Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2006

நூல் மதிப்புரை

பெண்ணியக் கதைகள்

காதம்பரி

காலச் சுழற்சியின் ஒரு முக்கியமான, அதி அற்புதமான கட்டத்தில் நாம் இருக்கிறோம். உலகச் சந்தைப் பொருளாதாரம், மிக மிக நுண்ணிய திறமையுடன் ஆண்களையும், பெண்களையும் முன்னிறுத்தி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. பெண்கள் பெரிதும் பேசப்படுகிறார்கள். அவர்கள் உடல் நலம் மற்றும் அழகு பெரிதுபடுத்தப்படுகிறது. விடுதலை தரப் பட்டுள்ளது என உணர்த்தப்பட்டுள்ளது. ஆண்கள் அதிவேகமாகப் பெண்களை முன்னிலைப்படுத்தும் இந்த வேலையைச் செய்து வருகிறார்கள். வலை முன்னிலும் அதிகமாகப் பெண்ணை நெருக்கியுள்ளது. இதைப் புரிந்து கொள்ள பெண்ணிற்குத் திறன் இருக்கிறதா என்ற ஐயம் எழுகிறது. ஆணின் இலக்கு பணம், பலம் இவற்றிலிருந்து விலகாமல், பெண்ணை இவற்றை நெருங்கவிடாமல் ஆனால் நெருங்கியது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குவதில் உள்ளது. பெண் சிந்தனை தூண்டப்பட வேண்டிய இக்காலக் கட்டத்தில் மிகக் கவனத்துடன் தொகுக்கப்பட்டுள்ள இப்பெண்ணியக் கதைத் தொகுப்பு ஒரு வரப்பிரசாதம்.

Kavya பெண்ணியவாதிகள் இலக்கிய உலகில் பெண்ணின் சிந்தனை வளர்ச்சியை மூன்று கட்டங்களாக வகுத்துள்ளனர். இலைன் ஷோவால்டர் என்ற பெண்ணியவாதி, பெண் விடுதலை, பெண்மை பேணல், பெண் எனக் கட்டமைத்துள்ள பெண்ணியம் முறையே 1. பெண், ஆணின் எழுத்தைப் படிப்பது, அதை ஒட்டியே தன் சிந்தனையை வளர்த்துக் கொள்வதில் இருந்து மாறுபட்டுத் தனக்கென ஒரு கருத்து உள்ளதை உணர்தல் 2. தன் கருத்துக்களைத் தனக்கான மொழி ஒன்றில் எடுத்தாள முடியாமல், ஆணின் மொழியை ஒட்டியே வளர்த்தெடுப்பது, 3. தன் கருத்துக்களை, தன் வலிகள் மற்றும் மனம் சார்ந்தவை என உணர்ந்து பெண்ணின் பார்வை ஆணின் பார்வையிலிருந்து விலகி நிற்கிறது. இந்தப் பார்வை முழுமையானது என நிலைப்படுத்துதல். இந்த மூன்றாவது நிலை பரிணாம வளர்ச்சியில், பெண்ணின் எழுத்து தனக்கென இன்று ஓரிடத்தைப் பிடித்துள்ளது. உலக மொழிகளில் பெண்களால் எழுதப்படும் அனைத்து இலக்கியங்களும், இலக்கியமற்ற மற்ற எழுத்துக்களும் இதற்குச் சான்று.

ஆண் பார்வையிலிருந்து உலகை நோக்குதல் எப்படி ஒரு பெண்ணிற்கு ஒத்து வராதோ அதேபோல் ஆணின் மொழியும் பெண்ணின் திறனை, சிந்தனையை, பெண்ணை, பெண்மையை வெளிப்படுத்த போதுமானதாக இல்லை என்பது உண்மை நிலை. இளங்கோ அடிகளின் மாதவியும் தாமஸ் ஹார்டியின் பாத்ஷீபாவும் மற்றும் பலரும் மொழியின்மையால் மன இறுக்கத்தை வெளியிட வகையில்லாது இருந்துள்ளனர். இந்நிலை மாற சிந்தனையாளர்கள் அனைவரும் ஒருமுகமாக எடுத்துரைக்கும் ஒரு வழி பெண்கள், ஆண்களின் சிந்தனை தாக்கத்திலிருந்து விலகி, ஆணுக்குச் சமமாக வேண்டும் என்ற கூப்பாடு சரியல்ல என்றுணர்ந்து, பெண்ணாகப் பெண்ணை உணர்தல் வேண்டும் என்பதே.

