Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2006

கட்டுரை

பப்பாசி (BAPASI)யின் வளர்ச்சியும், எதிர்காலமும்

ஆர்.எஸ். சண்முகம்

பப்பாசி (BAPASI)யின் வரலாறு என்றால் ஆங்கில நூல்களை வெளியிடுவோர் அல்லது விற்பனையாளர்களால் பெருமளவு பங்கு கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்டது. முதலில் சுமார் 20 நபர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று 251 உறுப்பினர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இதனுடைய முக்கிய நோக்கம் மக்களிடையே வாசிப்பை மேம்படுத்துவதும் அதற்குக் கருவியாகப் புத்தகக் காட்சியை நடத்துவதும் என்பதாகவே இருந்திருக்கிறது. அந்த எல்லையை மீறி விரிவு படுத்தவில்லை என்பது உண்மை. ஆனாலும் விரிவு படுத்துவதற்குச் சில முயற்சிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த அமைப்பு, அகில இந்திய புத்தக வெளியீட்டாளர் விற்பனையாளர் (FIBA) சங்கத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

B.I. நிறுவனத்தின் இயக்குநராக இருக்கின்ற திரு. மேத்யூ, M.A. சுப்பிரமணியம் போன்றவர்களால் புத்தகக் காட்சி தொடங்கப்பட்டு இன்றுப் பெரிய அமைப்பாக வளர்ந்திருக்கிறது. இதற்குப் பதிப்புத் துறையில் ஏற்பட்ட விஞ்ஞான ரீதியான மாற்றங்கள் என்பது வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்பது தவிர்க்க முடியாத உண்மை. அச்சுத் தொழில் மேம்பட்டதற்குப் பின்னால் வர்த்தக ரீதியாக அதை முதலாளித்துவம் தன்னுடைய கையில் எடுத்துக் கொண்ட பின்னர், புதிய புதிய எழுத்தாளர்களை அவர்களே உருவாக்கினார்கள் என்பதும் ஓர் உண்மையாகும்.

இதனுடைய விளைவுதான், இன்று பெட்டிக் கடைகளில் இடம் இல்லாமல் நிறையப் பத்திரிகைகள் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. அச்சு இயந்திரத்துக்கு வேலை கொடுப்பதற்காகவே பல புதிய எழுத்தாளர்களும், புதிய நிறுவனங்களும் ஏற்பட்டுள்ளன. இதை ஒரு யாகமாகச் சமூக சேவையாக நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் பல இருக்கின்றன. அதையும் மீறி, காசு சம்பாதிப்பதற்காக மட்டும் நடத்தக் கூடிய நிறுவனங்களும் இருக்கின்றன.

பப்பாசி வளர்ச்சி என்பது பல புத்தகக் காட்சிகளை நடத்தி, வளர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பப்பாசியின் வரலாறு என்பது புத்தகக்காட்சி வரலாறாகத்தான் இருக்கும். இன்றைய சூழ் நிலைமையில் பதிப்புத் துறை வளர்ந்திருக்கிறது என்றால், அதற்கான பெருமை புத்தகங்களை மக்களிடம் கொண்டு சென்றவர்களைத் தான் சாரும்.

பதிப்புத்துறை வரலாற்றைச் சுதந்திரத்திற்கு முன்பு, சுதந்திரத்திற்குப் பின்பு என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும். இந்தியா, குடி அரசு ஆனா பிறகு பதிப்புத் துறை மிகப் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கல்வி அறிவு மேம்பட்டதுதான். மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்கள் கல்வி அறிவு வளர்ச்சியில் முன்னேறியுள்ளது போல் இன்று தமிழ்நாடும் வளர்ந்திருக்கிறது. அதனுடைய தாக்கம் இதில் ஏற்பட்டு விட்டது. பொதுவாகப் பப்பாசியின் வரலாறும் இதனுடன் ஒட்டியே இருக்கிறது. புத்தகக் காட்சியை நடத்துவது, புத்தக விற்பனையை பெருக்குவது, வாசகர்களிடையே ஒரு வாசிப்புணர்வைக் கொண்டு செல்வது ஆகியவற்றைப் பப்பாசி செயல்படுத்தி வருகிறது.

எங்களுடைய காலத்தில் புத்தக விற்பனையை மேம்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்று ஒரு திட்டம் வகுத்து, அதன் அடிப்படையில் செயல்பட இருக்கிறோம்.

