Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007

மதங்களிடையே நல்லிணக்கம்
எம்.ஆர். ராஜகோபாலன்

அக்பரது தெய்வீகமதம்:

பிற மதங்களைப் பற்றிய சகிப்புத்தன்மை மட்டுமின்றி மதங்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு முயற்சியும் இந்தியாவை கி.பி. 16வது நூற்றாண்டில் ஆண்ட பேரரசர் அக்பரால் மேற்கொள்ளப்பட்டது. அவர் படித்தவர் அல்ல - முற்றிலுமாக எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தும் - தனது தலைநகராகிய ஆக்ராவில் பெரியதோர் நூல் நிலையத்தை நிறுவினார். ராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்கள் சமஸ்கிருத மொழியிலிருந்து பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. அவரது ஆட்சிக் காலத்தின்போது பிரபலமாக இருந்த எல்லா மதங்களையும் சார்ந்த வல்லுநர்களை அழைத்து - கலந்துரையாடல்களை நிகழ்த்தி இந்து, இஸ்லாம், புத்த, ஜைன, கிறிஸ்தவ, பார்சி மதங்களின் கோட்பாடுகளை நன்கு புரிந்துகொண்டார்.

பல்வேறு கோட்பாடுகளைக் கொண்ட ஒவ்வொரு மதத்தின் குறிப்பிட்ட சில கோட்பாடுகளை அவர் தேர்ந்தெடுத்தார். ஜைன மதத்தின் சடங்குகளை அவர் அவ்வளவாக ஏற்கவில்லை. ஆனால் அந்த மதத்தின் கொல்லாமைக் கொள்கையை ஏற்றுக்கொண்ட அக்பர் சைவ உணவிற்கு (வெஜிட்டேரியன்) மாறினார்! பல்வேறு மதங்களின் முக்கிய கோட்பாடுகளை ஒருங்கிணைத்து அக்பர் புதியதோர் மதத்தை உருவாக்கினார். இம்மதத்திற்கு அவர் தெய்வீக மதம் அல்லது கடவுளின் மதம் (தீன்-ஏ-இலாஹி) என்று பெயரிட்டார். இம்மதம் மக்களிடையே பரவவில்லை. அது ஏட்டளவில் நின்றுவிட்டது. இருப்பினும் இதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

அந்தக் காலகட்டத்தில் உலகின் மாபெரும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ஒரு மன்னர் - தனது நேரத்தையும் - சக்தியையும் பல்வேறு மதங்களைப் புரிந்து கொள்வதற்கும் - அவற்றை ஒருங்கிணைப்பதற்கும் செலவிட்டார் என்பது மனித சமுதாயத்தின் சரித்திரத்தில் கண்டும் கேட்டுமிராத ஒரு நிகழ்ச்சியாகும். அக்பருக்கு முன்போ - பின்போ உலகில் எந்த மன்னரும் இவ்வாறான அரியதோர் முயற்சியை மேற்கொண்ட தாகத் தெரியவில்லை.

ஏனைய இஸ்லாமிய மன்னர்களின் சகிப்புத் தன்மை:

இந்து புத்த மற்றைய இஸ்லாம் அல்லாத மதங்களுக்குச் சகிப்புத் தன்மை காட்டப்பட்டது. முகலாயர்களுக்கு முன்பாகவும் - கில்ஜி துக்ளக் போன்ற அரசுகளிலும் இருந்து வந்தது. இஸ்லாமியர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் முஸ்லீம் அல்லாதவர்கள் கத்தி முனையில் மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்று சிலர் நம்புகின்றனர். இது முற்றிலும் ஆதாரமற்ற தகவல். ஏனெனில் 500 ஆண்டுகளுக்கு இஸ்லாமியர்கள் நாட்டை ஆண்ட பின்பும் கூட தலைநகர் டில்லியிலும் மற்றும் நாடு முழுவதும் இந்துக்கள் தான் பெரும்பான்மையினராக (மெஜாரிட்டி) இருந்தனர். உண்மையில் கோடிக்கணக்கான தலித்துகள் மற்றும் பல கைவினைஞர்கள் - குறிப்பாக வடஇந்தியா முழுவதும் - தாங்களாகவே இஸ்லாமுக்கு மாறினார்கள். ஏனெனில் அவர்களுக்கு இந்துக் கோவில்களில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் பகுதிகளில் அல்லாவின் முன்னிலையில் எல்லோரும் சகோதரர்கள் - என்கிற இஸ்லாமின் சகோதரத்துவக் கோட்பாடு அவர்களை அம்மதத்திற்கு ஈர்த்தது.

