Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2006

கட்டுரை

ஊடகங்களில் பெண் வெளியும் இருப்பும்

அரங்கமல்லிகா

“பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள்
பேசாத பேச்செல்லாம் பேசவந்தாள்...”

என்ற பாடலை ரசிக்காமல் இருக்கமுடியாது. திரைப்படம் பெண்ணைப் பாடச்சொல்கிறது; பேசச் சொல்கிறது, ஆடச்சொல்கிறது. நடிக்கச் சொல்கிறது. இந்த முகங்களின் பின்னே மறைந்திருக்கும் திரைசூட்சுமம் எல்லா ஆண்களுக்கும் எளிதில் புரியும். நடிகைகளாக, துணை நடிகைகளாக இருக்கும் பெண்கள் சுவாசிக்க மறந்தவர்களாக வாழ்கின்றனர்.

ஆண் ஆதிக்கமும், படைப்பாற்றல் ஆளுமையைச் சுய கட்டுக்குள் கொண்டு இயங்கிவரும் திரைப்பட இயக்குநர்கள், கதாசிரியர்கள், பாடலாசிரியர்கள் 99.9% ஆண்களாக இருக்கின்றனர். ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மண்ணில் சுதந்திரம் பேசப்பட்டு வருகிறது. ஆண்டுகள் திரைப்பட வயதென நிர்ணயிக்கப்படுகிறது. எனினும் படைப்பாற்றலில், பாடல் எழுதுவதில், இயக்குவதில் பெண்களின் வெளி அனுமதிக்கப்பட்டிருக்கிறதா? ஊடகங்களில் அவர்களின் இருப்பு கட்டற்றதாக இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டிய தேவையைப் பெண் வெளி உருவாக்கி இருக்கிறது.

பெண்ணின் குரல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. பெண், உடல், நுகர்வுச் சந்தையில் மலிவாக்கப்பட்டிருக்கிறது. ஆணின் பார்வையில் பெண் இரண்டு முலைகளை உடையவள். வெளுத்த மேனியும், பம்பரம் சுற்றும் விளையாட்டுக்களமாகத் தொப்பூழும், சிறுத்த இடையும், பெருத்ததொடையும் காமத்தைத் தூண்டக் கூடியதாக மட்டும் கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. காலங் காலமாக இந்தச் சிந்தனை நடிகைகளுக்கு ஊட்டப் படுகிறது. அவளது உடலை தரை பெருக்குபவனிலிருந்து, இயக்குநர் வரையில் ஒரே மாதிரி நுகரலாம் என்ற சிந்தனையில் நடிகைகளும் பழக்கப்படுத்தப்படுகின்றனர்.

காலங்காலமாகப் பெண்கள் சிந்திக்கத் திறனற்றவர்கள். பொம்மலாட்டக் கருவி இசைப்பாளனின் இசைவுக்கு ஏற்றவாறு இயங்குபவர்கள், சுயமற்றவர்கள் என்பதுதான் ஊடகம், பெண்மீது கட்டுவிக்கும் தர்க்கம். இந்தத் தர்க்கத்தை இன்னும் சற்று கூடுதலாக்கிக் காட்டும் பணியைச் செய்கிறார் தொலைக்காட்சி தொடர்களை இயக்கும் ஆண் சூத்ரதாரி. கணவன் உட்பட சமூகம் பெண்ணைத் தெய்வமாக (அச்சம், மடம் நிறைந்திருந்தால்)வும் வில்லியாகவும், (பொறாமை, பழிவாங்கும் குணம்) சித்திரித்துக் காட்டுவதில் பெண்கள் தங்கள் இருப்பை இழந்தவர்களாகவே உள்ளனர். சித்தி, அண்ணாமலை போன்ற கதாபாத்திரங்களை ஏற்று சகலகலா வல்லியாகவும் அண்மையில் ஒளிபரப்பாகிவரும் கோலங்களில் பண்பில் சிறந்தவளாக, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவளாக நடைமுறைக்குப் புறமான வாழ்வியல் யதார்த்தமற்ற கதாபாத்திர உருவாக்கம் ஒரு புறம்; மாமியாரையோ, மருமகளையோ, நாத்தனாரையோ எல்லாத் துர்க்குணங்களோடும், பழிவாங்கும் எண்ணத்துடனும், கொலை செய்யத் தூண்டுதல் வரை யதார்த்தமற்றுக் காட்சிப்படுத்தும் சூழல் மறுபுறம். இவற்றிற்கு இடையில் கணவனால் பிரச்சினை எழும்போது கணவனுடன் சேர்ந்து வாழ்வதா, விலகுவதா என்ற முடிவு எடுக்கும் சூழல் பெண்ணிடம் ஒப்படைக்கப் படுவதில்லை. தந்தையின் கௌரவம் அல்லது அந்தஸ்து, சகோதரிகள் இருப்பின் அவர்களின் வாழ்க்கையை நினைத்துத் தன்னை ஏமாற்றிக் கொள்ளும் போக்குடைய பெண்களைத் திரைப்படமும், தொலைக்காட்சியும் அலுத்துக் கொள்ளாமல் காட்சிப்படுத்துகின்றன.

