Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007

கட்டுரை

ஜீவா என்னும் கலை இலக்கிய போட்டி
பொன்னீலன்

ஜீவா ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் ஒரு அப்பழுக்கற்ற சுயமரியாதைப் போராளி என்பதும், உள்ளும் புறமும் ஒன்றான ஒரு கம்யூனிஸ்ட் என்பது தமிழுலகம் என்றும் மறக்காது. சங்கத் தமிழை, சிலப்பதிகாரத்தை, வள்ளுவத்தை, சமய நூல்களை, அவற்றின் வரலாற்றுப் பின்னணியில் வைத்துப் பார்த்து, தள்ளுவன தள்ளி, எப்படிக் கொள்ளுவன கொள்ளவேண்டும் என்று தமிழருக்குக் கற்பித்தவர் அவர். கம்பனை ஒரு ஆரிய அடி வருடி என்று ஒரு புறமும், வைணவ இலக்கிய ஆச்சாரியர் என்று மறுபுறமும் நின்று மாறி மாறி மோதிக் கொண்டிருந்த தமிழகத்தில் கம்பன் மானுடம் பாடிய ஒரு மாபெரும் தமிழகக் கலைஞர் என்பதை நிறுவிய மாமேதை.

Jeeva பாரதியைக் கூர்தீட்டித் தமிழ் மக்களின் சமூகப் போராட்ட ஆயுதமாக்கிக் கொடுத்தவர். தாகூரைப் பேசி வங்க மக்களையே வியக்க வைத்தவர். பாவேந்தர் காலத்தில் அவருக்கு நிகராக ஒளி வீசிய பெரும் புலவர். மேடையில் எழுச்சிப் புயல், போர்க் களத்தில் பாயும் புலி. இவையெல்லாம் எல்லாருக்கும் தெரிந்தவை. ஆனால் அவர் தமிழகத்துக்கு முற்போக்கு இலக்கியக் கோட்பாடுகளைத் தமிழ் மரபின் ஊடாகப் பார்த்துக் கற்றுக் கொடுத்த மாபெரும் வழிகாட்டி என்பது பலருக்குத் தெரியாது.

இன்றைய இலக்கிய வாதிகளின் கடமை என்ன? ஜீவா சொல்லுகிறார்: கலைஞர்களும் எழுத்தாளர்களும் நமது ஒன்றாய் இணைந்த இந்திய - தமிழகப் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தலைசிறந்த பாரம்பரியத்தில் நின்று கொண்டு, இன்றைய விஞ்ஞான அறிவோடும், கண்ணோட்டத்தோடும் நமது மக்கள் பௌதீக, ஆன்மிக வளர்ச்சித் துறைகளில் முன்னேற முயல்வதில் வெற்றி பெறுவதற்கும் உதவுவதேயாகும்.

சமுதாயத்தின் முழு வடிவ வளர்ச்சி - மலர்ச்சியிலே தான் தனி நபரின் வளர்ச்சியும் மலர்ச்சியும் இருக்கிறது. தனி நபரின் திறன் வெளிப்படவும் தனது ஆற்றல்களையும் உளச் சிறப்பையும் செம்மைப் படுத்திச் செழுமைப் படுத்திக்கொள்ளவும் முடிகிறது என்ற பார்வையிலே இதை நாம் கூறுகிறோம்.

அவர் காலத்தில் தமிழில் இரண்டு போக்குகள் எதிரெதிர் திசையில் செயல்பட்டன. இவற்றில் எந்தப் போக்கைப் புறக்கணிக்க வேண்டும். எதை ஆதரிக்க வேண்டும்? ஜீவா சொல்லுகிறார்: முதல் போக்கு மாயாவாதப் போக்கு. மனிதனையும், மனிதனின் முயற்சிகளையும், மனித வாழ்வின் உண்மையையும், வீரியத்தையும் சிறுமைப்படுத்துவது. பண்டைக் காலப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவன் பெயரால் பிற்போக்கான பழைய கருத்துகளையும், பழக்க வழக்கங்களையும் சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் இன்று நிலை நாட்ட முயல்வது, மக்களின் புதிய தேசிய ஒற்றுமைப் பரம்பரையையும், முயற்சிகளையும் எதிர்த்து, இனவெறியையும் வகுப்பு வாதத்தையும் வளர்ப்பது..... தெய்வத்தைப் போற்றிப் பாடுவதுதான் அமர இலக்கியம்; மக்களைப் பற்றிப் பாடுகிற இலக்கியம் தோன்றி மறைகிற இலக்கியம் என்று “மதிப்பீடுகளும்” அறிவுரைகளும் அளிப்பது, பரம்பரைத் தர்மத்தின் பெயரால், தெய்வ சித்தத்தின் பெயரால் மக்களின் இக்காலத்திய விருப்பங்களையும், தேவைகளையும் நையாண்டி செய்து, மனித முயற்சி களை வீணடிக்கப் பார்ப்பது.... இது ஒதுக்கப்பட வேண்டும்.

