Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007

நூல் விமர்சனம்

நள சரிதம்
ஜெய்ந்தி நாகராஜன்

முன் அட்டை முதல் பின் அட்டை வரை படித்தேன். என் இதயத்தோடு அது ஒட்டிக்கொண்டது. கெட்டியாக.

அட்டைப் பட அழகில் மயங்கியவளாய்ப் பல நிமிடங்கள்.... புத்தகத்தைப் படித்ததும்.... பிரமிப்பில் பலப்பல மணித்துளிகள்.

அப்பப்பா! என்ன ஒரு வீச்சு! என்ன ஒரு நடை!! அது இந்நூலில் வரும் அன்ன நடையையும் விஞ்சி நின்றதே! வர்ணனைகள்! உவமைகள்! கற்பனைகள்! எனப் புத்தகம் முழுவதும் வண்ணக்கோலம் படைத்த கிருஷ்ணருக்குப் பாராட்டுக்கள். ‘நள சரிதம்’ - பள்ளியில் படித்தது. தமயந்தியின் சிறப்பை அன்னம் நளனுக்கு உரைக்க, நளனின் பெருமைகளை அது தமயந்தியிடம் கூற - இருவரையும் ஒருங்கிணைத்தது அன்னத்தின் தூது. இப்பாடத்தை இனியதொரு படைப்பாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

அந்த அன்னத்தை ஒரு சுவைமிக்க பாத்திரமாக்கி வெகு அழகாக அதனைப் பறக்க விட்ட பாங்கு போற்றத்தக்கது.

அன்னம் வருவதும், அது செல்வதும் கொள்ளை அழகு. ‘ஹைக்கூ’ கவிதைபோல் நூலினுள் கொடுக்கப்பட்ட தலைப்புகள் பெண்ணானதால் தலைப்பு கவர்கின்றதோ?) என்னை மலைக்க வைக்கின்றன.

மாங்கனியால் பிறந்த பைங்கிளி / மீண்டும் பூத்தது குறிஞ்சி / நாகம் கொடுத்த கொடை / கழுத்தில் பதிந்த குறுவாள் / கிடைத்தது நள பாகத்தில் ஒரு பாகம் அத்துணையும் கவி நயம் மிக்க தலைப்புகள்.

“இதைக் கேட்ட நளனின் இதயம் தமயந்தி மேல் ஏற்பட்ட காதல் பாரத்தால் சடக்கென முறிந்தது” (ப. 26) நளன் காதல் வயப்பட்டதை ஆசிரியர் அழகாக விளக்குகிறார்.

“அரசே! நான் அன்னப் பட்சிதான்! தமயந்தி அல்ல! மகிழ்ச்சியில் என் கழுத்தைப் பிடித்து இந்த இறுக்கு இறுக்குகிறாயே! உயிரே போய் விடும் போல் அல்லவா இருக்கிறது! போன ஜென்மத்தில் என் போன்ற பட்சி இனங்களின் உயிரை வாங்கும் வேடனாக இருப்பாயோ! தமயந்தி மெல்லியவள். அவளை இப்படி இறுக்காதே” (ப. 21)

காதல் படுத்தும் பாட்டை இந்த வரிகளில் வைக்கிறார். அதனை அன்னப் பட்சியின் வாயிலாகக் குறும்பான வார்த்தைகளில் சொல்ல வைப்பது வெகு அழகு!

ஆசிரியரைப் பற்றி நன்கறிந்தவர்கள் இவரால் காதல் வரிகளைச் சுவைபட எழுத முடியுமா? என்ற எண்ணம் கொண்டவர்களாயிருப்பார்கள்.

ஆனால் அவர்களே இந்நூலைப் படித்தால் தங்கள் எண்ணத்தை நிச்சயம் மாற்றிக்கொண்டு விடுவர்.

மேலும் நளன் முன் பிறவியில் வேடனாக இருந்ததைச் சுட்டும் பாங்கு அற்புதம். அதேபோல் அன்னத்தின் முன் பிறவியைத் தமயந்தி வாயிலாக வெளிப்படுத்துகிறார் (பக். 57).

