Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007

கீரனூர் ஜாகிர் ராஜாவின் மீன்காரத்தெரு நாவலை முன்வைத்து

கெண்டை மீன் குஞ்சும் குர் ஆன் தேவதையும்
ஹெச்.ஜி.ரசூல்

1) ஒரு கதைப்பிரதி வாழும் யதார்த்தத்தை மறுஉருவாக்கம் செய்யும் விவாதத்தில் பிரதிபலித்தல் (Reflection) பிரதிநிதித்துவப்படுத்துதல் (Representation) அம்சங்கள் வினைபுரிகின்றன. கதை சொல்லல்கள் முதலாளி X தொழிலாளி, நிலப்பிரபு X விவசாயி பொருளியல் முரண் சார்ந்த வர்க்க யதார்த்தத்தை முக்கியமாக பிரதிபலித்தன. இஸ்லாமிய கதையாடல்களும், இவ்வகையானதொரு யதார்த்தத்தைச் சொல்ல முயன்றன. குடும்பம், உறவுகள், ஆண், இஸ்லாமிய கதையாடல்களும், இவ்வகையானதொரு யதார்த்தத்தைச் சொல்ல முயன்றன. குடும்பம், உறவுகள், ஆண், பெண் கலாச்சார வாழ்வின் நம்பிக்கை, புனைவு, சடங்கியல்கள், பாவனைகள், வட்டார உரையாடல்கள் கலந்ததொரு கலாச்சார பதிவுகளும் இதில் உள்ளடங்கும். நேர்க்கோட்டு எழுத்துமுறை இதன் வடிவ உத்தியாகவும் இருந்தது. துவக்கம், நடு, முடிவு வகையினங்களாக இந்த வகை எழுத்து முறை உருவாகியிருந்தது. நேரடி விவரணை முறை இடம், சூழல், கதாபாத்திரங்கள் சித்தரிப்பு ஊடாகவும் வெளிப்பட்டன.

பின் நவீனச் சிந்தனைமுறை இன்றைய எழுதுதல், விமர்சித்தல் தளங்களில் மாறுபட்ட வகையான அணுகுமுறைகளைச் சொல்லிச் செல்கின்றன. நாம் இதுநாளும் யதார்த்தம், உண்மை என நம்பிக்கை கொண்டிருந்தவைகளெல்லாம் யதார்த்த மற்றும், உண்மையற்றும் இருப்பதை பிரகடனப்படுத்தின. இந்த வித சொல்லாடல்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அதிகாரம். அரசியல் அனைத்துமே விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவையாக ஒன்றாக மாறின.

நவீனத்துவ உலகம் உருவாக்கி வைத்துள்ள தேசியம். ஜனநாயகம், யதார்த்தம் உட்பட்ட சிந்தனைகள் அனைத்தும் கட்டமைக்கப் பட்டவைகளாகவே உள்ளன. இந்தக் கட்டமைப்பைக் கட்டுடைத்துப் பார்த்தல் அதற்குள் மறைக்கப்பட்ட அதிகார வன்முறையைக் கண்டுகொள்ளலாம் என ஒருவகை கருத்தியலை இச்சிந்தனைகள் பேசின. கட்டமைத்தலுக்கு மாற்றாகக் கட்டவிழ்த்தல். மையத்திற்கு மாற்றாக விளிம்பு, புனைவிற்கு மாற்றாகப் புனைவு நீக்கம் என இவை வெளிப்பட்டன.

‘முஸ்லிம்’ அடையாளத்திற்குள் சமய அடையாளம் ஒற்றைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவே தமிழ் முஸ்லிம். உருது முஸ்லிம். மலையாள முஸ்லிமென பன்னூறு மொழி அடையாளமிணைந்த சொல்லாகவும் உருவாகிறது. இதுபோன்றே ‘அரபு’ ஒரு மொழி அடையாளமாக உள்ளது. முஸ்லிம், யூதர், கிறிஸ்தவர் எனப் பல சமய அடையாளத்தினரும் ஒரே அரபையே பேசுகின்றனர். ஆனால் சமய, பண்பாட்டு அடிப்படையில் அரபு வேறுபடுத்தப்படுகிறது. ‘அரபுநாடு’ தேச அடையாளத்தை முன்னிறுத்தினாலும் அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத குர்து மலையக மக்கள் பெர்பெர்கள் தேசிய இனங்களும் தனித்த அடையாளங்களாகவே பேணப்படுகின்றன.

தமிழகத்தின் வரையறை எல்லைக்குள் தமிழ் முஸ்லிம்கள் மைய நீரோட்டத்தில் மரைக்காயர்கள். ராவுத்தர்கள், லெப்பைகள் எனவும் உருது முஸ்லிம்களில் சையதுகள் ஷேக்குகள், முகல்ஸ், பதான்ஸ் எனவும் வட இந்தியச் சூழலில் அஷ்ரப், அல்ஜப், அர்சால் எனவும் பன்மை அடையாளங்களோடு உள்ளனர். தமிழ்ச்சூழல் வாழ்வின் பரப்பிற்குள் முஸ்லிம் மைய நீரோட்டத்தில் இணைய முடியாத விளிம்பு நிலை முஸ்லிம்களும் உள்ளனர். ஓசாக்கள் என்னும் நாவிதர், வண்ணார், குளம் குட்டைகளில் மீன்பிடிப்போர், பீடி சுற்றுபவர்கள், தோல் தொழில், துப்புரவு தொழில் செய்வோர், விவசாயத் தொழில், நெசவு, கைதோலை, பாய் முடைதல், கபறு குழி தோண்டுதல், கசாப்புக்கடை வியாபாரம், இரும்புப் பட்டறைத் தொழிலாளர், நிரந்தர குடியிருப்பின்றி அலைந்து திரியும் நாடோடிகள், தர்கா முற்றங்களில் வாழும் முஸாபர்கள் எனப் பல வகையான அடையாளங்களோடு விளிம்பு நிலையில் வாழ்பவர்களாக உள்ளனர். இத்தகையதான மக்கள் சார்ந்து ஒருவகை பிரதிநிதித்துவபடுத்தல் வாழ்வை கதைப்பிரதிக்குள் பிரதிபலித்த வகையில் ஜாகிர்ராஜாவின் மீன்காரத்தெரு நாவல் முக்கியத்துவம் பெறுகிறது.