இரண்டாவது போக்கு மனித நேயப் போக்கு. இப்போக்கு, தெய்வச் சித்தத்தையும், மாயாவாதத்தையும் கிளப்பி மனிதனைச் சிறுமைப்படுத்துவதில்லை. பழம் பரம்பரையின் உயிர்த்துடிப்புள்ள அம்சத்தை நினைவில் நிறுத்தி நவீன காலத்திய சோதனைகளுக்கும் கேள்விகளுக்கும் வழியும் விடையும் தேடிக் கண்டுபிடிப்பது. தொன்று தொட்டு வந்துள்ள மனிதத்துவப் பண்புகளை மேலும் செழுமைப்படுத்திப் போர்க் குணமுள்ள, முற்போக்கான மானுடமாக வளப்படுத்துவது. இந்தப் போக்கு ஆரோக்கியமான போக்கு. அக்காலத்தில் பரவலாகப் போற்றப்பட்ட பழம் பரம்பரையை அப்படியே உயிர்ப்பிக்கும் போக்கையும் கடுமையாக விமர்சிக்கிறார் ஜீவா அவர் சொல்லுகிறார்:

“பழைய காலம் தான் பொற்காலம். தற்காலத்தில் ஒன்றுமில்லை. புதுமை என்று பேசுவது வீண் பிரமை; பழைமை புனிதமானது; புதுமையனைத்தும் பாழ் என்கிறது இந்தப் போக்கு. பட்ட மரத்தைப் பசுமரமாகச் சித்திரிக்கும் போக்கேயாகும் இது....” பரம்பரையை உயிர்ப்பிக்கும் போக்கின் ஸ்தூலமான அம்சங்கள் யாவை? அதன் பிரதான இலக்கணம் என்ன? சுருங்கச் சொன்னால் இதுதான் பழமையில் இருக்கிற மக்கள் வகைப்பட்ட பண்பாட்டை (Popular Culture) ஒரு பக்கமாகவும், வர்க்க வகைப்பட்ட பண்பாட்டை (Class Culture) இன்னொரு பக்கமாகவும் வேறுபடுத்தி எடுத்துக்கொள்ள மறுக்கும் போக்கே அதன் பிரதான இலக்கணமாகும். இவ்விரு பண்பாட்டு இழைகளும் பழம் பரம்பரையில் பின்னிப் பிணைந்த நிலையிலே தான் வரலாற்றின் வழியே நம்மை வந்தடைகின்றன.

மக்கள் வகைப்பட்ட பண்பாட்டின் (Popular Culture) சிறப்பியல்கள் யாவை? 1. இந்தப் பண்பாடு மனிதனின் மதிப்புணர்ச்சியைப் போற்றி வளர்க்கப் பாடுபடுகிறது. அவனது ஆன்மிக மூர்த்தியை விவகாரப்படுத்துவதை எதிர்த்துப் போராடுகிறது. (உதாரணமாகச் சாதி எதிர்ப்பின் மூலமாக மனிதனின் ஆன்மிக வளர்ச்சியைத் தேடுகிறது). 2. மனித உழைப்பைப் பெருமைபடுத்துகிறது. 3. இனவேற்றுமையின் பெயரால் மனிதர்களின் கூட்டுத் தலைவிதியை (Collective destiny) வலியுறுத்துகிறது.... 4. புதியன புகுவதைக் கைகொட்டி வரவேற்கிறது. இந்தப் போக்கு புதிய உற்பத்திக் கருவிகளாயினும் சரி, புதிய கருத்துகளாயினும் சரி, புதிய கலை வடிவங் களாயினும் சரி அவற்றை முதலில் வரவேற்று அங்கீகரிப்பது இந்தப் போக்குதான்.... இந்தப் போக்கின் பெருமையைப் பாராட்டும் அதே நேரத்தில், அதை மிகைப்படுத்தும் திசையில் நாம் சென்று விடக் கூடாது....

