Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2006

இலக்கியப் பரண்

மறையும் நூல்கள் வரிசை - 2

பா. ஆனந்தகுமார்

“சதாசிவ ரூபம் - மூலமும் உரையும்”
(சீகாழி - சட்டநாத வள்ளலார், ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடம், சென்னை, 1888)


காமிகம், புரோர்கீதம், தீப்தம், சுப்ரபேதம், சௌரம், முகபிம்பம் முதலான இருபத்தெட்டு சிவ ஆகமங்களுள் ஒன்றுதான் வாதுள ஆகமம். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வாதுள ஆகமத்தின் தமிழ் மொழிபெயர்ப்புத்தான் ‘சதாசிவரூபம்’ என்னும் இந்நூல். நூற்றி ஐம்பத்திரண்டு தமிழ் சூத்திரங்களும் அம்மூலசூத்திரங்களின் கீழ் அமைந்திருக்கும் உரையுமாக இந்த நூல் அறுபத்தெட்டு பக்கங்களுக்கு நீண்டிருக்கின்றது. இதனை ‘அஷ்டாவதானி’ பூவை – கலியாணசுந்தர முதலியார் பரிசோதித்துத் தர, அவரது மாணாக்கரும் சென்னை வைதீக சுத்தாத்வித சித்தாந்த சைவசபையின் செயலாளருமான வல்லைசண்முகசுந்தர முதலியார் பதிப்புச் செய்துள்ளார். பூவை கல்யாண சுந்தர முதலியார் நூலின் முகவுரையில் ‘சிவஞானபோதம் முதலான ஞான சாத்திரங்கள் பதினான்கினிற் பழக்கமுடைய சுத்த அத்விதசைவருக்கு இந்நூல் அத்தியாவசியாய் வேண்டியிருத்தலால் இதனை வெளிப்படுத்த ஆவல் கொண்டதாய்க் குறிப்பிடுகின்றார். சைவ சமயத்துள் ஆதி சைவம், மாக சைவம், அத்துவா சைவம், கிரியா சைவம், குண சைவம், நிர்க்குண சைவம், வீர சைவம், யோக சைவம் எனப் பல பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிடும் ‘அபிதான சிந்தாமணி’யின் ஆசிரியர் ஆ. சிங்காரவேலு முதலியார் “அவற்றுள் சுத்தாத்துவித சைவம் உயர்ந்தது” என்று அதனைத் தடித்த எழுத்தில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். (அபிதான சிந்தாமணி : ப. 746).

Sadhasivam book இதிலிருந்து சிங்காரவேலு முதலியாரும் சுத்த அத்வித சைவ சித்தாந்த சபையைச் சேர்ந்தவராக இருந்திருக்கின்றார் என்பது உறுதிப்படுகின்றது. வேளாளர்களின் எழுச்சியும் சைவ மடங்களின் தோற்றமும் சைவ சித்தாந்த தத்துவத்தின் உருவாக்கமும் தமிழக வரலாற்றில் பின்னிப் பிணைந்தவை. சைவ சித்தாந்த தத்துவமானது காலபோக்கில் அதனைப் பின்பற்றியவர்களால் வேதத்தோடு (வேதாந்த அத்வைதம்) ஒன்றிணைத்துப் பார்க்கப்பட்டது. தமிழ்ச் சைவத்திற்கு வேதாந்த முலாம் பூசுவது 17 ஆம் நூற்றாண்டு முதலே (தாயுமானவர்) தொடங்கிவிட்டது.

நூலின் சிறப்புப் பாயிரம், ‘மறை தமிழ்க் கவுணியன்’ ஞான சம்பந்தனை முதலில் வணங்கிப் பின்னர் நூலின் இயல்பினையும் நூலாசிரியரின் சிறப்பினையும் எடுத்துரைக்கின்றது. நூலின் முதல் சூத்திரம் வாக்கு மன அதீதங்களைக் கடந்த வடிவற்ற அருவமான சிவம் (1), பஞ்ச சக்திகளுடன் சேர்ந்திருக்கும் சதாசிவம் (5), உருவில் (வடிவத்தில்) இருக்கும் மகேசுரம் (25) ஆக முப்பத்தொன்றும் சிவனுடைய உண்மையான தத்துவங்கள் என்று மொழிகின்றது. இதில் ‘மகேசுரம்’ என்பது சந்திரசேகரர், மகேசர், ரிஷபாரூடர், கல்யாணசுந்தரர், பிக்ஷhடனர், திரிபுரதகனர் முதலான இருபத்தைந்து சிவமூர்த்தி வடிவங்களைக் குறிப்பன. பராசக்தி, ஆதி சக்தி, இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்னும் ஐந்து சக்திகளுடன் சிவம் கூடி தியானமூர்த்தியாக (பஞ்ச சாதாக்கியர் வடிவில்) ஞானிகட்குக் காட்சி தருகின்றார். இந்த அருவுருவ நிலை சிவசாதாக்யம், அமூர்த்தி சாதாக்யம், மூர்த்தி சாதாக்யம், கர்த்திரு சாதாக்யம், கனம சாதாக்யம் என ஐவகைப்படுமென்று வகுத்து அதன் ஒவ்வொன்றின் நிலையையும் நூலின் அடுத்து வரும் பகுதிகள் தொடர்ந்து விரித்துரைக்கின்றன. காரணமாக இருப்பவர் ஆதிசிவன் - பரமசிவன். அதன் காரியமாகச் சொல்லப்படுவர் ‘சதாசிவம்’ எனக்கூறும் இந்நூல், சதாசிவநாயனார் படைத்தல் (சிருட்டி), காத்தல் (திதி), அழித்தல் (சங்காரம்), மயக்கல் (திரோபவம்), அருளல் (அனுக்கிரகம்) எனும் ஐந்து தொழில்களை நடத்த சக்தியுடன் கூடி முறையே பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என ஐந்து கடவுளராக உருப்பெறுவதாகக் கூறுகின்றது. மேலும் இந்த ஐவரும் ஐந்து பூதங்களை நிலைக்களனாகக் (அதிட்டம்) கொண்டு பிரமாண்டத்திலிருப்பதாகச் சொல்கின்றது.

