Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007

கட்டுரை

நீல் சிலைப் போராட்டமும் சிங்காரவேலரும்
பா. வீரமணி

ஆங்கில ஏகாதிபத்தியத்துக்குப் பெருந்தூண்களாக விளங்கிய படைத்தளபதிகளுள் மிக முக்கியமானவன் நீல் என்பவனாவான். இவன் முழுப் பெயர் ஜேம்ஸ் ஜார்ஜ்சுமித் நீல் (James George Smith Neill) என்பதாகும். இவன் இங்கிலாந்தின் ஒரு பகுதியாகிய ஸ்காட்லாந்தில் அயர் சயர் எனும் இடத்தில் கி.பி. 1810இல் பிறந்தான். மிக்க உயரமும், நல்ல உடற் கட்டும் உடைய மனிதனான அவன் தனது 17ஆம் வயதில் கிழக்கிந்திய கம்பெனியின் படையில் ஒரு படை வீரனாகச் சேர்ந்தான். போர்த்திறத்தில் அவன் சிறந்து விளங்கியதால் கிரிமியப் போர் (1853-56) ஆங்கில - துருக்கிப் படைக்குத் துணைப் படைத் தலைவனாக அமர்த்தப் பெற்றான்.

படையில் அவன் முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்புறப் பணியாற்றியதால் 1867ஆம் ஆண்டில் அவன் படைத் தலைவனாகப் பதவி உயர்வு பெற்றுப் பின்பு, கிழக்கிந்திய கம்பெனியின் சென்னைப் பிரிவின் ஒரு பிரிவுக்குத் தலைவனாகத் தெரிந்தெடுக்கப் பெற்றான். சென்னையின் வைசிராயாக விளங்கிய சர். தாமஸ் மன்றோவின் அன்பைப் பெற்றவனாகவும் அவன் விளங்கினான். சிறந்த படைத்தளபதியாக விளங்கி, இந்தியாவில் ஆங்கிலேயர்க்கு எதிராக நடந்த கலகங்களையும், புரட்சிகளையும் கொடூரமாக ஒடுக்கி, அந்த ஏகாதிபத்தியத்துக்குத் துணையாக அவன் விளங்கியதால் அவனது நினைவைப் போற்றும் முறையில் அவனுக்குச் சிலைவடிக்க ஆங்கிலேயர் முடிவெடுத்தனர்.

Singaravelar நினைவுச் சிலை எடுப்பது குறித்துச் சென்னையில் 1857 - டிசம்பர் திங்களில் சென்னை மாநில ஆளுநர் ஆரிஸ் என்பவர் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அவர் தலைமை ஏற்ற அக்கூட்டத்தில் தலைமைப் படைத்தளபதி, தலைமை நீதிபதி, மற்றும் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நீலுக்குச் சிலை அமைக்க “நீல் நினைவுக் குழு” ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவுக்கு ஜே.எஸ். பால் என்பவர் கௌரவ செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். தளபதி நீலுக்கு நினைவுச் சின்னம் அமைப்பதற்கு நன்கொடை பெற சென்னை அரசின் அனுமதி 1857 - டிசம்பரில் பெறப்பட்டது. நீல் நினைவு நிதி ஓராண்டில் பெரிதாயிற்று. 1858ஆம் ஆண்டின் இறுதியில் நிதி ரூ. 18,953/- ஆக உயர்ந்தது. இந்தியாவில் பணியாற்றிய ஆங்கிலப் படைப்பிரிவினரும், அவருடைய குடும்பத்தினரும் ரூ. 12,200 வழங்கினர்.

மீதமுள்ள தொகையை இந்தியாவில் ஆட்சிப்பணியிலிருந்த ஆங்கிலேயரும், அவர்களுடைய குடும்பத்தினரும் ஆங்கிலேய வணிக நிறுவனங்களும் வழங்கினர். ஆங்கில அரசாட்சிக்குச் சார்பாக இருந்த இந்தியர்களுள் சிலர் ரூ. 120/- வழங்கியுள்ளனர்.

நினைவுக் குழுவால் சேர்க்கப்பட்ட நிதியில் ரூ. 10,000/- மதிப்புக்குச் சிலை அமைக்க முடிவெடுத்தனர். சிலை உருவாக்கும் பணி இலண்டனில் இருந்த எம். நோபுள் என்ற சிற்பியிடம் ஒப்படைக்கப்பட்டது. அச்சிலை இலண்டனிலுள்ள வார்ப்பு மையத்தில் வெண்கலத்தில் 1859-இல் உருவாக்கப்பட்டது. பின்பு, சென்னைக்குக் கப்பல் மூலமாக 1860-இல் வந்து சேர்ந்தது. அச்சிலையை, சென்னையில் முக்கியமான இடத்தில் நிறுவ எண்ணி, முதலில் சென்னைக் கடற்கரையில் வைக்க எண்ணினர். அடுத்து, அதனை விடுத்துத் தீவுத்திடலில் நிறுவலாம் என எண்ணினர். பின்பு, அந்த இடமும் நினைவுக் குழுவினரால் கைவிடப்பட்டு இறுதியாக மலைச் சாலையில் (மௌன்ட் சாலை) அதாவது இப்போதைய ஸ்பென்சர் பிளாசாவின் எதிரில் அமைப்பதே சிறந்ததெனக் கருதி 19-3-1861 -இல் சிலையை நிறுவினர். நீல் சிலை 9 அடி உயரம் கொண்டது.