2) முஸ்லிம்களின் வாழுமிடம் தெருக்கள் சார்ந்த இரு வேறுபட்ட குடியிருப்புகளாக உருவம் பெறுகின்றன. இந்த நுண்ணிய புள்ளியிலிருந்து கிளர்ந்தெழும் வாழ்வுலகம் சிக்கல் நிறைந்ததாகவும் ஒன்றை மற்றொன்று விலக்கி வைப்பதாகவும், உயர்ந்தது X தாழ்ந்தது மனோபாவங்களாகவும், மையங்கள் ஒடுக்குமுறை செய்யும் விளிம்புகளாகவும் காட்சி தருகின்றன. இந்த வகையில் சித்தரிக்கப்படும் பங்களாகாரத் தெரு X மீன்காரத்தெரு எதிர்வுகள் ஜாகிர்ராஜாவின் நாவலின் முக்கியச் சரடாக நெளிந்து படர்ந்துகிடக்கிறது. இத்தெருக்களில் வாழும் கதாபாத்திரங்களும் முரண்பட்ட வாழ்வியல் சூழலிலிருந்து வெளிப்படுகிறார்கள்.

தமிழ் வெகுஜன சிறுகதைப் பரப்பில் படைக்கப்பட்ட பெரும்பான்மை முஸ்லிம் கதைமாந்தர்கள், தொழுகை. நோன்பு, ஹஜ்புனிதச் சடங்குகள் பேணும் ஒழுக்க மாண்பு உடையவர்களாகவும், அப்படி இல்லாதவர்கள் கூட திருக்குர்ஆன். ஹதீஸ் நெறிமுறைகளைப் பேணுபவர்களாக இறுதிநிலையில் மாற்றம் பெறுபவர்களாகவுமே படைக்கப்பட்டிருக்கிறார்கள். திருக்குர்ஆன் வசனத்திற்கும் நபிமொழிக்கும் ஏற்றவாறு அக்கருத்தை பிரச்சாரம் செய்யும் உத்தியும் முனைப்புடன் இருக்கும்.

ஜாகிர் ராஜாவின் படைப்பில் இத்தகைய கற்பனா கதைமாந்தர்களைத் தேடினாலும் கிடைக்கப்போவதில்லை. அடித்தள வாழ்வின் சகலவிதமான வலிகளோடும், பிறழ்வோடும், மீறல்களோடும் மீன்காரத்தெருவின் கதை உருவங்கள் அங்குமிங்கும் அலைதலுறுகின்றன. நேரடி விசாரணை மொழி வட்டாரத்தன்மையோடு நாவலை வழிநடத்திச் செல்கிறது. அதே சமயம் குறிப்பான, மிக ஆழ்ந்த ரகசியங்களைப் புதைத்து வைத்துள்ள வார்த்தைகளாகவும் அவை தோற்றம் பெற்றுள்ளன. முற்றுப்பெறாத சம்பவங்களில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் வாசகனிடத்தில் புதிர்களை அவிழ்ப்பதற்கான எத்தனத்தைச் செய்ய முனைகின்றன.

தமிழ் முஸ்லிம் சமுதாய வரைபடத்தின் பல்வேறு அடுக்குகள் ஜாகிர்ராஜாவின் நாவலில் கலைத்துப் போடப்படுகின்றன. ராவுத்தர், லெப்பை, மீங்காரர் என உருவாகியுள்ள படிநிலைகள் சமுதாய இறுக்கத்தைப் பரிந்துரை செய்பவைகளாக உள்ளன. பங்களாதெரு முதலாளி மார்களில் வீடுகளில் வேலை செய்யும் மீன்காரத் தெரு முஸ்லிம் பெண்களின் உலகம் அதிர்ச்சிகரமாக விரித்துப் போடப்படுகிறது.

பங்களா தெரு முதலாளிமார்களுக்கும் பெண்டுகளைச் சேர்த்துக் கொடுக்கும் ரமீஜா மீன்காரத் தெருவின் ஒரு விதிவிலக்கு. முதலாளியம்மா திருமேனிக்கு ரமீஜா முக்கிய உடனாளாக இருக்கிறாள். பெரியவரின் வீட்டுக்காரியாகத் தொடங்கி அவரின் அந்தரங்கத்திற்குள் நுழைந்த ரமீஜாவுக்கும் பெரியவர் நிக்காஹ் நடத்தி கொடுக்கிறார்.

இரண்டே வருடத்தில் புருஷன் இவளை விட்டு ஓடிப்போக திரும்பவும் பங்களாதெருவின் விசுவாசியாகத் தன்னை மாற்றிக்கொண்ட துயரக்கதை ரமீஜாவினுடையது.

