Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2006

கட்டுரை

டாக்டர் அம்பேத்கரின் அரும்பணிகள்

சி.எதிராசன்

பாரத் ரத்னா பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்திய நாட்டின் “அரசியல் அமைப்பை” உருவாக்கித்தந்த சிற்பி. தீண்டாதவர்களின் விடிவெள்ளி. அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயத்தில் அவர்கள் சமூக நீதியையும் சமத்துவத்தையும் பெற்று பொருளாதார ரீதியாக உயர்வடைய தன் இறுதி மூச்சுவரை உழைத்துத் தன் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட செம்மல். தலித் மக்களுக்கு மட்டுமின்றி தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைய அரசியல் சாசனத்தில் வழிவகுத்து இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றி அமைத்த தேசியவாதி.

இளமையிலேயே தெளிந்த சிந்தனையும், சிறந்த அறிவாற்றலும் பெற்று விளங்கியவர். பள்ளி பருவத்திலேயே தீண்டாமையின் கொடுமையை அணுஅணுவாக அனுபவித்தவர். இவருக்குச் சாதியின் பெயரால் இழைக்கப்பட்டக் கொடுமைகளும், இழி செயல்களும் இவர் மனதில் ஆழமாகப்பதிந்தன. இந்நிகழ்ச்சிகள்தான் இவர் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தின.

தன் சொந்த முயற்சியால் வானளாவ உயர்ந்தவர். புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் (USA), சர்வதேச அறிவு மையமான இலண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் பள்ளியில் சேர்ந்து பொருளாதாரத்தில் பிஎச்டி, எம்.எஸ்.சி, டி.எஸ்.சி என்ற டாக்டர் பட்டம் பெற்றதோடு, சட்டம் பயின்று பாரிஸ்டர் ஆனார்.

“நாணயத்தின் பிரச்சினை”, தோற்றமும் பரிகாரமும் (Problem of Rupee) என்ற ஆய்வுக்கட்டுரையில் நாணயத்தின் தன்மை, உள்நாட்டில் நாணயத்தின் கொள்மதிப்பு, பரிமாற்ற மதிப்பு (Exchange Value) ஆகியவற்றை பயன்படுத்திய முறையில் ஏற்பட்ட தவறுகளையும் இவற்றை விளக்கிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழியையும் முதன் முதலில் கூறியவர். எனவே பொருளாதார அறிஞர்கள் பலர் பாராட்டைப் பெற்ற நூல்.

இவருக்குப் பிஎச்.டி. வாங்கித் தந்த மற்றொரு ஆராய்ச்சிக் கட்டுரை “பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண நிதித் தோற்ற வளர்ச்சி” (Evolution of Provincial Finance in British India). பொருளாதார நிபுணர் R.A. செலிக்மன் அவர்களின் பாராட்டைப் பெற்றது. சோஷலிச தத்துவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல்.

பல மொழிகளில் பாண்டித்யம் பெற்றவர். எந்த சமஸ்கிருத மொழியைப் படிக்கக் கூடாது என்று மதவெறியர்களால் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டதோ அதே மொழியில் நிபுணத்துவம் பெற்றார். அவர் எழுதிய “சூத்திரர்கள் யார்” என்ற நூல் அவரது ஆய்வுத் திறனுக்கு சான்றாகும்.

மும்பாய் சட்டக்கல்லூரியிலும், ஸிடன்ஹாம் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணிபுரிந்தார். சட்டக் கல்லூரியின் முதல்வராக இருந்தார். உயர்நீதி மன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தன்னுடைய ஆற்றல் மிக்க வாதத்தால் பல சிக்கலான வழக்குகளில் வாதாடி தன் திறமையையும் நேர்மையையும் வெளிப்படுத்தி மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார்.

பல உயர்பதவிகள் இவரைத் தேடி வந்தன. தன் உயர்வை அவர் பொருட்படுத்தாது தன் மக்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகள் அகல, அவர்களை நாடிச் சென்றார்.