நடிகைகளாக இருக்கும் நெருக்கடி இது என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாமா? மரபுகளாலும், பண்பாடுகளாலும் எந்தவிதமான நியாயமும் நேர்மையுமில்லாமல் வறுமையில் உள்ள ஒரே காரணத்திற்காகக் குறைபாடுடைய ஆண்களைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் போதெல்லாம் பெண் மௌனியாக, தேர்வுரிமை அற்றவளாக சம்மதித்தல் பெண்ணின் இருப்பை விசாரணைக்குட்படுத்தாதா?

மேலை நாட்டுக் கலாச்சாரத்தாக்குதலால் ஒரு வருட ஒப்பந்தத்தில் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகவும், பின் ஆணின் கட்டளை / தீர்மானத்தை ஏற்றுப் பிரிந்தவள் அவனோடு சேரவேண்டுவதும் பெண்ணின் வெளியை நீதிமன்றக் கூண்டில் அடைப்பதாயில்லையா?

அண்மைக் காலங்களில் திரைப்பாடல்களில் பெண் நுகர்ச்சி என்பது ஆபாசம் நிறைந்ததாக இருக்கிறது. (சின்ன ராசாவே சிற்றெறும்பு என்ன கடிக்குதா, வறுத்து வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்..., மன்மத ராசா, ஓடிபபோயி கல்யாணந்தா கட்டிக்கிலாமா இன்னும் பல) பாடல் எழுதும் ஆண் பாடலாசிரியர்கள் தங்கள் அனுபவங்களையோ, பிறர் வாழ்க்கையில் கண்ட அனுபவங்களையோ பாடலாகத் தரும் பொழுது ரசிக்கக் கூடியதாக இல்லாமல் ஆபாசத்தின் விளிம்பைத் தொடுவதாகவே படுகிறது.

