Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2006

நூல் மதிப்புரை

‘சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு’

எல்.ஜி. கீதானந்தன்

‘சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு’ என்ற நூலைத் தோழர் என். ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில வரலாறு, மாவட்ட வரலாறுகள் எனப் பல நூல்களையும், கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி பல நூல்களையும் எழுதியுள்ள தோழர் என். ராமகிருஷ்ணன் இந்நூலையும் திறம்பட எழுதியுள்ளார். அனைவரும் பயன் பெறத்தக்க புதிய தகவல்கள் பல இதில் இடம் பெற்றுள்ளன.

கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தமிழகத்தில் காலூன்றச் செய்ததில் முக்கியப் பங்கு வகித்த ம. சிங்காரவேலரின் மகத்தான பங்களிப்புப் பற்றி இதில் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. 1922-ல் கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், எல்லோரையும் தோழர்களே! என அழைத்து, தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று பிரகடனம் செய்து, பரிபூரண சுதந்திரம் என்ற முழக்கத்தை காங்கிரஸ் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். மே தினச் செங்கொடியைச் சென்னை கடற்கரையில் முதன் முதல் ஏற்றினார். சுயராஜ்ய கட்சி சார்பில் போட்டியிட்டு, சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றினார். பின்னி மில் துப்பாக்கிச் சூடுகளை கண்டித்து களமிறங்கினார். ரயில்வே போராட்டத்தில் சிறைதண்டனை பெற்றார். பல தொழிற்சங்கங்களை உருவாக்குவதில் பங்கு பெற்றார் என ஏராளமான தகவல்கள் உள்ளன.

காங்கிரஸ் கட்சியிலும், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியிலுமிருந்து ஆரம்ப கட்டத்தில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பியக்கம், உப்புச் சத்தியாக்கிரகம், அன்னியத்துணி புறக்கணிப்பு, கள்ளுக்கடை மறியல், ஹரிஜன சேவை இயக்கம் என அனைத்து இயக்க நடவடிக்கைகளிலும் கம்யூனிஸ்ட்டுகள் தீவிரமாகப் பங்கு பெற்றது சித்தரிக்கப்பட்டுள்ளது. சுபாஸ் போசிற்கு ஆதரவாகவும், மன்னராட்சிகளை எதிர்த்தும், கப்பல் படை எழுச்சியை ஆதரித்தும் கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிய பணி நன்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்து, பாரதியை ஆசிரியராகக் கொண்ட ‘இந்தியா’ பத்திரிகை நடத்திட பெருந்துணை புரிந்த எம்.பி.டி. ஆச்சார்யா என்று அழைக்கப்பட்ட மண்டையம் பிரதிவாதி பயங்கரம் திருமலாச்சார்யா அவர்களைப் பற்றிய பல விபரங்கள் கோர்வையாக தரப்பட்டுள்ளன. பிறகு அவர் வெளிநாடு தப்பிச் சென்று, கலிபோர்னியாவில் செயல்பட்டு வந்த இந்துஸ்தான் கதர்கட்சியில் தொடர்பு கொண்டு செயல்பட்டார். பிறகு பெர்லினிலிருந்த கம்யூனிஸ்ட் தலைவர்களோடு இணைந்துள்ளார். மகத்தான லெனினைச் சந்தித்தது பற்றியும், முதல் கம்யூனிஸ்ட் குழு தாஷ்கண்டில் அமைந்தது பற்றியும் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“1919-ம் ஆண்டில் எம்.பி.டி. ஆச்சார்யா, மகேந்திர பிரதாப், முகம்மது பர்கத்துல்லா, அப்துல்ராப், தலிப்சிங்கில் மற்றும் இப்ராஹீம் ஆகியோரைக் கொண்ட குழு மாஸ்கோவிற்கு சென்று லெனினைச் சந்தித்து உரையாடியது.”

“1920-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தாஷ்கண்ட் நகரில் எம்.என். ராயின் முன் முயற்சியால் இந்திய கம்யூனிஸ்ட்டுகளைக் கொண்ட முதல் குழு உருவாக்கப்பட்டது. எம்.பி.டி. ஆச்சார்யா உட்பட ஏழு உறுப்பினர்களைக் கொண்டு இந்த கிளை அமைக்கப்பட்டது.”

திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் மாணவராக இருந்த பி. ராமமூர்த்தி, திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட சத்தியமூர்த்தி அவர்களுக்கு பணியாற்றியதையும், காசி இந்து பல்கலைக் கழகத்தில் படிக்கச் சென்று ‘சைமனே திரும்பிப்போ’ இயக்கத்தில் பங்கு பெற்றதையும், புரட்சி வீரர் பகத்சிங்கினால் உருவாக்கப்பட்ட ‘நவ்ஜவான் பாரத் சபா’வில் தீவிரமாக பங்காற்றியதையும் குறிப்பிட்டுள்ளார்.