அச்சிலை 3.3 மீட்டர் உயரமுள்ள பீடத்தில் பொருத்தப்பட்டது. பீரங்கியின் பின்னணியில் வாளேந்தி நின்ற நிலையில் தளபதி நீலின் சிலை காட்சியளித்தது. அச்சிலை, அந்நாளைய ஆங்கில அரசின் சென்னை ஆளுநரின் ஆலோசனைச் சபையின் உறுப்பினரான எட்வர்ட் மால்ட்பி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சிலையைத் திறந்தபோது அவர், நீலுக்குப் புகழாரம் சூட்டினார். நீல் சிலைக்குக் கீழே கீழுள்ளவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

“ஜேம்ஸ் ஜார்ஜ்சுமித் நீல் அரசின் உதவியாளர் (ஏ.டி.சி.) சென்னைத் துப்பாக்கிப் படைப் பிரிவின் தளபதி; இந்தியப் படைத்தளபதி. திடமான மனம், துணிவு, தன்னம்பிக்கை முதன் முதலில் தடுத்தவர் என்று எல்லோராலும் கூறப்பட்டவர். 1857 செப்டம்பர் 25ஆம் நாள் லக்னோவை விடுவிப்பதில் ஈடுபட்டபோது வீரமரணம் எய்தியவர். வயது 47.”

1861ஆம் ஆண்டு முதல் நீல் சிலை பொதுமக்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் காட்சிப் பொருளாக இருந்து வந்தது. சிலையைத் திறப்பதற்கு முன்போ, திறந்த பின்போ, சிலையை வைப்பதற்கு எந்த எதிர்ப்பும் தமிழகத்தில் தோன்றவில்லை. மாறாக, சிலை திறந்தபோது, அதனைக் காணச் சென்னையில் பெருங்கூட்டம் கூடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலை திறப்பில் நீலின் மகன் கலந்து கொண்டார் என்றும், நீலுடன் அக்காலத்தில் போர்ப்பணியாற்றிய படைவீரர்கள் அணிவகுத்து நின்று மரியாதை செய்தனர் என்றும் சிலை திறப்பின்போது படை வீரர்கள் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து 9 பீரங்கிகள் குண்டுகளைப் பொழிந்து திறப்பு விழாவினைச் சிறப்பித்தனர் என்றும் டாக்டர் வ. கந்தசாமி அவர்கள், தாம் எழுதிய “நீல் சிலைப் போராட்டமும் இந்தியத் தேசிய இயக்கமும்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். சிலை திறந்தபின் ஏறக்குறைய 66 ஆண்டுகள் கடந்தபின் அதாவது 1927-இல் நீல் சிலையை உடனே அகற்றவேண்டும் என்ற போராட்டம் வெடித்தது. இப்போராட்டம் வெடிக்கக் காரணம் என்ன? இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது நடந்த பல போராட்டங்களை அறிந்த நம்மில் பலர், நீல் சிலைப் போராட்டத்தை அறிந்தார் அல்லர். மேலும், பஞ்சாபில் ஆயிரக்கணக்கான மக்களைச் சுட்டுக்கொன்ற ஜெனரல் டயரை அறிந்த இந்திய மக்கள், ஜெனரல் நீலை அறியாதது பெரும் அவலம்தான்.

நீல் சிலைப் போராட்டத்தை அறிந்து கொள்ளாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை முழுமையாக அறிந்ததாகக் கருதமுடியாது. இந்திய விடுதலைப் போராட்டத்தை வளர்த்து எடுத்ததிலும், இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் நடந்த கொடுமைகளைத் தமிழகப் போராட்ட வீரர்கள் எவ்வாறு உணர்ந்திருந்தார்கள் என்பதிலும் நீல் சிலைப் போராட்டம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அதன் தவிர்க்கவொண்ணா முக்கியத்துவத்தைக் கருதி அப்போராட்டத்தைச் சற்று விரித்து விளக்க வேண்டி உள்ளது. அப்போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை வீரர்கள் மிகப் பெரிதும் போற்றத்தக்கவர்கள். 1861 - முதல் 1827-வரை நீலைப் பற்றித் தமிழக வீரர்கள் சிறிதும் அறியாதவர்களாகவே (இந்தியர்களும்) இருந்துள்ளார்கள். அதற்குக் காரணம் அன்றைய ஏகாதிபத்திய அரசு நீலைப் பற்றிய செய்திகளை வெளியிடாமல், மறைத்திருந்ததேயாகும். அப்படியெனில், அந்தச் செய்தி எப்படி வெளிப்பட்டது? அதுதான் சிந்தனைக்குரிய அரிய செய்தியாகும்.

இந்தியாவில் 1857ஆம் ஆண்டில் சுற்றுப்பயணம் செய்த இலண்டன் டைம்ஸ் செய்தி ஆசிரியர் வில்லியம் ஹோவர்டு ரஸ்ஸல் என்பவர் ஜெனரல் நீல் இந்திய மக்களை வரன்முறை யின்றிச் சுட்டுக் கொன்றான் என்பதை அந்த இதழில் குறிப்பிட்டிருந்தார். ஜான் வில்லியம் கேயி மாலிசன், ஹோம்ஸ் ஆகிய ஆங்கில வரலாற்று அறிஞர்கள் “இந்தியக் கிளர்ச்சி” பற்றித் தத்தம் நூல்களில் நீலின் ஈவு இரக்கமற்ற கொடுஞ் செயல்களைக் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் எழுதிய நூல்களையும், முக்கிய ஆவணங்களையும், சில வரலாற்றுக் குறிப்புகளையும் இலண்டனில் படித்தறிந்த சாவர்க்கர் (1883-1966) அவர்கள் “1857 அல்லது இந்திய விடுதலைப் போர்” என்ற நூலை எழுதினார்.