அடுத்த படியாக இப்பரம்பரையின் வர்க்க வகைப்பட்ட பண்பாட்டின் (Class Culture) சிறப்பியல்கள் யாவை? 1. மக்களை இரண்டாம் பட்சமாக்கி மன்னனை முன்னிறுத்திப் போற்றுவது. 2. மனிதனின் ஆன்மிக உளச் சிறப்பைப் பழித்துக் குறுக்குவது. 3. வர்க்க, சாதி வேறுபாடுகளை ‘தெய்வ சித்தம்’ சாஸ்வத விதி என்று சொல்லிக்கொண்டு, சாதி, வர்க்க வேறுபாடுகளை என்றென்றைக்கும் அப்படியே இருக்கச் செய்யப் போராடுவது. 4. மதத்தின் பேராலும், இனப் பெருமையின் பேராலும் போர்களை வளர்த்து, இனவொற்றுமையைச் சிதைத்தல், ஓர் ஒன்றுபட்ட, பலம் வாய்ந்த அரசு ஏற்படுவதற்குத் தடையாக நிற்றல், 5. புதிய கருவிகளையும் கருத்துகளையும், கலை வடிவங்களையும் நகையாடி நிராகரித்தல், எதிர்த்துப் போரிடுதல். இந்தப் போக்கை எதிர்த்து முற்போக்குக் கலைஞர்கள் போராட வேண்டும்.

கலை இலக்கியத்தின் உயிர்நிலை எது? ஜீவா அழுத்தத் தோடு சொல்கிறார்: காலக்குரலே கலை இலக்கியத்தின் உயிர் நிலை, அவர் கேட்கிறார், பெரும் புலவனான வில்லிபாரதத்தின் விருத்தப்பாக்களின் வேகத்தை விட, பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் நொண்டிச் சிந்து வரிகள் வேகம் கொள்கின்றனவே, எதனால்? காலத்தின் குரலினால் அல்லவா?

காலத்தின் குரலைச் சமகால மாந்தர்களின் வாழ்வியலில் நடக்கும் நாடகங்களின் ஊடாக உய்த்துணர்ந்து அந்த நாடகத்தைக் கலையாக்கச் சொல்கிறார் அவர். தனது குழந்தைகளை அயல் நாடுகளுக்கு அனுப்பி, தொழில் நுணுக்கக் கலையைப் பயின்று திரும்பி, இந்நாட்டில் மாபெரும் தொழிற்சாலைகளை நிர்மாணித்து நடத்தவும், அசுர எந்திரத்தை நிர்வகித்து நடத்தவும், புதிய முதலாளி வர்க்கம் சாகசச் செயல்களைப் புரிவதை நாம் காணவில்லையா?..... இந்தப் புதிய முதலாளி வர்க்கம், புதிய சுரண்டல் பந்தங்களோடு இயங்கி, தனது ஆதாயங்களைப் பெருக்கி அனுபவிப்பதில் எத்தனை வெறியும் வேட்கையும் காட்டுகிறது என்று பாருங்கள். இது பழைய சம்பிரதாயங்களையும், கருத்துகளையும் எள்ளி நகையாடி, டம்பாச் சாரித்தனம் பண்ணுகிறது. இந்த நாடகத்தை எழுத வேண்டாமா என்கிறார் ஜீவா.