ஸ்பெயின்நாடு மூர்கள் என்று அழைக்கப்பட்ட மொராக்கோ நாட்டு முஸ்லீம்களின் ஆதிக்கத்தில் 10வது நூற்றாண்டில் வந்தது. அந்நாட்டை முஸ்லீம்கள் 500 ஆண்டுகள் ஆண்டனர். இருப்பினும் அங்கு முஸ்லீம்களின் எண்ணிக்கை ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது.

இதேபோன்ற சகிப்புத்தன்மை ஆட்டோமன் சாம்ராஜ்யத்திலும் (துருக்கியை மையமாகக் கொண்டது) நிலவியது. துருக்கியர்கள் கி.பி. 13வது நூற்றாண்டிலிருந்து 20வது நூற்றாண்டின் 1920 வரை அரேபியா - மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் முந்தைய யூகோஸ்லேவியா, பல்கேரியா, ருமானியா, கிரீஸ் - போன்ற நாடுகளையும் ஆண்டனர். அங்கும் கட்டாய மதமாற்றம் எதுவும் நிகழவில்லை. கிறிஸ்தவர்கள் தொடர்ந்து பெரும்பான்மையினராக இருந்தனர். முஸ்லீம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட துருக்கி, ஈராக், சிரியா, எகிப்து போன்ற நாடுகளில் லட்சக் கணக்கான கிறிஸ்தவர்கள் துன்புறுத்தல் எதுவுமின்றி வாழ்ந்தனர்.

மதங்கள் பற்றி காந்திஜியின் கருத்துகள்:

ஜனவரி - 1935-ம் ஆண்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் காந்திஜியிடம் மூன்று கேள்விகள் கேட்டார்.

1. உங்களது மதம் எது?
2. எப்படி நீங்கள் அம்மதத்தைச் சார்ந்தவர் ஆகிறீர்கள்?
3. சகவாழ்வில் அதன் பங்கு என்ன?

காந்திஜி இவ்வாறு பதிலளித்தார்:

“எனது மதம் இந்து மதம். இம்மதம் - மனித சமுதாயத்தின் மதம் - மற்றும் ஏனைய மதங்களில் உள்ள மிகச்சிறந்த கோட்பாடுகள் இதில் அடங்கியுள்ளன.

இரண்டாவது கேள்வியில் வேண்டுமென்றே நிகழ்காலம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். உண்மையும் - அகிம்சையும் - பரந்த அளவிலான அன்பும் என்னை அம்மதத்திற்கு இட்டுச் செல்கின்றன. எனது மதத்தை நான் சத்தியமதம் என்றே குறிப்பிடுகிறேன். சமீபகாலமாகக் கடவுள் என்றால் சத்தியம் என்று சொல்வதைத் தவிர்த்து சத்தியமே கடவுள் என்று சொல்லி வருகிறேன். இதுதான் இந்து மதத்தின் முழுமையான சொற்பொருள் விளக்கமும் Definition லட்சக்கணக்கான இந்துக்கள் தினந்தோறும் போற்றி வரும் கடவுளது ஆயிரம் நாமங்களை - நானும் ஒரு காலகட்டத்தில் மனப்பாடம் செய்திருந்தேன். ஆனால் இப்போதெல்லாம் சத்தியமே - கடவுள் என்பதுதான் எனது தாரக மந்திரமாக உள்ளது. கடவுளை மறுப்பவர்களை நாம் அறிவோம். சத்தியத்தை மறுப்பவர்களை நாம் காணமுடியாது. மிகவும் அறியாமையில் உழலும் சில மனிதர்களிடம் கூட ஓரளவுக்குச் சத்தியம் இருக்கும்.