திரைப்பட இயக்குநர்களாகப் பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனரா என்று பார்த்தால் தமிழ்த் திரைப்படத்துறையில் வெறும் பூஜ்யம்தான். படம் இயக்கலாம் என்று ஒரு பெண் முடிவெடுக்க முடியுமா என்பது கூட ஐயம்தான். பயர் போன்ற திரைப்படங்களை எடுத்தவர்கள் நாடு முழுவதும் சர்ச்சைக்குட்படுத்தப்பட்ட சூழலைக் கொண்டே பெண்ணின் இருப்பை நாம் உணர்ந்து கொள்ளலாம். குறும்படங்கள் தயாரிப்பதில் குட்டி, மல்லி போன்ற படங்கள் பெண் பார்வையைக் கூர்மைப்படுத்த உதவும். பெண்கள் ஆண்களால் உருவாக்கப்பட்ட ஊடகங்களில் ஆணின் பார்வையில் பார்ப்பது வழக்கமாகி வருகிறது. பெண்ணின் வலி, அனுபவம், தேர்வுரிமை, சமூகப் புரிதல் யாவும் பெண்ணின் மனக்காட்சித் திரைவழி பார்க்கவும், பகிர்ந்து கொள்ளவும் அவளைத் தயார்படுத்த வேண்டிய தேவையின் பின்னணியில் பெண் வெளி பெண் இயக்கம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் அரைமணி, ஒரு மணி நேர நிகழ்ச்சிகள் பெண்களின் பிரச்சினையை மையமிட்டதாக இருந்தால் அதை எந்தவிதத் தணிக்கைக்குட்படுத்தாமல் தயாரித்து வெளியிட பெண்ணின் வெளி மறுதலிக்கப்படுகின்றது. 33% இட ஒதுக்கீடு என்பது அரசியலில் கனவாகத் தொடரும் அவலம் ஊடகத்திலும் தொடர்கிறது. ஒரு பெண் திருமணமானவளாக பொதுவாக ஊடகங்களில் பணியாற்றும் போது அவளின் சுதந்திரம் வரையறுக்கப்படுகிறது. குடும்பத்தைப் போலவே சமூகமும் ஊடகமும் இயங்குகின்றன. வெளிப்புறக் காட்சிகளில் நடிக்க வெளியூர் செல்ல நேரும் போதெல்லாம் பெண்ணிற்குக் காவல் இறுகுகிறது. உணர்ச்சிகளுக்காட்பட்டும் கதாநாயகர்களின் காதல், ஏற்றுக்கொள்ளப்படாதபோது அவள் மீது தகாத விமரிசனங்கள் எழுகின்றன. திரைத்துறையில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் திருமணம் செய்து கொள்ள இருந்தாலோ, கருவுற்றிருந்தாலோ அது செய்தியாகிறது. நடிப்புத் திறமையை வியந்து பார்க்கும் போது ஸ்ரீதேவி போன்றோரின் சொந்த வாழ்க்கை பல மாற்றுப் புரிதல்களைத் தருகிறது. சில நடிகைகளின் முடிவெடுக்க இயலாத திறனால் அவர்களின் வாழ்க்கை தற்கொலையில் முடிகிறது. இவற்றையெல்லாம் அசை போட்டுப் பார்த்தால் பெண்ணின் வெளியும் இருப்பும் ஒரு சருகுக்கு உள்ள உயிர்ப்பினும் கேவலமானது என்று உணரலாம்.

செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாக, காட்சிகளை வர்ணிப்பவர்களாக உள்ள பெண்களின் அறிவுக் கூர்மையும், செய்தியை யதார்த்தமாகச் சொல்லும் ஆளுமையும் நிறையப் பெற்றிருந்தாலும் கூட ஆண் செய்தி வாசிப்பாளர்களை மட்டும் முன்னிலைப்படுத்தும் யுத்தி அறிவுத்துறையிலும் பெண்கள் தங்கள் அதிகாரத்தை இழந்தவர்களாகவே உள்ளனர் என்பதையே காட்டுகிறது. கோடானுகோடி ரசிகர்களைத் தன்வயப்படுத்திக் கொண்டுள்ள கிரிக்கெட் வருணனைக் குழு தீவிரமாக விளையாட்டை விமரிசித்துக் கொண்டிருக்கும்போது பெண்ணின் (வருணனையாளர்) மார்பைக் குறி வைத்த காமிரா ஒளிப்பதிவாளரின் கண்ணைக் குத்தி காட்சி கெடுத்திட வேண்டாமோ என்று சிந்திக்கத் தூண்டுகிறது.

பயர் படத்தை எடுத்த சகோதரிகளைப் போலக் குட்டி படத்தை இயக்கிய இயக்குநரைப் போல, சிநேகிதனே சிநேகிதனே போன்ற பாடலை எழுதிய பெண் கவிஞர் தாமரை போன்றோரும், காமிராவைக் கையில் எடுக்க வேண்டிய தீவிரத்தைச் சொல்லிக் கொடுக்கும் சூழலை பெண்ணே தீர்மானிக்க வேண்டும் என்போரும் தொடர்ந்து கலகக் குரலை எழுப்ப வேண்டிய சூழலை பெண்ணின் வெளி - இருப்பு தூண்டுகிறது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com