ஜீவா அவர்கள் 1927-ல் சிராவயலில் காந்தி ஆசிரமம் நடத்தியதையும், அங்கு வந்த காந்திஜி “நீங்கள்தான் இந்தியாவின் சொத்து” எனப் பாராட்டியதையும், சாதி வெறியனொருவனால் ஜீவா கத்திக்குத்து பட்டதையும் விளக்கியுள்ளார். ஜனசக்தி பத்திரிகையைக் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி துவக்கியதையும், அது பின்னர் கம்யூனிஸ்ட் பத்திரிகையானதையும், ஜீவா ஆரம்ப முதலே அதன் ஆசிரியப் பொறுப்பிலிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். ரயில்வே போராட்டம் பற்றிக் குறிப்பிட்டுள்ள ஆசிரியர், அதில் சிறைப்பட்ட நாகை சாமிநாதன் என்பவர்தான், ஏ.எஸ்.கே. சர்வதேச கீதத்தைத் தமிழில் விளக்கிக் கூற அதை தமிழ் பாடலாக்கினாராம்!

“பட்டினிக் கொடுஞ்சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்காள்
பாரில் கடையரே எழுங்கள்
வீறுகொண்டு தோழர்காள்!” என அப்பாடல் வரிகள் துவங்குகின்றன.

1930-ல் சென்னை உப்புச் சத்தியாக்கிரகத்தில் மாணவராக இருந்த சீனிவாசராவ் பங்கு பெற்றதையும், அவருக்கு வீடில்லாததால் நைனியப்பன் தெருவில், ஒரு நாளைக்கு ஒரு வீட்டுத்திண்ணையில் படுத்துறங்கினார் என்று ஜீவா கூறியதையும் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் ஒரு சேட்டு கடை முன்பு அந்நியத் துணி பகிஷ்காரத்தில் சீனிவாசராவ் ஈடுபட்டு, தொடர்ச்சியாகப் போலீஸ் அடித்து நொறுக்கியதையும், பின்னர் சிறைபட்டதையும் விவரித்துள்ளார்.

பம்பாய் வாலிபர் கழகத்தைச் சேர்ந்த எச்.டி.ராஜா சென்னை வந்து லயோலா கல்லூரி மாணவர்களுடன் தொடர்பு கொண்டு, சென்னை வாலிபர் கழகத்தை உருவாக்கியுள்ளார். கம்மம்பாடி சத்திய நாராயணா, பி. சுந்தரய்யா, வி.கே. நரசிம்மன் போன்றோர் மார்க்சிஸ்ட் சிந்தனைக்கு வந்தனர். அப்போது சிங்காரவேலர் திருச்சி சிறையில் தண்டனைக் கைதியாக இருந்துள்ளார்.

