Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007

கட்டுரை

“எதிர்காலத்தின் சூரியன்”
கொரிய புரட்சியாளன் கிம் II சங் 95-வது பிறந்தநாள் நினைவுக் கட்டுரை
- தமிழ் உத்தம் சிங்

“இந்த நாட்டில் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யும் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு வரி கிடையாது.

நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவர்களது தகுதிக்கேற்ப வேலை.

நாட்டின் அத்தனை தொழிலாளர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் 8 மணிநேரம் மட்டுமே வேலை.

ஆனால், இரும்பு மற்றும் கனிம நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே வேலை. ஆனால் 8 மணி நேரத்துக்கான சம்பளம் தரப்படும். சாதாரணத் தொழிலாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் வருடத்தில் 14 நாட்கள் விடுமுறை. அதே போன்று கடின உழைப்பு செய்யும் தொழிலாளர்களுக்கு 21 நாட்கள். கட்டடத் தொழிலாளர்களுக்கு 28 நாட்கள், மீன் பிடி தொழில் செய்பவர்களுக்கு 30 நாட்கள் விடுப்பு.

உழைக்கும் பெண்களுக்குக் குழந்தை பெறும் காலங்களில் 77 நாட்கள் விடுமுறை. சாதாரண தொழிலாளர்களுக்கும் இன்சூரன்ஸ் (ஆயுள் காப்பீடு) உண்டு.

நகர்ப்புறத்தில் வாழும் தொழிலாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கிராமத்து விவசாயிகளுக்கும் வீடு, தண்ணீர், மின்சாரகட்டணம், எரிபொருள் செலவு, மருத்துவ வசதி ஆகியவற்றை இந்த அரசாங்கமே செலுத்தும். நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய உயர் கல்வியும், தொழில்நுட்பக் கல்வியும் படிக்க வேண்டும். அதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

மாணவர்களுக்கு வேண்டிய புத்தகம், நோட்டு, ஸ்கூல் யூனிஃபார்ம் மற்றும் பனி, மழைக்காலங்களில் ஓவர் கோட்டும் (over coat) இந்த அரசாங்கமே வழங்கும். நாட்டின் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை இந்த அரசே கட்டுப்படியான விலைக்குக் கொள்முதல் செய்து கொள்ளும், குறைந்த விலைக்கு அரிசியை அரசாங்கம் மக்களுக்கு வழங்கும்.

இதெல்லாம் என்னது? இந்தியாவின் வருங்கால ஐந்தாண்டு திட்டமா...!? என்று நீங்கள் கேட்கலாம். இல்லை.... இல்லை.... உலக வரைபடத்தில் சீனாவுக்குக் கிழக்கில் இருக்கும் ஜப்பான் கடலுக்கும், மஞ்சள் கடலுக்கும் நடுவில் மிதந்து கொண்டிருக்கும் நாடு வடகொரியா. அந்த நாட்டில் “ஜனநாயக மக்கள் குடியரசு” ஆட்சிக்கு வந்ததும் மள... மள... வென செய்த மாறுதல்கள்தான் இவை.

இதெல்லாம் எப்படி அவர்களால் செய்ய முடிந்தது என்றால் அந்த நாட்டிற்கு ஒரு சக்தி வாய்ந்த தலைவன் கிடைத்தான். அதனால்தான், உலகிலேயே வரியே இல்லாத முதல் நாடு என்ற பெருமையை வடகொரியா தேசம் பெற்றது.

இனி, யார் அந்தத் தலைவன் என்று பார்க்கலாம் ஒன்றுபட்ட கொரியாவின் டாடோங் நதிக்கரையில் அமைந்திருந்த மாங் யாங் டே என்ற கிராமத்தில் வசித்து வந்த கிம்-யாங்-சங் என்ற தேசபக்தி மிக்க வாத்தியார். தன் மாணவர்களுக்கு வெறும் படிப்பறிவை மட்டும் புகட்டாமல் கூடவே அவர்களுக்கு உடற்பயிற்சி கலையையும் கற்றுக் கொடுத்து வந்தார்.