மும்பாயில் ஒடுக்கப்பட்டோர் நலவாழ்வு சங்கத்தை ஏற்படுத்தி (பகிஸ்கரித் ஹிட்கர்ணி சபா) அதன் மூலம் சமுதாயப் பணிகளைத் தொடங்கினார். மூக்நாயக், ஒடுக்கப்பட்டோர் பாரதம், ஜனதா முதலிய பத்திரிகைகளைத் தொடங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி உறங்கிக் கொண்டிருக்கும் தன் மக்களைத் தட்டி எழுப்பினார்.

கல்விக்கு முதலிடம் அளிக்க மக்கள் கல்விக்கழகத்தை ஏற்படுத்தினார். கல்லூரிகளையும், விடுதிகளையும் தன் மக்களுக்காக உருவாக்கினார். அகில இந்திய தாழ்த்தப் பட்டோர் சம்மேளனமும் (அரசியல் கட்சி) அகில இ ந்தியஅளவில் பெடரேஷனும் தொடங்கினார் (SCF). இப்பெடரேஷன்தான் பின்பு இந்தியக் குடியரசுக் கட்சியாக மாற்றி அமைக்கப்பட்டது.

நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படும் தொழிலாளர்களின் நலனுக்காக மிகுந்த அக்கறை காட்டினார். 1936 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சுயேட்சை தொழிலாளர்கள் சங்கம் (I.L.P) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடி வந்தார்.

1937 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தொழில் தகராறுகள் மசோதாவை வன்மையாகக் கண்டித்தார். வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது அல்ல என்றும் அது ஒரு உரிமையியல் தவறு என்றும், இம்மசோதாவிற்கு Worker’s Civil Liberties Suspension Act என்று பெயரிடவேண்டும் என்றார். வேலை நிறுத்தம் தொழிலாளர்கள் உரிமையின் மறு பெயர் என்றார். இருப்பினும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்தை எதிர்த்து மும்பையில் சுமார் 80000 தொழிலாளர்கள் கூடி மறியல் செய்தனர். டாக்டர் அம்பேத்கர் கம்யூனிஸ்ட்டு கட்சியுடனும் மற்றத் தொழிற் சங்கங்களுடனும் சேர்ந்து வேலை நிறுத்தத்தை முழு வெற்றி பெறச் செய்தார்.

1943 ஆம் ஆண்டு வைசிராய் குழுவில் தொழிலாளர் நல உறுப்பினராக இருந்தபோதும், தொழிலாளர் நல அமைச்சராக இருந்தபோதும் தொழிலாளர்கள் நலனுக்காகப் பல சட்டங்களை இயற்றுவதற்குக் காரணமாக இருந்தார். அவற்றுள் குறைந்தளவு ஊதியங்கள் சட்டம், ஒப்பந்த ஊதியச் சட்டம் குறிப்பிடத் தகுந்தவை. சுரங்கப் பணியாளர்களுக்கு மனித உரிமை வழங்கப் போராடினார்.

1943 ஆம் ஆண்டு “முத்தரப்புத் தொழிலாளர்” மாநாட்டில் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க பரிந்துரைக்கும் பொருட்டு ஒரு அமைப்பை உருவாக்கும் தீர்மானத்தைக் கொண்டுவந்து, அதன் மூலம் தொழிலாளர்கள் இன்று அனுபவித்து வரும் வசதிகளை பெறக் காரணமாக இருந்தார்.

சாதிகள் அமைப்பை வைத்துக் கொண்டு சமதர்மத்தை கொண்டு வர முடியாது. எனவே அடிப்படை உரிமைகளை முதன்மையாக வைத்து கம்யூனிஸ்ட் தத்துவங்களையும், ஜனநாயகக் கோட்பாடுகளையும் விளக்கி இந்திய அரசியல் சாசனத்தில் “அரசு பொதுவுடைமை தத்துவம்” இடம் பெற வழிவகுத்தவர். சமதர்மப் பாதுகாப்புக்கு அடித்தளமிட்டார். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் இன்று தொழிலாளர்கள் அனுபவித்து வரும் பெரும்பாலான வசதிகளுக்கும் காரண கர்த்தா டாக்டர் அம்பேத்கர் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