அம்பன்வண்டியில் முதலாளியம்மா திருமேனியுடன் மீன்கார தெருவுக்கு வந்து வீட்டு வேலைக்குச் சுபைதாவின் மகள் ஆமீனாவை அழைத்துவிட்டுச் சென்றதிலும் ரமீஜாவுக்கு முக்கிய பங்குண்டு. ஓதிப்படிச்ச புள்ளையான ஆமினா ஜில்லா கலக்டெராகவா ஆயிருச்சு. அதுவும் கூடைய தூக்கிகிட்டு மீனுமீனுன்னு கூப்பாடுதானே போடுது என ஒலிக்கும் பெண்ணின் குரல் அடித்தள முஸ்லிம் பெண்களின் வாழ்வியல் பதிவிற்கான குறியீடாகிறது.

3. கேரள மலபாரில் மண்டிகள் நடத்தி வணிகம் செய்யும் பெரியவரின் குடும்ப வீட்டு வேலைக்கு வந்த ஆமினாவை முற்றிலுமாக ஆக்கிரமித்தவன் சலீம். பள்ளிக்கூட வகுப்பறைகளின் பால்யகால அனுபவ பதிவுகளின் தொடர்ச்சியாகவே இந்தச் சந்திப்பு நிகழ்கிறது. அவனுடைய வெள்ளத்தோலோடு எங்கறுப்பு நெறம் ஒட்டவே ஒட்டாதென்ற ஆமினாவின் நினைப்பு இச்சூழலில் தகர்ந்து போகிறது. சலீம் தரும் முத்தங்கள், சுவர்களோ, நீண்ட மரக்கதவுகளிலோ நிகழ்த்தும் தழுவல்கள், எதுவும் புரியாத மங்கலான நிலைக்கு ஆமினா தள்ளப்படுகிறாள். வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவித் தர, அவன் வாய் ரத்தச் சிவப்பாகி விட அவன் உமிழ்ந்ததை தன் வாயில் கொட்டியிருக்கலாமென்ற கிளர்ச்சியான நெனப்பு பால்ய வயதின் தடுமாற்றங்களாகவும் தோற்றம் கொள்கின்றன. இருட்டில் ஒளிவீசும் ரத்தினமணி பதித்த மெக்காவில் வாங்கின தஸ்மீகு மணிமாலை ஆமினாவை மயக்க உதவுகிறது.

தாளிடப்பட்ட அறையில் மாயவெளிச்சம் பரவ சலீமின் பாலியல் வேட்டை நிலமாய் ஆமினாவின் உடல் மாறுகிறது.

ஆமினாவின் ஒருவகை மனஓட்டம் மீன்காரப் பெண் பங்களாகாரத்தெரு பணக்கார இளைஞனின் மீது கொள்ளும் காதல் வயப்பாடாகவே சொல்லிச் செல்கிறது. வலிந்து தேடிச் செல்பவளாக, முதலாளிமார்களின் ஏமாற்றுக்கதைகளை அறிந்தபின்னரும் கூட அதை ஒப்புதலாக ஏற்றுக்கொள்ளும் மனமே ஆமினாவிடத்தில் உருவாகியுள்ளது. சவீமின் மோகமூட்டலுக்கும், ஆட்படுதலுக்கும் ஆளாகிப்போன ஆமினா ஏமாற்றப்பட்டு சிதைக்கப்படுகிறாள்.

சின்ன மொதலாளி சலீமிற்கு குடும்பம் கள்ளிக்கோட்டையில் இருக்கிறதென்ற தகவலும், சலீமின் பாலியல் அத்துமீறலால் உருவான கர்ப்பத்தைத் தோட்டத்துக்கு கூட்டிக்கிட்டு போய் அன்பம்மா மூலம் கலச்சதும் அதுதாங்கலச்சு எறிஞ்சாச்சுல்லா போயி கல்யாணத்த செஞ்சுட்டு குடும்பத்த நடத்துடி என்று வீரப்பாய் பேசிய ரமீஜாவின் குரலும் கூடவே ஒலிக்கிறது.

மற்றொரு வகையான கோபம் நிறைந்த ஆமினாவின் மனஓட்டம் சலீமின் பாலியல் ஏமாற்றுச் செயலுக்கான எதிர்வினையாக மாறுகிறது. மீன்காரின்னா அவ்வளவு இளக்காரமா.... ஒரே பாய்ச்சலில் உன் குறியை கடிச்சு துப்புவேன். செவுத்துல தொங்குன அருவாமனையால ஒரே சீவா சீவிடுவேன் ஆமினாவின் கோபத்தெறிப்பான வார்த்தைகளெல்லாம் வெகுசீக்கிரத்திலேயே ஈரமற்றுப் போகின்றன.

ஏழைக் குமரர்களுக்குப் பெரியவரால் நடத்தப்படும் இலவச திருமணங்களுக்கான காரணம் வாசகனை அதிரச் செய்கிறது. தமிழகத்தின் முக்கிய ஊர்களிலும் யதார்த்தத்தில் நடத்தப்படும் இலவச நிக்காஹ்களின் பின்னால் மூடி மறைக்கப்பட்ட பயங்கரங்கள் இதன்வழி திறக்கப்படுகிறது. பங்களா தெரு வீடுகளில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட மீன்காரத்தெரு பெண்களில் சிலரைத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் கருகமணியுடன் ஐந்து பவுன் நகை சீர் கொடுத்து பிரியாணி விருந்தோடு நடத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகிற திருமணங்களாக இவை அமைந்துவிடுகின்றன. இப்படியான இலவச திருமணத்திற்காகத் தேர்வு செய்யப்பட்ட பெண்களில் ஒருத்தியாக ஆமினாவும் ஆக்கப்படுகிறாள். எனினும் அவளது எதிர்ப்பால் இந்தத் திருமணம் தடுக்கப்படுகிறது.

