Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007

தஸ்தேயேவ்ஸ்கியும் டால்ஸ்டாயும்
க. இந்திரசித்து

ரஷ்ய எழுத்தாளர்களான தஸ்தேயேவ்ஸ்கி, டால்ஸ்டாய் ஆகியோர்களைப் பற்றி ஆங்கில எழுத்தாளர் சி.பி. ஸ்நோ எழுதிய நூலை நா. தர்மராஜன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மூன்று மாமேதைகள் ஒன்றிணையும் போது ஏற்படும் அறிவின் பாய்ச்சலையும் சிந்தனை வீச்சையும் இந்நூலில் பார்க்க முடிகின்றது. தஸ்தேயேவ்ஸ்கி, டால்ஸ்டாய் ஆகிய இருவரின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் சொல்லியிருந்தால், இது சாதாரண வாழ்க்கை வரலாற்று நூல் என்ற அளவில் அதற்குரிய ஓரளவு மரியாதையோடு புறம் தள்ளப்பட்டு இருக்கும். ஆனால் இந்நூல் படைப்பாளிகளின் வாழ்க்கை வழியே ஊடுருவிச் சென்று படைப்பைத் திறனாய்வு செய்து காட்டுகிறது.

Tolstoy உளவியல், சமூகவியல், வரலாறு ஆகியவைகளின் பின்புலத்துடன் படைப்பாளிகளின் படைப்பிலக்கியத்தை உள் ஆழம் வரை சென்று ஆராய்ந்து பார்க்கிறது. தமிழில் இப்படிப்பட்ட நூல்கள் வெளி வருவது மிகவும் குறைவு.

தஸ்தேயேவ்ஸ்கி (1821 - 1881) என்னும் மாபெரும் எழுத்துக் கலைஞனின் பின்னிருந்து இயக்கியவைகளில் 1. பாலியல் வாழ்க்கை, 2. சமூக வாழ்க்கைச் சூழல் என்னும் இரண்டு முக்கிய பங்கு வகித்தன. ஃபயோதோர் தஸ்தேயேவ்ஸ்கி மீது சிறை வாழ்க்கை, கடன் தொல்லை, சூதாட்டம், வலிப்பு நோய் ஆகியவை பெரும் தாக்கத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தின. ஆனால் அவரின் முதல் நாவலான ‘ஏழை மக்கள்’ அவரின் சொந்த அனுபவத்தில் இருந்து படைக்கப்படவில்லை. இதில் கூறப்பட்டுள்ள சமூகப் பின்னணி தஸ்தேயேவ்ஸ்கியின் சமூகப் பின்னணியில் இருந்து வேறுபட்டது என்று சி.பி. ஸ்நோ கூறுகின்றார். (ப.11) அவர் எழுதிய ‘இரட்டையர்’ புதினம் மனநோயின் விளிம்புக்கு மிக அருகில் வருவதாகச் சி.பி. ஸ்நோ கருதுகின்றார்.

தஸ்தேயேவ்ஸ்கியிடம் ஆழமான உளவியல் நுண்ணறிவும், உளவியல் கற்பனையும் இருந்தன. ‘முட்டாள்’ என்ற நாவலில் வலிப்பு நோயை அவர் ஒரு மருத்துவரைப் போலப் புற நிலையில் நின்று வர்ணிக்கின்றார் (ப. 16). இந்நோய் அவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து துன்பம் தந்து கொண்டு இருந்தது. மரண தண்டனைக் கைதியாக இருந்து கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டு உயிர் பிழைத்துக் கொண்ட அவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் நாவல்களில் இடம் பெற்றுள்ளன. சிறையில் அவருக்குத் தரப்பட்ட ஒரே நூலான ‘புதிய ஏற்பாட்டின்’ கருத்துகள் அவரின் புதினங்களின் அடி ஆழத்தில் பதிந்து இருந்தன. ‘மரணமடைந்தவர்களின் வீடு’ என்ற புதினத்தில் அவருடைய சிறை அனுபவங்கள் காணப்படுகின்றன. (ப. 23).