வட்டமேஜை (RTC) மாநாட்டில் (1930-33) அவர் ஆற்றிய உரை அவருடைய அரசியல் நுண்ணறிவை வெளிப்படுத்தியதோடு நாட்டின்பால் அவருக்கிருந்த பற்றை வெளிப்படுத்தியது. இந்தியாவில் உள்ள அத்துணை தீண்டப்படாத மக்களும் பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றி மக்களால் மக்களைக் கொண்டு மக்களுக்காக நடத்தக் கூடிய ஆட்சியை விரும்புகிறார்கள் என்று கூறினார். அவருக்கு எதிராக அதுநாள் வரை செயல்பட்டு வந்த பத்திரிகைகள் டாக்டர் அம்பேத்கர் “உண்மையான தேசபக்தர்” என்று பாராட்டின. மேலும் அவர் கூறியதாவது : சிறப்பு மிகுந்த பாரதநாடு “அடிமை நாடாக” மாற்றப்பட்டதிற்கு முக்கியக் காரணங்கள், இந்திய மக்கள் மொழியால், மதத்தால், சாதியின் பெயரால், மூடப் பழக்கவழக்கங்களால் வேறுபட்டதே காரணமேயாகும் என்று கூறினார். இத்தகைய நிலைமையை ஒழித்து மக்களை ஒன்றுபடுத்த முயன்ற முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்பட்டவர். டாக்டர் அம்பேத்கர் அவர்கள். தலைசிறந்த தேசிய வாதி.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசுப் பொதுவுடைமையில் நம்பிக்கைக் கொண்டவர். காரல்மார்க்ஸ் தத்துவம் ஒரு இலக்கு (Direction) என்றும், உறுதிகோட்பாடல்ல (DOGMA) என்றும் தனது கருத்தைத் தெரிவித்தார். விவசாயம் உள்ளிட்ட அனைத்து பொது நலத்துறைகளையும் நாட்டுடமையாக்க வேண்டும் என்றார். விவசாயத்தை அரசின் கீழ் கொண்டுவரவேண்டும் என்றும் நிலச் சுவான்தார்களோ, குத்தகை தாரர்களோ, நிலமில்லாத கூலித் தொழிலாளர்களோ இல்லாத நிலையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றார். ஆயுள்காப்பீட்டுக் கழகம், பெரிய தொழிற்சாலைகள், வங்கிகள் முதலியன தேசிய மயமாக்கப்பட்டப் போதிலும் விவசாயத்தை மட்டும் இன்றுவரை அரசால் தேசிய மயமாக்க முடியாத சூழ்நிலையே உள்ளது. இதற்குக் காரணம் பிற்போக்குச் சிந்தனையாளர்களின் கடும் எதிர்ப்பும் அரசு இயந்திரத்தின் இலட்சியமற்ற போக்கும் ஆகும். விவசாயத்துறையில் இத்தகைய போக்கைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றன. மேலும் சமதர்ம கொள்கை, நாட்டின் ஒருமைப்பாடு, வர்க்க ஒற்றுமை இவைகளை இலக்காக வைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் பல ஆண்டுகளாகப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

1946-ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் நாள் அரசியல் நிர்ணயசபை உருவாக்கப்பட்டது. இச்சபை டாக்டர் அம்பேத்கர் உள்பட ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சட்டவரைவுநர் குழுவை தேர்ந்தெடுத்தது. அக்குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார். பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக அரசியல் அமைப்பை உருவாக்கும் முழு பொறுப்பையும் தானே ஏற்று முடிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த மனிதர் வகுப்பறையின் மூலையில் ஒடுக்கப்பட்டு இழிவு படுத்தப்பட்டாரோ. எந்த மனிதருக்கு ஓட்டல் மற்றும் விடுதிகளின் கதவுகள் அடைக்கப்பட்டனவோ அதே மனிதரிடம்தான் “நாட்டின் சரித்திரத்தை மாற்றியமைக்கும் பொறுப்பு” ஒப்படைக்கப்பட்டது. இவர் மாற்று மனு (Modern Manu) எனலாம்.