புத்தக விற்பனை, பதிப்பித்தல் ஆகியவற்றிற்காக மட்டுமின்றிப் பதிப்பாளர் நலனையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. மற்ற அமைப்புகள் போல் பதிப்பாளர்களை ஒரு கட்டுக்குள் நிர்பந்தத்துக்குள் வைத்திருப்பது போன்ற நிறுவனமாகப் பப்பாசி இருக்கவில்லை.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை நிறைய பதிப்பாளர்கள் இருக்கிறார்கள். சில நிறுவனங்கள், அதற்கான தனித் தன்மையுடன், (பாட நூல்கள்) இயங்குகின்றன. விற்பனை முறையில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித் தனிப் பண்புகள் இருக்கின்றன. பல்வேறு மாதிரியான நிறுவனங்களை ஒருங்கிணைத்து, அவைகளுக்கு தேவையானவைகளை பெற்றுத் தருகின்ற நிறுவனமாக பப்பாசி மாற வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதே பப்பாசியின் முன் உள்ள கேள்வி.

இன்றைக்கு உள்ள பொருளாதார நெருக்கடியில், பதிப்புத் துறைக்கு உள்ள மூலப் பொருட்கள் விலை ஏற்றம் போன்றவை தொழிலுக்கு நெருக்கடிக்கு ஏற்படுத்தியிருக்கின்றன. புத்தக விற்பனையைப் பொறுத்தவரை மிகப் பெரிய வீச்சாக இருக்கிறது. ஆனால் சில பொருளில் உள்ள புத்தகங்கள் பெருமளவில் விற்கின்றன. தனி மனித பொருளாதார மேம்பாட்டுக்குத் தேவையான நூல்கள் பெருமளவில் விற்கின்றன. முன்பு போல் புனைவு இலக்கியங்களோ, சிறுகதைகளோ பெருமளவில் விற்பனை இல்லை. அறிமுக எழுத்தாளர்கள், அற்புதமாக எழுதி இருந்தாலும் சரி, பல செய்திகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் சரி, எந்தப் பதிப்பாளரும் வெளியிட முன் வருவதில்லை. விற்பனை செய்யவும் யாரும் முன் வருவதில்லை என்பதுதான் உண்மை.

பதிப்பாளர்கள் இரண்டு வகையாக இருக்கின்றனர். தங்களுக்கென்று கொள்கைகளை வைத்துக் கொண்டு செயல்படும் பதிப்பாளர்கள் ஒரு வகையினர். இவர்கள் காசுக்காக எதையாவது புத்தகமாகப் போட்டுச் செயல்படும் பதிப்பாளர்கள் இவர்கள். உதாரணமாகப் பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்களில் 15 ரூபாய், 20 ரூபாய் புத்தகங்களை விற்கிறார்கள்.

இவர்கள் எழுத்தாளர்களை வைத்து எழுதி, ராயல்டி கொடுத்துப் பலருக்கு வேலை கொடுத்துப் பல பதிப்பகங்கள் பதிப்பித்த நூல்களை எடுத்துத் தனியாகப் புத்தகம் ஒன்றை, தரமான புத்தகமாகச் செய்து பெருமளவில் பதிப்பித்து விற்கிறார்கள். அவற்றில் உள்ள தகவல்கள் சரியானதாக இருக்குமா? மெய்ப்பு சரியாக இருக்குமா? என்பது கேள்விக்குறிதான். உணவுத்துறை, மருத்துவத்துறை போன்ற நூல்கள் ஆசிரியர் பெயர் இல்லாமல் விற்பனை செய்கிறார்கள். இவைகளைக் கட்டுப்படுத்த பப்பாசி என்ற ஸ்தாபனத்தால் முடியாது. ஆனால் அவர்கள் மிகப்பெரிய போட்டியாளர்களாக இருக்கிறார்கள். இந்தப் போட்டிக்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் இப்போது லாட்டரி தொழில் இல்லை. அந்தத் தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதற்கு இது சுருக்குமான வழியாகவும், லாபமாகவும் இருப்பதால், இதைச் செய்ய ஆரம்பித்தார்கள். போட்டி மிகப் பலமானதாக இருக்கிறது. இந்த வகையில் உள்ள பதிப்பாளர்களைச் சட்டரீதியாகவோ, வேறு நிலைகளிளோ போராட முடியாது. அவர்கள் பப்பாசி அமைப்புக்குள்ளும் இல்லை. இதற்கு அனைவரும் சேர்ந்து கருத்தரங்கம் ஒன்றை நடத்தி முடிவு காண வேண்டும் என்றே கருதுகிறேன்.