எந்தத் தொழிலாளியைப் படைக்கச் சொல்கிறார் அவர்? “இதே போல், தொழிலாளி வர்க்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தொழிலாளி வர்க்கம் போராட்டத்தின் வழியே புதிய பண்புகளைச் சேகரித்து வருகிறது என்கிறோம். சரி; ஆனால் இதன் ஸ்தூலமான இழைகள் என்ன என்று சிந்தித்தோமா? உதாரணமாக ஒவ்வொரு தொழிலாளியின் உள்ளத்திலும் நடக்கும் நாடகப் பாங்குள்ள போராட்டத்தைக் காண்கிறோமா? வர்க்கப் போராட்டங்களில் வெற்றி பெறும் தொழிலாளி, வர்க்க ஒற்றுமை, விழிப்பு, தன் மதிப்பு உணர்ச்சிப் பெறுவதைப் போலவே, வர்க்கப் போரில் தற்காலிகமாகத் தோல்வியடைகிற நேரத்தில் பின்னுக்குத் திரும்பிப் பார்க்கிற - தனது பழைய கிராமத்தைத் திரும்பி பார்க்கிற, பழைய காலத் “தந்தை வழி”ப் பழக்கங்களையும் உறவுகளையும் எண்ணிப் பார்த்து, ஏங்கிப் பெருமூச்சு விடுகிற போக்கையும் கவனித்துச் சித்திரிக்கிறோமா? இப்படிப் பல மனப் போராட்டங்களை நடத்தும் ஆன்மிக வளமுள்ள தொழிலாளியைத் தமிழ் இலக்கியம் இன்னும் படைக்கவில்லையே!

விவசாயி மக்களைப் பாருங்கள். பண்டைக்கால முறைப்படி ஏர் பூட்டி உழுவது போல், டிராக்டர் வைத்து உழும் காட்சியைக் காணும் விவசாயியின் மனத்திலே எழும் எண்ணங்கள் எவை? நீர் இறைக்கும் மோட்டார் வைக்கிறதிலே அவன் காண்கிற “நாடகம்” யாது? நிர்மாணத் திட்டங்கள் நடக்கும் நற்பணியினூடே காண்ட்ராக்டர்களும், ஊழல் அதிகாரிகளும், அரசியல் திருடர்களும் கிராமத்தில் படை படையாக முகாம் போட்டு “முற்போக்குப்” பேசுவதைப் பற்றி அவன் நினைப்பு என்ன? புதிய விஞ்ஞானத்தையும், புதிய எதிர்காலத்தையும் பற்றி அவனது நினைப்புகள் என்ன? நகரமான இலக்கியக் குணச் சித்திரங்களை இவர்களிடையேயிருந்து உருவாக்க முடியுமே! வர்க்கப் போர் என்பது எவ்வளவு வளமான நாடகப் பண்பு கொண்டது, பார்த்தீர்களா? என்கிறார்.

அவர் தொடர்ந்து கேட்கிறார். நடுங்கிச் செத்துக் கொண்டிருந்த தலித்துகளிடையேயிருந்து ஒரு பக்கத்தில் வர்க்கப் போர் வீரர்களும், இன்னொரு பக்கத்தில் I.A.S. படித்த அதிகாரிகளுமாக எண்ணற்ற தலித்து வாலிபர்கள் வெளித் தோன்றியிருக்கிறார்களே! இவர்களின் மன அரங்கில் நடக்கிற, நடந்த நாடகத்தை எழுதி வைக்க யார் பேனா துடித்தது?

நமது பெண் குலத்திடையே பலர் வைத்தியர்களாகவும் எஞ்ஜினியர்களாகவும், ஆசிரியர்களாகவும், வக்கீல்களாகவும், அலுவலகப் பணியாளர்களாகவும், கலைஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும் பரிணமித்திருப்பதன் உள்ளடக்கத்தை நாம் இலக்கியத்தில் உணர்ந்து கொண்டோமா? பெண்ணுள்ளம் இந்தப் புதுமையை எப்படி ஏற்றுக் கொண்டது? அவ்வளவு லேசான காரியமல்லவே, புதிய கருத்துகளை ஏற்பது! பழமைக்கும் புதுமைக்கும் இடையே கருத்துப் போர் நிகழ்ந்திருக்க வேண்டுமே!

