Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007

நூல் அறிமுகம்

ஃபுர்னீக்காவின் தமிழகம்
கா. அய்யப்பன்

தமிழ் தமிழர் குறித்த அடையாளங்களைச் சோவியத் மக்களிடம் வரவேற்பை பெறச் செய்ததில் ஃபுர்னீக்காவின் பங்கு கவனிக்கத்தக்கது. சோவியத் இந்திய நட்புறவுக் கழகத்தின் உறுப்பினரான விதாலி ஃபுர்னீக்கா தமிழ், தமிழர் பண்பாட்டின் மீதும் தமிழ் படைப்பாளிகள் மீதும் அக்கறை கொண்டவர். 1969 முதல் தனது கருத்துகளை எழுத்தின் மூலமாக தம்மக்களுக்கு அளித்தவர். 114க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் நூல்களின் வழி தமிழகம் மட்டுமல்லாது பிற நாட்டின் உறவுமுறைகளை அவர்களின் பண்பாட்டு விழுமியங்களை மக்களோடு பகிர்ந்து கொண்டவர்.

இப்படியான அடையாளங்களோடு அறியப் படவேண்டியது ஃபுர்னீக்காவின் “பிறப்பு முதல் இறப்பு வரை” என்ற மொழிபெயர்ப்பு நூல். தனது பயண அனுபவத்தின் ஊடான பதிவுகளைப் பதிமூன்று கட்டுரைகளில் தந்திருக்கிறார். தமிழரின் நெடுங்கால வாழ்வியல் முறைமைகளில் காணக் கிடைக்கும் பண்பாட்டு அடையாளங்களை அக்கறையோடு பதிவு செய்திருக்கிறார். தமிழரின் வாழ்க்கை முறையின் ஊடான சடங்குகளைக் கண்டு வியக்கும் அவர் இந்திய மற்றும் பிற நாட்டுப் பண்பாட்டு முறைமைகளோடு அதைப் பொருத்தி பார்க்கவும் செய்திருக்கிறார்.

தமிழரின் பழமையை விளக்க முயலும் ஃபுர்னீக்கா வழிவழியாகச் சொல்லப்பட்டு வந்த தரவுகளைத் தொகுத்தும் அதில் தனது கருத்தைச் சேர்த்தும் தந்திருக்கிறார். “இந்தியப் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதிகளை இன்னும் ஆழமாக ஆராய்கின்ற போது தமிழர்களின் பண்டையப் பண்பாட்டுச் சுவடுகளைக் காணக் கூடிய நாள் வரலாம்”, என மரபு வழி வந்த நாடு அல்லது தமிழர் யார்? என்ற கட்டுரை விளக்கும் முறை தமிழரின் பழமையை இன்னும் உறுதி செய்ய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனைக் காட்டுகிறது.

தமிழ் மக்களின் பிறப்பு - இறப்பு இவை இரண்டிற்கும் இடையேயான வாழ்க்கைச் சூழல், சடங்கு நம்பிக்கை சார் பண்பாட்டுக் கட்டமைவுகள் ஆகியவற்றைத் தனக்கான அனுபவப் புரிதலோடு விளக்குகிறார்.

குடும்பப் பெயர்களோ தந்தைவழிப் பெயர்களோ இல்லாத இனம், மனிதவாழ்வின் நான்கு கட்டங்கள், வயதுக்கு வருதல், சாசுவதமான இணைப்பு, ஈமவிறகு அடுக்குவரை, காலனின் வலிமை, காலவெள்ளம் முதலான கட்டுரைகள் தமிழரின் பொதுவான சில வாழ்வியல் அடையாளங்களைப் பதிவு செய்திருக்கிறது. தமிழக விழாக்கள், வாழ்வின் தாளயக்கூறு இரண்டு கட்டுரையும் நாட்டார் வழக்காறு தொடர்புடையனவாக இருக்கின்றன. தமிழரின் எண் கணித முறைமையினையும் இன்னும் எண்ணிக்கை சார்ந்த நம்பிக்கை களையும் ‘எண்களின் மந்திரம்’ கட்டுரை விளக்குகிறது.

‘நிலை பேருடைய மகிழ்ச்சி’ என்ற கட்டுரை இனவரைவியல் சார்ந்து அமைகிறது. “திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தது ஸ்ரீவைகுண்டம். அங்குள்ள பிரிவினர் கோட்டை வீட்டுப் பிள்ளைமார் என்பார்” என்று அவ்வின மக்களின் நம்பிக்கை சார்ந்த வாழ்க்கை முறைமையினை இன வரைவியல் முறையில் பதிவு செய்திருக்கிறது. ‘யாரும் இந்திய இசைக் கருவிகளும்’ என்ற கட்டுரை தியாகராசரின் ஆளுமையை மட்டுமே விளக்குகிறது.