அந்நூல், ஹாலந்திலும் இங்கிலாந்திலும் முறையே மராத்திய ஆங்கில மொழிகளில் 1909ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றது. சாவர்க்கர் தனது நூலில், நீலின் இராணுவக் கொடுமைகளை வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நூல் வெளியீட்டை அறிந்த ஆங்கில அரசு அந்நூலின் பெரும்பான்மையான படிகளைப் பறிமுதல் செய்து 1910ஆம் ஆண்டில் அந்நூலுக்குத் தடை விதித்தது. இத்தடை இந்தியா விடுதலை பெறும்வரை இருந்தது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட அந்நூலின் ஆங்கிலப் படியைத் தமிழக மக்களுக்குக் (முதலில் மதுரையில்) கிடைக்கும்படிச் செய்தவர் மதுரைத் தியாகி சிதம்பர பாரதி (1905 - 1987) ஆவார். இவர், சாவர்க்கருடன் நெருங்கிப் பழகிய வ.வே.சு. ஐயரிடம் கடிதம் பெற்றுப் புதுச்சேரிக்குச் சென்று பிரெஞ்சு மொழியாசிரியர் முத்துக்குமாரசாமி என்பவரைச் சந்தித்துச் சாவர்க்கரின் நூலைப் (1857 or The Indian war of independence) பெற்று மதுரைக்கு வந்து, அந்நூலை நண்பர்கள் பலர்க்குப் படிப்பதற்காகச் சுற்றுக்கு விட்டனர்.

மேலும், அந்த ஆங்கில நூலை டாக்டர் டி.எஸ். சௌந்தரம் அம்மையார் (1905-1984) தமிழில் ஆக்கம் செய்தார். தமிழாக்கம் வெளிவந்தவுடன் அந்நூலைப் பற்பலர் படித்தனர். அதன் வாயிலாக ஜெனரல் நீலின் இராணுவக் கொடுமைகளை அவர்கள் நன்கு உணர்ந்தனர். இந்திய மக்களுக்கு நீல் இழைத்த கொடுமைகளை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக, பஞ்சாப் படுகொலையை நிகழ்த்திய தளபதி டயரைவிடத் தளபதி நீல் மிகக் கொடுமையானவன் என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

தளபதி நீல் அப்படியென்ன கொடுமைகள் செய்தான்? அவை மிக முக்கியம் அல்லவா? அவற்றை ஓரளவு அறிந்தாலே ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கொடுமையை நன்கு உணர்ந்து விடலாம். இந்தியாவில் 1856ஆம் ஆண்டில் ஆங்கில அரசு என்பீல்டு துப்பாக்கியைப் படைவீரர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது. இந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கு முன்னதாகக் கொழுப்புத் தடவிய தோட்டாக்களின் நுனிப் பகுதியை வீரர்கள் வாயால் கடிக்க வேண்டியிருந்தது. இந்து மற்றும் இசுலாமிய வீரர்கள் கொழுப்புத் தடவிய தோட்டாக்களைப் பயன்படுத்த மறுத்தனர். இந்நிலை இந்திய வீரர்களிடையே பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது.

ஒருமுறை, பரக்பூரிலிருந்த இந்தியப் படைவீரன் மங்கல் பாண்டே என்பவர் கொழுப்புத் தடவிய தோட்டாவைப் பயன்படுத்த மறுத்து ஆங்கிலப் படைத்தலைவரைத் தாக்கினார். இதனால், அவர் கைது செய்யப் பெற்று விசாரணை செய்து 8-4-1857 அன்று ஆங்கில அரசு அவருக்கு மரண தண்டனை விதித்தது. பின்பு மீரட்டில் உள்ள படைப்பிரிவினரும் கொழுப்புத் தடவிய தோட்டாவைப் பயன்படுத்த மறுத்தனர். இதனால் 85 படைவீரர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யும்போது ஆங்கிலேயர், இந்திய வீரர்களின் உடைகளை ஈட்டியால் (Bayonet) கிழித்து இழிவுபடுத்தினர். இந்த இழிவை, ஏனைய படைவீரர்கள் கண்டும் கேட்டும் கொதிப்படைந்தனர்.

இதனால் 10-5-1857 அன்று மீரட்டிலிருந்த மூன்று இந்தியப் படைப் பிரிவினர் சிறைக் காப்பாளர்களைத் தாக்கித் தங்களுடைய சகோதர வீரர்களைச் சிறையிலிருந்து மீட்டனர். இதனைத்தான் மீரட் கலகம் என்றனர். இந்தக் கிளர்ச்சி விரைவில் ஜான்சி, கான்பூர், லக்னௌ, அலகாபாத் ஆகிய நகரங்களுக்கும் பரவியது. இப்படி வேகமாகப் பரவுவதற்கு அக்காலத்தில் டல்கௌசி (1848 - 1856) கொண்டுவந்த சுவிகாரக் கொள்கையே காரணமாகும் என்கின்றனர் வரலாற்றாசிரியர். இந்தச் சுவிகாரக் கொள்கையால் ஜான்சியின் அரசி லட்சுமிபாய் அரசை இழந்தார்.