4) பங்களாதெருவின் ஆதிக்கம் மீன்காரத்தெரு பெண்களின் மீதான ஒடுக்குமுறையாக நிகழ்வது மட்டுமல்ல அடித்தட்டு முஸ்லிம்களின் வாழ்வியல் இருப்புக்கும் ஆதாரத்திற்கும் எதிராகவும் செயல்படுகிறது. பங்களாகாரத் தெரு பூசணிக்கா லெவ்வ கெணத்துல மீங்காரத் தெருக்காரர்கள் நல்ல தண்ணீர் எடுக்க முடியாது. தீட்டு பட்டுவிடுமென்ற உயர்சாதி மனோபாவமே இதற்குக் காரணம். தண்ணீர் எடுக்கவிடாத அசன்ராவுத்தர் கெணத்தில நாயை அடிச்சுக் கொன்னு தூக்கிப்போட்டது மீன்காரத் தெரு நைனாவின் கலகச் செயலாகவே அமைகிறது. கிணற்றின் புனிதங்கள் இங்கு உடைபடத் துவங்குகின்றன.

மீன்காரச் சித்திரங்களில் மேலெழும்பி வரும் நைனாவை விளிம்புநிலை வாழ்வின் அடையாளமாகக் கருதலாம். முஸ்லிம் மீன்பிடிச் சமூகம் குறித்த ஞாபகங்கள் மொதமீன் கடிச்சா பெரிய மீங்காரன் ஆகும் நம்பிக்கை. வலையில்லாமல் குளத்தில் கையால் மீன்பிடித்த வாலிபம் எல்லாம் ஷேக்காவிற்குச் சொந்தமானது. பிறந்த குழந்தையின் காதுகளில் எலப்பை பாங்கு சொல்ல. நாக்கில் கொம்புத்தேன் தொட்டுத் தடவி, என்ன பெயரு வைக்க என்பதான இஸ்லாமிய குழந்தை பிறப்புச் சடங்கோடு துவங்கும் இந்நாவலின் பிரதான கதாபாத்திர உலகங்கள் ஆமினா நைனா என ஷேக்கா தலைமைப்பாத்திரம் வகிக்கும் கூட்டுக் குடும்ப அமைப்பின் முகங்களாகவே சிதறுண்டு கிடக்கின்றன.

தமிழ்ச் சமூக வாழ்வில் மனக்காயர்கள் கடல்வாணிபத் தோடும், மரக்கல ஓட்டுதலோடும் வகைப்படுத்தப்பட்டார்கள். அரபு பூர்வீகத்தோடு மரக்கலங்களில் வந்தவர்கள் சோழக் கடற்கரைப் பகுதிகளில் உறவுக் கலைப்பு நிகழ்த்திய வாரிசுகளின் அடையாளங்களாக அறியப்பட்டனர். கேரள சமூகத்தில் தங்கள் மலபாரிகள், மார்பிளை முஸ்லிம்களுக்கு அடுத்த அடுக்கில் இந்து சாதிகளிலிருந்து முஸ்லிமாக மாறியவர்கள் புஸலர்கள் (மரைக்காயர்கள்) என்றழைக்கப்படுகிறார்கள்.

சோழமண்டல கடற்கரைப் பகுதிகளில் ஒடங்களோடு தொடர்புடைய ஓடாளி, மரக்கல படகு தலைவர்கள் தண்டல், மீன்பிடித்தலுக்குப் பயன்படுத்தப்படும் வள்ளத்தை இயக்குபவர் சம்மாட்டி எனவும் குறிப்பிடப்படுகின்றனர். இப்பின்னணியில் தமிழ்ச்சூழலில் கவனத்திற்குக் கொண்டுவரப் படாத கடல் தொழில் செய்யாத மீனவ முஸ்லிம்களை மீன்காரத்தெரு அம்பலப்படுத்துகிறது. ஆறுகளில், குளங்களில் மீன்பிடித்து வியாபாரம் செய்து வாழ்வு நடத்தும் தலித் முஸ்லிம்களாக இவர்கள் உள்ளனர். பங்களாத்தெரு ராவுத்தர் மற்றும் எலப்பைகளால் பயன்படுத்தப்படும் ‘மீங்காரன்’ - ‘மீங்காரி’ என்ற சொல் வைதீகத்தன்மையோடு இழிவும் விஷமமும் நிறைந்தே பயன்படுத்தப்படுகிறது.

பால்யகால ஞாபகங்களில் ஒன்றாகப் பங்களாதெருகார சிராஜுதீன் ஆமினாவை மீங்காரின்னு சொல்லி அவமானப்படுத்த ஐயா பிரம்பெடுத்து அடிவிளாச பிரச்சனை உருவாகி கடைசியில் வேட சந்தூர்பக்கமாக மருதமுத்து ஐயாவை மாற்றல் கொடுத்து அனுப்பிட்டாங்க - பள்ளிக்கொடம் போனாலும் பறத்தெருவுக்குப் போனாலும் எல்லாடெத்திலேயும் நம்மள மீங்காரின்னுதான் கூப்புடுறாங்க என்பதான வரிகளுக்கிடையே தென்படும் ‘மீங்காரி’ சொல்லுக்குள் உறைந்திருக்கும் வன்முறை, பயங்கரங்களின் மௌனமாகக் கட்டியமைக்கப்பட்டுள்ளது. வலையை எடுத்து ஆறுகுளங்களில் மீன்பிடிக்கும் மீங்காரன்தான் கபறு குழிவெட்ட, பள்ளிவாசல் கூட்ட, மவுத்து செய்தி சொல்ல அடித்தட்டு வேலைகளைக் கலாச்சாரம் சார்ந்து செய்வதாகவும் உருவாகியுள்ளது.