“கைத்தாமரைகளால் முகத் தாமரையை / அவள் மூடும் அழகுக் கோலம் கண்டன / நந்தவனத்துப் பொய்கையில் பூத்திருந்த / நிஜத் தாமரைகள். அடடா! நாங்கள் அத்தகைய அழகில்லையே! எனத் தோல்வியால் தலை குனிந்தன” (பக். 34). தலை குனியும் தாமரைக்குப் புது விளக்கம் அளிக்கிறார் ஆசிரியர்.

“ஏன் பாலில் வேப்பிலைச் சாறைக் கலந்தாய்? பால் இந்தக் கசப்பு கசக்கிறதே! என்ன டீ! இது! நெருஞ்சி முட்களைப் படுக்கையில் ஏன் தூவி வைக்கிறீர்கள்! விளையாட்டிற்கும் ஓர் அளவு வேண்டாமா? (பக். 36-37) காதல் வயப்பட்ட தமயந்தியின் மெய்ப்பாடுகளை ஓவியமாகச் சித்திரித்தது வியக்க வைக்கிறது.

“பாலும் கசந்ததடி-சகியே” / “பாலிருக்கும் பழமிருக்கும் / பசியிருக்காது / பஞ்சணையில் காற்று வரும் / தூக்கம் வராது” என்ற கவிதை வரிகள் கண்ணுக்குள் கண்ணாமூச்சி ஆடிச் செல்கின்றன.

“நூலாய் மெலிவது தையலுக்கு நல்லதுதானே தையலாய்த் தெரியவில்லை; மையலாகத் தெரிகிறாள் (ப. 37) சிலேடைகள் நூல் முழுதும் முத்துக்கள் போல் கொட்டிக் கிடக்கின்றன.

கற்பனைப் பாத்திரங்கள் என்று சொல்லப்படும் இரத்தின வியாபாரி கேசினி, சுனந்தா ஆகியோர் நம் மனத்தை முழுமையாக ஆக்கிரமித்து விடுகின்றனர். இது ஆசிரியரின் பாத்திரப் படைப்பாற்றலுக்குக் கிடைத்த மிகப் பெரும் வெற்றி என்று கூறலாம்.

தமயந்தி பட்ட துன்பங்களைப் படிக்கும்போது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய் வருவதைத் தடுக்கமுடியவில்லை.

கார்க்கோடகன் எனும் பாம்பு தன்னை (ஏ) மாற்றியதை விபரமாக வார்ஷணேயரிடம் நளன் சொல்லும் அழகு நயமான பகுதி; கவிதை போல் இனிக்கிறது (ப. 123). அன்னத்தின் பிரிவால் கனத்த இதயத்தைச் சற்றே இலேசாக்க உதவுகிறாள் கேசினி; சுனந்தாவும் உதவுகிறாள்.

வந்திருப்பது நளன்தான் என்பதைக் கண்டு பிடிக்க தமயந்தி கையாளும் உத்திகள் அழகாகப் பின்னப்பட்டிருக்கின்றன.

பெண் அறிவில் கூர்மையானவள் என்பதை மெய்ப்பிக்கும் பாத்திரமாய் தமயந்தி... தமயந்தி அழகில் மட்டுமல்ல / பண்பில் மட்டுமல்ல / பொறுமையில் மட்டுமல்ல / அடக்கத்தில் மட்டுமல்ல அறிவிலும் மேம்பட்டவள் என்பதை விளக்கி” பெண்ணின் பெருமையை” இந்நூல் பேசுகிறது.

மொத்தத்தில் கிருஷ்ணனின் கீதோபதேசம் போல் திருப்பூர் கிருஷ்ணனின் ‘நள சரிதம்’ இனிக்கிறது.

திருப்பூரின் இலக்கியப் படைப்பில் இது ஒரு மகுடம்.

ஓவியர் ஸ்யாமிற்குத் தனிப் பாராட்டுகள்!
நள சரிதம்
ஆசிரியர்: திருப்பூர் கிருஷ்ணன்,
வெளியீடு: திருப்பூர் குமரன் பதிப்பகம், 57-B, பத்மாவதி நகர்,
விருகம்பாக்கம், சென்னை - 92, விலை : ரூ. 120/-



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com