Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007

சர்.சி.வி. இராமனும் இசை ஒலியியல் ஆராய்ச்சியும்
உலோ.செந்தமிழ்க்கோதை

சர்.சி.வி. இராமன் என அழைக்கப்படும் சந்திரசேகர வெங்கடராமன் மூலக் கூற்று ஒளியியலில் (Molecular Optics) கண்டறிந்த ‘இராமன் விளைவு’தான் நமக்கு நினைவுக்கு வரும். உண்மையில் ‘இராமன் விளைவு’ கண்டறிந்த முயற்சி அவரது ஆய்வு முகங்களில் ஒன்றுதான். ஆனால் அவரது ஆய்வுப் பணி ஒளிப்புலனியலிலும் (Physiology of vision), ஒலிப் புலனியலிலும் (Physiology of Hearing) கூட அமைந்ததென்பது அவ்வளவு பரவலாக அறியப்படாத தகவலாகும். அவர் தமிழக இசை மரபில் மலர்ந்த புத்தறிவியலின் தந்தை என்றும் போற்றலாம். ஏனெனில் அவர் மாணவப் பருவத்தில் தொடங்கிய தமது இசையாராய்ச்சியைத் தொடர்ந்து தனது பேராசிரியர் பணியின் தொடக்கக் காலம் வரை தொடர்ந்தார் என்பதே அதற்குக் காரணமாகும். அவரது இசையாராய்ச்சி பற்றிய சிலக்குறிப்புகளே இங்குத் தரப்படுகின்றன. இசை பற்றிய புத்தறிவியல் கண்ணோட்ட ஆய்வை நிகழ்த்திய ஐரோப்பாவைச் சாராத ஒரே அறிவியலாரும் இவரே என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இராமன் தான் சென்னை மாநிலக் கல்லூரி பட்டமேற்படிப்பு மாணவராகத் திகழ்ந்த போதே இராலே பெருமான் (Lord Raleigh) அவர்களது ஒலி உரப்பு (Pitch)க்கான காதின் உணர்மை (Sensitiveness of ear to the pitch of the sound) என்ற ஆய்வால் கவரப்பட்டார். அந்த ஆய்வுரை குறித்து இராலே பெருமானுக்குத் தனது எதிர்வினையாகச் சில கருத்துகளை ஒரு மடல் மூலம் தெரிவித்தார். இராமன் ஒரு மாணவரே என்றறியாத இராலே பெருமகன் பேராசிரியர் இராமன் அவர்களுக்கு எனவிளித்து பதிலெழுதினாராம். இராமன் எதிர்வினை அத்துணை தரம் வாய்ந்திருந்ததே அதற்குக் காரணம் எனலாம்.

இராமன் அதோடு நிற்கவில்லை. நாண்வழி இசை மீட்டலின் எளிய வடிவமான இழுத்துக் கட்டிய கம்பியின் அதிர்வுகளைப் பற்றிய செய்முறையைச் செய்துபார்க்க பேரார்வமுற்றார். இதற்காக மெல்டே செய்முறையில் சற்றே மாற்றம் செய்து நல்ல முடிவுகளை எட்டலாம் என அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியுள்ளது. இச்செய்முறையே அவரது இசை ஆராய்ச்சியின் தொடக்கம் எனலாம்.

இராமன் 1907 முதல் 1917 வரை இந்திய அரசின் நிதித்துறையில் பணியாற்றினார். பிறகு கல்கத்தா பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஆஷு தோஷ் முகர்ஜி இராமனுக்குத் தமது பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பேராசிரியர் பதவியை அளிக்க அதில் அவர் 1917 முதல் 1933 வரை தொடர்ந்து பணியாற்றினார்.

இராமன் நிதித்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்திலும் தமது இசையாராய்ச்சியைத் தொடர்ந்து நிகழ்த்தி வந்தார். 1918 ஆண்டு அவர் புகழ்பெற்ற அவரது ஆய்வுத் தனி நூலான (Research Monograph) “வயலின் (வீணை) குடும்பம் சார்ந்த இசைக்கருவிகள் மற்றும் வில் சரங்களின் எந்திரவியல் அதிர்வுகள் பற்றிய கோட்பாடு (Cen the Mechanical Theory of Vibrations of Bowed Strings and of Musical Instruments of the Violin Family) என்ற நூலை வெளியிட்டார். இதற்கு முன்பே 1914 ஆண்டு வாக்கிலேயே இவரது இசையாராய்ச்சி புகழ் இங்கிலாந்திலும் ஜெருமனியிலும் பரவிவிட்டது. இவரது புகழ் ஜெர்மனி நாட்டில் பரவியது பற்றி எஸ்.என். சின்ஹா அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.