இப்படியே நெசவாளிகள், கொல்லர்கள் போன்ற சுதந்திரமான உற்பத்தியாளர்கள் முதல், ஆதிவாசிகள், நாடோடிகள் ஈறாக அத்தனை மக்களும் தனித் தனியாகவும், மொத்தமாகவும் புதிய நிலைமைக் கேற்பத் தமது பௌதீக ஆன்மிகத் தன்மைகளை மாற்றிக் கொள்வதில் படுகிற அவதிகள், ஏற்படுகிற அவல நிலைகள் குறித்து எத்தனை எத்தனை இலக்கியங்கள் படைக்கலாம்! சிந்தித்துப் பாருங்கள்.

இவையாவும் சேர்ந்து அமைந்த ஒரு முழுமைதான் சமுதாய யதார்த்தமாகும் (Social Reality ) என்கிறார் ஜீவா. வர்க்கப் போரைச் சித்திரிப்பது எனில், இம்முழுமையைக் கலை இலக்கியத்தில் உண்மை ஒளியோடு பிரதிபலிப்பது என்றே அர்த்தம். இம்முழுமைக்கு அடிச்சரடாக அன்று தேச விடுதலை இயக்கம் இருந்தது; இன்று சோஷலிச இயக்கம் இருக்கிறது.

அடுத்து இலக்கியவாதிக்கு அரசியல் வேண்டுமா என்ற கேள்விக்கு அழுத்தம் திருத்தமாக ஆம் எனப் பதிலளிக்கிறார் அவர். உலகப் புகழ் பெற்ற பண்டைக் கால கிரேக்க நாடகாசிரியராகிய அரிஸ்டொபேனஸ் எழுதிய நாடகங்கள் அப்பட்டமான அரசியலுக்கு அல்லவா கலை வடிவம் தந்துள்ளன? யூரிபிடிஸ், எல்கிஷ் போன்ற கிரேக்க நாடகாசிரியர்களும் அவ்வழியில்தானே சென்றார்கள்? விஞ்ஞான அறிவையும் லோகாயதவாதத்தையும் காத்துப் பேணுவதற்காக லுக்ரீஷியஸ் ஒரு மாகாவியத்தையே படைத்துப் புகழடைந்தாரே!

பண்டைக் காலம் போகட்டும், பின்னர் வந்த ஐரோப்பிய மறுமலர்ச்சி யுகத்தில் உலகக் கவியாக ஒளிரும் தாந்தே வரைந்த “டிவைன் காமெடி” என்கிற பேரிதிகாசம் அவர் காலத்திய அரசியலை நுணுக்கமாகச் சித்திரிக்கவில்லையா? ஐரோப்பிய மறுமலர்ச்சியின் அரசியல் சமுதாய ஆன்மிகச் செழுமையைத் தேக்கிப் புதிய மானுடத்தை வெளிப்படுத்துவன தாமே ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்?

இளங்கோவடிகள் தமது காப்பியத்தின் முப்பெரும் குறிக்கோள்களில் முதற்பெரும் குறிக்கோளாக “அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதை” வைக்கிறார்.... ஏன்? சமரச சன்மார்க்க வள்ளலார் கூட “கருணையிலா ஆட்சி கடிது ஒழிக” என்று அரசியல் பேசுகிறார் அல்லவா? நமது தலைவன் பாரதியைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? அவன் ஒப்பற்ற ஜனநாயக அரசியல் பெரும்புலவன் ஆயிற்றே!..... மேற்கூறிய இலக்கிய வரலாற்று உண்மைகளில் இருந்து “எழுத்தாளனுக்கு அரசியல் வேண்டாம்” என்பது எவ்வளவு போலிக் கூற்று என்பது யாருக்கும் புரியும். சமுதாய வாழ்க்கையை ஆண்டு அனுபவிப்பதில், கட்டிக் காப்பதில் அரசியல் முதல் இடம் பெறும் பொழுது, கலைஞனுக்கும் எழுத்தாளனுக்கும் அரசியல் வேண்டாமென்பது, அறிவுச்சுடர் கொளுத்தவும், உணர்ச்சிப் பெருக்கூட்டவும் செய்ய வேண்டிய சிறந்த சமுதாய மனிதர் களாகிய எழுத்தாளனையும், கலைஞனையும் அரைகுறை மனிதனாகச் செய்யும் தீய கருத்தோட்டமாகும். இது மட்டுமல்ல, துருவிப் பார்த்தால் இவ்வாறு பேசுகிறார்கள் முன்னேற்றக் கருத்துகளுக்கு வழிமறிச்சான்களாக மாறிப் பிற்போக்குக்குக் கற்கோட்டையாகவும் இரும்புக் கதவாகவும் விளங்க முயற்சிக்கிறவர்கள் என்பது தெளிவாகப் புலனாகும்.