1949-ஆம் ஆண்டு நவம்பர் 25ம் நாள் அரசியல் அமைப்பின் முக்கியத்துவத்தையும் தனிச் சிறப்பையும் அரசியல் நிர்ணய சபையில் எடுத்துரைத்து அவர் ஆற்றிய தொகுப்புரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. நிர்ணய சபையால் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கும் பல்வேறு ஐயப்பாடுகள் குறித்தும் அவர் அளித்த விளக்க உரைகள் கலங்கரை விளக்கமாக நின்று இன்றும் நிர்வாகம், நீதி, சட்டம் முதலிய துறைகளில் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றன.

ஓர் அரசியல் அமைப்பு எவ்வளவுதான் நல்லதாக இருந்தாலும் அதனைச் செயல்படுத்த அழைக்கப்படுபவர்கள் அல்லவை நாடுபவர்களாக இருப்பின் அந்த நல்ல அரசியல் சாசனம் மோசமானதாகிவிடும் என்பது உண்மை. அரசியல் அமைப்பை நல்ல முறையில் பயன்படுத்துவதும். அதற்கு மாறாக கையாளுவதும், ஆட்சியாளர்களைப் பொறுத்ததே. எனவே அரசியல் சாசனத்தின் அமைப்பைக் குறித்துத் தீர்ப்பு வழங்குவது தேவையற்றதாகும் என்று அவர் கூறிய கருத்து எந்த அளவுக்கு இன்று உண்மை என்பதை நம்மால் காணமுடிகிறது.

சட்டம் இயற்றும் அதிகாரமும் நிர்வாக அதிகாரமும் மத்திய - மாநில அரசுகளிடையே பகிர்ந்து கொள்ளக்கூடிய நிலைமையில் அவை சரிசமமான தகுதி உடையவை (Co- Equal) என்பதை விளக்கி, மாநில அரசு சட்டம் இயற்றும் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் அப்படி தலையிடும் உரிமை மத்திய அரசுக்கு அரசியலமைப்பில் வழங்கப்படவில்லை என்றும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

மாநிலங்களைப் புறக்கணித்து நடத்தும் மேலாண்மை அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது என்ற குற்றச்சாட்டு உண்மையே என்ற போதிலும் அரசியல் நெருக்கடி நேரத்தில் மத்திய அரசு மட்டுமே நாடு முழுவதற்குமான ஒரு முடிவை எடுக்க முடியும் என்ற விளக்கம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவை ஜனநாயகத்தின் வேர்கள் என்றும் இவைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து உள்ளன. ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரிக்க முடியாத தொகுதி (Trinity) என்ற அடிப்படையில் அவர் கூறிய சமதர்ம கருத்துக்கள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

“1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் நாளன்று நாம் ஒரு முரண்பாடுள்ள வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப்போகி றோம். அரசியல் சுதந்திரத்தைப் பொறுத்த வரையில் நாம் எல்லோரும் சரிநிகர் சம அந்தஸ்த்தை எய்துவோம். (ஒரு மனிதன் - ஒரு வாக்கு) சமூக பொருளாதார நிலைமைகளைப் பொறுத்த வரையில் நமக்குள் ஏற்றத் தாழ்வுகள் என்ற முரண்பாடுகள் இருக்கும். இத்தகைய முரண்பாடுகளைக் கூடிய விரைவிலேயே களைய வேண்டும். தவறினால் நாம் கடுமையாக உழைத்து உருவாக்கிய அரசியலைச் சார்ந்த குடியாட்சியின் அஸ்திவாரத்தை வறுமைத் துன்பத்தில் வாழும் மக்கள் தகர்த்தெறிவார்கள்” என்ற எச்சரிக்கையை விடுத்தார்.

இன்று 57 ஆண்டுகள் கழிந்த பின்பும் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் முழுமையாக நீக்கப்படாமல் பொருளாதார மேம்பாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தடைகற்களாக இருந்து வருகின்றன என்ற உண்மையை எவராலும் மறுக்க முடியாது.

ஜனநாயகத்திற்கு ஏற்படும் சீர்கேடுகளில் மிக முக்கியமானவை தனிநபர் வழிபாடு. (Hero Worship) நாட்டின் நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட போற்றுதலுக்குரிய ஒருவருக்கு நன்றியுடையவர் களாக இருப்பதில் தவறில்லை. அத்தகைய நன்றிக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை அயர்லாந்து நாட்டின் கவிஞர் தானியேல் ஓ. கென்னல் அவர்கள் பாடலில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார்.