நிலம் - பிரமன், நீர் - விஷ்ணு, தீ - உருத்திரன், காற்று - மகேசன், ஆகாயம் - சதாசிவம் (சூத். 41). இவர்கள் ஐவரும் ஐந்து அவதரர்கள்; காரண ஈசுரர்கள், பரமசிவன் சுத்தமாயை. இவர்கள் ஐவரும் அசுத்த மாயையாகிய பூலோகத்தில் லய போகங்களை நடத்துபவர்கள். அசுத்தமாயையில் ஆணவத்தை நீக்கியபோது உதிப்பன காலம், வித்தை. வித்தையில் பிறப்பது பிரகிருதி. பிரகிருதியில் (இயற்கை) பிறப்பன சாத்வீக, இராஜசம், தாமசம் எனும் முக்குணங்கள். குணத்தில் தோன்றியது புத்தி, புத்தியில் தோன்றியது அகங்காரம். புத்தி தத்துவத்திலே உதித்த பாவத்தை உண்டாக்கும் குணங்கள் ஐம்பது. அவை காரணம், காரியம், இந்திரியபந்தம், ஆங்காரம், புத்தி என்பனவற்றை நிலைக்களன்களாகக் கொண்டு உருவாகுபவை. தேவர்களிடம் நிலைபெற்றது சாத்வீககுணம். பூலோக ரிஷிகளிடம் பொருந்தியது இராசத குணம். அஃறிணை உயிர்களிடத்து இருப்பது தாமசகுணம். தன்மம், ஐஸ்வரியம், என்ற குணங்களின் வேறுபாட்டால் கிளைக்கும் 358 குணங்கள் மானிடரித்து வியாபித்திருக்கும். இப்படி ஒரு தருக்க ரீதியான தத்துவத்தின் பரிணாமத் தொடர்ச்சியுறவை நூலில் அடுத்துவரும் சூத்திரங்கள் எடுத்துரைக்கின்றன.

ஞானம், வைராக்கியம், ஐஸ்வரியம் எனும் மூன்று குணங்கள் தருமத்தையும் அஞ்ஞானம், அவைராக்கியம், அனைஸ்வரியம் எனும் முக்குணங்கள் அதருமத்தையும் ஆசரிக்க (கைக்கொள்ள) உலகில் புண்ணிய பாவங்கள் உருவெடுக்கின்றன என நூலாசிரியர் உரைக்க, உலகியல் ஞானத்தை ‘பசு’-வாக உரையில் கற்பிக்கின்றார். மேலும் வைராக்கிய (ஆசையறுத்தல்), ஞானத்தைத் தந்தது புத்தம் என்றும், பசு (லௌகீக) ஞானமும் பிரபஞ்சவைராக்கியமும் கூடியவிடத்து நிரீச்சுர சாங்கிய ஞானம் உண்டானது என்றும், பாசுபதர், கபாலிகர் ஆகியோர் உலக ஞானத்தைக் கடந்த அதீத ஞானம் பெற்றுப் பிறப்பற்ற நிலையை அடைந்தனர் என்றும் நூலாசிரியர் உரைக்கின்றார். இப்பகுதியில் ‘ஞானம்’ குறித்த பிற சமயவாதிகளின் நிலைப்பாடு விவாதிக்கப்படுகின்றது. மேலும் உலகியல் ஞானம் வேதாந்தம், மாயாவாதம், தத்துவவாதம், பாட்டம், பிரபாகரம், பாஞ்சராத்திரம், நியாயவாதம், சாங்கியவாதம், நியோகவாதம், சுபாவவாதம், கன்மவாதம், சஞ்சயவாதம், அநேகவாதம் எனப் பல்வகைப்படுவதாகக் கூறுகின்றார், நூலாசிரியர்.