தஸ்தேயேவ்ஸ்கியிடம் ஆழமான பாலுணர்ச்சி மேலோங்கி இருந்தது. இதை அவர் பூச்சி வாழ்க்கை (Insect Life) என்று ‘கரமேஸோல் சகோதரர்கள்’ நாவலில் குறிப்பிடுகின்றார். ஆனால் ‘ஏழை மக்கள்’ நாவலில் ஆண் பெண் பற்றிக் குறிப்பிடும் பொழுது உடலின்பத்தின் சுவடு இல்லாமல் எழுதியிருப்பதாகச் சி.பி. ஸ்நோ குறிப்பிடுகின்றார். ஆனால் தஸ்தேயேவ்ஸ்கியின் பிற்கால வாழ்க்கையில் பாலின்பத்தின் பங்கு மிக்கிருந்தது. மார்யா இஸவெயா, போலினா சுஸ்லோவா, அன்னா குருகோவ்ஸ்கயா, அன்னா கிரிகோரியெவ்னா ஆகிய நான்கு பெண்களைக் காதலித்தார். சுருக்கெழுத்தாளரான அன்னா கிரிகோரியெவ்னாவோடு இவர் கொண்ட மண உறவுதான் இனிமையாக இருந்தது. இப்பெண்மணிதான் இவருடைய ‘சூதாடி’ புதினம் எழுதத் துணை நின்றார். இவருடைய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பெண்ணின் துணை கொண்டே வலிப்பு நோயின் துன்பம், கடன் தொல்லை ஆகியவைகளைத் தாங்கிக் கொண்டார்.

“தஸ்தேயேவ்ஸ்கி இரண்டு விழுமியங்களை முதலாவது, அவருடைய கடன் வாங்கும் பழக்கம். இரண்டாவது, அவருடைய பாலியல் வாழ்க்கை பற்றி அவர் கவலைப்படவில்லை.

அன்னாவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் மிகவும் பச்சையானவை. பிற்காலத்தில் இக்கடிதங்களை அதிகமாகத் தணிக்கை செய்து பிரசுரித்தார்கள். ஏனென்றால் அவை கட்டுப்பாடு இல்லாமல் எழுதப்பட்ட காதல் கடிதங்கள்.

மாபெரும் ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் (1828-1910) குறித்து புரூஸ்ட் என்பவர் ‘அவர் கடவுளைப் போல எழுதினார். ஆனால் கடவுளைப் போல நடந்து கொண்டாரா அல்லது மனிதரைப் போல நடந்து கொண்டாரா என்பது ஆராய்ச்சிக்குரியது’ என்று எழுதினார். ஆண்டன் செக்கோவ் என்ற எழுத்தாளர் ‘டால்ஸ்டாய் ராணுவத் தளபதியைப் போலச் சர்வாதிகாரியாக இருக்கிறார். மற்றவர்களைத் துன்புறுத்துவதைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை’ என்று எழுதினார். மக்சீம் கார்க்கி ‘டால்ஸ்டாய் மனிதர்களை நேசிக்கவில்லை’ என்றார். ஆனால் இக்கருத்துக்களுக்கு எல்லாம் மாறாக லியோ டால்ஸ்டாய் தன்னைப் பற்றித் தானே பின்வருமாறு மதிப்பீடு செய்து கூறியுள்ளார்.

Dostoevsky “நான் அசாதாரணமான மனிதன்; காலத்தை வென்றவன். மற்றவர்களுடன் என்னால் நெருங்கிப் பழக முடியாது. அதிருப்தி அடைவது என் குணம். என்னைப் போல அறஞ்சார்ந்த மனிதனை நான் இதுவரை சந்திக்கவில்லை” (ப. 58).

இளம் பருவத்தில் பல பெண்களோடு உறவு சூதாட்டம், மது அருந்துதல் போன்றவைகளின் லியோ டால்ஸ்டாய் மூழ்கித் திளைத்தார். ஆனால் பிற்காலத்தில் இவைகளுக்கு முற்றிலும் மாறான ஆன்மீகத் தேடல், அறநெறி நாடல், சத்தியம் பேசுதல், அகிம்சை போற்றுதல் போன்ற பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தார். டால்ஸ்டாயும் தஸ்தேயேவ்ஸ்கியும் பாலின்ப வேட்கை மிகுந்தவர்களாக விளங்கினார்கள். காமத்தால் ஏற்படும் குற்ற உணர்ச்சியை டால்ஸ்டாயின் ‘கிரேஸ்ஸர் ஸொனாட்டா’ என்ற கதை வெளிப்படுத்தியது.