மராட்டியத் தலைவர் இரண்டாம் பாஜிராவின் வளர்ப்பு மகன் நானாசாகிப் தனது உபகார சம்பளத்தை இழந்தார். மேலும் டல்கௌசி அயோத்தியில் ஆட்சி சரியில்லை என்று காரணம் கூறி, அந்நாட்டு அரசை ஆங்கில அரசுடன் இணைத்து விட்டார். ஏற்கெனவே ஆங்கிலப் படைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த பெருங் கலகம், டல்கௌசியினால் ஏற்பட்ட ஆட்சிப் பறிப்புகளால் ஆங்கில ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராக உருப்பெற்றது. இந்தக் கிளர்ச்சி நாடெங்கும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் படைத்தளபதியாக இருந்த நீலுக்குக் கல்கத்தாவின் ஆங்கிலத் தலைமை ஆளுநரான கானிங் ஓர் ஆணையைப் பிறப்பித்து, சென்னையிலிருந்து வெளியேறிக் கலக மையங்களுக்குச் சென்று ஆங்கிலப் படைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். நீல், முதலில் காசிக்குச் சென்றான். காசியில் பாதுகாப்புக் கருதி, இந்திய வீரர்கள் தங்களுடைய போர்க் கருவிகளை அகற்றிட வேண்டுமென ஆங்கிலத் தளபதியிடம் கட்டளையிட்டிருந்தான். அங்கு நீல் சென்றதும் உடனே படைக்கருவிகளை அகற்ற வேண்டுமென்றான். இந்திய வீரர்களும் இசைந்து படைக் கருவிகளை அகற்றிக்கொண்டிருக்கும் போது திடீரென்று ஆங்கிலேயர்க்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். இதனைக் கண்டு நீல், ஆங்கிலப் படையைக் கொண்டு கிளர்ச்சிக்காரர்களைக் கடுமையாகத் தாக்கினான். எதிர்ப்பட்டவரையெல்லாம் வெட்டியோ தூக்கிலிட்டோ கொன்றான். வரம்பு மீறிப் பலரைக் கைதுசெய்து அவர்களைத் தூக்கிலிட்டான். காசியில் நடந்த ஈவிரக்கமற்ற படுகொலைகளை டாக்டர் வ. கந்தசாமி கீழுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார். இக் கலகம் 4-6-1857 அன்று நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

“காசியை அடுத்த 20 கிராமங்களைச் சுற்றி நெருப்பு உருவாக்கப்பெற்று அக் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர்.” இந்தியப் படைவீரர்களை மட்டுமல்லாமல், ஏதுமறியாத பொதுமக்களையும் கொடூரமாக நீல் கொன்றிருக்கிறான் என்பதை இக் குறிப்பின் மூலம் நன்கு அறியலாம்.

பின்பு, ஜுன் 6-இல் (1857) அலகாபாத்தில் இந்தியப் படைவீரர்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். இந்திய வீரர்கள் கிளர்ச்சி செய்து அலகாபாத்தைக் கைப்பற்றினர். இந்நிலையில் நீல் காசியிலிருந்து அலகாபாத் சென்று படைத் தலைமையை ஏற்றுப் பீரங்கிகள் கொண்டு இந்திய வீரர்களைத் தாக்கினான். அலகாபாத் நகரமெங்கும் பீரங்கிகளின் வெடிமுழக்கமாகவே இருந்ததாம். குண்டுமழையால் எழுந்த நெருப்பும் புகையும் வானளாவப் பரவியதாம். இப்போரில் நீல் “தாக்குங்கள்; அழியுங்கள்” என்று கொடூரமாகப் படைவீரர்களுக்குத் தொடர்ந்து கட்டளையிட்டுக் கொண்டிருந்திருக்கிறான். கடும் போருக்குப் பின்பு, ஜுன் 17ஆம் நாள் ஆங்கிலப் படை மீண்டும் அலகாபாத்தை மீட்டெடுத்துள்ளது.

ஜெனரல் நீலின் கட்டளைப்படி அலகாபாத் மக்களை எவ்வாறு ஈவிரக்க மற்ற முறையில் கொன்றனர் என்பதை ஓர் ஆங்கிலப் படைவீரன் கூறியுள்ளதை, அக் காலத்தில் நீல் சிலை எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் தமது “சுதந்திர சரித்திரம்” என்ற நூலில் எடுத்துக் காட்டியிருப்பது நம் சிந்தனைக்கு உரியது.

“கிராமங்களில் தீ மூட்டினோம். அனல் கொழுந்து ஆகாயத்தை அளாவியது. காற்றும் கூடிக்கொள்ளவே அத் தீ எங்கும் பரவியது. தினம் தினம் இதே வேலையில் முனைந்தோம். தீயிலிருந்து தப்பியோட முயலும் இந்தியரை ஒன்று சுட்டுத் தள்ளுவோம்; அல்லது அந்நெருப்பிலேயே தூக்கி எறிவோம். ஒருவரையும் நாங்கள் உயிரோடு விட்டதில்லை. சில இடங்களில் விசாரணை நடத்துவோம்.

எங்கள் கையில் சிக்கிய கறுப்பரை (இந்தியரை) எல்லாம் ஆங்காங்குள்ள மரக்கிளைகளில் தூக்குப் போடுவதே எங்களது இனிய பொழுது போக்கு ஆயிற்று. எண்ணற்ற இந்தியரை நாங்கள் தூக்கிலிட்டுக் களிப்படைந்தோம்; பழிவாங்கினோம்; பரவசமும் அடைந்தோம். சாலை ஓரங்களிலே மரக்கிளைகள் பழுத்துக் குலுங்குவதுபோல இந்தியரின் பிணங்கள் தொங்கிக் கொண்டிருக்கும்.” இக் கூற்றுகளை நோக்கினால், ஜெனரல் நீலும், அவனுடைய படை வீரர்களும், இந்திய மக்களை எத்துணைக் கொடூரமாக, மனிதத் தன்மையற்ற முறையில் கொன்று குவித்தனர் என்பதை நன்கு அறியலாம். இந்தியச் சுதந்திரப் போரில் இத்துணைக் கொடுமை மிக்க இரத்தக் கறை படிந்த நிகழ்வுகள் பற்பல;