காரணம், ஒன்றுபட்ட கொரியாவின் சுதந்திரத்தைப் பலம் வாய்ந்த ஜப்பானின் ஏகாதிபத்தியத்திடம் “தானம் செய்யுங்கள்” என்று கெஞ்சிக் கேட்க முடியாது. அதைத் தட்டித்தான் பறிக்க வேண்டும். அதற்கு ஆயுதம்தான் ஏந்த வேண்டும் என்று யோசித்த.... கிம்-யாங்-சங் தன்னிடம் படித்த மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கற்றுக் கொடுத்தார்.

ஜப்பானின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டும் என்று தனது மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர் இவரே. “கொரிய தேசிய அமைப்பு” என்று ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார். கிம்-யாங்-சங் துவங்கிய கொரிய தேசிய அமைப்பு தனது ஸ்தாபன அறிக்கையில் “கொரியாவின் விடுதலைக்கு வெளிநாட்டு சக்திகளின் உதவியின்றி உள்நாட்டு மக்கள் சக்தியை மட்டுமே திரட்டுவது” என்று அறிவித்தது.

கொரிய விடுதலைக்காக நாட்டின் பல பகுதிகளில் தன்னுடைய கொரிய தேசிய அமைப்பினை இரகசியமாகக் கட்டியமைத்து வந்தார். இதைக்கண்ட ஜப்பான் ஏகாதி பத்தியத்திற்குக் கண்கள் உறுத்த..... கிம்-யாங்-சங்கை ஜப்பானிய அரசு சிறையில் அடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்த கொஞ்ச காலத்தில் அந்தத் தேசபக்த வாத்தியார் இறந்து போனார். அவர் இறந்து போனாரே தவிர அவர் ஊன்றி வைத்துவிட்டுப் போன தேசபக்தி விதை முளைவிட்டு மண்ணை முட்டி மேலெழுந்தது. ஆம், அது கிம்-யாங்-சங்கின் மூத்தமகனான கிம் II சங் வடிவத்தில் எழுந்தது.

கிம் II சங் என்றால் கொரிய மொழியில் “எதிர்காலத்தின் சூரியன்” என்று பெயர். 1912-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி பிறந்த கிம் II சங். வட-கிழக்கு சைனாவின் (மஞ்சூரியா) ஹிவாடின் நகரப் பள்ளியில் படித்தார். இயல்பாகவே, மார்க்சிய-லெனினியத்தில் இருந்த பற்றினால் முதன் முதலாக 1926-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி “ஏகாதிபத்திய ஒழிப்புச் சங்கம்” என்னும் புரட்சிகர கம்யூனிச அமைப்பை கிம் II சங் கொரிய மண்ணில் உருவாக்கினார்.

இதற்காக, சைனாவின் வட-கிழக்கு மாகாணத்தில் இருந்த கிரின் நகரத்தில் யூவென் (Yowen) பள்ளியில் படித்த கொரிய மாணவர்களை ஒன்று திரட்டினார். ஜப்பான் ஏகாதிபத்தியம் சைனாவின் வட-கிழக்குப் பகுதியில் இருந்த கிம் II சங் ஆதரவாளர்களை அடக்கி ஒடுக்கியது. அதே நேரத்தில், கிம் II சங்கைக் கைது செய்து கிரின் நகரச் சிறையில் அடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்த கிம் II சங் 1930 ஜூன் 30 ஆம் தேதி சைலூன் என்னுமிடத்தில் இளம் கம்யூனிஸ்டுகள் சங்கம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இளைஞர் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில்தான், ஜப்பான் ஏகாதிபத்தியத்திடமிருந்து கொரியா விடுதலை பெற ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த மாநாடு முடிந்து சரியாக ஒரு மாதத்துக்குள் அதாவது 1930 ஜூலை 30 ஆம் தேதி மஞ்சூரியா ஹியூசிவில் இளம் கம்யூனிஸ்ட் சங்கம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இளைஞர் சங்கம் ஆகிய அமைப்புகளின் பேராதரவோடு கொரியப் புரட்சிகரப் படையை நிறுவினார். நிறுவிய அதே வேகத்தோடு கொரியப் புரட்சிகரப்படை சுதந்திரப் போருக்குக் கொரிய மண்ணில் மிடுக்காகக் காலெடுத்து வைத்தது.

