Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007

நூல் விமர்சனம்

முன்னறியாதவர்களின் வாசல்தேடி நகரும் அன்பின் நதி
ப. கூத்தலிங்கம்

இரவுகளின் நிழற்படம்
ஆசிரியர்: யூமா. வாசுகி, வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98.
விலை: ரூ. 70.00

எந்தவொரு மொழியாயினும், அம்மொழியின் உன்னத படைப்பாக்கங்களின் வரிகளினூடே அதைப் படைத்தவனின் மனலயத்தோடு இயைந்து பயணிக்க வேண்டுமெனில் வெறும் வார்த்தை தொடர்புகளோ, இலக்கணப் புலமையோ கொண்டு மட்டும் இயலாது. அத்தனை உணர்வனுபவங்களையும் ஒருவர் சுயமாகப் பெற்றிருந்தால் மட்டுமே அது சாத்தியம். அவமானங்களின் கருஞ்சேற்றை உங்கள் முகம் தாங்கியிருக்க வேண்டும்; இழிவின் குப்பைகளை நோக்கி ஒருவர் தள்ளப்பட்டிருக்க வேண்டும்; தகிக்கும் பசியின் தனலுக்குள் விழுந்து துடித்திருக்கவேண்டும்; அன்பின் யாத்திரையில் உங்களின் ஒவ்வொரு உறுப்பையும் தானம் செய்துவிட்டு நீங்கள் ஒன்றுமற்ற சூன்யமாகி எல்லாம் வல்ல முழுமையின் இயங்கு வெளிக்குள் கலந்து கரைந்திருக்க வேண்டும். மேற்சொன்ன உணர்வனுபவங்களின் தகுதிகளோடு யூமா. வாசுகியின் ‘இரவுகளின் நிழற்படம்’ கவிதைகளினூடே பயணிக்கையில் ஒவ்வொரு கவிதையிலும் மங்கலாகத் தெரியும் முகமும், கருநிழல் உருவமும் தொகுதியை முழுமையாக வாசித்து முடித் திருக்கையில் நீங்கள்தான் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

வெளிப்படையாகப் புலப்படும் அழகின் தரிசனங்களை மட்டுமல்ல; சூழலின் கட்புலனாகாத கருணையற்ற வன்கரங்களுக்குள் சிக்கி, மீளும் கதியறியாது திணறி, தனக்கு நேரும் மரணத்தையும், அதனுடன் ஒட்டி வெளியேறும் ஆசையின் பரிதாபமான துடிப்புகளையும் கூட கவிஞன் அழகின் அபரிதமான ரசனையெழுச்சியுடன் கூடிய பூர்வ விழிப்புணர்வுடன் கண்டு வியக்கிறான்.

நெஞ்சின் திணறல் குமிழிகளாய்
கடல் மேற்பரப்பில் உடைந்து
உலகோடு கலக்கிறது
மாளா விருப்பத்தை
மழையெனவே பொழிகின்றன
ஒவ்வொரு
குமிழும்

உலகின் முதல் கனவு பசியில்தான் தொடங்கியிருக்க வேண்டும். அதன் அடியொற்றித் தொடர்ந்து வகை வகையான அரசியல் கோட்பாடுகள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இதுவரையிலான காலங்கள் வரை வலியுறுத்தப்பட்டிருக்கும் ஒழுக்க விதிகள், உயர் மனித விழுமியங்கள், உன்னதமான வாழ்வியல் நெறிகள் ஆகிய அனைத்தும் நொறுங்கிச் சில்லுகளாகச் சிதறி உதிரும்படியாக அவைகள் மேல் சொல்கேளாத துஷ்டனாக நடந்து போகிறான் பசி. வயிற்றின் உள்நாளங்களை கொத்தி இழுத்து பசி என்னும் விஷ சிலந்தி வலைபின்னும் வலியை யூமாவின் பல கவிதைகளின் இடையிடையே உணர முடியும்.

மடிந்து நோகும் வயிற்றின் காலியிடம்
வெட்கமற்றுக் காத்திருக்கிறது - சாத்தியமற்ற
உணவருந்த அழைக்கும் குரலுக்கு (இன்டர்வியூ)
இரவின் குளம்புகள்
வெற்றுக் குடல் மிதிக்கும்
குப்பைத் தொட்டி பச்சிளம் சிசுவை
குதறும் நாயாகிறது பசி (அறிக்கை)
பசியின் ஒவ்வொரு வருகையும் முதன்முறை
வீட்டிற்கு வரும் மிக நெருங்கிய விருந்தினனைப்போல்
பூரண உபசரிப்பை எதிர்பார்க்கிறது - (தலைப்பற்ற கவிதை)

ஒரு தன்னந்தனி ஆன்மா அனைத்து உயிர்களின் மேல் கொண்ட பரிவால் நெகிழ்ந்துருகி, அன்பின் நதியாகி பிரவகித்து நெளிந்து முன்னறியாதவர்களின் கால் நனைக்க அவர்கள் வாசல் தேடிப் போகையில், அப்புனித நதியின் மகிமை அறியாது, அவர்களோ முன்பே கடந்து போயிருக்கிறார்கள்.

