Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007

நானும் புத்தகங்களும்

வாசிப்பு சுகம்
-அ. மங்கை

எத்தனை அலுப்போடு படுக்க நேர்ந்தாலும் சடங்குத் தனமாகவாவது பத்து பக்கங்கள் படிக்காமல் தூங்க முடிவதில்லை. இப்படி ஒரு பழக்கமாக என்னை வரித்துக் கொண்ட வாசிப்பு எப்படி உருவானது, எப்படியெல்லாம் உருமாறியது என்பதை நினைத்துப் பார்ப்பது உவப்பான நினைவுப் பயணமாகவே உள்ளது.

Mangai எனது வாசிப்பிற்கு அடித்தளம் இட்டது எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த எனது அம்மா நான் நான்காம் வகுப்பில் இருந்தபோது வியாசர் விருந்து நூலில் ‘திரௌபதை’யை ‘தி-ரெ-ள-ப-தை’ என்று படித்ததைத் திருத்தியவர் அவர். எல்லா நடுத்தரவர்க்கக் குடும்பங்களைப் போலவே எனது தாத்தாவும் கல்கி இதழ் தொகுப்பாளர். இன்றும் எனது வீட்டில் இருந்து நான் விரும்பும் சொத்து அந்த ‘பைண்ட்’ செய்யப்பட்ட கல்கி தொடர்கதைகள் தாம்!

எனது பள்ளிப் பருவத்தில் கட்டாய நூலக நேரம் உண்டு. போட்டி போட்டுக் கொண்டு படிக்கும் நண்பர்கள் வட்டமும் உண்டு. ஆனால் தெரிந்தெடுத்த வாசிப்பு இருந்ததாகத் தோன்றவில்லை. எனது பள்ளிப் படிப்பு முடித்து, கல்லூரிக் கல்விக்கான தேர்வைச் செய்யும் போது எனது பள்ளி ஆசிரியரும், எனக்கொரு முன்மாதிரிப் பெண்ணாகவும் இருந்த ராஜேஸ்வரி டீச்சர் என்னை இலக்கியம் படிக்கச் சொன்னார். அதுவும் ஆங்கில இலக்கியம்! அதுவரை தமிழ் வழிக் கல்வியில் கற்ற எனக்கு ஆங்கிலமும் சரளமாக வந்தது. ஆனால் முதன்மைப் படிப்பாக எடுத்துப்படிக்கும் துணிச்சல் இல்லை. அப்போது அவர் சுட்டிக் காட்டியது எனது வாசிப்பு நேசத்தைத்தான்! எனது ஆளுமை குறித்த பதிவில் வாசிப்பு முக்கிய இடம் வகிக்கத் தொடங்கியதும் அதன் பின்னரே!

தஞ்சை போன்ற ஊரில் ஆங்கில இலக்கியம் படிப்பதென்பது பாடத்திட்டத்தில் உள்ள நூல்களைப் படிப்பதாகவே சுருங்கி இருந்தது. ஆசிரியர்கள் எவரேனும் வலியுறுத்தினால் மட்டுமே பாடத்திட்டத்தில் இடம்பெறாத நூலைத் தேடும் உந்துதல் தோன்றியது. அந்த வகையிலும் எனக்கு எழுச்சியூட்டக் கூடிய ஆசிரியர்கள் ஓரிருவராவது என் வாழ்வில் எதிர்ப்பட்டவாறே இருந்தனர்.

தாகூரின் ஒரே ஒரு நாடகம் பாடதிட்டத்தில் இருந்த போது, வகுப்பு முழுவதையும் அவரது அனைத்து நாடகங்களையும் படிக்க வைத்த ஆசிரியர் இருந்தார். தேடிப் படித்தோம். இலக்கியம் போன்ற படிப்பின் வரையறைகளற்ற பரப்பை எனது குடும்பத்தினர் புரிந்து கொண்டனரா என்று தெரியவில்லை. தினம், தினம் புத்தகத்தை வைத்துக்கொண்டு நேரம் கடத்துவதாகப் பலமுறை ஏச்சுப்பட்டதுண்டு, ஒரு விதப் பெருமிதத் தொனியோடு’ புத்தகம் இருந்தால் பசி கூட மறந்துபோகும்’ எனப் பாராட்டப்பட்டதும் உண்டு.

முதன்முதல் வர்ஜீனியா வுல்ஃ படித்த போது கிளர்ந்த புதுமை உணர்வை இன்றும் நினைவு கூர்கிறேன். ஒரு சொல்லாலும், தொடராலும் இப்படி மனதைக் குடைய முடியுமா என்று வியக்கவைத்தன அவரது எழுத்துக்கள். இன்றும் அவர் சொன்ன ‘அவரவர்க்கான அறை’ என்பதுதான் எனக்கான கொள்கையாகத் திகழ்கிறது.

தமிழ் மொழியில் கல்கி போன்ற எழுத்துக்கள் மட்டுமே அறிந்திருந்த எனக்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படம் ஜெயகாந்தனை அறிமுகப்படுத்தியது. இரண்டாமாண்டு இளங்கலை படித்துக் கொண்டிருந்த எனக்கு நூல்கள், திரைப்படங்களையொட்டிக் காரசாரமான விவாதங்கள் நடத்தும் இளைஞர்கள் வட்டம் அறிமுகமானது. இப்படியொரு உலகம் சாத்தியம் என்பதைக் காட்டியதில் அரசுவிற்குப் பெரும் பங்கு உண்டு. பேச்சுப்போட்டி மேடைகளில் இருபது அம்சத் திட்டத்தின் ‘இந்தியனாய் இரு’ கோஷத்தின் தேசப்பற்றைவிதந்து பாராட்டும் பெண்ணாக இருந்த எனக்கு, எதார்த்த உலகைக் காட்ட விரும்பிய நட்பாக அரசுவின் தொடர்பு கிட்டியது.