நைனாவின் கலகமனம் சாராயப்போதையிலும், தன்னை நியாயமாக வெளிப்படுத்திக் கொள்கிறது. மண்டியெல்லாம் இழுத்து மூடி, பேரேட்டை வாசலில் வீசி பங்களா தெருவிலிருந்து இடம் பெயர்ந்து மீன்காரத் தெருவுக்குக் குடியேற்றம் செய்த ஹனீபா ராவுத்தரின் வீட்டுக்கு முன்பு அட்டகாசம் செய்கிறான் நைனா. சட்டிகரண்டியைத் தூக்கிகிட்டு சோறாக்கபோவதையும், பைத்துப்பாடி தொழில் நடத்துறதையும் செய்கிற லெப்பைமார்களைத் தங்களைவிட கீழாகப் பார்க்கும் ஹனீபா ராவுத்தர், லெப்பைகளுக்கு எம்புள்ளைகள கெட்டிக் கொடுத்து சட்டி சொறண்ட விடமாட்டேன் என்பதான இறுமாப்பையும் வெளிப்படுத்துகிறார்.

பங்காளாதெருவின் அநியாயங்களைத் தட்டிக்கேட்கும் நைனாவின் வாழ்வுச் சோகம் வேறுவிதமானது. அவனது குடும்ப உறவும், துண்டு துண்டாகிச் சிக்கலுக்குள்ளாகிறது. மனைவி மும்தாஜின் பாலியல் தேவைகளை புரிந்து கொள்ள முடியாதவனாக. அரசுப் போதையில் மிருகத்தன புணர்தலை மேற்கொள்பவனாக மட்டுமே காட்சியளிக்கிறான். நைனாவின் வரம்புமுறை மீறிய பாலியல் உறவு தோப்பில் வசிக்கும் வள்ளியுடன் நிகழ்கிறது. நைனா மூலம் வள்ளி சுமந்த கருவை ஏற்றுக் கொள்ள முன்வந்த மும்தாஜ் அடிஉதைகளோடு வாழ்ந்த தனது இரண்டுவருட வாழ்க்கையை வெகுசீக்கிரத்திலேயே முடிவுக்குக் கொண்டு வருகிறாள். நைனாவின் பிடியிலிருந்து விடுபட்டு மீசை முளைக்காத பயல் ஒருவனுக்கு மனைவியாகப் போய்விட்ட மும்தாஜின் தாம்பத்ய விடுதலை கணவனின் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு கலாச்சார நடவடிக்கை.

அடித்தள முஸ்லிம்களைக் கலாச்சார ரீதியாக ஒடுக்குமுறை செய்யும் வைதீக மனோபாவம் கொண்ட முஸ்லிம் குடும்பங்கள் கதைப்பிரதிக்குள் நடமாடும் அதேவேளையில் முஸ்லிம் அல்லாத பிற அடித்தள சாதி மக்களை அணுகும் நைனாவின் மனோபாவம் இன்னொருவித ஒடுக்குமுறையைச் செய்யும் மனமாக இரட்டை பிளவுத் தன்மையோடு வெளிப்படுகிறது. இதற்கான முக்கியப் பகுதிகளாக இந்நாவல் பரப்பெங்கும் வந்துபோகும் நாவிதர் துருத்தி. அவர் மகன் சண்முகம் சார்ந்த உரையாடல்களைச் சொல்லலாம்.

தெற்குத் தமிழகப் பகுதிகளிலும் இன்னொரு கீழ்நிலை அடுக்கு முஸ்லிம்களாக ஓசாக்கள் - இஸ்லாமிய நாவிதர்கள் உள்ளனர். இந்நாவலில் அடித்தள மீன்கார முஸ்லிம்களுக்கும் நாவிதர்களுக்குமான உறவு ஆங்காங்கே வந்துபோகின்றன. நாவலின் ஓரிடத்தில் அலங்கரித்து மஞ்சள் முகத்தடன் தண்ணீர் தூக்கிச் செல்லும் துருத்தியின் மகள் தெய்வானையைப் பார்த்து “அவளப்பாருல நாசுவத்தின்டு சொன்னா எவளும் நம்புவாளா” என விழும் வார்த்தைகள் நாசுவத்தி அழகற்றவளாகவே இருப்பதற்குத் தகுதி படைத்தவள் என்பதான சாதி மேலாதிக்க மனோநிலையாக வெளிப்படுகிறது.

நைனாவின் மனம் மேலாதிக்க வெறிபிடித்ததாகச் செயல்படுவதுபோல் தோற்றமளிக்கிறது. நாசுவத்தியா இவ.... பொட்ட எடுத்து புர்கா பொத்தினா பங்களாதெரு துளுக்கச்சி தோற்றுத்தான் போவா எனவரும் வரிகளில் நாசுவத்தி X துளுக்கச்சி எதிர்வின் மூலமாகவும் பறச்சிய வச்சிருந்தான். நாசுவத்திய கூட்டிகிட்டான் என்பார்களா என தனக்குள் கேட்கும் கேள்வியும் மீங்கார ஒடுக்கப்பட்ட சமூகம். இஸ்லாம் அல்லாத பிற ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது கொள்கிற வன்மமாகவும் வெளிப்படுகிறது.