கான்பூரில் மன்னராக இருந்த நானா சாகிப்புக்கும் ஆங்கிலத் தளபதி வீலருக்கும் போர் மூண்டது. போரில் வீலர் சரணடைந்தார். இந்நிலையில் வீலரை விடுவிக்க ஹேவ்லாக் என்ற ஆங்கிலத் தளபதி அனுப்பப்பட்டார். எனினும், அவருக்குத் துணையாக நீல் இணைய வேண்டுமென்று வங்காளத்திலிருந்து நீலுக்குச் செய்தி சென்றது. நீல், உடனே அலகாபாத்திலிருந்து கான்பூருக்குப் படைகளுடன் புறப்பட்டான். கான்பூர் அலகாபாத்திலிருந்து 200 கி.மீ. தூரம் கொண்டது. ஆங்கிலப் படைகளை அலகாபாத்திலிருந்து கான்பூருக்கு வழிநடத்திச் சென்றவர் நீலின் உதவிப்படைத் தலைவன் தீனாடு என்பவன் ஆவான். ஆங்கிலப் படைகள் அலகாபாத் - கான்பூர் நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பல கிராமங்களை அழித்துள்ளனர். மற்றும் நீலின் ஆணையின்படி அக்கிராம மக்களை உயிரோடு கொளுத்தியுமுள்ளனர்.

நீல் கான்பூரை அடைந்ததும் (ஜுன் 20) நானா சாகிப் தலைமறைவாகி விட்டார். ஆங்கிலப்படை, நீலின் விருப்பத்துக்கு ஏற்ப இந்தியப் படையைக் கடுமையாகத் தாக்கியது. எண்ணற்றோர் படுகொலை செய்யப்பட்டனர். தம்மிடம் சரணடைந்த நானா சாகிப்பின் 270 வீரர்களை நீல் சிறிதும் இரக்கமின்றி வன் நெஞ்சத்தோடு அவர்களைக் கொடுமையாக நடத்திப் பின் தூக்கிலிட்டுள்ளான். இக்கலகங்களில் ஆங்கிலப் படைகள் வீரர்களை மட்டுமல்லாமல், பொது மக்களையும், ஏதுமறியாப் பச்சிளங் குழந்தைகளையும் குடிசைகளோடு கொளுத்திக் கொன்றுள்ளன. இவையெல்லாம் நீலின் ஆணைப்படியே நடந்துள்ளன.

கான்பூரை அடுத்து லக்னௌ(இலட்சுமணபுரி)விலும் கிளர்ச்சி நடந்தது. லக்னௌ, கான்பூரிலிருந்து 67 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஆங்கில ஆட்சியின் பிரதிநிதியாகச் செயல்பட்டவரின் அலுவலகம், கிளர்ச்சிக்காரர்களால் ஜுன் 1857-இல் முற்றுகையிடப்பட்டு, அம்முற்றுகை ஏறக்குறைய மூன்று திங்கள் நீடித்துள்ளது. இந்த முற்றுகையை ஒழிக்க ஆங்கிலப் படைத் தளபதி ஹேவ்லாக் பெரு முயற்சியெடுத்துப் போராடியும் பயனில்லாமற் போனது. இந்நிலையில், முற்றுகையை விடுவிப்பதற்காகத் தளபதி நீல் லக்னௌவுக்கு விரைந்து, தம் படைகளுடன் கலகக்காரர்களை எதிர்த்து கடும்போர் நிகழ்த்தினான். கிளர்ச்சிக்காரர்களும் அஞ்சாது எதிர்த்தாக்குதல் நிகழ்த்தினர். இக் கடும்போரில் எதிர்பாரா வகையில் இந்திய வீரர்களின் பீரங்கித் தாக்குதலுக்கு ஆளாகி, நீல் குதிரையிலிருந்து விழுந்து மடிந்தான்.

ஆங்கில அரசுக்குப் பாதுகாப்பாக விளங்கிப் போரில் பல கொடுமைகளைச் செய்த நீல் 25-9-1857 அன்று போரில் மாண்டான். இந்தியப் படைகளையும், பொதுமக்களையும் நீல் கொடூரமாகத் தாக்கியிருந்தாலும், ஆங்கிலப் படையைப் பொறுத்தவரையில், அவன் மாவீரனாகவும், ஆங்கில அரசைக் காப்பாற்றிய சிறந்த தளபதியாகவும் போற்றப்பட்டான். அதே வேளையில், ஒரு சிறந்த தளபதிக்கு இருக்க வேண்டிய உடல் வளமை, வீரம், சாதுரியம், காலம் அறிந்து செயற்படல், அஞ்சாமை ஆகியவற்றை அவன் நிறைவாகப் பெற்றிருந்திருக்கிறான். மேலும், தனது நலனைவிடத் தம்முடைய படைவீரர்களின் நலனையே பெரிதும் விரும்பிச் செயல்பட்டான் என்றும் போற்றப்படுகிறான். நீல் உயிரோடு இருந்திருந்தால் அவனுக்கு ஆங்கில அரசு 1857ஆம் ஆண்டிலேயே அவன் படைத்திறனைப் பாராட்டும் வகையில் மாவீரர் எனும் பட்டத்தை (Knight of commander of British Epmire) வழங்கியிருக்கும் என்றும், எனினும் அம்மதிப்பை அவனுடைய மனைவியான இசபெல்லாவுக்கு வழங்குவதில் ஆங்கில அரசு மகிழ்ச்சியடைகிறது என்றும் கல்கத்தாவிலிருந்து வெளிவந்த ஆங்கில அரசிதழ் குறிப்பிட்டது.