இதைப் போல நாட்டுப் புறக் கலைகளையும் சேகரித்து பேணிக்காத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார் ஜீவா. இக்காலத்தில் மிகக் கடுமையான மோதல் வடிவத்துக்கும் உள்ளடக்கத்துக்குமே. எது முதன்மையானது, வடிவமா உள்ளடக்கமா? ஜீவா சொல்லுகிறார், “கருத்துக்கும் கலைக்கும் உள்ள உறவைக் கவனிக்க வேண்டும். கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பவன் நான், கலைக்காகக் கலை என்ற கொள்கையுடையவன் அல்ல நான். வாழ்வுக்காகக் கலை என்ற கொள்கையுடையவன்தான் நான். ஆனால் சொல்லும் பொருளும், உருவமும் உள்ளடக்கம் பொருத்தமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து....” அவர் மேலும் சொல்கிறார்; “கலை இலக்கியத்தை வளர்க்க முன் வந்த நாம் அனைவரும் கலையின் உருவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கலை இலக்கியப் படையலுக்குத் தனித் தன்மை உண்டு. சொல், வாக்கியம், உவமை, கற்பனை ஆகியவை மிக முக்கியம். காலத்தையும் தாண்டி நம்மை வசீகரிக்கும் அம்சம் கம்பனிடம் என்ன இருக்கிறது? கவிதை அழகாகிய கலை அழகு தானே!..... கலாசாரத்தின் இதர அம்சங்கள் போல் அல்ல கலை, கலைக்குக் கண் கூடான அறிவு இன்றியமையாதது.

அறிவுணர்ச்சித் தரத்தை விட, புலனுணர்ச்சித் தரத்தை விட, புலனுணர்ச்சி உருவாக்கச் சித்திரம் (Imagery) தாழ்ந்த நிலையில் இருக்கலாம். ஆனால் அதுவன்றிக் கலை இருக்க முடியாது.... கலையைக் கலைக் கண் கொண்டு பாராமல் கவிஞர்களையும் கலைஞர் களையும் நம்மிடம் உருவாக்கியுள்ள சில எண்ணங்களை, முடிவுகளை, அளவு கோலாகக் கொண்டு அளந்து பார்த்துப் புறக்கணிக்க முற்படுவது சரியல்ல” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் அவர்.

உண்மைக் கவிதை எங்கிருந்து பிறக்கிறது? ஜீவா சொல்லுகிறார்: கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் உண்மைக் கவிதை பிறக்காது. வாழ்க்கையிலிருந்து தான் உண்மைக் கவிதை பிறக்கிறது. பல இடது சாரி ஆய்வாளர் களிடையே அக்காலத்தில் வரலாற்று வர்க்கப் பார்வை வலுவாக இருந்தது. இலக்கியத்தை இனக்குழு இலக்கியம், நில உடைமை இலக்கியம், முதலாளித்துவ இலக்கியம் என்று பிரித்த இவர்கள், இனிமேல் வரப்போகும் சோசலிச இலக்கியமே இலக்கியம் என்று வாதிட்டார்கள். இந்த வறட்டுச் சூத்திரப் போக்கை நிராகரித்தார் ஜீவா. கலையின் வளர்ச்சி இரண்டு நிலைகளைக் கொண்டது.