அவ்வளவுதான், இதைப் பார்த்த ஜப்பான் ஏகாதிபத்தியத்திற்கு மூக்கு வேர்த்துப் போனது. அதுவும் 1931 செப்டம்பர் மாதம் ஆயுதப் படையெடுப்பை மஞ்சூரியா மீது தொடுத்தது.

ஜப்பானின் அடுத்த இலக்கு கொரியாதான் என்று அறிந்த கிம் II சங், தனது தந்தை காட்டிய அதே வழியில் கொரிய விடுதலைக்கு யாருடைய உதவியின்றித் தன் சொந்த நாட்டுத் தொழிலாளர்களையும், விவசாயிகளையும், தேசபக்த மாணவர்களையும் இணைத்து மக்களின் பேராதரவோடு 1932 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி கொரியா மக்களின் புரட்சிகரப் படையை ஆரம்பித்தார்.

ஆயுதப் போராட்டத்தைப் பற்றி கிம் II சங் இப்படிச் சொன்னார். “எதிராளிகள் ஆயுதத்தோடு இருக்கிறார்கள், அதனால் ஆயுதத்தை நமது வாழ்க்கையாகக் கருதுகிறோம் என்று சொல்ல.... ஆமாம்.... ஆமாம்.... என்று தலையாட்டிய.... கொரியா மக்கள் கிம் II சங்கிற்குத் தோளோடு தோள் நின்றனர். மக்கள் கொடுத்த இந்தத் தைரியத்தில்..... ம்.... ஆகட்டும்.... என்று கொரியா மக்களின் புரட்சிகரப்படைக்குக் கட்டளையிட.... கொரியா நாட்டின் தென் எல்லையில் அமைந்திருந்த வாங்க்சிங்க், ட்யூமான் ஆறு, யென்சி, ஹாலுங், ஹன் சங் ஆகிய பகுதிகளை ஒரே மூச்சில் ஜப்பான் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுவித்தது கொரியா மக்களின் புரட்சிகரப்படை. இறுதியாக, 1939 மே மாதம் கொரியா மக்களின் புரட்சிகரப்படை ஆம் நாக் ஆற்றங்கரையிலிருந்த மியூசான் பகுதியைக் கைப்பற்றிக் கடந்து கொண்டிருந்த சமயத்தில், இரண்டாம் உலகப்போர்.... டமார்....ர்.... என்று வெடித்தது. ஜப்பானுக்கு அது தலைவலியாகிப் போனது. ஏனென்றால், ஏற்கனவே, சைனாவிற்குச் சொந்தமான மஞ்சூரியாவைக் கைப்பற்றியதால், ஒரு பக்கம், சைனாவுடனும், மறுபக்கம் சோவியத் ரஷ்யாவின் ஆதரவு பெற்ற கிம் II சங்கின் படைகளுடனும் மோத நேர்ந்தது.

ஜப்பானின் நிலை இரண்டு பக்கமும் அடிவாங்குகிற மத்தளம் போல் ஆனதால் ஜப்பான், கொரியாவிற்கு எதிரான போரில் மூச்சுதிணறிப் போய் நின்றது. சுதந்திரக் காற்று கொரியா மீது வீச.... கிம் II சங்கின் கொரியா மக்கள் புரட்சிகரப் படையின் வீரம் செறிந்த கொரில்லா ஆயுதப் போராட்டத்தினால் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொரியா நாடு சுதந்திரம் பெற்றது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த கையோடு ஒன்றுபட்ட கொரியா தேசம் இராணுவ அடிப்படையில் வட கொரியா என்றும், தென் கொரியா என்றும் பிரிந்தது. வட கொரியாவில் கிம் II சங் சோவியத் ரஷ்யாவின் துணையோடு ஆட்சிப் பீடத்தில் கம்பீரமாக உட்கார்ந்தார்.

வடகொரியாவில் ரஷ்யாவின் உதவியுடன் ஒரு கம்யூனிச அரசு அமைந்ததை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. திருட்டுத்தனமாக அமெரிக்கா ஆயுதங்களைக் கொடுத்து தென் கொரியாவிற்கு ஆதரவளித்தது. மழை விட்டாலும் தூறல் விடாத கதையாய் வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் எல்லைப் பிரச்சினை மூண்டது.