பல காலமாக தமிழ்ப் பதிப்பில் ஈடுபட்டு வரும் தமிழ்ப் பதிப்பாளர்கள், ISBN (International standard book number) இல்லாமலே இருக்கிறார்கள். அதைப் பற்றிய பார்வையும் இல்லை. தமிழ்ப் பதிப்பாளர்களின் செயல்முறைகள் தமிழ் நாட்டுக்குள்ளே இருக்கிறது. இதற்கு அடுத்த படியாக இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளிலிருந்து நேரடியாகத் தேடி வந்து வாங்கினால்தான் உண்டு. ISBN-யை இந்தத் தமிழ்ப் பதிப்பாளர்களுடையப் புத்தகங்களுக்கு உலக அளவில் ஒரு பார்வை கிடைக்கும். இதையெல்லாம் தெளிவு படுத்துவதற்காக ISBN என்பதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? எப்படி நடைமுறைப் படுத்த வேண்டும்? என்பதைப் பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்த உடனடியாக திட்டம் ஒன்றும் உள்ளது.

பப்பாசி உறுப்பினர்களுக்கு குழு முறையில் இன்சுரன்ஸ் மற்றும் வேறு திட்டங்களும் யோசிக்கப்பட்டு வருகின்றன. பதிப்பாளர்களைப் பொறுத்தவரை கணிப்பொறி என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. எல்லாத் தமிழ்ப் பதிப்பாளர்களையும் அவர்களுக்குத் தகுந்தாற்போல், கணினி மயம் செய்வதற்காகவும், கணிப் பொறியைப் பயன்படுத்தவும், தேவைப்பட்டால் வங்கிகள் மூலம் கடன் வசதி செய்துதர பப்பாசி முயன்று வருகிறது. இவை எல்லாவற்றையும் செயற் குழுவில் வைத்து, விவாதித்து அங்கீகாரம் பெற்றுச் செயல்படுத்த உள்ளோம்.

அகில இந்தியப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தோடு இணைந்து வெளி நாடுகளில் ஏற்றுமதி வாய்ப்புகளைக் கண்டறிவது, ஆரம்பகாலப் பதிப்பாளர்களுக்குப் பதிப்புத் துறை சம்மந்தமான பயிற்சிகள் போன்ற திட்டங்களும் உள்ளன. இந்த ஆண்டுத் தென் தமிழகப் பகுதிகளில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பப்பாசி புத்தகக் காட்சி நடத்தத் திட்டமிட்டு இருக்கிறது. இந்தப் புத்தகக் காட்சியின் வெற்றி தோல்வியைப் பொறுத்து அடுத்த செயல்பாடு இருக்கும்.

பதிப்புத் தொழில் என்பது கட்டுப்பாடான தொழில் இல்லை. பப்பாசியின் உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களுடைய தனிப்பட்ட செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ள முடியாது. உதாரணமாகச் சென்னை புத்தகக் காட்சியில் தள்ளுபடி பத்து சதவிகிதம் என்பது பொதுவான நியதியாக இருந்தாலும், அதை மீறவே செய்கிறார்கள். இந்த ஒழுங்கு முறையை மீறுவது என்பது இங்குச் சாபக் கேடான விஷயமாகவே இருக்கிறது.

அரசுதுறை நூலகங்களைப் பொறுத்தவரை நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த விபரம் தமிழ் பதிப்பாளர் களுக்குத் தெரிவதில்லை. பதிப்பாளர் திருப்தி படுகிற அளவு நூலகத் துறை செயல்பாடு இருக்கிறது. அதிக படிகள் வாங்கு வதில்லை என்ற குறைபாடு இருந்தாலும், இப்போது நிர்ணயிக்கப்பட்ட படிகள் வாங்கினாலே, ஓராண்டில் 400 முதல் 5000 புத்தகங்கள் வருகின்றன. அவற்றை வைப்பதற்கு இடம் இல்லை. போதுமான ஊழியர்கள் இல்லை என்றும் சொல்கிறார்கள். நூலகங்களுக்குப் புத்தகம் கொடுக்கும் போது, தேர்வாகவில்லை என்றால் பப்பாசியின் மூலம் பேசுகின்றோம். இப்போது தகவல் அறியும் சட்டம் வந்த பிறகு இந்த வேலை முறை இன்னும் சுலபமாக இருக்கும் என நம்பலாம்.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தகம் வாங்குவது அறிவித்து கிட்டத்தட்ட பத்து மாதங்கள் ஆகிவிட்டன. கிட்டத்தட்ட எல்லாப் பதிப்பாளர்களும், விற்பனையாளர்களும் புத்தகம் கொடுத்து இருக்கிறார்கள். இதைப்பற்றி இரண்டு, மூன்று தடவை அணுகிய போதும் அதற்கான முறையான பதில் கிடைக்கவில்லை. எதிர் காலத்தில் பப்பாசியிலிருந்து ஒரு குழு அமைக்கப்பட்டால், அரசு துறைகளோடு நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கும் பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்கும் வாய்ப்பாக இருக்கும்.