ஒன்று கிடைநிலை வளர்ச்சி, அதாவது சமமட்ட வளர்ச்சி. இன்னொன்று செங்குத்து வளர்ச்சி. கிடைநிலை வளர்ச்சியை ஜீவா அங்கீகரிக்கிறார். ஒவ்வொரு சமுதாய காலகட்டத்திலும் கலையின் தரம் திட்ட வட்டமாக வேறுபடுகிறது என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். “ஒவ்வொரு சகாப்தத்திலும் கலையின் உருவமும் உள்ளுறையும் தெளிவாக மாறுபாடு அடைந்து, அந்தக் கால முத்திரையுடன் வளர்ந்து முன்னேறி வருகிறது” என்றார் ஜீவா. நிலப்பிரபுத்துவக் கலைக்கும், முதலாளித்துவக் கலைக்கும், சோசலிசக் கலைக்கும் இடையே திட்டவட்டமான வேறுபாடு காண முடியும். அதோடு கலையின் உருவமும் உள்ளுறையும் காலத்துக்குக் காலம் முன்னேறி வருவதையும் பார்க்க முடியும் என்கிறார் அவர்.

ஆனால் இது போல் கலையின் செங்குத்தான வளர்ச்சியில் காலத்துக்குக் காலம் வேறுபாடும் முன்னேற்றமும் தெரிய முடிவதில்லை என்கிறார் அவர். அவர் தொடர்கிறார் “செங்குத்தான வளர்ச்சி என்று நான் குறிப்பிடும் பொழுது கலையின் ஆழம், செழுமை, அழகு, அழகுணர்ச்சியின் நிறைவு ஆகியவைகளைக் குறிப்பிடுகிறேன். இந்தக் கலை அம்சங்களில் புதிய கால கட்டம் பழைய கால கட்டத்தை விட உயர்ந்து விளங்க வேண்டும் என்ற நியதி இல்லை”.

சங்க காலத்தை விட காப்பிய காலத்திலும், காப்பிய காலத்தை விட தற்காலத்திலும் பொதுவாகக் கலை முன்னேறியிருக்கிறது. ஆனால் இளங்கோவை விட திருதக்க தேவரை விட கம்பனை விட ஆழம், செழுமை, அழகு, அழகுணர்ச்சியின் நிறைவு ஆகிய அம்சங்களில் இன்று நாம் முன்னேறியிருக்கி றோம் என்று சொல்லிவிட முடியுமா? முடியாது என்கிறார் அவர். கலையை எப்படி அணுக வேண்டும் என்பதில் ஜீவாவின் அழுத்தம் திருத்தமான வழி காட்டுதல் இது.

சோசலிச எதார்த்த வாதம் என்ற சொல்லையும் தம் பாணியில் செழுமைப்படுத்துகிறார் ஜீவா. ‘சமுதாய உண்மை களை உள்ளது உள்ளபடியே எடுத்துக் கொள்வது, அதாவது அதன் முரண்பாடுகளுடன் சிக்கல்களுடன், வளர்ச்சியுடன் எடுத்துக் கொள்வது. சிறு சிறு சலனங்களில் வாழ்க்கை வெளிப்படுத்தும் பிற்காலப் பேரெழுச்சிகளை உய்த்துணர்வது, அவற்றை நெளிவு சுளிவுடன், கலை அழகுடன் தீட்டிக் காட்டுவதே சோசலிச எதார்த்தவாதம் என்று சோசலிச எதார்த்த வாதத்தின் செயல் தளத்தைப் பிரமாண்டமாக விசாலப் படுத்துகிறார் அவர்.

அது மட்டுமா? பாமர மக்களின் பாடல்கள் என்று ஓரங்கட்டி ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு மக்களின் பாடல்களைத் தொகுத்து ஆய்வு செய்யவும், சமூக எழுச்சிக்காக அந்தப் பாடல்களைப் பயன்படுத்தவும் முறையாக அடித்தள மிடுகிறார்.

அவர் இறுதியாக “நாளை விரி சோதி என மேதினியை மேவத்தகு ஆற்றல் படைத்த இன்றைய உண்மைத் துணுக்குகளை, அனுபவக் கூறுகளை, உணர்ச்சித் துளிகளை, ஆதர்சக் கதிர்களை, கலை இலக்கியத் துறையிலே ஆட்சி கொண்டு, வாழ்வின் மீட்சியிலே மக்கள் வெற்றி பெறப் பணிபுரியுங்கள்” என்று கலை இலக்கியப் படைப்பாளிகளை அறை கூவி அழைக்கிறார். இந்த வழிகாட்டுதல் என்றென்றும் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும், ஒளி கூட்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com