அடித்தள முஸ்லிம்களின் வாழ்வியலை பதிவு செய்யும் மீன்காரதெரு நாவலில் அநேகமாக முதன்முதலில் பன்றிகளின் சித்திரங்களும் வந்துபோகின்றன. இஸ்லாத்தில் பன்றி ஹராமென சொல்லப்படுகிறது. பன்றிகளை இஸ்லாம் மறுப்பதற்கான அரபுச்சூழலின் மானுடவியல் காரணங்கள் மற்றும் அதன் பொருத்தமின்மைகளை உற்று நோக்குவது வேறுவகையான ஆய்வாகும்.

நாவிதர் சண்முகத்தோடு உட்கார்ந்து சாராயப்போதையை ஏற்றிக் கொண்டிருக்கும் நைனா மரபு வழி முஸ்லிம் மனோபாவத்துடனேயே குழிப்பட்டியான் பன்றி இறைச்சியை விலக்கி விடுகிறான். ரத்தப்பழி கேட்கும் மனத்தின் செயல்பாடாகச் சண்முகத்தோடு குறிவைத்து அடித்ததில் குட்டிப்பண்ணி சுருண்டு விழுந்து விடுகிறது. இரவு தூக்கத்தில் சக்கிலியத் தெருவின் பன்றிகள் நூற்றுக்கணக்கில் அவனை துரத்தி வருவதாக ஏற்பட்ட மனப்பிரம்மையால் அந்தத் தாய்ப் பண்ணியின் தலையில் குத்துக்கல்லை ஓங்கிப்போட்டு மரண ஓலம் கேட்க திரும்புகிறான். சக்கிலியத்தெரு மற்றும் பன்றிகள் பற்றிய நைனாவின் எதிர்மறைப் பார்வை பிறிதொரு இடத்தில் பெட்டிக்கடை பர்த்தாக்காவின் மரணம் பற்றிப் போதையில் கிடந்தவனை தட்டி எழுப்பி சொல்லும் வேளையில் அவன் கனவில் குறத்தியின் முலைகளை பிசைந்து கொண்டிருந்ததான் ஒரு குறிப்பும் வெளிப்படுகிறது.

ராவுத்தர், லெப்பை முஸ்லிம்களால் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மீன்காரத்தெருவின் கதாபாத்திரங்களின் முக்கிய குறியீடான நைனா தான் சாராத பிற ஒடுக்கப்பட்ட நாசுவர், பறையர், சக்கிலியர், குறவர் சமுதாயங்களை இழிவானதாகப் பார்க்கும் அணுகுமுறையும், பாலியல் அதிகாரச் செயல்பாட்டிற்கும் இப்பெண்களைப் பயன்படுத்தும் முறையும் இக்கதைப் பிரதிகளின் இரண்டாம் நிலை அர்த்த உருவாக்கத்தில் சிக்கல் நிறைந்ததாக வெளிப்பட்டுள்ளன.

5) நைனாவைப் போலொரு விளிம்பு நிலை கதாபாத்திரமாக நாவலில் இடம் பெறுகிற ஜகரியாவைப் பற்றியும் குறிப்பிடலாம். சண்முகநதிக்கரை பனைகளில் சிவசாமிச் சாணானின் கலயங்களிலிருந்து பனங்கள் குடிக்கும் ஜக்கரியா. அவனது உம்மா குப்பிக்காரி மெஹர், நைனாவைப் பார்த்து ஜகரிய்யா வேற நீவேறேன்னா பிரிச்சுப் பார்ப்பேன் நான் ஒம்மூத்திரத்தை குடிச்சு வெளயாட்டு காட்டி சோறு ஊட்டுனவடா என தெரிவிக்கும் வார்த்தைகளிலிருந்து நைனா, ஜக்கரியாவின் உறவின் இணக்கங்கள் புலப்படுகிறது. கல்யாணத்த பண்ணிவச்சபோதும் கேடு கெட்ட நாயி கட்டுனவளை கண்டுக்க மாட்டாமல் வெட்டேத்தியாய் அலைவதை குப்பிக்காரி மெஹரின் புலம்பல் சொல்லிக்காட்டுகிறது.

ஆத்துக்குத் தெக்குப் பக்கம் வசிக்கும் ஆராயியோடு பயந்த சுபாவம் கொண்ட ஜகரியாவிற்குத் தொடர்பு இருக்கிறது. பூவில் படுக்கச் சொன்னாலும், புதரில் கிடக்கச் சொன்னாலும் சரி என்பாள் என்பதாகவே ஆராயியின் நிலைபாடு காட்டப்படுகிறது. நைனாவிடம் உறவு வைத்துக் கொள்பவளான கருப்பியிடம் உறவு வைக்க ஜகரியா முற்படும் எத்தனங்கள் பிரயோசனமற்றுப் போய்விடுகிறது. நாய் நக்கி குடித்த ஒரு சட்டி ஆணத்திற்கு அதன் மேல்படுகிற ஆத்திரத்தோடான கருப்பியின் குரல் பங்களா தெருகாரன்ட்ட போனாலும் பல சாதிக்கிட்ட போகமாட்டேன்.