மலர்களில் மிகப் பூத்த சிலரை
பட்டுத்துணியில் சுற்றிக்கொண்டேன்
எவருக்காவது
பரிசளிக்க நேரலாம்

யூமா. வாசுகியின் இதுவரையிலான கவிதைகளின் அநேக வரிகளுக்குள் நிரம்பித் திரிபவர்கள் குழந்தைகள். பாரதிக்குப் பிறகு குழந்தைகளைத் தம் பாடல் வெளிகளுக்குள் இத்தனை ஆதுரமாக அழைத்து வந்தவர் ‘யூமா’வாகத்தான் இருக்கமுடியும். சின்னஞ்சிறார்களின் சிரிப்பில் விளைந்த கற்களைக் கொண்டே வீடு கட்டுகிறார்; சாக்லேட் உண்ணத்தந்த விரல்நுனிகளில் பட்ட எச்சிலால் இளங்குளிருடையதாகிறது அவரது வீடு. மற்றுமோர் கவிதையில் அவர்களுக்காக முயலாக மாறி மிரண்ட விழிகளால் குறுகுறுப்பாகப் பார்க்கிறார். குழந்தைகளை எவ்விடத்தில் காண நேரினும் குதூகலமும், அன்பும் அவரை அனிச்சையாகத் தொற்றிக் கொள்கின்றன.

முதுகுப் பாரமாய்
புத்தகப் பைகள் சுமந்த
என் குருவிக் குஞ்சுகளுக்கு
நீர்மொண்டு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

மரபையொட்டித் தொடரும் கோட்பாடுகள், பிரிவுகள், எல்லைகளைக் கடந்த தடங்கல் மற்றும் எதிர்ப்புகளற்ற காதலுக்கான ஏக்கம் திரிந்து விரிந்த சுதந்திரவெளிக்குள் தன்னையும் தன் இணையையும் பறவை உடல்களாக பதிலீடு செய்து பார்க்கிறது கவிமனம்.

மனிதர்கள் முழுக்க மரங்களாகிப்போன
எல்லையற்ற தோட்டத்தில் ஒவ்வொரு மரத்திலும்
அமர்ந்தெழுந்து ஒன்றை ஒன்று துரத்துகின்ற

இரண்டு பறவைகளாய் நாம் பறந்தது ஒரு கனவில் ‘இரவுகளின் நிழற்படம்’ எனும் இத்தொகுதியின் பல கவிதைகளின் வழியே பயணித்துச் செல்கையில், அக்கவிதை வரிகளின் பின்னிருந்து ஒலிக்கும் குரல் முன்னமே பல நூறு வருடங்களாக ஒலிக்கும் ஒரு குரலுக்குரியவனுடையதாக உணர்ந்து திகைத்திருக்கிறேன். ஆனால் அவன் நினைவின் கண்ணிகளுக்குள் பட்டுக்கொள்ளாமல் பறந்தபடியே வாசிப்பினூடே பின்தொடர்ந்தான். பிறகு ஒரு வலுவான கவிதை வரிகளின் பொறியில் சிக்க நேர்ந்தபொழுது நன்கு உற்று நோக்குகையில் அவன் ‘ஏசு’ என அறிந்து அதிர்ந்தேன்.

விளக்காகக் குடைந்த என் கபாலத்தில்
உதிரந்தோய்ந்த நாளங்களைத்
திரியாக்கிச் சுடராகி உங்கள்
வழிக்கு விளக்காகும்
பேறு பெறவேண்டும்

கௌதம புத்தர் துறவியாகி நாடோறும் அலைந்த காலத்தின் ஒரு பொழுதில் ஓய்வுக்காகப் பெரு மர நிழலொன்றில் அமர்ந்திருந்தார். நாடோடியாகத் திரிந்து பாடல் இசைக்கும் பாணர்கள் சிலரும் அம்மர நிழலில் குழுமி தத்தமது யாழ்களைச் சரி செய்து நரம்புகளைக் கட்டிக்கொண்டு இருந்தனர். அனுபவம் கூரேறிய ஒரு பாணன் சொன்னான், “யாழ் நரம்புகளைத் தளர்ச்சியாகவும் கட்டாதே; மிக இறுக்கமாகவும் கட்டாதே. நரம்பை இரண்டிற்கும் இடைப் பட்ட நடுநிலையில் பொருத்து.

அப்பொழுதுதான் சிறந்த இசை அதிர்ந்தெழும்.” அதை அவதானித்திருந்த புத்தர் பிறகு தம் சீடர்களுக்குச் ‘சரியான நடுநிலைத் தன்மை’ என்ற புதிய சூத்திரத்தை போதிக்கலானார். யூமாவின் கவிதை வரிகள் தளர்வானவையும் அல்ல; மிக இறுக்கமானவையும் அல்ல. மேன்மையான யாழின் தந்திகளைப்போலச் சரியாகப் பொருத்தப்பட்டவை அவை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com