சீனாவும், ரஷ்யாவும் வடகொரியாவிற்கு ஆதரவாகக் களத்தில் இறங்க.... அமெரிக்கா தென் கொரியாவிற்காக மார்தட்டிக் கொண்டு போரில் குதிக்க.... பதிலுக்கு அமெரிக்காவும், தென் கொரியாவிற்காக மார்தட்டிக் கொண்டு களத்தில் குதிக்க.... 1950 ஜூன் 25 ஆம் தேதி கொரியா மண் மீண்டும் சிவந்தது.

அதன் தொடர்ச்சியாய்.... செப்டம்பர் 15 ஆம் தேதி தென்கொரியாவின் தலைநகரான சியோலை கிம் II சங் படைகள் கைப்பற்றிக் கொண்டது. தென் கொரியாவைக் காப்பாற்ற 2 லட்சம் அமெரிக்க வீரர்களைக் கொண்ட, இரண்டாம் உலகப் போரில் புகழ் பெற்ற அமெரிக்கத் தளபதி மாக்-ஆர்தர் தலைமையில் வந்த ஐ.நா. படைகள், தென் கொரியாத் தலை நகரை மீட்டது.

மாக் ஆர்தர் படை அக்டோபர் 19 ஆம் தேதி வடகொரியா தலைநகரான பியாங்கியாங்கைக் கைப்பற்றி விட்டுச் சீனாவின் எல்லைக்குள் நுழைய.... இனி ஒரு அடி எடுத்து வைத்தாலும் “சீனாவின் தொண்டர் படை” களத்தில் இறங்கும் என்று சீனா எச்சரித்தது. ஆனால் மாக் ஆர்தர் இதைச் சட்டை செய்யவில்லை. சீனா எல்லைக்குள் மாக் ஆர்தர் படைகள் அடி எடுத்து வைக்க.... அதனைச் சீனா தொண்டர் படை விரட்டி அடித்தது. இதில் அமெரிக்கா தன்னுடைய ஒரு லட்சம் வீரர்களை இழந்து விட்டு வெறுங்கையோடு வீடு திரும்பியது. 36 வருடங்களாக ஜப்பான் ஏகாதிபத்தியத்திடமிருந்த கொரியாவை விடுவித்துவிட்டு, 3 வருடம் உள்நாட்டுப் போரையும் சமாளித்துவிட்டு “உஷ்..... அப்பாடா.....” என்று வந்து உட்கார்ந்த வடகொரியா மக்கள் தலைவன் கிம் II சங்கிற்கு ஒரு விஷயம் வியப்பாக இருந்தது. அதுதான், நார்.... நாராகக் கிழிந்து கிடந்த நாட்டின் பொருளாதார நிலை.

கிம் II சங் அதற்காகப் பெரிய அளவிற்கு அலட்டிக் கொள்ளவில்லை. நாட்டில் பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வர ஒரு பார்முலாவை கையில் வைத்திருந்தார். அதுதான், “தன்னிறைவுக் கொள்கை (Juche). இந்தக் கொள்கையின்படி நாட்டின் கலாசாரம், கருத்தியல், தொழில்நுட்பம் இவைகளில் கொண்டு வரப்போகும் மாற்றங்களுக்காக எந்த நாட்டிடமும் கையேந்தி நிற்பதில்லை. நமது தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வது என்பதுதான் இதன் பிரதான நோக்கம்.

கீழ்த்திசை நாடெல்லாம் காலனி நாடாக இருந்து விடுதலை பெற்றுப் பொருளாதார மாற்றம் அடைய கால், அரை நூற்றாண்டு எடுத்துக் கொண்டபோது வடகொரியாவில் கிம் II சங்கின் தன்னிறைவுக் (Juche) கொள்கையினால் சரியாக, பதினான்கே ஆண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதார நிலை உயர்ந்து நின்றது. குறிப்பாக, சுதந்திரத்திற்கு முன் நாட்டில் வெறும் 29 மருத்துவமனைகள்தான் இருந்தன. ஆனால், தன்னிறைவு கொள்கை அமுலுக்கு வந்த பிறகு வடகொரியாவில் 6,325 மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன.