“எந்த ஒருமனிதனும் தன் புகழையும் ஒழுக்கத்தையும் / இழக்கும் அளவுக்கு நன்றியுடையவனாக இருத்தல் கூடாது / எந்த ஒருபெண்ணும் தன் கற்பை இழக்கும் / அளவுக்கு நன்றியுடையவளாக இருத்தல் கூடாது / எந்த ஒரு நாடும் தான் பெற்ற சுதந்திரத்தை / இழக்கும் அளவுக்கு நன்றியுடைய நாடாக இருத்தல் கூடாது” என்று கூறி அத்தகைய எச்சரிக்கை மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவிற்கு மிகமிக அவசியம் என்றார்.

விதி 356-ஐ தவறாக பயன்படுத்தியதை கண்டித்து விமர்சனம்.

1953 ஆம் ஆண்டு அரசியல் சாசன விதி (Art) 356-ஐ துஷ்பிரயோகம் செய்து பெப்சுவில் (Pepsu) குடியரசுத் தலைவர் ஆட்சியை நீடித்தது தவறு என்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் விமர்சனம் செய்ததை அரசியல் தலைவர்களும், நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.

(ii) அதே சமயத்தில் மேல்சபை உறுப்பினராக இருந்த திரு. இராசகோபாலாச்சாரி அவர்களையும், பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த திரு. மொரார்ஜி தேசாய் அவர்களையும் முறையே முதல் மந்திரிகளாக நியமித்ததை வன்மையாக விமர்சித்தார். இந்த இருநிகழ்ச்சிகளும் அரசாங்கம் எந்த அளவுக்கு அரசியல் சாசன விதிமுறைகளை துஷ்பிரயோகம் செய்துள்ளது என்பதற்குச் சரியான எடுத்துக் காட்டு என்றார்.

இந்திய அரசியல் சாசனம் உருவாக்கித் தந்த மாபெரும் சாதனையை அங்கீகரிக்கும் பொருட்டு 1.6.1952 அன்று கொலம்பியா பல்கலைக் கழகம் LLD (Doctor of Laws) என்ற கௌரவப் பட்டத்தை அளித்து, டாக்டர் அம்பேத்கர் ஒரு பெரிய சமூக சீர்திருத்தவாதி என்றும் மனித உரிமைகளுக்காகப் போராடியவர் என்றும் இந்தியாவில் குறிப்பிடத்தக்க தலைவர்களில் தலையாய குடிமகன் என்றும் பாராட்டியது. ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகமும் அவர் சொந்த முயற்சியில் உலகளவில் புகழ் ஏணியின் உச்சியில் நின்றதைக் குறித்து 12-06-1953 அன்று டி.லிட் (Doctor of Literature) என்ற கௌரப் பட்டத்தை வழங்கியது. இந்திய அரசாங்கம் 1990 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” என்ற உயரிய விருதை வழங்கிப் பாராட்டியது.

பெண்கள் உரிமைக்காக தன் ஆற்றல் மிக்க எழுத்தாலும், பேச்சாலும் தொடர்ந்து போராடிவந்தார். வாழ்க்கைத் தத்துவங்களை அவர்களுக்கு வழங்கியவர். ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தின் வளர்ச்சி பெண்கள் முன்னேற்றத்தைப் பொறுத்தே உள்ளது என்றார்.

1951 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தபோது இந்து மதக் கோட்பாடுகளுக்குச் சட்டவடிவம் கொடுக்க இந்துச் சட்டத் தொகுப்பு மசோதா (Hindu Code Bill) கொண்டு வந்தார்.

மனுதர்ம சாஸ்திரத்தில் அரசியல் அமைப்புக்கு முரணாக உள்ள கோட்பாடுகளைக் கருத்தில் கொண்டு பெண்களுக்கு எதிராக குவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மட்டும் நீக்கி, குற்றவியல் மற்றும் சொத்துரிமைச் சட்டங்கள் போன்று இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர இம்மசோதா வழிவகுத்தது.