குடியானவனோடு போறதுக்கு இஸ்லாமானவனோடு போவேன் என்பதாகச் சாதிய உயர்வு X தாழ்வு மனோநிலை கட்டமைப்புக்கு ஒப்புதல் தருவதாகவே உள்ளது. இந்த அகநிலைக்காட்சிகள் சாதிய மேலாண்மையை நிறுவும் தன்மை கொண்டே இயங்குகின்றன.

6) வெளிச்சிமீன், முட்டுவிரால், ஜிலேப்பிகெண்டை, உலுவமீனு எனப் பரப்பப்பட்ட மீன்களின் கூட்டத்தினோடு விசித்திரமீனொன்றும் நீந்தி வருகிறது. ஏழாங்கடலில் தேடினாலும் கிடைக்காத மீனென அதிசய மீன் குறித்த லத்தீபு சாகிபுவின் வர்ணனை ஜகாரியாவிடம் நம்பிக்கையையும் பரபரப்பையும் கிளப்புகிறது. குட்டி மீன், தங்க மீனின் புனைவாக மாறியபோது சாதாரண மீங்காரமானது கொள்ளும் வியப்பு மாற்றம் நிகழாதவென்ற தவிப்பு சூழ்கிறது. தங்கமீனென தான் நம்பியதைக் கெண்ட குஞ்சென்று ஷேக்காத்தா சொன்னபிறகும் நம்பமறுத்து திருப்பூர் ஹஜ்ரத்தின் வாக்கிற்காக ஜகாரியா பயணப்படுகிறான். அவர் அந்தக் கெண்டை மீன்குஞ்சை குரான் தேவதையென வர்ணிக்கிறார். ஆர்லிக்ஸ் ஜாடியில் அடைபட்ட விசித்திரமாய் தோன்றிய அந்த மீன்குஞ்சு, மீனின் வயிற்றுக்குள் மாட்டி சூரா ஓதி வெளியேவந்த யூனுஸ் நபி பற்றிய புனைவுகளோடு பின்னப்பட்டிருக்கிறது.

இது விஷேசமிக்க மீன், சொர்க்க தடாகத்தில் நீந்திய ஜீவன், இதனை சாப்பிடக்கூடாது, சாப்பிட்டால் நரகம் தான், விலைகொடுத்துத் துனியாவில் இத வாங்க ஆளே இல்லை. இதைக் கொண்டுபோய் பள்ளில உள்ள ஹவுளு தண்ணீரில் விடு நீந்தட்டுமென்ற திருப்பூர் ஹஜ்ரத்தின் தீர்ப்பால் ஜகரியாவின் தங்கமீன் கனவு பொய்த்து போகிறது.

மாதுளம்பழம் பற்றிய இஸ்லாமிய தொன்மைப் புனைவொன்றும் நாவலில் இடம் பெறுகிறது. பங்களா தெரு இஸ்லாமியர்களின் வீடுகளில் வளர்க்கிற மாதுள மரங்களையும், குட்டையாகச் செவப்பு பூ பூத்திருக்கும் மாதுளம் பழங்களையும் பற்றியதாக இது அமைகிறது. சொர்க்கத்தில் கிடைக்கும் கனி வர்க்கம் நபிகள் நாயகத்துக்கு ரொம்பவும் பிடிச்ச பழமாதலால் வீடுகளில் அதை முஸ்லிம்கள் ஆசையாக வளர்ப்பதாக அத்தொன்மைப்புனைவு வரலாறு சார்ந்து வெளிப்படுகிறது. மீன்காரத் தெரு ஏழை முஸ்லிம் குழந்தைகளின் தின்னும் நாவாப்பழம். எலந்தபழம் இயல்பாக இதற்கான மாற்றாக அமைந்துவிடுகிறது.

மீன்காரத் தெருவில் வந்துபோகும் அடித்தள முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத கதாபாத்திரங்கள் அவ்வப்போது தோன்றி மறைகிறார்கள். பெட்டிக்கடை பாத்தக்கா இதற்கொரு முக்கிய சாட்சி. பங்களாதெருவின் வேலை முடித்த மீன்காரத்தெரு பெண்களை இறக்கிவிட்டு காலியாகத் திரும்பும் அம்பன் வண்டி. அப்போதெல்லாம் பாத்தாக்கா குதிரை வண்டியை முன்னால் விட்டு இருளில் மண் அள்ளி வீசி சாபமிடுவாள். விடிந்த பிறகும் திறக்காத பெட்டிக்கடையின் முகட்டின் வழியாக உள்ளே இறங்கி பூட்டிய கதவை திறந்து பார்த்தபோது மார்தெரிய பாத்தாக்கா அலங்கோலமாய் கிடந்தாள். பாத்தாக்காவின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதான கேள்வியை எழுப்பி பதில் பெறுமுன்பே அவளது உயிரற்ற சடலத்தை அம்பன் வண்டி எடுத்துச் செல்கிறது.

7) நாவிதர் துருத்தி அவரது மகன் சண்முகத்தின் பங்கேற்பு இந்நாவலில் அடித்தள மக்கள் சார்ந்த பன்மை அடையாளங்களின் தொகுப்பிற்கு ஆதாரமாகிறது. நாசுவன்ட்ட கிளி வளர்ந்தா வழுக்கையா போயிரும்லே. கூண்டுக்கிளியினை பேச்சுகூட எதிர்மறைச் சொல்லாடலாக உருவாகியுள்ளது. சண்முகம் கையில் அகப்படும் பகருதீனின் இளங்குறியைப் பிடித்து எப்ப உனக்கு மார்க்க கல்யாணமென கேட்கும் உரையாடலும், மழித்தலைகளைக் கணக்குப்போடும் துருத்தியும். அஞ்சாம் நம்பர் ஏறி அடிவாரத்துல போய் ஒக்காந்து செரைத்தல் குறித்தும் உரையாடல்கள் எழுகின்றன.