இலண்டன் டைம்ஸ் செய்தியாசிரியர் ஹோவர்டு ரசல், ஜான் வில்லியம் கேயி, மாலிசன், ஹோம்ஸ் ஆகிய வரலாற்றறிஞர்களின் குறிப்புகள் இல்லாமல் இருந்திருந்தால், நீலின் கொடுமைகளைப் போர் வீரர்களைத் தவிர வேறு எவராலும் அறிந்திருக்க முடியவே முடியாது. மற்றும், அவற்றைக் கண்டுணர்ந்து சாவர்க்கர் எழுதியிராவிடில் இந்தியர்கள் அறிந்திருக்க முடியாது. இவ்வகையில் மேற்குறித்த அனைவரும் நம் நன்றிக்கு உரியவர்கள். இச் செய்திகளை இந்தியர்கள் நன்கு அறிந்திருந்ததால்தான் நீல் சிலையை, ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அடையாளமாகவும், இந்திய வீரர்களை, பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்ற ஒருவனின் கொடும் சின்னமாகவும் கருதலாயினர். சாவர்க்கரின் ஆங்கில நூல், தமிழில் வெளியானதும், நீலின் கொடுமையைப் பற்பலர் அறியலாயினர். அதன் தொடர்ச்சியாகத் தேசியக் கவி பாஸ்கரதாஸ் நீலின் கொடுமையைப் பாடல் எழுதிப் பாடிக்காட்டியுள்ளார்.

இவையெல்லாம் நீல் சிலையை அகற்றுவதற்குச் சமூகப் பின்னணியாக அமைந்தன. மதுரையைச் சார்ந்த சிதம்பர பாரதி, சோமயாஜுலு, சீனிவாச வரதன், பத்மாசனி அம்மையார் ஆகியோர் நீல் சிலைப் போராட்டம் தொடங்குவது குறித்து முடிவெடுத்தனர். 1921-இல், பஞ்சாபில் (லாகூர்) லாரன்ஸ் எனும் ஆங்கிலேயர் சிலையை அகற்ற வேண்டுமெனப் போராட்டம் எழுந்தது. இதற்குக் காந்தியடிகளும் ஆதரவு அளித்தார். இந்நிலைப்பாடு, நீல் சிலை எதிர்ப்புப் போராட்டத்துக்கு மேலும் வலு சேர்த்தது. லாரன்ஸ் சிலை எதிர்ப்புப் போராட்டம் வெற்றி பெற்று அச் சிலை (1923) அகற்றப்பட்டது. இப்போராட்டத்தை அறிந்த மண்டயம் திருமலாச்சாரி (1895 - 1977) யார் நீல் சிலையை அகற்ற வேண்டுமென அறிக்கை வெளியிட்டார். இவ் அறிக்கை மதுரைத் தியாகிகளை உற்சாகப்படுத்தியது. அவர்கள் உடனே கூடி முடிவெடுத்து நீல் சிலையை அகற்றப் போராடச் சுப்பராயலு, முகமது சாலியா ஆகியோரைச் சென்னைக்கு அனுப்பினர்.

இவர்களிருவரும் 11-8-1927 - அன்று சென்னைக்கு வந்து மலைச் சாலையிலிருந்த நீல் சிலையைச் சேதப்படுத்த முயன்றனர். சிலை உறுதியான வெண்கலத்தால் செய்யப்பட்டு இருந்ததால், சிலையின் இடுப்புப் பகுதியிலிருந்த போர்வாள் மட்டும் சேதமானது. இதனைக் காவலர்கள் அறிந்து அவர்களை உடனே கைது செய்து நீதிமன்ற ஆய்வுக்கு அனுப்பினர். அந்நாளைய மாநில முதன்மைக் குற்றவியல் நீதிபதியான பம்மல் சம்பந்த முதலியார் இருவருக்கும் 3 - மாதச் சிறைக்காவலும், ஒவ்வொருவருக்கும் ரூ. 300/- தண்டனைத் தொகையும் விதித்தார். தண்டனைத் தொகையை அவர்களிருவரும் செலுத்த மறுக்கவே மேலும் 3 - மாத தண்டனையை அவர்களிருவருக்கும் விதித்தார்.

இவர்களிருவரின் கைதுக்குப் பின்னர், தமிழகத்தின் பற்பல மாவட்டங்களிலிருந்தும், கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற பல பகுதிகளிலிருந்தும் தியாகிகள் பலர் இச்சிலை அகற்றும் போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்றுக்கொண்டே இருந்தனர். இப்போராட்டத்தில் பெண்களும் பங்குகொண்டனர். விருத்தாசலத்தைச் சேர்ந்த அங்கச்சி அம்மையாரே முதல் பெண்மணி ஆவர். அவருக்குப் பின், கடலூரைச் சார்ந்த அஞ்சலை அம்மாளும் (1890 - 1961) அவருடைய மகளுமான லீலாவதி என்னும் அம்மாக்கண்ணு(11-வயது)வும் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை ஏகினர். இவர்களுக்குப் பின்னர் அஞ்சலை அம்மாவின் கணவரான முருகப்பப் படையாச்சியும் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். இதில் சென்னையைச் சேர்ந்த கே.ஆர். ஜமதக்னி (இக்கட்டுரை யாளரின் ஆசிரியர்) குப்புசாமி செட்டி, எஸ். திருமாலாச்சாரி, சம்பந்த முதலியார், குமாரசாமி நாயக்கர் போன்றோர் பலர் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்குத் தலைவர்கள் பலர் வெளியில் கூட்டம் அமைத்து ஆதரவு திரட்டி அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளனர். இவர்களுள் எம்.எஸ். சுப்பிரமணி ஐயரும், இராயபுரம் வேணுகோபால் செட்டியாரும் மற்றும் பலரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த இடையறாத போராட்டத்தால் தென்னிந்தியாவின் பற்பல பகுதிகளிலிருந்து எண்ணற்றோர் நீல் சிலைப் போராட்டத்தில் பங்கு பெற்றனர். இதனைப் பெருமையாகவும், இன்றியமையாதப் போராட்டமாகவும் கருதினர். இதனால், நீல் சிலையை அகற்றும் போராட்டமானது இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கியப் பிரிவாகும் என்று போராட்ட வீரர்கள் கருதினர். அவ்வாறே போராடினர். போராட்டம் முன்னிலும் வேகமாகச் சூடு பிடித்தது.