இம்மசோதாவின் முக்கிய அம்சங்களாவன : சொத்தில் பெண்களுக்குச் சமஉரிமை / இந்துத் திருமணச் சட்டம் / மண முறிவுச் சட்டம் / இருதார(ம்) மணமுறை ஒழிப்பு முதலியன

பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இம்மசோதாவிற்குச் சட்ட வடிவம் கொடுப்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் பிற்போக்குச் சிந்தனையாளர்களும், இந்து மதவெறியர்களும் இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். டாக்டர் இராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல் போன்றவர்கள் கூட எதிர்ப்பைத் தெரிவித்தனர். நேரு அவர்கள் மௌனம் சாதித்தார்கள். மசோதா தள்ளிப் போடப்பட்டது.

பெண்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நல்ல இலட்சியத்திற்காக கொண்டு வரப்பட்ட மசோதா நிறைவேற்றப்படாதது குறித்து எதிர்ப்பைத் தெரிவித்து தன் அமைச்சர் பதவியை துச்சமென மதித்து பதவி விலகினார்.

இருப்பினும் அதே மசோதா எவ்வித மாற்றமும் இல்லாமல் பின்பு சட்டமாக்கப்பட்டது. பெண்கள் இன்று சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகராக தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் டாக்டர் அம்பேத்கர் என்பதை எவராலும் மறுக்க முடியாது என்பது உண்மை.

சாதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்துமதக் கோட்பாடுகளை இறுதிவரை எதிர்த்தார். 1927ல் மகத் சத்தியாகிரகத்திற்குப் பிறகு, 1935 ஆம் ஆண்டு அம்பேத்கர் அவர்கள் “நான் ஒரு இந்துவாக இறக்கமாட்டேன்” என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அதன்படி 1956ம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் புத்தமதத்தைத் தழுவினார்.

இவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் குறிப்பாக “நாணயத்தின் பிரச்சனையும் தீர்வும்” “பிரிட்டிஷ் இந்தியாவில் மாநில நிதி தோற்ற வளர்ச்சி” ஆகியவை ஆராய்ச்சியாளர் களுக்குப் பெரிதும் பயன்படுகின்றன. பாகிஸ்தான் அல்லது இந்தியாவின் பிரிவினை, மொழிவழி மாநிலங்களைப் பற்றிய சிந்தனைகள், புத்தரும் அவரது தம்மமும், இந்து மாதர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்பன அவர் எழுதிய நூல்களில் முக்கியம் வாய்ந்தவை.

டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய வாழ்க்கையானது போராட்டங்களும் சாதனைகளும் நிறைந்த ஒரு காவியம். அவர் இந்து மதத்தை எதிர்க்கவில்லை. இந்து மதத்தில் மனித உரிமைகளுக்கு எதிராக குவிந்து கிடக்கும் சீர்கேடுகளைக் களைந்து, சாதிகளை ஒழித்து சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் இவைகள் மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு இந்து சமுதாயத்தை உருவாக்க முயன்றார். பயனில்லை. இருப்பினும் தான் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தில் அம்மூன்று கோட்பாடுகளையும் உள்ளடக்கிய அரசியல் பொதுவுடைமையைக் கொண்ட சோஷலிச தத்துவத்தை உருவாக்கிய தற்கால மனுவாகப் பாராட்டப்பட்டார்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஈடு இணையற்ற தலைசிறந்த தேசியவாதிகளின் முன்னோடி; அரசியலமைப்பின் நிபுணர். சிறந்த சட்ட மாமன்ற இயலறிஞர். பல துறைகளில் ஆற்றல் பெற்று விளங்கியவர். தொழிலாளர்களின் உயிர்நாடி தாழ்த்தப்பட்ட மக்களின் ஒப்பற்றத் தலைவர். மனித உரிமைகளின் காவலர். உலக வரலாற்றில் தனக்கென்று இணையற்ற ஒரு இடத்தை வகுத்துக் கொண்ட மாமேதை. உலக மக்கள் இதயங்களில் என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடியவர்.

ஆட்சியில் உள்ளவர்கள் அரசியல் சாசனத்தின் விதிமுறைகளையும் குறிப்பாக அரசுக்கு வழிகாட்டியாக விளங்கும் அரசின் நெறிமுறை கோட்பாடுகளையும் பின் பற்றினால் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com