மதம் நமது சமூக வாழ்வுடன் எவ்வாறு பிணைந்துள்ளது என்பதை ஒவ்வொரு மனிதனின் தினசரி வாழ்க்கை முறை யிலிருந்து தெரிந்துகொள்ளலாம். பிற உயிர்களின் சேவையி லேயே நம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்வதன் மூலம் தான் நம்மால் நமது மதத்தை அனுசரிக்க முடியும். நம்மை முற்றிலுமாக சேவை என்னும் சமுத்திரத்தில் அமிழ்த்திக் கொள்வதன் வாயிலாகத்தான் நம்மால் சத்தியத்தை உணர முடியும். ஆகவே சமூக சேவையிலிருந்து நம்மால் தப்பவே முடியாது. மகிழ்ச்சி உலக வாழ்க்கையுள் அடங்கியுள்ளது - அதற்கு அப்பால் அல்ல. சமூக சேவை என்பது வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். இந்த நடைமுறையில் உயர்ந்தது என்றும் தாழ்ந்தது என்றும் எதுவும் கிடையாது. எல்லாமே ஒன்றுதான் - நாம்தான் ஒன்றைப் பலவாகக் கொள்கிறோம்.

காந்திஜியின் புகழ்பெற்ற நிர்மாணத் திட்டத்தில் மதங்களின்(டையே) ஒற்றுமைதான் முதலிடம் வகிக்கிறது. காந்திஜியின் வார்த்தைகளில் “ஒற்றுமை என்பது அரசியல் சார்ந்த ஒற்றுமை அல்ல - அதைக் கட்டாயமாக மக்கள் மீது திணிக்க முடியும். ஒற்றுமை என்பது இதயங்களின் - பிரிக்க முடியாத ஒற்றுமையாக இருக்கவேண்டும்.” இந்த ஒற்றுமையை அடைவதற்கு முதற்படியாக ஒவ்வொரு மனிதனும் - அவன் - இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், ஜோரோவாஸ்டரியன் (பார்சி) யூதம் - போன்ற எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் தனது மதத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவனிடம் தான் இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களில் ஒருவன் என்கிற உணர்வும் ஏற்படவேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும் பிறமதங்களைச் சார்ந்த சிலருடன் நட்புறவு வைத்துக் கொள்ளவேண்டும். தனது மதத்தை எந்த அளவுக்கு மதிக்கிறானோ அதே அளவிற்குப் பிற மதங்களையும் மதிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் இதயங்களிடையே ஒற்றுமை தோன்றும்.

5.1 இன்றைய இந்தியா - சகிப்புத் தன்மை அல்லது ஒருமைப்பாட்டின் ஒப்பற்ற உதாரணம்:

இன்றைய இந்தியாவின் ஒரு முக்கியமான நிலவரம் - காந்திஜிக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது. எண்பது விழுக்காடு ஹிந்துக்கள் அடங்கிய இந்தியாவின் பிரதம மந்திரி மன்மோகன்சிங் ஒரு சீக்கியர், ஜனாதிபதி அப்துல்கலாம் ஒரு முஸ்லீம், ஆளும் கட்சியின் தலைவர் - கிறிஸ்தவ மதப் பின்னணியில் வந்த ஒரு பெண்மணி (சோனியாகாந்தி). இதுபோன்ற நிலவரம் உலகின் எந்த ஜனநாயக நாட்டிலாவது உள்ளதா அல்லது சாத்தியமா என்று எனக்குத் தெரியவில்லை.

21வது நூற்றாண்டின் நிலவரம்:

இக்கட்டுரையின் துவக்கத்திலேயே உலகில் தற்போது நிலவி வரும் வன்முறை பற்றிக் குறிப்பிட்டுள்ளோம்.

இன்றைய உலகில் உண்மையான அபாயம் - மக்களை மதங்களின் அடிப்படையில் தனிப்படுத்துவதுதான் - இந்து - முஸ்லீம் - கிறிஸ்டியன், சீக்கியர் - முதலியன. உலகின் ஒவ்வொரு நாட்டிலுமே பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் வசிக்கின்றனர். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், கணிசமான எண்ணிக் கையில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், சைனர்கள் - வாழ்கின்றனர். எல்லோருமே இந்த நாடுகளின் குடிமகன்கள் தான். இவர்களை எல்லாம் இந்து, முஸ்லீம், புத்த மதத்தினர் என்றெல்லாம் குறிப்பிட்டால் பிரச்சினைகள்தான் உருவாகும். ஒவ்வொரு மனிதனுக்குமே மொழி, மதம், நாடு, ஆண்-பெண் - வேறுபாடு தொழில் - போன்ற பல்வேறு அடையாளங்கள் - அறிமுகங்கள் உள்ளன. இந்த அடையாளங்களில் ஒன்றான மதத்தை மற்றும் தனிப்படுத்தி முத்திரை குத்துவது தவறான - அபாயகரமான செயலாகும்.

அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11, 2001 தேதிக்குப்பின் அல்கொயிதா, பின்லேடன் போன் றோரும் - ஏன் எல்லா முஸ்லீம்களுமே சந்தேகத்திற்குரிய நபர்களாகக் கருதப்படுகின்றனர் என்கிற உண்மை நிலையை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். குறிப்பாக அமெரிக்காவிலும் இங்கிலாந்து மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் எல்லா முஸ்லீம்களையும் பயங்கரவாதிகள் என்று சந்தேகப்படும் சூழல் நிலவுகிறது. இந்த நிலைமையிலிருந்து எப்படி நாம் மீளமுடியும்?

“ஜிஹாத்” என்று சொன்னாலே - தாடிவைத்த முஸ்லீம் குருமார்கள் - வெறிபிடித்த மதவாதிகள், தற்கொலைப் படையினர், பிற மதத்தினரைக் கொல்வதாகச் சபதம் செய்துள்ள தலைப்பாகை அணிந்த மக்கள்தான் நமது நினைவுக்கு வருகின்றனர். மத அரசியல் போதனைகளிலிருந்து இதுபோன்ற மக்களின் உருவங்கள் எழுகின்றன.

“ஜிஹாத்” என்கிற வார்த்தைக்கு அகராதியின் பொருள் - ஒரு முயற்சி அல்லது முழு முயற்சியுடன் கூடிய போராட்டம். குர்ஆன் - மற்றும் ஹடித்தை (இஸ்லாமிய மரபுகளின் தொகுப்பு) நன்கு கற்றுணர்ந்த அறிஞர்கள் ஜிஹாத் இருவகையானது என்று கூறுகின்றனர். அல்ஜிஹாத் அல் அக்பர் மற்றும் அல்ஜிஹாத் அல் அஸ்கர். முந்தையது பெரிய போராட்டமாகக் கருதப்படுகிறது. இது நம்மனத்தில் உள்ள பேய்கள் - தீய எண்ணங்களுக்கு எதிரான போராட்டம். பிந்தையது சிறிய போராட்டம் - இஸ்லாமின் எதிரிகளுடனான போராட்டம் முதலாவது போராட்டம் தனிமனிதனின் நேர்மை, நற்பண்புக்கான போராட்டம். இந்த வாழ்க்கை முறையில் கவர்ச்சி - ஆசை போன்ற தீய பண்புகளுக்கு இடம் இல்லை. உலக வாழ்க்கை நிலையற்றது - ஆசைகளும் நிலையற்றவை என்பதை நாம் உணரவேண்டும். கூடவே எதிரிகள் விளைவிக்கும் இன்னல்களை அல்லாவின் ஆணைகளைப் பின்பற்றுவதன் வாயிலாகச் சகித்துக்கொண்டு, கல்வி, இலக்கியம் இஸ்லாமிய கலாச்சாரத்தில் ஈடுபடுத்திக் கொள்வது இந்த ஜிஹாத் போராளியின் வெளிப்பாடுகள்.

‘ஜிஹாத்’தின் மற்றொரு பொருள் - இஸ்லாமின் தாய்நாட்டை - தாருல் இஸ்லாத்தை - ஆக்கிரமித்துக் கொண்டவர்களுக்கு எதிரான - மத அடிப்படையிலான போராட்டம். இஸ்லாமிய அறிஞர் சையத்குத்தப் கூற்றின்படி தாய்நாட்டின் எல்லைகள் ஷாரியாவைச் சட்டமாக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் வாழும் சமுதாயத்தின் எல்லைகள்தான். ஜிஹாத் என்பது அடிப்படையில் ஒரு தற்காப்புப் போராட்டம்தான். வேறு எல்லா முயற்சிகளும் பலனளிக்காத சூழலில் இஸ்லாமியர்கள் வேறு வழியின்றி இப்போராட்டத்தில் ஈடுபடலாம். சையத்குத்தப் மேலும் கூறுகிறார் - இஸ்லாமிய ஜிஹாத்தைத் தாய்நாட்டின் (மதீனாவிலிருந்து மக்கா வரை) தற்காப்பிற்கான போராட்டம் மட்டுமே என்று கூறி குறைத்து மதிப்பிடக் கூடாது. உலகின் எல்லா மனிதர்களையும் அடிமைத் தளைகளிலிருந்து விடுவித்து கடவுளின் சேவையில் ஈடுபடுத்துவதற்குமான போராட்டம் ஜிஹாத்.”

