Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2006

கட்டுரை

தலித்தியமும் பெண்ணியமும்

அ. அருள்மொழி

காலம் காலமாகக் குடும்பச் சூழலில் சிக்கி வீட்டு வேலைகளில் உழன்று கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு நேரத்தில் தன் பிறப்பைப் பற்றி நொந்து கொள்ளத் தான் முடிந்தது. அப்படி நொந்து கொண்டாலும் அதில் இருந்து விடுபட முடியாதபடி கண்ணுக்கெட்டிய தூரம்வரை பின்னப்பட்ட வலைகள்தான் தென்பட்டன. பொருளாதார உரிமை, இல்லாமை, பாதுகாப்பற்ற சூழல், தனித்து வாழ்வதிலோ, பெற்றோரைச் சார்ந்து வாழ்வதிலோ ஏற்படும் சமூக அவமரியாதை உழைப்புக்குப் பயன்படும் உடல் வலிமை, எதிர்ப்புக்குப் பயன்படாதபடி செய்யப்பட்ட சூழ்ச்சி இவற்றில் இருந்து மீளமுடியாத பெண்கள், தன்னெழுச்சி பெறுவதை அனுமதிக்காத ஜாதிய குடும்ப அமைப்பு. இதுதான் பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் முதுகெலும்பாய் நிற்கிறது. முதுகெலும்பில் இருக்கும் கிருமிகளை நீக்க முயற்சி செய்தால் உடம்பே முடமாகிவிடும் என்ற மிரட்டல்கள். எனவே கிருமிகளுடன் வாழ்ந்தே பெண்களுக்கு நோய் தாங்கு திறன் அதிகமாகிவிட்டது.

எந்த அழுத்தமும் காலத்தால் விடுபட்டு வெளியேறுவதைப் போல், சமூக மாற்றங்களும், சமுதாய சீர்திருத்த இயக்கங்களும், புரட்சியாளர்களும் முன்வைத்த அறைகூவல் பெண்ணுலகை விழித்தெழச் செய்தது. தன் உணர்வு பெற்ற பெண்கள் தன்னுரிமை வேட்கையுடன் நடை போடத் தொடங்கினார்கள். பெண்ணுரிமை என்ற சொல்லாட்சி ஏற்படுத்திய எழுச்சி கல்வியை நோக்கி, வேலை உரிமை கோரி திருமணம், திருமண ரத்து, மறுமணம் என்ற நிலைகளை எட்டிவிட்டது. ஆனாலும் இவையாவும் அடிப்படையில் விழிப்புணர்வு பெற்ற குடும்பச் சூழலில் இருந்து வந்தவர்களுக்கே எளிதாக வாய்த்தது. தன் தந்தையாலும், தாயாலும் வலுவூட்டப்பட்ட பெண்கள்தான் இந்த மாற்றங்களை எளிதாகக் கையாண்டார்கள். அவர்கள் தான் அடுத்த நிலையில் இருக்கும் பெண்களை தம்முடன் இணைத்துக் கொண்டு அணி திரட்டினார்கள். வாழ்வின் அடிப்படைத் தேவையான உணவு, கல்வி, இருப்பிடம் ஆகியவற்றை உறுதி செய்து கொண்டு அடுத்த கட்டமாக சிந்திக்கும் போதுதான் சமூகத்தின் வலை சாதாரணமானதல்ல என்பது ஏற்கனவே “உரிமை பெற்ற” பெண்களுக்கே புரிந்தது.

அடிப்படைத் தேவைகளுக்கு உரிமை கொடுத்தால் அதை வைத்துக் கொண்டு, நன்றியோடு, நல்ல பெண்ணாக வாழாமல் ஏன் மேலும் மேலும் பேசி எரிச்சலூட்டுகிறீர்கள் என்ற கேள்வி வேகமாக எழுகிறது. யாரைப் பார்த்து? தனக்கு ஏதோ எல்லா உரிமையும் கிடைத்து விட்டதாக நினைத்து தனது காதல் உணர்வுகளையும், தன் உடல் உறுப்புகளின் பெயர்களையும் பதிவு செய்து எழுத்தில் வெளியிட்ட ஒரு பெண்ணை நோக்கி படித்தவர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களுமே வீசிய கணைகளைக் காணும்போதுதான், வெளிப்புறத் தோற்றத்திற்கும் உள்ளிருக்கும் நிலைமைக்கும் உள்ள வேறுபாடு வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இது ஒரு பகுதி. இதன் அடுத்த பகுதியைப் பாருங்கள்.