தமிழ் இலக்கியப் பரப்பை எனக்கு காட்டியே தீருவதில் வீம்பாக இருந்து வாரம் ஒரு நூலாவது தந்து, படிப்பதோடு நில்லாமல், விவாதிக்கவும் செய்தது அரசுவின் பரிச்சயம். காண்டேகரின் ‘கிரௌஞ்ச வதம்’ குறித்துப் பக்கம் பக்கமாக எழுதி விவாதித்தோம். அரசு தஞ்சையை விட்டுச் சென்னைக்கு வந்தபோது எனக்களித்த நூல் ஜெயகாந்தனின் ‘ரிஷி மூலம்’. அவரது தொகுப்புகளில் இது வித்தியாசமானது. அகப்புற உலகங்களின் பல்வேறு ஆழங்களைக் காட்டும் கதைகள் இதில் இடம்பெற்றன. அதன்பிறகு ஆங்கில இலக்கியம் படிப்புக்கு; தமிழ் இலக்கியம் ஆர்வத்திற்கு என்று இரண்டும் ஒரு சேரப் படிக்கத் தொடங்கினேன். நான் முதுகலை படிக்கும்முன் கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியப் பரப்பை அறியக் கூடியதாக இருந்தது.

இலக்கியப் பனுவல்களின் வாசிப்போடு சேர்ந்து கொண்டது அரசியல் கல்வி. இரா.ஜவஹர், கார்க்கி நூலக விருந்தினராக தமது ‘எந்தப் பாதையில்?’ என்ற நூலை எழுதியபோது அவரது உரைக்கல்லாக நான் இருந்தேன். ‘எனக்குப் புரிய வைத்துவிட்டால், எல்லாருக்கும் புரியும்’ என்ற அளவில் தான் எனது மார்க்சீயம் சார்ந்த அறிவு அன்று இருந்தது. தயங்காமல் நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மேற்கோள்களையும் சம்பவங்களையும் சேர்த்தார் ஜவஹர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் விதவிதமான வாசகர் வட்டங்களை அமைத்துக் கொண்டு மார்க்சீய மூலநூல்கள், ராகுல்ஜி, கோசாம்பி நூல்கள், மார்க்சீய இலக்கியத் திறனாய்வுகள் போன்றவற்றைப் படிக்க முடிந்தது. ஒருவகையில் எனது கோட்பாட்டு ரீதியான வாசிப்பு கூட்டு அனுபவத்தின் முயற்சியாகவே இருந்ததெனத் தோன்றுகிறது.

அன்றாட வாழ்க்கைச் சிக்கல்கள் குழந்தை வளர்ப்பு ஆகியவற்றின் மத்தியில் இத்தகைய வாசகர் வட்டங்கள் தான் வாசிப்பைத் தக்க வைக்க உதவின.

நாடகம் குறித்த படிப்பையும் சென்னைக் கலைக்குழுவில் அப்படித்தான் நடத்திய நினைவு. ‘நாங்கள் வருகிறோம்’ நாடக ஒத்திகையின் போது பிரெக்ட் நாடகங்கள், நாடகக் கோட்பாடு ஆகியவற்றை விவாதித்தது நினைவிருக்கிறது. பிறகு பிகேடரின் மக்கள் அரங்கத்தைத் தேடிப்படித்தோம்.

பல நேரங்களில் தேவை கருதி மட்டுமே படிக்கிறேனோ எனத் தோன்றுகிறது. உதாரணமாக, பெண் எழுத்து குறித்த விவாதம் வெகுவேகமாகக் கிளம்பிய போது ஹெலன் சிசூ, ஆத்ரே லார்ட் என்று புதுப் பட்டியல் கிளம்பியது. அதே போலவே சமீப கால பின் காலனீயம் தொடர்பான வாசிப்பும். நமது சூழல், நடைமுறை ஆகியவற்றில் இருந்து மேற்கிளம்பும் சிக்கல்களைப் புரிந்து கொள்வதற்கான தேடலில் இந்த வாசிப்பு அர்த்தம் பெறுகிறது. பெயர்களை உதிர்க்கும் மேதாவித்தன உச்சரிப்புகள் எனக்குள் எரிச்சலைக் கிளப்புகிறது.

வாசிப்பை என்னால் ஒரு டாம்பீகமாக எதிர்கொள்ள முடிவதில்லை. பல நேரங்களில் இலேசான வாசிப்புக்கான நூல்களை, மண்டையைப் பிய்க்கும் கோட்பாட்டு நூல்களோடு சேர்த்துப் படிக்க முடிகிறது. தொடங்கிய நாவலை முடிக்கும் வரை பைத்தியம் போல் அலையச் சொல்கிறது. சில நூல்களை மீண்டும் மீண்டும் புரட்டச் சொல்கிறது. நூல்களின் குரல்கள் ஸ்தூலமாகத் தோன்றிச் சிரிப்பையும் அழுகையையும் கோபத்தையும் கிளப்புகின்றன. மொத்தத்தில் வாசிப்பு கிளப்பும் வாத-பிரதி வாதங்களை விட வாசிப்பின் சுகத்தை இழக்காமல் இருப்பதே எனக்கு முக்கியமாகப்படுகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com