பெண்ணிய கருத்தியலாளர்கள் மக்களின் தொடக்கத்திலிருந்தே பெண்மொழி அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆயின் 90களில்தான் பெண்ணிய அழகியல் கோட்பாடு நோக்கி நம் நடை நகர்ந்துள்ளது. பெண் எழுத்து என்றாலே “துடையும் துக்கமும்” தான் என்ற நிலைமாறிப் பெண்ணின் எழுத்து பெண் வழிபாட்டின் ஒரு அங்கம் என உருவாகியுள்ளது. ஆக்கசக்தி, பெண்ணாக இருக்குமானால், கடவுளும் மொழியும் அனாதியானது என்ற தத்துவவியலார் வாதம் மெய்யாகுமானால் தொன்மையான மொழி பெண்வாசம் மிகுந்தே இருந்திருக்க வேண்டும். மார்ஷா நார்மன் என்ற கருப்பின எழுத்தாளர் தன் “இரவு அம்மா” (நல் இரவு அம்மா) என்ற நாடகத்தில் அம்மா கதாபாத்திரத்தின் மூலம் கூறுவார். “தாய் மக்களுக்கான மொழி, பெண்களிடையேயான மொழி, உடல் சார்ந்தது. சைகைகள் மற்றும் குறியீடுகளினால் வெகுவான நமது தேவைகள் அறியப்படுகின்றன” என்று பெண் புரியாத புதிர் ஆக இருப்பது இதனால் தானோ என்னவோ?
அம்பையின் அறிவு செரிந்த பார்வையும் இதையே முன்வைக்கிறது.

உன் அம்மா போன்றவர்களிடம் ஒரு பாஷை இருக்கிறது. அதற்குச் சொற்களுக்குள்ள மொழியின் ஏற்ற இறக்கங்களும், ஒரு புலப்படாத உருவ அமைப்பும் இருக்கின்றன. இருந்தும் அதில் சொற்கள் இல்லை. கை வீச்சில், கண் பார்வையில், முதுகில் அழுத்தும் கையில், சிரிப்பில், அழுகையில், அரற்றலில் ஓலத்தில், சொற்கள் நிராகரிக்கப்பட்ட மௌனத்தில் அழுந்திக் கொண்டிருக்கிற பாஷை இது. எங்களையும் அவர்களையும் பிரிப்பது இந்தப் பாஷைதான். ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் நாங்கள் பேசினாலும், அது ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் மொழிதான். வெறும் பாலம். நாங்கள் தேடுவது வேறு பாஷை என்றே தோன்றுகிறது. இந்தப் பக்கம் - அந்தப் பக்கம் என்று இல்லாத பாஷை. இரு கரைகளையும் முறுக்கிப் பிணைத்துவிடும் பாஷை. சிறு குழந்தை இரு கைளையும் விரித்துத் தூக்கியவுடன் புரிந்து விடும் பாஷை (ப. 51).