பல சாதிகளும் சாதிக்கொரு சடங்குகளும் கொண்ட தமிழரின் வாழ்க்கை முறைமையினைத் தமிழ் மொழி, இனம் தாண்டிய ஒருவரால் விளங்கிக் கொள்வதென்பது சிக்கலானது. ஃபுர்னீக்கா புரிந்து கொண்ட தமிழகம் என்பது அவரின் விமானப் பயணம், உணவு விடுதி ஆகியவற்றில் உண்டான உறவுசார் புரிதலும், “மக்களை நேரடியாகச் சந்தித்ததன் வாயிலாகவும் பேட்டிகள் வாயிலாகவும் தமிழ்க் கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் வாயிலாகவும் செய்திகளைச் சேகரித்துக் கொண்டு வந்தேன்” என்பதன் ஊடாகவும் உண்டானது. அப்படியான புரிதல் அய்யர், அய்யங்கார், பிள்ளைமார், செட்டியார் போன்ற மேல் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை முறைமை யினைக் கொண்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் மீதான மேலோட்டமான புரிதலும் பயண அனுபவத்தின் ஆழமான அனுபவமும் கட்டுரையின் தன்மை யினை மாற்றியிருக்கிறது.

ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் பாரதியார் பாடல், திருக்குறள், பழமொழி, பொன்மொழி ஆகியனவற்றிலிருந்து சில வரிகளைச் சொல்லித் தொடங்குவது பொதுத்தன்மை. தமிழ் இலக்கியத்தினூடாகத் தனது கருத்துக்கு வலுசேர்க்க நினைக்கும் ஃபுர்னீக்கா ஜெயகாந்தனின் தாசன் என்பது கவனிக்கத்தக்கது. நாட்டார் மக்களின் மீது ஈடுபாடு கொண்டவராக ஒவ்வொரு கட்டுரையையும் தொடங்கும் ஃபுர்னீக்கா இடை யிடையே தனது புரியாமை சார்ந்த ஆளுமையையும் காட்டியிருக்கிறார்.

முருகன் சிவன் ஆகிய கடவுள்களை வணங்குகிறவர்கள் சைவர்கள் எனவும், விஷ்ணு திருமாலை வணங்குபவர்கள் வைணவர்கள் என முடிவிற்கு வருவதைக் காட்டுகின்றன. ஆனால் சைவர்கள், பூணூல் தரித்தும், லிங்கம் அணிந்தும் ஆச்சாரத்தோடு இருப்பவர்களாகவே தமிழ்ச் சூழலில் அறியப்படுகிறது.

“தமிழ் மொழியில் பேசக் கூடியவர்களது வேகமானது உலகத்திலேயே உயர்வானது” என்ற அவரின் முடிவு தமிழ் மொழி உச்சரிப்பின் நெகிழ்வுத் தன்மை உலகிலுள்ள மொழிகளைவிட மேலானது என்பதனைக் காட்டுகிறது. பரவலான பயண அனுபவப் பதிவுகளைச் சுமந்து நிற்கும் இந்நூல் “மூடநம்பிக்கைக்கும் விஞ்ஞானத்திற்குமான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது” என்ற முடிவையே முன்மொழிகிறது. அவரின் கடுமையான பயண அனுபவமும், வாசிப்புப் பழக்கமும் நூல் முழுக்க எங்கும் பரவிக் கிடக்கிறது.

ஹெலேனா ப்ரெய்ன்ஹால் தெரோவா (செக்கோஸ்லா வாக்கியா)வின் மதிப்புரையும் ஃபுர்னீக்காவின் முன்னுரையும், நதாலிஸா கூஸெவாவின் முடிவுரையும் கொண்டுள்ளதோடு, ஃபுர்னீக்காவின் வாழ்க்கைக் குறிப்பை முதலிலும் அவரின் ஒட்டுமொத்த (1986 வரை) படைப்புகளின் விபரங்கள் இறுதியிலும் இடம்பெற்றிருப்பது சிறப்பு.

இந்நூல் ருஷ்ய மொழியில் 1985இல் 30,000 பிரதிகளில் வெளியாகியிருக்கிறது. அதே சமயம் 1985இல் நடந்த புத்தக கண்காட்சியில் இந்நூல் தமிழாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஃபுர்னீக்காவும் நா. முகம்மது செரீபும் தமிழாக்கம் செய்திருக்கின்றனர் என்ற தரவுகளை ஃபுர்னீக்காவின் முன்னுரை வழிப்பெற முடிகிறது.
1986இல் எழுதப்பட்ட அம்முன்னுரை தமிழ் மக்களாகிய உங்களால் இந்நூல் எப்படி பார்க்கப்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பை முன்வைக்கிறது.

பிறப்பு முதல் இறப்பு வரை

ஆசிரியர்: விதாலி ஃபுர்னீக்கா, தமிழில் : என். முகமது ஷெரீப்,
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல்
எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 98, விலை: ரூ. 75.00
கட்டுரையாளர் முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னைப் பல்கலைக்கழகம்



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com