நீல் சிலை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையில் (மலைச்சாலை - இன்றைய அண்ணா சாலை - ஸ்பென்சர் பிளாசாவுக்கு எதிரில்) இருந்ததால், அந்நாளைய மாநகராட்சியின் தலைவராக இருந்த திவான் பகதூர் நாராயணசாமி செட்டியார், சென்னை மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை அரசின் பொதுப்பணித்துறைச் செயலாளருக்கும் நீல் சிலை பற்றிய விவரங்களைக் கேட்டுக் கடிதங்கள் எழுதியிருந்தார். அதற்கு அவர்கள் “நீல் சிலை பொதுப்பணித் துறையின் பொறுப்பில் உள்ளதென்றும் சென்னை அரசின் செலவில் அது பராமரிக்கப்பட்டு வருகிறது” என்றும் பதில் கூறியிருந்தனர். அந்நாளில் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக இருந்த சிங்காரவேலரும், இரங்கையா நாயுடுவும் வேறு உறுப்பினர் பலரும் நீல் சிலையை அகற்றும் பணியில் ஆர்வம் கொண்டு, போராட்ட வீரர்களுக்குத் துணையாக இருந்தனர்.

இவர்களுள் சிங்காரவேலர் மிக முக்கியமானவராக விளங்கினார். சென்னை மாநகராட்சியின் உரிமைக்குட்பட்ட இடத்தில் அமைத்திருக்கும் நீல் சிலை, இந்திய மக்களை அவமதிக்கும் சின்னமாகும் என்றும், அச்சிலை சென்னை மாநகரின் அமைதிக்குப் பாதகம் விளைவிக்கிறது என்றும் சிங்காரவேலர் கருதினார். இதன் காரணமாகச் சிங்காரவேலர் ஏனைய காங்கிரசு உறுப்பினர்களின் துணை கொண்டு, பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றி அதனை ஏற்கவேண்டுமென நகராட்சித் தலைவருக்கு 7-9-1927 ஒரு கடிதம் எழுதினார்.

“சென்னை, மலைச்சாலையில் மாநகராட்சியின் உரிமைக்குட்பட்ட நிலத்தில் அமைந்துள்ள நீல் சிலை அகற்றப்பட வேண்டும் என்றும், அச்சிலையை அரசு உடனே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இம்மன்றம் தீர்மானிக்கிறது.” இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நகராட்சித் தலைவர் மேற்குறித்த தீர்மானத்தை ஏற்க மறுத்துச் சிங்காரவேலருக்கு ஒரு குறிப்பை அனுப்பியிருந்தார். அக்குறிப்பில் கீழுள்ளவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

“தங்களது செப்டம்பர் 7ஆம் நாள் (1927) கடிதம் குறித்து நான் இப்பதிலை அளிக்கிறேன். நீல் சிலை தற்போது சென்னை அரசின் பொதுப்பணித் துறையினரின் பொறுப்பில் உள்ளது. சென்னை அரசின் செலவில்தான் நீல் சிலை பராமரிக்கப் படுகிறது. நீல் சிலை நிறுவப்பட்டுள்ள நிலத்தின் மீது மாநகராட்சிக்குள்ள உரிமை நீங்கிவிட்டது. நீல் சிலையும் சிலை அமைத்துள்ள நிலப்பகுதியும் சென்னை நகராட்சியின் உரிமையில் இல்லாததால், நீல் சிலையை அகற்றுவதற்கான அதிகாரம் சென்னை மாநகராட்சிக்கு இல்லை. இக்காரணங்களால் நீல் சிலையை அகற்றுவது பற்றிய தங்களது தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.”

தீர்மானம் மாநகராட்சியில் தோல்வியுற்றாலும் சிங்காரவேலரும் ஏனைய தேசியத் தலைவர்களும் சென்னையில் பல்வேறு இடங்களில் கண்டன கூட்டங்களை நடத்தியுள்ளனர். இக் கூட்டங்களின் வாயிலாக மக்களின் ஆதரவைப் பெற்றனர். நீல் சிலைக்கு எதிரான போராட்டம் மேலும் வலுத்தது. சென்னை மாவட்டக் காங்கிரஸ் கட்சியும், சென்னை மகாஜன சபையும் இணைந்து கூட்டங்களை நிகழ்த்தியுள்ளன. இதன் விளைவாக, சென்னை சட்டசபையில் எஸ். சத்தியமூர்த்தி அவர்கள் 29-9-1927 அன்று நீல் சிலை அகற்றுவதற்கான தீர்மானம் கொண்டு வருவதற்கு அனுமதியளிக்க வேண்டுமெனச் சட்டமன்ற செயலருக்குக் கடிதம் எழுதினார்.