பப்பாசியின் புத்தகக் காட்சிக்கு நிரந்தரமான இடம் வேண்டும் என்று முந்தைய அரசிடமும், இன்றைய அரசிடமும் கேட்டோம். இரண்டு, மூன்று இடங்களைக் காண்பித்த போதிலும், கன்னிமரா நூல் நிலையத்தில் இடம் ஒதுக்கி, மிகக் குறைந்த வாடகையில், பப்பாசியின் பொறுப்பில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இது போன்ற வாய்ப்பு கிடைத்தால் மாவட்டத் தலை நகரங்களில் நடத்தலாம். பதிப்புத்துறைக்கு முக்கியமான கச்சா பொருள் காகிதம் அதன் விலை ஏற்றம் அதிகமாக இருக்கிறது. அதற்குக் கோட்டா முறையில் கட்டுப்பாடான விலையுடன் அரசிடம் பெற்றுத் தர பப்பாசி யோசித்து வருகிறது.

இந்தப் புத்தகக் காட்சிகளில் சொல்லிக் கொள்கிற மாதிரி புத்தகங்கள் வரவில்லை என்ற பேச்சு வட்டத்தில் பரவலாக இருந்தது. சீரியஸ் லிட்டரச்சர், நான் - சீரியஸ் லிட்டரச்சர் என்பதை தீர்மானிப்பது எது? நானும், என் சம்பந்தப்பட்ட அறிவும்தான் தீர்மானிக்கிறோம். எனக்கு எது தேவை என்பதை வைத்துத் தான் சீரியஸ்னஸ் தோன்றும். மார்க்சியமோ, ட்ராஸ்கியமோ இதன் அடிப்படையில்தான்.

பொதுவான பதிப்பகத்தாருக்குப் பொருளாதாரப் பின்புலம் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகம், மேல்நிலைப் பள்ளிகளுக்கு 50,000 ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்குவதற்குப் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து, புத்தக மாதிரி வாங்கினார்கள். ஆனால் பரவலாக ஆர்டர் கிடைக்கவில்லை என்ற புகார் பப்பாசிக்கு வந்திருக்கிறது. பதிப்பாளர்கள் ஒரு புத்தகத்திற்கு ரூ. 30-ம் செலுத்தியிருக்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறைக்கு பதிப்பாளர்கள் நூறு புத்தக மாதிரியைக் கொடுத்துள்ளார்கள். பொது நூலகத்துறையில் ஆங்கிலப் புத்தகம் தேர்வு பெறவில்லை என்றால் திரும்பக் கொடுத்து விடுகிறார்கள். நாங்கள் இதைப் பற்றி முறையிடப் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்துக்குச் சென்ற போது, தேர்வு செய்யப்படாத புத்தகங்கள் குப்பைகளாகக் கிடந்தன. அங்குப் போய் வருகின்றவர்கள் புத்தகத்தை எடுத்துச் செல்கின்றனர். இதைப்பற்றி பப்பாசி அரசு மட்டத்தில் முறையிட முயற்சி செய்து வருகிறது.

அச்சுக் கோக்கின்ற காலத்தில் ஒரு புத்தகத்திற்கு விலை நிர்ணயிப்பது என்பது உற்பத்திச் செலவு எழுத்தாளருக்கான கூலி, இதர விற்பனையாளர்க்குக் கழிவு என்ற மூன்று வகையாக வைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது வெள்ளைத்தாளில். இப்போது பல மாதிரிகள் வந்துள்ளதால் பல்வேறு, முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உதாரணத்திற்குக் கல்கியின் நூல்கள் தேசிய உடமையாக்கப்பட்டபிறகு, பல்வேறு வடிவங்களில், பல்வேறு விலைகளில் வருகின்றன. ஒரே வடிவத்தில் பல்வேறு விலைகள் வந்திருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் விலை நிர்ணயத்தைக் கூட தீர்மானிக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் பப்பாசி தனது நிர்வாகிகள், உறுப்பினர்களுடன், பல்வேறு போட்டிகளை, சவால்களைத் தன்னால் முடிந்த அளவுக்குப் பல்வேறு தளங்களில் பல்வேறு செயல் பாடுகளுடன் செயல்படுகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com