சில மௌல்விகளும் மௌலானாக்களும் அரசியல் மற்றும் மத அடிப்படையிலான நோக்கத்துடன் ஜிஹாத் என்றாலே இஸ்லாமிய மதத்தைச் சாராதவர்களுக்கெதிரான போராட்டம் என்ற தவறான விளக்கம் கொடுத்து வருவது துரதிர்ஷ்டவசமானது.

பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கானதோர் திட்டம்:

இப்போது பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? வன்முறையிலும் போராட்டங்களிலும் அழிந்துகொண்டிருக்கும் இந்த உலகில் அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் எப்படிக் கொண்டு வர முடியும்? அரசியல்வாதிகளை நம்மால் நம்ப முடியாது. அவர்களுக்கு வோட்டுகளைத் தவிர வேறு எந்த விஷயம் பற்றியும் அக்கறை கிடையாது. குறிப்பிட்டதோர் குழுவிற்குப் பெருமளவிலான வன்முறையில் பங்கு அல்லது தொடர்பு இருப்பதைக் காவல்துறையினர் உறுதி செய்யும் சூழலில் கூட அரசியல்வாதிகள் அந்தக் குழுவிற்கு எந்த வன்முறையாளர்களிடமும் தொடர்பு கிடையாது என்று சான்றிதழ் வழங்குவார்கள்.

பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியது காந்தியவாதிகள் மற்றும் அமைதிக்காகவும் நல்லுணர்வுக்காகவும் பாடுபடும் சமூக சேவகர்கள் பல்வேறு மதங்களின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களின் கடமையாகிறது. மதத்தலைவர்களுக்கும் ‘மிகப் பெரியதோர்’ பொறுப்பு உள்ளது. அன்பு இரக்கம், மக்களுக்குச் சேவை போன்ற பண்புகளை வலியுறுத்தாத மதம் எதுவுமே இல்லை. நாம் அக்பரின் காலத்திற்குப் பின்னோக்கிச் சென்று அவர் எப்படி கடவுளின் மதத்தை உருவாக்கினார் என்பது பற்றிச் சிந்தித்து ஊக்குவிப்பு அடையவேண்டும். புதியதோர் மதத்தை உருவாக்கி எல்லா மனிதர்களையும் அதில் சேர்த்துவிடுவது என்பது நடக்காத காரியம்.

ஆனால் மற்ற மதங்களைச் சகித்துக்கொள்வது மற்றும் மரியாதை கொடுப்பது போன்ற நற்பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். நாம் எல்லோரும் ஒன்றுகூடி மத நல்லிணக்கத்திற்கான ஒரு திட்டத்தைத் தயாரிக்கவேண்டும். இந்தத் திட்டம் காந்திஜியின் சத்தியம் மற்றும் அகிம்சையின் அடிப்படையில் அமைய வேண்டும். அடிவானில் தோன்றி நம்மை அச்சுறுத்தி வரும் அழிவு சக்திகளிலிருந்து சத்தியமும் அஹிம்சையும் மட்டுமே நம்மைக் காப்பாற்றும்.

ஆதாரமான நூல்கள்

1. மகாத்மா காந்தியின் படைப்புகளின் சில தொகுப்புகள்.
2. நிர்மாணத் திட்டம் - எம்.கே. காந்தி.
3. என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா - மைக்ரோபீடியா தொகுதி 1, தொகுதி 7 மற்றும் 9 மெகாப்பீடியா தொகுதி - 1, தொகுதி 15.
4. அடையாளமும் - வன்முறையும் - தலைவிதியின் மாயத்தோற்றம் - அமர்த்தியாசென்.
5. ஜிஹாத் - மனதின் பேய்களுக்கெதிரான போராட்டம் - சுஜாதா ஐஸ்வர்யா - சீமா சன்ஸ்தாகுல் - ஜுன் 2001.
6. பக்தி இயக்கம் - எம்.ஆர். ராஜகோபாலன் 1970-ல் வெளியான ஆங்கிலக் கட்டுரை.
7. மத நல்லிணக்கம் - சில குறிப்புகள் - எம்.ஆர். ராஜகோபாலன் “சர்வோதயம்” - செப்டம்பர் 2005.
8. சரித்திரம் பற்றிய சான்றுகள் - இந்தியாவின் வரலாறு பற்றிய பல நூல்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com