பெண்ணின் மொழி மட்டும் வேறுபட்டு நிற்கவில்லை. பெண்ணின் சிந்தனை, பெண்ணின் தேடல்கள், பெண்ணின் முழுமை, எல்லாமே ஆணின் உலகினின்று மாறுபட்டு விளங்குகிறது. பிரேமாவின் இந்தப் பெண் எழுத்தாளர்களின் கதைத்திரட்டு இம்மாறுபாட்டை வெளிப்படையாக்குகிறது. “பொண்ணுன்னா ஏன் மட்டமா பார்க்குறாங்க?” (ப. 10) எனும் 8 வயது கீதாவின் வருத்தமும், “லெஸ்பியனிசம் தோல்வியில் பிறந்தது. தோல்வியிலேயே மடியும்” எனும் பீட்டர் ஏன் ஹோமோஸெக்ஷுவலிசத்தை பாராட்டிப் பேசுகிறான் என்று புரியாத லஷ்மியின் மனத் தாங்கலும் (ப 2) “தீயேக நின்னைப் போல, எமது உள்ளம் சுடர் விடுக / தீயாக நின்னைப் போல, எமது அறிவு கனலுக” எனத் தகிக்கும் நெருப்பாக நிற்கும் கோமதியும் (ப 100) மனத்தளையிலிருந்து விட்டு விடுதலையான அலமு (108) பொன்னுத்தாயி (109) பெயரே இல்லாத கணவனால் “ஏய்” என்றே விளிக்கப்பட்ட எம்.எஸ்ஸி படித்த பெண்ணும் (119) சித்ராவும் (136) தான் பெற்ற பெண் குழந்தைகளைக் கணவனுக்குப் பிடிக்கவில்லையென்ற காரணத்தால் குழியில் போட்ட அம்மாவும் (202) ஆணின் நீசத்தனமான சீண்டுதலுக்கு ஆளான அனு (152) தங்கம் (223) மற்றும் பெண்களால் மட்டும் உணரக்கூடியதும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதுமான சில நுட்பமான விஷயங்களையும் (ப.162, 168, 218, 229, 243) உள்ளடக்கியுள்ள இக்கதைத் திரட்டு பெண்கள் நல்லதொரு தோழமையை மற்றப் பெண்களுடன் வளர்த்துக் கொள்வதின் மூலம் புரிவதை நோக்கி நகர முடியும் என்ற கருத்தை முன் வைக்கிறது (எ.கா. இயக்கம், முதலிரவுக்குப் பின்)

இக்கதைத் திரட்டு ஒவ்வொரு பெண்ணிற்கும் நான் பரிந்துரைக்கும் ஒரு நூல். முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் படைப்பில் தொடங்கி வாசகர்களுக்கு நன்கு அறிமுகமாகாத சுமகி ரூபன் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதை எழுத்தாளர்களை உள்ளடக்கிய இந்நூல் பெண்களால், படித்துப் பகுத்து உணரவேண்டிய ஒன்றாகும். ஒவ்வொரு பெண்ணும் தன்னுள் உறங்கிக் கிடக்கும் சக்தியை, சிந்தனை அளவினிலேனும் அறிந்து கொள்ளத் தூண்டும் ஒரு நல்ல நூல். ஒன்றிரண்டு கதைகள் நீங்கலாக நல்லதொரு தொகுப்பைத் தந்திருக்கும் பிரேமா தன்னுரையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். கதைச் சுருக்கத்தை தவிர்த்து வேறு பெண்ணியக் காரணிகளை அலசியிருக்கலாம். பல கதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யத் தகுதிவாய்ந்தவை. உலக சந்தைப் பொருளாதார சதுரங்கத்தில் முதலாளித்துவ வர்க்கச் சிந்தனையாளர்களால் பெண்கள் கவனமாக நகர்த்தப்படுகின்ற இக்காலகட்டத்தில் பெண்கள் உலகை உள்ளபடியே அறிந்து கொள்ள விரும்பும் ஆண் வாசகர்களும் இதை வாசித்துப் பார்க்கலாம். ஏதேனும் பொறி தட்டுமா என்று அழகி போட்டி ஆர்வலர்களால் அழகுப் பொருட்கள் நுகர்வோர்களால் காயடிக்கப்பட்டிருக்கும் பெண்கள் விழிக்கலாம்!


பெண்ணியக் கதைகள்,
தொகுப்பாசிரியர் இரா. பிரேமா,
வெளியீடு: காவ்யா, 14, முதல் குறுக்குத் தெரு, கோடம்பாக்கம், சென்னை - 24.
விலை : ரூ. 150.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com