சென்னையை மையமாகக் கொண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்குவதற்காக அனுப்பப்பட்ட அமீர் ஹைதர்கான் சென்னை வந்தார். மீரத் சதி வழக்கில் தேடப்பட்டு வந்ததால், அவர் தலைமறைவாக இருந்தார். லயோலா கல்லூரி மாணவர் வி.கே. நரசிம்மன், ஜெயராமன் ஆகியோர் மூலம் “இளம் தொழிலாளர் சங்கத்தை’ நிறுவினார். பாஷ்யம் என்ற பிரபல சுதந்திரப் போராட்ட வீரரை தொடர்பு கொண்டு அவரை கம்யூனிஸ்டாக்கினார். அவர் மூலம் பாண்டிச்சேரி வ. சுப்பையாவைத் தொடர்பு கொண்டு அவரையும் கம்யூனிஸ்ட் பாதைக்கு கொண்டு வந்தார். சுதந்திரப் போராட்ட வீரர் பாஷ்யம் அவர்கள் 1932-ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் நள்ளிரவில், சென்னை கோட்டையில் 150 அடி உயர கொடிக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த பிரிட்டனின் ‘யூனியன் ஜாக்’ கொடியை இறக்கிவிட்டு, மூவர்ணக் கொடியை ஏற்றியவர், அதன் பொருட்டுச் சிறைவாசம் அனுபவித்தவரும் ஆவார். தோழர் பி. சீனிவாசராவுடன் தொடர்பு கொண்ட அமீர் ஹைதர்கான் மார்க்ஸீய நூல்களை அளித்து அவரை கம்யூனிஸ்ட்டாக்கினார். வேலூர் சிறையிலிருந்த பி. சீனிவாசராவ் காங்கிரஸ் ஊழியர்களிடம் மார்க்ஸீய நூல்களைப் படிக்கக் கொடுத்தார். அப்போது சிறையிலிருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டிற்கு மார்க்ஸீய நூல்கள் கிடைத்தன. அது பற்றிக் குறிப்பிட்ட ஈ.எம்.எஸ். “நான் படித்த முதல் மார்க்ஸீய நூல் லெனின் எழுதியது. அதை வேலூர் சிறையில் சீனிவாசராவ் கொடுத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமீர் ஹைதர்கான் சென்னையிலிருந்து பம்பாய் செல்லும் ரயிலில் ஏறியதும், ரகசிய போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின் கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக்கப்பட்ட பி. சுந்தரய்யா தொடர்ந்து பணியாற்றினார். சென்னையில் ராஜ வடிவேலு, பாஷ்யம், ரஷ்யாமாணிக்கம் ஆகியோர் முழு நேர ஊழியர்களாகச் செயல்பட்டனர். இவ்வாறு பல தகவல்கள் இந்நூலில் விரிவாக தரப்பட்டுள்ளன. இந்நூலில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், தமிழகத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மீது போடப்பட்ட சதிவழக்குகள், அதில் வழங்கப்பட்ட தண்டனைகளும், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களுமாகும். சென்னை, கோவை, நெல்லை கம்யூனிஸ்ட் சதி வழக்குகளே அவை. வெள்ளை அரசைச் சட்டவிரோதமாக கவிழ்க்க முயன்றதாகவும், கம்யூனிஸ்ட் பிரசுரங்களை வைத்திருந்ததாகவும் சதிவழக்குகளைத் தொடுத்தனர். தோழர்கள் பி. ராமமூர்த்தி, மோகன் குமார மங்கலம், சி.எஸ். சுப்ரமணியம், சுப்ரமணிய சர்மா, ஆர். உமாநாத், அனுமந்தராவ், கே.ஏ. கேரளீயன் ஆகிய ஏழு பேரைக் கைது செய்து சென்னை சதிவழக்கைத் தொடர்ந்தனர்.

இச்சதிவழக்கு 1940-ல் தொடரப்பட்டது. ஒவ்வொருவருக்கும் விதவிதமாக 2 முதல் 4 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஷ்யம் அய்யங்கார், ஜகன்னாத்தாஸ், பி.எஸ். கைலாசம் போன்ற பிரபல வழக்கறிஞர்கள் தாங்களாகவே முன்வந்து வழக்காடினர்.

கோவை சதி வழக்கும் 1940 டிசம்பர் 21-ல் தொடரப்பட்டது. கோவையில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதற்காக வந்திருந்த தோழர் என்.சி. சேகரை முதல் குற்றவாளியாகக் கொண்டு, தோழர்கள் பி. கே. ராமசாமி, எம்.கே. சாமி, ஏ.டி. பாலு, ஆர். கந்தசாமி, வில்லியம்ஸ் ஸ்ரெலக்ஸ், எம். பூபதி, ஆர். கிசன், சைமன்பால், கே.எஸ். வாசன், என். ராமலிங்கம், ராமசாமி, மேட்டுப்பாளையம் எம்.ஆர். அருணாச்சலம், சுந்தரம், வி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை இதர குற்றவாளிகளாக்கி இந்த வழக்கு தொடரப்பட்டது. 6 மாத விசாரணைக்குப் பிறகு 21/2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

1941-ல் திருநெல்வேலி கம்யூனிஸ்ட் சதிவழக்கைத் தொடர்ந்தனர். தோழர்கள் ராமச்சந்திர நெடுங்காடி,
வி. மீனாட்சிநாதன், பெ. சீனிவாசன், வானரமுட்டி ராகவன், பாளையங்கோட்டை பாலய்யா, ரத்தினசபாபதி, கழுகுமலை அழகிரி, வாசுதேவநல்லூர் ராஜகோபாலகிருஷ்ணன், பாப்பாங்குளம் இசையானந்தம் பிள்ளை, அருப்புக்கோட்டை சோமசுந்தரம் மற்றுமொரு நெசவுத் தொழிலாளி உட்பட ஆக 11 பேர் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனர். 2 முதல் 31/2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சுதந்திரப்போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் அர்ப்பணிப்பை, தியாகத்தை, வீரத்தை ஒளிவீசிக் காட்டும் வரலாற்று நூல். எளிமையாக எழுதப்பட்டு, அனைவரும் படித்து பயன்பெறும் வண்ணம் அமைந்துள்ளது. என்.சி.பி.எச். புத்தக நிறுவனம், தனக்கேயுரிய கடமையை உணர்ந்து இந்நூலை வெளியிட்டுள்ளது.

சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்டுகளின் மகத்தான பங்கு
ஆசிரியர்: என். ராமகிருஷ்ணன்,
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,
விலை : ரூ. 50.00.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com