இவரைப் போன்றே வேறு பலரும் கடிதம் எழுதினர். இதனால், தீர்மானம் கொண்டு வருவதற்குச் சட்டமன்றம் அனுமதி அளித்தது. அனுமதி வழங்கியதும் பலர் நீலின் கொடுமையை எடுத்துக் கூறிச் சிலையை அகற்ற வேண்டுமென்று வாதாடினர். இவர்களுள் எஸ். சத்தியமூர்த்தி, ஜான் வில்லியம் கேயி என்ற வரலாற்றாசிரியர் நீலைப் பற்றி எழுதிய குறிப்பைப் படித்துக் காட்டியது மிக முக்கியமான ஒன்றாகும். கான்பூரில் நடந்த கலகத்தை ஒடுக்குவதற்காகத் தளபதி நீல், தன்னுடைய துணைத்தளபதியான ரீனாடுக்குக் கட்டளையிட்டதைக் கேயி தம் நூலில் எழுதியிருப்பதைச் சத்தியமூர்த்தி படித்துக் காட்டினார். அக்குறிப்பைக் கீழே காணலாம்.

“குற்றத்திற்குரிய சில கிராமங்கள் அழிப்பதற்கு உள்ளன. அந்த ஊர்களில் வசிக்கும் மனிதர்கள் யாவரும் கொல்லப்பட வேண்டும். நமது நல்ல எண்ணத்தைப் பெறாத இந்தியப் படை வீரர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும். கிளர்ச்சியில் ஈடுபட்ட பதேபூர் நகரத்தைத் தாக்க வேண்டும். அந்நகரின் முக்கியப் பகுதிகள் அழிக்கப்பட வேண்டும். அந்நகரின் தலைவர்கள் யாவரும் தூக்கிலிடப்பட வேண்டும். அந்நகரின் உதவி ஆட்சியாளர் பிடிபட்டால் அவரைத் தூக்கிலிடுங்கள். பின் அவரது தலையை வெட்டிப் பதேபூர் நகரின் முக்கியக் கட்டடத்தில் தொங்கவிடுங்கள்.”

இக் குறிப்பிலிருந்து நீல் எத்துணைக் கொடுமையானவன் என்பதையும் இதனால் அவன் சிலையை அகற்றுவது எவ்வளவு இன்றியமையாதது என்பதையும் நன்கு உணரலாம். நீல் சிலையை அகற்ற போராடிய வீரர்களைச் சென்னை மாநில முதன்மைக் குற்றவியல் நீதிபதி முன் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் எதிர்வழக்காடப் போராட்ட வீரர்கள் விரும்பவில்லை. இந்நிலையில் சிங்காரவேலர் வாளாயிராமல் சிறை சென்றவர்கள் எதிர்வழக்காடாமல் இருப்பது, சட்டத்தின்படியும், நியாயத்தின் அடிப்படையிலும் தவறெனக் கருதித் தாமே முன்வந்து எந்த ஊதியத்தையும் எதிர்பாராமல் வழக்காடியுள்ளார்.

அவ்வாறு, வழக்காடிப் பலர் விடுதலை பெற அவர் உதவியுள்ளார். அக் காலத்தில் தேசிய இயக்கத்தில் வழக்குரைஞர் பட்டத்தைப் பெற்றவர்களும், அத் தொழிலைச் செய்தவர்களும் பற்பலர் இருந்தனர். அவர்கள் யாரும் வழக்காட விரும்பவில்லை. பலர் அஞ்சி ஒதுங்கினர். இந்நிலையில் சிங்காரவேலர் அஞ்சாது, எவ்வித ஊதியத்தையும் பெற விரும்பாமல், போராட்ட வீரர்கள் (வழக்குச் சுமத்தப்பட்டவர்கள்) தங்களுக்காக வழக்காட வேண்டுமென்று கேட்காத நிலையிலும் தாமே முன்வந்து வழக்காடி உள்ளாரெனில், அவரின் சமூக அக்கறையும், ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் விடுதலை வேட்கையும் எத்துணைச் சிறந்தன என்பதைத் தெளிவாக உணரலாம்.

சிங்காரவேலர் இதனைப் போன்றே பற்பல அரிய செயல் செய்து காட்டியுள்ளார். அவற்றையெல்லாம் நோக்கும்போது கீழுள்ள குறட்பா நினைவுக்கு வரும்.

பெருமை உடையவர் ஆற்றுவார்; ஆற்றின்
அருமை உடைய செயல் - 975

விடுதலைப் போராட்ட வீரர்களின் தொடர் போராட்டத்தால் 1937ஆம் ஆண்டு பதவியேற்ற இராஜாஜி அமைச்சரவை, நீல் சிலையை அகற்ற 13-11-1937 அன்று ஆணையிட்டது. பின்பு 22-11-1937 அன்று அச்சிலை அகற்றப்பட்டு எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

சான்றாதார நூல்கள்: 1). டாக்டர் வ. கந்தசாமி - நீல் சிலையும் இந்தியத் தேசிய இயக்கமும். பழனி பாரமவுண்ட் பதிப்பகம் - 1986. 2). சி.எஸ். சுப்பிரமணியம் - கே. முருகேசன் - தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் - 1991 - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை - 600 098. 3). ம.பொ. சிவஞானம் - விடுதலைப் போரில் தமிழகம் - 1982 - பூங்கொடி பதிப்பகம் - மயிலை - சென்னை - 600 004. 4). எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் - சுதந்திர சரித்திரம் - 1953 - ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், பவளக்காரத் தெரு, சென்னை - 600 001.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com