திறந்து கிடக்கும் பேரண்ட வெளியில் கோள்களுக்கிடையில் பறக்கின்றன செயற்கைக் கோள்கள். உலகப் பந்தை மேசையில் வைத்து, இது இந்தியா, இங்கிருந்து இப்படியே வந்தால் அடுத்த பக்கத்தில் - எதிர் முனையில் இருக்கிறது அமெரிக்கா என்று ஆசிரியரின் விரல் சுற்றி வருவதைப் போலவே, சுற்றி வருகிறது விமானம். அமெரிக்கர்களின் வருமானவரிக் கணக்குகள் சோளிங்கநல்லூரில் இந்தியர்களால் தயாரிக்கப்படுகின்றன. கணினி மூலம் அவை அமெரிக்காவில் தாக்கல் செய்யப்படுகின்றன. எத்தியோப்பியப் பெண் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்த செய்திகளை மட்டும் பார்த்தால் நாம் வாழும் உலகம் எவ்வளவு புதுமையானதாக இருக்கிறது.

இவற்றுக்கிடையில் மறைந்து கிடக்கும் பன்னாட்டு அரசியலையும், ஆதிக்கத்தையும், உணராதபடி, குடிதண்ணீர் முதல் மனிதவளம் வரை சுரண்டப்படும் நாடுகளின் கதையும், அப்படி சுரண்டப்படும் நாடுகளில் நமது நாடான இந்தியாவும் ஒன்று என்ற உண்மையும் தொண்டையில் கரிப்பை உண்டாக்குகின்றன. இந்த உலகமயமான மினுக்கல்களுக்கு இடையில் தாராளமயமாகி ஜொலிக்கிறது பெண்களின் உடல். ஆபாச சந்தைக்கும், வணிகத்துக்கும் பொருத்தமான முதல்தர பண்டம். அழகான, வளமான கண்களில் அறிவுச் சுடர் ஒளிவிடும் பெண்கள் அல்ல. கன்ன எலும்பு துருத்திக் கொண்டு, கழுத்து எலும்பு தெரியும்படியாக, வயிறோ பாம்பின் வயிற்றைப் போல் ஒட்டிப்போனதாக, குச்சிகளைப் போல் நீண்ட இரு கால்கள், இப்படித் தோற்றத்தில் பெண்கள். அடடா... இந்த வர்ணனையைப் பார்த்தால் சோமாலியாவில் சாவதற்கு முன் நிலையில் உள்ள ஒரு பெண்ணின் தோற்றம் அல்லவா நம்மனதில் வருகிறது. சோமாலியா பெண்ணுக்கும், விளம்பர மங்கைக்கும் என்ன வேறுபாடு? சாவின் விளிம்புக்குத் தள்ளிவிட்ட வறுமையின் எதிரொலி உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் வெளிப்படும் துயரம் ஒரு புறமும், இயந்திரத்தில் இழைத்து இளைக்கச் செய்த உடல், கண்களில் இரை தேடும் காமப்பார்வை, அளவுக்கு மீறிய பருமனோடு மார்புகள் இவை வெளிப்படுத்தும் ஆபாசம் மறுபுறமுமாக பெண்ணை இருவேறு எல்லைகளில் சிக்கவைத்துச் சீரழித்துக் கொண்டிருக்கிறது உலகமய நாகரீகம்.

இதே விளம்பர உலகில் பறந்து செல்லும் கார்கள் பயணம் செய்வதற்கு இடையூறாக அமைந்த குடிசைகள் பிய்த்தெறியப் பட்டு, சாலைகள் பட்டுப்போல் செப்பனிடப்பட்டன. குடிசைகள் அகற்றப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்டன நாகரீகப் பூங்காக்கள். அவற்றின் எதிர்ப்புறத்தில் நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலிக்க கண் கூச எழுப்பப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள். நம் வீட்டுக்கு எதிரே ஒரு கம்பெனி வருகிறது. அதில் போய் ஒரு வேலை கேட்கலாம் என்று எண்ணி உள்ளே காலடி வைக்க முயன்ற தலித் இளைஞனை விரட்டுகிறது பன்னாட்டு சுத்தமும், பயமுறுத்தும் அமைதியும். Yes, what can I do for you? நான் உங்களுக்கு என்ன செய்ய முடியும்? என்று அமெரிக்க உச்சரிப்பில் கேட்கிறான் ஆங்கிலம் படித்த ஒரு மேல்சாதி அடிமை. தன் வீட்டுக்கு எதிர் நிலத்திலேயே அன்னியனாகி, தன்னம்பிக்கை இழந்து, குறுகிப் போய்த் திரும்புகிறான் தாய்மொழி மட்டுமே படித்த நம் மண்ணின் மைந்தன். இந்த இரண்டு உயிர்களுக்கும் இடையில் அப்படி என்ன தொடர்பு?

(அடுத்த இதழில் முடியும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com