த துன்பியல் நாடகாசிரியர் சோபகளின்ஸ் நாடகங்கள் இன்றுவரை உலகம் முழுவதும் பேசப்படுகின்றன. சோபகனீசின் நாடகங்களை 18 நூற்றாண்டில் ஒரு சில ஆசிரியர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள். அதன் பிறகு சுமார் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு சோபகனீசின் ஏழு நாடகங்களான (பிலோக்டிடிஸ், ஈடிபஸ் மன்னன், ட்ராஸினியா, அஜாக்ஸ், எலக்ட்ரா, ஈடிபஸ் அட்கலோனஸ் ஆன்டிகனி) சமீபகாலத்தில் மொழி பெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கிரேக்க, ஆங்கில மொழிகளை அறிந்திராத தமிழ் மொழியை மட்டும் அறிந்தவர்களும் ‘பெருந்திரள் வனப்பின் அரும் பெறல்’ இலக்கியமான கிரேக்க நாடகங்களை துய்த்துரைக்க வழிவகை செய்கின்றன.

மதுரை மாவட்டத்திலுள்ள பாத்திமா கல்லூரியில் பணியாற்றிய செண்பகம் இராமசுவாமி, மு. இராமசுவாமி கிரேக்க நாடகத்தின் மீதுள்ள ஆர்வத்தால் சோபகனீசின் ‘ஆன்டிகனி’யை தழுவி மூலக் கருத்துக்கு முரணில்லாப் போக்குடன், எம்மக்களுக்காக மொழி பெயர்க்கின்றோமோ அம்மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப பெயரையும் மாற்றி “துர்க்கிர அவலம்” என்ற நாடகத்தை 1984-ல் நிகழ்த்தினார். இதிலிருந்து பாமர மக்களுக்கும் எளிதில் கிரேக்க நாடகங்களின் சிறப்புகளை அறியும் வகையில் இம்மொழி பெயர்ப்புத் தழுவல் அமைந்துள்ளது.

கிரேக்கத்தில் நாடகம் வளர்ந்து சிறப்புற்றிருந்தற்கு பெரிசிலினுடைய ‘ஏதென்சு’ ஒரு முக்கிய காரணமாகும். “எங்கே நாகரிகம் இல்லையோ அங்கே நாடகம் பிறக்காது” என்ற கூற்றிற்கு மாறாக ‘கிரேக்கம் நாகரிகத்தின் சின்னமாகவும், நாடகத்தின் இருப்பிடமாகவும் இருந்துள்ளது. ‘கிரேக்கத்தில்தான் உலகின் முதல் நாடகம் பிறந்தது’ என்பதற்கு அடிப்படையாக ஈஸ்கைலைஸ், யூரிபிடிஸ், சோபகனீசு, அரிஸ்டோ பெனிஸ் போன்ற நாடகாசிரியர்களின் படைப்புகளும், நாடகங்களின் தோற்றமும் அமைந்துள்ளன.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com