“இராமனது இசைச்சர அதிர்வுகளைப் பேணுதல் பற்றிய ஆய்வு ஜெர்மனி பேரா. ஆல்பிரெட் கலான் (Prof.Alfredkalahne) அவர்களது கவனத்தை ஈர்த்ததால் அவர் 1914, நவம்பர் மாத ஜெருமானிய இயற்பியல் கழக (German Physical Society) இதழில் ஹெல்ம்ஹோட்ஜ் (Helmholtz) அவர்களது முடுங்கிய கம்பிச்சர அதிர்வுகளின் கோட்பாடு பற்றிய மீள் பார்வையில் இராமனைப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடுமட்டுமன்றி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது, 1926 ஆம் ஆண்டில் பெயர் பெற்ற இதழான ‘ஹேண்ட்பக் தெர் பிஷிக்’ (Handbuckder Physik) என்ற இதழுக்கு இசை பற்றிக் கட்டுரை எழுதியனுப்பும் படி கேட்டுக் கொள்ளப்பட்ட ஒரே மேலை நாடு சாராத, குறிப்பாக ஐரோப்பாசாராத, அறிவியலார் இராமன் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வுக் கட்டுரையில் இராமன் நான் (கம்பிச்சர) காற்று, கொட்டு (string, wind and percussion) இசைக் கருவிகளின் இசைப் பண்ணொலிகள் (tones) குறித்த இயற்பியல் பண்புகள் பற்று ஆய்வு செய்தார். கட்டுரையின் தலைப்பு “இசைக் கருவிகளின் பண்ணொலிகள் (Musical Instruments and their tones) என்பதாகும். இதோடன்றி அதே தொகுதியின் தொடக்கக் கட்டுரையொன்றில் இராமன் இசை ஆய்வு பற்றி மிக விரிவாகப் பாராட்டப் பட்டுள்ளதையையும் இங்குக் குறிப்பிடவேண்டும்.

இராமன் கல்கத்தாப் பல்கலைக் கழக இயற்பியல் பேராசிரியாகப் பணியும் போதே 1919 முதல் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தின் செயலராகவும் (Secretary for ICAS) பணிபுரிந்து வந்தார். அப்போது அவர் நாடெங்கிலும் உள்ள பல இளைஞர்களைக் கல்கத்தா நகருக்கு வரவழைத்து அவர்களை ஒளியியலிலும் ஒலியியலிலும் (Optics and Acoustics) ஆய்வு செய்யச் செய்தார். அதோடு தமது ஓய்வு நேரத்தில் எல்லாம் இசை ஒலியியல் (Musical Acoustics) ஆய்வையும் தொடர்ந்து மேற்கொண்டு இயற்கை (Nature) மெய்யியல் இதழ் (Philosphical Magazine), இயற்பியல் மீள்பார்வை (ஞாலளiஉயட சுநஎநைற) ஆகிய ஆய்விதழ்களில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவரது புகழ் இங்கிலாந்து, ஐரோப்பா தாண்டி அமெரிக்காவிலும் பரவலானது. 1990 சார்ந்த பத்தாண்டுகளில், அண்மையில் இராமனது இசையாராய்ச்சி பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்ட நிகழ்வும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

1928 பிப்ரவரித் திங்களில் இவரால் ‘இராமன் விளைவு’ கண்டறியப்பட்ட. இது தொடர்பாக முடிவுகளை இராமன் தனது முதல் படைப்பான “ஒளியின் மூலக் கூற்று விளிம்பு விலகல்” (Molecular Diffraction of Light) என்ற நூலில் தந்துள்ளார். இதற்காக இவருக்கு 1930 ஆம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1949 இல் ஓய்வு பெற்ற பிறகும் தானே நிறுவிய “இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Raman Institute of Research) தொடர்ந்து ஆய்வு செய்து தமது இரண்டாவது படைப்பான ‘ஒளிப்புலனியல்’ (Physiology of Vision) என்ற நூலில் கண்ணின் ஒளி, வண்ணப்புலன் காட்சி (Perception of hight and colour of eye) பற்றிய விரிவான ஆய்வு முடிவுகளைப் பதிவு செய்துள்ளார். மேலும் அந்நிறுவனம் அண்மையில் நீர்மப்படிகங்கள் (Liquid Crystals), வான் இயற்பியல் (Astrophysics)), கதிர்வீச்சு வானியல் (Radioastronomy) ஆகிய புலங்களில் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் இசைக்கருவிகளின் நேரியல் பற்ற இயற்பியல் (Nonlinear Physics of Musical Instruments) பற்றிய மீள்பார்வையில், என்.எச்.ஃபெட்சர் (N.H.Fetecher) என்பார், 2500 ஆண்டுகளாகப் பித்த கோரசின் காலத்திலிருந்தே இசைப் பற்றி பல அறிவியலார் ஆர்வம் மேற்கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக, அன்னாருள் மூவர் மிகவும் சிறப்பாகத் தனித்துக் குறிப்பிடத்தக்கவர்கள், அவர்கள் ஹெல்ம்ஹோல்ட்ஜ் (Helmholtz), இராலே (Raleigh), இராமன் (Raman) ஆகியவர்களே” என்று கூறுகிறார்.

இம்மதிப்பீட்டிலிருந்து இராமனின் புத்தறிவியல் காலக்கட்ட இசையாராய்ச்சிச் சிறப்பு பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இதைத் தமிழிசை மரபின் அதாவது பத்துப்பாட்டு கால இசைக்குறிப்புகள், சிலப்பதிகாரக் கால இசை வளர்ச்சி, பிறகு மகேந்திரப் பல்லவன் காலத்துக் குடுமியாமலை இசைப் பண்கள் பற்றிய கல்வெட்டு பிறகு அம்மரபைப் போற்றி வளர்த்த இடைக்கால (Medivial), புதுமைக்காலத் (Modern Period) தொடர்ச்சியைக் காத்து வளர்த்த அனைத்து இசைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்கள் ஆகியோர் போற்றி வளர்த்த பெருமரபின் தொடர் வெற்றியெனக் கருதல் எவ்வகையிலும் உண்மைக்குச் சற்றும் விலகிச் செல்லாது எனலாம். இத்தமிழிசை மரபின் ஆய்வும் இன்று முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியதாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com