ஆண்கள் உடலின்பம் துய்ப்பதற்காகவே பெண்கள் படைக்கப்பட்டுள்ளனர் என்பது போன்ற ஆணாதிக்கம் நிறைந்த கருத்துக்களை அவர் கொண்டிருந்தார். பெண்களைப் போதைப் பொருளாகக் கருதினார். ஆனால் ‘போரும் அமைதியும்’ நாவலில் ‘நடாஷா’ என்ற இலட்சியப் பெண்ணைப் படைத்துக் காட்டியுள்ளார். தனக்குப் பிறந்த மகனையே வெளிப்படையாகக் கடைசி வரை சொல்லிக் கொள்ளாமல் மறைத்து வாழ்ந்து வந்தார். இத்தகைய வாழ்க்கை முறையை ‘கஸாக்குகள்’ என்ற நாவலில் எழுதிக் காட்டினார். அவருடைய மனைவி ‘ஸோன்மா’ என்னுடன் உறவு கொள்வதில் தான் அவருக்கு அக்கறை. என்னைப் பற்றி அவருக்கு அக்கறை இல்லை’ என்று நாட்குறிப்பில் எழுதியுள்ளார். டால்ஸ்டாய் மிகவும் அதிகமான ஆண்மையுடையவர் என்று (Superlative sexual virility) என்று சி.பி. ஸ்நோ குறிப்பிடுகின்றார். போரும் அமைதியும் நாவலை உற்சாகத்தோடு எழுதினார். ‘அன்னாகரினா’ நாவலை மகிழ்ச்சியின்றி எழுதினார். அதற்குப் பிறகு அறக் கருத்துக்களைப் பின்பற்றத் தொடங்கினார்.

எழுபதாவது வயதில் அவர் எழுதிய அறநெறிக்கருத்துக்கள் அடங்கிய ‘புத்துயிர்ப்பு’ புதினம் வெற்றி பெறவில்லை என்பது சி.பி. ஸ்நோவின் மதிப்பீடாகும். இறுதிக் காலத்தில் அவருக்கு ஏராளமான சீடர்கள் தோன்றினார்கள். மனைவியோடு ஏற்பட்ட சண்டையின் காரணமாக அவரை விட்டு விலகி வாழ்ந்து வந்தார். அவருடைய பதின்மூன்று குழந்தைகளில் ‘சா’ என்ற பெண்ணைத் தவிர மற்ற எல்லோரும் அவரை எதிரியாகக் கருதினர். அவரையும் அவருடைய அகிம்சைத் தத்துவங்களையும் வெறுத்தனர். இறுதியில் 1910 ஆம் ஆண்டு அஸ்டபோலோ என்ற சிறிய தொடர்வண்டி நிலையத்தில் மரணமடைந்தார்.

பியோதர் தஸ்தேயேவ்ஸ்கி, டால்ஸ்டாய் ஆகிய இருவருடைய வாழ்க்கையும் ஏறத்தாழ ஒன்று போலவே அமைந்துள்ளது. முன்னவர் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர். பின்னவர் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர். சோவியத் இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ள

நா. தர்மராஜன் செறிவான நடையில் இந்நூலை மொழி பெயர்த்துள்ளார். படைப்பாளியின் வாழ்க்கை வழியே படைப்பைத் திறனாய்வு செய்யும் புதிய ‘திறனாய்வு நெறி’ தமிழில் பல்கிப் பெருக சி.பி. ஸ்நோவின் இந்நூல் பெரிதும் துணைபுரியும் என்று உறுதியாகக் கூறலாம்.

தஸ்தேயேவ்ஸ்கியும் டால்ஸ்டாயும்,

சி.பி. ஸ்நோ, (ஆங்கில மூலம்)
நா. தர்மராஜன் (தமிழாக்கம்)
வெளியீடு : ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
ப.எண். 24, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார்,
தியாகராய நகர், சென்னை - 17, விலை : ரூ. 40.00.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com