முடிவெட்டுவதும் தாடியை ஒழுங்கு செய்தலும் அக்குள் காட்டி முடி நீக்குதலும் அம்மணமாக நிற்கும் பெருமாள் கோயில் பூசாரியின் குறிக்கு மேல் காடென வளர்ந்திருந்த ரோமங்களை நெருடலில்லாமல் மழிக்கும் துருத்தியும் தமிழ்நாவலின் அறியப்படாத பக்கங்களில் தங்களது நிழல் ஓவியங்களை வரைகிறார்கள். துருத்தியின் மகன் சண்முகம் ஒரு தடவை சாராய போதையில் துர்க்கையம்மன் கோவில் பின்புறத்தில் பெருமாள் கோவில் பூசாரிக்குச் செரைக்க சென்றபோது பூசாரி அலறியெடுத்து ரத்தமும் கையுமாகக் குறியை மறைத்துக் கொண்டே பூசாரி வாய்க்காலில் குதித்தபோது தண்ணீரும் சிவப்பானது. அன்று ஊரைவிட்டு போன சண்முகம் திரும்பிவரவில்லை. அந்தச் சம்பவத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவேயில்லை.

மரணங்களும், காணாமல் போனவர்களும் இந்நாவலில் ரகசியத் தன்மையோடு முற்றுப்பெறாத நடுவெளியில் இவ்வாமாக தொலைந்து பான கதை மாந்தர்களாக மாறிப்போகிறார்கள். சம்பவங்கள் புதிர்தன்மையுடனேயே நீள்கின்றன. சிட்டிகைப் பொடியைக் கடைவாயில் இழுத்துக் கொள்வதும் கடைவாய்க்கும் நாசிக்கும் பொடிபோடுவதும், கடைவாயில் பொடியும் வெற்றிலையும் புகையிலையுமிடுதலும், அருவமான சுருட்டு புகையும் மீன்காரத்தெரு வயதானப் பெண்களின் பதிவுகளாக உள்ளன.

குலாம்கடை சாயா, அம்பன் வண்டி கொடுக்காபுளி மரத்தடி, காலியான மீன்தட்டுகள், அடிக்கடி கேட்கும் பாங்கோசை, காசப்புகடை, சவரப்பெட்டி, கன்னிபீவி கபுறு எனத் தொடரும் சுற்றுச்சூழல் அடையாளங்கள் சார்ந்து இந்நாவலின் உட்கட்டமைப்பு உருவாகியுள்ளது. முன்னுரையில் இடம் பெறும் காலம் பற்றிய குறிப்பைத்தாண்டி இந்நாவலின் காலம் முன்னும் பின்னும் கலைத்துப் போடப்பட்டுள்ளது. தொடர்பின்மையோடும், நேரற்ற கலவையான வாசிப்பிற்கானது போன்ற மறு தோற்றத்தையும் இந்நாவல் பெற்றுள்ளது.

நைனாவின் குடும்ப வாழ்க்கை சிதைந்த நிலையில் தென்படுகிறது. தன்னைவிட்டு பிரிந்து சென்று வேறொரு திருமணம் செய்து கொண்ட மும்தாஜ். அதே சமயம் நைனா உறவு வைத்திருந்த வள்ளி இறந்ததும் பள்ளி மய்யத்தாங்கரையில் அடக்க இடம் கேட்க காபிர்களை அடக்க இடம் தரமுடியாதென ஜமாஅத்தார்கள் சொல்ல பள்ளிவாசலுக்கு எதிரிலேயே கட்டாந்தரையில் கபுறுகுழியை வெட்டி மய்யித்தை அடக்கி, மீன்காரத்தெரு ஜனங்கள் சூழ திருப்பூர் ஹஜ்ரத் மய்யித்து தொழுகைகையை நடத்துகிறார்.

மற்றுமொன்று வள்ளிபீவி கபுறின் உருவாக்கம், மூதாதையர்களின் ஞாபகங்களோடும், வரலாற்றின் தடயங்களோடும் அடையாளப்படுத்தப்பட்ட வள்ளிபீவியின் கபுறு ஒடுக்கப்பட்ட சமுதாயப் பெண்மணியை நிராகரித்த வைதீக முஸ்லிம்களின் கலாச்சாரத்திற்கு எதிர் அடையாளமாகவே உருவாகியுள்ளது. அடித்தள முஸ்லிம்களின் பண்பாட்டு நம்பிக்கைகளின் முக்கியத்துவம் குறித்த கேள்வியை இது திரும்பவும் எழுப்புகிறது. ஊதுபத்தி கொளுத்தி ஜியாரத் செய்யக்கூட ஒரு கூட்டம் தயாராயிருந்தது. இது காலப்பிழையா எல்லாம் வல்ல அல்லாவுக்கே வெளிச்சமென்ற கருத்தியல் தலையீடு சார்ந்த நாவலின் இறுதிவரிகளை நிராகரித்து விட்டே இந்த அடித்தள முஸ்லிம்கள் சார்ந்த வாசிப்பை நிகழ்த்த வேண்டுமென்று தோன்றுகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com