மேலும் இச்சமயங்களைப் பின்பற்றுபவர்கள், ஜனன மரணப் பற்றாமல் புண்ணிய பாவமென்னும் சக்கரத்தில் சுழற்றித்திரிந்து, புண்ணிய பாவம் தம்மிலொத்த காலத்து பாசம்விட்டு கரையேறுவார் என்கிறார் (சூத்திரம் : 113). இங்குப் பல்வேறு அடையாளங்களைக் கொண்ட சமயங்கள் அனைத்தும் ‘உலகியல் ஞானம்’ என்ற ஒற்றைத் தத்துவத்திற்குள் அடைக்கப்பட்டு, அவை சிவ தத்துவத்தின் ஒரு பகுதியாக்கப்படுகின்றன அல்லது கரைக்கப்படுகின்றன. முன்பு பிரமன், விஷ்ணு, உருத்திரன் என்ற வெவ்வேறு வைதீகக் கடவுளர்கள் சிவனின் வெவ்வேறு அம்சங்களாகக் குறைக்கப்பட்டதையும் (சூத். 34) இங்குக் கருதிப்பார்க்க வேண்டும். சிவதத்துவம் என்பதை எல்லாச் சமயக்கருத்தியல்களையும் உள்ளடக்கிய முழுமைத் தத்துவம் என்னும் மொத்தப்படுத்துதல், இந்த வாதுளஆகம நூலின் வழி நிகழ்ந்துள்ளது.

மோட்சத்தை மனதளவாக வியாபித்து அப்பால் நீங்கும் நிலையாகக் காட்டும் இவ்வாகமம், மோட்சத்தை நியமிக்கும் போது ஆணவம், கன்மம், மாயை எனும் ‘மும்மலபந்தம்’ நீக்கப்படும் என்கின்றது. இம்மும்மலத்தை நீக்குவது கால தத்துவம் என்றும், காலமற்ற நிலையே மோட்சம் (வீடு) என்றும் (சூத். 115) நூலாசிரியர் சுட்டுகின்றார். இதற்குப் பின்னர் வரும் இறுதிப் பகுதியில் சதாசிவம் ரூபம் கொள்ளும் தன்மை விளக்கப்பெறுகின்றது.

சிவமூர்த்தி லிங்க வடிவில் ஈசானம், தத்புருசம், வாமம், அகோரம், சத்யோசாதம் ஆகிய ஐந்து திருமுகங்களுடன் அமைவதையும், அம்முகங்களில் இருந்து இருபத்தெட்டு சிவ ஆகமங்கள் உதிப்பதையும் நூலாசிரியர் விளக்குகின்றார். இச்சதாசிவமூர்த்தியை கிரியையாலும் ஞானத்தாலும் பூசை செய்யும் முறைகளையும் இவ்விறுதிப் பகுதியில் ஆசிரியர் விளக்குகின்றார். “இப்படி யிடையற இதயகமலத்து அற்புதமுதல்வனை அருச்சனை புரிபவர் தப்பற அடைகுவர் சாயுச்சியமே” ஞான பூசையினால் சிவனை வழிபடுபவர் சீவன் முக்தர் (சாயுச்சிய) நிலையை அடைபவர் என்கின்ற இறுதி சூத்திரத்துடன் நூல் நிறைவடைகின்றது. இந்த வாதுள ஆகமத்துள் சைவ சித்தாந்தத்தின் மும்மல கருத்தமைவு விளக்கம் பெற்றிருப்பதால், சைவ சித்தாந்தம் அறிந்த தமிழர் ஒருவர் இவ்வாகமத்தை இயற்றியிருத்தல் கூடும். ஆயின் நூலுள் சங்கரர் அத்தைதத்தின் மாயாவாதக் கருத்தியலும் அடிநாதமாக இழையோடுகின்றது. இவ்வாகமத்தை மொழிபெயர்த்த சட்டநாத வள்ளலாரின் பெரியலுள்ள வள்ளலார் எனும் பின்னொட்டும் கவனத்திற்குரியது. ‘ஒழிவிலொடுக்கம்’ நூலை எழுதிய கண்ணுடைய வள்ளலாரும் வடலூர் இராமலிங்க வள்ளலாரும் இங்கு இணைத்துப் பார்க்கப்பட வேண்டியவர்கள். கண்ணுடைய வள்ளலாரின் ‘ஒழிவிலொடுக்கம்’ வைதிக சைவ நூலாகக் குறிப்பிடப்படுகின்றது (அபிதான சிந்தாமணி:ப: 297). எனவே வைதீகத்தை ஏற்றுக் கொண்ட சைவாதிகளுக்கான சிறப்புப் பெயராக ‘வள்ளலார்’ எனும் பின்னொட்டு இருத்தல் கூடும் எனக் கருத வாய்ப்புள்ளது.

நூலின் பின்னட்டையிலுள்ள புத்தக விளம்பரத்தில் ஜீ வரக்ஷhமிர்தம், தைலவருக்கச் சுருக்கம், சீவகருணாமிர்தம், நீர்நிறக்குறி நெய்க்குறி சாத்திரம், விட்டுணு தூஷண பரிகார’ நிக்கரகம் ஆகிய நூற்கள் குறிப்பிடப்படுகின்றன. இவையும் ஆய்வாளர்களின் தேடல்களுக்குரியவை.