தனிநபர் விவசாயம் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. நாட்டின் 90ரூ நிலங்கள் கூட்டுறவு முறையிலே பயிர் செய்யப்பட்டது. மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் அரசாங்கமே செய்து கொடுத்தது. வடகொரியாவின் பாராளுமன்றமான சுப்ரீம் பீப்பிள் அசெம்பளி (Supreme people assembly) 1960-லிருந்து 70 வரை கொண்டு வந்த அதிரடியான சட்டங்கள் கிம் II சங்கின் பொருளாதாரத் திட்டங்களைக் கறாராக அமுல்படுத்தின.

கிம் II சங்தான் நாட்டின் ஒரே கட்சியான “தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளர், 10 லட்சம் படை வீரர்களைக் கொண்ட இராணுவத்தின் தலைமைத் தளபதி, நாட்டின் அதிபர், மூன்று பதவிகளையும் கையில் வைத்துக் கொண்டு திறமையுடன் நாட்டை வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றார். வடகொரியாவில் ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. “ஒன்றுதான் அனைவருக்கும், அனைவருக்கும் ஒன்றுதான்” (one for all, all for one) என்று கடைபிடிக்கப்பட்ட கொள்கைதான் நாட்டின் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றியது.

வட-கொரியா மக்களை எந்த அளவிற்கு கிம் II சங் நேசித்தார் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். 1936-ஆம் ஆண்டு புது வருடத்தில் வடக்கு மஞ்சூரியாவில் “குவாண்டியமு எமுகாண்டி” என்ற கிராமத்தில் கிம் II சங் தான் புரட்சிகர படையுடன் முகாமிட்டிருந்தார். அந்தக் கிராம மக்கள் ஜப்பானியப் படையை வீழ்த்த வந்திருக்கும் தலைவன் கிம் II சங்கோடு புது வருடத்தை மாமிசம், ஒயின் என்று அமர்க்களமாய் கொண்டாட நினைத்தனர். ஆனால், அந்தக் கிராம மக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவது கிம் II சங்கிற்குத் தெரிய வந்தது. இதனால், தனது படைவீரர்களை மக்களோடு புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவேண்டாம். நாமெல்லாம் படையின் இலக்கை நோக்கிக் கிளம்பலாம் என்று கட்டளை பிறப்பித்தார். படைவீரர்கள் கிம் II சங்கைச் சூழ்ந்து கொண்டு ஏன் இப்படி யோசிக்கிறீர்கள் என்று கேட்கையில் கிம் II சங் சொன்னார். “புத்தாண்டை நம்மோடு கொண்டாட மாமிசம், ஒயின், இவற்றை வாங்குவதற்கு மக்கள் அல்லல்படுகிறார்கள். ஏற்கெனவே, ஜப்பான் ஏகாதிபத்தியம் மக்களை வறுமையில் வாட வைத்திருக்கிறது. அவர்களுக்கு நாம் மேலும் சுமையாக இருக்கக் கூடாது.”

நாம் எப்போதும்போல தினை (millet)க் கஞ்சியைக் குடித்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்கலாம் என்றார். அதனால்தான், வடகொரியா மக்கள் கிம் II சங்கைத் தேசத் தலைவன் என்று அழைத்தனர்.

தொடர்ந்து 45 வருடம் வடகொரியாவின் ஆட்சியிலிருந்து மக்கள் எது கேட்டாலும் செய்து கொடுத்த கிம் II சங்கை மரணம் கேட்டது. அவரால் தட்ட முடியவில்லை. 1994-ஜூன் மாதம் தன்னை மரணத்திடம் ஒப்படைத்து விட்டு இறந்து போனார். ஒரு தேசத்தின் விடுதலைக்காகத் தந்தையும் மகனும் சேர்ந்தே போராடினார்கள் என்பது கொரியா நாட்டில் வியத்தகு உண்மை.

ஆதாரம்: Korea, Leader and People முன்னேற்றப் பதிப்பகம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com